—————————————————————————————————————————————————————————————
முதலிடம் பெறுவது “பசும்புல் ” உயிர்மை சரவணன் சந்திரன்
—————————————————————————————————————————————————————————————-
வணக்கம்.
ஒவ்வொரு மாதமும் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது குவிகம் சிவசங்கரி சிறுகதைத் தேர்வு .
இந்த பிப்ரவரி -2026 ல் மின்னிதழ்கள் அச்சிதழ்களென. வெளியான சிறுகதைகளை வாசிக்கிற வாய்ப்பையும் அதில் ஒரே ஒரு சிறப்பான சிறுகதையை மட்டுமே தேர்வு செய்து தரும் தலையாய பொறுப்பையும் எனக்கு வழங்கிய குவிகத்திற்கு முதலில்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேறுவேறு கோணங்களில் வித்தியாசமான கருப்பொருளோடு மாறுபட்ட செறிவான நடையுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள். பூந்தோட்டத்தில் எந்தப் பூ அழகு என்பது?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி ஸ்டைல்.
வெளியாகும் இதழ்களுமே தனித்தன்மைகளுடன் கொள்கைகளுடன் உள்ளன.
மொத்தமாய் அனைத்துக்கதைகளையும் வாசிக்க நேர்ந்தபோது மாயாலோகத்தில் சிக்கினாற் போன்றதொரு உணர்வுச்சுழல். அத்தனை சிறுகதைகளும் என்னை காந்தமாய் இழுத்துக் கொண்டது
கஷ்டமும் இஷ்டமுமான பணி. நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை பட்டியலிட்டதில் இருபதைத் தேற்றினேன். மிகவும் முயன்று குறும்பட்டியலிட்டதில்…ஏழு கதைகளைத் தேர்வு செய்தேன்.இது என் ரசனைக்குட்பட்டது. இதுதான் முடிவென ஏற்கவியலாது ரசனைகளுக்கேற்ப மாறலாம்.
என் கண்ணோட்டம் என் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுத்ததில்
காலச்சுவட்டின் “காடீப்பீ” சிவப்பிரசாத்தின் கைவண்ணம் மற்றும் உயிர்மையின் “பசும்புல்” சரவணன் சந்திரனின் படைப்பு மனதில் முதன்மை வகித்தன.
1. “விழுந்தால் எழ வேண்டாமோ? –மங்கையர் மலர் –மைதிலி ராமையா.
“அப்பாவுக்கு காரம் பிடிக்காது! சத்தம் பிடிக்காது. இந்தப்பூ பிடிக்காது. ஸ்டிக்கர் பொட்டு பிடிக்காது ” என்றே நீளும் லிஸ்ட்டில் சுயம் தொலைக்கும் அம்மா. இரவு ஏழுமணிக்கே குழந்தைகள் சாராவையும் ராகுலையும் தூங்கப்போக வேண்டுமென வற்புறுத்தும் அம்மா.
ஒருநாளிரவில் இருபிள்ளைகளுக்குமே அப்பாவின் கொடுரமுகம் தெரியவருகிறது.
சாரா பொங்கி எழுகிறாள். . அம்மாவிடம் வைக்கப்படும் சரமாரியான கேள்விகள் அம்மாவின் கண்களைத் திறக்கின்றன.தகப்பன் சாமிபோல தாயுமானவளாகி நிற்க அம்மா தன்னையே மகளிடம் ஒப்படைத்து கண்ணீர் சிந்துகிறாள் மனத்தெளிவு கொள்கிறாள்.
மொத்தத்தில் விழுந்தால் எழ வேண்டாமோ?//
தகப்பன் சாமியானவள்.
2. நந்தினி டீச்சர்! –மங்கையர் மலர் — லஷ்மி ராமானுஜம்
இது ஒரு ஆசிரியை, மாணவியின் உறவை சொல்கிறது. உயரக்குறைவை பெருங்குறையாக எண்ணி தனக்குள் புழுங்கும் மாணவியை அவளுக்குள்ளிருக்கும் இன்னொரு திறமையான சமையலை வெளிக் கொணர வைத்து பரிமளிக்கச் செய்து தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். சின்னப்பூவொன்று கருகிவிடாமல் பூத்துக் குலுங்க வைத்த பெருமை அந்த ஆசிரியைக்கே உரியது. தகுந்த நேரத்தில் அவள் தன்னம்பிக்கையை வளர்த்து மீட்டதில் இந்தக்கதை சிறப்பை பெறுகிறது
நந்தினி டீச்சர் / /மனதிலுறுதி வேண்டும்
3. இறுகப்பற்று – கல்கி – ச.மணி வண்ணன்
ரம்ஜான் பண்டிகைக்கு வீடு தேடிவரும் பிரியாணியை மறுதளித்து திருப்பி அனுப்புகிறாள் மனைவி. மீறிக்கேட்கிற குழந்தைகளையும் அடித்து கோபிக்கிறாள்.
