நூல்கள், அறிவின் கலங்கரை விளக்கம்

Explore Qaitbay Citadel Architecture, History, Art, & Legacy

சென்ற வாரம்:

காயிட்பே (QAITBAY CITADEL) கோட்டை நோக்கிச் சென்றோம்.

“ஓ.. அதுதானே பழமையான கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி” என்றார் வெங்கு மாமா ஆர்வத்துடன்.

இனி,

QAITBAY CITADEL:

எங்கள் பேருந்து காயிட்பே நோக்கிச் செல்லும் பொழுது, வெங்கட் மாமாவின் இளமை நாட்களைப் பற்றிய பேச்சு வந்தது;

திருவல்லிக்கேணியில் பக்கத்துத் தெருவிலிருந்த, ஜானகியுடன் காதல். லைட்ஹவுஸ் பஸ் ஸ்டாப்பில், கல்லூரிக்குச் செல்லும் ஜானகிக்காக காத்துக் கிடந்தது. மாமி வேண்டுமென்றே, முன்னால் ஸ்டாப்பில் ஏறி, அவர் தேடுகிறாரா? என்று நோட்டம்விட்டது,

நண்பர்கள் துணையுடன் சந்தித்தது, மாமிதான் முதலில் ப்ரபோஸ் செய்தது. மாமா வீட்டில் சொல்லப் பயந்தது. மாமி பிடிவாதம் பிடித்து, அவர் தந்தைமூலம் ‘ஆண் கேட்டு’ வந்தது.

திருவல்லிக்கேணி லைட் ஹவுஸ், அவர்களின் காதலில் எத்தனை முக்கியத்துவம் பெற்றது என்பதை (ஜானகி மாமியின் வெட்கத்திற்கு இடையே) வெங்கு மாமா விவரித்துக் கொண்டு வந்தார்.

கைடு அமுனிடம், “எனக்கு அந்தப் பழைய லைட்ஹவுஸை அவசியம் பார்த்தே தீரணும்” என்று சொல்ல,

“அதெல்லாம் இப்ப பார்க்க முடியாது” என்றார், அமுன் கேஷுவலாக.

ஜானு மாமி, “ஏன்ணா குழந்தைமாதிரி அடம் பிடிக்கறேள்?, இது பார்கலைனா போனா போறத்து, ஊர் திருப்பினதும், வேளச்சேரியிலிருந்து ட்ரெயின் புடிச்சா 20 நிமிஷத்துக்குள்ள லைட்அவுஸ் போயிடலாம்”

“இல்லடி ஜானு……”

“சரி, காண்பிக்கிறேன் விடுங்க“ என்றார் அமன்.

காயிட்பே கோட்டை வாசலில் பஸ் நின்றது.

வெங்கட், டாக்டர் ராம்நாத்திடம், “இங்க லைட்ஹவுஸ் இருக்கிற மாதிரி தெரியலையே?” என்றார் மெல்லிய குரலில்.

“லைட்டா ஒரு ஹவுஸை காட்டுவாங்களோ என்னவோ?” என்று டாக்டர் ஜோக்கடிக்க,

அதற்குள் அமுன், “நீங்கள் பார்க்கும் இந்த காயிட்பே சிட்டாடல், சுல்தான் அல் அஷ்ரப் காயிட்பே..யால் கட்டப்பட்டது. நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த லைட்ஹவுஸ், ஒருகாலத்தில் இங்குதான் இருந்தது.

PHAROS தீவில் நிறுவப்பட்ட கலங்கரை விளக்கம், தொடர் பூகம்பங்களால் குறிப்பாக 1303ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அழிவைச் சந்தித்தது.

இந்தக் கோட்டையைத் தாங்கி நிற்கும் பல கற்கள், அந்த லைட்ஹவுஸின் சிதைவிலிருந்து எடுக்கப்பட்டவைதான். உலகின் மிகப் புராதனமான அதிசயங்களில் (Seven Wonders of Ancient World) ஒன்றாக இருந்த இந்த கலங்கரை விளக்கத்தை, இப்படிக் கற்களாகத்தான் நீங்கள் பார்க்க முடியும்”

வெங்கு மாமா கண்களில் ஏமாற்றம்.

