குவிகம் மின் புத்தகங்கள் – கிண்டிலில்

 

குவிகம் இலக்கிய அமைப்பின் சார்பில் அச்சில் வெளிவருபவை குறும்புதினம் மாத இதழ் மற்றும்  நண்பர்களின் புத்தகங்கள் ஆகும்.

அச்சில் இருப்பவை இணையத்திலும் மின்-புத்தகமாக கிடைக்கவேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம்

முதல் கட்டமாக இதுவரை வெளியாகியுள்ள குறும்புதினங்கள் (ஏப்ரல் 2021- மே 2024) அனைத்தும் amazon –kindle ebook ஆகக் கிடைக்கின்றன. அமேசானில் ‘குவிகம்’  அல்லது குறும்புதினம் என்று  இட்டு தேடிப்பார்க்கலாம். 

குவிகம் பதிப்பகத்தின் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் ‘அமேசான் kindle’ ல் வலையேற்றத் தொடங்கிவிட்டோம். அனுமதி அளித்துள்ள நண்பர்களின் புத்தகங்களை வலையேற்றத் தொடங்கிவிட்டோம் .

பதிப்பகத்தின் வழியாக உங்கள் புத்தகம் வெளியாகி இருந்தால் தொடர்புகொள்ள
+91 9791069435 / +91 8939604745

 

கோடை நாடக விழா

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் பிரபலமான வருடாந்திர கோடை நாடக விழா நடைபெற்றுள்ளது. 12 நாடகங்கள். ஏப்ரல் 22 முதல் மே 3 வரை, தினமும், மாலை 7 மணி,

முற்றிலும் இலவசம்.

(இணைய தளங்களிலிருந்து) 

Image

இண்டியன் எக்ஸ்பிரஸ்  விமர்சனம் :

The dramas that were presented on stage included —

Surukku Pai helmed by Koothapiran’s grandson R Vignesh, a story about a grandson stealing his grandmother’s belongings;

Vallamai Thaarayoh, a story of a gifted singer whose life takes a dramatic turn when she faces unjust imprisonment;

Idhudhan Sorgam depicting the the desires of a middle class yearning to experience the charm of an old age home by seasoned actor-director Madhava Boovaraga Moorthy;

Meendum Thanikudithanam, a tweak on Marina’s popular play Thanikudithanam;

Kaatchi Pizhaigalo by Sreevathson V telling a poignant tale of a visually challenged and the relentless research on restoring vision;

Roudhram Pazhagu where Dharini Komal recalled the Nirbhaya case;

Big Boss by  director-script writer P Muthukumaran shedding light on the dire straits of today’s education system;

Gnana Thangame, a family drama entwined in some unforeseen situations;

Ambi Mama that deals with the mismatch in the idea of horoscopes;

Prananathan that narrates the story of an ideal teacher;

Thotra Mayankkangalo, a play on the pursuit of getting an enticing giant project; and

Pattinathil Bootham, a mysterious plot scripted by Ezhichur Aravindan.

While the characters in most of the plays seemed to be written for the actors playing them, the script of a few like Prananathan strayed from the plot. The retellings like Surukku Pai made an impact on the audience. Vignesh, who played the protagonist of the play, said the inspiration stemmed from the title that his grandfather Koothapiran came up with in his popular narrations for children in All India Radio. “From his contemporaries, I came to know that Surukku Pai was a huge hit with the kids in the way the bag was used as a fantasy tool.”

Meanwhile, Vallamai Thaarayoh was an immersive experience that transcended the stage. This captivating production, a tribute to the legendary MS Subbulakshmi, follows Sahana, portrayed with grace by Sruuthi, who doubled up as a director. “A long dream has been to showcase the range of MS amma’s songs to the theatre world. The enormous research led to a collection of songs, presented with all earnestness,” she said. The play also had Sruuthi singing the 74 melakartha ragas in a single song, a feat never before attempted in a theatrical production.

 

காட்சிப் பிழைகளோ :

காண்பதெல்லாம் மறையுமென்றால் வெறும் காட்சிப் பிழைதானோ என்பது மஹா கவியின் வார்த்தைகள். பார்வையிழந்தவர் காணும் காட்சிகள் எப்படியிருக்கும்?. அவருக்குப் பார்வை திரும்பினால் முதலில் காணவிரும்பும் காட்சி எதுவாகயிருக்கும்?
கண்ணப்பநாயினாரான சங்கர நேத்திராலாயாவின் டாக்டர் பத்ரிநாத்தைக் குருவாக ஏற்றுத் தனது நீண்டகால ஆராய்ச்சியின் இறுதியில் ஒரு ஊசி மருந்தைக் கண்ணில் செலுத்துவதின் மூலம் இழந்த கண்பார்வையை மீட்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டாக்டர் சங்கர் ராமன்.
மிருகங்களின் மீது நடத்திய சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து அதை ஒரு பார்வைத்திறன் இழந்தவரிடம் முதலில் சோதிக்க விரும்புகிறார். சோதனைக்கு அவர் தேர்ந்தெடுத்த நபர் அவரது மனைவி மானஸ்வனி.
ஆம் அவர் பார்வையிழந்தவர். 20 ஆண்டுக்கும் மேல் தன் பார்வையில்லாததை ஒரு குறையாகவே பொருட்படுத்தாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும், தன் தங்கையை, கணவனை மகளை நேசிக்கும் ஒரு பெண் அவர்.
தன் ஆராய்ச்சியின் முதல் சோதனையைத் தன் மனைவியிடமே சோதிக்க விரும்பும் கணவர். அதில் தனக்குச் சம்மதம் எனச்சொல்லும் மனைவி. ஆனால் சிகிச்சையைத் தொடங்கமுடியாமல் தொடர்ந்து எழும் தொழில் ரீதியான சிக்கல்கள். தெய்வ நம்பிக்கை கொண்ட இந்தத் தம்பதியினரின் அன்புமகள் காதலிப்பது நாத்திகம் பேசும் ஒரு அரசியல்வாதியின் மகனை.
.
இந்தச் நிலையில் இந்த சிகிச்சையை டாக்டர் சங்கர் ராமன் செய்ய இயலாதுபோகும் சூழல், எதிர்பாராதவிதமாக அந்தச் சோதனை சிகிச்சையைச் செய்ய முன்வரும் தலைமை மருத்தவர். ஆனால் அதற்கு அவர் எழுப்பும் வினோதமான கோரிக்கைகள்
இடையில் மகளின் காதலினால் எழும் சிக்கல்.. இறுதியில் சிகிச்சை நடைபெற்றதா? மானஸ்வினி பார்வையைப் பெற்றாரா?? என்பது தான் கதை
இது லாவண்யா வேணுகோபல் இணைந்திருக்கும் Three என்ற மூவர் அணி குழுவினரின் இரண்டாவது நாடகம். லாவண்யாவின் நடிப்பு அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடமுடியாதளவுக்கு சிறப்பாகச் செய்கிறார். விழித்திறன் இல்லாதவராகத் திரைப்படத்தில் நடிப்பதை விட மேடையில் நடிப்பது மிகச் சவாலானது. ஆனால் லாவண்யா அந்தக் கதாபாத்திரத்தை மிக அனாசியமாகச் செய்கிறார் மிக எளிதாகச் சில செய்கைகளின் மூலம் தன் பாத்திரத்தை ரசிகர்களுக்கு உணரவைக்கிறார். பார்வையற்றவர்களுக்கே உள்ள கேட்கும் திறன் அதிகம் என்பதை எளிதாகப் புரியவைத்து விடுகிறார். “ஒசைகளை பார்ப்பவர்கள்” அவர்கள். அதைக்கூட நமக்குப் புரியவைக்கிறார். பார்வையற்றவர்களின் நடையில் ஒரு தனிக் கவனம் தெரியும். அதைக்கூடத் துல்லியமாகக் காட்டுகிறார். (மனோரமாவின் ஒரு பாத்திரத்தை அவரை மிஞ்சுமளவிற்கு செய்தவராயிற்றே!).

கணவரைப் பெயர் சொல்லாமல் டாக்டர் என்றே வெவ்வேறு மாடுலேஷன்களில் அழைப்பது அந்தக்காட்சிகளின் கனத்தைச் சொல்லுகிறது. கண்பார்வை பெறுவது குறித்த ஆராய்ச்சி, ஆய்வுக்குழுவினர் ஏற்ற முடிவை டாக்டர்களுக்கு விளக்குவது போன்ற விஷயங்களில் டெக்னிகலான ஆங்கில மருத்துவச் சொற்கள் நிறைய இருந்தாலும். ஆராய்ச்சியில் கதாநாயகன் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதை ரசிகர்களுக்கு எளிதாகப் புரியவைத்துவிடுகிறார்கள்.
இயல்பாக வரும் வார்த்தைகளே வசனங்களாக விழுவதால் ரசிகர்கள் காட்சிகளில் ஒன்றிப் போகிறார்கள். இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
வழக்கமான சிக்கல்களில் சிக்கும் மத்தியமர் குடும்பக்கதை, காதல். போராட்டம் போன்றவற்றிலிருந்து கதைக்களன்களை மாற்றி யோசிப்பவர்கள் Three குழுவினர்
. குறைவான பாத்திரங்கள் அழுத்தமான சூழல்கள் சிந்திக்கவைக்கும். முடிவு என்ற பாணியில் தங்கள் படைப்புகளை அமைப்பவர்கள்.
அந்த வரிசையில் இது அவர்களின் இரண்டாவது படைப்பு
லாவண்யாவிற்கும் Three குழுவினருக்கும் பாராட்டுகள்.

குவிகம் குறுக்கெழுத்து – சாய் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி: 353

இந்த மாதக் குறுக்கெழுத்துப் போட்டிக்கான லிங்க் இதோ: 

https://beta.puthirmayam.com/crossword/A3EA02674A

சரியான விடை எழுதிய அதிர்ஷ்டசாலி ஒருவருக்கும் ரூபாய் 100 பரிசு ( குலுக்கல் முறையில்) 

 

இனி, 

சென்ற மாதம் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடை எழுதிய நண்பர்கள்: 

  1. மகாத்மா
  2. மதிவாணன்
  3. ரேவதி ராமச்சந்திரன்
  4. மனோகர்
  5. கமலா முரளி
  6. மாலதி
  7. மகேஷ் மகாதேவன்
  8. ராமமூர்த்தி
  9. புஷ்பா விஸ்வநாதன்
  10. ஜெயா
  11. உஷா ராம் சந்தர்
  12. ஜானகி
  13. மிருநாளினி
  14. கிருத்திகா சதீஷ்
  15. சரண் குமார்
  16. விஜயலக்ஷ்மி கண்ணன்
  17. தாமோதரன்
  18. விஜயகுமார்
  19. இந்திரா ராமநாதன்
  20. பூ சுப்ரமணியன்
  21. கோமதி
  22. கண்ணன் ஸ்ரீகாந்த்
  23. சி சுமதி
  24. ஃப் ரவி குமார்
  25. யஷாவத்
  26. ரோவின் ஷர்மா
  27. திருச்செல்வம்
  28. கதிர் கண்மணி
  29. மெய்யழகி
  30. அவினாஷ்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

 

அவர்களுள் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவர்: கண்ணன் ஸ்ரீகாந்த் 

அவருக்குப் பாராட்டுதல்கள்! 

