மார்ச் 5 , 2026 அன்று வெகு ஜோராக நடைபெற்றது மனதுக்கிசைந்த மந்திரச் சொற்கள் என்ற நிகழ்வு . 

தொடர்ந்து 250 வாரங்கள் மகாகவியின் மந்திரச் சொற்கள் என்ற வரிசையில் பாரதியாரின் எண்ணற்ற கவிதை என்னும் அமுதினை நமக்குப் பருகத் தந்த நமது குருநாதர் வ வே சு அவர்களிடமிருந்து நான் கற்றதையும் பெற்றதையும் பற்றி நாம் கலந்துரையாடும் அபூர்வ நிகழ்வு அது. 

வ வே சு அவர்கள்  நமது குவிகம் ஜூமரங்கத்தில்  பாரதி பயிலரங்கத்தில் மகாகவியின்   கவி உள்ளத்தையும், பொருள் இன்பத்தையும், சொல்லின் பெருமைகளையும் ஒருங்கே வழங்கி வருவதில் வற்றாக ஊற்றாக இருந்து வருகிறார். அந்த ஊற்று நீறைக் குடித்து , அருந்தி, மாந்தி – அதன் சுவையில் திளைத்த பாரதி அன்பர்களின் உணர்ச்சிப் பெருக்காக அமைந்தது இந்த நிகழ்வு. 

அதன் காணொளியும் அவர்கள் பேசிய உரைகளும் உங்கள்  பார்வைக்காக இங்கே தந்திருக்கிறோம்.  

தொடர்ந்து பாரதி என்னும் கடலில் மூழ்கி  தேர்ந்த முத்துக்களை எடுத்து  நமக்கெல்லாம் வாரி வாரி வழங்க  வ வே சு அவர்கள் இருக்க ஏது குறை நமக்கு? 

அனைத்தையும் தொகுத்து , மாலையாய்த் தொடுத்து, மார்பிலே அணிந்து புவனமெல்லாம் பவனி வருவோம்.  

வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் குருநாதர்  வ வே சு அவர்களுக்கே சேரும். 

 

1. தியாகராஜன் ஐயர்:

என் மனதுக்கு இசைந்த மந்திரச் சொற்களடங்கிய கவிதைகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முதலில் 

“ உள்ளம் குளிராதோ , பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ ? “ என்ற மஹாகவியின் மஹாசக்தியிடம் அளித்த விண்ணப்பம்.

பொய் ஆணவ ஊனமெல்லாம் ஒழிய வேண்டும் என்றால். புல் பூண்டின்றி அகற்றப்படவேண்டும். இது தானாகவே நடைபெற முடியாதவை. முயற்சி வேண்டும். அதுவும் பெருமுயற்சி அல்லவோ வேண்டும் !
என்ன நயமடா பாரதீ ! என்னை உணர்ச்சி வெள்ளத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்று சொக்க வைத்துவிட்டாயடா பாரதீ ! நீ ஒருவன் தானடா மஹாகவி !

மஹாசக்தியிடம் என்ன வேண்டுகிறான் என்று பார்க்கையில் மெய் சிலிர்த்தே போய் உணர்ச்சி வெள்ளத்தில் முழுகியே போய் விட்டேனடா பாரதீ!

“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

இங்கே அவன் தன்னைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்ட பராசக்தி புழுதியில் எறிந்து நிலச்சுமையைன வாழ்ந்திடப் புரிவது நியாயமா என்று உரிமையுடன் கேட்கிறான்
புழுதி என்று அவன் கூறியது “ நான் “ “ எனது “. என்கிற மாயை யை என்று நான் புரிந்து கொண்டேன்
இன்னுமொரு இடத்தில் எழுதினான் மஹாகவி

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

இங்கே அவன் அக்கினிக் குஞ்சென்று விளித்தது “ நான் “ என்ற அகந்தை அழிந்த
“ சாமி நீ , சாமி நீ “ என்கின்ற அத்வைத சிந்தாத்தை என்று நான் பொருள் கொள்ளுகிறேன்

அச்சிந்தாத்தத்தை பொந்தடைந்து அழிகின்ற மனமெனும் காட்டில் வைத்தானாம் பாரதி ! வெந்து தணிந்ததாம் அப்பாழ்பட்ட மனது !

“ சாமி நீ , சாமி நீ, தத்வமசி , தத்வமசி “

பிறகு

“ யாதுமாகி நின்றாய் , காளீ ! எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மையெல்லாம் நின் செயல்களன்றி இல்லை போதும் இந்த மாந்தர் வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்
ஆதி சக்தி தாயே , என்மீது அருள் புரிந்து காப்பாய் “
என்ற காளி ஸ்தோத்திரம்

அடுத்து

“ அகத் அகத் அகத்தினிலே உள்நின்றாள் அவள்
அம்மை அம்மை எம்மைநாடு பொய் வென்றாள்
தகத்தக நமக்கருள் புரிவாள் தாளொன்றே
சரணமென்று வாழ்திடுவோம் நாமிங்கே“

மேலும் பராசக்தியிடம் என்ன வேண்டுகிறான் பாருங்கள்
“புகப்புக புக இன்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்குள் அங்கே இருக்குதடா தீ போலே அது
குழந்தையதன் தாயடிக் கீழ் போலே “
என்ற அவனது சக்திக் கூத்து

இங்கே மஹாகவி “சூது ” என்றழைத்தது ” ஆணவம் ” என்ற மாயை
குகை என்றழைத்தது பாழ்பட்ட மனது !
” தீ ” என்பது ஆணவத்தை அழித்தொழிக்க வல்ல ” அத்வைத ” ஞானம்
“ சாமி நீ , சாமி நீ, தத்வமசி , தத்வமசி “

மேலும் பாரதியின் “ நான் “ என்ற தலைப்பிட்டுப் பாடிய பாடலின் முதல் கண்ணியும் 6வது கடைக் கண்ணியும்

முதலாவது கண்ணியில்
“ வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்
கானிழல் வளரும் மரமெலாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான் “
என்ற ஒருமைத்தத்துவ ஞானமும்

6 வது கண்ணியில்
“ நான் எனும் பொய்யை நடத்துவோன் நான்“
இந்தப் பொய்யை, மாயையை நடத்துபவன் நானே தான் என்று உணர்ந்த பின் எந்த ஒருவனும்

“ ஞானச்சுடர்வானில் செல்லுவோன் நான் “
என்று தன்னிலை விளக்கமாகக் கூறி

“ஆன பொருள்களில் அனைத்திலும் ஒன்றாய் அறிவாய் விளங்கும் முதற்சோதி நான் “

என்ற மஹாகவியின் அத்வைத ஞானமும் என் மனதுக்கு மிகவும் இசைந்த மந்திரச் சொற்கள்

மேலும் விநாயகர் நான் மணி மாலை என்கிற அதி அற்புதப் படைப்பிலோ அதன் 37 வது கண்ணியான வெண்பாவிலோ தவம் என்கிற வார்த்தையின் முழுமையான அர்த்தத்தின் உச்சிக்கே சென்று விடுகிறான் மஹாகவி

“செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே!
தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் –
வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை,
அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு’’

என்று பாரதி பாடுகிறான்

தவத்தின் எல்லை அன்பு என்றால் அந்த அன்பின் எல்லை காதலன்றோ !

மேலும் அவனது பற்பலப் பாடல்களில் விரவி நிற்கும் மந்திரச் சொற்கள் அனைத்துமே என் அகந்தையை ஒழிக்க வல்ல மனதுக்கிசைந்த மந்திரச் சொற்களே.

மஹாகவி முன்னர் எழுதினான் வினாயகர் நான் மணி மாலையில்
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தே அவன்

“ஞானா காசத்து நடுவே நின்றுநான் பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்!

“ஞானாகாசம் ” என்ன ஒரு மெய் சிலிர்க்கவல்ல அற்புதச் சொல்லாடலடா பாரதீ !

அப்பப்பா இந்த மந்திரச்சொற்களைக் காட்டிலும் மனதிற்கு இசைந்த ஏதேனும் ஒன்று உண்டோ ?

