ஒருதடவை அப்பா தன்னோட மூத்த மாப்பிள்ளை கிட்ட கேட்டார் “உப்பிலி மாமாவுக்கு எண்பத்து அஞ்சு வயசு இருக்குமா”
அதுக்கு பெரிய அக்கா டக்குனு சொன்னா, “அதுக்கு இருநூறு வயசாவது இருக்கும்.. அது எந்தக்கால உப்பிலி? நம்ம பாட்டி குழந்தையா இருக்கும் போதே உப்பிலி சைக்கிள்ல போனதைப் பாத்துருக்கா”
ஔவையார் மாதிரி ஏழெட்டு உப்பிலி இருந்துருக்கணும்.
உப்பிலி கிட்டத்தட்ட பேச்சலர். பத்து வயசுல கல்யாணம். இருபது வயசுக்குள்ள அவர் பெண்டாட்டி கொடுமை தாங்காம நாலஞ்சு தடவை ஓடிப்போயி ஆறாவது தடவை திரும்பி வரலை. அவ ஓடினதை யாரும் பார்க்கலை. கார்த்தால பால்காரன் வரதுக்குள்ள ஓடியிருக்கா..நல்ல வேளை, பால்காரன் வந்துட்டான்.. இல்லன்னா பால்காரனோட ஓடிப்போயிட்டதா பேச்சு வந்திருக்கும்.. பால்காரன் பொழச்சுப் போனான்.
எனக்கும் என் பெரிய அக்காவுக்கும் பன்னண்டு வயசு வித்தியாசம்.. நான் ஏழாவது படிக்கும் போதே அவளுக்கு இரண்டு குழந்தைகள்.. ஆனாலும் அவளுக்கு நான் தான் பெட்டு.. பர்ட்டிகுலரா சினிமாக்குப் போகும் போதும் உப்பிலி மாமா வீட்டுக்குப் போகும் போதும் என்னைத்தான் கூட்டிண்டு போவா.. உப்பிலி வீடு அதிப்ரம்மாண்டமான வீடு.. ரெண்டு கூடம் ரெண்டு தாழ்வாரத்து உள்ளு ரெண்டு காமரா உள்ளு..
அந்த வீட்டுக்குள்ள அவ்வளவு ஈசியா நுழைய முடியாது..
அங்கம்மானு ஒரு வேலைக்காரி எங்கள் வீட்டில் வேலை செஞ்சா.. அங்கம்மாவோட அம்மா தாயம்மா. தாயக்கிழவி… உப்பிலி வீட்டில் வேலை செஞ்சதால அதை சாக்கு வெச்சு உப்பிலி வீட்டுக்குள்ள எப்படியாவது போயிடுவோம்.
எங்கக்காவுக்கு உப்பிலியைப் பிடிக்காட்டாலும் அவர் வீட்டில் இருந்த ஒரு பிரம்மாண்டமான பெட்டியைப் பிடிக்கும்.. அது நிறைய புக்ஸ் அடுக்கி இருக்கும்.
புக்ஸ்னா குமுதம் கல்கின்னு பத்திரிகைகள்ல வர தொடர்கதைகளை மெனக்கெட்டு அக்கு வேறு ஆணிவேரா பிரிச்சு பைண்ட் பண்ணது.. குமுதம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடிலேருந்தே குமுதம் கதையெல்லாம் பைண்ட் ஆகியிருக்கும். இதை கர்ம சிரத்தையா தாயம்மா பண்ணி வைப்பா..
நாங்க நைஸா பூந்து ஏதாவது புக்கை பீறாஞ்சு எடுத்துண்டு வருவோம்.
அந்தப் பெட்டி பழங்கால ப்ரம்மாண்டம். குத்து மதிப்பா எட்டுக்கு அஞ்சு இருக்கும். கிட்டத்தட்ட நம்ம பாத்ரும் சைஸ். உயரமே நாலடி இருக்கும்.
மூச்சைப் பிடிச்சுண்டு பெட்டியைத் திறந்து ஒரு ஸ்டூலை வெச்சு என்னை அதுக்குள்ள எறக்கி விடுவா அக்கா..
கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்லேருந்து ஆரம்பிச்சு கீழே தோண்டத் தோண்ட ரணகேசரி அல்லது ராஜபக்தி வரையும் வந்துருக்கேன்.
உப்பிலி மண்டையப் போட்டுதுன்னா மொதக்காரியமா வந்து பொட்டியை லவுட்டிண்டு போயிடணும்டா என்பாள்.
என்ன தோணித்தோ ஒரு நாள் “வேண்டாண்டா.. ரொம்பத் தோண்டாத”ன்னா..
“ஏண்டி”ன்னேன்.
