புதுமைப் பித்தன் சிறுகதை வாசிப்பு! 

Image of Pudhumaipithan: He led a life of penury, left a legacy of plenty | Chennai News - Times of India

வாழ்க்கை:

சிறுகதைகளுக்குப் புது வடிவமும், களங்களும் அமைத்து வித்தியாசமான கருத்துக்களைச் சொல்லியவர் புதுமைப்பித்தன். தன் கதைகளில் ஏதாவது ஒரு பாத்திரம் மூலம் தன் கருத்துக்களை சமூகத்துக்குச் சொல்வதில் வல்லவர். 

      “பேனாவை வைத்துக்கொண்டு கோனாகி விடுவோம் என்று அவர் ஒரு நாளும் கனவு காணவில்லை; ஆனால், பேனாவை வைத்துக்கொண்டு பிச்சையெடுக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை” – ‘கடிதம்’ கதையில் புதுமைப் பித்தன்.

‘வாழ்க்கை’ கதை ஒரு நாடோடியைச் சுற்றிச் செல்கிறது.  அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசத்திற்கு நடந்து செல்லும் நாடோடி, பிச்சைக்காரன் அல்ல ! “கைகளும் கண்களும் அவன் வயிற்றுக்காகத் திரியும் நாடோடியல்ல என்பதைக் காண்பித்தன” என்று குறிப்பிடுவதிலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.

“மூட்டையை எடுத்து மரத்தடியில் வைத்து, பக்கத்தில் தடியைச் சாத்திவிட்டு உட்கார்ந்து, முழங்காலையும், குதிரைச் சதையையும் தடவிக்கொண்டு, ‘அப்பாடா’ என்று சாய்ந்து கொண்டான்” என்று சொல்வது, அவரது சுவாரஸ்யமான நடைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு!

கல்லடக்குறிச்சி பெரிய அய்யரோட இரட்டை மாட்டு வண்டி, காலியாக வருகிறது. வண்டியில் யாருமில்லாததால், வண்டிக்காரன் பாடிக்கொண்டு வருகிறானாம்! அவன் அனுமதியுடன், நாடோடி வண்டியில் பாபநாசம் வரை பயணம் செய்கிறான். இறங்கும் போது, வண்டிக்காரனுக்கு ஓரணா கொடுக்கிறான்!

“பட்டும் சரிகையுமாக் கட்டற சாமியார், மற்றும் அய்ய மாரும், அம்மாமாரும் “ ஊருக்கு வந்திருப்பதை வண்டிக்காரன் சொல்கிறான். வண்டியிலிருக்கும் ‘தியாசபி’ புஸ்தகங்கள், வந்திருப்பவர் யார் என விளக்கிவிட்டன – நாடோடி இதனை ஒரு அலட்சிய பாவத்துடன் சொல்கிறான்.

“ஆசை, இலட்சியம், நீதி, தர்மம், காதல் என எதுவுமே வாழ்க்கையை நடத்தவில்லை. மரணம் ஒன்றுதான் நிஜமானது” என்ற ரீதியில் யோசித்த வண்ணம் வண்டியில் செல்கிறான் நாடோடி. சமூகத்தைப் பற்றிய ஒரு கரிசனத்துடன் கூடிய விமர்சனப் பார்வை அவனுக்கு இருக்கிறது. “அந்தப் பயல் ஜட்ஜ்மெண்ட் சொன்ன மாதிரிதான் …….. பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம். ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், ‘குற்றம் செய்கிறாய்!’ என்று தண்டிக்க வருகிறது. இதுதான் சமூகம் என்கிறான் – “அசட்டுச் சமூகத்திற்கேற்ற அசட்டுப் பித்தலாட்டங்கள்” என்கிறார் நாடோடியின் குரலில் புதுமைப் பித்தன்.

சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சாடும் வகையில் இருந்தாலும், புதுமைப் பித்தனின் தனிப்பட்ட அனுபவமும், அவரது எழுத்துக்களுக்குக் காரணமாக இருக்கின்றன. சில கதைகளின் பாத்திரங்களினூடே நாம் அவரைக் காணமுடியும். இந்தக் கதையில், நாடோடியே அவர்தானோ என்னும் எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை!

முதலாளிக்குத் தெரிவதற்கு முன், நாடோடியை இறக்கி விட்டுவிடுகிறான் வண்டிக்காரன். இறங்கி, இட்லிக் கடையில் ஓரணாவுக்கு இட்லி வாங்கிக்கொண்டு, பாபநாசம் போகும் வழியில் இருக்கும் மண்டபம் செல்கிறான் நாடோடி.

