சுந்தரவல்லி, ஷீலா மற்றும் ராதா நான் நடத்தும் நேர்மறை உளவியல் பற்றிய வர்க் ஷாப்பில் நீத்தாவை உதாரணமாகக் கூறினார்கள்: “தன்நலமே இல்லை. தன்னடக்கத்துடன் இப்படியும் இருக்க முடியுமா? ஏராளமான பொறுப்புகள், கொஞ்சம் கூட காட்டிக் கொள்ள மாட்டார். வேலைக்குத் தவறாமல் வந்துவிடுவார்!” என வியந்தார்கள். குறிப்பிடுவது இவர்களின் டீம் லீடர் நீத்தாவை.
இதேபோல நிறுவனத்தில் அனைவருமே நீத்தாவை வியந்து பார்ப்பார்கள். அங்கு மனநல ஆலோசகர் பொறுப்பேற்று மனநல மேம்பாட்டின் ஓர் விதமாக வர்க் ஷாப் நடத்தி வந்தேன்.
நீத்தா எட்டு குழந்தைகளில் மூத்தவர். கூடப்பிறந்தோரிடம் தாயைப் போன்ற பாசத்தைக் காட்டுவாள் என வியந்து பகிர்ந்தார்கள்.
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, நீத்தா என்னை ஆலோசிக்க நேரம் குறித்து வந்தாள். விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டில் கூச்ச உணர்வு இருந்து கொண்டிருந்தது. பலரின் பரிந்துரையால் நரம்பியல் மருத்துவரை அணுகியதாக விவரித்தாள்.
நரம்பியல் மருத்துவர், பரிசோதனைகளுக்குப் பிறகு, கார்ப்பல் டனல் நோய்க்குறி (Carpal Tunnel Syndrome) என்றார். மணிக்கட்டின் நடு நரம்பில் அழுத்தம், கிள்ளுதல் நேருவது. தேவையான சிகிச்சைப் போய்க் கொண்டிருப்பதை விவரித்தார் நீத்தா. இப்போதைக்குச் செய்வதில் பலவற்றை நிறுத்த மருத்துவர் பரிந்துரைத்தது குணமடையத்தான் என அறிந்திருந்தும், மனதில் பளு இருப்பது போல உள்ளதால் அதைப் புரிந்து கொள்ள ஆலோசிக்க வந்ததாகக் கூறினாள்.
ஓய்வை இடையூறாகக் கருதினாள் நீத்தா! வருந்தினாள். வாழ்க்கையில் முதல் முறையாக வேலைகளைச் செய்யக் கடினமாக இருப்பதால் கிளர்ச்சியுற்ற நிலை நேர்வதைப் பகிர்ந்தார்.
நீத்தாவின் தினசரி வேலைகள் விடியற்காலையில் கோலம் போட்டு, காப்பி தருவதில் துவங்கும். தாயாருடன் சமைத்து, காலை உணவைப் பரிமாறி, எல்லோருடைய மதியச் சாப்பாட்டையும் கட்டி வைத்தபின் வேலைக்குத் தயாராகி நேரத்தோடு வருவாள். மாலையில் கூடப் பிறந்தவர்களின் பாடத்திட்டங்களில் உதவுவதும், இரவு பலகாரத்தைச் சமைத்துப் பரிமாறுவதும் பாத்திரங்களைத் துலக்குவதும் அடங்கும்.
வீட்டினரின் பங்கேற்பைப் பற்றி கேள்விகளிலிருந்து தெளிவானது. தங்கைகள் உதவ வந்ததில்லை. நீத்தா அவர்களைச் செய்ய அழைத்ததும் இல்லை. தாயாரும். இதைப்பற்றி என்றுமே எண்ணியதே இல்லை என்றாள். செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்தினாள், எதிர்மறை எண்ணம் ஏதும் தோன்றவில்லை என்றாள். நீத்தாவின் தன்னலமற்றக் குணத்தைக் காட்டுகிறது!
