தொலைக்காட்சியின் பிரபல பழைய திரை இசை பாடல்கள் நிகழ்ச்சி ஒன்றில் ஓர் வெகு இளம் பெண்ணும், ஓர் இளம் ஆணும் அந்த நாளைய அதாவது 1960ல் வந்த சிறந்த தமிழ் திரை இசை பாடலை பாடிக்கொண்டிருந்தனர்.
‘இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்,’ என்ற பாடல் அது. அந்த இருவரும் மிக தோழமையான அசல் போன்ற பின்னணி இசையுடன் பாடி கொண்டிருந்தனர்.
சரயூ மிக கவனமாக அந்த பாடலை கேட்டு ரசித்துக்கொண்டிருந்ததோடு தானும், அந்த வரிகளுக்கேற்ப வாயை அசைத்து கொண்டிருந்தாள். அந்த பாடல் முடியும் வரி வருகையில் சரசு திடீரென தன் நிலை மறந்தவளாக தேம்பி அழ ஆரம்பித்தாள். அருகில் அமர்ந்து அந்த பாடலை கேட்டு கொண்டிருந்த அவள் கணவன் சங்கருக்கு சரசுவின் அழுகுரல் தூக்கி வாரிப்போட வைத்தது.
தொலைக்காட்சியின் ‘ரிமோட்டை’ எடுத்து அதை நிறுத்து விட்டு சரயூ பக்கம் திரும்பி ‘என்ன சரயூ… வாட் ஹாப்பேண்ட் ? ஏன் திடீரன்று அழுகிறாய்?’ என்று பதட்டத்துடன் கேட்டு விட்டு அவள் அருகே சென்றான்.
அவன் அருகில் சென்றபோது சரயூ இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு இன்னும் விசித்து விசித்து அழுது கொண்டிருந்தாள்.
அவள் அருகே அமர்ந்து அவள் கைகளை முகத்தில் இருந்து எடுத்தவன் அவளை கனிவுடன் பார்த்து ‘என்னம்மா? உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு? ஏன் இந்த திடீர் அழுகை? ‘ என்றான் பதட்டத்துடன்.
சரயூ விசும்பலுக்கு நடுவே முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்தாள். பின் தொலைக்காட்சி பெட்டியை காட்டி ‘அந்த பாட்டு…’ என்றாள் விக்கல் விசும்பலுக்கும் நடுவே.
சங்கருக்கு இந்த சினிமா விஷயங்கள் எல்லாம் பூஜ்யம். அவனுடைய ஒரே பொழுது போக்கு எல்லா ஆண்களையும் போல் ‘ஸ்போர்ட்ஸ்’ தான். குறிப்பாக கிரிக்கெட்…அதனால் அவனுக்கு யாரோ இரண்டு பேர் ஏதோ ஓர் பழம் பாட்டை பாடியதும் அதற்காகவா இல்லை, வேறு எதற்காகவா மனைவி சரயூ அழுகிறாள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
சரயூ சற்று நேரம் மெளனமாக இருந்தாள். பின் கண்களில் இருந்து மாலை மாலையாகி வழிந்து ஈரமாகி இருந்த கன்னத்தை துடைத்து கொண்டு பேசினாள்.
‘சாரிங்க..எதோ பழைய ஞாபகம்…அதுதான்..’
‘எது? இந்த பாட்டா? அதான் வாராவாரம் எந்த பழையபாட்டுகளை பல விதமாக பாடி வருகிறார்களே..அதில் என்ன விசேஷம்?’ என்றான் வியப்பு மற்றும் சற்று எரிச்சலுடன்.
சரயூ உடனே பதில் தரவில்லை. மடியில் வைத்துக்கொண்டிருந்த கைகளை எடுத்து மீண்டும் கண்களை துடைத்து கொண்டாள். பின் பார்வையை எங்கோ இலக்கில்லாமல் திருப்பினாள்.
எந்தவிதமான ஒலியோ, பேச்சோ இல்லாமல் ஓரிரு நிமிஷங்கள் கரைந்தன. சங்கரும் எதுவும் மேலே பேசாமல் அவளே பேசட்டும் என்று அமர்ந்த்திருந்தான்.
இந்த மௌனத்தில் சங்கர்- சரயூ பற்றி ஓர் சிறு அறிமுகம். இந்த இருவரும் ஓர் விதத்தில் மூத்த குடிமக்கள். ஓர் மகன், ஓர் மகள். இருவரும்…சொல்ல வேண்டுமா? பெண் சிங்கப்பூரில்; பிள்ளை லண்டனில்.
