
அலாவுதீன் கில்ஜி..தொடர்ச்சி
கில்ஜி கதையை சுவாரசியமாக ரசித்துக்கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் என்ன நடந்து முடிந்தது என்பதை ஓரிரு வரிகளில் சொல்லவேண்டும். சோழர் ஆட்சி முடிந்தது. பாண்டியர்களின் பொற்காலமாக ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியும் முடிந்தது. அவனது பேரர்கள் பாண்டிய நாட்டுக்குச் சண்டையிட்டு பாண்டியர்களின் முடிவுக்காலமும் வரும் காலம் வந்தது. சரி, தொடங்கிய பிரச்னைக்கு வருவோம்.
1290இல் அலாவுதீன் ‘அலாவுத்துன்யா வத் தின் முகம்மது ஷா-உஸ் சுல்தான் ‘ என்ற நீண்ட பட்டத்துடன், காராவில் புதிய மன்னனாக தன்னை அறிவித்துக் கொண்டான். ஜலாலுதீனின் தலை இவனுடைய முகாமில் ஓர் ஈட்டி முனையில் அணிவகுப்புக் காட்சிக்கு வைக்கப்பட்டது. ‘மாமனுக்கு மரியாதை’ என்பது இதுதானோ!
தில்லியை நோக்கி ஓர் அணிவகுப்புக்கான ஆயத்தங்களை அலாவுதீன் மேற்கொண்டான். தன்னை ஓர் ஈகைக் குணம் உள்ள மன்னனாகக் காட்டுவதற்காக காராவில் ஒரு கூட்டத்தை நோக்கி மஞ்சனிக்குகளில் (பெரிய கவண் விற்கள்) இருந்து 5 மன் (சுமார் 15 கிலோ) எடையுள்ள தங்கக் காசுகளை வீசுமாறு இவன் ஆணையிட்டான்.
இராணுவத்தின் ஒரு பிரிவு தில்லிக்கு அணி வகுத்தது. மற்றொரு பிரிவு, சாபர் கானின் தலைமையில் தில்லிக்கு கோயில் (நவீன அலிகர்) வழியாக அணி வகுத்தது. தில்லிக்கு அலாவுதீன் அணி வகுத்த நேரத்தில் தங்கத்தை விநியோகித்ததோடு இவன் படை வீரர்களையும் சேர்க்கிறான் என்ற செய்தி பட்டணங்கள் மற்றும் கிராமங்களில் பரவியது. பல மக்கள் இவனுடன் இணைந்தனர். இவனைத் தொடக்கத்தில் எதிர்த்த ஜலாலுதீனின் ஏழு சக்தி வாய்ந்த உயர்குடியினர் இவனுடன் இணைந்தனர். அலாவுதீன் இவர்களுக்கு 90 முதல் 150 கிலோ எடையுள்ள தங்கத்தைக் கொடுத்தான். ஒவ்வொரு படை வீரருக்கும் 300 வெள்ளி தன்காக்களை (சுத்தியலால் அடிக்கப்பட்ட நாணயங்கள்) கொடுத்தான்.
இடைப்பட்ட நேரத்தில், தில்லியில் ஜலாலுதீனின் விதவையான மல்கா-இ-சகான், தன்னுடைய கடைசி மகனான காதிர் கானை புதிய மன்னனாக நியமித்தாள். அலாவுதீன் தில்லியை நோக்கித் தன் படையெடுப்பை அக்டோபர் 1296ல் தொடர்ந்து, நகரத்திற்குள் நுழைந்தான். அங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான உயர் குடியினர் மற்றும் அதிகாரிகள் இவனுடைய அதிகாரத்தை ஏற்றுக் கொண்டனர். 21 அக்டோபர் 1296 அன்று அலாவுதீன் தில்லியில் அதிகாரப்பூர்வமாக சுல்தானாக அறிவிக்கப்பட்டான்.
