
ஏனியஸ் ஏனியஸ் ஏனியஸ் படைகளுக்கும் டர்னஸ் படைகளுக்கும் இடையே போர் துவங்கிவிட்டது. ஏனியஸ் அங்கு வருமுன்னர் போரைத் துவக்கி வெற்றிப் படியில் திளைத்துக் கொண்டிருந்தான் லத்தீன் நாட்டு டர்னஸ் .
அதே சமயம் கடவுளர் தலைவர் ஜூபிடர் இந்தப் போரில் ஈடுபடவேண்டும் என்ற மற்ற தேவதைகளின் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க உத்தரவிட்டார்.
“மனிதர்களின் போரில் தேவர்கள் தலையிடக் கூடாது.”
ஆனால் வீனசின் குரல் துயரத்தால் நடுங்கியது. “என் மகன் ஏனீயஸ் விதியின் பாதையில் செல்கிறான். அவனைத் தொடர்ந்து துன்பம் மட்டுமே வர வேண்டுமா?” என்று வினாவினாள்.
அதே நேரம் ஜூனோ கிண்டலுடன், “விதி என்றால் அது டர்னஸுக்கும் உரியது! என்றாள்.
ஜூபிடர் ஆணித்தரமாகத் தன் முடிவைக் கூறினார். ” “இன்று முதல், வெற்றியும் தோல்வியும் மனிதர்களின் வீரத்தால் தீர்மானிக்கப்படும். தேவர்கள் பார்க்க மட்டுமே செய்வோம்.”
கீழே, பூமியில், போர் கொந்தளிக்கத் தொடங்கியது.
டைபர் நதியில் கப்பல்கள் பிளந்துகொண்டு வந்தன. போர்க்கோலம் கொண்ட ஏனீயஸ்.அதில் நின்று கொண்டிருந்தான்.
அவனது கரங்களில் ரோம ராஜ்யத்தின் எதிர்காலம் பொறிக்கப்பட்டக் கேடயம் இருந்தது. அவன் கண்களில் கோபம் தெறித்தது. தன் நாட்டு மக்களுக்காக சிங்கம் போல உறுமினான். போர்க்களத்தில் பாய்ந்தான்.
தங்கள் தலைவன் வந்த மகிழ்ச்சியில் ட்ரோஜர்கள் ஆரவாரம் செய்தனர். லத்தீன் படை திடுக்கிட்டது
ஏனீயஸுடன்போர்க்களத்தில் குதித்தான் இளம் வீரன் பாலாஸ், எவாண்டரின் மகன்.
போர்க்களத்தில் பாலாஸ் சென்ற இடமெல்லாம் லத்தீன் வீரர்கள் மடிந்தனர். வெற்றி தேவதை அவன் கரங்களில் நர்த்தனமாடியது. ட்ரோஜர்கள் தங்கள் இளைய தளபதியைப் பார்த்துப் பரவசமடைந்தார்கள்.
அந்த வேளையில், விதி டர்னஸ் வடிவில் அவனை நெருங்கியது.
பாலாஸைப் பார்த்த டர்னஸ், ” யார் இந்தப் பொடியன்? பொடியனுக்குப் போர்க்களத்தில் என்ன வேலை? என்று சிரிப்பினூடே வினவினான்.
பாலாஸ் ‘உன்னுடன் என்ன பேச்சு ! என் ஈட்டிக்கு பதில் சொல் ‘ என்று கூறி அவனுடன் போருக்கு முன்வந்தான்.
இருவரும் பயங்கரமாக மோதினர். பாலாஸ் என்ற சிறுவன் கரத்தில் இவ்வளவு வலிமை இருக்கும் என்றுடர்னஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் தாக்குதலிலிருந்து தப்ப தன் முழு பலத்தைப் பிரயோகிக்க வேண்டியதாயிற்று. பாலாஸ் மிகுந்த ஆக்ரோஷத்துடன் டர்னஸ் மீது பாய்ந்தான். அந்தக் கணம் டர்னஸின் விதி முடிந்தது என்று அனைவருக்கும் தோன்றியது. ஆனால் சட்டென்று தப்பிய டர்னஸ் பாலாஸ் எதிர்பார்க்காத இடத்தில் புகுந்து அவன் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்தினான். டர்னஸின் ஈட்டி பாலாஸின் மார்பைத் துளைத்தது.
தன் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பெருமையுடன் மண்ணில் சாய்ந்தான் பாலாஸ். வானமே சோகத்தில் உறைந்தது.