மண்டபத்தில் ‘தியாசபி’ (பிரம்மஞான) கோஷ்டிக்குப் பெரிய அய்யர் கொடுக்கும் விருந்து நடக்கிறது – சமயம், அரசியல் முதல் நேற்று செய்த சமையல் வரை சம்பாஷணையில் அடிபடுகிறது. சுவாமிஜி பேசுவதையும், மற்றவர்கள் தங்களுக்குள் உரையாடுவதையும், மேட்டுக்குடி மக்களின் குண நலன்களாக எள்ளலுடன்சொல்கிறார் புதுமைப் பித்தன்.

குளுவ சாதிக் குடும்பம் ஒன்று, அங்கிருக்கும் மரத்தடியிக் குடும்பம் நடத்துகிறது. அக்குடும்பத்துக் குழந்தை ஒன்று, நாடோடியிடம் பிச்சை கேட்கிறது.  “பிறக்கும் போதே பிச்சையா?” என்கிறான் நாடோடி!

“பேதங்கள் தோல் ஆழமானவை. இன்பம் ஒன்றுதான். இதன் சோபையும் அழகுமே கலியுக அவதார புருஷன் கிருஷ்ணாஜி……” – மேடையில் சுவாமிஜியின் பேச்சு! 

அதற்கு நாடோடி, “ இவன் கண்டான் பெரிசா!” என்கிறான்.

இந்தக் குரலை இன்னமும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.  இது புதுமைப் பித்தனின் தொலைநோக்குப் பார்வையா அல்லது மாறாமல் மயங்கிக் கிடக்கும் இந்தச் சமூகத்தின் மெத்தனமா என்பதை வாசகன் தீமானித்துக் கொள்ளலாம்.

மழை வந்து விடுகிறது. குளுவச்சி மண்டபத்திற்கு ஓடுகிறாள். “சீ, மூதேவி! எங்கே ஏறுதே! ஆள் இருக்கிறது தெரியலே? போ !” என்று ஒரு பெண் சீறுகிறாள்.

குளுவனோ, மழையில் அழும் சின்னக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி விளையாடிக்கொண்டிருக்கிறான். குளுவச்சி, “நம்ம எடத்த அவங்க புடிச்சிக்கிட்டாங்க இன்னிக்கு! உனக்கென்னடா குளவா, நீ சொரணை கெட்டவன்….” என்று சண்டை போடுகிறாள். 

இதைப் பார்த்து, நாடோடிக்கு விநோதமாக இருந்தது. “இருக்க இடமில்லே இந்த மழையில். இதில் என்ன உற்சாகம்! வாழ்க்கையே இந்த அசட்டுத்தனம்தான் அல்லது ஏமாற்றம்தான்” என நினைத்து அவர்களுக்காக வருந்துகிறான்.

மழை நின்றதும், குளுவனும், குளுவச்சியும் கட்டிப்பிடித்து மகிழ்கின்றனர்.

நாடோடி ஒன்றிலும் லயிக்காது, துயரம் தேங்கிய முகத்துடன் மலைப்பாதையில் நடந்து மறைகிறான். 

வாழ்க்கையின் அர்த்தமில்லாத, அசட்டுத்தனங்கள் நிறைந்த மனிதர்களைப் பற்றி – எல்லா மட்டங்களிலும் இருக்கும் மனிதர்களைப் பற்றி – புதுமைப்பித்தன் துயரப் படுகிறார். துயரம் தீருமா?

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லோரும் அவரவர் நிலையில் மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறார்கள். “இதுதான் சமூகம் ! இந்த அசட்டு மனிதக் கூட்டத்தின் பிச்சைக்காரத்தனம்; புனிதமாக ஏதாவது ஒன்று இருக்கிறதா?”

அவர் தனது ‘புதிய கூண்டு’ கதையில் முடிப்பது போல், “அதற்கென்ன செய்யலாம் ? அதுதான் வாழ்க்கை!”

புதுமைப் பித்தனின் சமூக சீர்திருத்தப் பார்வை இந்தக் கதையில் அவரது ஆதங்கமாக வெளிப்படுகிறது.


கேள்வி: உசிர் என்னோட இருக்கையில நீ மண்ணோட போவதெங்கே?