மேலும் அந்த வினை தீர்க்கும் மணக்குள விநாயகனிடம் வேண்டிய மௌனநிலை

“எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்
கேளாய் கணபதி. மனத்திற் சலனமில்லாமல்,
மதியி லிருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுனநிலை
வந் திடநீ செயல்வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறுவயது
இவையுந் தர நீ கடவாயே”

அவன் கேட்ட வரங்கள் மனதில் சலனமில்லாமை , மதியில் இருளே தோன்றாமை , அவன் நினைத்த பொழுதே கணபதிராயனின் மௌன
நிலை , அஃதாவது “ சாமி நீ , சாமி நீ , தத்வமசி , தத்வமசி “ என்ற பேருண்மை நிலை

இறுதியாக என் மனதுக்கு மிகவும் இசைந்து போன மந்திரச் சொல்லுடன் இந்த என் பிதற்றலான பேச்சை நிறைவு செய்கிறேன்

“ ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொழி லாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்
; இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள். “

“ துன்பம் இனியில்லை , சோர்வில்லை , தோற்பில்லை அன்பு வழியில் அறங்கள் நடத்திட “

கண்ணம்மாவைச் சரணடைந்தேன் சாவுமங்கே அழிந்து மரணமுமில்லை ! அவளை நினைத்த அக்கணமே நான் பண்ணிய பாவங்களெல்லாம் பட்டென நசிந்து அழிந்தனவே !

“ பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய் ! “

யோகசித்தியின் ஐந்தாவது கண்ணியில் மஹாகவி கேட்ட வரங்கள் மெய்சிலிர்க்கவைப்பவை

“நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய். “

அவன் கேட்கும் சிலவரங்களை பராசக்தி நேரே மறுகேள்வி கேட்காமலேயே இன்றே தரவேண்டுமென அவன் உரிமையுடன் கேட்பது எவ்வளவு சிறப்பு மிக்க மனதிற்கிசைந்த மந்திரச் சொல் !

தியாகராஜன் எனும் வேடிக்கை மனிதனா நான் ?

வீழ்வேன் என நினைத்தேன் ! என்னை வீழாமல் தடுத்தே ஆட் கொண்டான் ஞானச் சித்தன் பாரதி !

அவனது மந்திரச் சொற்களால் ! கூடவே இருந்து தெளிவுதர மொழிந்து என்னை வழிநடத்திச் செல்லும் ஞானாசிரியர் வவேசு அவர்களுக்கு என் மனமுவந்த சிறப்பு நன்றிகள் !

2. வி பி துரைராஜ்

அன்புடை ஆசான் வ.வே.சு. அவர்களுக்கு நமஸ்காரம்.

நேற்றைய கலந்துரையாடல் அனைத்தையும் கேட்டு, அகமகிழ்ந்தேன்.

உரையாடியோர் அனைவரும் தங்களது மந்திரச் சொற்களில் எத்தனை அளவுக் கேட்டு மகிழ்ந்துப் பாராட்டினரோ, அதற்குமேலே பலமடங்கு எனது இரசிப்பு இருப்பினும், பாராட்ட, புகழ்ந்திசைக்கத் திறனில்லாக் காரணத்தால், அவையடங்கி அமர்ந்திருந்தேன்.

தங்களது இலக்கியத் தொண்டு மேலும் பல்லாண்டு தொடர வேண்டும்.

நானும் அதனைக் கேட்டுப் பயனுற வேண்டும்.

 

3. ரஞ்சனி

நமஸ்காரங்கள்.

நேற்றைய கலந்துரையாடலில் நான் கலந்து கொள்ளவில்லை.குழுவில் post செய்யப்பட்ட பதிவுகளைப் பார்த்தபோது டாக்டர் வாவேசு அவர்களின் உரையின் impact ஐ என்னால் உணர முடிந்தது.
சமஸ்கிருதத்தில் ஒரு அழகான சுபாஷிதம் உள்ளது.

संसारविषवृक्षस्य द्वे फले अमृतोपमे
काव्यामृतरसास्वाद: सल्लापसज्जनैः सह।

இந்த விஷமயமான சம்சார மரத்திற்கு அமுதம் போன்ற இரண்டு கனிகள் உள்ளன.
ஒன்று மகான்களால் படைக்கப்பட்ட காப்பியங்களின் அமுத ரசத்தை அனுபவிப்பது.

மற்றொன்று சஜ்ஜனர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது.

(Ofcourse I don’t interact. I atleast get to read them in the group).

இந்த இரண்டும் இந்த குழுவில் எனக்கு கிடைக்கிறது. Very happy to be a part of this 🙏

பாரதியின் மந்திரச் சொற்கள் 251 ஆம் நிகழ்வு 04.03.26

மதுரை மணி அவர்களின் கச்சேரியை நேரில் கேட்டு அதில் மூழ்கித் திளைத்த ரசிகரிடம் அல்லது தமிழ் கவிதை பற்றி ரசிகமணி டி கே சி அவர்கள் பேசிக் கேட்ட வட்டத் தொட்டி ஆர்வலரிடம் கேட்டால் அந்த ஆனந்த அனுபவத்தில் திளைத்ததைச் சொல்வார்கள். அதைப் பாராட்டுவார்கள். அதை அனுபவித்தறியாத ஒருவருக்கு ஏன் இப்படி தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் எனத் தோன்றும்.

அது போலவே , இந்த இரு நூற்று ஐம்பது வாரங்களாக “பாரதியின் மந்திரச் சொற்கள் “ எனும் அருமையான திரு வ வே சு அவர்களின் உரை கேட்டுத் திளைத்திருக்கும் நம்மைப் போல ஒருவரை இந்த உரை பற்றிக் கேட்டால் , மகிழ்வும் ஆனந்தமுமாய் கொண்டாடிச் சொல்வோம்.
இந்த உரை இன்னும் கேளாதவர் இருந்தால் ஓடிப் போய் உடனே கேட்க வேண்டுமெனத் தோன்றும். உண்மையிது வெறும் புகழ்ச்சியில்லை.

திரு..வ வே சு அவர்களை வழிகாட்டி எனக் கூடச் சொல்ல முடியாது ஏனெனில், வழிகாட்டி நம் உடன் கூட வராது. ஆனால், வ வே சு அவர்கள் நம் கை பிடித்து நம்முடன் பயணித்து, நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி , தானும் ரசித்து, நம்மையும் ரசிக்க வைத்து கூட்டிச் செல்கிறார்.

மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் எனப் பாடிய பாரதியின் ஒவ்வொரு சொல்லையும் எப்படி ரசிக்க வேண்டுமென நயம்படச் சொல்லி நம்மை தெளிவு பெறச் செய்கிறார் வ வே.சு . மந்திரம் என்பது திரும்பத் திரும்ப விடாமல் சொல்வது. .அதானால்தான் வ வே சு அவர்கள் தன் உரையை ஆரம்பிக்கும் முன் எப்போதும் சொல்கிற மந்திரம் “தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் —- “

இந்த மந்திரத்தை நானும் தினமும் சொல்கிறேன். இந்த பாடல் –பாஞ்சாலி சபதத்தில் வருகிற் பாடல் .இது பற்றி பேசும் போது அவர் சொன்னதில் இரு கருத்துகள் நினைத்து, உள்வாங்கி, கடைப்பிடிக்க வேண்டியவை.

“ தெளிவு தர மொழிந்திடுதல் “ எனும் பதத்துக்கு அவர் சொன்னது.

”இதற்கு நேரடியான பொருள் கேட்போருக்குத் தெளிவு தரச் சொல்லுதல். ஆனால் இன்னொரு பொருளும் இருக்கிறது. அது சொல்பவருக்கும் தெளிவு தரச் சொல்லுதல். ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொண்டால் , அதையே இன்னொருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது , அந்த விஷயம் பற்றி நமக்கும் இன்னும் தெளிவு பிறக்கிறது. ஞானம் என்கிற சொத்து பகிரப் பகிர வளர்ந்து கொண்டே இருப்பது.. என் ஞானத்தை உனக்கு பகிர்ந்து அளித்தால் , உன்னிடமும் என்னிடமும் என இருமடங்கு ஆகிவிடுகிறது. அதுதான் தெளிவு தர மொழிந்திடுதல்.

இன்னொரு கருத்து அந்த மந்திரத்தின் கடைசி வரி பற்றி வ வே சு அவர்கள் சொன்னது. “அடியனேற்கு இவையனைத்தும் உதவுவாயே” இது குறித்து அவர் சொன்னது. “ பாரதி அருள்வாயே, தருவாயே கொடுப்பாயே என்றெல்லாம் கேட்கவில்லை. பாரதி ஒவ்வொரு சொல்லையும் எடை போட்டு உரசிப் பார்த்து பயன் படுத்துகிறான். அவன் தமிழ் வாணீயைக் கேட்கிறான் உதவுவாயே என..

ஏன்? உதவுதல் என்றால் , நான் ஒரு வேலையை ஆரம்பித்து செய்து கொண்டிருக்கும் போது, கொஞ்சம் உதவி தேவை, ஒரு கை கொடுத்தால் போதும் வேலை முடிந்துவிடும் அப்போது கை கொடுப்பதுதான் உதவி. நான் ஒன்றுமே செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க கேட்டதெல்லாம் கொடுப்பாயே எனக் கேட்பது வேறு. அதானால்தான் பாரதி கேட்பது உதவுவாயே .