 

 

இலக்கிய வாத்தி – 2 -நல்லூர் – பாரதன்

போன வாரம் :

இலக்கிய வாத்தி என்ற பி டி மாஸ்டர் ! அவருக்கு ஒரே ஒரு ஆசை.  தன் இலக்கிய வாழ்க்கையைப் பத்தி ஒரு பயாகிரபி யாரவது எழுதனும்னு அவர் கொஞ்ச காலமா மனசிலேயே போட்டு  உழன்று கொண்டிருந்தவர் என்னிடம் அதைப் பத்திச் சொன்னார். (நான் அமெரிக்காவில் படித்துவிட்டு கிராமத்துப் பள்ளியில் வேலை செய்ய வந்தவன் – புனை பெயர் பரதன்). புத்தகம் என்ன ஒரு பயாபிக் குறும்படமே எடுக்கலாம் என்று நான் அவரிடம் சொன்னபோது அவர் மகள் வைஜயந்திக்காக என்று  சிலர் நினைக்கலாம்.   இதில் குவிகம் நண்பர்கள் கேரக்டராக வரக்கூடும். என் மீது கோபிக்காதீர்கள் !  ஏனென்றால் இலக்கிய வாத்தி   சொன்னதை எழுதும்  ரைட்டர் நான்)

 இனி இந்த வாரம்:

  an young amercan returned indian teacher ages 25 sitting close to an young college girl from tamilnadu village his lady love age love aged 20

“ரைட்டர்! ரெடியா? நான் சின்ன வயதில எனக்கு ஏற்பட்ட இலக்கியத் தாக்கத்தைப் பத்தி சொல்லப் போறேன். புத்தகமா எழுதும்போது எல்லாவத்தையும் எழுதுவோம். சினிமாவா படம் பிடிக்கறப்போ உனக்கு எது வசதியோ அதை வச்சுக்கோ! இப்ப ஒழுங்கா எழுது ‘என்று உத்தரவு போட்டுவிட்டு ஆரம்பித்தார் இலக்கிய வாத்தி!

இலக்கியவாதிகளில் மிகச் சிலரே பிறக்கும்போதே சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர்கள். பெரும்பாலர் வறுமைக்கோட்டிற்குக் கீழேயே பிறந்து வளர்ந்தவர்கள். தின்பதற்கு சோறு இருக்காது ஆனால் அடி உதை குத்து என்று நிறையத் தின்றவர்கள். அந்தப் பிஞ்சு வயதில் அவர்கள் பட்ட காயங்கள் பார்த்த வக்கிரங்கள் நல்லது கேட்டது எல்லாம் கலந்து பிச்சைக்காரன் சோறு போல உள் மனதில் பதிந்து பின்னால் எழுதும்போது சதையும் ரத்தமுமாகத் தெறித்து வாசகர் முன் விழும். அங்கேயே உயிர் பெற்று எழும். அப்படி வந்தால்தான் அது இலக்கியம். இல்லாவிட்டால் வெறும் வார்த்தைப் பிசையல்தான். மாடு சாணி போடுவதைப் போல. எடுத்து மூலையில் கொட்டி வரட்டிதட்டி அடுப்பெரிக்கத்தான் உதவும்.

 (இப்படியெல்லாம் பல எண்ணங்கள் வாத்தியார் கதையை எழுதும்போது என் மனதில் விழும். அதை அப்படியே குறிப்பில் எழுதிக் கொள்வேன். பின்னால் படம் எடுக்கும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.)

 “எங்க விட்டேன்“ – இது வாத்தி சார்!

“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை பி டி சார்!”

“நான் பொறந்த கிராமம் நல்லூரு. மகம் பொறந்த ஊராம் அது. பின்னால்தான் தெரிஞ்சுகிட்டேன் தி ஜானகிராமன் ஒரு நாவல்ல சொல்லியிருப்பார் ‘பேருதான் நல்லூர். தடிப்பய ஊர் என்று இந்த ஊரைத்தான் சொன்னாரோ தெரியாது. ஆனா இந்த ஊருக்கும் அது பொருந்தும். என்னைப்  போலத் தடிப்பசங்க நிறைய இருந்த ஊரு. நான் பத்து வயசு வரைக்கும்தான் அங்கே இருந்தேன். அதுக்கப்பறம் வீட்டை விட்டு ஓடி வந்து மெட்ராஸ் வந்து கொத்தவால் சாவடியில மூட்டை தூக்கி…  ஒரு நல்ல காலம் வந்து பள்ளிக்கூட வாசலை மிதிச்சது. அதைப் பின்னால பாக்கலாம். சொந்த ஊரு நல்லூரில பிஞ்சில பழுத்து என்னமா கொட்டம் அடிச்சேன் தெரியுமா?

அதைக் கொஞ்சம் பாத்துட்டு மெட்ராசுக்குப் போலாம்.

..ஏய் ரைட்டர்! நீ நல்லூருக்குப் போயிருக்கியா?” 

 ( நானும் உங்க கூட நல்லூர் வர்றேனே ! எங்க அப்பாவுக்கு அதுதான் சொந்த ஊராம்! அந்த ஊருக்குப் போனா காலை உடைச்சுடுவேன் அப்படீன்னு எங்க அப்பா நிறைய தடவை சொல்லியிருக்காரு! அதனாலேயே அங்கே போகணும்னு இருக்கு! அங்கே போனா கால் கட்டு கிடைக்குமாமே! – தாவணியில் வைஜயந்தி கன்னத்தில் குழி விழக் கேட்டாள்!

நான் பதில் சொல்லவில்லை

“நீ ஒரு கல்லுணி மங்கன்”

“அப்படின்னா?”

யாருக்குத் தெரியும்? அங்கே அம்மன் கிட்டே வேண்டிகிட்டா கல்யாணம் நடக்குமாம்! சரியா வேண்டிக்கோ ! நம்ம ரெண்டு பேரையும் சேத்து வைக்கணும்னு கரெக்டா சொல்லு!” )

“என்ன ரைட்டர் ! உட்கார்ந்துகிட்டே தூங்குரே! நீ நல்லூருக்குப் போயிருக்கியான்னு கேட்டேன். பதிலைக் காணோம் “

சட்டென்று சுதாரித்துக் கொண்டு,

போயிருக்கேன் சார்! போன மாசம் நான் போயிட்டு வந்தேன் சார்! என்னோட அமெரிக்க நண்பனோட அப்பா அம்மா அந்த ஊரில இருக்காங்க! அவங்களைப் பார்க்கப் போயிருந்தேன்.

 அங்க என்னென்ன பாத்தே? உனக்குத் தெரிஞ்ச நல்லூரைப் பத்தி சொல்லு! அப்புறம் என்னோட நல்லூரைப் பத்தி சொல்றேன்.

 “சிவன் கோவில் போயிருந்தேன் சார்! என்னை அப்படியே மயக்கிடுச்சு! தஞ்சாவூர் கோவிலைவிடப் பழமையானதாம். சோழன் கோச்செங்கணான் கட்டின மாடக் கோவிலாமே? என்ன பிரும்மாண்ட சுயம்பு லிங்கம். அதில ஜீவசக்தியுள்ள ஓட்டை வேற. கீழே ஆவுடையார். மேலே அஞ்சு அடி லிங்கம் ! மாடி ஏரித்தான் சாமியைப் பார்க்க முடியும். சிவனோட 25 அவதார சிற்பம். அங்க நவக்கிரகமே கிடையாதாம். முக்கியமா சிவலிங்கத்தோட கலர் ஒவ்வொரு இரண்டரை மணிக்கு மாறிக்கிட்டே இருந்தது. அஞ்சு கலர் – செம்பு கலர், இளஞ்சிவப்பு கலர், உருக்கின தங்கக் கலர், நவரத்தினப் பச்சைக் கலர், கடைசியா சாயங்காரம் நாம மனசில என்ன நினைக்கிறோமோ அந்தக் கலர் இப்படி ! அதனால் அவருக்குப் பஞ்ச வர்னேஸ்வரர் என்ற பெயர் வேற. தேவார நால்வரும் நல்லூர் கோவிலைப் பத்திப் பாட்டு பாடியிருக்காங்க! அப்பர் பெருமான் தலையில சிவன் தன் பாதத்தை வைத்து ஆசி கொடுத்த இடமாம். அதனால் இங்க பெருமாள் கோவில் மாதிரி சடாரி சேவை ! குந்திதேவி தான் பாபம் போக்கிக்க வந்த இடமாம். கும்பகோணத்தில 12 வருஷத்துக்கு ஒரு முறைதான் மகா மகம். இங்கே வருஷா வருஷம் மகம் விசேஷமாம். பிரும்ம தீர்த்தக் குளம்!   அம்மன் கிட்டே வேண்டிகிட்டா கல்யாணம் சீக்கிரம் நடக்குமாம்! 

அந்தக் கோவில் பத்தி ஒரு குறும் படமும் எடுத்தேன்.

மறந்துட்டேனே !  அந்த ராத்திரி பூரா நடக்கிற வீரபத்திர சாமி கணநாத பூஜை .. அப்பப்பா ..

“ என்ன சொன்னே ? வீரபத்திர பூசையா ! நிறுத்து ! நிறுத்து! மேலே எதுவும் சொல்லாதே !”

 அவர் படபடப்பு அடங்க ஒரு மணி நேரம் ஆயிற்று. அதுவும் ஒரு சொம்புத் தண்ணீரைக் குடிச்சப்பிறகுதான் கொஞ்சம் நார்மலுக்கு வந்தார். மிரட்டல் உருட்டல் என்று எப்போதும் ஒருவித கெத்தோடு இருக்கும் பி டிமாஸ்டர் காத்துப் போன புட்பால் போல இருந்தார்.

 அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை இப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தோம்.

“ ரைட்டர் தம்பி ! நானும் பத்து வயசு வரைக்கும் அந்த ஊரில இருந்திருக்கேன் ! நீ சொன்ன கோவில் விவரம் எதுவும் அன்னிக்கு எனக்குத் தெரியாது. கோயில் குளத்தில ஆயிரம் தடவை குதிச்சிருக்கேன். கோயில் நந்தவனத்தில மாங்கா திருடியிருக்கேன். நாங்க இருந்தது குடியானத் தெரு. பத்து வருசம் அந்த ஊரில கோயில் மாடு மாதிரி திரிஞ்சேன். மாடு ஆடு பண்ணி இதுக கூட நானும் ஒரு மிருகமா இருந்தேன். அந்த வீரபத்திர சாமி பலிபீடப் பூசை அன்னிக்குத்தான் நான் அடிபட்டு மிதி பட்டு ஆத்தாக்காரி கொள்ளிக் கட்டையெடுத்து சூடு போடத் துரத்த ஊரே என்னைத் துரத்த ஊரை விட்டே ஓடிப்போனேன்! அதுக்கப்பறம் அந்த ஊருக்கே போகலை!”

விவரத்தை கதையை அப்புறம் சொல்றேனே! இன்னிக்கு இது போதும் ” 

சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வீட்டுக்குப் புறப்பட்டார்.

(இன்னும் வராம விடுமா?)

 

 

 

 

பார்த்தது, கேட்டது, படித்தது – நினைவில் நின்றது – சுவாமிநாதன்

40 வருடங்கள் ஆகியிருக்கும். ஒரு டீவி நாடகம் – இரண்டு வார எபிசோட்.

