
நீண்ட யாத்திரை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே உடைகள் எடுத்துக் கொண்டோம். மே 11 இரவு பெங்களூருக்கு பறப்பட்ட விமானம் காஞ்சிபுரம் தாண்டாமல் மறுபடி சென்னை திரும்பி விட்டது! பெங்களூரில் பேய் மழையாம் இறங்க முடியாதாம். ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை’ என்று முக்திநாதனையே வேண்டிக் கொண்டு விமானத்தில் அமர்ந்திருந்தோம். பாதி ராத்திரி பகவான் கண் திறந்தார். புறப்படலாம் என்று பைலட் அறிவித்து விட்டு விமானத்தை எடுத்தார். பெங்களூரில் காலை ஏழு மணிக்கு விமானம் மாறி வாரணாசிக்கு எட்டரை மணிக்கு நாங்கள் நால்வரும் (நான், என் நற்பாதி, திருமலை, வித்யா) ஏற்கெனவே பதிவு செய்திருந்த விடுதிக்கு சென்றோம். பயணம் ஆரம்பம்.
12.05.23 வெள்ளிக்கிழமை
வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதியில் எங்கள் பெட்டிகளை வீசியெறிந்து விட்டு தயாராக இருந்த டிபனை உள்ளே தள்ளி விட்டு நீராட கங்கைக்குப் புறப்பட்டோம். மோட்டார் ரிக்ஷா மூலம் அஸ்ஸி காட் என்ற இடத்துக்குப் போனோம். மதிய வெயில் கொளுத்தியது. சந்து பொந்துகளில் நுழைந்து கங்கை நதிக் கரைக்கு வந்தோம். கங்கையைக் கண்டதும் வெயில் மறந்து விட்டது. அவள் இரு கரையும் தொட்டு ஓடவில்லை. நடு நடுவே மணல் திட்டு. நதியில்
இறங்க உடல் பரபரத்தது. கரையில் இருந்த துறையை விட கங்கை நடுவில் தீவு போலிருந்த இடத்தில் குளிக்கலாமென ஒரு படகை பேரம் பேசினோம். உச்சி வெயிலில் குளிர்ந்த நதியில் அமிழ்ந்து குளித்தோம்.மனசே இல்லாமல் வெளியேறி அறை திரும்பினோம். வழியில் வாரணாசியின் பிரத்தியேக லஸ்ஸி. அவ்வளவு இதமாக இருந்தது.
ஒரு குறுந்தூக்கத்துக்கு பிறகு காசி விஸ்வநாதரை தரிசிக்க கிளம்பினோம். இருபது வருடம் முன்பு பார்த்த கோவிலா என்று இருந்தது. கோவில் வளாகம் சுற்றுப்புறம் எல்லாம் சுத்தமாக இருக்கிறது. விஸ்வநாதரை நெருக்கிக் கொண்டிருந்த கடைகள், கட்டிடங்கள் எதுவும் இல்லை. கோயிலின் நான்கு புறமும் நுழைவாயில். விஸ்வநாதரை தரிசித்துவிட்டு சற்று தள்ளி தனித் தனியாக இருந்த விசாலாக்ஷி, அன்ன பூரணியையும் தரிசித்து விட்டு வேக வேகமாக கங்கா ஆரத்தி பார்க்க விரைந்தோம். படகில் சென்று கங்கை நதியிலிருந்து பார்க்க தலைக்கு ஐநூறு அறுநூறு என்று கூவுகிறார்கள். ஆனால் கரையிலிருந்து பார்த்தாலே அழகாய் தெரிகிறது. சரியாக ஆறரை மணிக்கு ஆரத்தி ஆரம்பம். நிற்க இடமில்லாத கூட்டம். அரைமணி நேர ஆரத்தி அற்புதம். முடிந்தவுடன் ஆட்டோ கிடைக்காமல் வெகு தூரம் நடந்து விடுதி வந்தோம்.13.05.23 சனிக்கிழமை
இன்று என் அம்மா திதி. நேற்றே சொல்லி வைத்திருந்தோம். காலை ஏழு மணிக்கு ஹனுமான் காட் சென்று கங்கையில் நீராடினோம். அருகிலே ஒரு மடத்தில் வைதீக முறைப்படி சடங்குகள் செய்து சாப்பிட்டு முடிக்கும் போது மணி பதினொன்று. எங்கள் குழுவினர் ஒன்பது மணிக்கு புறப்பட்டு சாரனாத் சென்று புத்தர் ஆலயம் பார்த்தார்கள். அவர்கள் திரும்புகையில் நாங்களும் பஸ்ஸில் தொற்றிக் கொண்டோம். வெயில் சவட்டியது. நல்ல வேளை ஏஸி பஸ். நீண்ட பயணத்திற்குப் பின் இரவு எட்டு மணிக்கு புத்த கயா வந்தோம். நேரமாகி விட்டதால் நேராக விடுதி.