இப்படி பாரதியின் மந்திரச் சொற்களை விளக்கி மறக்கக் கூடாத வாழ்க்கைப் பாடங்களை எடுத்துரைக்கும் வ வே சு அவர்களின் இந்தத் தொடர் உரை நிகழ்கிற காலத்தில் நாமும் உடன் இருந்து கேட்கும் வாய்ப்பு வாய்த்திருப்பது பெறும் பேறு. இதை தலை மேல் வைத்துக் கூத்தாடிச் சொல்வதில் தயக்கம் தேவையில்லை.

4. மதுவந்தி.

பாரதியின் மந்திரச் சொற்கள் 251 ஆம் நிகழ்வு 04.03.26
மதுரை மணி அவர்களின் கச்சேரியை நேரில் கேட்டு அதில் மூழ்கித் திளைத்த ரசிகரிடம் அல்லது தமிழ் கவிதை பற்றி ரசிகமணி டி கே சி அவர்கள் பேசிக் கேட்ட வட்டத் தொட்டி ஆர்வலரிடம் கேட்டால் அந்த ஆனந்த அனுபவத்தில் திளைத்ததைச் சொல்வார்கள். அதைப் பாராட்டுவார்கள். அதை அனுபவித்தறியாத ஒருவருக்கு ஏன் இப்படி தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் எனத் தோன்றும்.
அது போலவே , இந்த இரு நூற்று ஐம்பது வாரங்களாக “பாரதியின் மந்திரச் சொற்கள் “ எனும் அருமையான திரு வ வே சு அவர்களின் உரை கேட்டுத் திளைத்திருக்கும் நம்மைப் போல ஒருவரை இந்த உரை பற்றிக் கேட்டால் , மகிழ்வும் ஆனந்தமுமாய் கொண்டாடிச் சொல்வோம்.
இந்த உரை இன்னும் கேளாதவர் இருந்தால் ஓடிப் போய் உடனே கேட்க வேண்டுமெனத் தோன்றும். உண்மையிது வெறும் புகழ்ச்சியில்லை.
திரு..வ வே சு அவர்களை வழிகாட்டி எனக் கூடச் சொல்ல முடியாது ஏனெனில், வழிகாட்டி நம் உடன் கூட வராது. ஆனால், வ வே சு அவர்கள் நம் கை பிடித்து நம்முடன் பயணித்து, நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி , தானும் ரசித்து, நம்மையும் ரசிக்க வைத்து கூட்டிச் செல்கிறார்.
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் எனப் பாடிய பாரதியின் ஒவ்வொரு சொல்லையும் எப்படி ரசிக்க வேண்டுமென நயம்படச் சொல்லி நம்மை தெளிவு பெறச் செய்கிறார் வ வே.சு . மந்திரம் என்பது திரும்பத் திரும்ப விடாமல் சொல்வது. .அதானால்தான் வ வே சு அவர்கள் தன் உரையை ஆரம்பிக்கும் முன் எப்போதும் சொல்கிற மந்திரம் “தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல் —- “
இந்த மந்திரத்தை நானும் தினமும் சொல்கிறேன். இந்த பாடல் –பாஞ்சாலி சபதத்தில் வருகிற் பாடல் .இது பற்றி பேசும் போது அவர் சொன்னதில் இரு கருத்துகள் நினைத்து, உள்வாங்கி, கடைப்பிடிக்க வேண்டியவை.
“ தெளிவு தர மொழிந்திடுதல் “ எனும் பதத்துக்கு அவர் சொன்னது.
”இதற்கு நேரடியான பொருள் கேட்போருக்குத் தெளிவு தரச் சொல்லுதல். ஆனால் இன்னொரு பொருளும் இருக்கிறது. அது சொல்பவருக்கும் தெளிவு தரச் சொல்லுதல். ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொண்டால் , அதையே இன்னொருவருக்குக் கற்றுக் கொடுக்கும் போது , அந்த விஷயம் பற்றி நமக்கும் இன்னும் தெளிவு பிறக்கிறது. ஞானம் என்கிற சொத்து பகிரப் பகிர வளர்ந்து கொண்டே இருப்பது.. என் ஞானத்தை உனக்கு பகிர்ந்து அளித்தால் , உன்னிடமும் என்னிடமும் என இருமடங்கு ஆகிவிடுகிறது. அதுதான் தெளிவு தர மொழிந்திடுதல்.
இன்னொரு கருத்து அந்த மந்திரத்தின் கடைசி வரி பற்றி வ வே சு அவர்கள் சொன்னது. “அடியனேற்கு இவையனைத்தும் உதவுவாயே” இது குறித்து அவர் சொன்னது. “ பாரதி அருள்வாயே, தருவாயே கொடுப்பாயே என்றெல்லாம் கேட்கவில்லை. பாரதி ஒவ்வொரு சொல்லையும் எடை போட்டு உரசிப் பார்த்து பயன் படுத்துகிறான். அவன் தமிழ் வாணீயைக் கேட்கிறான் உதவுவாயே என..
ஏன்? உதவுதல் என்றால் , நான் ஒரு வேலையை ஆரம்பித்து செய்து கொண்டிருக்கும் போது, கொஞ்சம் உதவி தேவை, ஒரு கை கொடுத்தால் போதும் வேலை முடிந்துவிடும் அப்போது கை கொடுப்பதுதான் உதவி. நான் ஒன்றுமே செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்க கேட்டதெல்லாம் கொடுப்பாயே எனக் கேட்பது வேறு. அதானால்தான் பாரதி கேட்பது உதவுவாயே .
இப்படி பாரதியின் மந்திரச் சொற்களை விளக்கி மறக்கக் கூடாத வாழ்க்கைப் பாடங்களை எடுத்துரைக்கும் வ வே சு அவர்களின் இந்தத் தொடர் உரை நிகழ்கிற காலத்தில் நாமும் உடன் இருந்து கேட்கும் வாய்ப்பு வாய்த்திருப்பது பெறும் பேறு. இதை தலை மேல் வைத்துக் கூத்தாடிச் சொல்வதில் தயக்கம் தேவையில்லை.

5. லோகமணி சுப்பிரமணியன்

வ வே சு அவர்கள் பொழியும் பாரதி மழையில் நனையும் கூட்டத்தில் நானும் ஒருவன். சிறிய வயதில் இருந்து பாரதிமழையில் நனைந்து வாழ்பவனுக்கு இந்தத் தொடர்மழையில் வாழக்கிடைத்தது ஒரு பாக்கியமே.

வ வே சு அவர்களுக்கும் சுந்தர்ராஜன், கிருபானந்தன் அவர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். 🙏

6. வெங்கடகிருஷ்ணன்

அனைவருக்கும் இனிய காலை, மாலை வணக்கங்கள்.

வெல்லும் ஓர் மந்திரச் சொல் அது “வினயம்”.

வீரம் மிகுந்த பாரதியிடம், அரும் வினயத்தை கண்டு
உணர்கிறேன்.

இயல், இசை,நாடகம், கவிதை என்ற கற்பனை துறை வித்தகர் நிறைசபையில்,
இவையறியா விற்பனை துறை சார்ந்தவன், இக்குழுவின் கடைக்குட்டி நான்.

வினயம் என்ற மகாகவியின் மந்திரச் சொல் எனை மிகவும் கவர்ந்தது. அதனை ஒரு செல்வமாக பாரதி குறிக்கிறார்.

வினயமாய் நடந்தால்
மனித மனங்களை வெற்றி
கொள்ளலாம், அதன் மூலம் எதையும் சாதிக்கலாம் என்பது என் துறை சார்ந்த
ஒன்றாகும்.

வினயம் என்பதனை பணிவு, அடக்கம், ஒழுக்கம் என கொள்ளலாம். இது
நம் நடத்தையை சீரமைக்கிறது.
விவேகம் என்பது நம்
சிந்தையை சீரமைக்கிறது. ஒரு
மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு அவசியமான பண்புகளாக கருதப்படுகிறது.

வினயத்தை மூன்று சுப்ரமணியர்கள் உணர்ந்து, நமக்கு உணர்த்துகின்றனர்.

ஒருவர் பிரணவத்தை தந்தைக்கு உபதேசம்
செய்கையிலே, அவருக்கு வினயத்தையும் உபதேசம் செய்தார்.

மகாகவி தன் திருமகள் துதியிலே அதனை ஒரு செல்வமாகவே காட்டுகிறார்.

நமது வவேசு அவர்கள் அவ்வழியே வாழ்ந்து, நமக்கு வழிகாட்டுகிறார்.