தஞ்சாவூர் ஜில்லால யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டோம்.
“உப்பிலிக் கழிச்சலை நம்ப முடியாது.. அதுவே பொண்டாட்டி கழுத்தைத் திருகி இந்தப் பொட்டிக்குள்ள போட்டுருந்துதுன்னா யாருக்குத் தெரியும்?”
நான் நடுங்கிப் போயிட்டேன்.
“அப்போ அந்த மாமி இதுக்குள்ள இருப்பாளா”
“தெரியாது.. ஆனால், மாமியா இருக்க மாட்டா.. மம்மியா மாறியிருப்பா.. அது கூட இருக்காது.. அறுபது வருஷத்து எலும்புக் கூடு தான் இருக்கும்”
“ஐயையோ.. நாம பொட்டியைக் கிளப்பிண்டு போனா எலும்புக் கூட்டை என்ன பண்றது?”
“சத்தம் போடாம வெந்நீர் அடுப்புக்குள்ள போட்றலாம்.. நன்னா திகுதிகுன்னு எரியும்”
எப்பவோ பெரிய ஸ்கூலுக்கு எக்ஸ்கர்ஷன் போனப்போ லேபுல ஒரு எலும்புக் கூட்டைத் தொட்டுட்டேன்னு சந்தானம் எங்கம்மா கிட்ட போட்டுக் கொடுத்து, எங்கம்மா என்னை ஆளோடில உட்கார வெச்சு வெந்நீர் ஊத்தி அலம்பித்தான் வீட்டுக்குள்ளயே விட்டது ஞாபகம் வந்தது.
அக்கா சொல்றா எலும்பைப் போட்டு வெந்நீர் வைக்கலாம்னு.
அதுக்கப்புறம் நாங்களே ஸ்வாதீனமா அவர் வீட்டுக்குப் போக முடிஞ்சது.
காரணம் எங்க அக்காவோட ஹஸ்பண்ட். அவர் ஒரு மிருதங்க வித்வான்.
அவர் லோக்கல் கச்சேரிகள் போறது ராதா கல்யாணம் பஜனைகள்னு ரொம்ப பிசியா இருப்பார்.
அவருக்கு எங்க வீட்ல இந்த மாதிரி ஏதாவது ஏற்பாடு பண்ணனும்னு ரொம்ப ஆசை. அதுக்கு எங்கப்பா ஒத்துக்கலை. அவருக்கு அது பிடிக்காது.
அதுக்காக எங்களுக்கு சங்கீதம் வராதுங்கறது கிடையாது.
எங்க குடும்பத்துக்கே – நான், என்னோட மூணு அக்கா, சமயத்துல அம்மான்னு எல்லாருக்கும் கார்த்தால ஏழுமணிலேருந்து எட்டரை மணி வரை ஒருத்தர் தெனமும் தவறாம அயல்நாட்டு சங்கீதம் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு அலாதி சங்கீத ஞானம் உண்டு. நல்ல பிரபலஸ்தர்.
அவர் பேரு அப்துல் ஹமீத். சிலோன் ரேடியோல தினம் வர்றது சினிமாப் பாட்டுன்னாலும் அது ஃபாரீன்லேருந்து வந்தா அயல்நாட்டு சங்கீதம் தானே?
அதுனால யாராவது ததரீன்னன்னான்னா, என்னன்னா எப்போ முடிப்பீங்கன்னு தான் கேக்கத் தோணும்.
இன்ஃபேக்ட் எங்கக்கா கல்யாணத்துக்கு அப்பறம் தான் எங்க பிரதர் இன் லாவுக்கு பயந்துண்டு மிருதங்கம் வாசிப்பாங்கன்னு சொல்லக் கத்துண்டோம். அது வரைக்கும் மிருதங்கம் அடிப்பார்னு தான் சொல்றது.
அப்படியும் தாட்சண்யத்துக்காக ஒரு நாள் எங்க வீட்ல ஏதோவொரு பஜனை விடிய விடிய நடந்தது.
என்னையும் என்னோட இம்மீடியட் அக்காவையும் பாயோட சுருட்டிண்டு போய் ரெண்டாங்கட்டுல கிணத்தடில போட்ருந்தாங்க..
மறுநாள் கார்த்தால பெரியக்கா அத்திம்பேரை பிடிச்ச காட்டுல கொண்டு விட்டா..
