வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நமக்கு ஒரு பாடத்தைப் போதித்தவண்ணம் இருக்கிறது. ஏன் சில சிந்தனைகள் எழுகின்றன, சில செயல்கள் நடக்கின்றன என்பது அறிவுக்கும் அறிவியலுக்கும் எட்டாத விந்தை.
அறிவியல் படித்துத் தேர்ந்து ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்த நான் பதவி ஓய்வின்பின் தமிழைப் படித்து, பிள்ளைத்தமிழினைப் போற்ற முனைந்தது என் வாழ்வின் பெரியதொரு திருப்பம்.
அந்தக் காலத்து 11ம் வகுப்பான எஸ். எஸ். எல். சி. படிக்கும்போது தமிழ்ப் பாடமாக இருந்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப்பாடல் என் உள்ளத்தைக் கவர்ந்த ஒன்று. அதுவுமல்லாமல் அப்போது அமுதசுரபி மாத இதழ் அசோகா பாக்குத்தூள் கம்பெனியுடன் இணைந்து மாணவர்களுக்காக ஒரு போட்டி நடத்தினார்கள். அதாவது ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்’ எனும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலுக்கான சித்திரத்தை வெளியிட்டு அது பற்றிய ஒரு கட்டுரையை எழுதி அனுப்பக் கூறினார்கள். என்னால் அதில் பங்குபெற முடியவில்லை. ஏனெனில் அந்தப் பாடலுக்கான விஷயம், பாடல் தொடர்பான கதை எனக்குத் தெரியாது. எங்கள் தமிழாசிரியர் அதனைக் கூறவில்லையா என்று நினைவில்லை. அவர்களைக் கேட்க ஒரு தயக்கம். ஏன், எதற்காக எனும் கேள்விகள் எழும். படிப்பதை விட்டுவிட்டு இது என்ன வேலை எனக் கேட்டுவிடுவார்களோ என்ற மாபெரும் தயக்கம்.
ஆயினும் அப்போதிலிருந்து தொடங்கியது பிள்ளைத்தமிழுடனான எனது தொடர்பும் காதலும். நீறுபூத்த நெருப்பாக மங்கிக்கிடந்த அது, நான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக (அறிவியல்) சேர்ந்தபோது திரும்ப உயிர்த்தெழுந்தது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முழுமையான நூலும் வாங்கக் கிடைத்தது.
சில விருப்பங்கள், எண்ணங்கள் ஆகியன கால ஓட்டத்தில் நம்மோடு சேர்ந்தே ஓடி, என்னவென்று அறியவொணா ஒரு நிலையில் நம்மை ஆழ்த்திப் பயணம் செய்ய வைக்கின்றன. பிள்ளைத்தமிழுடனான என் தொடர்பும் அத்தன்மையதே. தமிழைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினாலும் கூட, ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளரால், குடும்ப வேலைகளும் உடன் சேர, எத்தனை அதிகப்படியான செயல்களைச் செய்ய முடியும்? உறுமீன் வரக் காத்திருந்த கொக்குபோல, பதவி ஓய்வு பெறும்வரை பொறுத்திருந்தேன். அது ஒரு கதை – பின் பிள்ளைத்தமிழைப் பயின்று ஆய்ந்து மூழ்கி முத்தெடுத்துக் களித்தது, இன்றும் தொடர்கிறேன். குடும்பப் பொறுப்புகள் சிறிது குறைந்ததும் கூட ஒரு காரணமோ என்னவோ!
அருமையான ஒரு பெண்மணி வீட்டையும், சமையலையும் கவனித்துக்கொள்ள உடனிருந்தார். அதனால் எனக்கு அதிகப்படியான நேரத்தை வாசிப்பிலும் எழுத்திலும் செலவிட இயன்றது. வாராது போல வந்த மாமணியான ஒரு பேராசிரியரின் (காலஞ்சென்ற முனைவர், பேராசிரியர் உயர்திரு. கோ. ந. முத்துக்குமாரஸ்வாமி ஐயா) தொடர்பு, என் தமிழ் மீதான பற்றினை இன்னும் வெகுவாக வளர்த்தது. அவரோடு உரையாடிய பொழுதுகளில் நான் கேட்டதுண்டு – “ஏன் ஐயா பெண்கள் யாருமே பிள்ளைத்தமிழ் இயற்றவில்லை? ஏன் பல பிள்ளைப்பருவச் செயல்கள் பாடப்படவில்லை?”
உண்மையாகவே என்னை அவர் ஊக்குவித்து, “நீங்கள் செய்யுங்களேன் அம்மா!” என்றார். அதன் விளைவே புதிய பிள்ளைப்பருவங்கள் என்னும் தொடர். பிற்பாடு நூலாகவும் வெளிவந்தது. இங்குதான் ஆச்சரியமான ஒரு திருப்பம். நமது குவிகம் நண்பர் முனைவர் திரு. வ. வே சு. அவர்களை இதற்கு அணிந்துரை தர வேண்டினேன். அவர் ஒரு அருமையான அணிந்துரை தந்தது மட்டுமின்றி, என்னிடமிருந்து ஒரு முழு வடிவப் பிள்ளைத்தமிழ் நூலை எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தார். அடடா! குருவி தலையில் பனங்காயை வைக்கிறாரே என நான் எண்ணினேன். அதைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அப்போது முயற்சி செய்யவில்லை. ஆயினும் ஒரு கட்டத்தில் நாம் எழுதத்தான் முயலலாமே எனத் தோன்றியது.