ஒரு நடுத்தரக் குடும்பம். அப்பா அம்மா, 2 பையன்கள், பெரிய வனுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. சின்னவன் படிக்கிறான் 2 பெண்கள் கல்யாணமாகி வேறு இடத்தில் வசிக்கின்றார்கள். வயதான காது கேட்காத தாத்தா ஒரு தனி அறையில். டீவியில் நியூஸ் பார்ப்பார், நியூஸ் பேப்பர் முழுவதும் படிப்பார். சாப்பிடுவார், ஈசி சேரிலேயே பல சமயம் தூங்கி விடுவார். சந்தர்ப்பம் / ஆள் கிடைத்தால் பேசுவார், வாதிடுவார்.

பெரிய மகன் வெளியூருக்கு சென்றிருக்கிறான். ஆபீஸ் சம்பந்தமான வேலை முடித்துவிட்டு அன்று விமானம் மூலம் டெல்லியிலிருந்து திரும்ப வரப் போகிறான்.

அப்பா பரமசிவம் பெரிதாக ” கமலா இங்கே வா. நம்ம பையன் 9 மணி ப்ளைட்லேதானே கிளம்பினான். போன் கூட பண்ணினானே கொஞ்ச நேரத்துல ப்ளைட்ல ஏறிடுவேன், ரைட் டைம் தான் 12.30க்கு வந்துடுவேன்னு சொன்னான் இல்லையா? “

“ஆமாம் இப்போ என்ன மணி 11 தானே ஆறது. ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கேள்”

“அது இல்லடி, டீவில என்னமோ அந்த ப்ளேனை தீவிரவாதிகள் கடத்தி லாகூர் கொண்டு போரார்களாம். ஒண்ணும் புரியல்ல”

“என்னண்ணா சொல்றேள் – டெல்லி டு மதராஸ் ப்ளேனையா லாகூருக்கு கடத்திட்டா? சரியா கேளுங்கோ”

அரைகுறையாக கேட்ட மருமகள் “என்ன மாமா சொல்றேள் ஏதோ ப்ளேன் கடத்திட்டான்னு சொல்றேள். இவர் வர ப்ளைட் இல்லையே? “

“ஆமாம்மா அந்த நம்பர் தான் – டெல்லி-மதராஸ் ப்ளைட் அப்படீன்னு தான் சொல்றான். நீ வந்து பாரு”

“அடப் பாவமே, இது என்ன சோதனை. கொஞ்சம் நேரம் முன்னாலதான ட்ரங்கால்ல பேசினார். கடவுளே” என்று அழ ஆரம்பிக்கிறாள்.

பதற்றம் பற்றிக் கொள்கிறது. அம்மா அழுவதைப் பாத்து, குழந்தை அழத் துவங்குகிறது. சின்னவன் வெளியிலே இருந்து வேகமா வந்து. “என்னப்பா, ப்ளேனை கடத்திட்டாளாம். பாம் வைத்து வெடிக்கச் போறோம்னு சொல்றாளாம். லாகூர்ல இறங்கிட்டாளாம். அண்ணா வர ப்ளைட்னு சொல்றா” கண் கலங்குகிறது.

டிவியை வால்யூம் அதிகமாக்கி விட்டு கேட்கத் துவங்குகிறார்கள்.

கதவு தட்டப் படுகிறது. திறந்தால் பெரிய பெண் 2 குழந்தைகளோடு உள்ளே வருகிறாள் “என்ன அப்பா இது. கேள்விப் பட்டதும் உடனே கிளம்பி வந்துட்டேன். பாவம் மன்னி, சின்ன குழந்தை வேற. அவர் அப்புறமா வரேன்னு சொல்லி இருக்கார். ஏர் போர்ட்ல தெரிஞ்சவர் இருக்காறாம். விசாரிக்கிறேன்னு சொல்றார்”

கதவு திறந்து இருக்கிறது “என்னடா பரமசிவம் இது.. இப்படி ஆயுடுத்து… என்ன பண்ணப் போற. என்ன நடக்கப் போறதுன்னே தெரியல்லயே.” என்று பக்கத்து வீட்டு மாமா வந்து ஒரு சேரில் உட்கார்ந்து கொள்கிறார்.

கொஞ்சம் நேரத்தில் சித்தி, சித்தப்பா, மாமா, மாமி என்று வருகிறார்கள். பின்னர் இன்னொரு பெண் போன் செய்து, தான் கிளம்பி விட்டதாகவும், 4 மணிக்குள் வந்து விடுவேன் என்று சொல்கிறாள்.

வீடு முழுவதும் மனிதர்கள். ஜமக்காளம் போட்டு சிலர் கீழே உட்கார்ந்து கொள்கிறார்கள்.

பேரன் கேட்கிறான் ”அம்மா என்னமோ ப்ளேன்ல பாம் வெடிக்க போராளாமே எப்போ வெடிப்பா? டீவீ ல காட்டு வாளா? நாமெல்லாம் பாக்கலாமா?”

“டேய் சும்மா இரு. மன்னீ இவனுக்கு ஏதாவது டிபன் இருந்தா கொடுங்கோ. எண்ணும் சாப்டாமலே கூட்டிண்டு வந்துட்டேன். அவனுக்கு இட்லி பிடிக்காது, சாம்பார் தொட்டுக்க மாட்டான். வேற ஏதாவது கொடுங்கோ.”

எல்லோருக்கும் காபி, அது இதுன்னு எல்லாம் நடக்கிறது. அப்பா, அம்மா இரண்டு பேரும் கலக்கத்தோடு டீவி யையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மாப்பிள்ளை வருகிறார். ” மாமா அந்த ப்ளேன்ல பயணம் செஞ்ச பயணிகள் பெயர் லிஸ்டில் அண்ணாவோட பெயர் இல்லை. லிஸ்ட் தரவு பாத்துட்டு என் ப்ரெண்ட் சொல்லிட்டான்”

“அது எப்படி மாப்பிள்ளை. பையன் ட்ரங்கால்ல பேசினானே. இன்னும் ஒன்றரை மணி நேரத்துல புறப்படப்பொறதுன்னு சொன்னானே”
அப்பா கொஞ்சம் சந்தோஷம் நிறைய சந்தேகத்தோடு கேட்கிறார்.

அம்மா “அப்படியா.. நல்ல வார்த்தை சொன்னேள். உண்மையா இருக்கட்டும். பிள்ளையாரை 108 சுத்து சுத்தறேன்” கண்ணீருடனே சொல்கிறாள்.

ஆளாளுக்கு ஏதேதோ பேசுகிறார்கள். பேரன் மட்டும் எப்படி பாம் வெடிக்கும். அது வேற சேனலான்னு அப்பப்போ கேட்கிறான்.

வந்தவர்கள், சாப்பிட, குடிக்க, பேச என்று ஒரே களேபரம். 
அப்போ போன் அடிக்கிறது.  அவசரமா அப்பா எடுக்கிறார்.  “யாரு நீயா?  ஏம்பா இத்தனை நேரம் கான்டாக்டே பண்ணல? “
பேசி முடிச்சிட்டு விபரமா சொல்றார்.
“அவன் போகவேண்டிய ப்ளைட்ல யாருக்கோ ரொம்ப அவசரமா ஒருத்தர் போகவேண்டி இருந்து தாம். யாராவது விட்டுக் கொடுத்தால் அடுத்த ப்ளைட் லேயே அரேஞ் பண்ணித் தரோம்னு ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணினாளாம் இவன் பாடப்பட்டு சரின்னு சொன்னானாம்.  அதுக்கப்புறம் ட்ரன்ங்கால் கிடைக்கவே இல்லையாம்.  அதுக்கு அப்புறம் hijack அது இதுன்னு போன் பக்கமே போக முடியாம போச்சாம்.  அடுத்த ப்ளைட்ல ஏறி வந்துடுவானாம். அந்த தீவிரவாதிகளை மடக்கி கைது பண்ணிட்டாளாம்.  இன்னும் கொஞ்ச நேரத்தில டீவீல சொல்வான்னு சொன்னான்”
“அப்பாடா”  என்று எல்லோரும் அமரும் போது உள்ளே இருந்து தாத்தா வெளியே வந்து.  “பாத்தியா டீவில நம்ம மதறாசுக்கு வர ப்ளைட்ட யாரோ தீவிரவாதிகள் கடத்தி லாகூருக்கு கொண்டு போராளாமே.  அந்த ப்ளைட்ல வரவாளுடைய வீட்டில எவ்வளவு கவலையா இருப்பா?  பாவமில்லையா.  நீங்க எங்க நியூசெல்லாம் பாக்கப் போரேள், ஏதாவது சீரியல் பாத்திண்டிருப்பேள்   அட எல்லோரும் வன்திருக்கேள் ஜாலியா இருக்கேள்.  அந்த பயணிகளுடைய வீட்டு மனுஷா எவ்வளவு கவலையா இருப்பா. கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தேளா?   என்னமோ போங்கோ” என்று சொல்லிவிட்டு திரும்ப தன் ரூமுக்குப் போய் டீவி பார்க்க உட்காரு கிறார். 
கைலாசம் பாலசந்தர் - தமிழ் விக்கிப்பீடியா
அதோடு முடியும். 
இது ‘ஏர் பஸ்’  என்கிற பாலச்சந்தரின் படைப்பு.  அந்த தாத்தாவின் கடைசி பேச்சு, மற்றும் வீட்டில் மனக்கஷ்டத்தோடு இருக்கும் இடத்தில் வந்திருப்பவர்கள் தங்கள் தேவைகளைப் பெறுவதில் காட்டும் ஆர்வம்… பார்ப்பவர்களை அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றது. 
சோகத்துக்கு நடுவிலே இழையோடிய  நகைச்சுவை  மிக மிக நன்றாக புகுத்தி இருப்பார். 
 இப்போதும் அந்த பாத்திரங்கள் / நடிகர்கள் கண்முன் நிழலாடுகிறது
இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய "ஏர் பஸ் பாகம் - 1" குறும்படம்  | K.Balachander | JayaTv - YouTube

நினைவுகள் தொடர்கதை …… எஸ் வி வேணுகோபாலன் 

திருமகன் சக்கரவர்த்தி

 