பாரதியின் வினயத்தை மூன்று எல்லைகளிலே காண்போம்.

யாமறிந்த புலவரிலே
கம்பனை போல்,
வள்ளுவன் போல்,
இளங்கோ போல்

மூவரும் அறத்தை பாடினர். மூன்று நிலைகளில் பாடினர்.

கம்பன் தன் காதையை பாரதம் என்ற நிலையிலும்.

வள்ளுவன் தன் குறளை உலக பொதுமறை என்ற நிலையிலும்.

இளங்கோவின் கதை தளமே தமிழ் நிலம் என்ற எல்லையில் இருப்பதை காணலாம்.

இங்கும் மகாகவி வினயத்தோடு பாரதத்தை முதன்மை படுத்துகிறான்.

பாரதியாரின் வினயம் பற்றிய எனது சிந்தனை.
திலகர், வ.உ.சிதம்பரம பிள்ளை, வாஞ்சிநாதன், அரவிந்தர் போன்ற தீவிர சுதந்திர போராட்ட தியாகிகளில், அரவிந்தர், பாரதியார் போன்றவர்கள் பின்னர் மிதவாத
வழியில் மாறினார்கள். வீரத்தில் இருந்து வினயமாக , விவேகமாக இருந்து
வெற்றி பெற வேண்டும் என எண்ணியதாக தோன்றுகிறது.

மேலும் ஒரு செய்தியோடு உரையை முடிக்கலாம் என நினைக்கிறேன்.

பத்தாண்டுகள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த பாரதி
திருநெல்வேலி திரும்புகையில்,
1918 ஆண்டு கைது.
கடலூரில் சிறை வைக்கப்படுகிறார்.
வ.உ.சி, சிவா போன்றோர் சிறையில் உள்ள நிலையில் சுதந்திர
போராட்டத்தை தொடர வேண்டும் என்ற நிலையில்,
பாரதி வினயமாக
சிறையில் இருந்து விடுதலை பெற்று
வெளிவருகிறார்.

இதன் முக்கியத்துவம் குறித்து தெளிவாக அறிய – சில போராட்ட களங்களை காண்போம்.

1) இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுத தாக்குதல் காரணமாக வீழ்ந்த Japan பெற்ற மனமாற்றம். வினயம் காரணமாக மீண்டு எழுந்தது.

2) ஈழத்தில் மிதவாதிகளை தவிர்த்த விடுதலை புலிகளின் செயல்பாடுகள். வெற்றியை சிதைத்தன.

வினயத்தை வெறும் பலவீனமாக பார்க்காமல், ஆன்மீக பலம், அறிவின் அடையாளம் என பாரதி கருதினார்.

சடையப்ப வள்ளலை பாடும் கம்பனின் ஆற்றல் இல்லாவிட்டாலும், அவன் வழியில் – என் உரையில் மகாகவியின் படைப்புக்களின் உரிமையை வாங்கி பொது உடமை ஆக்க முதல் காரணமாய் விளங்கிய . A.V. மெய்யப்ப செட்டியார் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நன்றி🙏

7. உஷா ராமசுந்தர்

251 – மந்திரச் சொற்கள் ஆரம்பம்ஆன May 12 th 2021 முதல் பாரதியாரால் ஆட்கொள்ளப்பட்டேன். கடந்த வருடம் சென்னை வந்ததும் திருவல்லிக்கேணியில் அவர் வசித்த இல்லத்திற்கும், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் மற்றும் குயில்தோப்பிற்கும் சென்றுவந்தேன்.

மந்திரச்சொற்கள் நிகழ்வில் அறிந்துகொண்ட நயமும் பொருளும் எண்ணிலடங்காது.
என்னை மிகவும் கவர்ந்தது அவர் ஓர் விஸ்வகவி என்பது. விநாயகர் நாண்மணிமாலையில் ஜகமே இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட வேண்டும் என்று வேண்டுகிறார். தனக்கென்று எதுவும் யாசிக்காமல் பூமண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக என்று
வேண்டுகிறார். இன்றைய தேதியில் நாம் எல்லோரும் இதை வேண்டும் நிலையில் உள்ளோம்.

இரண்டு வார்த்தையில் ஓர் பொக்கிஷத்தை அடைத்துள்ளார். புதியன விரும்பு / வேதம் புதுமை செய் / கூடித்தொழில் செய் / கைத்தொழில் போற்று என்பவை என்றைக்கும் பொருந்தும். காலத்தை கடந்து வாழும் விஸ்வகவி.

மனப்பெண்ணில் மனதைப் பெண்ணாக, ஒரு சக்தியாக உருவகப்படுத்தி பெண் இனத்தைஉயர்த்தியுள்ளார்.

பரசிவ வெள்ளத்தில் சிவன் என்னுள் வருவதற்கு காவித் துணி வேண்டா, கற்றை சடை வேண்டா சிரத்தை ஒன்றே போதுமடா என்றும், எங்கும் உளான் யாவும் அறிவான் – என்று பலமதத்தோரும் கூறும் சமத்துவம் பேசி, விஸ்வகவியாக உயர்ந்து நிற்கிறார்.

இவை தவிற மற்றும் பல பாடல்களை நமக்குத் தெளிவுதர மொழிந்து, நமது உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டி, கண்ணீர்த்துளி வரும்படி எடுத்துரைத்து, 250 மணி நேரம் நம்மை பரவச நிலையில் வைத்து இருந்ததற்கும், இனி பல மணிகள் தொடர்வதற்கும் நம் ஆசானுக்கும் குவிகத்திற்கும் பல கோடி நன்றி.

8.  தென்காசி கணேசன்

அனைவருக்கும் வணக்கம்

முதலில் பேராசிரியர் வ வே சு அவர்களுக்கும் குவிகம் இரட்டையர்கள் திரு சுந்தரராஜன் திரு  கிருபானந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

ஏனென்றால் 251 வது வாரம் – அதாவது ஐந்து வருடங்கள் அதுவும் இணைய வழியாக – பேசு பொருளும் ஒன்றே – பேசுபவரும் ஒன்றே !

அது இன்றைக்கும் சுவையாக தொடர்ந்து அனைவராலும் கேட்கப்பட்டு வருகின்றது என்றால் அதுவே இந்த நிகழ்வின் வெற்றி என்று நாம் கூறலாம்.

பாரதியின் பல்வேறு பரிமாணங்களை அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.நமக்கு தெரியாத பாரதியை நாம் தெரிந்து கொண்டோம். அது  விநாயகர் மணிமாலையாக, குயில் பாட்டாக,பாஞ்சாலி சபதமாக, ஞானப் பாடல்கள், என  இருக்கலாம்.

பாரதியின் பல்வேறு படைப்புகள் இந்த மந்திர சொற்கள் நிகழ்வு மூலமாக கேட்டபோதுதான் எனக்கு புதிய ஆத்திசூடி பற்றி தினமலர் எழுதச் சொன்வுடன் ஒரு நம்பிக்கையே ஏற்பட்டது .இன்றைக்கு அது 36 வாரங்களாக தொடர்ந்து தினமலர் புத்தகமாக வெளியிடுகிறது. திரு சீனி விஸ்வநாதன் அவர்களை சென்றவாரம் சந்தித்தபோது , 92 வயதில் இதை தொடர்ந்து படித்துவருவதாகக் கூறி  என்னைப் பாராட்டினார்கள் அது பாரதிக்கு கிடைத்த வெற்றி. எனவே நான் மீண்டும் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்திற்கு வவெசு அவர்கள் அணிந்துரை தருகிறேன் என்று கூறி இருப்பது எனது வரம்.

கரும்பில் எந்தப் பகுதி இனிப்பாக இருக்கும் என்பது போல இந்த 250 பகுதிகளில் எதை நான் சொல்வது எதை விடுவது? இருந்தாலும் பாஞ்சாலி சபதத்தை பற்றி பேசிய ஒரு பகுதி என்னை அப்படியே நெகிழ வைத்தது

பல உவமைகள் பல வார்த்தைகள் என்று பாரதி சொன்னதை வவேசு அவர்கள் பல்வேறு உதாரணங்கள் இலக்கியங்கள் இவற்றோடு சொன்னது மனதிலேயே நிற்கின்றது.  வவேசுவின் வாசிப்பும் உழைப்பும் என்னைப் பிரமிக்க வைக்கின்றது.

சூதாட்டம் நடக்கவிருக்கின்ற பகுதி

சின்ன சகுனி என்கிறான் பாரதி என்று கூறிய வ வே சு அவர்கள், பாரதிக்கு, சகுனி மீது மிகுந்த பிரியம் என்பார். அதனால்தான் அவனுக்கு பல அடை மொழிகள் – புலைநடை சகுனி, பொய்யுரை சகுனி என்கிறான் பாரதி.  இங்கே சின்ன சகுனி என்றால் சின்ன புத்தி உள்ள சகுனி என்று அர்த்தம் .