14.05.23 ஞாயிற்றுக்கிழமை
காலை ஐந்து மணிக்கு எழுந்து புத்தர் ஞானம் பெற்ற இடத்துக்குச் சென்றோம். மிகப் பெரிய ஆலயம். சுத்தமான சூழல். அருகில் இருக்கும் புத்த விஹாரத்துக்குச் சென்றோம். சீனாவுக்கு வந்தது போல் இருந்தது. கனத்த அமைதி. குறுக்கும் நெடுக்குமாய் போய்க் கொண்டிருந்த புத்த பிக்குகள். பாடசாலை போல் மந்திரம் ஓதிக் கொண்டிருந்த சிறார்கள். விஹாரத்துக்குப் பின்னால் புத்தர் ஞானம் பெற்ற போதி மரம். ஐந்தாவது தலைமுறையாக ஆயிரம் வருஷமாய் நிற்கிறது. பிரமிப்பாக இருந்தது.
பார்த்து முடித்து அங்கிருந்து முப்பது கி.மீ தூரத்திலுள்ள கயாவுக்கு வந்தோம். யாத்திரையின் முக்கிய அம்சம்.பல ஆயிரம் வருங்களாக இருக்கும் கயாசுரன் கோயில். அருகிலேயே வறண்டு போன பல்குணி நதி. சிரார்தம் செய்ய வரும் பக்தர்களிடம் பேரம் பேசும் அந்தணர்கள். தலைக்கு 7500 ரூபாய் என்று நாங்களும் ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டோம்! குழுவிலிருந்த அனைவருமே கயாவில் சிரார்தம் செய்தோம். பல்குணி நதிக்கரையில் வரிசையாக அமர்ந்து ஒவ்வொருவரும் 96 பிண்டங்கள் பிடித்தோம். அனைத்து பித்ருக்களுக்கும், உறவு மற்றும் நட்பு வட்டாரங்களில் உயிர் நீத்த அத்தனை பேருக்கும் அவரவர் பெயர் சொல்லி பிண்டம் வைத்தோம். 96 பிண்டங்களை 32 வீதம் மூன்றாகப் பிரித்து பல்குணி நதி, விஷ்ணு பாதம், அக்ஷய வடம் ஆகிய மூன்று இடங்களிலும் சேர்த்தோம். அருகிலேயே சக்தி பீடங்களில் ஒன்றான மங்கள கௌரி கோயில் இருக்கிறது. அந்த வெய்யிலும் சரியான கூட்டம். ஒவ்வொரு இடத்திலும் பிச்சை காரர்கள் படையெடுத்து வருகிறார்கள். அதில் சிறார்கள் அதிகம்.சீதையின் சாபப்படி அந்த ஊர் பிராமணர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியில்லை! போஜனம் முடிந்து இரண்டரை மணிக்கு திரும்ப காசிக்கு கிளம்பினோம். வெயில் வறுத்தது. வாரணாசி எல்லையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் விடுதிக்கு நடு இரவு போய்ச் சேர்ந்தோம்.