கலங்கரை விளக்கத்தின் எச்சங்களைத் தாங்கி நிற்கும் இந்தக் காயிட்பே கோட்டை, போர்கள், பூகம்பம், சூறாவளிகளைக் கடந்து மத்திய தரைக்கடல் எகிப்தை முத்தமிடும் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது. மாமன்னன் நெப்போலியன் போனபார்ட் இந்தக் கோட்டையில் தங்கியிருந்தார் என்பது மேலும் ஒரு செய்தி!

கோட்டையின் கொத்தளத்திலிருந்து மத்திய தரைக்கடலின் அழகைக் காணலாம். அழகான உள் வேலைப்பாடுகள் கொண்ட இந்த கோட்டை, அக்காலத்தில் ராணுவத் தளவாடங்களைப் பாதுகாக்கப் பெருமளவில் உபயோகிக்கப்பட்டது. அரைவட்ட வடிவ நுழைவாயில்கள் அகலமான நடைபாதை எனப் பளிச்சென்று உள்ளது.

மதிய உணவின் போது அமுனிடம் பிரசித்திப் பெற்ற அலெக்ஸாண்ரியா நூலகம் பற்றிய பேச்சு வந்தது.

“பண்டைய அலெக்ஸாண்ரியா நூலகத்தில் நாலு லட்சத்திற்கும் மேற்பட்ட பாப்பியர்ஸ் சுருள்கள், அதில் பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகளின் படைப்புகள் இருந்தனவாம்.

ரோமானியர்கள், எகிப்தைக் கைப்பற்றிய பிறகு, இந்த நூலகத்தின் பெருமை குறைய ஆரம்பித்தது. ஓர் உள்நாட்டுச் சண்டையில், இந்த நூலகம் பாதிக்கப்பட்டது. ஒரு பெரிய சுனாமியின் தாக்குதல்களால் 365 (பொ.ஆ) இந்த நூலகம் முற்றிலும் அழிந்தது” என்றார் அமுன்.

“பழம்பெரும் நூலகம் தகர்க்கப்பட்டு விட்டாலும், அலெக்ஸாண்ரியாவின் பெருமையில் முக்கியமானதே நூலகம்தானே? புது நூலகம் கட்டப்படவில்லையா”

“ஏன் இல்லை? 1974ஆம் ஆண்டு இதற்கான விதை போடப்பட்டாலும், 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய பிரம்மாண்டமான நூலகம் திறக்கப்பட்டது. அடுத்து அங்குதான் நாம் போகிறோம்”

TBibliotheca Alexandrina - Wikipediahe Bibliotheca Alexandrina என்று அழைக்கப்படும் இந்த நூலகம், 2,20,000 சதுர அடியில் 80,00,000 புத்தகங்கள் கொண்ட அதிநவீன நூலகம் ஆகும். லத்தின் மொழியில் ‘பிபிலியோத்திகா’ என்றால் நூலகம் என்று அர்த்தமாம்.

புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலுக்கு ஒப்பானது என்கிற சொல்வழக்கு இந்நாட்டில் உள்ளது.

புத்தக ஆர்வலர்களின் சொர்க்கமாகயிருந்த இந்த நூலகத்தில் பல ஆராய்ச்சி மாணவர்களுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. குழந்தைகள், காது கேளாதோர், கண்பார்வை அற்றவர்களுக்கெனப் பல பிரிவுகள் இருக்கின்றன.

மிகப்பெரிய மாநாடு நடத்தும் மண்டபம், நான்கு பெரிய காட்சியகங்கள், ஆர்ட் கேலரிகள், ஒரு கோளரங்கம் என அனைத்தும் கொண்ட வளாகம். உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றான இதைப் பார்த்து அசந்துதான் போனோம்.

அழகான அலெக்ஸாண்ரியாவை பிரிய மனமின்றி பேருந்தில் ஏறினோம். மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு தலைநகர் கெய்ரோ வந்தடைந்தோம்.