அதேபோல எல்லாவற்றையும் இழந்த தர்மன் தன்னை மறந்தவன் அதனால் தன்னைத்தான் வைக்கிறான் என்கிறான் இங்கே தான் தன்னை உணரும்  ஞானம் மறந்து விட்டது . மூலத்தில் வியாச பாரதத்தில் இல்லாததை பாரதி அவனுடைய உணர்வுகளை வைத்து பாடுகிறான் என்பார் வவேசு.

நாடு, நகரம், தம்பிகள் எல்லாம் இழந்து தன்னையும் இழந்து நிற்கிறான் தர்மன்.  ஆண்டான், அடிமை இவர்கள் இருவரும் ஆட முடியாது என்பது சூதாட்டத்தின் விதி. அப்படி என்றால் பாஞ்சாலியை தருமன் எப்படி பணயம் வைப்பான் என்று எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் இருந்தபோது சகுனி சதி செய்கிறான்.

தர்மம் அதர்மத்துக்கு எதிராக தோற்றுப் போகிறது என்றாலும் சகுனியும் கர்ணனும் கூறும் வார்த்தைகள் –  பொழுதுபோக்கு தானே சூது. இதில் அழுதல் எதற்கு என்கிறாரகள்.

இன்னும் பணயம் பாக்கியிருக்கின்றது . தர்மனிடம் பாஞ்சாலியினுடைய அதிர்ஷ்டம் என்று கூறி ஒருவேளை நீ அவளை பணயம் வைத்தால் உனக்கு இழந்ததெல்லாம் கிடைக்கும் என்றெல்லாம் அவனை ஏற்றி விடுகிறான்.

ஒளிமின்னும் அமுதம் போன்றவள் அந்த தேவியை வைத்து விட்டால் உனக்கு மீண்டும் இழந்தவையல்லாம்  கிடைக்கும் என்கிறான் .இந்த வார்த்தைகள் பற்றி சொல்லும் போது மிக அருமையாக ஒரு உதாரணத்தை வவேசு சொல்வார்கள்.

அதாவது தன் மனைவியை அழகை வனப்பை சிறப்பை தானே சொல்லி பணயம் வைப்பது என்பது ஒரு நல்ல கணவனுக்கு அழகாகாது. நல்ல கணவனால் அப்படிச் செய்யவும் முடியாது.  ஆகவே அந்த பொறுப்பை பாரதி எடுத்துக் கொள்கிறான் என்பார். ஆனால் சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் மாசறு பொன்னே என்ற பாடலில் கண்ணகியை கோவலன் வர்ணிக்கிறான்

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மடமகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
இங்கே கவிஞன் பாராட்டவில்லை கணவனே பாராட்டுகிறான் .

ஆனால் இங்கே கணவன் பாராட்டவில்லை கவிஞன் பாரதி பாராட்டுகிறான். இந்த அற்புதமான விளக்கம் என் மனதிலேயே இன்னும் இருக்கின்றது

பாவியர் சபைதனிலே, – புகழ்ப்
பாஞ்சால நாட்டினர் தவப்பயனை,
ஆவியில் இனியவளை, – உயிர்த்
.தணிசுமந் துலவிடு செய்யமுதை,
ஓவியம் நிகர்த்தவளை, – அரு
.ளொளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்
தேவியை, நிலத் திருவை, – எங்குந்
.தேடினுங…

9. இந்திரநீலன் சுரேஷ்

அனைவரின் பெருமதிப்பைப் பெற்ற ஆசான் வ.வே.சு அவர்களின் ‘மகாகவியின் மந்திரச் சொற்கள்’ நிகழ்ச்சி, 250’ஆவது அத்தியாயம் என்கிற மைல்கல்லைக் கடப்பது இதயத்திற்கு மகிழ்வை அள்ளித் தருகிறது.

ஒரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழுமம் செய்ய வேண்டிய அசாத்தியமான பணியை, தனி ஒருவராக செய்திருக்கிறார், வ.வே.சு அவர்கள்.

எனது கற்பனையில் மகாகவி இப்போது உயிரோடு இருந்தால், திருவல்லிக்கேணி வீதிகளில் வ.வே.சு அவர்களின் தோளில் கை போட்டபடி, தனது கவிதைகளுக்கு வ.வே.சு அவர்கள் சொல்லும் உட்பொருள் நுணுக்கங்களைக் கேட்டு, ஆஹா’காரம் போட்டபடி நடந்து கொண்டிருப்பார், பாரதி.

நாமும் நடைப்பயிற்சி செய்யும்பொழுது மகாகவியின் மந்திரச் சொற்கள் பதிவை கேட்போமானால், பேராசிரியர் வ.வே.சு அவர்களும் நம்முடன் பேசியபடி நடப்பதை உணர முடியும். அப்படிப்பட்ட அன்யோன்யமான உரைகள் இவை.

பேராசிரியர் வ.வே.சு அவர்களின் தேன் போன்ற விளக்கங்களை, குவிகம் மூலம் நமக்கு வழங்கிய சுந்தர்ராஜன், கிருபானந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இந்த 250 மணி நேர பொக்கிஷமான காணொளிகளைப் பல காலம் காக்க வேண்டிய கடமை உள்ளது. காற்றோடு கலந்து விடாமல், எக்காலத்திற்கும் பயன்படும்வண்ணம் சரியான ஒரு கணினி சர்வரில் (SERVER), இவைகள் சென்று அமர வேண்டும் என்பது நம் அவா.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் உரைபோல, பாரதியின் வரிகள் தோற்றுவித்த எண்ணங்களின் செறிவுகளை வண்ணம் தீட்டி, ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல சொல்லி, மந்திரமாக நம்மை கட்டி வைத்திருக்கிறார் வ.வே.சு அவர்கள்.

அவருக்கு நீண்ட ஆயுளைத் தந்து, தொடர்ந்து பாரதியின் படைப்புகளை பகுப்பாய்வு செய்து, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அளிக்க இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி 🙏

 

10. ஸ்ரீராம்

பள்ளியில் பாட புத்தகங்கள் வாங்கும்போதே கோனார் உரையும் வாங்கிவிடுவேன். அப்படிப்பட்ட என் போன்றவர்களுக்கு வ.வே.சு. ஆசானாக கூட்டி எழுதிய பாரதியின் புலமை வரிகளை பிரித்து தொகுத்து, ஒரு தடவைக்கு இரு தடவை படித்து பொருளையும் விளக்கி மனதில் பதிய வைப்பது தனிச்சிறப்பு.

பாரதியின் படைப்புகளில் ஒரு வார்த்தை கூட வீணானது கிடையாது. அந்த பொக்கிஷங்களை நமக்கெல்லாம் பகிர்ந்தளித்தமைக்கு அதுவும் 250 கணக்கில் போய்கொண்டிருக்கும் புதன் மாலை நிகழ்வுகள் எப்பேர்பட்ட குவியம் இயக்கத்தின் படைப்பு.

வ வே சு ஆரம்பிக்கும் பாரதியின் வாணி துதியின் ஒவ்வொரு வாக்கியமும் அவர் பாடுவது மட்டுமில்லாமல் அதை நடைமுறையில் கடை பிடிக்கவும் செய்கிறார்.

தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல
காட்டல் கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல்இங் கிவையெல்லாம் நீயருளும் தொழில்க ளன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணீ, அடியனேற்
கிவையனைத்தும் உதவு வாயே.”

வாழ்க வ வே சு வின் தொண்டு!

11. C P வாசுதேவன் :  

எனது பார்வை: 

After a very long time, I found time to sit and listen to the talk by VVS this morning. As VVS is well aware, my thoughts tend to be somewhat different at times which he often encourages in the forum.

Sathyam vadha; Dharmam Chara are the parting advice of the Guru to the students in Sikshavalli of Taittriya Upanishad. The vedas given by God and preexisted in space, one of the pancha Budhas (வேத வானில் விளங்கி) were later pulled as sound by the Maharishis due to their power from intense thapas and then spread in all directions (திசையெலாம் ஓத) by daily repetitive chanting as an oral tradition(நித்தம் இடித்து முழங்கியே) for the benefit of humanity. (These lines are in praise of the great rishis)

To stop people from living their life like animals in eating,sleeing and eventually dying in the never ending life cycle or Samsara (உண்ணும் சாதிக்கு உறக்கமும், சாவுமே நண்ணுறாவணம் )

Note: As VVS mentioned, deep sleep is tantamount to death as body,senses, mind, and ahamkara(Mind + chithapasa) are dormant in sleep and in death these depart leaving behind the body. In deep sleep, consciousness Chith) alone is present and called Sakshi or witness that allows us to say that we had a good dreamless sleep the next morning).