15.05.23 திங்கள் கிழமை
காலை உணவுக்குப் பின் புறப்பட்டு மதியம் விந்தியாசலத்திலுள்ள விந்தியவாசினி கோயிலுக்கு வந்தோம். சக்தி பீடங்களில் ஒன்று. பழைய கோயில். அருள் பொழியும் அம்பாள். கூட்டம் நெரித்தது. தரிசனம் முடிந்து பிரயாக்ராஜ் (அலஹாபாத்) வந்தோம். நேராக திரிவேணி சங்கமம் சென்றோம் கங்கை கொள்ளை அழகு! பழுப்பு நிறத்தில் கங்கையும் பச்சை நிறத்தில் யமுனையும் பிரயாக்ராஜில் சங்கமிக்கிறார்கள். ,ஒரு படகு மூலம் கங்கை, யமுனை, சரஸ்வதி (பூமிக்குளிருந்து) மூன்றும் சேரும் சங்கம் சென்றோம். முழங்கால் அளவு ஆழத்தில் முங்கி முங்கி குளித்தோம். மயக்கும் மாலை வெயிலில் சில்லென்ற நதி நீராட்டம் பேரின்பம்!
அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு நடு இரவு பிரயாக்ராஜ் போய் சேர்ந்தோம். வரிசை கட்டி வந்த சரக்கு லாரிகளால் கடுமையான போக்கு வரத்து நெரிசல். அனைவருக்கும் அசதி.
17.05.23 புதன் கிழமை
காலையில் நைமிசாரண்யதுக்கு புறப்பட்டோம். நெடும் பயணம். மதிய உணவு வழியிலேயே. மாலை ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தோம். நைமிசாரண்யம் ஒரு வனம். பகவான் இங்கு வனமாக இருப்பதாக ஐதீகம் விடுதியில் பெட்டிகளை வைத்து விட்டு அருகேயே இருந்த லலிதா தேவி கோயிலுக்குச் சென்றோம். இது சக்தி பீடங்களில் ஒன்று. சதியின் வலது கைவிரல் விழுந்த இடம் சிறிய கோயில். சின்ன விக்ரஹம். ரொம்ப அழகு. நல்ல கூட்டம். கண் குளிர ஆரத்தி தரிசனம் செய்தோம்.
18.05.23 வியாழக்கிழமை
காலையில் காபி குடித்து விட்டு மாற்று உடை எடுத்துக்கொண்டு ஆட்டோ மூலம் கோமதி நதிக்குச் சென்றோம். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அழகான நதி சுத்தமாக இருந்தது. இறங்கி நீரடினோம். ஆனந்த அனுபவம். நீராடி வெளியில் வந்தவுடன் கையோடு கொண்டு வந்திருந்த சூடான பூரி கிழங்கு தேவாமிர்தம்! நதிக்கரையில் திருப்பதி போலவே அமைந்துள்ள பாலாஜி மந்திரில் பெருமாளை சேவித்தோம். பின்பு கொஞ்ச தூரத்தில் இருந்த நூற்றெட்டு திருப்பதிகளில் ஒன்றான தேவராஜ சுவாமி கோயிலுக்கு சென்றோம். சிறிய கோயில் தான். எங்களைத் தவிர ஈ, காக்கை இல்லை. ரம்மியமான சேவை.
அங்கிருந்து வியாச கதி சென்றோம். இங்கு 5000 வருடம் பழமை வாய்ந்த மிகப் பெரிய ஆலமரம் இருக்கிறது. அதன் கீழ் அமர்ந்து தான் வியாச பகவான் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கினார். பிரமிப்பாக இருந்தது. எவ்வளவு மகத்துவம் வாய்ந்த இடம்! அருகிலேயே பாண்டவர் கோட்டை என்னும் இடம் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாதவாசத்தின் போது ஆஞ்சநேயருக்கு கட்டியது. 5500 வருடம் முன் கட்டியதாக கல்வெட்டு கூறுகிறது. பிறகு சக்கர தீர்த்தம் போனோம். கிட்டத்தட்ட 100 அடி விட்டத்துடன் கிணறு போன்ற அமைப்பில் ஒரு நீர் தடாகம். முழங்கால் ஆழம் தான். இங்கே நீராடுவது ரொம்ப விசேஷம். இதில் நீராடி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கரையிலேயே தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இத்துடன் நைமிசாரண்யத்தை முடித்துக் கொண்டோம். வழியில் நந்தி கிராமம் போனோம். வனவாசம் சென்ற ராமனிடமிருந்து வாங்கி வந்த பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து பரதன் ஆண்ட இடம். ராமன் வனம் சென்று பதினாலாவது வருட முடிவில் திரும்பவில்லையென்று பரதன் அக்னிப் பிரவேசம் செய்ய முற்பட்டதும் இங்கே தான். ராமர், பரதன், ஹனுமான் ஆகியோருக்கு கோயில்கள் உள்ளன. அழகிய கிராமம். மாலையில் புறப்பட்டு ஆறு மணிக்கு அயோத்தி எல்லையில் இருக்கும் ஃபைசாபத் வந்து சேர்ந்தோம். விடுதி கொஞ்சம் ஊருக்கு வெளியே இருந்ததால் எங்கும் போக முடியவில்லை.