அலாவுதீனின் வெற்றிகள்: மங்கோலியப் படையெடுப்பிலிருந்து அலாவுதீன் வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டான். குஜராத் 1304இல் இணைத்து கொள்ளப்பட்டது). ஜெய்சால்மர் (1299), இரந்தம்பூர் (1301), சித்தோர் (1303), மால்வா (1305), சிவானா (1308) மற்றும் சலோர் (1311) ஆகிய இராச்சியங்கள் வெல்லப்பட்டன. இந்த வெற்றிகள் பல்வேறு ராஜபுத்திரர்கள், மற்றும் பல இந்து அரச மரபுகளை முடிவுக்கு கொண்டு வந்தன. இதில் பரமாரப் பேரரசு, வகேலாக்களின் அரசமரபு , இரணதம்பபுரத்தின் சகாமனாக்கள், இராவல் பிரிவினர் மற்றும் யச்வபாலர்கள் அடங்குவர். தெற்கே பல்வேறு படையெடுப்புகளுக்கு இவனது அடிமை-தளபதி மாலிக் கபூர் தலைமை தாங்கினான். தேவகிரி (1308), வாரங்கல் (1310) மற்றும் துவாரசமுத்திரம் (1311) ஆகிய இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான செல்வத்தை பெற்றான். இந்த வெற்றிகள் யாதவ மன்னன் ராமசந்திரா, காகதீய மன்னன் பிரதாபருத்ரா மற்றும் போசளப் பேரரசின் மன்னன் மூன்றாம் பல்லாலா ஆகியோரை அலாவுதீனுக்கு திறை செலுத்துபவர்களாக ஆக்கியது. மாலிக்கபூர், பாண்டிய நாட்டின் மீது ஊடுருவல் (1311) நடத்தினான். பெருமளவிலான செல்வம், யானைகள் மற்றும் குதிரைகளை பெற்றான்.
இந்த வெற்றிகளில் சிலவற்றை விரிவாகக் காணலாம்: 1299ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குசராத்து மீது படையெடுக்க உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கானை அலாவுதீன் அனுப்பினான். அங்கு வகேலா மன்னனான கர்ணன், ஒரு பலவீனமான எதிர்ப்பை வெளிப்படுத்தினான். அலாவுதீனின் இராணுவம் பல பட்டணங்களைச் சூறையாடியது. இதில் வகேலா இராணியான கமலா தேவியும், அடிமை மாலிக்கபூரும் அடங்குவர். அலாவுதீனின் தெற்குப் படையெடுப்புகளுக்குப் பிற்காலத்தில் மாலிக்கபூர் தலைமை தாங்கினான்.
1299இல் முதலாம் ஜய்ட் சிங் கீழ் ஆளப்பட்ட ஜெய்சால்மர் கோட்டையை அலாவுதீன் முற்றுகையிட்டான். ஒரு நீண்ட முற்றுகைக்குப்பின், இராசபுத்திரர்கள் சகா என்ற நிகழ்வை நடத்தினர். அதில் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்தனர். ஆண்கள் இறுதிவரை போரிட்டு மரணம் அடைந்தனர்.
1301இல் இரந்தம்பூர் மீது படையெடுக்க உலுக் கான் மற்றும் நுஸ்ரத் கானுக்கு அலாவுதீன் ஆணையிட்டான். முற்றுகையின் போது நுஸ்ரத் கான் கொல்லப்பட்ட பிறகு முற்றுகை நடவடிக்கைகளுக்கு அலாவுதீன் தானே பொறுப்பேற்றுக் கொண்டான். 1301 சூலையில் கோட்டையை வென்றான்.
1302-1303ஆம் ஆண்டு, குளிர்காலத்தில், காகதீயரின் தலைநகரான வாரங்கலைச் சூறையாடுவதற்காக ஒரு இராணுவத்தை அலாவுதீன் அனுப்பினான். அதே நேரத்தில் இரத்தினசிம்மனால் ஆளப்பட்ட குகில இராச்சியத்தின் தலைநகரான சித்தோரை வெல்வதற்காக மற்றுமொரு இராணுவத்திற்குத் தானே தலைமை தாங்கினான். எட்டு மாத நீண்ட முற்றுகைக்குப் பிறகு அலாவுதீன், சித்தோரைக் கைப்பற்றினான். இந்த வெற்றிக்குப் பிறகு 30,000 உள்ளூர் மக்களைப் படுகொலை செய்ய ஆணையிட்டான். பிற்கால மரபுவழிக் கதைகள், இரத்தினசிம்மனின் அழகான இராணியான பத்மினியை (பத்மாவத்) பிடிப்பதற்காகவே சித்தோர் மீது அலாவுதீன் படையெடுத்தான் என்று குறிப்பிடுகின்றன.