Rest of the stanza is in praise of and prayers to Srikrishna, his graceful showers of suggestions for a life of goodness in the form of Gita, that enriched the great land of ours and remains as ever-present rain clouds to help make the right decisions in one’s life at anytime.(Explained beautifully by VVS).

12. ரவிச்சந்தர் : 

Va ve su
ஒரு(பழைய )கற்பக பழக் கடைக் காரர். களாப் பழத்தில் இருந்து, பலாப்பழம் வரை, வரும் வாடிக்கையாளர் சுவைக்கு ஏற்றவாறு , தரம் மிக்க, ருசியான வகையில், அதனை, திருத்தி, கண்களுக்கு விருந்தாக்கி (நம் காதுக்கு ரசமாய் )பாரதியி ன் கவிப்பழங்களை , ஊட்டுவார்,

நாம் அந்த சந்திப்பின் முடிவில், மனம் நிறைந்து, உளம் மகிழ்ந்து, புதிய அறிதலுடன் வீடு செல்வோம்.

மீண்டும், மீண்டும் பாரதிப் பழக்கடைக்கு, புதன் அன்று

வா வே!! என்று, அழைக்கும் (சு,)ப்பிரமணியன் வாழ்க!

வளர்க நும் படைப்புகள்!

ஓங்குக நும் கொற்றம்!

பின் குறிப்பு
எங்கள் விவேகானந்தர் கல்லூரி நாட்கள் பசுமையானவை.

அந்த வா வே சு இன்று இலக்கிய ஆல் ஆகி, பாரதி விழுதுகள் இறக்கி,ரசிகர் படை தங்கி ,இளைப்பாரும் நிழல் தருவாய், மாறியது கண்டு,மிக்க களிப்பு எய்தும் நண்பன் நான்.

13.  சுரேஷ் (சஞ்சயன்) 

ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ?’

கரும்பாகக் கொடுத்தாலும் ருசி பேதம் உண்டென்று சாறாகப் பிழிந்து சர்க்கரையாய் மாற்றிப் பிரதி புதன் கிழமை மாலை என 250 வாரங்கள் ( அன்பார்ந்த அறிவார்ந்த கடும் உழைப்பைப் பின்னணியில் கொண்ட உரைகள்) அள்ளித் தந்திருக்கிறார் ஆசான் வ.வே.சு. அவர்கள். அந்த சர்க்கரைக்
குவியலில் அள்ளி எடுத்த ஒவ்வொரு பிடியும் அதே ருசி.

சில துளிகள்..
‘உபநிஷத் எழுதுவதில் இருந்து பல்லக்கு தூக்கும் வரை எல்லாத் தொழில்களையும் தெய்வீகமாகச் செய்யலாம்.’

‘ராஜ்ய பரிபாலனம் செய்தாலும் செருப்புத் தைத்தாலும் தெய்வீகம் தோன்றும் படிச் செய்வது கர்மயோகம்’

‘உள்ளும் புறமுமாய்
உள்ளதெலாம் தானாகும்
வெள்ளமொன்றுண்டாமதனைத்
தெய்வமென்பார் வேதியரே’

 

உபநிடதங்களில் மகா வாக்கியங்கள் (தத்வமஸி போன்றவை) காணக் கிடைக்கின்றன. தேசோபநிஷத் என்று கவியோகியால் புகழப்பட்ட பாரதியின் வரிகள் ஒவ்வொன்றுமே மகா வாக்கியம்தான்., குறிப்பாக பரசிவ வெள்ளம் 24 கன்னிகளுமே 24 மகா வாக்கியங்களாகக் கருதலாம்.

எது தெய்வம் என்று நம்மோடு தேடியவன் தூணிலும் துரும்பிலும் விண்ணிலும் மண்ணிலும் கீழான பன்றியிலும் கூளத்திலும் மலத்திலும் எழுதுகோலிலும் எழுத்திலும் என்றெல்லாம் கண்டு விளக்கியவன் போதாதென்று பரசிவ வெள்ளத்தையே மடை திறந்து விட்டிருக்கிறான்.

கண்டவர் விண்டிலர் என்ற கூற்று எனக்கு உடன்பாடே இல்லை. ஆதிசங்கரர் முதல் மோனகுரு ரமணர் ஈற்றான ஞானிகள் அனைவருமே தாம் கண்டவற்றை விரித்துரைத்தே சென்றிருக்கிறார்கள் என காண்கிறோம்.
கிணறு பரிதி குட்டி சுவர் என்று குள்ளச்சாமி சுட்டிக்காட்டியதன் பொருளை உள்வாங்கிய பாரதி நமக்கும் விரித்துரைக்கிறான். கோவிந்தசாமியிடம் தான் பெற்ற உபதேசத்தை கேளப்பா சீடனே என்று ஒளிவு மறைவின்றி நமக்குத் தெரிவிக்கிறான். இதே பணியை பாரதியின் நேர்மையில் சற்றும் குறையாது அவனது ஆன்மாவாக மனசாட்சியாக விளங்கும் நல்லாசான் வ.வே.சு. அவர்கள் தான் பாரதியிடம் பெற்ற ஞானத்தை நம்மோடு பகிர்ந்து வருகிறார்.
எலிவால் நுழைந்தது என்று அமர்ந்திருக்கும் என்போன்ற மாணவர்க்கும் எளிதாய் நுழைத்து விட அதற்காக அரும்பாடு பட்டிருக்கிறார்

‘வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை’

எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று உளமாரப் பிரார்த்திக்கிறேன்

14. 

Bharathi Rathna VA VE SU and Kuvikam team… We must be thankful to you for such an amazing incredible EXPERIENCE and learning opportunity. Words fail. But our heart beats reverberate with gratitude. Merely saying thanks will not suffice. Always with you. God bless

Kindly greet and bless us by continuing this. You talk not only about Bharathi but educate us on other greats such as Thiruvalluvar, Avvaiyar, Sangam literature, Ilango, Bhakti ilakkiyam Devaaram,Thiruvaasagam, Divya prabhandam ,Kambar Ramayanam , Mahabharatam,Vedas, Upanishads, Idhigasam ,Puranam ,Saiva siddhantam, Thirumoolar ,AdiShankarar Advaita, Arunagirinathar, KumaragurubararPattinatthar, Thayumanavar, Abhirami Bhattar,Ramalinga Adigalar and countless Bharathi contemporaries,followers…. The respect you show for Prof Naganadhi is a lesson in itself. And your contemporary Bharathi Bhakts …. The list is endless. But fortunately brain has infinite storage capacity and we will lap it up everything you serve. May be this is designed to be our road to salvation. God bless

15. சங்கர ஐயர் :

பாரதியின் சொற்களை இவ்வாறு 12 வாரங்களில் அகல உழுவதைவிட, ஆழ உழுவதே மேலென்று நான் கூறியதின் விளைவு இந்த 250+ வாரங்களின் தொடர்ச்சி.

 

 

 

 

16. சாய் கணேசன் : 

அனைவருக்கும் வணக்கம்.

மகாகவியின் மந்திரச்சொற்கள் நிகழ்ச்சியிலிருந்து நான் ’கற்றதும் பெற்றதும்’ என்ற தலைப்பிலே பேச அழைத்திருக்கிறீர்கள். அதற்காகக் குவிகம் இரட்டையர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலில் எனது பணிவான வணக்கத்தினை வ வே சு ஐயா அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

250 வாரங்களிலிருந்து எந்தப் பாடலைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் மிகவும் ரசித்த நிகழ்ச்சி – 47 வது வாரம் மார்ச் 30,2022 அன்று நடைபெற்ற ஐந்து புதிய ஆத்திசூடி பாடல்கள் பற்றிய ஐயாவின் விளக்க உரை. ஐந்து பாடல்களையும் அருமையாக வரிசைப்படுத்தி உரையாற்றிஇருப்பார்.

முதலில் ‘மானம் போற்று ‘என்ற பாடலை விளக்குகையில்  மானம் என்பதற்குப் பரிமேலழகர் கொடுத்த வரையறையான ‘குடிப்பிறந்தார்க்கு வேண்டிய நற்குணமாம் மானம். எப்போதும் தன்னிலை தாழாமலும் தாழ்ந்துவிடின் உயிர்வாழாமலும் இருக்கும் நிலை.’ என்பதை அருமையாகச் சொல்லியிருப்பார்.