சங்கர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஒய்வு பெற்றவர். சரயூவும் ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று இன்று தனியாக ஓர் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இதில் வேதனைக்கோ, சோகத்துக்கு, திடீரென்று கலங்கி கண்ணீர் விட்டு அழும் அளவுக்கு ஏதுமில்லை.
பின் என் சரயூ திடீர் என்று எதோ ஓர் பழம் சினிமா பாட்டை அதுவும் எதோ இரு இளம் பசங்கள் பாடுவதை கேட்டு, மனம் குலைந்து கண்ணீர் விடவேண்டும்?
சங்கர், சரயூ தானே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தான்.
திடீரென்று, சரயூ சங்கர் பக்கம் திரும்பினாள். ‘இன்று காலை நியூஸ் பேப்பரில்’ ஒரு ‘ஆபிட்’ செய்தி வந்திருந்தது என்று உங்களுக்கு காட்டினேன், ஞாபகம் இருக்கிறதா?’ என்றாள். அவள் குரலில் சோகம் இருந்தது.
சங்கர் யோசித்தான். தினமும் தினசரி பேப்பர் வருகையில் அதில் வரும் ‘மரணம்’ பற்றிய செய்திகளும் புகைப்படத்துடன் வருவது இன்றைய காலத்தில் சகஜமாகி விட்ட ஒன்று.
ஓர் நொடி விழித்தவன், சட்டென்று நினைவு வந்தவனாக ‘எஸ். ஆமாம். நீ யாரோ ஒருவர் படத்தை காட்டி அவர் உன்னுடன் ஸ்கூலிலும் கல்லூரியிலும் படித்தவர் சின்ன வயதில் என்று சொன்னாய். ஆனால், அதோடு அவரை பற்றி எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. அவர் முகம் வயதாவதால் அதிகம் மாறவில்லை. பழைய முகம்போலவே இருந்தது…அதனால் தான் என்னால் உடனே புரிந்து கொள்ள முடிந்தது…எந்த தொடர்பும் இத்தனை வருஷங்களில் இல்லாவிட்டாலும்…’ என்றாய். அதெற்கென்ன?’ என்றான் புரியாமல்.
‘நாங்கள் ஸ்கூல் காலேஜ் இரண்டிலும் ஒன்றாக படித்தோம் என்று சொன்னாய் என்று நினைக்கிறேன்…சரிதானா?’ என்றான்.
‘ஆமாம்,’ என்றால் சரயூ, மீண்டும் சற்று தொண்டை அடைக்க.
சங்கருக்கு சற்று எரிச்சல் வந்தது. ‘என்ன… காதலா… ?’ என்றான் சற்று ஏளனமாக குரலில்.
சரயூ அவனை திரும்பி பார்த்தாள்; அந்த பார்வையில் சங்கர் இதுவரை பார்க்காத ஓர் ஆழமும், அமைதியும், அதையும் தாண்டி ஓர் அலட்சியமும் தெரிந்தது.
‘ஹ்ம் …நீங்கள் ஓர் ஆண். உங்களால் வேறு எப்படி நினைக்க முடியும்?’ என்றாள் அழுத்தமாக. இப்போது அவள் குரலில் ஓர் தெளிவு இருந்தது.
‘ஆண்..ஆமாம். நான் ஆண்தான்..அதெற்கென்ன?’
‘ஆண்களுக்கு பெண்களை விட நுண்ணுணர்வு, குறைவாக, ஏன் மிக குறைவாகவே இருக்கும் என்பார்கள். அதைத்தான் நீங்கள் நிரூபித்தீர்கள்.’
சங்கருக்கு சுர்ரென்று கோபம் வந்தது. இவள் என்ன திடீரென்று என்னவோ புது வார்த்தைகளை சொல்கிறாள்? ‘நுண்ணுணர்வு’ என்றால்?’ என்றான் கோபமாக.
‘சென்சிட்டிவிட்டி’ என்றாள் சரயு வெடுக்கென்று.
‘ஆமாம். அதெற்கென்ன? அதற்கும் நீ இப்போது எதோ ஓர் த்ரேதாயுகத்து சினிமா பாட்டை யாரோ ரெண்டு பசங்க பாடறதை கேட்டு அழுவதற்கும் என்ன சம்பந்தம்?’ என்றான் கடுமையாக.