இராணுவங்கள் சித்தோர் மற்றும் வாரங்கல் படையெடுப்புகளில் மூழ்கியிருந்த நேரத்தில் 1303ஆம் ஆண்டு மங்கோலியர்கள் தில்லி மீது மற்றொரு படையெடுப்பைத் தொடங்கினர். படையெடுப்பாளர்களுக்கு முன்னால் தில்லியை அலாவுதீனால் அடைய முடிந்தது. எனினும் ஒரு வலிமையான தற்காப்புக்குத் தயாராக அவனுக்குப் போதிய நேரம் இல்லை. அதே நேரத்தில் வாரங்கல் படையெடுப்பும் தோல்வி அடைந்தது. இராணுவம் ஏராளமான ஆட்கள் மற்றும் அவர்களது பொருட்களை இதில் இழந்தது. இராணுவம் தில்லி நகரத்திற்குள் நுழைய முடியவில்லை. மங்கோலியர்கள் ஏற்கனவே சுற்றி வளைத்து விட்டனர். இவனது படைகளுக்கு எதிராகச் சில சிறு சண்டைகளில் மங்கோலியர்கள் ஈடுபட்டனர். ஆனால் எந்த ஓர் இராணுவமும் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற இயலவில்லை. படையெடுத்து வந்த மங்கோலியர்கள் தில்லியையும் அதன் அண்டைப் பகுதிகளையும் சூறையாடினர். எனினும், சிரி கோட்டைக்குள் நுழைய முடியாததால் இறுதியாகப் பின் வாங்க முடிவெடுத்தனர்.
1305இல் மங்கோலியர்கள் இந்தியா மீது மீண்டும் படையெடுத்தனர். மாலிக் நாயக்கால் தலைமை தாங்கப்பட்ட அலாவுதீனின் 30,000 வீரர்களைக் கொண்ட வலிமையான குதிரைப்படை மங்கோலியர்களைத் தோற்கடித்தது. பல மங்கோலியர்கள் கைதுசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1308, மாலிக்கபூரின் படைகள் பாக்லானாவின் மீது படையெடுத்தது. வகேல மன்னன் கர்ணனின் மகள் தேவலதேவியைச் சிறை பிடித்தனர். தேவலதேவி, அலாவுதீனின் மகன் கிசிர் கானுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். தேவகிரியில் மாலிக்கபூர் ஓர் எளிதான வெற்றியைப் பெற்றான். வாழ்நாள் முழுவதும் அலாவுதீனுக்குத் திறை செலுத்துவதாக மன்னன் இராமச்சந்திரா ஒப்புக் கொண்டான்.
1310ல், மாலிக்கபூர் காகதிய நிலப்பரப்புக்குள் நுழைந்தான். வாரங்கலுக்குச் செல்லும் வழியில் பட்டணங்கள் மற்றும் கிராமங்களைச் சூறையாடினான். வாரங்கல் மீதான ஒரு மாத கால நீண்ட முற்றுகைக்குப் பிறகு காகதிய மன்னன் பிரதாபருத்திரன் அலாவுதீனுக்குத் திறை செலுத்த ஒப்புக் கொண்டான். பெரும் அளவிலான செல்வத்தைக் கொடுத்தான். இதில் கோகினூர் வைரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
வாரங்கல் முற்றுகையின் போது மேலும் தெற்கே அமைந்திருந்த போசளப் பேரரசு மற்றும் பாண்டிய நாட்டின் செல்வம் குறித்து மாலிக்கபூர் அறிந்தான். தில்லிக்குத் திரும்பிய பிறகு இப்பகுதிகளுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க அலாவுதீனின் அனுமதியைப் பெற்றான். நவம்பர் 1310ல் தில்லியிலிருந்து தனது படையெடுப்பை மாலிக்கபூர் தொடங்கினான். 1311ம் ஆண்டின் தொடக்க காலத்தில் தக்காணப் பகுதியைக் கடந்தான். இதற்கு அலாவுதீனுக்குத் திறை செலுத்திய இராமச்சந்திரா மற்றும் பிரதாபருத்திரன் ஆகியோரின் ஆதரவும் பயன்படுத்தப்பட்டது.
இந்த நேரத்தில், மதுரையில் இரு சகோதரர்களான வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியனுக்கு இடையிலான வாரிசுரிமைப் போரால் பாண்டிய நாடு பலவீனப்பட்டிருந்தது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போசள மன்னன் வல்லாளன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். மாலிக்கபூரின் படைகள் தன் தலைநகர் நெருங்கிவிட்டதைக் கேள்விப்பட்ட வல்லாளன், படைகளை துவாரசமுத்திரத்துக்கு அவசரமாகத் திருப்பினான். எனினும், அவனால் ஒரு வலிமையான எதிர்ப்பைக் காட்ட இயலவில்லை. ஒரு சிறிய முற்றுகைக்குப் பிறகு மாலிக்கபூருடன் அமைதி உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டான். தனது செல்வத்தை ஒப்படைத்து, அலாவுதீனுக்குத் திறை செலுத்தவும் ஒப்புக் கொண்டான்.