Caricature of Brahmin/iyengar uncleஜூலை 18 அன்று தான் எனக்கு அவர் மிகவும் நெருக்கமாகிப் போனார். எனக்கு வயது 12 அப்போது. அதற்குமுன் அவரைப் பார்த்தது இல்லையா என்றால் பாராது இருந்திருக்கவே முடியாது. எனது தாய்மாமன் அவர். ஆனால், அந்த ஞாயிற்றுக் கிழமை மாலை பதட்டமாக அவர் வீட்டுக்குள் நுழைந்த தருணம், உயரமான தனக்குத் தலை இடித்துவிடக் கூடாதென்று வாசல் படி கடக்கையில் தலையைத் தாழ்த்திக் கொண்டாரா, தனக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த அதிர்ச்சி செய்தியைக் காட்சியாகக் காண வேண்டிய கட்டத்தின் வேதனையால் தன்னுடல் குறுக்கிக் கொண்டு நுழைந்து வந்தாரா தெரியாது.  
காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியில் இருந்த அந்த இல்லத்தில் அன்று பிற்பகல் மரித்துப் போயிருந்தார் என் பாட்டனார் கே சி ராஜகோபாலாச்சாரி. அவர் உடலருகே எங்கள் பாட்டியோடு நாங்கள் அழுது கொண்டிருந்த நேரத்தில், செய்தி மெல்லப் பரவி ஒவ்வொருவராக உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து கொண்டிருந்த நேரமது.  என் மாமா உள்ளே நுழையும்போது, உள்ளிருந்து என் கடைசி சித்தி ருக்மணி அவரை நோக்கி, ‘பிச்சை…அப்பா போயிட்டார்டா’ என்று பெருங்குரல் எடுத்துக் கதறியது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மூன்று பெண் குழந்தைகளை அடுத்துப் பிறந்த ஆண் மகவுக்கு சக்கரவர்த்தி என்று பெயரிட்டிருந்தாலும், பிச்சை என்றே அழைக்கத் தொடங்கி இருந்தனர், அக்கால ஐதீகப் படி. 
தாத்தாவைப் பறிகொடுத்த எனது சொந்தத் துயரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. இரண்டரை வயதில் தாயை இழந்த என்னை வாலாஜாபாத் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான தாத்தாவும், அவரைக் கட்டியாண்ட என் பத்தாணி பாட்டியும் தான் வளர்த்தது. இரண்டாம் வகுப்பு படிக்கையில் அங்கிருந்து சென்னைக்கு என் தந்தையோடு வாசிக்கச் சென்றவனை, ஒவ்வோர் ஆண்டு விடுமுறையின் போது பார்க்கும்போதும் என்னோடு வந்து படி என்று என் தாத்தா மிகவும் பாசத்தோடு கேட்டுக் கொண்டிருக்கவே, எட்டாம் வகுப்பு படிக்க பாட்டன் பாட்டி வீட்டுக்குப் போனேன். அப்போதுதான் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு இடம் பெயர்ந்திருந்தனர்.  தாத்தா ஓய்வு பெற்று விட்டிருந்தார், கடும் உடல் நலக்குறைவினால் அப்போது படுத்த படுக்கையாக இருந்தது என்னைப் புரட்டிப் போட்டது. பள்ளிக்கூடம் திறந்த சில நாட்களுக்குள் மாரடைப்பால் மறைந்து விட்டார் தாத்தா. 
ஆனால், ருக்மணி சித்தியின் அந்த அழுகைக்குரலில் இருந்த செய்தி, தகப்பனை இழந்துவிட்ட என் மாமாவிடம் என்னை மிகுந்த அன்போடு நெருக்கமாக்கி விட்டிருந்தது. இறுதிச் சடங்குகள், தொடர்ந்த சடங்குகள், பின்னர் மாதமொருவரை திதி கொடுக்க அவர் சென்னையிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்த எல்லாக் காலங்களிலும் அவரோடு ஒட்டிக் கொண்டிருந்தேன். அவர் எங்கே உட்கார்ந்தாலும், யாரோடு பேசிக் கொண்டிருந்தாலும், தனிமையில் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலும், நான் ஏதோ அவரை விடப் பெரிய ஆள் போலவும், அவருக்கு சமாதானம் சொல்லவே நியமிக்கப்பட்டவன் போலவும் கருதிக்கொண்டிருந்தேனோ தெரியவில்லை.  அவரது நட்பு வட்டத்தில் உறவு வட்டத்தில் அவரது வயதையொத்த யார் வந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தாலும் நானும் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.
தாய் மாமன் உறவு யாருக்குத் தான் உள்ளத்திற்கு நெருக்கமாக இருக்காது! ஆனால் எங்கள் நெருக்கம் இன்னும் ஆழமானது என்றே பட்டது. தனக்கு நெருக்கமான அக்காவின் பிள்ளைகள் நாங்கள், தாயற்ற குழந்தைகள் என்பதால் அவரது பிடி கூடுதல் நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். எங்கள் சித்திகள் லலிதா, ருக்மணி, பிச்சை மாமா மூவருமே எங்கள் மீது அளவற்ற பாசம் பொழிந்து கொண்டிருந்தவர்கள் தங்களது இறுதிக்காலம் வரை.
நாட்கள் நகர நகர, துக்கம் நடந்த வீட்டில் ஓராண்டுக்குள் நல்லதும் நடக்க வேண்டும் என்று பேச்சு ஆரம்பித்தது. மாமாவுக்கான கல்யாணப் பேச்சு அது. தாத்தாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்குமுன் அவருக்குத் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று எல்லோரும் பேசத் தொடங்கி இருந்தனர். அது முக்கியமில்லை, மாமாவின் மனசுக்குள் யார் இருந்தது என்று அந்தக் கதவை அவர் மெல்லத் திறந்து கூச்சப் புன்னகையோடு சொல்ல அருகிருந்து கேட்ட இடம், மறக்காது ஒரு போதும்.  தனது மாமன் மகள் மீது அபார நேசம் வைத்திருந்ததை அவரது கண்களில் படித்தேன் அன்று. எங்களிடம் வாய் விட்டுச் சொல்லவும் செய்தார். ஜூன் 18இல் அவர் கைப்பிடித்தது எனக்கு சித்தப்பா மகளான மாலதியை.  அக்காவே மாமியுமான அன்பின் உறவு அது.   
கல்லூரிப் படிப்புக்கு சென்னை செல்லும்போது பாட்டி எங்களை மாமன் வீட்டில் இருத்தி வாசிக்க வைத்தாள். அவள் காஞ்சியை விட்டு நகர்வதாயில்லை, வாலாஜாபாத் அருகே பாலாற்றங்கரை அடுத்த சிற்றூர் இரண்டில் இருந்த நிலபுலன்களை அவளைப் போல் இன்னொருவர் பராமரித்து வந்திருக்க முடியாது. வேகாத வெயிலில் அவள் காலணி கூட அணியாது நடந்த வெற்றுப் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டுக் கொண்டது பாலாற்று மணல். 
மேற்கு மாம்பலத்தில் பத்துக் குடித்தனங்களுள் ஒன்றாக மாமாவின் குடில்.  அனுமார் கோயில் தெரு ஆறாம் நம்பர் வீடு எப்போதும் கலகலப்பான சூழலில் இருக்கும். மாடியில் கடைசி போர்ஷன் மாமா இருந்தது.  அந்த மூன்றாண்டுக் கதைகள் ஒரு நாவலுக்கு உரியவை. மாம்பலத்தில் இருந்து சேத்துப்பட்டு வரை ரயிலில் சென்று, அங்கே ரயிலடி அருகில் இருந்து 71 எண் பேருந்து பிடித்து அம்பத்தூர் எஸ்டேட்டில் இருக்கும் தனது பணியிடத்திற்குச் சென்று வருவார் மாமா.  
டான்சி நிறுவனத்தில் டிராஃப்ட்ஸ்மேன் ஆகப் பணியாற்றி வந்த அவரது பொறியியல் கட்டுமான டிராயிங் அமர்க்களமாக இருக்கும்.  எங்கே எப்போது டீஸ்கொயர்  பார்த்தாலும் சக்கரவர்த்தி மாமா நினைவு வந்துவிடும்.  மாலதி மாமி எங்களைக் கண்ணாகப் பார்த்துக் கொண்டவர். மாமாவின் மணியான மூன்று குழந்தைகளையும் போட்டி போட்டுக் கொண்டு பார்த்துக் கொண்ட நாட்கள் மறக்க முடியாதவை. அவர்களைப் பள்ளிக்கூடத்தில் சென்று சேர்த்துவிட்டு வந்த நாட்கள் உள்பட. 
அவர்களைத் தூளியில் போட்டு ஆட்டிக் கொண்டே பாடுவது, அவர்களுக்குக் கதை சொல்வது, விளையாட்டு காட்டுவது எல்லாம் ஐம்பது ஆண்டு ஆனாலும் நினைவில் நிற்கிறது. முதலாமவன் கிஷோர். அவனுக்கு என்றே அம்மா தாய் விளையாட்டு ஒன்று இட்டுக்கட்டி இருந்தேன். அம்மாத் தாய் என்றால் பேய். அது வாசலில் வந்து காத்திருக்கிறது, யார் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் பிடித்துக் கொண்டு போய்விடும். ஆனால் எனக்கு மட்டும் அதைப் பார்த்தால் பயம் கிடையாது என்று சொல்லி முடிப்பேன். கிஷோர் மெல்லச் சொல்ல வேண்டும், மாமா வாசலில் யாரும் இல்ல… தெரியும்… ஆனா அம்மாத் தாய் இருந்தாலும் இருக்கும்.  எனக்குத் தான் பயம் கிடையாதே…அம்மா தாயாவது…கும்மா தாயாவது என்று சொல்லிக் கொண்டே நான் வாசலுக்குப்போய் எட்டிப் பார்த்துவிட்டு அலறியடித்துக் கொண்டு உள்ளே ஓடிவருவேன் …விழுந்து விழுந்து சிரிப்பான் கிஷோர். அதற்குமுன் போர்வையை எடுத்து மேலே தலைவரை மூடிக்கொண்டு வாசலில் போய் நின்று அம்மாத்தாய் என்றால் எப்படி இருக்கும் என்று பயங்காட்டிவிட்டு வரவேண்டும். என்னோடு மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த சித்தி மகன் ராஜூவுக்கும் இந்த விளையாட்டு பிடிக்கும், அவனும் கூட சேர்ந்து நடிப்பான் இந்த விளையாட்டில். எல்லோரும் சிரித்து விளையாடிக் கொண்டிருப்போம். 
மாமா வந்தால் பெரும்பாலும் நிறுத்தி விடுவோம். அல்லது அவர் நாளேடு புத்தகம் ஏதாவது ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது நாங்கள் இந்த ஆட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்போம். ஒரு நாள் மாமா, டேய்…ரொம்ப போர் அடிக்குது…அந்த அம்மாத்தாய் விளையாட்டு எனக்காக செய்டா என்று கேட்க அவ்வளவு தான் வீடு முழுக்கவும் சேர்ந்து கொண்டது அதை ரசிக்க.  அவரது குழந்தைமை உள்ளம் அசத்தலானது. தெரியாமல் அரசியல் கூட்டத்தில் நடிகர் சோ பேசுவதைக் கேட்கப்போய் இரவு தாமதமாகத் திரும்பி வந்து மாட்டிக் கொண்டு முழிக்கையில், ஒரு பாட்டம் எங்களைத் தித்தித்த தீர்த்துவிட்டு, ஏம்பா…சோ என்ன பேசினார்னு யாருமே சொல்லலியே என்று அவர் கேட்டதும் வீடு முழுக்க அடக்கமாட்டாத சிரிப்பில் வெடித்தது, இறுதிவரை மாமாவுக்கு சொல்லவில்லை, அன்று சோ வரவே இல்லை என்று.  அரசியல் சினிமா ஒன்று விடாது அவரோடு அடித்த கூத்துகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. 
சினிமா அரட்டை ஒரு வேளை என் தாய் வீட்டு சீதனமா என்று தெரியாது, என் மாமாவுக்கு சமமாக அமர்ந்து திரைப்படங்கள் பற்றி நாங்களும் அன்பு கலந்திருந்த வம்பு அது. எம் கே டி பாகவதரின் மகா ரசிகரான மாமா, சொப்பன வாழ்வில் மறந்து …..என்று ஒரு தம் கட்டி இழுத்து, நிறுத்தி, சுப்ரமண்ய சுவாமி…உனை மறந்தார்…என்ற இடத்தில அந்த சுவாமிக்கு அபார அழுத்தம் கொடுத்து, அடுத்த அடியில் அந்தோ….என்ற நீட்டிப்பும், அற்ப பணப்பேய் பிடித்தே…என்று வளர்த்தெடுக்கும் போது அராஜக ரகளை செய்து ரசித்துக் கைதட்டி அட்டகாசம் செய்வோம்.  
அடுத்த வரிசையில் சி எஸ் ஜெயராமனின் அணுக்கத் தொண்டர் மாமா. அதுவும், இரத்தக் கண்ணீரின் ‘குற்றம் புரிந்தவன்…’ அதிலும்  ‘நிம்மதி ஏது’ என்று அவர் எடுத்த குரல் எம் ஆர் ராதாவுக்குக் கேட்டதா தெரியாது.  அடுத்து, இருக்கவே இருக்கிறது, வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள் …அதை லயித்துப் பாடுவார் மாமா. சிவாஜியின் குரலில் இடையே இடையே வரும் வரிகள் அவ்வண்ணமே இசைத்தால் தான் கடமை நிறைவேறும் அவருக்கு. 
அதற்காக டி எம் எஸ் பிடிக்காது என்றில்லை…’பெண்களை நம்பாதே…கண்களே பெண்களை நம்பாதே’ மாமாவின் சிக்னேச்சர் சாங்!  ‘அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை’ பாடலின் தொகையறா அவருக்கு முக்கியமானது, ‘பத்து மாசம் சுமந்து பெற்றாள் ..பகலிரவாய் விழித்திருந்து…. ‘ முழுக்க அவரே நாயகனாகிப் பாடுவார். ‘யாரடி நீ மோகினி…’ பாடலில் டி எம் எஸ் , ஹா சொல்லுமிடம் மாமா அசாத்திய கம்பீரத்தோடு சொல்வார். தானே சிவாஜியாகி விடுவார். உத்தம புத்திரன் படத்தில் எந்தெந்தப் பாடல்கள் யார் பாடியது என்று அவருக்கும் என் அண்ணன் ரவிக்கும் வாத பிரதிவாதங்கள் ஓடும், ‘யாரு கிட்ட சொல்றே, சுசீலாவா பி லீலாவா பாக்கலாமா….பந்தயம் வச்சுக்கலாம், வர்றியா’ என்று அதற்கும் தம் கட்டுவார் மாமா.  
வசந்த மாளிகையின் ‘ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ பாடல் வந்த நாட்களில், கண்ணதாசன் தனக்காகவே அதை எழுதியதாக உணர்ந்தார் மாமா.  ‘கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா…அதில் கட்டில் அமைந்ததடா..கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை..இன்பச் சக்கரம் சுற்றுதடா…’ என்று நிறுத்துவார்.  அங்கே ஒரு கம்பீர சிரிப்பு இருக்கும், ஹா ஹ ஹா….’அதில் நான் சக்கரவர்த்தியடா …’  என்ற அடியைப் பாடும்போது மாமாவின் உடல் மொழி சொல்லும், எனக்கான பாடல் தான் இது என்று. 
2KMnO4+16HCl→2KCl+2MnCl2+8H2O+5Cl2. 

