‘குவிகம்’ என்னை மேன்மேலும் எழுத ஊக்குவிக்கிறது. தீபாவளி மலருக்காக என் மகனைப் பற்றி எழுதத் தூண்டிய போது, என்னைப் போல தானே மற்ற தாய்மார்களும்! சிலர் குடும்பத்தில் இரண்டு மூன்று பேர்கள் கூட பாதுகாப்பு பணியில் இருப்பதாக அறிந்து ஆச்சரியம், சந்தோஷம் அடைந்தேன். அதனால் இந்த இந்த சர்வதேச மகளிர் தினத்தில் அஷ்ட லக்ஷ்மிகளைச் சந்தித்து, உரையாடி அவர்களது உணர்வுகளை எழுத்தில் வடிக்க ஆசைப்பட்டேன். இதோ களத்தில் குதித்து விட்டேன், வாருங்கள் என்னோடு நீங்களும் அவர்களைச் சந்திக்கலாம்.
முதலாவது கரு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, பி ஏ, பி எட் பட்டதாரியான, ஆசிரியராகப் பணி புரிந்த, நீச்சல் தெரிந்த வீராங்கனை சேத்னா குமார். டோக்ரா இன சம்ப்ரதாயங்களைக் கடைப்பிடித்தாலும், எதற்கும் அஞ்சாமல், யாரையும் சார்ந்திராமல், பல தடவை மாறுதல் எதிர் கொண்டு, அரசு வீடு கிடைக்கும் வரையில் சமாளித்துக் கொண்டு, சாமான்களை கிரமமாக குறித்துக் கொண்டு, தானே வண்டி ஒட்டிக் கொண்டு, இரவு வந்தால் பகலும் வரும் என்ற நம்பிக்கையோடு தந்தை வழியில் தனையனையும் ஆர்மியில் அனுப்பிய அன்னை அவள். ஒவ்வொரு உயிரையும் மதிக்கத் தெரிந்த இவள் இன்றும் சந்தோஷமாக ஸ்வெட்டர் பின்னிக் கொண்டு பிறரையும் மகிழ்ச்சியாக்குகிறாள்.
இரண்டாவது கரு பஞ்சாப்பைச் சார்ந்த வட்டார மொழி இதழ்களைப் படிக்கும், ஏழைக் குழந்தைகளுக்குப் படிக்க உதவி செய்யும், பட்டம் பெற்ற அமர்ஜீத் கௌர். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற மகனது கனவை நிறைவேற்றும் பொருட்டு ஆதரித்து, ஊக்குவித்து இராணுவத்திற்கு அனுப்பியிருக்கிறார். ஒரு தாயாக, தன் மகனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாலும், தேச சேவையே முக்கியமானது என்று அவர் இருக்கிறார் என்பதை தனக்குப் புரிய வைத்துக் கொள்கிறார். எதிர்கொள்ளும் எந்தவொரு சிரமத்தையும் அவர் சமாளிக்க முடியும் என்றும் நம்புகிறார். மகன் ஆயுதப் படை வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்து, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் இவற்றால் தற்போது உயர்ந்த பதவியில் இருக்கிறான் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறார். அவரது நல்வாழ்வைப் பற்றி அறிய தினமும் அவரை அழைக்கும் அவர், பிஸியாக இருந்தால் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், பின்னர் மகன் இருக்கும் இடத்தைப் பற்றி அறிய மருமகளை அழைக்கிறார். 2 பேரக்குழந்தைகளும் வளர்வதைப் பார்ப்பது தன் மகனையும் அவரது குழந்தைப் பருவத்தையும் நினைவூட்டுகிறது என்கிறார்.
.ஒழுக்கம், பெருமை, மரியாதை மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றால் நிறைந்த பாதுகாப்பு வாழ்க்கையை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நிச்சயமாக விரும்பும் இவர், இது தேசத்திற்கான சேவை, தன் குழந்தை தேசத்திற்கு தன்னலமற்ற சேவை செய்யும் பாதையைத் தேர்ந்தெடுத்தது தனக்கு ஒரு பாக்கியம் என்றும். ஒரு தாயாக ஒவ்வொரு நாளும் அவனது பாதுகாப்பு மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை செய்யும் தான் அவர்களுடன் பெருமையுடன் நிற்பதாகவும் கூறுகிறார். தன் மருமகள் மகனின் பயணம் முழுவதும் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்துள்ளார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறார். மக்கள் மகனைப் பாராட்டுகிறார்கள், மதிக்கிறார்கள், தங்களை பெருமைமிக்க பெற்றோராக்கியுள்ளார் என்று கூறும் இவரது மருமகளும் ஆர்மியில் உள்ளார்.