“நாளை காலை பிரமிட் பார்க்கப் போகிறோம், காலையிலேயே உங்களின் அனைத்து பயண உடைமைகளையும் விடுதியிலிருந்து எடுத்து வந்து பஸ்ஸில் வைத்து விடுங்கள்.

நாம் பிரமிடுகள் மற்றும் சில இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரடியாக கெய்ரோ சென்ட்ரல் ரயில் நிலையம் போகிறோம். அங்கிருந்து இரவு ரயில் மூலம் அஸ்வான் நகருக்குப் பயணம் செய்ய போகிறோம்” என்றார், கைடு அமுன்.

எங்களின் இந்தப் பயணத்தில், விமானம், கப்பல், ரயில், பேருந்து, விசைப்படகு, ஹாட்ஏர் பலூன், ஒட்டகம், குதிரை வண்டி என பலவிதமான போக்குவரத்து சாதனங்களை உபயோகித்தோம்!

அலெக்ஸாண்ட்ரியா பயண அசதி தொடர, இரவு நன்கு தூங்கினோம்

நாள் – 3

பயணத்தின் மூன்றாம் நாள் காலை படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது, உற்சாகமாக இருந்தது. உலகின் ஏழு அதிசயங்கள் என்று எந்த காலகட்டத்தை எடுத்தாலும் (BC அல்லது CE) அதில் பிரமிட்கள் இடம் பெறாமல் போகாது. அப்பேற்பட்ட படைப்பை அன்று இருளில் லேசர் ஷோவில் ரசித்ததை, நாம் இன்று அருகில் காண இருக்கிறோம் என்கிற பரவசம்!

காலை உணவை முடித்து விட்டு, ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு எங்களுடைய பயண உடைமைகளைப் பேருந்தில் ஏற்றினோம். பேருந்து நகர்ந்தது.

“வெங்கட் மாமா டாக்டர் ராம்நாத்திடம் ஒரு கேள்வி கேட்டார். முக்கோண வடிவப் பிரமிட் கட்டதிற்குள்ளே என்ன இருக்கு டாக்டர்?

“என்ன, ஏதாவது பேய், பிசாசு குடியிருக்கும்”

“ஐயோ!”

“அமுன் சொன்னார். பிரமிட் உள்ளே நுழைந்து நிலவறையைப் பார்க்க அனுமதி உண்டாம். அதற்கு தனி டிக்கெட் வாங்கிப் போக வேண்டும்”

“ஓ, உள்ளே போக முடியுமா? அப்படின்னா நான் உள்ளே போய்ப் பார்க்கப் போகிறேன்” என்றாள் என் மனைவி. எண்டமூரி வீரேந்திரநாத்தின் விசிறி அவள். மேலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் அமானுஷ்ய கதைகளைத் தேடிப் படிப்பவள்.

“எதற்கு ஜானு வம்பு? நாம வெளியே இருப்போம்”

“அட போங்கோண்ணா, டாக்டர் சும்மா கதை விடுறார், நானும் பிரமிடுக்குள் இறங்கிப் பார்க்கப் போகிறேன்”

“நீ வேணா, இவங்களோட போயிட்டு வந்துடு”

அதற்கு டாக்டர், “இப்படி பொண்டாட்டிய அனுப்பிவிட்டு, தனியா வெளியில நிக்கிறவங்களையும் புடிச்சிக்குமாம்”

“என்ன டாக்டர்? என்னை வச்சு காமெடி, கீமடி ஒண்ணும் பண்ணலையே?”

“ஏன்ணா? இது கூடவா புரியலையா, சத்தியமா உங்கள வச்சுக் காமெடிதான் பண்ணறார்”

“சீரியஸாகச் சொல்கிறேன். உள்ளே நிலவறையில், சிலருக்கு அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டு இருக்காம், முன் ஜென்ம நினைவு கூட வந்து இருக்காம்”

“அப்படியானால் நானும் கூட வரேன். அனேகமாக நான் போன ஜென்மத்தில் ராஜகுமாரனாகத்தான் பொறந்து இருப்பேன்” என்றார் வெங்கட் மாமா.

“ம் ஹும்…..” என்று ஜானு மாமி தோளில் இடிக்க, எங்கும் ஒரே சிரிப்பு!!