இந்த குணத்துடன் மற்றொரு சிறந்த அம்சமும் இருந்தது. நீத்தா, அக்கம்பக்கத்தில் வீட்டு உதவி வேலைக்கு வருவோரில் பலர் எழுதப் படிக்காததைத் தனது பதினைந்தாவது வயதிலிருந்து கவனித்து வந்தாள். மனதில் பல கேள்விகள் ஓடின.
நீத்தாவின் பட்டப்படிப்பு முடித்ததும், இவர்கள் வாழும் பகுதியில் உள்ள க்ளப்பின் அனுமதி பெற்றபின், சிறிய இடம் ஒன்றில் யாருக்கு விருப்பமோ எழுதப் படிக்க, மற்றும் பூத்தையல் செய்யச் சொல்லித் தரத் தொடங்கினாள். உற்சாகத்துடன் பலர் வரத் தொடங்கினார்கள்.
இதைப் பல மாதங்களுக்கு அங்குள்ள தபால்காரர் செல்வம் கவனித்து வந்தார். பெயருக்கு ஏற்றார் போல் பெற்றோர் வழிகாட்டியதில் “தெரிந்து” கொள்வதை “செல்வமாக” கருதினார். சிறுவயதிலிருந்தே புத்தகங்களைச் சேகரித்து வந்தார். இப்போது அவற்றை இங்கு பலருக்கு உபயோகமாக்க யோசனையை நீத்தாவிடம் பகிர்ந்தார். நீத்தா வரவேற்றார்!
கிடைத்த இடத்தைச் செல்வம் கற்றல்களைப் பரப்பப் பயன்படுத்தினார். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய தகவல்கள். எப்படி, ஏன், எப்போது என ஏழு நாட்களுக்கு அதைப் பற்றியே. தகவல்களை வண்ண நிறங்களில் பலகையில் எழுதினார்! நாளடைவில் அங்கு வருவோர் போவோர் தகவல்களைப் படித்துச் செல்வதைப் பார்த்து நீத்தா, செல்வம் திருப்தி அடைந்தார்கள்.
உளவியல் ஆராய்ச்சியில் தெளிவாகக் கூறுவது: தொண்டு செய்பவர்களின் மனநலன் நன்றாக இருக்கும். மற்றவர் திருப்தி அடைவதைப் பார்த்து சந்தோஷப் படுவதால். தன்னலமோ எதிர்பார்ப்புகளோ இல்லாததால்!
நீத்தாவின் சொல்லித் தரும் விதங்களில் பரிவு, பாசம் நிரம்பியது. பலரை ஈர்த்தது. ஆகையால் நாளடைவில் பள்ளிக்குச் செல்பவரும் அங்கு வரத் தொடங்கினார்கள். ஆர்வத்துடன் தொடர்ந்து செய்தாள் நீத்தா.
நீத்தாவின் தவிப்பே, இப்போது வந்திருக்கும் மணிக்கட்டு வலியினால் முன்பைப்போல ஈடுகொடுத்து வேலைசெய்ய வரவில்லை என்று. செய்யாதது வருத்தத்தை அளிக்கிறது என்றாள். வலியைவிடச் செய்ய முடியாதுதான் அவளுக்கு இன்னலாகத் தோன்றியது.
நன்றாகும் கால அவகாசத்தை மையமாக வைத்தே ஸெஷன்கள் சென்றது. ஃபிஸியோதெரப்பி செய்துவர வலி குறையும் என அறிந்திருந்தாள் நீத்தா. மெதுவாகப் பழையபடி செய்யலாம் என்று. மூளைக்குப் புரிந்தது, மனதிற்கு அல்ல.
நீத்தாவின் அணுகுமுறையைப் புரிந்து கொண்டேன். சந்திக்கும் நபர் கவலையுற்றிருப்பதாக நினைத்தால், நீத்தா அந்த உணர்வை அடையாளம் கண்டுகொள்வாள். எங்கள் துறையில் இதை எம்பதி (Empathy, மற்றவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் தன்மை) என்போம். இதில் உணர்வைப் புரிந்துகொண்டு, அதே வடிவத்தில் ஏற்றுக்கொண்டு, ஏற்றவாறு எதிர்கொள்ளும் செயல்களில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவார்கள். இந்த அணுகுமுறையால் மனதைத் திடப்படுத்திக் கொள்வது தெரியவரும். புரிந்து கொண்டு, அந்த நபரைத் தமது பிரச்சனைகளைத் தாமே எதிர்கொள்ள ஊக்குவிப்பார்கள். இதற்கு மாறானது (Sympathy) ஸிம்பதி: துன்பத்தைப் பார்த்துப் பரிதாபப் படுவது, தக்க செயலில் ஈடுபடுவதற்குப் பயன்படாது.