மூன்றாவது தந்தையின் பாதையையே
தொடர்ந்து பெரிய பதவியில் இருக்கும் மகனை நினைத்து பெருமை கொள்ளும் கிரிஜா சுபுதி. பாதுகாப்புப் படையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு துறையிலும் அனைவரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று சாதாரணமாகக் கூறுகிறார். எல்லாம் நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கும், இது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று அவர்களுக்கு உறுதியளித்து, சுயம் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறார். தம் குழந்தைகள் இந்தக் கட்டத்தையும் கடந்து செல்வார்கள் என்பது தமக்குத் தெரியும் என்று கூறும் இவர் அதை எதிர்கொள்ள அவர்களுக்கு தன்னம்பிக்கை, மன உறுதியை அளிக்கிறார். பல்வேறு குடும்ப நிகழ்வுகள், திருவிழாக்கள் அல்லது சமூகக் கூட்டங்களின் போது அனைவரும் சுற்றி இருக்க, தன் பிள்ளைகள் இல்லாதது உணர்ந்தாலும், அவர்கள் நாளை ஒருவருக்காக தங்கள் இன்றைய நாளைக் கொடுக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறார்.ஒரு தாயால் மட்டுமே தனது மகன் / மகளின் அன்பையும், தாய் இந்தியா மீதான அர்ப்பணிப்பையும் உணர முடியும் என்று பெருமிதம் கொள்கிறார்.
நான்காவது கரு இராணுவக் குடும்பத்தில் பிறந்து, இராணுவக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட அமுதா அவர்கள், இராணுவத்தை ஒரு தொழிலாக நினைக்கவில்லை, பெருமையும் மதிப்பும் தரும் இந்தப் படையில் தங்களது குழந்தைகள் ஒரு பொறுப்பு மிக்க குடிமகனாக வளருவார் என்ற நம்பிக்கையோடு அவர்களை சரியான வழியில் தங்களது அனுபவங்கள் மூலமாக எந்த ஒரு நிலமையையும் எதிர்கொள்ள வைக்கிறார். வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் எல்லோரும் தங்கள் குடும்பத்தை மிகவும் மதிப்போடு பார்ப்பதோடு அல்லாமல், சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் இவர்களை கொடியேற்ற அழைக்கும்பொழுது மிகவும் பெருமிதம் கொள்கிறார். ஆன்மீக புத்தகங்களைப் படிக்கும் இவர் இராணுவத்தில் மகளாக, மனைவியாக, தாயாக இந்த நாட்டின் எல்லா இடத்திற்கும் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்து, பலதரப்பட்ட மக்களையும், வித்தியாசமான சூழலையும், மாறுபட்ட தட்பவெப்பங்களையும் சந்தித்த தனக்கு இந்த சந்தர்ப்பங்கள் அளவிட முடியாத பெருமை என்றும் கூறும் இவர், இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்.
ஐந்தாவது கரு அஜ்மீர் ராஜஸ்தானில் பிறந்த, எம் ஏ பட்டதாரியான, 9 முதல் 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடங்கள் கற்பிக்கும் நோமிதா தத். கடற்படையில் இருந்த தந்தையைப் பின்பற்றி ஒரே மகன் இராணுவத்தில் சேர்ந்ததில் பெருமிதம் கொள்கிறார். உண்மையான பாராட்டு தேசத்திற்கு சேவை செய்யும் துணிச்சலானவர்களுக்குச் சொந்தமானது என்று கூறும் இவர் சமீபத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் எழுதிய ‘விங்ஸ் ஆப் பையர்’ புத்தகத்தைப் படித்ததாகவும், அது தன்னை ஆழமாக ஊக்கப்படுத்தியதாகவும், குறிப்பாக அவரது பணிவு, தேசத்திற்கான அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, நேர்மை எப்போதும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற தனது நம்பிக்கையை வலுப்படுத்தியதாகவும், வலிமை என்பது உறுதியாக நிற்பது என்றும் கூறுகிறார்.