‘மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’

என்ற திருக்குறளில் ‘கவரிமான்’ என்று கூறுதல் தவறு.. கவரிமா என்பதே சரி. அது குளிர் பிரதேசங்களில் வசிக்கும் விலங்கைக் குறிக்கும். அவ்விலங்கின் உரோமங்கள் உதிர்ந்துவிட்டால் குளிர் தாங்காமல் இயற்கையாகவே அது இறந்துவிடும். அதுபோல மானத்திற்கு சிறு இழுக்கு வந்துவிட்டாலும் குடிப்பிறந்தோர் மரணம் இயற்கையாக நிகழும் என்று பொருள் கூறியிருப்பார். இதற்கு உதாரணமாகச் சிலப்பதிகாரத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியனைக் காட்டியிருப்பார்.          

  உணர்ச்சிக்கும் மதிப்பீட்டிற்கும் இடையில் ஒரு திரை போல இருப்பது மானம். என்ற வரையறையைப் பல உதாரணங்களுடன் விளக்கியிருப்பார் நம் ஆசான்.

‘மானம் போற்று’ என்பதற்குத் தன்மானம் போற்றுதல்,  தன்மானம் போற்றுபவர்களைப் போற்றுதல், பிறரின் மானத்தைக் காப்பவர்களைப் போற்றுதல் என மூன்று விதங்களில் பொருள் கொள்ளலாம் என்று பல உதாரணங்களுடன், நகைச்சுவையும் சேர்த்து, விளக்கியிருப்பார் ஆசிரியர்.

‘ஞானத்திலே – பர மோனத்திலே – உயர் மானத்திலே’ என்ற பாடலைச் சுட்டிக்காட்டி, பாரதியார் மானத்தை எந்த உயர் நிலையில் வைத்துள்ளார் என்பதை நன்றாக விவரித்திருப்பார், வ வே சு ஐயா.     

 

இரண்டாவதாக,’சூரரைப் போற்று’ என்ற பாடலுக்கு ‘சாதனை செய்யும் வீரரே சூரர்’ என்று கூறியிருப்பார்; பாரதியார் போற்றிய தாயுமானவர், பட்டினத்தார் , திலகர் என அனைவருமே நாட்டின் அல்லது குலத்தின் மானம் போற்றிய சூரர்கள்தான் என விளக்கியிருப்பார் ஆசிரியர்.

மூன்றவதாக, ‘சோதிடம் தன்னை இகழ்’ என்ற பாடலில் சோதிடம் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லாத கிளி ஜோசியம் போன்றவற்றையே சாடுகிறார் பாரதியார். அதே வேளையில், பாஸ்கரா போன்ற வான அறிஞர்களைப் போற்றுகின்றார், என்கிறார் வ வே சு அவர்கள். மேலும், நல்ல காரியங்கள் செய்வதற்குச் சோம்பல் கொண்டு அதை நேரம் சரியில்லை என்று சோதிடத்தின் மீது பழியைப் போடும் தன்மையையும் பாரதியார் கண்டிப்பதாகவும்  அவர் பொருள் சொல்வது ரசிக்கத் தகுந்தது.

நான்காவதாக, ‘ஞிமிரென இன்புறு’ என்ற பாடலில் ‘ஞிமிறு’ என்றால் வண்டு என்று பொருள் – நான்கறிவுபடைத்த பூச்சியினங்கள் என்றும் கொள்ளலாம் என்று சொல்லி தேனீ எவ்வளவு சந்தோஷமாகப் பறக்கிறது;பறந்துகொண்டே ரீங்காரமிட்டுத் தன் மகிழ்ச்சியை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது என்பதை இனிமையாக விளக்குவார் ஆசிரியர்.

குறுந்தொகைப் பாடலான ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ சொல்வதுபோல சிறந்த தேனைத் தேர்ந்தெடுத்து இன்புறுகின்ற தேனீ மகரந்தசேர்க்கைக்கும் துணைசெய்கிறது.

என்னதான் சுதந்திரமாகப் பறந்தாலும் தேனீ ‘ராணித்தேனீ’ என்னும் தன் தலைவனைப் பின்பற்றி வழிநடக்கிறது. இந்த நல்ல குணங்களை நாமும் பெற்று இன்புற வேண்டும் என்பதை அற்புதமாக விளக்கியிருப்பார் வ வே சு அவர்கள்.

வண்டைக் குறித்து பாரதியார் பாடிய ‘பலாவின் கனிச்சுவை வண்டியில் ஒருவண்டு பாடுவதும் வியப்போ?’ மற்றும் ‘காலமாம் வனத்தில்’ என்ற பாடல்களை மேற்கோள்காட்டி விவரிப்பார் ஆசிரியர்.      . 

வ வே சு அவர்களின் சிறப்பான வர்ணனையைக் கேட்ட அன்றே நான் பாதி எழுதிவைத்திருந்த ஒரு பாடலின் மீதிப் பகுதியை எழுதிவிட்டேன். அதன் காணொளியைத் தனியாக வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டிருக்கிறேன். கேட்டு இன்புறுங்கள்.

ஐந்தாவதாக ‘ஞெகிழ்வது அருளின்’ என்ற பாடலில் தொடர்புடையவர் மேல் செலுத்துவது அன்பு; தொடர்பில்லாதவர் மேல் செலுத்துவது அருள் என்ற வரையறையைச் சுட்டி, இறையருள் இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு அருள் கிடைக்கும். அப்போது அவன் தெய்வமாக மாறி விடுகிறான் என்ற கருத்தை அற்புதமாகச் சொல்லியிருப்பார் ஆசிரியர். 

மேற்கோளாகக் கண்ணதாசனின் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ‘ என்ற பாடலை அவர்  சுட்டிக் காட்டுவது சிறப்பு.

   ‘மகாகவியின் மந்திரச் சொற்கள்’ போன்ற அற்புதமான நிகழ்ச்சிகள் நடப்பதும் அதில் பங்குபெறுவதும் இறையருள் இருந்தால் மட்டுமே நிகழும் என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். 250 வாரங்கள் அற்புதமாகப் பேசி சாதனை படைத்த வ வே சு ஐயா அவர்களும் ஒரு சூரர் தானே?

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் அந்த சூரரைப் போற்றுவோம்! அவரின் உரைகளைக் கேட்டு, பலாவின் கனிச்சுவை வண்டியை வட்டமிடும் ஞிமிறென நாமும் இன்புறுவோம்!

இந்த வாய்ப்பினை வழங்கிய குவிகம் அமைப்பாளர்களுக்கும் வ வே சு ஐயா அவர்களுக்கும் மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம்.

17. துரை தனபாலன் :

 

 நூறாண்டு வாழ்க வவேசு ஆசான்!

 

மந்திரச்சொல் சிந்தியதோர் மாகவியின் மாண்பை

தன்திறத்தால் எடுத்துரைக்கும் தகைசால்வ வேசு

ஆசானின் அருமைகளை அழகான தமிழில்

பேசாத நாளெல்லாம் பிழையான நாளே!

 

அணியணியாய் அருங்கவிஞன் ஆக்கிவைத்த தெல்லாம்

மணிமணியாய்க் கூறிநமை மயக்குமவர் ஆற்றல்!

தனித்தனியாய்ச் சிறப்புகளைத் தானெடுத்துச் சொல்வார்

கனிகனியாய்ச் சாறெடுத்துக் கனிவுடனே தருவார்!

 

சொல்நயமும் பொருள்நயமும் சுவைபடவே கூறி

துள்ளுகின்ற ஓசைநயம் துடிப்புடனே கொடுப்பார்!

விள்ளுகின்ற அவர்குரலில் வீணைஒலி கொஞ்சும்

எள்ளுகின்ற நகைச்சுவைக்கும் இருக்காது பஞ்சம்!

 

கவிதைக்கு விளக்கமெனக் கட்டுரையை எடுப்பார்

கட்டுரைக்குத் துணையாகத் திருக்குறளைத் தொடுப்பார்!

புவிபோற்றும் ஆன்மிகப் பொன்மொழிகள் கோர்ப்பார்

போற்றுகின்ற வேதநெறி புலப்படவே சேர்ப்பார்!

 

பழங்கால இலக்கியத்தில் பலசான்று காட்டி

அழகாக அறிவியலும் ஆங்கிலமும் கூட்டி

விளங்காத தத்துவமும் விளங்கிடவே உரைப்பார்

வீரக்கவி பாடற்சுவை விருந்தெனவே படைப்பார்!

 

பாரதியின் எழுத்தெல்லாம் அவர்கூற வேண்டும்  

பேரறிவு பெற்றிடவே நாம்கேட்க வேண்டும்!

கூரான்ற அறிவாளர் குறையொன்றும் இன்றி

நூறாண்டு நிறைவாழ்வு சீராக வாழ்க!