“அந்த நடனம் மட்டும் கண்ணுல படட்டும்.. இலுப்பக்கரண்டியக் காச்சி தொடைல இழுக்கறேன் பாரு”
“நடனம்னு யாரும் கிடையாது.. நீ நட்டுவை சொல்றேன்னு நினைக்கிறேன்”
“நட்டோ போல்டோ.. ஏதோவொன்னு மைக்கை முழுங்கின மாதிரி ராப்பூற வ்ராட்டு வ்ராட்டுன்னு அலறித்தே, அதைத் தான் சொல்றேன்”
அப்புறம் கொஞ்ச நாள் நட்டு, கரண்டிக்கு பயந்து தலைமறைவா இருந்துது. அதனால பஜனை கோஷ்டியோட மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நட்டு இல்லாமல் ஒண்ணும் பாடாது.
அந்த மாதிரி நேரத்துல அவருக்குக் அடைக்கலம் கொடுத்தவர் தான் உப்பிலி.
கடல் மாதிரி வீடு.. கம்ப்ளைண்ட் பண்ணாத தனிமை.. வேற என்ன வேணும்?
ஆனால் அதுல ஒரேயொரு சிக்கல்.. பஜனைன்னா கூட பரவால்ல.. கச்சேரின்னா ரொம்ப கஷ்டம்.. உப்பிலிக்கு ரெண்டு பாட்டு பாட சான்ஸ் கொடுக்கணும்..
உப்பிலிக்கு தொண்டை கட்டின மாதிரி ஒரு குரல்.. சமயத்துல காத்து தான் வரும்.. இருந்தாலும் இடம் கொடுத்த மகானுபாவன்னு அவருக்கு ஒரு சான்ஸ் நடுவுல கொடுக்கறது.. உப்பிலிக்கு கான்ஸ்டிபேஷன் மாதிரி திருப்தியே இருக்காது.. ஏழெட்டு கீர்த்தனைகளை தாறுமாறா பாடாம விடமாட்டார்.
அந்த தடவை நாங்க மாட்டிண்டோம். எங்க வீட்ல பின்கட்டுல குடியிருந்த ஏசிடிவோ தன் பையனுக்கு எங்க வீட்ல வெச்சு பூணல் போட்டார். அதுக்கு அவரோட கலீக் ஒத்தர், வயலின் பாலு, கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணினார்.
பாலு பிரமாதமா வாசிப்பார். குன்னக்குடி மாதிரி வயலின்லயே விசிலடிப்பார். சமயத்துல சினிமாப் பாட்டு கூட வாசிப்பார். அப்போ பிரபலமா ஓடின சுவாமி ஐயப்பன் படத்தில் வருமே ஹரிவராசனம் அதை அவ்வளவு அழகா வாசிப்பார்.
அந்தப் படம் பாத்து தான் ஐயப்பன்னு ஒரு சுவாமி இருக்கார்னே எங்களுக்குத் தெரியும்.
எங்கப்பா சும்மா இல்லாம அப்போலோன்னு அவர் ப்ரெண்டை பாட வைக்கலாம்னு சொன்னார். அப்போலோக்கு பாட்டெல்லாம் அவ்வளவா வராது. குத்து மதிப்பா பாடறது தான்.
என்னை மாதிரி சின்ன பசங்க அவர் பாடும்போது முன்னாடி உக்கார மாட்டோம்.
பாடறவங்க சேஷ்டை பண்றது மாதிரி இவர் ரெண்டு விரலை சேர்த்து டூ விடற மாதிரி விடுவார்.
“இந்த மாமா எப்பப் பாத்தாலும் டூ தான் விடறார்.. பழமே விட மாட்டேங்கறார்னு அவர் பேர்ல கோபம்.
அப்போலோ பாடி முடிச்சார். வயலின் பாலு வயலின் டப்பாவைப் பிரிச்சது தான் தாமசம், உப்பிலி எங்கேருந்தோ அனுமார் மாதிரி அந்தரத்துல இருந்து பறந்து வந்து பாடற இடத்துல உக்காந்துண்டு ஒரே அழிச்சாட்டியம்.
எங்கப்பாவும் “தொலையறது.. பெரியவர்.. ஆசைப்படறார்.. ரெண்டு கீர்த்தனை தானே.. பாடிட்டுப் போகட்டும்”னு சொல்லிட்டார்.
யார் மூஞ்சிலயும் ஈயாடலை. ஒண்ணாச்சு ரெண்டாச்சு.. ஊஹூம்.. ஒண்ணும் நடக்கலை.. கடைசில கொஞ்சம் காட்டமா சொல்ற மாதிரி ஆயிடுத்து.. மாமா.. தப்பா எடுத்துக்கப் படாது.. பெரியவா நீங்க.. இத்தோட முடிச்சுக்குங்கோ”
அவரும் அரை மனசோட சரின்னு சொன்னப்பறம் தான் மூச்சே வந்தது.
“பாவயாமி மட்டும் பாடிடறேன்”
ஐயையோ ஐயையோன்னு ஒரே கூக்குரல்.