19.05.23 வெள்ளிக்கிழமை
காலையில் எழுந்து சரயு நதிக்குப் போனோம். எப்பேர்பட்ட புண்ணிய நதி! ராமபிரான் நீராடியதல்லவா? பரவசத்துடன் முழுகி எழுந்தோம். இன்று அமாவாசை. சரயு நதிக்கரையில் தர்ப்பணம் செய்தோம். உடை மாற்றிக் கொண்டு முதலில் கனக் பவன் சென்றோம். கைகேயி சீதைக்கு பரிசளித்த பொன் மாளிகை. நேர்த்தியாக இருந்தது. அங்கிருந்து அம்மாஜி கோயிலுக்குப் போனோம். நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. ராமர் சீதை அருள் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டு காரர் தான் பட்டராக இருக்கிறார். பிராகாரத்தில் அமர்ந்து கொண்டு சென்ற காலை உணவை முடித்தோம். இப்போது நேராக ராம ஜன்ம பூமி சவாரி. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே அனுப்பப் பட்டோம். செல்போன் கேமராவுக்கு அனுமதி கிடையாது. நூற்றுக்கணக்கான பேர் க்யூவில் நின்றனர். வேலை நடக்குமிடத்திலிருந்து ரொம்ப தொலைவில் நின்று பார்க்க தான் அனுமதி. பிரம்மாண்டமாக எழும்பிக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு கற்கள் எங்கும் காணப்பட்டன. இன்னொரு பக்கம் உள்ளே ஸ்தாபிக்கப் படப் போகும் ராமர் சீதை சிலைகள் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தின் கண்காணிப்பில் இருந்தன. ராமர் கோயிலின் மாடலை பெரிதாக வைத்திருந்தார்கள். அடுத்த வருஷம் உன்னை முழுமையாகப் பார்க்கிறோம் என்று சொல்லி அயோத்தியாவை விட்டுப் புறப்பட்டோம்.
20.05.23 சனிக்கிழமை
காலையில் லும்பினி பயணம். புத்தர் பிறந்த இடம். மிகப் பெரிய ஆலயம். புத்தர் அவதாரம் செய்த இடத்தை அமைதியாக பக்தியுடன் அனைவரும் வணங்கிச் செல்கின்றனர். அருகிலேயே உயரமான அசோக ஸ்தூபி உள்ளது. பூங்கா போல வைத்திருக்கிறார்கள். மாயா தேவி கோயிலும் அங்கே இருக்கிறது.