கணவனுக்கோ பால்ய காலத்து நினைவு வருகிறது. ஊரில் மதவேற்றுமையின்றி அப்பாவுடைய இஸ்லாமிய நண்பர்களை தானும் அவர்கள் தன் தந்தையை உறவுமுறை வைத்து அழைத்ததும் திருமணவிழாக்களில் கலந்து கொண்டதும் மகிழ்ச்சியோடு பண்டிகைகளின்போது பலகாரங்களை பறிமாறிக் கொண்டதும் அவர்கள் பண்டிகைக்கு பிரியாணி தந்து மகிழ்ந்ததும் நினைவுக்குவர. மனைவியின் இன்றைய மனத்துவேஷமும் காட்டும் வேற்றுமையும் கவலையும் வருத்தமும் அசூயையும் கொள்ள வைக்கிறது.
சாப்பிட அழைப்பவளிடம். பிரியாணி தேவையில்லை நான் வெஜ் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் என்கிறான்.”எப்போதிலிருந்து? “என்று திகைப்பவளிடம் “நேற்றிலிருந்து “என்று பட்டென வருகிறது பதில். மனைவியின் மனதை மாற்றா முடியாத கோபமும் ஆதங்கமும் இப்படி வெளிப்படுகிறதென்பதையும் மதஒற்றுமையையும் வேற்றுமைகாணாது பழகிய மனதின் துன்பத்தையும் அழகாய் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். இறுகப்பற்று// அந்த வானத்தைப் போல
4. வளர்ப்புப் பிராணி. சொல்வனம் ராஜேஷ் வைரவேல் பாண்டியன்
உளவியலை அழகியலோடு கையாண்டுள்ளார்.
கணவன் மனைவி மகன் என்றிருக்கும் சிறிய குடும்பத்தின் வீட்டு வாயிலில் நிற்கிறது வயதான நாய் ஒன்று.அதன் வருகையை, முதலில் அதை வரவேற்காத அம்மாவே மனசுமாறி திண்ணையோரமாய் உணவு வைப்பதும்.சாப்பிட்டு விட்டு அது வாலையாட்டிக்கொண்டு படுப்பதும் மெதுவாக அதை இவர்கள் ஏற்றுக் கொள்வதையும் இவர்களை அது ஏற்றுக் கொள்வதும் நடைபெறுகிறது.
மூப்பு காரணமாக ஒருநாள் அது இறந்துவிட தோட்டத்திலேயே அப்பா புதைத்து விடுகிறார். அம்மா “இதுக்குத்தான் இதெல்லாம் வேண்டாம்ன்னு” சொன்னேன் என்று முணுமுணுக்கிறாள்.
இதன் பின்பு…நாய் வந்தது இருந்தது இறந்தது எல்லாமே சாதாரண நிகழ்வாயில்லாமல் அவர்களுடைய வாழ்வையே அதன் இருப்பும் மறைவும் அசாதாரணமாக மாற்றியிருப்பதை உணர்கிறார்கள். நாய் புதைத்த இடத்தில் ஒரு செடி வளர அம்மா “இது வேண்டாம். இதைப் பார்த்தால் நினைப்பு வரும்” என்று. பிடுங்கி விட்டு மறுநாளே மீண்டும் அதை நட்டுவிட்டு “தினமும் மனசு மாது” என்று தண்ணீர் விடுகிறாள். “நாம மாறிப்போயிட்டோமோ” “நாம மாறலை! வீடு மாறிடுச்சு “
யாரும் கவனிக்கா போதுகளில் அந்தக்குரலுக்கு தன்னுடலை அசைத்து அசைத்து நடனமிட்டபடி இருந்தது அந்தச் செடி. என்று முடிகிறது கதை.