இது என்னது என்கிறீர்களா…குளோரின் தயாரிப்பு வேதியியல் சமன்பாடு. மாமாவுக்குத் தலைகீழ் மனப்பாடம். நான் கெமிஸ்ட்ரி எடுத்துப் படிக்கிறேன் என்றதும்,  ஈக்குவேஷன் சொல்லு பார்ப்போம் என்று அடிக்கடி கேட்பார்!  தலைவர் நினைவாற்றல் பயங்கரம்.  ஒரு செய்தி, ஒரு விஷயம் மறக்க மாட்டார். 

பிறகு ஆலங்குளம் பிராஜெக்ட் வரவும் மாமா குடும்பத்தை அழைத்துக் கொண்டு அங்கே சென்றாலும், எங்கள் படிப்புக்காக மாம்பலம் வீட்டை காலி செய்யவில்லை. பாட்டி காஞ்சிக்கும் சென்னைக்குமாக அலைந்து எங்களைக் கரை சேர்க்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள். மாமா பாட்டியைப் பார்க்கவும் அலுவலக வேலைகளுக்காகவும்  சென்னை வந்து செல்வார். நானும் அண்ணன் ரவியும் சித்தி மகன் ராஜூவும் எழும்பூர் ரயில் நிலையம் சென்று ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் மாமாவுக்கு இடம் பிடித்து அவர் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டு வருவது சுவாரசியமான அனுபவம். போர்ட்டர்களோடு சண்டை, வேறு பயணிகளோடு தள்ளுமுள்ளு எல்லாம் கடந்து ரயில் புறப்படும் போது மாமா வந்து சேர்கிற தருணமே அத்தனை இன்பமாக இருக்கும். அப்புறம் கண்டுபிடித்தோம், தி நகர் ராஜபாதர் தெருவில் ஒரு மாடியில் தென்னக ரயில்வே துணை அலுவலகம் ஒன்றில் சில ரயில்களுக்கு இரண்டிரண்டு டிக்கெட்டுகள் கோட்டா உண்டு என்று. அப்படியாக புக்கிங் செய்யவும் வழி கண்டுபிடித்தோம். 

எம் எஸ் சி படிக்க நான் கோவைக்குச் சென்றது, பின்னர் வேலை கிடைத்தது, இதற்குள் மாமா வேளச்சேரிக்குக் குடி பெயர்ந்தது எல்லாம் வேறு ஒரு காலத்திற்கு எல்லாவற்றையும் பெயர்த்துவிட்டது.  அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்பொழுது பார்த்துக் கொள்வதாயிற்று. மாமாவின் உடல் நலம் இலேசாக பாதிப்புற்றாலும் எங்களைப் பார்க்கத் துடிப்பார்.  நான் மருத்துவமனையில் போய் நின்றால், கனவில் சுகந்தா (என் அம்மாவின் பெயர்) வந்தாள் என்று ஆரம்பிப்பார். மாமியின் அக்கறையான கவனிப்பால் மாமா எழுபது கடந்து வந்து கொண்டிருந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் பரஸ்பரம் பார்த்து விசாரித்துக் கொள்வோம். மூன்று மகன்களுக்கும் திருமணம் முடிந்து பேரக்குழந்தைகள் அன்பும் சுவைத்து அவரது நிகழ்ச்சி நிரல் உறவுகளின் பொருளடர்த்தியோடு வளர்ந்தது.
2022இல் அவரது ஐம்பதாவது திருமண நாளில் அவரைப் போய்ப் பார்த்து ஆசி பெற்று வந்தோம்.   காஞ்சிபுரம் தவிர்த்து வேறு பயணங்கள் அதிகமின்றி மாறி இருந்தது. அவரது உடல் நலம் சார்ந்த புதிய சூழல்.  கனவில் சுகந்தா மட்டுமின்றி 2018இல் மறைந்த அடுத்த தமக்கை லலிதாவும் வரத் தொடங்கி இருந்தாள்.  கடந்த செப்டம்பரில் மூன்றாம் தமக்கை ருக்மணி எதிர்பாராது மாரடைப்பில் சட்டென்று மறைந்தது மாமாவை மிகவும் தாக்கியிருந்தது. அவரது நினைவு அடுக்குகளின் சுழற்சி இப்போது எதிரெதிர் திசையில் மாறி விட்டிருந்தது.  அசாத்திய நினைவாற்றலுக்குப் பெயரெடுத்திருந்த அவர் எப்போதோ இறந்துபோன உறவுக்காரர் பெயரைச் சொல்லி, பாவம் போய்விட்டார், எடுத்துவிட்டார்களா தெரியவில்லையே என்று திடீர் என்று கேட்கத் தொடங்கினார். குரல் தளர்ந்து போயிருந்தது. நடையை மெல்ல மறக்கத் தொடங்கி இருந்தன கால்கள்.
இரண்டு மாதங்களுக்குமுன் காஞ்சிபுரத்தில் உள்ள இல்லத்திற்கு மாமியை அழைத்துக் கொண்டு சென்றார். இந்த வரியில் இலக்கணப் பிழை இருக்கிறது. மாமாவின் ஆசைப்படி மாமி அவரை அழைத்துச் சென்றாள் என்பதே சரி. தனது பெற்றோர் வசித்து வந்த வீடு அவரது மனத்திற்கு நெருக்கமானது.  வைகாசி மாதம் கோயில் பிரும்மோற்சவ நேரத்தில் அங்கே இருக்கும் ஆசை அவருக்கு. அவரது எண்பதாவது பிறந்த நாள் அவரை நோக்கி மெல்ல வந்து கொண்டிருந்தது. அப்படியும் இப்படியும் மாத்திரை மருந்துகளுமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள் மாமி, அவருக்கும் சேர்த்து கோயிலுக்கு ஓடோடிப் போய் வந்து கொண்டிருந்தும்!
ந்த மே மாதம் 3ம் தேதி காலை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதி 60 A இலக்க வீட்டுக்கு நான் செல்கையில் எட்டாம் வகுப்பு படிக்க நான் குடியேறியிருந்த வீடு, வாசல் திண்ணைகள், அந்தக் காலத்து மரக்கதவு எல்லாம் அப்படியே இருந்தது.  உள்ளே நுழைகையில் அந்த வாசல்படி அவரை எனக்கு நினைவூட்டியது. 53 ஆண்டுகளுக்குமுன்  தாத்தா கிடத்தப்பட்டிருந்த அதே இடத்தில் குளிர்பதனப் பெட்டிக்குள் மாமாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய நாள் முற்பகல் பிரிந்து விட்டிருந்தது அவரது உயிர்.  

சுடுபனியும் குளிர் நெருப்பும் – 4 (ஐஸ்லாந்து பயணக் கட்டுரை) இந்திரநீலன் சுரேஷ்

சென்ற இதழில்,

ஜோன் மிகக் கேஷுவலாக, அதெல்லாம் சரி ‘ஒரு கண்டத்திலிருந்து (Continent) மற்றொரு கண்டத்தை’ ஒரு சிறிய நடை பாலத்தின் மூலம் கடந்திருக்கிறீர்களா?

இனி,

“கண்டம் விட்டு கண்டம் ? அதுவும் நடைப் பாலத்தின் மூலமா?!”

 

ஐஸ்லாந்தின் Reykjanes Peninsula வில் உள்ளது ‘மிடிலினா (MIDLINA)’ என்கிற 50அடி     நடைப்பாலம். வட GC2DK2E MIDLINA (Earthcache) in Iceland created by sukosun&piratebride     Bridge Between Continents – Iceland - Atlas Obscuraஅமெரிக்கா மற்றும் யுரேஷியாவின் Techtonic தகடுகளைப் பிரிக்கிறது இந்தப் பாலம்.

மரத்தினாலும், இரும்பினாலும் ஆன இந்த பாலத்தின் ஒரு முனை ‘வட அமெரிக்கா உங்களை வரவேற்கிறது’ என்கிறது. சில வினாடிகளில்,15 மீட்டர் நீளமுள்ள பாலத்தைக்  கடந்து அடுத்த முனையைத் தொட்டால், ‘ஐரோப்பா உங்களை வரவேற்கிறது’ என்ற வாசகத்தையும் காண முடிகிறது. பாலம் அடியில் நீரற்ற கரடு முரடான மண் ஓடை. இளைஞர்கள் இறங்கலாம் ; மற்றவர்கள் அவர்கள் இறங்குவதைப் பார்க்கலாம்.