ஆனாலும் குமரகுருபரனார், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோர் கையாண்ட அந்தச் சிற்றிலக்கிய வகையை நான் எவ்வாறு கையாள்வது எனும் பெருத்த தயக்கம் என்னிடமிருந்தது.
மெல்ல ஒவ்வொரு பாடலாக எழுத ஆரம்பித்தேன். தானாகப் பாடல்கள் மனதில் எதுகை மோனையோடும் ஆசிரிய விருத்தத்தின் இலக்கணங்களோடும் வந்து அமர்ந்தன. பருவத்திற்கு மூன்று பாடல்களாக வழக்கமான காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல், இவற்றுடன் மருதோன்றி அணிதல், கலைகள் பயிலுதல் என இரு புதிய பருவங்களையும் இணைத்துப் பருவத்திற்கு மூன்று பாடல்கள் வீதம் திருமயிலைக் கற்பகவல்லிமீது ஒரு பிள்ளைத்தமிழ் நூல் உருவாயிற்று. இதனைத் திரு. வ. வே. சு. அவர்களே தமது கரங்களால் வெளியிட்டு வாழ்த்தினார்.
இது பிள்ளையார் சுழி. அடுத்து திருவையாறு அறம்வளர்த்த நாயகி மீது ஒரு பிள்ளைத்தமிழ் – 14 பருவங்களுடன் – வழக்கமான 10 பருவங்களுடன், குதலைமொழி பேசல், வளையல் அணிதல், கோலம் வரைதல், கலைகள் பயிலல், ஆகிய 4 புதுப்பருவங்கள் பாடப்பட்டன.
பின்பு மற்ற இலக்கியத் தொடர்பான எழுத்துக்களில் என் கருத்தைச் செலுத்தினேன். அப்போது (சென்ற ஆண்டு) இராஜேந்திர சோழனின் 1000மாவது ஆண்டாக 2025-ல் கடற்படை கொண்டு அவன் கடாரம், ஸ்ரீவிஜயம் ஆகிய நாடுகளுக்குச் சென்று, வென்றும், நட்புறவு கொண்டும் திரும்பியதைக் கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக பாரதப் பிரதமர் திரு. மோதியால் ஒரு வெள்ளி நாணயமும் வெளியிடப்பட்டது. ஏற்கெனவே நண்பர் முனைவர் திரு. வ. வே. சு. என்னை ஒரு ஆண்பால் பிள்ளைத்தமிழையும் எழுதுமாறு கூறியிருந்தார்!!
இராஜேந்திர சோழன் பிள்ளைத்தமிழ் பதினோரு பருவங்களுடன் உதித்தது. பருவத்திற்கொரு பாடல் மட்டுமே! ஆண்பாலுக்கான கடைசி மூன்று பருவங்களான சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்கல், சிறுதேர் உருட்டல் இவற்றுடன், பிங்கல நிகண்டு குறிப்பிடும் கச்சொடு சுரிகை காமுறப் புனைதல் (உடைவாள் செறித்தல்) எனும் பருவமும் பாடப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
- உடைவாள் செறித்தல்
(கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்)
படந்தாங்கு பாம்பின்மேல் பாற்கடலிற் கிடந்துறங்கு
பரந்தாமன் புவிதன்னை யறிந்துகா வல்செய்யும்
பாங்காக இடைக்கச்சிற் கட்டியசுரி கையொன்றின்
பலங்கொண்டு புலிபோலப் புவியரசன் புரந்தேகும்
திடங்கொள் தோள்செம்மல் திருவுடை இராசராசன்
திகழ்சோழ வளநாட்டின் திறமிகுந்த பெருவீரன்
தகைமைசால் தனயனாய் தனித்துயர்ந் தேவிளங்கி
திரிபுவன முழுதாணைத் திகிரிதனைச் செலுத்தி
கடங்கொண்ட இளவயதில் போர்க்கலை பலகற்று
கரைகண்ட கடல்வீர!கங் கைகொண்ட சோழமார!
கடாரத்தின் காவல! களிறேறி வருவேந்த!
கன்னியர் கண்டேங்கக் காளைநீகச் சிலணிந்த
வடங்கொண்ட வல்வாளைக் கையேந்தி நின்றாய்
வானவன்மா தேவிவரங் கொண்டுபெற் றெடுத்த
வளர்சிலை வீர!வந்தெ திர்நிற்கு வெம்பகை
யறுக்கஉடை வாளினை நீசெறிக்க வருகவே!