துவாரசமுத்திரத்திலிருந்து மாலிக்கபூர் பாண்டிய நாட்டை நோக்கி அணி வகுத்தான். மதுரை வரை பல நகரங்களில் ஊடுருவல்களை நடத்தினான். வீரபாண்டியன் மற்றும் சுந்தரபாண்டியன் இருவரும் தங்களது தலைநகரிலிருந்து சென்று விட்டனர். அலாவுதீனுக்குத் திறை செலுத்துபவர்களாக அவர்களை ஆக்க மாலிக்கபூரால் இயலவில்லை. ஆனாலும், பல பொக்கிஷங்கள், யானைகள் மற்றும் குதிரைகளை கொள்ளைப் பொருட்களாகக் கொண்டு சென்றான்.
இந்தப் படையெடுப்பின் போது மங்கோலியத் தளபதி அப்பாச்சி பாண்டியர்களுடன் இணைய முயற்சித்தான். இதன் விளைவாகத் தில்லியில் அவன் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டான். மங்கோலியத் தலைவர்களில் ஒரு பிரிவினர் அலாவுதீனைக் கொல்லத் திட்டமிட்டனர். ஆனால், இத்திட்டம், அலாவுதீனின் உளவாளிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. தன்னுடைய பேரரசில் இருந்த மங்கோலியர்களைப் ஒட்டு மொத்தமாகக் கொல்ல அலாவுதீன் பிறகு ஆணையிட்டான். 20,000 அல்லது 30,000 மங்கோலியர்களின் இறப்பில் இது முடிந்தது.
அலாவுதீனின் மனைவியரில் மலிகா-இ-சகான் என்ற பட்டத்தைக் கொண்டிருந்த ஜலாலுதீனின் மகள் மற்றும் அல்ப் கானின் சகோதரியான மகுரு ஆகியோரும் அடங்குவர். தேவகிரி மன்னர் ராமசந்திராவின் மகள் ஜத்யபாலியையும் அலாவுதீன் திருமணம் செய்து கொண்டான். அலாவுதீனுக்கு ஜத்யபாலியுடன் சிகாபுதீன் ஒமர் என்ற ஒரு மகன் இருந்தான். இவன் இவருக்குப் பிறகு அடுத்த கில்ஜி ஆட்சியாளராகப் பதவிக்கு வந்தான். அலாவுதீன் கமலா தேவி என்ற ஓர் இந்துப் பெண்ணையும் ஒரு படையெடுப்பின் போது பிடிக்கப்பட்டுத் திருமணம் செய்து கொண்டிருந்தான். இவள் குசராத்தின் வகேலா மன்னன் கர்ணனின் முதன்மை அரசியாக இருந்தவள்.
வாழ்வின் கடைசி ஆண்டுகளின் போது அலாவுதீனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவனது அதிகாரிகள் மீது மிகவும் நம்பிக்கையின்மையை இவன் கொண்டிருந்தான். சுல்தானகத்தின் நடைமுறை ரீதியிலான ஆட்சியாளராக இவனது அடிமை-தளபதியான மாலிக்கபூர் உருவானான். அலாவுதீனின் மூத்த மகன்களான கிசிர் கான் மற்றும் ஷாடி கானை கண் பார்வையற்றவர்களாக மாலிக்கபூர் ஆக்கினான்.
4 சனவரி 1316 அன்று இரவில் அலாவுதீன் இறந்தான். மாலிக்கபூர் இவனைக் கொலை செய்தான் என்றும் கூறப்படுகிறது. இரவு முடியும் போது அலாவுதீனின் உடலை சிரி என்ற இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. அடுத்த நாளே அலாவுதீனின் இளைய மகன் சிகாபுதீனை ஒரு கைப்பாவை முடியரசனாக மாலிக்கபூர் நியமித்தான். எனினும், இதற்குப் பிறகு சீக்கிரமே மாலிக்கபூர் கொல்லப்பட்டான். அலாவுதீனின் மூத்த மகன் முபாரக் கான் அதிகாரத்தைக் கைப்பற்றினான்.
ஆக, இந்திய நாட்டில் முஸ்லிம் ஆதிக்கம் வலிவாகத் துவங்கியது. அந்த ஆதிக்கம் நூற்றாண்டுகள் தொடர்ந்தது. இந்தியாவில் கலாசார வரைப்படம் மாறுதலை அடையத் தொடங்கியது.
அந்தக்கதைகளை சொல்ல சரித்திரம் துடிக்கிறது.
கேள்வி: தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா, தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?