நீண்ட பயணத்துக்குப்பின் சிட்வான் என்ற ஊருக்கு வந்து தங்கினோம். அருமையான விடுதி. சிறிய அழகான ஊர். வனத்துக்குள் அமைந்துள்ளது. சாகச விரும்பிகளுக்கு சரியான இடம். ஜங்கிள் சஃபாரி, டிரெக்கிங், பாரா கிளைடிங், யானை சவாரி என்று நிறைய இருக்கின்றன. எல்லா கடைகளிலும் குளிர் பானங்கள் போல் மது பாட்டில்கள் விற்கிறார்கள்.21.05.23 ஞாயிற்றுக்கிழமைகாலை உணவை முடித்துக் கொண்டு நேபாள் தலைநகர் காத்மாண்டு புறப்பட்டோம். கொஞ்ச நேரத்திலேயே பஸ்ஸில் ஏதோ பிரச்சினை ஆகி நொண்டி அடிக்க ஆரம்பித்து விட்டது. வெறும் 20 கி. மீ வேகத்தில் செல்ல ஆரம்பித்தது. செல்லும் வழி பூராவும் வறண்டு போய் இருந்தது. சாலைகள் படு மோசம். ஆச்சரியமாக இருந்தது. தலைநகருக்கு செல்லும் சாலை இவ்வளவு மோசமா? கிட்டத்தட்ட காத்மாண்டு வரை இப்படித்தான் குண்டும் குழியுமாக இருந்தது. போதாக் எங்கள் பேருந்தும் மாட்டு வண்டி போல் போக, மூன்று, நான்கு மணிக்கு காத்மாண்டு போக வேண்டிய நாங்கள் இரவு எட்டு மணிக்கு போய்ச் சேர்ந்தோம். அனைவருக்கும் அயர்ச்சி. நல்ல ஓய்வு.22.05.23 திங்கள் கிழமைகாலையில் முதலில் சென்றது ஜல நாராயணர் கோயிலுக்கு. ரொம்ப வித்தியாசமான அதிசயமான கோயில். நீச்சல் குளம் போல ஒரு தடாகத்தில் கிட்டத்தட்ட 30 அடி நாராயணன் மல்லாந்து படுத்த வண்ணம் சேவை சாதிக்கிறார். அதே கோலத்திலேயே அவருக்கு சர்வ அலங்காரங்களும் செய்யப் பட்டு பூஜை செய்கிறார்கள். கீழே நாலு படி இறங்கிப் போய் தரிசிக்கலாம். பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அங்கிருந்து குகேஸ்வரி கோயிலுக்குச் சென்றோம். சக்தி பீடங்களில் ஒன்று. இருபது படி ஏறி போக வேண்டும். பழமையான கோயில். பிறகு காத்மாண்டுக்கே உரிய பிரசித்தி பெற்ற பசுபதினாத் கோயிலுக்குச் சென்றோம். மிகப் பெரிய கோயில். கூட்டம் நிறைய இருந்தது. இதுவும் மிகப் புராதனமான கோயில். சன்னதியின் நான்கு பக்கங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். பசுபதிநாத் பஞ்சமுக லிங்கமாக காட்சி கொடுக்கிறார். கோயில் உள்ளே பல சந்நிதிகள் உள்ளன. கோயில் பிராகாரத்தை ஒட்டியே ஸ்மாசனம் இருக்கிறது. அங்கேயுள்ள நீர் நிலையில் சம்ஸ்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. புஷ்கரணி என்று நினைத்து நாங்கள் இறங்கப் போய் பதறிக் கொண்டு திரும்பினோம்! இந்தக் கோயிலிலும் இடைத்தரக்கள் பேரம் பேசுகிறார்கள். வாசலிலேயே மடக்கி காசு வாங்கிக் கொண்டு சன்னதி அருகே கொண்டு போய் விடுகிறார்கள். அங்கிருந்து அருகிலுள்ள கடைகளில் சாளக்கிராமம், ஸ்படிகமாலை, ருத்திராட்சரம் போன்ற பூஜை சாமான்கள் வாங்கி கொண்டோம். மதிய சாப்பாடுடன் காத்மாண்டு காட்சிகள் முடிந்தன. தகிக்கும் வெயில். புறப்பட்டு போக்ரா என்ற ஊருக்கு வந்தோம். ராத்தங்கல் இங்கு தான்.