 

இந்த இடத்தை ப்ளூ லகூன் பகுதியிலிருந்து சுமார் 25 நிமிடத்திலும், ரேக்கவிக் நகரிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திலும் வாகனம் மூலம்  அடையலாம். சுற்றிலும் லாவா படுகைகள்,  அதன் காரணமாக ஏற்பட்ட பள்ளங்களைப் (CRATERS) பார்க்கலாம். அருகில் Sandvik என்கிற கரிய மணல் பீச் ஒன்றும் உள்ளது. இந்த பீச்சில் எடுக்கும் போட்டாக்கள் லைக்’களைக் குவிக்கும் என்பது சமூக ஊடகத்தோர் வாக்கு!

Stora-Sandvik Beach in Iceland // Drone 4k - YouTube

அது சரி, ஒரு நாட்டுக்கு வந்துவிட்டு அதன் தலைநகரை இன்னும் பார்க்காமல் இருந்தால் எப்படி..?

இதோ ரேக்கவிக் – ஐஸ்லாந்தின் தலைநகரம்!

ஜோன் லாவகமாக வாகனத்தை இயக்கியவாறு, மெலிதாக கசியும் இசையினூடே சொல்ல ஆரம்பித்தார்.

ரேக்கவிக்’ என்றால் ஐஸ்லாந்து மொழியில் Smoky Bay என்று அர்த்தம். ஆங்காங்கே  வெந்நீர் ஊற்றிலிருந்து வரும் நீராவி புகையினால் இந்த பெயர். ஐஸ்லாந்தின் அறுபது சதவீத மக்கள் இந்நகரில்தான் வசிக்கிறார்கள்.

டேனிஷ் ஆட்சியில் முதல் ஐஸ்லாந்து கவர்னரான SKUL MAGNUSSON ரேக்கவிக்கின் தந்தை என அழைக்கப்படுகிறார். பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐஸ்லாந்து மக்களை, ‘வாங்க, கம்பளி ஆடைகள் நெய்யலாம், கப்பல் கட்டலாம்’ என இன்னும் பல தொழில்களைத் துவக்க வைத்து புதிய பொருளாதாரத்திற்கு வித்திட்டவர் அவர்.

உலகத்தின் வடகோடி தலைநகரமான ரேக்கவிக்கில் என்ன செய்யலாம்?

Hallgrimskirkja: Planning Your Visitசுற்றுலாப் பயணிகளை முதலில் கவருவது நகரின் நடுநாயகமாக உள்ள HALLGRIMSKIRKJA தேவாலயத்தின் 73 மீட்டர் உயரமுள்ள கோபுரம். திருச்சி மலைக்கோட்டையிலிருந்து நகரைப் பார்ப்பது போல, கோபுரத்தின் மேலிருந்து நகரின் நான்கு புறங்களையும் காணலாம். அழகான மலை, சுற்றிப் பறந்து விரிந்த கடல், பொங்கி வழியும் அலைகளுக்கு நடுவே சிறு சிறு தீவுகள், படகு கூட்டங்கள், சாலையில் சப்தமின்றி செல்லும் வாகனங்கள், எந்த தொந்தரவுமற்ற அமைதியான நகர்ப்புறம் என்று அத்தனையும் தெரிகின்றன.

இந்த தேவாலயத்தின் வாயிலில் LEIF EIRILKSON சிலை வடிவில் கம்பீரமாக நிற்கிறார். ஐஸ்லாந்து சரித்திரத்தின் அடிப்படையில் இவர்தான் வட அமெரிக்காவில் காலடி வைத்த முதல் ஐரோப்பியர் என்கிறார்கள். மாலுமியான இவர் பயணித்து அடைந்ததாகக் கூறப்படும் ‘வின்லாண்ட்’ என்கிற இடம் தற்போதைய கனடாவிலுள்ள NEWFOUNDLAND இன் வடக்கு முனை என்கிறார்கள்.

OSKJUHLID என்ற குட்டி மலை மீது, அடுத்துப் பார்க்க வேண்டிய PERLAN மியூசியம் உள்ளது.

மலை மீது 6 பிரம்மாண்டமான வெந்நீர் டேங்க்குகள் வட்டவடிவில் நிறுவியுள்ளார்கள். அதன் மீது இந்த PERLAN மியூசியத்தை கட்டியிருக்கிறார்கள். சுற்றிலும் கண்ணாடி பதித்து வித்தியாசமான கட்டிடக்கலையுடன் விளங்குகிறது. அதற்கு மேல் நகரின் அழகைக் காண ஒரு சுழலும் உணவகம் வேறு உள்ளது.

கீழே தாங்கியிருக்கும் தண்ணீர் தொட்டிகளிலிருந்துதான் அருங்காட்சியகம் உள்படச் சுற்றுவட்டார இடங்களுக்குக் குழாய் மூலம் வெந்நீர்  விநியோகம் நடைபெறுகிறதாம்.

இங்கே உள்ள பிளானடோரியத்தில் NORTHERN Lights ஷோ கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்றார் ஜோன். பார்த்தோம்! சென்னை, கோட்டூர்புரம் பிர்லா பிளானடோரியத்தின் இருட்டில், விண்வெளி நட்சத்திரங்களில் மூழ்கிய அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. இங்கு, காண்பது வானத்திற்கும், பூமிக்கும் இடையே நடக்கும் பச்சை ஒளி ரகசியம்…! இது பற்றி, பின்னர் பேசுவோம்..

ஐஸ்லாந்தின் நிஜ பனி குகை பயணம் செல்ல முடியாதவர்களுக்காக, இந்த வளாகத்தில் 100 மீ செயற்கை பனிக் குகை உள்ளது.

மேலும், LATRABJARG என்கிற இடத்திலுள்ள மிகப் பெரிய ஐரோப்பாவின் பறவைகளின் சரணாலயத்தின் (BIRD CLIFF) முன்மாதிரியும் இங்குள்ளது.

வெளியே வந்ததும் ‘பசிக்கிறது’ என்றோம். ஜோன், மொபைலில் தேடி, காந்தி இந்தியன் ரெஸ்டாரண்ட் & பார் (!), பாம்பே பஜார், மாமா ராமா என்று பெயர்களை அடுக்கினார். ரெஸ்டாரண்டை அடைந்து உள்ளே நுழைந்ததும், பொன்னிற ‘பட்டர் நான்’ மணம் வரவேற்க, ஆஹா! என்றது மனம். இந்திய உணவுகளைப் பற்றி ஜோனுடன் பேசியபடி சூப், ஸ்டார்டர், பன்னீர் பட்டர் மசாலா பிறகு ஐஸ் கிரீம் என்று வரிசை கட்ட, அருகில் UK பர்மிங்ஹாமிலிருந்து வந்திருந்த இந்திய வம்சாவளி அன்பர் ஒருவர் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு,

“குளிர் ஊருக்குப் போனாலே எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடத் தோன்றும்” என்றார்.

“உங்களுக்குமா?” என்றேன்..!

காரிலிருந்து இறங்கி KOLAPORTIO FLEA மார்க்கெட்டில் நுழைந்தோம். இங்கு வேண்டியதை வாங்கலாம் அல்லது வேடிக்கை பார்க்கலாம். ஒரு புது நாட்டிற்குச் செல்லும் பொழுது இது போன்ற லோக்கல் அங்காடிக்குள் தவறாமல் நுழைவது எங்கள் வழக்கம். அங்குச் செலவிடும் நேரம், அந்த நாட்டின் வாழ்க்கை முறை பற்றி அறிய ஒரு டீசர் போல இருக்கும்.

Review of Sun Voyager | Reykjavik, Iceland, Europe - AFARஅடுத்து, HARPA CONCERT HALL இன் கட்டட அழகைப் பார்த்துவிட்டு, கடற்கரைச் சாலையில் 15 நிமிடங்கள் காலாற நடந்தால் அருகில் உள்ள SUN VOYAGER சிலையை அடையலாம். வாட்டர் ஃபிரன்ட் என அழைக்கப்படும் இந்த இடம், பாப்புலர் செல்ஃபி ஸ்பாட்.

அந்தி மயங்கும் நேரத்தில், இங்கிருந்து பார்த்தால் 914மீ உயரமுள்ள  மவுண்ட் ESJA கண்ணைக் கவருகிறது. அருகிலுள்ள குட்டி குட்டி தீவுகளும் மிக அழகாக உள்ளன. வித்தியாசமான உணவுகளைப் பதம் பார்க்க விரும்புவார்களுக்கு ஏற்ற இடம் HLEMMUR MALHOLL GRANDI இங்கிருந்து 15 நிமிட நடையில் உள்ளது. நிறைய ஹோட்டல்கள் அருகில் உள்ளன.

நம்ம ஊர் பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங் நடப்பது போல இங்கு Bath tub பிசினஸ் மீட்டிங்குகள் பிரபலமானவை! கடும் குளிரை இந்த நாட்டுக்குக் கொடுத்த இறைவன், கூடவே ஜீயோ தெர்மல் எனர்ஜி மூலம் சுடுநீரையும் அள்ளிக்கொடுத்த கருணையை என் சொல்ல?

சரித்திரப் பிரியர்கள், அருகிலுள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம். ‘வைக்கிங் காலத்திலிருந்து’ இன்றைய கால கட்டம் வரையிலான ஐஸ்லாந்தின் வளர்ச்சியை, வரலாற்று மற்றும் பாரம்பரிய பின்னணியோடு அறிந்து கொள்ளலாம்.

ஐரோப்பிய நாடுகளுக்கு பொதுவான இரவு வாழ்க்கை, இங்கும் உண்டு. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், இன்னிசை மழையின் நடுவே ரேக்கவிக்கின் இரவு கிளப்புகள் களைக் கட்டும்.

ரு நாள் சுற்றுலாவாக கோல்டன் சர்க்கிள் டூர், South Coast Tour, Glacial Lagoon Tour, Black sand Tour, Northern Lights Hunting Tour எனப்

பல சுற்றுலாக்கள் தலைநகரிலிருந்து கிளம்புகின்றன.

ரேக்கவிக் வரும் ஐஸ்லாந்து சுற்றுலா பயணிகள் விரும்பி செய்வது கோல்டன் சர்க்கிள் டூர். தலைநகரில் ஆரம்பித்து ஒரு வட்டம் அடித்து மீண்டும் தலைநகருக்கே திரும்பும் உல்லாச பயணம். குறுகிய கால அவகாசத்தில் ஐஸ்லாந்தின் பல பரிமாணங்களை  தொட்டுணர, கண்ணுக்குள் கவர்ந்து சேமிக்க, இந்த டூர் நல்லதொரு சந்தர்ப்பம்.

Thingvellir National Park: The Complete Guideகாலை உணவு முடித்துவிட்டு சுமார் 45 நிமிடத்தில் இந்த சுற்றுலாவின் முதல் இடமான THINGVELLIR National பூங்காவை அடையலாம். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்களில் இதுவும் ஒன்று. அலைபாயுதே படத்தின் ‘பச்சை நிறமே’ பாடலில் வரும் அத்தனை வண்ணங்களையும், இங்குப் பரந்து விரிந்திருக்கும் மண் பரப்பில் பார்க்கலாம்.