இதன் பொருள்:
படத்தைக்கொண்ட பாம்பின் மீது பாற்கடலில் படுத்து உறங்கும் பரந்தாமனாகிய திருமால் அனைத்தையும் அறிந்தவண்ணம் உலகத்தைக் காவல் செய்வான். இதனையே திருமாலின் அறிதுயில் என்பர். பொருத்தமாக, இடையில் கச்சினில் கட்டிக் கொண்டுள்ள வாள் ஒன்றின் பலத்தைக் கொண்டே புலியைப் போன்ற திறமையுடனும் வீரத்துடனும் இந்தப் புவிக்கு எல்லாம் அரசனான இவன் (இராசேந்திரன்) தனது குடிமக்களைக் காப்பாற்றுவான். உறுதியான தோள்களையுடைய சிறந்த அரசனானவனும் செல்வம் நிரம்பப் பெற்றவனுமான இராசராசன் பெருமை பொருந்திய சோழவள நாட்டின் திறமை மிகுந்த மாபெரும் வீரன். அவனுடைய திறமைக்கேற்ற மகனாய் தனக்கான தனிப்பட்ட பெருமையோடு விளங்குபவன் மூன்று உலகங்களையும் (இராசேந்திரனின் ஒரு சிறப்புப் பெயர் திரிபுவனச் சக்கரவர்த்தி. பல நாடுகளையும் வென்று தனது ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்ததனால் இப்பெயர் உண்டாயிற்று.) தனது ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி (கல்வி, கலைகள் கற்க வேண்டும்) கடமை கொண்ட இளமைப்பருவத்தில் பலவிதமான போர்க்கலைகளையும் பயின்று அவற்றில் சிறந்து விளங்கிய வீரனே! கடலையும் (கடற் போர்களிலும் வாணிகத்திலும்) வென்ற வீரனே! கங்கை கொண்டவன் எனும் பெயரைக்கொண்ட சோழனே! அந்த மாரவேள் (காமவேள்) போன்று அழகானவனே!! கடாரம் எனும் நாட்டின் அரசனே! யானைமீது ஏறி வரும் வேந்தனே! கன்னியர் உனது அழகான வடிவினைக் கண்டு ஏக்கம் கொள்ளவும், காளை போன்ற நீ உனது இடைக்கச்சிலணிந்த ஒழுங்காக அமைக்கப்பட்ட வலிமையான குறுவாளை உனது கையில் பிடித்துக்கொண்டு நின்றாய். உன் தாயாகிய வானவன்மாதேவி வரம் வாங்கிவந்து பெற்றெடுத்த (அருமையான வில்லைக் கையில் ஏந்திய) வீரனே! வந்து உன் எதிரில் நிற்கத் துணிந்த கொடிய பகைவர்களை அழிக்கும் உடைவாளினை நீ தரித்துக் கொள்ள வருவாயாக!
——————
எனது பிள்ளைத்தமிழ் சகாப்தம் இன்னும் தொடர்கிறது. மேற்காணும் மூன்று நூல்களும் பிள்ளைத்தமிழ் எழுதப்படாத தெய்வங்களின்மீதும், ஒரு அரசன்மீதும் எழுதப்பட்டன.
தற்சமயம் அன்னை கங்கையின்மீது ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றப்பட்டுள்ளது. நதிகள்மீது இதுவரை பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டதில்லை. இதுவும் பருவத்திற்கு ஒவ்வொரு பாடலையே கொண்டது. கங்கையின் பல்வேறு செயல்கள், வடிவங்கள், புராணங்களில் அவள் தோற்றம் ஆகியன பாடப்பட்டுள்ளன. நமது ஆசிரியர் திரு. சுந்தரராஜன் அவர்கள் அருமையானதொரு அணிந்துரை அளித்திருக்கிறார். எனது அனைத்து நூல்களையும் வெளியிட்டுவரும் புஸ்தகா பதிப்பகத்தார் இதனையும் வெளியிடுகிறார்கள். வாங்கிப் படிப்பீர்கள் என எண்ணுகிறேன். அப்படியே கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டால் பெரிதும் மகிழ்வேன்.
பிள்ளைத்தமிழுடனான எனது இந்தப்பயணம் என்னையே பிரமிப்புக் கொள்ள வைக்கிறது. எந்த உந்துசக்தி என்னை இவ்விதம் எழுதத் தூண்டியது? காரணமின்றிக் காரியங்கள் நடைபெறுவதில்லை. நம்மால் அந்தக் காரணத்தை அறிந்துகொள்ளவும் முடிவதில்லை. அந்த இறையருளுக்கும், என் எழுத்திற்கு உந்துதலாய் இருந்த நட்புள்ளங்களின் (குறிப்பாக முனைவர் திரு. வ. வே. சு. மற்றும் மருத்துவர் திரு. பாஸ்கரன், ஆசிரியர் திரு. சுந்தரராஜன் ஆகியோரின்) அற்புதமான நட்பாங்கிழமைக்கும் எனது பணிவான வணக்கங்களையும் உளமார்ந்த நன்றியறிதலையும் உரித்தாக்குகிறேன்.
வாழ்க்கைப்பயணத்தில் நான் பயணிக்கின்ற அற்புதமானதொரு ஓடம் இதுவாகும்.
———————————
| கேள்வி: எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? |