23.05.23 செவ்வாய் கிழமை
பயணத்தின் ஹைலைட் இன்று தான். அடியேனுடைய பிறந்த நாளும்! விடிகாலையில் எழுந்து விமான தளம் வந்தோம். இங்கிருந்து முக்தினாத் அருகிலுள்ள ஜாம்சன் என்ற இடத்துக்கு விமானம் மூலம் போக வேண்டும். ஏற்கெனவே டிக்கட் எடுத்தாயிற்று. இங்கு தான் கடவுள் விளையாடி விட்டார். எட்டு மணிக்கு விமானம் புறப்பட வேண்டும். அழைப்பு வரவேயில்லை. கால நிலை சரியில்லை என்றார்கள். சரிதான் என்று ஒரு நடை போய் டீ சாப்பிட்டு விட்டு அண்ணாந்து ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். நேரம் கடந்தது. காலை உணவையும் காலி செய்து விட்டோம். அலுவலகம் உள்ளே போய் கேட்டோம். விமானத்தில் கோளாறாம். எங்களுக்கு முன் விமானத்தில் அமர்ந்து பறக்கத் தயாராக இருந்த இன்னொரு குழு இறக்கையிலிருந்து புகை வருகிறதென்று இறங்கி விட்டார்கள். இன்று விமான சர்வீஸ் இல்லையென்று கையை விரித்து விட்டார்கள். அடுத்து? எங்கள் குழு தலைவர் காரில் போகத் தயாரா, ரொம்ப கடினமாக இருக்கும் என்றார். முக்திநாதனைப் பார்க்காமல் எப்படி திரும்புவது? சரி என்றோம். 30 பேருக்கு 6 கார்கள் வந்தன. பகல் பனிரெண்டு மணிக்கு புறப்பட்டோம். மிக மிகக் கடினமான பாதை. உண்மையில் பாதையே இல்லை. பாறைகளும், கற்களும், நீரோடைகளும் தான் வழி முழுவதும். அனுபவப்பட்ட டிரைவர் தவிர யாரும் ஓட்ட முடியாது. மெது மெதுவாக மலையேற ஆரம்பித்தோம் காரில். கூடவே கண்டகி வந்து கொண்டிருந்தாள். கேதார், பத்ரி மலைகளுக்கு நேர் எதிராக இங்கே மரம், செடி, கொடிகளே இல்லை. வெறும் பாறைகள் தான். ஹாலிவுட் கௌபாய் படங்களில் வரும் மேற்கு அமெரிக்கா போல எங்கும் செம்மண். கார் பல சமயம் எகிறிக் குதித்த படியே சென்றது. நீண்ட முரட்டு பயணம் எட்டு மணிக்கு முடிவுக்கு வந்தது. ஜாம்சன் வந்தோம். ஜப்பானிய மாடலில் சிறிய அழகிய விடுதி. ஒரு பக்கம் இளைஞர்களும் யுவதிகளும் நிதானமாக ஹுக்கா பிடித்துக் கொண்டு இருந்தார்கள். உண்டு உறங்கினோம்.
24.05.23 புதன்கிழமை
விடியற்காலை ஐந்தரை மணிக்கு ஜீப்பில் முக்திநாத் புறப்பட்டோம். 20 கிலோ மீட்டருக்கு ஒரு மணி நேரம் ஆனது. மலைப் பாங்கான பாதை. யாத்திரையின் கிளைமாக்ஸான முக்திநாத் போய் சேர்ந்தோம். கடல் மட்டத்திலிருந்து 12000 அடிக்கு மேல் உயரம். கடுமையான குளிர். போட்டுகொண்டிருந்த கம்பளி ஆடைகளையும் தாண்டி தாக்கியது. நாங்கள் இறங்கிய இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்து மலையேறி கோயிலுக்கு போக வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் தான் யாத்திரிகர்கள் இருந்தனர். கொஞ்ச தூரம் சாலைக்குப் பிறகு படிகள். முழங்கால் முறிந்தது. லேசான தூறல் வேறு. நின்று நிதானித்து ஏறினோம். மலைகளின் அழகே அலாதி. மேலே ஏற எற வெறுமையை உணர்வோம். அரைமணி நேரம் மூச்சு வாங்கி ஏறி விட்டோம். அற்புதம். அந்த இடமே தெய்வீகமாக இருந்தது. சிறிய கோயில் தான். பகோடா மாடலில் கோபுரம். கோயில் வாசலில் பெரிய அளவு நீர் தொட்டி போல் இரண்டு குட்டி நீராழிகள் இருந்தன. ஒன்று பாவ தீர்த்தம். ஒன்று புண்ணிய தீர்த்தம். தண்ணீர் ஐஸ் போல