நீத்தாவின் தயைத்தன்மையைப் (Compassion) பல உதாரணங்கள் காட்டியது. இந்தப் பரிவுணர்வின் (Compassionate Empathy) பிரதிபலிப்பே கோபதாபம் இல்லாமல் அடுத்தடுத்து கூடப்பிறந்தவர்களைப் பார்த்துக்கொள்ள முடிந்தது. இந்த குணாதிசயம்தான் நீத்தாவின் ஆரோக்கியத்தின் காரணி!
ஆராய்ச்சியில் இந்த குணாதிசயங்கள் உள்ளவர்களுக்கு “களைப்பு நிலை” (burnout) நேராது என்று சொல்லப்பட்டிருக்கிறது!
மூத்தவளாக இருந்ததால் தமக்குப் பொறுப்பு உணர்வு நிதர்சனம் என அடையாளம் கொண்டாள். வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் விருப்பு வெறுப்பின்றி வளரும் பருவத்திலேயே பழகிப்போனது ஒரு காரணம். பரந்த மனப்பான்மை என்பது குணத்தின் அஸ்திவாரமானது! யாரையும் “இது செய்கிறாயா?” எனக் கேட்கத் தோன்றவில்லை.
ஒவ்வொரு கூடப்பிறந்தவரையு, பிறந்ததிலிருந்து வளர்த்ததில், எல்லோரும் சிறியவர்கள், பாசம் பொங்கும் நீத்தா. அவர்களில் யாருமே அவளுடைய நிலைமையைப் பற்றி சிந்தனை செய்யவில்லை, உணரவில்லை.
நீத்தாவிடம் குடும்பத்தினரை அழைத்து வரப் பரிந்துரைத்தேன். கடைசி தம்பியான அஜய் மட்டும் வந்தான். அம்மாவென்றே நீத்தாவைப் பாவித்தான். ஒவ்வொன்றையும் தவறில்லாமல் செய்வதாலும், ஒவ்வொருவரின் தேவையை அறிந்திருந்து செய்து தருவதாலும் நீத்தாவிற்கு உதவ யாருக்கும் தோன்றாததை அஜய் வெளிப்படையாகக் கூறினான்.
நீத்தா போன்றவர்கள் அரிதானவர்களே! இவர்களைப் போலவும் வாழ முடியும்! வாய்ப்பை நழுவ விடுகிறோமோ?
நீத்தாவின் உடல் நிலையை விவரித்தேன். இந்த அளவிற்கு வலி இருப்பதை நீத்தா காட்டிக் கொள்ளாததால் உணராததை வருத்தத்துடன் அஜய் ஒப்புக்கொண்டதும், தன்னால் கைகொடுக்க முடிந்ததை ஒவ்வொன்றாகப் பார்த்தோம். அஜய் தான் செய்ய, மற்றவர்களையும் ஊக்குவிக்க முயன்றான். அவ்வப்போது செய்தார்கள்.
நீத்தா வேலை புரியும் நிறுவனத்தில் ஊழியர்களின் கூட்டு முயற்சியை மேம்படுத்த அதற்குத் தேவையான திறன்களில் எவை மேம்பட வேண்டும் என்றதை அப்சர்வேஷன் மூலமாகக் கவனித்தேன். இதற்காக வெவ்வேறு குழுக்களைச் சந்தித்துக் கவனித்தேன்.