தூரத்தில் போரிட்டுக்கொண்டிருந்த ஏனீயஸ் தன்னுடன் ஓவந்துகொண்டிருந்த பாலாஸைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தான். அவன் உடல் தரையில் கிடப்பதைக் கண்ட அவன் மனம் பதறியது. ‘ இனி நான் மனிதனே அல்ல. போர் மிருகம். என் மகன் போன்றவனைக் கொன்ற இந்த லத்தீன் வீரர் அனைவரையும் அழிப்பேன் என்று சூளுரைத்து சிங்கம் போலப் பாய்ந்தான். அவனது தாக்குதலுக்கு முன் லத்தீன் நாட்டு எந்த வீரனாலும் நிற்க முடியவில்லை. லத்தீன் படை வீரர்கள் புறமுதுகிட்டு ஓடத் துவங்கினர்.
‘நில்லுங்கள். நான் உங்களுடன் வருகிறேன்’ என்று லத்தீன் வீரர்களைத் திரட்டி களத்திற்கு வந்தான் டர்னஸின் உப தளபதி. அவன் அசகாய சூரன். நேரடியாக ஏனீயஸுடன் மோதினான். ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரிட்டனர். ஆனால் ஏனியஸின் உக்கிரத் தாக்குதலுக்கு முன் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏனியஸின் ஈட்டி அவனைக் காயப்படுத்தியது. . அவனுக்குத் துணையாக அவன் மகன் வந்தான். அந்த சின்னஞ் சிறுவனைக் கொல்ல வேண்டுமா என்று ஒரு கணம் யோசித்தான். ஆனால் பாலாஸின் முகம் அவனை வெறியனாக்கியது. தந்தையைக் காப்பாற்ற வந்த சிறுவன் நெஞ்சில் ஏனியஸின் ஈட்டி பாய்ந்தது அந்தக் கணமே அவன் உயிரிழந்தான்.
அவனைத் தூக்கி நிறுத்திய ஏனீயஸ் “இவன் வீரத்துக்கு மரியாதையுடன் இறுதி செய்யுங்கள்.” என்று உத்தரவிட்டான்.
தன் மகனின் மரணத்தை அறிந்த உபதளபதி இன்னும் ஆக்ரோஷத்துடன்ஏனீயஸை நேருக்கு நேர் சந்தித்தான்.ஆனால் ஏனியஸின் போர் வெறிக்குமுன் அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. அவனையும் ஏனீயஸின் ஈட்டி வீழ்த்தியது.
சூரியன் மறைந்ததும் அன்றைய போர் நிறுத்தப்பட்டது.
வெற்றி வாகை சூடினாலும் ஏனீயஸ் மனதில் பாலாஸின் எண்ணமே நிறைந்திருந்தது. அவன் உடலை எடுத்துத் தன் மடியில் இட்டு “பாலாஸ்! எனதருமை மகனே! உன் மரணம் ரோம சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரக் கல்லாக இருக்கும். உன் தந்தை உன்னை வீரனாக அனுப்பினார். நீயும் வீரனாகவே திரும்புகிறாய்… ஆனால் உயிரில்லாமல்,” என்று மெதுவாகச் சொன்னான்.
பின்னர் அனைத்து வீரர்களும் அந்த இளம் சிங்கத்திற்கு இறுதி மரியாதை செய்து அவன் உடலை அவன் தந்தைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்த நாள் போரில் டிரோஜன்கள் முற்றிலும் எதிர்பார்க்காத தாக்குதல் வந்தது. வீராங்கனை கமில்லாவில் உருவில்.
கமில்லா தேவதை டயானாவின் செல்லப் பெண். அவள் பிறந்து சில நாட்களில் அவள் தந்தையின் எதிரிகள் சூழ்ந்துகொண்டு அவர் குடும்பத்தை அழைக்க முற்பட்டனர். தான் அழிந்தாலும் தன் மகள் உயிர் பிழைக்கவேண்டும் அவளை தன் ஈட்டி முனையில் கட்டி வேகமாக ஆற்றுக்கு அக்கரையில் இருக்கும் காட்டிற்கு வீசி எறிந்தான். குழந்தை கமில்லாவை ஈட்டி பத்திரமாக காட்டில் உள்ள புல்வெளியில் இறக்கியது. அவள் அங்கே குதிரைகளுடன் குதிரையாக வளர்ந்தாள். அவளின் வேகத்திற்கு உலகில் யாரும் இணை சொல்ல முடியாது. காற்றைப் போல ஒடக்கூடியவள். வயல்களுக்கு மேலே பயிருக்கு எந்த சேதமும் வராமல் பறக்கக்கூடியவள். போர்த் திறமையில் அவள் கிரேக்க வீரன் அக்கிலிஸ் போன்றவள்.