இருந்தது. உள்ளே இறங்கினால் விறைத்து விடுவோம். அப்படியும் இந்த இரண்டு நீர் நிலைகளிலும் பலர் இறங்கி நீராடினர். அவர்கள் வீரத்தை பாராட்டி நாங்கள் அந்த புனித நீரை எங்கள் மேலே தெளித்துக் கொண்டோம். கோயிலுக்குப் பின்னால் அரை வட்ட வடிவில் ஆள் உயரத்துக்கு 108 குழாய்கள் வரிசையாக இருக்கின்றன. 108 திருப்பதியின் புனித தீர்த்தங்கள் இங்கு வருவதாக ஐதீகம். பாவ புண்ணிய தீர்த்தங்களில் நீராடியவர்கள் இங்கேயும் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக குளித்துச் செல்கிறார்கள். இங்கும் நாங்கள் தண்ணீரை மேலே தெளித்துக் கொண்டோம். இப்பொழுது கோயிலுக்குள் செல்ல வேண்டும். இதற்குள் நல்ல கூட்டம் வந்திருந்தது. வரிசையில் நின்று சேவித்தோம். சின்ன விக்ரகம். சாலக்ராமத்தால் ஆனது. சுயம்பு மூர்த்தி. மிக அழகு. ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள் பாலிக்கிறார் முக்திநாதர். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் எங்கோ ஒரு மலை உச்சியில் இருந்து கொண்டு எப்படி இத்தனை பேரை வசீகரிக்கிறார்? ஆனந்தமாக தரிசித்து விட்டு வெளியே வந்தோம். கோயில் பிரகாரத்தின் உள்ளேயே டாகினி என்ற பௌத்த பெண் தெய்வ சன்னதி ஒன்று உள்ளது. பலர் அங்கு நெய் விளக்கு ஏற்றுகிறார்கள். இன்னொரு பக்கம் அகண்ட ஹோம குண்டம் உள்ளது. இது சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப் படுகிறது. சதி தேவியின் நெற்றிப் பகுதி விழுந்த இடம்.
மறுபடி சோதனை. மாலை ஐந்து மணிக்கு எங்கள் காரின் இஞ்சினும் பழுதாகி டயரும் பஞ்சர். நடு இரவு பதிணொண்ணரை மணிக்கு வெட்ட வெளியில் கும்மிருட்டில் நின்று கொண்டிருந்தோம். மற்றவர்களெல்லாம் எட்டு மணிக்கு போய் சேர்ந்து விட்டனர். ஒருவாறு சமாளித்து நொந்து போய் இரவு பன்னிரண்டு மணிக்கு போக்ரா திரும்பி அப்புறம் தான் சாப்பிட்டோம்.
25.05.23 வியாழக்கிழமை
காலையில் விந்தியாவாசினி கோயில் போனோம். கொஞ்சம் உயரத்தில் இருக்கிறது. மேலே போக லிப்ட் இருக்கிறது. அழகிய கோயில். சுத்தமாக வைத்திருக்கிறார்கள். திரும்ப இறங்கி சாலையை கடந்தால் குப்தேஷ்வர் மகாதேவ் கோயில் இருக்கிறது. இது பூமிக்கு அடியில் சுமார் நூறு படிகள் இறங்கிப் போக வேண்டும். குகைக் கோயில் போல வளைந்து வளைந்து செல்கிறது. கீழே தண்ணீர் ஒரு புறம் கொட்டிக்கொண்டிருக்க சிவ பெருமான் வீற்றிருக்கிறார். வெளியே காத்மாண்டுவின் ஜலநாராயணர் ரெப்ளிகா இருக்கிறது. சாலையின் மறுபுறம் தேவி நீர்வீழ்ச்சி உள்ளது. பூங்கா போல் இருக்கிறது. அங்கிருந்து வாராஹி கோயிலுக்குச் சென்றோம். பேவா என்ற ஒரு பெரிய ஏரியின் நடுவில் உள்ளது. எங்கள் பயணத்திலேயே மிக ரம்மியமான இடம் இது தான். கடல் போல் ஏரி. லேசான சாரல். மனதை கொள்ளை கொள்ளும் அழகு. சிறிய படகுகளில் வாராஹி கோயிலுக்கு போனோம். சிவப்பாக காட்சி தருகிறாள். போக்ரா ஊரைக் காக்கும் காவல் தெய்வம். ஸ்விட்சர்லாந்து போல் இருந்தது.
நான்கு நாள் முன் தங்கின சிட்வானில் அதே விடுதிக்கு போனோம். போய்ச் சேர இரவு பத்தரை மணியாகி விட்டது. போஜனம் வழியிலேயே செய்தாயிற்று.