ஒரு வாயில்லா ஜீவனின் வருகையும் இருப்பும் இறப்பும் மனிதர்களை அவர்கள் வாழ்வை அவர்களின் ஞாபகத்தில் எத்துணை மாற்றங்களை கொண்டு வந்துவிடுகிறதென்பதை நேர்த்தியாகக் கூறியிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
இதுவுமே மனதில் தாக்கத்தை தேக்கிய கதை தான். வளர்ப்புப் பிராணி // நினைவுகளின் சிம்மாசனம்
5. யாரெப்படி வளர்ந்தோம் — கலைமகள் — மாலுமி
ஒரு எக்ஸ் சர்வீஸ் மேனுக்கும் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சியின் நீட்சியும் நெகிழ்ச்சியும் அட்டகாசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசத்துக்காக சேவை செய்துவிட்டு உடல்நிலை காரணமாய் வீடுவந்தவரை தறுதலையாகிப்போன மகன் தளர்ச்சியைத் தருகிறான். படிக்காமலும் வேலை செய்யாமலும் ஊரைச்சுற்றி வந்தவன் அம்மாவின் நகையோடும் கொஞ்சம் ரொக்கத்தோடும் வீட்டைவிட்டு போனவனுக்கு காதலும் கல்யாணமும் மட்டும் கைகூடிவிடுகிறது.
பாதி நிலத்தை நிலத்தை விற்றுத்தரச் சொல்லி வற்புறுத்த விற்று பத்து லட்சத்தோடு போனவனை எண்ணியே மனைவி நோய்வாய்பட அதில் மீதி சொத்தும் கரைகிறது முடிவில் மனைவியை காப்பாற்ற முடியாமல் போக தனிமரமாகிறார் இவர்.
விடாது கருப்பு என்பதுபோல் அவர் பென்ஷனிலும் பங்கு கேட்கிறான். மீறினால் கத்தியைக் காட்டி மிரட்டுபவனிடம் மனதால் மரித்துப் போகிறார் மிலிட்டரி மேன்.
தற்போது ஒரு செக்யூரிட்டி ஆபிசில் பணி புரிபவர் மகனிடம் சம்பளத்தை மறைத்துவிட்டு உணவும் உறைவிடமும் மட்டுமே தருவதாகக் கூறிவிடுவார்..இத்தனையையும் ஆசிரியரிடம் கூறியவர் தன்னுடைய 600 ரூபாய் பணத்தை பறிகொடுத்து விட்டதால் பஸ் சார்ஜ் 440 மட்டும் தந்து உதவும்படியும் தான் அதைத் திருப்பித்தந்து விடுவதாகவும் கூற ஆசிரியரும் பணத்தைத் தருகிறார். அதிகம் வேண்டவே வேண்டாமென 440ரூபாய் மட்டும் பெற்றுக் கொள்கிறார்.
முகவரிதந்தால்தான் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்ற பிடிவாதமான கண்ணியம் ஆசிரியரை சிந்தனையில் ஆழ்த்துகிறது. விடைபெற்று செல்பவரையே பார்த்துக் கொண்டு நிற்கிறார்.
தபால்காரர் கொண்டுவந்த பணத்தைப்பார்த்ததுமே ஆசிரியர் பணத்தை அப்படியே திருப்பி அனுப்புகிறார் “உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த பரிசாக இதை ஏற்றுக் கொள்ளவும் “என்று எழுதி கையொப்பமிட்டு அனுப்புகிறார்.
இதன்பின்னே முதலிடம் பெற போட்டியிடும் இரண்டுமே என் மனத்தராசில் பலமுறை சரிபார்த்து “காடீப்பீ” கதையை இரண்டாமிடத்துக்கும் “பசும்புல்” லை முதலிடத்துக்கும் நகர்த்தியுள்ளேன்.
6. “காடீப்பீ”
ஒவ்வொரு வீட்டிலும் பிரசவமானதும் குழந்தை முதன்முதலாய் மலம் போவதை கவனமாய் பெரியவர்கள் பார்ப்பார்கள். காட்டுப்பீ ,காடீப்பீ என்பார்கள். உலகிற்கு வந்த சிசுவின் முதல் மலம் இயற்கையாக வெளியாவது மிக முக்கியம்.இதையே கருவாக்கி கதையாக்கித் தந்துள்ளார் சிவப்ரசாத் காலச்சுவட்டில்…
பிரசவத்தில் எதிர்பாராத சிக்கலால் தவிர்க்கமுடியாமல் மேற்கொண்டு பணம் கட்டவேண்டிய நிலையில் தன்னோடு பணி புரியும் தோழியிடம் பணம் கேட்கிறார் ராஜேஸ்வரி அம்மாள்.
திருமணமாகி குழந்தைக்காக காத்திருந்து செயற்கைக் கருத்தரிப்பு . சிகிச்சைக்காக பணம் சேர்க்கின்ற எடுக்கும் தம்பதி தோழியும் அவள் கணவனும் .
கணவனுக்கோ அந்தப்பணத்தை கடனாகத்தர மனதில்லை. மனைவியோ வாதாடி பணத்தைக் கொடுக்க வைக்கிறாள்.