18.  குவிகம் சுந்தரராஜன் 

அனைவருக்கும் வணக்கம்.

மஹாகவியின் மந்திரச் சொற்கள் என்ற வரிசையில்.நமது மதிப்பிற்குரிய குருநாதர் வ வே சு அவர்கள். ஒவ்வொரு புதன்கிழமையும். ஒரு மணி நேரம் ஜூம் மூலம் பாரதியின் மகத்துவத்தை. அவரது பாடல்கள் மூலம் நமக்கு விளக்கிக் கூறிக்கொண்டு வருகிறார்.
பாரதி என்ற மகா கடலில். மூழ்கி முத்தெடுத்து. அந்த முத்தினை அழகான மாலையாக கோர்த்து நமக்கு வாராவாரம் வழங்கிக்கொண்டு வருபவர் வ வே சு என்றால் அது உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.
இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த விதத்தைப் பற்றி நான் ஒரு வார்த்தைகள் சொல்ல வேண்டும். குவிகம் அளவலாவலில் பாரதியின் குயில் பாட்டுப் பற்றி. 1 மணி நேரத்தில். பகிர்ந்து கொள்ளும்படி அவரை அன்புடன் வேண்டிக் கொண்டோம்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் ராஜாராமன் அவர்கள் பாரதியின் ஞான ரதம் மற்றும் பாரதியின் மற்றப் பாடல்களையும் வ வே சு அவர்கள் தொகுத்து ஒரு தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

கிருபானந்தனும் நானும் வ வே சு அவர்களிடம் இந்த எண்ணத்தைக் கூறியதும் வ வே சு அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். அவரே அதற்கு மகா கவியின் மந்திரச் சொற்கள் என்ற தலைப்பையும் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு புதன் கிழமையன்றும் ஜூம் இணையவெளி அரங்கில் ஒரு மணி நேரம் பாரதி அன்பர்களுக்கு விருந்து படைக்க உறுதி பூண்டார்.

12 மே 2021 அன்று சங்கீதா கலாநிதி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் வாழ்த்துரை வழங்க நூற்றுக்கும் மேற்பட்டவர் கலந்துகொள்ள குதூகலமாகத் துவங்கியது மகா கவியின் மந்திரச் சொற்கள் என்ற நிகழ்வு. பாரதியின் மகோன்னதப் படைப்பான பாஞ்சாலி சபதம் காப்பியத்தை முதலில் ஆரம்பித்தார். பின்னர் கண்ணன் பாடல்கள், புதிய ஆத்தி சூடி, குயில் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை, பாரதி சுயசரிதை, பாரதி 66, ஞானப் பாடல்கள், சக்திப் பாடல்கள், காளிப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என்று பல பாடல்களை படிப் படியாக நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் வ வே சு அவர்கள்.

பாரதியின் எல்லா பரிமாணங்களையும் பாடலின் பொருளையும் சொல்லின் சிறப்பையும் அதற்கு பாரதி கட்டுரைகளிலிருந்தே அகச் சான்றுகளையும் வள்ளுவர் கம்பர், வேதங்கள் உபனிஷத்துக்கள் மற்றும் எண்ணற்ற தனிப்பாடல்களில் இருந்து புறச் சான்றுகளையும் தந்து வ வே சு அவர்கள் தனக்கே உரிய ஜனரஞ்சக பாணியில் இனிமையான குரலில் விளக்க விளக்க இந்தத் தொடர் எத்தனை ஆண்டுகளானும் தொடரட்டும் என்று விரும்பினோம்.

அதன்படி இப்போது 250 வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது மகா கவியின் மந்திரச் சொற்கள் நிகழ்வு. வ வே சு அவர்கள். முன்னே செல்ல அவரைத் தொடர்ந்து நாமும். பாரதின் அடிச்சுவட்டில் பயணித்து வருகிறோம்.
அவர் மூலம் நாம் பெற்ற இலக்கியப் புதையல் எத்தனை என்று எண்ணிலிட்டால் அது கணக்கிலடங்காது.

பாரதி இவர் உரையைக் கேட்டிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்.

தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியவர்
எனதருமை சீடர் வ வே சு என்றுரைப்பேன்.
இவரைப் போல என் கவியை ஓதிப் புகழ்வாரை
வேறெங்கும் காண்பேனா யான் ?

கண்ணையினி தென்றுரைப்பார்;கண்ணுக்குக் கண்ணாகி
விண்ணை அளக்கும் இவர் உரை கேட்போருக்கு இன்பமன்றோ?

மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
விரியுமொளி இவர் உரை என்பேன்!

என்று பாரதியே கூறியிருப்பார். .

வ வே சு அவர்கள். ஆயிரக்கணக்கான கவியரங்குகளில்.இலக்கிய மேடையில் பட்டி மன்றங்களில், பக்தி மண்டபங்களில் , வழக்காடு மன்றங்களில் இசை அரங்குகளில் நாடக மேடைகளில் வினாடி வினாக்களில், ஆன்மீக அரங்குகளில், பங்கு பெற்றவர். இப்படி எங்கெல்லாம் இலக்கியமேடை இருக்கிறதோ அங்கெல்லாம் கோலோச்சிய அவர் குவிகத்திற்கு

எங்கிருந்தோ வந்தார் வ வே சு நான் என்றார்.
இங்கவரை. யாம் பெறவே. என்ன தவம் செய்துவிட்டோம்.

பற்று மிகுந்துவர பார்க்கின்றோம். வ வேசு வால்.
பெற்று வரும் தமிழின்பம். பேசி முடியாது.
சொன்னதெல்லாம் கேட்பார். பாடங்கள் நடத்திடுவார்.
சின்ன குழந்தைக்கும். புரியும்படி. நன்றாக. விளக்கிடுவார் .

கண்ணின் இமையிரண்டும் மூடாமல். அவருரையை.
வண்ணமுற கேட்கின்றோம். குவிகத்தில் நாமெல்லாம்
நண்பராய். மந்திரியாய். நல்லாசிரியாராய். பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே தோழராய்.

எங்கிருந்தோ வந்தார் வ வே சு நான் என்றார்.
இங்கவரை. யாம் பெறவே. என்ன தவம் செய்துவிட்டோம்.

சொல்லியதை சொன்னபடி. சொன்னவரும் அவரே.
சொல்லாத சொல்லுக்கு பொருள் தேடித் தந்தவரும் அவரே! .

புதனன்று கூடும் பாரதி அன்பர்கள் ஓட்டுமொத்தமாகக் கூறி வருகின்றனர்:

வ வே சு என்று ஒருவர் வந்தார் அப்பா.
அவர் புகழை. வாயினால் சொல்லிடவும். அடங்காதப்பா.

நாம் செய்த பேற்றாலே குருவாக வ வே சு வந்தார்.
ஞானம் புகழ் அனைத்தும் பெற்றோம் நாம்

யார்க்கும் எளியனாய். யார்க்கும் வலியனாய்.
யார்க்கும் அன்பனாய். யார்க்கும் இனியவனாய்.
வந்தார் நம் வ வே சு . சொல்லின்செல்வரும் அவரே.
விண்டுரைக்க. அறிய அரியதான திறமை நம் குருநாதரின் புகழ்

தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல் என்பதற்கு இணங்க நம் குரு வ வே சு அவர்களின் சிறப்பு அவர் ஒவ்வொரு வாரமும் துவங்கும் பாரதியின் வரிகளில் அடங்கும்.

தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப்பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல்
இங்கிவையெல்லாம் வ வே சு சார்!
நீங்கள் குவிகம் அன்பர்களுக்கு வாரா வாரம்
வழங்கும் அருளுரையின் பொருளுரை அன்றோ?

இவருக்குத் தொழில் பேச்சு நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

கதைகள் சொல்லி. கவிதை எழுதுவார்
காவியம் பல நீண்டன. கட்டுவார்
விதவிதப்படு மக்களின் சித்திரம் மேவி
நாடகச் செய்யுளை வேவுவார்

ஓர் வார்த்தை
கற்ற நம் நண்பர்களுக்குச் சொல்வேன்,
கவிதைக் கனிபிழிந்த சாற்றினிலே,
பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி
அதனோடே இன்னமுதைத் தான் கலந்து,
குவிகம் எனும் மேடையிலே காயவைத்த கட்டியினால்
வகுத்தவை நம் குரு வ வே சு வின் சொல்லோவியங்கள்

அவைதான் மகா கவியின் மந்திரச் சொற்கள்

இங்கவரை. யாம் பெறவே. என்ன தவம் செய்துவிட்டோம்
என்ன தவம் செய்துவிட்டோம்

 

 


கேள்வி: எதனைக் கண்டான் மதம் தனைப் படைத்தான்?