இங்குள்ள பெரிய அழகான ஏரி கண்ணைக் கவருகிறது. நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வட அமெரிக்க, யுரேஷிய  techtonic தகடுகளின் பிளவு இங்கிருக்கும் SILFRA  Fissure என்ற நீர் பிரதேசத்தின் வழியாகச் செல்கிறது. உங்களுக்கு ‘Snorkel’ தெரியும் என்றால் டைவ் அடித்து நீரின் அடி ஆழத்தில், இரு கண்டங்களையும் நீந்தித் தொடலாம் (பல் இருப்பவர்கள் பகோடா சாப்பிடலாம்!) ; தலைசிறந்த ஸ்கூபா டைவர்கள் நீந்த ஏங்கும் உலகின் தலைசிறந்த 10 இடங்களில் இந்த இடமும் ஒன்று.

THINGVELLIR National பூங்காவிலிருந்து கிளம்பி சுமார் 40 நிமிடங்கள் பயணித்தால் HAUKADALUR என்கிற ஜியோ தெர்மல் வயல் சென்று அடையலாம். சிறிதும் பெரிதுமான நீர் ஊற்றுகளுக்கு இடையே 13 ஆம் நூற்றாண்டிலிருந்து, காலங்கள் கடந்து, நிலை பெற்றிருக்கும் வெந்நீர் ஊற்றான ‘Geysir’ இங்கு மிகப் பிரபலம். ஆங்கில GEYSER என்கிற நீரை வெப்பமாக்கும் ஹீட்டரின் பெயர் இதிலிருந்துதான் வந்தது என்று சொல்கிறார்கள். அசத்தலாக 170 மீ வரை எழும்பி, தடால் என்று விழுந்து கொண்டிருக்கும் இந்த நீரூற்று இப்போது சற்று சோம்பலாகிப் போய், அடிக்கடி வருவதில்லை. ஆயினும்,

அந்த குறையை அருகில் உள்ள STROKKUR நீரூற்று தீர்த்து வைக்கிறது. பூமிக்குள் இருந்து திடீரென கிளம்பி அட்டகாசமாக, அதிசயத்தக்க உயரம் சென்று, சுற்றுப்புறத்தில் குப்பென்று நீராவி புகையையும், ஆவியையும் மக்கள் மீது தெளித்து, உடன் பட்டெனத் திரும்பி பூமிக்குள் சென்று விடுகிறது.. 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை எழும்ப ‘ஹோ!’ என்று கத்தியவாறே அதை வீடியோ எடுக்கக் கூட்டம் கேமராவுடன் காத்திருக்கிறது.

HAUKADALUR அருகில் அழகான GULLFOSS அருவி உள்ளது. கீழிருந்து மேல் நோக்கி எழும் வெந்நீர் ஊற்றை பார்த்த அடுத்த 15 நிமிடத்தில், மேலிருந்து கீழே விழும் குளிர்ந்த அருவியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? இயற்கையின்  மாறுபாடுகளை எப்படித்தான் புரிந்து கொள்வதோ!

இது ஒரு இரட்டை மடிப்பு அருவி. முதலில் 11மீ விழுந்து, திசை திரும்பி பிறகு மீண்டும் 21மீ  கீழிறங்கும் அற்புதம் இது! GULLFOSS என்பதற்கு பொன்னருவி என்று அர்த்தமாம். அருவியானது சூரிய கிரணங்களை நீருடன் கடத்தி செல்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.

வழியில் லஞ்ச் முடித்துவிட்டு, தொடர்ந்து மீதமுள்ள அரைவட்டப் பாதையில் ரேக்கவிக் நகரை நோக்கி, 50 நிமிடம் பயணித்தால் Kerid Crator பகுதியை அடையலாம். KERID என்பது எரிந்து முடிந்த  எரிமலையின் பெரிய பள்ளம் ஆகும். 170மீ அகலமும், 270மீ நீளமும், 55மீ ஆழமும் கொண்ட இந்த பள்ளம், 6500 வருடப் பழமையானது.

இந்த பெருங்குழியில் குளம் போலத் தேங்கியுள்ள நீர், சுற்றுச்சூழலை ரம்மியமாக மாற்றுகின்றது. Kerid Crator மேல்பகுதியில் சுற்றி நடக்கப் பாதையுள்ளது. படிக்கட்டுகள் மூலம் கீழே இறங்கி குளத்தைப் பார்த்து ரசிக்கலாம். சுற்றுப்புறத்திலுள்ள மண் பரப்புக்களும், தாவரங்களும் வெளிப்படுத்தும் அழகிய வண்ண சேர்க்கைகளைக் கண்டு களிக்க  இங்கு கோடைக்காலத்தில் செல்வது சிறப்பு.

Kerid இலிருந்து 15கிமீ தொலைவில் SELFOSS என்கிற மற்றொரு அருவி உள்ளது. கருப்பு நிற பாறை துகள்களை அடித்துக் கொண்டு வருவதால், நீர் சற்று சாம்பல் நிறத்தில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டுப் பயணித்தால், ஒரு மணி நேரத்தில் தலைநகர் ரேக்கவிக் வந்தடையலாம்.

“ஐஸ்லாந்து மொழியில் இரண்டு வார்த்தைகளைக் கண்டுபிடித்து விட்டேன் ஜோன் !”, என்றாள் என் மனைவி

VIK என்று முடிந்தால் அந்த இடம் Bay (விரி குடா) ; FOSS என்று முடிந்தால் அருவி.. என்ன சரியா?

ஜோன் சிரித்துக்கொண்டே, “இன்னும் இரண்டு முறை இங்கு வாருங்கள், ஐஸ்லாண்டிக் மொழியில் பேசவே ஆரம்பித்து விடுவீர்கள்” என்றவாறே, என்னைப் பார்த்து,

“வேல் பார்த்திருக்கிறீர்களா?”

“நாங்கள் பார்க்காத வேலா? வெற்றி வேல், வீர வேல், சக்தி வேல், ஞான வேல்..! ”

“போதுமே உங்கள் மொக்கை ஜோக்.. ஜோன் குறிப்பிடுவது Whale Shark !”

“ஆம் .. நாம் நாளை கடலுக்குள் போய் நிஜ Whale ஐப் பார்க்கப் போகிறோம்” என்றார் ஜோன், தங்கும் இடம் வாசலில் வாகனத்தை நிறுத்தியவாறே..

 

 (தொடரும்)

 

 

இடம் பொருள் இலக்கியம் 17. மொழிப் பயணம் – முனைவர் வ வே சு

Patna University Complex with Vintage Colonial Buildings Editorial Stock  Image - Image of travel, tourism: 279951034

வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட பயணம்; அதில் நிறைய குட்டிக் குட்டிப் பயணங்கள். பெற்றோர் கைபிடித்து அழைத்துச் சென்ற பயணங்கள்; நண்பர்களோடு சென்ற பயணங்கள்; இல்லறத் துணையோடு சென்ற பயணங்கள்; உறவுகளோடு சென்றவை; அலுவலக நிமித்தம் காரணமாகச் சென்றவை; அவசரத்துக்குச் சென்றவை; உல்லாசமாகச் சென்றவை; தனியாகச் சென்றவை; கூட்டமாகச் சென்றவை. இந்த நீளப் பட்டியல் எனக்கு மட்டும் சொந்தமல்ல; எல்லோருக்கும் சொந்தம்தான்.

கல்லூரி செல்லும் வயதில் நான் எடுத்த சில முடிவுகளும், பயணங்களும்தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான “விழி திறப்பு” வைபவங்கள். எனது இலக்கிய அனுபவங்களின் ஆரம்பப் புள்ளிகள் அவை. .

ஆண்டு 1969. இளங்கலை அறிவியல் முடித்து , மீண்டும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டு நின்ற நேரம்; ”இட ஒதுக்கீடு” திருவிளையாடல்களில் எனக்கு மருத்துவம் கிடைப்பது அரிது எனச் சொல்லப்பட்ட நேரம். நான் மேலே படிக்க விரும்பினேன். தாவர இயலில் முதுகலைப் பட்டம் பெற எண்ணினேன்; சென்னைக் கல்லூரிகளில் விண்ணப்பித்திருந்தேன். அக்கால கட்டத்தில் எம்.எஸ்ஸி பாடனி துறையில் “ஸ்பெஷலைசேஷன்” எதுவும்கிடையாது.

அன்றைக்கு மிகவும் புதுமையாக இருந்த, எனக்குப் பிடித்த “ஜெனிடிக்ஸ் அண்ட் பிளாண்ட் ப்ரீடிங்” (M.Sc Botany with specialisation in Genetics and Plant Breeding ) முதுகலைப் பட்டப்படிப்பை பாட்னா மற்றும் பனாரஸ் பல்கலைக்கழகங்கள் அறிவித்திருந்தன. அதற்கான விண்ணப்பங்களையும் வாங்கி வைத்திருந்தேன்.

அந்த ஏப்ரல் மாதத்தில் என் முன் மூன்று பாதைகள் தெரிந்தன. ஒன்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் சிறப்புப்பாடம் எதுவும் இல்லாத முதுகலைப் பட்ட வகுப்பில் சேர்வது; அல்லது சயின்ஸைத் துறந்து சி.ஏ. ( Any graduate was eligible to study for C.A at that time) படித்து ஆடிட்டர் ஆவது; அல்லது எனக்குப் பிடித்த சிறப்புப் பாடம் எடுத்துப் படிப்பது. இவற்றுள் முதல் இரண்டும் எளிது. காரணம் ,சென்னையில் நான் வீட்டில் இருந்து கொண்டே இவற்றைப் படிக்கலாம். ஆனால் மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுத்தால், பல நூறு மைல்கள் பயணம் செய்து, மொழி அறியாத ஊரில், மாணவர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். பொருள் செலவும் அதிகம்.

நான் மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

பாட்னா பல்கலைக் கழகத்தில் எனக்கு இடம் கிடைத்தது. பனாரஸ் பல்கலைக்கழகத்திலும் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. பெற்றோர்களோடு வட இந்தியா பயணம் பள்ளிப் பருவத்திலேயே போயிருக்கிறேன் என்றாலும், இந்தி மொழி அறவே தெரியாது. ஒரு நல்ல நாளில் இரவு எட்டு மணிக்கு மதராஸ் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் “ ஹௌரா மெயிலில்” பயணத்தைத் தொடங்கினேன். துணைக்கு யாரும் கூட வரவில்லை. இங்கிருந்து இரவு கிளம்பினால், மறுநாள் காலை விஜயவாடாவில் பிரேக் ஃபாஸ்ட்; மதியம் வால்டேர் என்னும் விசாகப்பட்டினத்தில் சாப்பாடு; இரவுச் சாப்பாடு ஒரிஸா மாநிலத்தைக் கடக்கும் போது இருக்கும். இதற்கு அடுத்த நாள் காலை ஒன்பது மணி அளவில் ஹௌராவை அடைவோம். அன்று மாலை அங்கிருந்து ஹௌரா –டெல்லி இரயிலில் ”டூஃபான் எக்ஸ்பிரஸ்) –ஏறினால் மறுநாள் காலை ஏழு மணி அளவில் பாட்னா இரயில் நிலைய ஜங்ஷன் வந்து சேரும். முதன் முறை தனியாகச் செல்லும் இந்தப் பயணம் என்னை எவ்விதம் பாதித்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் சுவையாக இருக்கும்.