இரண்டாம் நாள் போரில் டர்னஸ் வேண்டுகோள்படி கமில்லா லத்தீன் படைக்கு ஆதரவாகப் பாய்ந்து வந்தாள். குதிரையில் ஏறி பறக்கும் காற்றைப் போல வந்தாள். அவளது ஈட்டி வீச்சுக்கு எண்ணற்ற ட்ரோஜன் வீரர்கள் விழுந்தனர்.“
“வீரர்களே வாருங்கள்! லத்தீன் நாட்டின் மரியாதைக்காக நாமெல்லாம் போராட வேண்டும்!” என்று ஆரவாரித்தாள். டிரோஜன்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாக வந்தாள். அவள் மின்னல் வேகத்தில் போராடினாள். அப்போது டிராஜானுக்கு ஆதரவாக வந்த படைத் தளபதி அவளுடன் போரிட்டு ஓடுவது போல ஓடினான். அவனைத் துரத்தி வந்தவளை மறைவிலிருந்து ஒரு வீரன் அவள் மீது ஈட்டியை எறிந்தான். அது கமில்லாவின் மார்பில் பாய்ந்தது. அவள் மெதுவாகத் தரையில் விழுந்தாள்.
அடுத்த நாள் போரில் ஏனியஸ் மற்றும் டர்னஸ் இருவரும் நேருக்கு நேர் மோத முடிவு செய்தனர்.
இரு படைகளும் விலகி நின்றன. அந்தக் களத்தில் அவர்கள் இருவர் மட்டும் ஒருவரை ஒருவர் வீழ்த்தத் தயாராயிருந்தனர்.
டர்னஸ் தன் ஈட்டியை வீசினான். ஏனீயஸ் தன் கேடயத்தால் அதைத் தடுத்தான்.
இருவருக்கும் இடையே போர் கடுமையாக நடந்தது. கேடயங்கள் மோதின. ஈட்டிகள் பறந்தன.
ஏனியஸ் போர்த் திறமைக்கு முன் டர்னஸால் எதுவும் செய்ய முடியவில்லை. வாளை எடுத்துக் கொண்டு ஏனியஸ் மீது பாய்ந்தான். டிரோஜன் வீரர்கள் துடிதுடித்தனனர். ஏனியஸ் அழிந்துவிட்டான் என்று புலம்ப ஆரம்பித்தனர். ஆனால் அவன் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்த ஏனியசின் கண்களில் எதுவும் தப்பவில்ல. அவன் வரும் வேகம் வாளின் தாக்கம் இரண்டையும் கணித்து தன் கையில் இருந்து குத்தீட்டியால் அவள் விலாவில் சொருகினான். வந்த வேகத்தில் அப்படியே தரையில் விழுந்தான் டர்னஸ் . தன் காலடியில் வீழ்ந்த டர்னஸைக் கொல்ல ஈட்டியுடன் பாய்ந்தான் ஏனியஸ் .
டர்னஸ் குரல் நடுங்கியது. “என்னைக் கொல்லாதே…” என்று ஏனியஸிடம் கெஞ்சினான்.
ஏனீயஸும் ஒரு கணம் தயங்கினான்.
அந்த நேரத்தில் அவன் கண்கள் டர்னஸின் உடையில் தொங்கியிருந்த பாலாஸின் பட்டையை கண்டன.
அவனுடைய கோபம் மீண்டும் எரிந்தது. “இது பாலாஸின் இரத்தத்திற்கான தீர்ப்பு!” என்று கூறி அவன் ஈட்டியை இறக்கினான்.
டர்னஸ் உயிரிழந்தான்.
அந்தத் தருணத்தில் போர் முடிந்தது.
ஏனியஸ் இத்தாலி மண்ணில் புதிய எதிர்காலத்தை தொடங்கும் மனிதனாக நின்றான்.
எதிர்காலத்தில் ரோம் என்கிற பெரும் நகரம் ஒன்று எழும் !
அதன் சாட்சியாக நின்றான் ஏனியஸ் !