திடீரென்று சரயூ அவனை ஓர் வேற்று மனிதனை பார்ப்பது போல் பார்த்தாள். பின் பதில் ஏதும் சொல்லாமல் எழுந்து சமையலறை நோக்கி சென்றாள்.
சங்கருக்கு சுருக் என்றது. சரயூ இது போல் இதுவரை நடந்து கொண்டதில்லை.
ஆனால் அவள் எதோ சொல்லவந்த போது அதை தடுத்து ‘காதலா’ என்று ஏளனமாக பேசியது நினைவுக்கு வந்தது. இப்போது நினைத்தபோது அந்த சொல் அவனுக்கே அவமானமாக பட்டது. ஏன் அப்படி ஓர் வார்த்தையை விட்டான்? ஆண் என்பதாலா?
அவன் யோசனை முடியுமுன் சரயூ ‘டைனிங் டேபிள்’ மேல் இரவு உணவை கொண்டு வைத்து விட்டு, அவனை பார்த்து ‘வாங்க..வந்து சாப்பிடுங்க,’ என்றாள். இப்போது அவள் முகம் சற்று தெளிவாக இருந்த போதிலும் சற்று முன் அழுத சிறு சுவடுகளும் சிறிது சோகமும் தென்பட்டது.
சங்கர் மெளனமாக சென்று சாப்பிட அமர்ந்தான். சரயூ ஜன்னல் வழியே வெளியே தெரிந்த வானத்தை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். அவளிடம் சட்டென்று எதோ ஓர் சோகம் வந்து கவிந்து விட்டது போல் தோன்றியது சங்கருக்கு.
‘நீ சாப்பிட வில்லையா?’ என்றான் அவளை பார்த்து.
‘இல்லை. எனக்கு பசியில்லை,’ என்றாள் சரயூ திரும்பாமலே. சங்கருக்கு தான் எதோ தப்பு செய்து விட்டோம் என்று மட்டும் புரிந்தது.
‘ஐ ம் சாரி சரயூ…ப்ளீஸ்…இங்குவா.. உனக்கு என்ன பிரச்சினை ? சொல்லு..’ என்றான். இப்போது அவன் குரலில் கனிவு இருந்தது.
சரயூ வந்து அவனுக்கு எதிரில் அமர்ந்தாள். இப்போது அவள் முகம் தெளிவாக இருந்தது. பின் கேட்டாள். ‘ஆண்களுக்கு ஆண்-பெண் நட்பு என்றால் ‘காதல்’ என்பதை தவிர வேறு எதுவுமே தோன்றாதா?’ என்று கேட்டாள். இப்போது அவள் குரல் தெளிவாக இருந்தது.
சங்கர் தலை குனிந்தான். தான் பேசியது தவறு என்று உரைத்தது. ‘சாரி’ என்றான் மெதுவாக.
‘சரி போகட்டும். உங்களுக்கு நான் ஏன் அந்த பாட்டை கேட்டு அழுதேன் என்று தெரியவேண்டும், இல்லையா?’
சங்கர் வெறுமே தலையசைத்தான்.
‘காலையில் ‘ஆபிட்’டில் பார்த்த பார்த்திபனும் நானும் ஒரே காலேஜில் படித்தோம் என்று சொன்னேன் இல்லையா? நான் காலேஜில் படிக்கும் காலத்தில் அந்த காலத்து அதாவது நான் சிறுவயதில் இருந்த சினிமா பாடல்கள் ரொம்ப பிடிக்கும். நான் நன்றாக பாடுவேன். நீங்கள் கேட்டதில்லை. நீங்கள் தான் பாட்டு என்றால் அவுரங்கசீப் ஆயிற்றே. அதனால், நான் அதை பற்றி எதுவும் உங்களிடம் சொன்னதில்லை. பார்த்திபனும் நன்றாக பாடுவான். அவனுக்கும் சினிமா பாடல்கள் பிடிக்கும். காலேஜ் விழாக்களில், வெளி காலேஜ்களுடன் நடக்கும் பாட்டு போட்டிகளில் நானும் அவனும் சென்று கலந்து பரிசுகள் வாங்கியதுண்டு. இப்போது போல் அப்போது அவ்வளவு ‘பப்ளிசிட்டி’ கிடையாது. அந்த நாட்களில் பிரபலமாக இருந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி மஹாதேவன், அநேகமாக சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி படங்களுக்கு அவர்கள் இசையும் பாடல்களும்தான் இருக்கும். நாங்கள் அந்த பாடல்களை பயிற்சி செய்து கொண்டு சென்று பாடி காலேஜுக்கு பரிசுகளை கொண்டு வருவோம். அவனுக்கும் எனக்கும் பாட்டினால்தான் நட்பே தவிர காதல் -கீதல் எல்லாம் இல்லை. நேற்று கேட்ட அந்த பாட்டு பிரபல டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய ‘போலீஸ்காரன் மகள்’ என்ற படத்தில் ஓர் தங்கையும், அண்ணனும் பாடுவது போல் வரும். மனதை தொடும், மிக இனிமையான, அர்த்தமுள்ள பாடல்.’ என்று நிறுத்தினாள். ‘ஸ்டேஜ் ப்ரோக்ராமா’க இருந்த அதில் அந்த பாடலை பாடியபோது எனக்கு பழைய நினைவுகள் வந்தது. அதோடு கூட்டத்தில் அமர்ந்திருந்த கிட்டத்தட்ட என் வயதுடைய பலரும் அந்த வரிகளை உடன் பாடிவருவதையும் பார்த்தபோது எனக்கு பழைய நினைவுகள் மோதிக்கொண்டு வந்தன.’ இப்போது சரயூவின் குரல் சற்று இடறியது.
