
பகவத் கீதை என்றாலே, அது ஸமஸ்க்ருத இலக்கியம் – அதைப் படிக்க வேண்டுமானால் நிறைய பக்குவம் வேண்டும் – இதுதவிர புரியுமோ புரியாதோ என்ற அச்சம் → இவை சாதாரண மனிதர்கள், அல்லது புத்தகம் வாசிக்க நினைப்பவர்களின் பொதுவான கருத்து! கொஞ்சம், நின்று நிறுத்திப் பார்த்தால் அது மனத்தில் இருத்தி நிற்கும்! கருத்தில் நிலைத்து வரும்!
உலகத்தில் அதிக மொழி பெயர்ப்புக் கண்ட முக்கிய இலக்கியங்களில் பகவத் கீதையும் ஒன்று என்பது இந்த தேசத்தின் பெருமைகளில் ஒன்று.
கண்ணன் தந்த கீதையை முழுவதும் உள்வாங்கி, மஹாகவி பாரதி மற்றும் அவனைத் தொடர்ந்து கண்ணதாசனும் கீதையின் கருத்துக்களை மானுடம் புரிந்துகொள்ளுமாறு தந்திருக்கிறார்கள்.
பேராசிரியர் வ வே சு அவர்கள் கூறும்போது, பாரதிக்கு, ராமனை விட கண்ணன் மீதே அதிகக் காதலும், பற்றும் உண்டு என்பார்கள். உண்மை தான் – ஒவ்வொரு பாடலிலும் கண்ணனைத்தான் எப்படி எல்லாம் பாரதி கொண்டாடி இருக்கிறான். அதேபோல, கண்ணதாசனும், அவன் பெயர்க்கு ஏற்ப, அவனின் கவிதைகள், பாடல்கள் மற்றும் கட்டுரைகளில் கண்ணனையே மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறான்.
மானுடம் மற்றும் மனிதவளம் சிறக்க, கீதை தந்த கண்ணன், மஹாகவி பாரதி, மற்றும் கவியரசு கண்ணதாசன் எப்படி எல்லாம் சிந்தித்து நமக்கு வாழ்வியல் நெறியைத் தந்திருக்கிறார்கள் என்பதைக் காணும் ஒரு சிறு முயற்சிதான் இந்தத் தொடர்.
கீதை என்னும் புதையல் மானுடர்க்குக் கிடைத்த மற்றொரு வேதம்! மற்றுமொரு திருக்குறள்! இந்தப் புதையலை எத்தனை அறிஞர் பெருமக்கள் – உலகளவில், புதிது புதிதாக எடுத்துத் தந்திருக்கிறார்கள்!
ஆன்மிகம் வேண்டுமா – அதில் இருக்கிறது!
அறிவின் விளக்கம் வேண்டுமா – அதில் இருக்கிறது!
உள்ளத்தின் தெளிவு வேண்டுமா – அதில் இருக்கிறது!
சுயநலம் இல்லாத பொதுநல நோக்கு வேண்டுமா – அதில் இருக்கிறது!
எல்லோரும் வாழும் வழி வேண்டுமா – அதில் இருக்கிறது!
ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது இனத்திற்காக கூறப்பட்ட நூல் அல்ல! புரியாத கருத்துகளைக் கொண்டதும் அல்ல! இது பாமரனும் புரிந்து கொள்ளும்படியான கேள்வி – பதில் வடிவில் இருக்கும் அறிவுப் பெட்டகம்! பல்வேறு நாட்டு அறிஞர்கள், படித்து, கடைப்பிடித்தது மட்டுமின்றி, அவர்கள் நாட்டு மொழிகளில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்கள்!
ஆதிசங்கரர், ராமானுஜர் தவிர, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், தொடர்ந்து ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் எனப் பல ஆன்றோர் பெருமக்கள் பகவத் கீதைக்கு உரை தந்து விளக்கி இருக்கிறார்கள்.
நம்மை ஆண்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆங்கிலத்திலும், அவுரங்கசீப் சகோதரன் தாரா ஷுக் உருது மொழியிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்றால், கீதையின் சிறப்பை என்னவென்று கூறுவது. திலகர், அரவிந்தர், பாரதி, வ வே சு ஐயர்,வினோபாபாவே,,ராஜாஜி தொட்டு அத்தனை தேசத் தலைவர்களும, கீதைக்கு உரை எழுதி இருக்கிறார்கள். ஆதி சங்கரர் நிறுவிய முதல் பீடமான ச்ருங்கேரி சாரதா பீடத்தின் குரு பரம்பரையின் ஜகத்குருக்கள் அனைவரும் அவர்களின் உரைகளில் பகவத் கீதை, லலிதா சஹஸ்ரநாமம் இவற்றில் இருந்தே நமக்குப் பல உதாரணங்கள் மற்றும் சிறப்புக்களைக் கூறி வருகிறார்கள்.