“லிஸன் ப்ளீஸ்” என்று பேருந்திலிருந்த மைக்கைப் பிடித்தார், கைடு அமுன்.

“பிரமிடுகள் பற்றி உங்களுக்குத் தெரிந்து கொள்ள ஆர்வம்தானே?

கி.மு 2700 – 1500 இடைப்பட்ட காலத்தில்தான் இவை கட்டப்பட்டன. எகிப்திய ஆட்சியாளர்களை பேரோ (pharaoh) என்று அழைப்பார்கள் ; பேரோ என்றால் பெரிய மாளிகை வீடு என்று அர்த்தம். அரசர்கள் அவ்வாறு பெரிய அரண்மனையில் வசித்ததால் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது.

அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இறக்கும் பொழுது தங்களுடைய பூத உடலை வைக்க, மிகப் பிரம்மாண்டமான கல்லறைகளைக் கட்டினார்கள். பிரமிடுகள், இந்த வகையைச் சார்ந்தவை. பண்டைக்கால எகிப்தியர்கள், தங்கள் அரசர் இறந்தால், அவருடைய ஆவியானது உடலிலிருந்து வெளியேறுவது இல்லை என்று நினைத்தார்கள்.

அப்படிப்பட்ட ஆவியை ‘கா’ என்று அழைப்பார்கள். இறந்த அரசர் மறுபிறவிக்கு மாறும்முன், அவருக்குத் தேவையான உணவு, உடைகள், நகைகள் ஆகியவற்றை அந்த மம்மியாக்கம் (MUMMIFIED) செய்யப்பட்ட அரசரோடு சேர்த்துப் புதைத்து வைத்தார்கள்.

இந்தப் பிரமிடுகள் அப்படிப்பட்ட அரசர்களுக்காகக் கட்டப்பட்ட கல்லறைக் கூடம் ஆகும். எகிப்தின் முதல் பிரமிடு எனபது ஜோசர் (DJOSER) என்கிற அரசருக்காக கட்டப்பட்டது, படிக்கட்டு வடிவம் கொண்டது.

எகிப்தியப் பிரமிடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றவை கிசா பிரமீடுகள்.

Great Pyramid of Giza Khufu And 2 More | மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டா? முன்னேற்பாடு அவசியமா? | News in Tamil
நாம் செல்லவிருக்கும் கிசா நெக்ரோபொலிஸ் பகுதியில் உள்ள இவை 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. மூன்று பிரம்மாண்டமான பிரமிடுகள் முறையே காஃபு, காப்ஃரே, மென்கவுர் என்ற மூன்று அரசர்களுக்கானது.

மேலதிக விவரங்கள் நேரில் அவைகளைப் பார்க்கும்போது சொல்கிறேன்.

“யாரெல்லாம் பிரமிட் உள்ளே செல்ல விரும்புகிறீர்களோ சொல்லுங்கள்? அதற்கான தனி நுழைவுச்சீட்டு வாங்குகிறேன். புகைப்படம் எடுப்பவர்கள், மொபைல் வழியாக எடுத்தாலும், தனி கேமரா கட்டணம் செலுத்த வேண்டும்.

வளாகத்தில் பிரமிடுகளைச் சுற்றி நடக்க முடியாதவர்களுக்கு, குதிரை வண்டி, ஒட்டகச் சவாரி வசதிகள் உண்டு. நிலவறையில் படமெடுக்கும்பொழுது கேமரா பிளாஷ் உபயோகிக்காமல் எடுங்கள். கல்லறை என்பதால் உள்ளே இருக்கும் பொழுது அமைதியாக இருத்தல் நலம்” என்று முடித்தார், அமுன்.

சிறிது நேரத்தில் கிசா பிரமீடுகள் வளாகத்திற்குள் நுழைந்தோம்

ஆஹா அந்தக் காட்சியை எப்படி வர்ணிப்பது……….?!

எகிப்தியப் பழமொழி :

மனிதன் காலத்திற்கு அஞ்சுகிறான். காலம் பிரமிடுகளைக் கண்டு அஞ்சுகிறது.

(தொடரும்..)


கேள்வி: இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?