“பிரசவத்துக்கு தானே தருகிறோம். புண்ணியம்தான்” என்று முப்பதாயிரத்தை மருத்துவமனையில் ராஜேஸ்வரியிடம் தந்துவிட்டு ஆபிஸ் போகுமாறு பணிக்கிறாள்.
மருத்துவமனையில் குழந்தையை தூக்கி அவனுடைய கையில் கொடுக்க அவனோ பழக்கமற்ற காரணத்தினால் கைநடுங்க அணைத்துப்பிடிக்கிறான். நெஞ்சில் பரவசம் பொங்குகிறது கையிலேந்திய பூங்குவியல் புத்தம்புது அனுபவமாய் உள்ளே பூக்களை உதிர்க்கிறது.
சட்டையில் ஏதோ கறுப்பாய் கறை.
“அச்சோ! காடீப்பீ “என்று மகிழ்ச்சியோடு குழந்தையின் காலைத் தூக்கிப்பார்க்கிறார் ராஜேஸ்வரி. துணியில் கோழைவடிவ மலம் கறுப்பாக.
“ராவுலேருந்து போகவேயில்லை பயமுறுத்திட்டான். நீங்க கையிலே வாங்கின நேரம் போயிட்டானுங்க சட்டையை அலசுங்க. இல்லேன்னா கறை போகாது”
என மகிழ்வுடன் சொல்கிறார் அவர். தண்ணீரில் அலச அதுவோ இன்னுமே பரவுகிறது.
மனைவியிடம் “முப்பதாயிரம் கொடுத்து பீ வாங்கி வந்திருக்கேன் “சொல்லி சிரித்துவிட்டு விஷயத்தை கூற அவளும் தானும் விடுப்பெடுத்துக் கொண்டு வருவதாகக் கூறி காத்திருக்க சொல்கிறாள்.
சட்டையைக்கூட மாற்றாமல் களைப்பில் உறங்கும் கணவனை நெருங்கிய மனைவி கறைபட்ட சட்டையைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிக்கொள்கிறாள்.
“பச்சிளங்குழந்தையின் வாசனை நாசியிலேறி வீடு, தெரு, நகரம் என்றுஎங்கும் வியாபித்தது “என்று முடியும் முத்தாய்ப்பான வரி அழகின் உச்சம்.
குழந்தை ஏக்கம் காடீப்பீக்கு காத்திருப்பு அதனை முகரும் தம்பதியின் மன ஏக்கம் வித்தியாசமான கருவை அனாயாசமாகக் கையாண்ட லாவகம். யாருமே சட்டென்று தொடத் தயங்கும் கருவை ஜனரஞ்சகமாய் கொண்டுபோன நேர்த்தி என்று
மொத்தத்தில் காடீப்பீ// புனுகின் நறுமணம்.
7. இறுதியாக முதலிடம் பெறுவது “பசும்புல் ” உயிர்மை சரவணன் சந்திரன்
புதியதோர் களம். ஒரு சிறுவனுக்கும் பெரியவருக்குமான சிநேகம்.
வெள்ளந்தித்தனமான சொற்பிரயோகங்கள்இயல்பாய் கதையில் இணையும் அழகான உவமைகள் என்று கதை கட்டிப்போடுகிறது. படித்து முடித்ததுமே தாக்கத்தை தந்தது.
கோவில்பட்டியருகே ஒருஊரில் ஒரு ஹாக்கி மைதானம். மழையில்லாக் காலத்தில் தான் ஆடமுடியும். இல்லையேல் புல்முளைத்து பந்தை தட்டிவிடும்
அதில் ஜுனியர் டீம் மருதுவும் அங்கே மைதானத்தை சுத்தம் செய்யும் மார்க்கரும் தின்பண்டங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் படியான பழக்கம். சிறுவனின் அனைத்து ஐயங்களையும் தீர்த்து வைக்கும் மார்க்கர் அவனுக்கு ஹீரோ.
அரசாங்கம் மலேசியன் வகை டர்ப் புல்லாலான மைதானத்தை முதன்முதலாக சென்னையில் நிறுவப்போவதாகவும் அகிலஇந்தியப் போட்டி அங்கே நடைபெறப் போவதாகவும் அறிவிக்கிறது.
மருது சந்தேகம் கேட்கிறான். புல்லின்மீது எப்படி ஆடுவதென.? தன் ஹீரோவால் அதே புல்லை இங்கே வளர்த்துவிட முடியாதா என்று
பெரியவரும் ஒருமுறை கண்ணால் பார்த்துவிட்டால் வளர்த்திடலாம்டா அதென்ன விஷயமா? “என்கிறார் அசால்ட்டாக.
