புரிதல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம்
சமீபத்தில் தமிழ்நாடு கவர்னர் மாளிகை லோக் பவனில் ஒரு விழா நடந்தது. தமிழ்நாட்டில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களை அழைத்து கவர்னர் கௌரவித்து பாராட்டிய விழா அது. பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் அழைப்பில் அந்த விழாவிற்கு நான் சென்றிருந்தேன். கவர்னரின் உரையில் தேசியமும் கலாச்சாரப் பற்றும் இணைந்து பளிச்சிட்டன. விருதாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துறையில் தாங்கள் ஆற்றிய சேவைகளைப் பகிர்ந்து கொண்ட போது பிரமிப்பாக இருந்தது. வித விதமான துறை, சேவைகள், மக்களுக்கான பங்களிப்பு ! அனைத்திலும் அடிநாதம் தேசப்பற்று! இப்படிப்பட்டவர்கள்தான் நம் தேசத்தின் சொத்து என்று கவர்னர் சொன்னது மிகையில்லை.
தேசத்தின் மீது பற்று என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளது. சிலருக்கு அதிகமாக, வெளிப்படையாக,செயலில் காட்டும் அளவிற்கு! சிலருக்கு உள்ளே ஆழமாக, சீண்டினால் மட்டும் வெளிப்படும் சீற்றமாக !
நாட்டின்மீது பற்றுக் கொண்டிருக்கிறோமே தவிர, பலரும் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியலா நமக்கு வேண்டாம் என்று சாமானியன் ஒதுங்கிக் கொள்ளும் அளவிற்கு அரசியல் பயமுறுத்த ஆரம்பித்துவிட்டது. ஆனால் இந்த அரசியல்தான் அரசாங்கத்தை நிர்ணயம் செய்கிறது. அரசாங்கம் தான் நம்மை வழிநடத்துகிறது. நாட்டின் போக்கே அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. அதை ஏற்படுத்தும் அரசியலை முடிவு செய்யும் மந்திரக்கோல் நம் கையில் உள்ள ஓட்டு. ஆக நாம் தான் அரசை தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அரசியலில் நாம் ஆர்வம் காட்ட வேண்டியதும் முக்கியம் தானே?
சுதந்திரப் போராட்ட காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்ட பலரைப் பற்றிப் படித்திருக்கிறோம். பல பெண்கள் அப்போது நாட்டின் விடுதலைக்காக பல வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். நமக்கு நன்கு தெரிந்த வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை,அம்புஜம்மாள், சகோதரி சுப்புலக்ஷ்மி போன்றவர்கள் தவிர அதிகம் வெளியில் அறியப்படாத கடலூர் அஞ்சலயம்மாள்,பாலக்காட்டைச் சேர்ந்த அம்மு சுவாமினாதன்,புதுக்கோட்டை நல்லமுத்து ராமமூர்த்தி,மதுரை பத்மாசினி அம்மையார் போன்ற பல பெண்களின் பங்களிப்பு மகத்தானது. நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.
சுதந்திரத்திற்கு முன் குறைந்தது 50 வருடங்களுக்கு முன்பும் 20 வருடங்களுக்கு பின்பும் சாமானிய மனிதனிடம் அரசியல் ஈடுபாடு இருந்தது. எங்கள் வீட்டிற்கு தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பேப்பர்களும் வரும். தாத்தா திரு கீர்த்திவாசன் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் என்பதாலும் அவர் எக்ஸ்பிரஸ் குரூப்பின் அதிபர் திரு ராம்நாத் கோயங்காவுக்கு நெருக்கமானவர் என்பதாலும் நாங்கள் எங்களை எக்ஸ்பிரஸ் ஃபேமிலி என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டோம்.
எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே காலை 5 மணிக்கு எழுந்துவிடும் பாட்டி தினமணி பேப்பர் படிக்காமல் வேலையை ஆரம்பிக்க மாட்டார். (மூன்றே வயதான நான் அப்போதே தினமணி பேப்பரில் வரும் பெரிய எழுத்துக்களை சமையல் அறை சுவரில் சாக்பீஸால் எழுதுவேனாம்.) அன்றைய அரசியல் சூழல், என்ன நடக்கிறது,எந்த அமைச்சர் என்ன பண்ணினார், எது சரி, தவறு என்பதையெல்லாம் தாத்தா, பாட்டி அத்தை, அப்பா, சித்தப்பா உட்பட எல்லோருமே பேசுவார்கள். விவாதிப்பார்கள். குழந்தைகளான எங்களுக்கு அவர்கள் பேச்சில் இருந்து தேசப்பற்று, அரசியல் கட்சிகள்,நாட்டின் வளர்ச்சி, அரசாங்க அமைப்பு எல்லாமே தெரிய வரும். எனக்கு 12 வயது ஆகும்போது என் தாத்தா மதுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆபிசில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது லீவுக்கு பாட்டியுடன் அங்கே போவோம். எக்ஸ்பிரஸ் நிறுவனம் தாத்தாவிற்கு மேலமாசி வீதியில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து ஒரு சமையல்காரரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். பல பெரிய மனிதர்கள் மதுரைக்கு வந்தால் அங்குதான் தங்குவார்கள். திரு ஏ. என் சிவராமன் அவர்கள் அங்குதான் பல சமயம் வந்து தங்குவார். அப்போதெல்லாம் காலையில் இடுப்பில் காசித் துண்டை கட்டிக்கொண்டு டெஸ்க்கில் உட்கார்ந்து தினமணிக்காக ‘கணக்கன் கட்டுரை’ எழுதுவார். அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் எழுதும் பேப்பரை அடுக்கிக்கொண்டு பெரிய மனுஷி மாதிரி அவருடன் அரசியல் பேசுவேன் நான். பயம் அறியாத வயது. அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பது கூட புரியாத நாட்கள். நான், என் தம்பி,தங்கை எங்களுக்கெல்லாம் அவர் ஏ என் எஸ் மாமா ! அவ்வளவுதான். அவரும் எங்களிடம் மிகவும் பிரியமாக இருப்பார். பின்னாளில் திரு கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியம் அவர்கள் ஏஎன்எஸ் பெயரால் எனக்கு ஒரு விருது அளித்த போது பெரிய ஆசீர்வாதமாக இருந்தது அது.
எல்லா பக்கமும் தேர்தல் பரபரப்பாக இருப்பதாலோ என்னமோ அரசியல் சிந்தனை மனதில் அதிகம் ஓடுகிறது. இப்போது என்ன சுதந்திரப் போராட்டமா நடக்கிறது, நாட்டுப்பற்று என்கிற பெயரில் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். நாடும் வீடும் நன்றாக இருக்க தனிப்பட்ட முறையில் அவரவர் பங்களிப்பு என்பதை செய்தாலே போதும். என்ன செய்ய வேண்டும் என்பது யோசித்தால் நமக்குப் புரியும்.
இலவசங்களை அனுபவித்துக் கொண்டும், வங்கிக் கணக்கில் வந்துவிழும் பணத்தை செலவழித்துக் கொண்டும் இருக்கிறார்களே தவிர , நடுத்தர மக்களுக்கு அரசியல் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. எனக்குத் தெரிந்த ஒரு பூ விற்கும் பெண்ணிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன். “இந்தத் தேர்தலில் யாருக்கு உன்னுடைய ஓட்டு” என்று கேட்டேன். பட்டென்று “விஜய்க்குத் தான்” என்றாள். “இந்த அரசு இத்தனை இலவசங்கள் தருகிறது. அதையெல்லாம் அனுபவிக்கிறாய். அதனால் ஆளும் கட்சிக்குப் போடுவேன் என்று சொல்வாய் என்று நினைத்தேன்” என்றேன். அவள் பதில் என்ன தெரியுமா?
“நம்ப வரிப் பணத்தை வாங்கித் தானே நமக்கு செய்றாங்க! அதுல என்ன இருக்கு? ஆனா விஜய் வந்தா நாடு நல்லா இருக்கும்” என்றாளே பார்க்கணும்!!
அரசியல் புரிதல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதம்!!!