ஆறாவது கரு தெலுங்கானா நாகர்கர்னூலைச் சேர்ந்த பி ஏ பட்டம் பெற்ற, தோட்டக்கலை, சமையல், எம்ப்ராய்டரி ஆகியவைகளில் ஆர்வம் உள்ள, மூன்று குழந்தைகளின் தாயான பரத இந்துமதி. மகளும், மருமகனும் இராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததை பெருமையுடன் நினைத்த இவர் பணியில் மருமகன் உயிர்த்தியாகம் செய்த போது உடைந்து போனார். ஒரு தாயாக மகள் சவால்களை எதிர்கொள்ளும் பொழுது கவலைப்பட்டாலும், இந்த சிரமங்கள் அவளுடைய கடமையின் ஒரு பகுதி என்பதையும், அவளை இது பலப்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொண்டுள்ளார். அன்றாடம் தொடர்பு கொண்டு அவளது வழக்கத்தையும், சகோதரர் பற்றியும், சக ஊழியர்களை பற்றியும் கேட்கும் தான், ஒவ்வொரு புது இடத்திலிருந்தும் தனக்குக் கொண்டு வரும் பரிசுகளை மிகவும் மதிக்கிறார். அந்த சிறிய விஷயங்கள் அவளுடன் நெருக்கமாக உணர வைப்பதாகவும், மகள் இராணுவத்தில் தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாக இருக்கிறாள் என்றும், அவள் எப்போதும் சிறந்து வாழவும், தன் கணவரின் கனவுகளை நிறைவேற்றவும் போராட்டங்களையும் தியாகங்களையும் மேற்கொள்கிறாள் என்றும், அவளைப் போன்ற அதிகாரிகளால்தான் நாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்றும் பெருமிதம் கொள்கிறார். அவளுடைய மறைந்த கணவர் மீது கிராம மக்கள் மரியாதையும் நன்றியும் பாராட்டுகிறார்கள் என்றும், சமூகத்திற்குக் கட்டுப்பட்டு ஆரம்பத்தில் இராணுவத்தில் சேருவதை ஆதரிக்கவில்லையாயினும், தந்தையைப் பின்பற்றிய அவள் இப்போது அவள் குடும்பத்தின் முதுகெலும்பு, பலம், தம்பிகள் மற்றும் பொறுப்பு எல்லாவற்றையும் தனியாக ஏற்றுக் கொண்டது தனக்குப் பெருமை என்றும் கண்ணீர் பனிக்கக் கூறுகிறார்.
ஏழாவது கரு ஓக்கலானா, பஞ்சாப்பைச் சேர்ந்த, ஐடிஐ டிப்ளமோ படித்த, மத நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு குருத்வாரா மற்றும் கோவிலில் மதப் பணிகள் செய்து வரும் ஷீலா ராணி. மகள் இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்தபோது கடினமான வாழ்க்கையை நினைத்து பயந்த அவர், மகிழ்ச்சியாய் இருப்பதாகச் சொல்லும் அவள், தன் வேலையில் எதிர்கொள்ளும் சிரமங்களையோ, மன அழுத்தத்தையோ கூற மாட்டாள் என்று கர்வப்படுகிறார். அவளுடன் பேச முடியாத பொழுது அவருடைய புகைப்படத்தை அருகில் வைத்துக் கொள்வதாகவும், உறவினர்கள் மகளைப் பற்றி உயர்வாக பேசும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், எல்லோருக்கும் இது கடினமான பாதையாக இருந்தாலும், பெண்களுக்கு கூடுதல் சிரமங்கள் உண்டு என்றும் சிறிது கவலையோடு கூறுகிறார்.
எட்டாவது கரு ஜோஷிமட், உத்ராகாண்ட்டைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படித்த, தோட்டக்கலை மற்றும் பாரம்பரிய கைவினைத் திறனுடைய, நான்கு குழந்தைகளின் தாயான ஊர்மிளா தேவி. மகளும், மருமகனும் இராணுவத்தில் இருக்கிறார்கள். தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற தனது மகளின் விருப்பத்தை மதித்து, ஆதரித்தார். அவள் சவால்களை எதிர்கொள்ளும் போது இயல்பாகவே கவலையும் வருத்தமும் அடைந்தாலும், அவளது கடமையின் ஒரு பகுதி, அவளை வலிமை ஆக்கிறது என்று புரிந்து கொள்கிறார். செல்லும் ஒவ்வொரு புதிய இடத்திலிருந்தும் கொண்டுவரும் பரிசுகளை மிகவும் மதிப்பதாகவும் அது அவளுடன் நெருக்கமாக உணர வைப்பதாகவும் கூறுகிறார். சேவை பாதையை தேர்ந்தெடுத்ததில் பாக்கியவானாக உணரும் அவர் அவளது பாதுகாப்பு மற்றும் வலிமைக்காக பிரார்த்தனை செய்து நம்பிக்கையுடன் அவர்களுடன் நிற்கிறார். ‘அம்மா என்றால் அன்பு’ அன்பு மட்டுமா, ஆசை, ஈரம், கருணை, காதல், சினேகம், நட்பு, நேசம், பக்தி, பரிவு, பற்று, பாசம், பிரேமை என்ற எல்லா மூன்று எழுத்துக்களும் அவளுள் அடக்கம். தன்னால் பூலோகத்தில் வர முடியாது என்றுதான் இறைவன் தாயைப் படைத்தான் போலும்! ‘தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை.’ இவர்களுடன் உரையாடும்போது ‘ஒளி படைத்த கண்ணையும், உறுதி படைத்த நெஞ்சத்தையும்’ உணர முடிந்தது. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்ப்பதிலே’ என்ற புலமைப் பித்தன் அவர்களின் வரிகள் நமக்கு நினைவிற்கு வருகிறது.
தம்மை விட தம் மக்கள் அறிவுடைமையோடு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறாள்:
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்’
என்ற வள்ளுவரின் வாக்கு பொய்யாமொழியன்றோ! அந்த தாய்மார்களின் தாள் பணிவோம்!
கேள்வி: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா ?
