![]()
சசிமகராஜ் அன்பே வடிவான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் பரமஹம்சரின் நேரடிச் சீடராவார்.சசிமகராஜுக்கு ராமகிருஷ்ணானந்தர் எனத் தீட்சா நாமம் வழங்கியவர் சுவாமி விவேகானந்தர்தான். பரமஹம்சர் வாழ்ந்த காலத்தில் அவருக்குச் சேவை செய்வதிலும் அவர் ஸித்தி அடைந்தபின் அவரை எப்போதும் வழிபடுவதிலேயே பேரானந்தம் கொண்டு வாழ்ந்தவர் ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தர் ஆவார்.
சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தபோது பொதுமக்கள் அவரது கம்பீரமான உரைகளில் மனத்தை பறிகொடுத்தார்கள். அவர் விடைபெற்றுச் செல்லும்போது, கொல்கத்தாவில் உள்ளது போல் சென்னையிலும் தங்களுக்கு ஓர் இராமகிருஷ்ண மடம் வேண்டும் என்று ஒருமனதாக அவரிடம் விண்ணப்பித்தார்கள்.
சென்னை மக்களின் அன்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார் விவேகானந்தர். கொல்கத்தா சென்றதும், சென்னையில் ராமகிருஷ்ண மடம் ஒன்றைத் தொடங்குமாறு சசி மகராஜைப் பணித்தார் விவேகானந்தர். அதன்படி கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்து, சென்னையில் ராமகிருஷ்ண மடத்தைத் தொடங்கினார் சசிமகராஜ். சசிமகராஜ் தம் வாழ்வை குருதேவருக்கே அர்ப்பணித்துக் கொண்ட தூய துறவியாவார். குருதேவர்பால் கொண்ட பக்தியும் சமூகத்தைப் பற்றிய அக்கறையும் அவர் உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்தன.
வேதாந்தம் உள்ளிட்ட ஆன்மிக விஷயங்களை போதிப்பதற்காக அவர் சென்னையில் பல இடங்களுக்குச் செல்வதுண்டு. அப்படிச் செல்லும்போது ஒருநாள் வழியில் ஒரு சிறுவனைப் பார்த்தார் அவர். அவன் இலக்கற்ற பார்வையோடு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான். அவனுடைய அழுக்கான உடையும், மெலிந்த உடலும். அவன் பசியோடிருப்பதை அவருக்கு உணர்த்தின.
அவனை மடத்திற்கு அழைத்து வந்தார் மகராஜ். ’யார் ஆதரவேனும் கிட்டினால் போதும்’ என்ற மனநிலையில் இருந்த அவன் அவர் விரலைப் பற்றியவாறு நடந்து வந்தான். அவனுக்கு முதலில் உணவளித்தார். அவன் உணவை அள்ளியள்ளிச் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்தால் பல நாட்களாக அவன் சாப்பிடவே இல்லை என்பது அவருக்கு தெரிய வந்தது.
நன்றாக உண்டு வளர வேண்டிய இளமைப் பருவத்தில் இவன் சாப்பிடவே வழியில்லாது இருப்பதைக் கண்ட சசிமகராஜின் உள்ளம் உருகியது.
அவனைப்பற்றி அவனிடம் கனிவோடு விசாரித்தார். அவன் கண்கலங்கிச் சொன்ன செய்திகள் அவரை உலுக்கின.அவன் மைசூரிலிருந்து பிழைப்புக்காகச் சென்னை வந்திருக்கிறான். அவனுடைய தாய், தந்தை இருவரும் பிளேக் நோயால் இறந்து விட்டார்கள். ஆதரிப்பார் யாருமின்றிச் சென்னைத் தெருக்களில் அந்தச் சிறுவன் அலைந்து கொண்டிருந்தான்.
சசிமகராஜ் பரிவோடு அவன் தலையைத் தடவிக் கொடுத்தார். அவனுக்குத் தாயாக அன்னை சாரதா தேவியின் புகைப்படத்தையும் தந்தையாக குருதேவர் படத்தையும் அடையாளம் காட்டினார் மகராஜ். அவன் தன் விழிகளை விரல்களால் துடைத்துக் கொண்டான். தனக்கு ஒரு தாயும், தந்தையும் இருக்கும்போது தான் ஏன் கண்கலங்க வேண்டும் என அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
அவனை ஆதரவோடு தட்டிக்கொடுத்த மகராஜ், அவனை தனது மடத்திலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். மடத்தில் அவன் எல்லா வேளையும் சாப்பிட்டுக் கொள்ளலாம், இரவு நேரத்தில் மடத்திலேயே உறங்கலாம். மடம் அவனுடைய வீடாய் இருக்கும். ஆனால் அவன் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்றார். அவன் மகிழ்ச்சியோடு அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டான். மடத்திலேயே உண்டு உறங்கி வாழத் தொடங்கினான். அருகிலிருந்த பள்ளிக்குச் சென்று கல்வி கற்கவும் தொடங்கினான்.
அன்னை சாரதாதேவி, தந்தை குருதேவர் ஆகியோர் நிழலில் அவன் பூரண பாதுகாப்பை உணர்ந்தான். அவனது போக்கு மகராஜுக்கு மிகுந்த மனநிறைவு தந்தது.