‘நானும், பார்த்திபனும் பாடும் பாடல்களில் இது மிக பிரபலம். காலேஜ் விழாக்களில். காலேஜுடன் அவன் தொடர்பு போய் விட்டது. அவன் எங்கு போனான், எங்கு வேலை பார்த்தான் என்றெல்லாம் எனக்கு தெரியாது. நான் தெரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்கவில்லை. அதற்கு எந்த அவசியமும் இல்லை. நானே பாடுவதை விட்டு விட்டேனே. எதோ இன்று திடீரென்று அவன் மரண செய்தியும், தொடர்ந்து மாலையில் இந்த பாடலையும் கேட்க நேர்ந்ததால் சற்று மனம் கலங்கி போயிற்று. அழவேண்டும் போல் இருந்தது. அழுதேன். நான் ஏன்? அந்த கூட்டத்திலேயே என் வயதுள்ள பல பெண்கள் ஆண்கள் கண்களில் கண்ணீர் வழிந்ததை பார்த்தேனே? என்னவோ வாழ்க்கை…எங்கோ தொடங்கி, எங்கோ நடந்து எங்கோ முடிகிறது. சரி, விடுங்கள்…’ என்று மீண்டும் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே எழுந்து சென்றாள் சரயூ.
சங்கருக்கு சரயூ பேசிவிட்டு சென்றதை கேட்டபோது மிகவும் அவமானமாக இருந்தது.
நான் ஏன் அப்படி அவளிடம் கேள்வி கேட்டேன்? ஆண்கள் என்றாலே சந்தேகப் பிராணிகள் என்பதாலா?
சரயூ என்ன சொன்னாள்? ‘ஆண்களுக்கு நுண்ணுணர்வுகள் கிடையாது என்று…அதாவது ‘சென்சிட்டிவிட்டி’…எல்லாமே கருப்பு, வெள்ளை…பழுப்பு என்பதே கிடையாது…ஆனால் உலகம் அப்படியா இருக்கிறது? இல்லையே?
சங்கருக்கு இப்போது கண்ணீர் வரும் போல் இருந்தது. சட்டென்று எழுந்து சமயலறைக்கு சென்று வேலையில் இருந்த சரயூவின் தோள்களை பின் பக்கமாக பற்றி தன் பக்கமாக திருப்பினான்.
சரயூவின் முகத்தில் கேள்விக்குறி தோன்றியது.
‘சாரி சரயூ… வெரி வெரி சாரி…நான் பேசியது தவறுதான்.. நீ சொன்னது சரிதான். ஆண்களுக்கு ‘சென்சிட்டிவிட்டி’ கிடையாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்..அதாவது என்னை போன்ற ஆண்களுக்கு,’ என்றான் மிகுந்த வருத்தத்துடன்.
அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
சரயூ அவன் கண்ணீரை தன் கைகளால் துடைத்தாள். அப்போது அவள் முகத்தில் தெரிந்த கருணையை சங்கரால் உணர முடிந்தது. கருணையும் கூட நுண்ணுணர்வுதானே?
கேள்வி: கடவுளைத் தண்டிக்க என்ன வழி?