நீத்தாவின் டீம் சிலவற்றை வித்தியாசமாகச் செய்ததைக் கண்டுகொண்டேன். அவர்கள் டீமில் சக ஆதரவு (Peer support) தெக்கத்தெளிவாக தென்பட்டது. கூர்ந்து கவனிக்க, நீத்தா அவரவர் பங்களிப்பின் விளைவுகளை எல்லோருடனும் பகிர்ந்தார். இந்த வெளிப்படைத்தன்மை (Transparency) போட்டிக்குப் பதிலாக ஒற்றுமையை அதிகரித்தது. ஏனெனில் ஒவ்வொருவரின் வழங்குதலின் தாக்கத்தை குழுவில் பகிர்ந்து கொள்வதால், டீமில் உள்ளவர்கள் அனைவரிடமே மனோதைரியம் மேம்பட்ட நிலை தெரிந்தது. திறன்களும் வளர்ந்தது.
அணுகுமுறையின் பலம்! நீத்தா பரிவுடன் அணுகிப் பேசுவதின், பக்கத் துணையாக இருப்பதின் பிரதிபலிப்பே இவர்களிடம் தெரிந்தது! பலதரப்பட்ட நிறுவனங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்தது, உணர்வும் சிந்தனையும் இணைந்து உள்ளவை. இரண்டும் சேர்ந்தே இயங்குவதால் நாம் முடிவுகளை எடுப்பது, கவனம் செலுத்துவது அதிலிருந்து செயலாக்குவது. இந்த ஜோடியைப் பிரித்து வைப்பவர்கள் இலக்கை அடைய மாட்டார்கள் எனக் காணப்பட்டிருக்கிறது.
நீத்தாவின் கைகளுக்கு ஓய்வு தேவை என்பதைக் கேட்டதுமே கூட வேலை செய்பவரும், நிறுவனத்தில் நீத்தாவின் தாக்கத்தினால் மேம்பட்ட மற்றவரும், நீத்தா நடத்தி வந்த வகுப்புகளிலிருந்தும் தொண்டு செய்ய முன் வந்தார்கள். அக்கம்பக்க கல்லூரி ஆசிரியரும் முன் வந்தார். சேர்ந்துச் செய்ய கைகளுக்கு ஓய்வு வந்தது.
வீட்டைப் பொறுத்தவரை அஜய் மட்டுமே பக்கபலமாக நின்றான். மற்றவர்களின் ஒத்துழைப்பைப் பெற முடியவில்லை. நீத்தா தன்னுடைய மன பளு குறைந்து சமாதானம் ஆனதாகக் கூறினார். ஸெஷன்கள் நிறைவடைந்தது.
நீத்தாவிடம் என்றுமே ஆதங்கம் ஆடம்பரம் இருந்ததில்லை! விருது பெற்றார் நீத்தா; அவர்களை எல்லோரும் எடுத்துக்காட்டாக பார்த்ததில்!
பல வருடங்களுக்குப் பிறகு அஜய் என்னைச் சந்தித்து நீத்தாவைப் பற்றிக் கூறினார். நீத்தாவிற்கு விடா இருமலைப் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் பிரச்சினை கண்டுபிடிக்கப் பட்டது. புறா எச்சத்தினால் பாக்டீரியா உள்ளதாக.
கூடப் பிறந்தவர்கள் நீத்தாவை பார்த்துக்கொள்ள விரும்பாததைச் செய்கையால் தெரிவித்தார்கள். நீத்தாவால் முன்போல வேலையைச் செய்ய இயலாததும் ஒரு காரணம்.
நிலையைப் புரிந்து கொண்டு தாமாகவே நீத்தா ஹாஸ்பைஸ் (hospice) ஒன்றில் சேர்ந்து கொண்டாள். இறைவன் பாதங்களை அடையும் வரை பலருக்கு உதவினாள் என்றான் அஜய். நீத்தா என்றவள் அவ்வாறு தானே!
இறுதிக் கட்டங்களில் அஜயைத் தவிரக் கூடப்பிறந்தவர்கள் சந்திக்கவில்லை. நீத்தாவின் சக ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் சந்தித்ததாக அஜய் கூறினார். அழியாது என்றுமே, செயலின் பதிவுகள்!
தன்னலமற்றவள்!
குரல் கொடுப்போருக்கு
உதவுபவள்!
உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவரை மாற்றியவள்!
அடக்கத்தின் பூஷணம்!
****************************
கேள்வி: காற்றின் மொழி…ஒளியா? இசையா?