26.05.23 வெள்ளிக்கிழமை
காலையில் கோதுமை ரவா உப்புமா. (மூன்றாம் முறை!). சாப்பிட்டு சிட்வானை விட்டு புறப்பட்டோம். நேரமில்லாததால் யானை சவாரி, ஜீப் சவாரி என்று எதுவும் செய்ய முடியவில்லை. இன்றும் நீண்ட பயணம். மாலையில் மிதிலாபுரிக்கு வந்து சேர்ந்தோம். ஜனகரின் அரண்மனைக்கு சென்று பார்த்தோம். அத்தனை அழகு. பல வண்ண பளிங்கு கற்களும், வண்ண விளக்குகளும் கண்ணைப் பறித்தன. ராமரும் சீதையும் கண்ணோடு கண் நோக்கியது இங்கு தான். உள்ளே அவர்களுக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. சற்றுத் தள்ளி அவர்களின் விவாக மண்டபம் இருக்கிறது. ராமர், லட்சுமணர்,பரதர், சத்ருக்கனர் ஆகிய நால்வரும் மணக் கோலத்தில். ஜனகர், அவர் மனைவி சுனைனா, தசரதர், வசிஷ்டர், விசுவாமித்திரர் மற்ற ரிஷிகளுடன் காட்சி கொடுக்கின்றனர்.
பிறகு அங்கிருந்து சுமார் 20 கி.மீ தள்ளியுள்ள தனுஷ்தாம் என்ற இடத்திற்குப் போனோம். ராமர் சிவ தனுசை முறித்த போது அது மூன்றாக உடைந்து ஒரு பகுதி இங்கே விழுந்தது. தரையில் கல்லாக மாறி இருந்தது. இருபது அடி நீளம் இருக்கும். தினமும் பூஜை செய்து ஆரத்தி செய்கிறார்கள். திரும்ப மிதிலாபுரி வந்து தங்கினோம்.
27.05.23 சனிக்கிழமை
பயணத்தின் கடைசி நாள்.
வழக்கம் போல் காலையில் புறப்பட்டு பதினோரு மணிக்கு சீதாமரிக்கு வந்தோம். சீதா தேவி பூமியிருந்து அவதாரம் செய்த இடம். குட்டி கிராமம். சீதா தேவிக்கு சின்ன அழகான கோயில் இருக்கிறது. கோயிலில் ஒரு தமிழர் பட்டராக இருக்கிறார். கோயிலுக்குப் பின்னால் ஒரு குளம். வெயில் பின்னி எடுத்தது. பயணத்தில் எங்களுடைய கடைசி இடமும் பார்த்தாகி விட்டது. வெகு திருப்தி. பஸ் ஏறினோம். பாட்னாவுக்கு சவாரி விட்டோம். மதிய உணவுக்கு ஒதுங்க ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பஸ்ஸிலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். மூன்று மணிக்கு பாட்னா வந்தோம். அனைவரும் பிரியா விடை பெற்றுக் கொண்டோம். விமான நிலையத்துக்கு சிலரும், இரயில்வே ஸ்டேஷனுக்கு சிலரும் சென்றனர். நாங்களும் திருமலை வித்யாவும் பாட்னாவில் ஒரு நாள் தங்க திட்டமிட்டிருந்தோம். அதனால் இஸ்கானுக்கு சென்று இரவு தங்கினோம். மாலையில் கங்கைக் கரைக்கு சென்றோம். ஒரே இருட்டு. வார இறுதி கூட்டம். அங்கிருந்து மார்கெட்டுக்கு போய் விட்டு இரவு அறை திரும்பினோம்.
மிகவும் வசதியான நேர்த்தியான அறை.
28.05.23 ஞாயிற்றுக்கிழமை
காலையில் கடைதெருவுக்குச் சென்று இனிப்பும், சிறு தின்பண்டங்களும் வாங்கினோம். நான்கு மணிக்கு விமானம் ஏறினோம். ஆறரை மணிக்கு சென்னை இறங்கி எட்டாவது மணிக்கு வீடு. வீட்டுக்கு வந்ததும் முதலில் ஒரு ஃபில்டர் காஃபி. உயிர் வந்தது. பதினாறு நாள் பயணத்தை அசை போட ஆரம்பித்தோம்.
கேள்வி: தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ?