பொதுவாகவே நம் மனமும் எண்ணமும், ஒரு அபிப்ராயத்தின் நோக்கில் மட்டுமே இயங்குகிறது! கயிறா, பாம்பா என்பது விளக்கின் ஒளி இருந்தால் மட்டுமே தெரிய வரும்! இருட்டு அல்லது பாதி வெளிச்சம் எனில் மனத்தில் அச்சமும், ஐயமும் உடன் இருக்கும்! இதைத்தான் ஜகத்குரு ஆதிசங்கரர் கூறுகிறார். இந்த சந்தேகம் விலக ஒரே மருந்து – தெளிவு என்னும் ஞானம். எனவே இந்த ஞானமே நாம் காணும் மாற்றம்.
அந்த மாற்றத்தை நம் உள்ளே காண, நமது அகங்காரத்தை விட்டு, இறைவனிடம் சரணாகதி அடையவேண்டும் – பாரதி அதைத்தான் கூறுகிறான். நமக்குள்ள கடமையையும், தான் என்பதை விட்ட சரணாகதியையும் தான் பாரதியும் சொல்கிறான்.
ஓய்தல் ஒழி என்று சோம்பேறித்தனத்தை எதிர்க்கும் பாரதி, சரணடைதல் மூலம், தெய்வம் நீ என்று உணர்வாய் என்கிறான்.
மாற்றம் என்று பேசும் நான், நாம் மாற நினைக்காமல் பிறரை மாற்றவே எண்ணுகிறோம்! மாற்றம் ஒன்றே மாறாத தத்துவம் என்கிறான் கண்ணதாசன்.
இந்த மனமாற்றம் – மடைமாற்றம் – கீதையைப் புரிந்துகொண்டால் நிச்சயம் ஏற்படும்!
கீதையில் இல்லாத பொருளே இல்லை! மானுடத்துக்கு தேவையான அனைத்தும் நிரம்பியிருக்கும் பல்பொருள் அங்காடி கீதை என்றால் மிகை ஆகாது!
என் வாழ்வில் ஏற்பட்ட தடங்கல்கள், சிக்கல்கள், பிரச்சனைகள் இவற்றிலிருந்து நான் மீண்டு வந்திருக்கிறேன் என்றால் அதன் பெருமை முழுவதும் கீதையைச்சாரும் என்று கூறியது மகாத்மா காந்தி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பையில் எப்போதும் ஒரு கீதைப் புத்தகம் இருந்திருக்கிறது என்கிறது வரலாறு. பால கங்காதர திலகர் அவர்கள் கீதா ரஹஸ்யம் என்ற புத்தகத்தை, ஒரு ஆய்வு நூல் போல தந்திருக்கிறார்கள்.
கீதையில் கூறும் இரண்டு முக்கியப் பாடங்கள் –
தன்னை அறிதல்
தன்னை மறந்து சரணடைதல்
தன்னை அறிதல் என்பது – ஆங்கிலத்தில் “SWOT Analysis” என்பார்கள் – நமது பலம், பலவீனம், பயம், வாய்ப்புகள் இவைகளை அறிந்து வாழ்க்கையை, திட்டமிட்டு ரசித்து வாழ்தல் (Strength, Weakness, Opportunity & Threats)
அவரவர் பலம், பலவீனம் இவற்றை அறிவதுடன், இருக்கின்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டு, வருகின்ற வாய்ப்புக்களை வைத்து முன்னேறுவது வாழ்க்கையின் குறிக்கோளாகும்.
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்
என்கிறான் கண்ணதாசன்.
மஹாகவி பாரதி ,
நின்னைச் சரண் அடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
துன்பமினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்புநெறியில் அறங்கள் வளர்த்திட
இங்கே சரணடைதல் என்பது தன்னம்பிக்கையுடன், தலைக்கனத்தை இறக்கிவைத்து, தரணியின் தலைவனாம் இறையைப் பணிவது என்பதே! இறைவனை சரண் அடைந்துவிட்டால் ,கண்ணதாசன் கூறுவதைப்போல,
உள்ளத்திலே இருப்பது தான் உலகம் கண்ணா –
அதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் விலகும் யாவும் விலகும் கண்ணா
என்றே உணர்ந்து வாழலாம்.
தொடர்ந்து மாதா மாதம் பகிர்ந்து கொள்வோம்.
கேள்வி:
நான் யார்? நான் யார்? நாலும் தெரிந்தவர் யார் யார்?