கொஞ்ச காலத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூரிலிருந்து மேலும் 4 சிறுவர்கள் ஆதரவற்றவர்களாக சென்னைக்கு வந்தார்கள். உணவும் தங்குமிடமும் இல்லாமல் அலைந்தார்கள். அவர்களின் அதிர்ஷ்டம் அவர்கள் சசிமகராஜ் கண்களில் பட்டார்கள். அவர்களையும் அழைத்து வந்து மடத்தில் தங்க வைத்துக் கொண்ட மகராஜ், அவர்களுக்கும் உணவு, உடை உறையுள், கல்வி ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அடிக்கடி இச்சிறுவர்களைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார் சசி மகராஜ். இத்தகைய சிறுவர்களைப் பராமரிக்க வேண்டியது சமூகத்தின் கடமை என்றும் அவ்வகையில் அந்தக் கடமையை ராமகிருஷ்ண மடமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது.
அவரின் மனப்போக்கை அறிந்த சசிமகராஜின் பக்தரான ஸ்ரீ. ராமசாமி ஐயங்கார் உதவ முன்வந்தார். அவரின் உதவியோடு 1905 பிப்ரவரி 17ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு சிறிய கட்டிடத்தில் ஒரு மாணவர் இல்லம் தொடங்கப்பட்டது. இந்த இல்லத்தைத் தொடங்க உதவிய இன்னொருவர் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ். நஞ்சுண்டராவ் சுவாமி விவேகானந்தர் சென்னை வந்தபோது, அவரது உரைகளால் கவரப்பட்டு அவரின் சீடராக மாறியவர். மகாகவி பாரதியார் தலைமறைவு வாழ்க்கைக்காக புதுச்சேரி செல்ல முற்பட்டபோது, அவருக்கு உதவியரும் இந்த நஞ்சுண்டராவ்தான்.
முதலில் சிறிய இல்லத்தில் தொடங்கிய மாணவர் இல்லம், பின்னர் ஆதரவற்ற மாணவர்கள் அதிகம்பேர் வந்து சேரவே, சற்றுப் பெரிதான வாடகை இல்லத்திற்கு மாறியது. இந்த மாணவர் இல்லத்தின் தேவையும் இது செய்யும் சேவையின் பெருமையும் மெல்ல, மெல்ல மக்களிடையே பரவத் தொடங்கின. 1916 இல் குருதேவரின் அடியவரான எஸ்.ஜி. ஸ்ரீனிவாசாச்சாரியார் அவர்கள் தமக்குச் சொந்தமாக மயிலாப்பூரில் இருந்த பெரும் நிலப்பரப்பு ஒன்றை மாணவர் இல்லக் கட்டிடத்திற்கென வழங்கினார். ஸ்ரீ ராமஸ்வாமி ஐயங்கார் மாணவர் இல்லக் கட்டிடம் கட்ட உதவினார்.
1917 மே பத்தாம் தேதி புத்த பெருமான் ஜயந்தியான வைசாக பெளர்ணமி தினத்தில் சுவாமி பிரம்மானந்தர் இந்த இல்லக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.`ஏழைகளின் அரண்மனை` என்ற அழகான பெயரும் இந்தக் கட்டிடத்திற்குச் சூட்டப்பட்டது.
ஆதரவற்ற சிறுவர்களை ஆதரித்து அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி ஆகியவற்றைக் கொடுக்கும் அற்புத சேவையைப் பல்லாண்டுகளாகப் புரிந்துவரும் இன்றைய இராமகிருஷ்ணா இல்லம் தோன்றிய வரலாறு இதுதான். பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியதும் பொதுமக்களிடையே இந்த இல்லத்திற்குப் பெரும் மதிப்புத் தோன்றியது. பற்பலர் நன்கொடைகள் மூலம் இந்த உயரிய தொண்டு நிறுவனத்தை ஆதரிக்கத் தொடங்கியதும் இயல்பாக நிகழ்ந்தது.
தொடக்கத்தில் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் சிறுவர்கள் கல்வி பயில அனுப்பப்பட்டார்கள்.அதைத் தொடர்ந்து குருகுல முறையிலான உறைவிடப் பள்ளி ஒன்று
தொடங்கப்பட்டது. ஆட்டோமொபைல் எஞ்சினியரிங், கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் போன்ற பல்வேறு டிப்ளமா வகுப்புகள் அங்கு தொடங்கப்பட்டன. இப்போது ஆதரவற்ற சிறுவர்கள் பற்பலரின் சரணாலயமாக இந்த மாணவர் இல்லம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பல முக்கியமான பிரமுகர்கள் மாணவர் இல்லத்தின் தன்னலமற்ற சேவையால் கவரப்பட்டுள்ளனர். காலஞ்சென்ற தமிழ் எழுத்தாளர் ஆர். சூடாமணி, தன் பலகோடி ரூபாய் சொத்தை இராமகிருஷ்ண மடத்தின் மாணவர் இல்லம், இலவச மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் செய்யும் பணிகளுக்கு எழுதி வைத்தார்.
தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், பிரபல பாடகி திருமதி வாணி ஜெயராம் உள்ளிட்ட பல பிரமுகர்களும் மாணவர் இல்லத்திற்குப் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாணவர் இல்லம் தன் சேவையால் பெரும்புகழ் பெற்றுள்ளது.அதற்குக் காரணம், அங்கு வாழும் மாணவர்களின் தாயாகவும் தந்தையாகவும் விளங்கும் தூய அன்னை சாரதா தேவி, குருதேவர் பரமஹம்சர் ஆகியோரின் அருளாசிதான் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
கேள்வி: காதல் என்பது எதுவரை?