அவருடைய பையில் ஒரு பட்டன் கத்தியிருக்கும் . அதை அவன் தொடப்போகும்போது கண்டித்து பைக்குள்ளே வைப்பார். அது அவருடைய அப்பாவின் கத்தியாம். பன்றி வேட்டையாடி அவர். அவராலேயே தான் அந்தப்பன்றியை அறுக்கையில் பார்த்த கோலம் கேட்ட ஓலம் மனதிலேயே இருப்பதால் புலால் உண்பதை விட்டுவிட்டதாகச் சொல்வார்
இந்த ஊர் ஹாக்கி டீமுக்கும் சென்னைக்கு வந்து புல்வெளி மைதானத்தையும் ஆட்டத்தையும் பார்க்க அழைப்பு வருகிறது. அதில் மருதுவும் இடம் பெறுகிறான். ஆனால் மார்க்கருக்கு இடமில்லை.
மருது தேம்புகிறான் . மார்க்கர் தேற்றி அனுப்புகிறார்.
“நீ அந்தப் புல்லை பார்த்துவிட்டு வந்து சொல்லுடா நான் அதை வளர்த்துடுறேன்! ” என்றெல்லாம் சமாதானம் செய்தனுப்புகிறார்.
மனதேயின்றி போகிறவன் சிறுவயதின் இயல்பாய் பயணத்தில் மூழ்கிப்போகிறான்.
மறுநாள் விழா. யாருமே அருகில் போக அனுமதியில்லை.இரவே கெடுபிடி அதிகமாகிறது. அமைச்சர் தலைமையல்லவா.
இருளில் புல்வெளி கிரவுண்டு மினுக்குகிறது.விடியலில் இந்த டீம் முஸ்தீபுடன் ஆட்டத்தைக்காண தயாராகிறது.
திடிரென கசமுசா.விழா ரத்தாகிறது. புல்வெளியில் ஏதோ டேமேஜ். அமைச்சர் வரவில்லை. முகத்தைத் தொங்கப் போட்டபடி ஊர் திரும்புகிறது மொத்த டீமும்.
மருது சோர்வுடன் வர அம்மா தேற்றுகிறாள். இவனும் தன் பையுடன் மார்க்கரைப் பார்க்க போகிறான்.
அவரிடம் தன் பையினின்றும் ஒரு பட்டன் கத்தியை எடுத்து நீட்ட அவர் கடுஞ்சினம் கொள்கிறார் “களவாணிப் பயலே! நீதானா அது? மட்டையை தூக்குற கையிலே இதை ஏண்டா தொட்டே உங்கம்மாக்கிட்டே சொல்றேன் பாரு “
என்று எழ முயல அவரைத் தடுத்து மீண்டும் கையை பைக்குள் விட்டு அதை எடுத்து வெளியில் போடுகிறான்.
அச்சு அசலாய் செவ்வகவடிவில் கிழிக்கப்பட்ட பசும்புல் மெத்தை.
ஆகாயத்தைப் பார்த்தபடி விரிந்து கிடந்தது ஒரு துண்டு பசும்புல் நிலம்.
வெடித்து அழ ஆரம்பிக்கிறார் மார்க்கர்.
கதை முடிந்து விடுகிறது இங்கே.
இது தவறானதொரு முனைப்பை காட்டுவதாக. தெரியலாம் ஆனால் எனக்கு இதன் உள்ளாடும் அந்த நட்புதான் தெரிந்தது. ஒரு சிறுவன், ஒரு பெரியவர் இவர்களிடையேயிலான இந்த பிணைப்பை அழகுற காட்டியதில் வாசகன் மனதைக் கொள்ளை கொள்கிறார் ஆசிரியர்.
சிறுசிறு உவமைகள்
# முதுகில் கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் மச்சம் போல் ஒரு அச்சம் நெஞ்சுக்குள்
# கோலம்போடுவதுபோல சுண்ணாம்புக்கோடுகளை வரைவார்
#குவியல்குவியலாய் வேப்பமுத்துவை பொறுக்குவதுபோல மழைக்காலப்புல்லை பிடுங்கனும்
#வற்றாத திட்டாங்குளம் கண்மாய் போலே ஆவல் பெருகியது.
இப்படியே ஆங்காங்கே உவமைச் சிதறல்கள்.
ஆகச் சிறந்த நட்பதிகாரம் இது
ஏற்கெனவே குறிப்பிட்டது போலே என் ரசனைக்குட்பட்ட என் மனதில் தாக்கத்தைத் தந்ததின் தேர்வே இது.
அலாதியான அற்புதமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்த குவிகத்திற்கு மீண்டும் மனம் ததும்பும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?