ராமரைப் பத்தி பேசினாலே புண்யம். ஒருத்தர் பாடறேங்கறார். எல்லாம் அலர்றதுங்க.. என்ன ஒரு ஐரனி..?
உப்பிலி விடலை.. பாட ஆரம்பிச்சு ஏதோ ஆலாபனைல கொஞ்சம் உச்சஸ்தாயில மாட்டிக்கிச்சு..
அண்ணாந்து பார்த்து வழக்கம் போல சவுண்டு வரலை.. காத்து தான் வந்தது.. கொஞ்ச நேரத்துல அதுவும் வரலை..
மார்பு எலும்பெல்லாம் பொடைச்சுண்டு, கூடைச்சேரை கவுத்துப் போட்ட மாதிரி ஃப்ரீஸ் ஆயிடுத்து..
கூடமே ஸ்தம்பிச்சுப் போயி ஒரே மயான அமைதி.
அதைக் கலைச்சது என் பெரியக்கா தான். நான் வழக்கம் போல அவ கையைப் பிடிச்சுண்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கேன்.
தேவுடா எதுக்கு ஓடறான்னே தெரியாம வாசலுக்கு ஓடறான்..
“யாராவது உலுக்குங்கோளேன்.. கழிச்சல்.. ப்ராணன் போயிருக்கப் போறது.. உங்க அத்திம்பேருக்கு மூளையே கிடையாது.. வேலை மெனக்கெட்டு இழுத்துண்டு வந்திருக்கார் பாரு.. அதுக்கு யாரும் கிடையாது.. அது பாட்டுல நம்ம வீட்டு கூடத்துல மண்டையப் போட்டுத் தொலைச்சா,நாமன்னா காரியம் பண்ணனும்?”
நான் அக்கா கையைப் பிடித்து உலுக்கினேன்.
“என்னடா” என்றாள் எரிச்சலுடன்.
நான் ரகசியமாக அவளிடம், “நாம வேணா குடுகுடுன்னு ஓடிப்போயி பொட்டியைக் கெளப்பிண்டு வந்துடுவோமா?” நறுக்கென்று நடு மண்டையில் குட்டு விழுந்தது.
நல்ல வேளை.. யாரோ உலுக்கினதுல உப்பிலி பூலோகத்துக்கே திரும்பி வந்துட்டார்.. யாரோ சொல்றாங்க “உப்பிலியாவது.. அவ்வளவு ஈஸியா போறதாவது”
உப்பிலி ஒண்ணுமே நடக்காத மாதிரி பாவயாமி கன்டின்யூபண்றது. சில அடாஸ் சானல்ல அட்வர்டைஸ்மென்ட் டயத்துலகூட படம் ஓடிண்டு இருக்குமே அது மாதிரி நடுவுல உப்பிலிகோமால இருந்தப்போ ஒண்ணு ரெண்டு ஸ்டான்ஸாஓடியிருக்கு..
தேவுடா திரும்பி வந்தவன், உப்பிலி கிட்டே, “மாமா.. உங்க சைக்கிளை வெளீல சாத்தி வெச்சிருந்துதே.. அதை ஒரு தாத்தா கிளப்பிண்டு பாலக்கரை பக்கம் போறார்”
உப்பிலி அடுத்த செகண்ட் பாவயாமியை அந்தரத்துல நிறுத்திட்டு வாசப்பக்கம் தெறிச்சு ஓடறார்.
“அந்தக் கிழவனுக்குப் போயும் போயும் உப்பிலி சைக்கிள் தானாடா கெடச்சது கிளப்பறதுக்கு.. யாருடா அது?”
தேவுடா சிரிச்சுண்டே சொல்றான்..
“யாரும் இல்லை.. உப்பிலி மாமாவோட உசிரு அவர் சைக்கிள்ல தான இருக்கு? அதைச் சொன்னாத் தான் அவரைக் கிளப்ப முடியும்?
யாரோ அவனை செல்லமாக அடிக்கப் போனார்கள்.
அதுக்குள்ள யாரோ, உப்பிலி வர்றதுக்குள்ள, பாலுவை கச்சேரியை ஆரம்பிக்க அவசரப்படுத்தினார்.
அவர் ரொம்ப பரிதாபமா இருந்தவர், கையெடுத்துக் கும்பிட்டு, கச்சேரியை இத்தோட நிறுத்திக்கலாமே.. மங்களம். மங்களம்னு” மூணு தரம் சொல்லிட்டு எழுந்துண்டார்.
மங்களம்..
கேள்வி: என் காதலே என் காதலே, ன்னை என்ன செய்யப் போகிறாய்?