முதலில் மொழிப் பிரச்சினை. கும்மிடிப்பூண்டி தாண்டியதுமே தமிழ் மறைந்துவிடும்; தெலுங்கின் ஆட்சி தொடங்கும். காக்கிநாடா பகுதி தாண்டியதும் ஒரிய மொழி கலந்த தெலுங்கு உள்ளே நுழையும்;, பிறகு பலாஸா வரை வங்காளம் கலந்த ஒரிஸாவும் அதைத்தாண்டி கல்கத்தாவில் தூய வங்காள மொழியும் பயின்று வரும். அங்கிருந்து மொகல்சராய் வரை சமாளிக்கும் வங்காள மொழி அதன் பிறகு பீகாரின் இந்தியில் வெளுத்துக்கட்ட ஆரம்பித்துவிடும். போகப் போக இதையெல்லாம் புரிந்துகொண்ட நான், அந்த முதல் பயணத்தில் கிட்டத்தட்ட மௌன சாமியாகத்தான் வீற்றிருந்தேன். ஏதோ என் மனத் திருப்திக்கு ஆங்கிலத்தில் பேசினேன். அதை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கைகள், முக பாவங்களையும், ஆக்‌ஷன்களையும் பார்த்தே பயணத்தில் என் தேவைகள் நிறைவேறின.

கல்கத்தா பெரிய மாநகரம் அல்லவா? ஆங்கிலேயர் காலத்து முதன்மை நகரமல்லவா?  நாட்டின் கவர்னர் ஜெனரல் வசித்த நகரம் அல்லவா? ஓரளவு ஆங்கிலத்தில் பேசி மாலை வரை தள்ளிவிட்டேன். அங்கிருந்து இரயில் ஏறிய பிறகு பீகார் இந்தியின் ஓலங்கள்தான்.

பாட்னாவில் என் கடைசி சித்தப்பா ஒரு சவுத் இண்டியன் ரெஸ்டரண்ட் வைத்திருந்தார். அவரோடு என் பெரியண்ணாவும் பணிபுரிந்து கொண்டிருந்தார் அங்கு சென்ற பிறகு பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கும். பிறகு மாணவர் விடுதியில் சேர்வதற்கும் அவர் உதவி செய்தார். அவர் அங்கு இருந்ததால்தான் என் தந்தை என்னைத் தனியாக அனுப்பினார்.

இதெல்லாம் ஆரம்ப உதவிதான். அதன் பின் இரண்டு ஆண்டுகள் , பல்கலைக்கழகமும், விடுதி வாழ்வும் நானும்தான். அவர்கள் பக்கம் திரும்பக் கூட நேரமில்லை. புதிய இடம், புதிய படிப்பு, புதிய நண்பர்கள் என்று நிறைய அனுபவங்கள். அவற்றுள் மொழி சம்பந்தப்பட்டவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் முதுநிலை வகுப்பில் மொத்தம் இருபது பேர்கள். பதினாறு மாணவர்கள் ஆறு மாணவிகள்.  என்னைத் தவிர அனைவருக்கும் இந்தி தெரியும். டெல்லி . ஜாம்ஷெட்பூர் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். எனது பிரச்சினை மொழியிலிருந்துதான் ஆரம்பித்தது. நான் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பேராசிரியர்களும் சாதாரணமாகப் பேசுகையில் இந்தியைத்தான் பயன்படுத்துவார்கள். நான் இந்தி தெரியாமல் ஆங்கிலம் பேசுகிறேன் என்று அவர்கள் நினைக்கவில்லை. ( இந்தி தெரியாமலும் ஒருவன் இந்தியாவில் இருப்பானா..!? ) ஏதோ நான் “கெத்து” காட்டுகிறேன் என நினைத்து வம்பு செய்தார்கள்.

இந்தப் பின்னணியில்தான் “ராகிங்” நடந்தது.

“உனக்கு இந்தி தெரியாதுதானே ! அப்படியென்றால் இதோ நாங்கள் சொல்லும் வார்த்தைகளை நமது வகுப்புப் பெண்களிடம் போய்ச் சொல்” என்று இரண்டொரு வார்த்தைகளைச் சொல்லச் சொன்னார்கள். இதில் ஏதோ தவறு உள்ளது என்று தெரிந்தும் தடுக்க இயலாமல் போய் அப்பெண்களிடம் , வார்த்தைகளை மட்டுமல்ல , நடந்த விவரத்தையும் சொன்னேன். எனது நல்ல காலம் அவர்கள் என்னைப் புரிந்து கொண்டார்கள். இந்தியில் அவை மிக மோசமான வார்த்தைகள். மேலும் அப்பெண்கள் இப்படி ஒரு “கிளாஸ் மேட்” ஐ நாமே இழிவு படுத்தலாமா என்று வகுப்புத் தோழர்களிடம் சண்டைக்கே போய்விட்டார்கள். எனக்கு உண்மையிலேயே இந்தி தெரியாது என்று அறிந்த பிறகு அத்தனை பேரும் போட்டி போட்டுக் கொண்டு எனக்கு இந்தி கற்பிக்கத் தொடங்கினர். “ஜிக்ரி தோஸ்த்: ஆகிவிட்டனர்.

இந்தியைத் தவிர வேறு மொழியில் பேச வாய்ப்பில்லாத ஊர். வகுப்பில் இந்தி; விடுதியில் இந்தி, வீதியில் இந்தி. திரையரங்கில் இந்தி; இத்துடன் இந்தி கற்றுக்கொடுக்கத் தயாராயிருந்த நண்பர்கள். பிறகென்ன? இரண்டொரு மாதங்களில் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவனைப் போலப் பேச ஆரம்பித்துவிட்டேன். குறிப்பாக “போஜ்பூரி” மொழி கலந்த இந்தியை பேச ஆரம்பித்துவிட்டேன். இது தவிர உருது கலந்த அழகான “லக்னோ இந்தி”, வடமொழி கலந்த தூய்மையான “உ பி இந்தி” பஞ்சாபியின் வலிமை கலந்த “டெல்லி இந்தி” ஆகியவற்றையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

பீகாருக்குள்ளேயே புழங்கும் “போஜ்புரி”, மகிஹி, மைதிலி போன்ற மொழிகளைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். அவற்றிலுள்ள இலக்கியங்கள் பற்றியும் அறிந்து கொண்டேன். கிரீஷ் குமார் தாகுர் என்ற விடுதி நண்பன். எனக்கு அடுத்த அறை அவன் மைதிலி மொழி பேசுபவன். ஆங்கிலத்தில் எம்.ஏ படிப்பவன்; என்னோடு நெருக்கமானவன். அந்த மைதிலி மொழியின் மிகப் பெரிய கவிஞரான “வித்யாபதி” யின் (Maithili and Sanskrit polymath-poet-saint, playwright, composer,) .நூற்றாண்டு விழாவை பல்கலைக்கழகம் பத்து நாட்கள் காலையும் மாலையுமாய் பெரிய ஷாமியானா பந்தல்கள் அமைத்து , அரங்கங்கள் , மேடைகள் போட்டு நடத்தியது. நண்பன் கிரீஷ் என்னை அவனோடு அழைத்துச் சென்று அவனது மொழியின் பல இலக்கிய நயங்களை எடுத்துச் சொன்னதை இன்றும் நான் நன்றியோடு நினைவுகூருகிறேன். ஒவ்வொரு மொழியின் பின்னாலும், அறிந்துகொள்ள வேண்டிய எத்தனை இலக்கியப் படைப்புகள் உள்ளன என்பதை அவன் மூலம் நான் அறிந்துகொண்டேன்.

பாட்னாவில் நான் மாணவனாக இருந்த போது, திரையரங்குகளில் சில நேரங்களில் பழைய ( பிளக் அண்ட் வொயிட்) படங்கள் திரையிடப்படும். ”கிளாஸிக்” படங்கள் என்பதால் மாணவர்களுக்கு டிக்கெட் விலை பாதி; ( இந்தச் சலுகை இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை) இதன் காரணமாக பழைய படங்களைப் பார்க்க விடுதி மாணவர்கள் விடுமுறை நாட்களில் கூட்டமாகக் கிளம்பிவிடுவோம்;

பிருதிவி ராஜ்கபூர், திலீப் குமார். மதுபாலா நடித்த திரைக்காவியமான “மொகல் ஏ ஆஸாம்”,  குரு தத்தின் அழியாப் புகழ் பெற்ற “காகஜ் கே ஃபூல்” ,சத்யஜித் ரேயின் “பாதெர் பாஞ்சாலி” “சாருலதா” ,வி.சாந்தாராமின் ”தோ ஆங்கே பாரா ஹாத்; கிஷோர் குமாரின் சூப்பர் படமான “படோசான்”, ராஜேந்திர குமாரும், சாதனாவும் நடித்த இதயத்தை திருடிய “மேரே மெஹபூப்” அப்போது பாபுலராக வந்த “ஆராதனா” “ அமர் பிரேம்” என்று பல படங்கள். பட்டியல் பெரிது. இங்கே இடம் கிடையாது

எத்தனை படங்கள் பார்த்தேன் என்பதல்ல ; இவையெல்லாம் நல்ல மொழி வளம் மிக்க வசனங்கள் உள்ள திரைக் காவியங்கள். இவற்றை அணு அணுவாக சொல்லுக்குச் சொல் அனுபவிக்க, இரசிக்க எனக்கு நடைபாவாடை விரித்தது எது ? மொழி அறிவுதானே !

இந்தி சரளமான பிறகு, வீட்டை விட்டுத் தனியனாக , வெகு தொலைவில் வந்து இருந்துகொண்டு  பாட்னாவிலும், பனாரஸ் பல்கலைக் கழகத்திலும் படிப்பதும் பழகுவதும் எனக்கு எந்த மனச் சோர்வையும் எப்போதும் தந்ததில்லை. இதுதான் மொழியின் ஆற்றல்.

எந்த பட்னா ஸ்டேஷனில் தனி ஆளாக இறங்கி, யார் அழைத்துச் செல்ல வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேனோ , அதே ஸ்டேஷனிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருபது நண்பர்கள் உடன்வந்து ஆரவாரத்துடன் மாலை போட்டு வழியனுப்ப சென்னைக்குத் திரும்பினேன். ஒரு புதிய பாதையைக் காட்டியது பட்னா, பனாரஸ் வாசம்; ஒரு புதிய உலகைக் காட்டியது மொழி என்னும் ஜன்னல். பல பக்கங்கள் எழுதக் கூடிய விவரங்கள் இன்னும் உண்டு. இப்போது இடைவேளை.

சென்னை திரும்பிய பிறகு விவேகானந்தா கல்லூரியிலேயே எனது பணி தொடங்கி நிறைவும் பெற்றது என்றாலும், சென்னை திரும்பு முன்னமேயே நான் உலகைக் கற்றுக் கொண்டுவிட்டேன். அதற்குக் காரணம் புதிய மொழி அறிவு. வெறும் தமிழனாக சென்னையிலிருந்து இரயில் ஏறியவன், இந்தியத் தமிழனாகத் திரும்பினேன்.

”பிற மொழிகளைக் கற்க வேண்டும்; இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் சென்று ஆறு மாதங்களேனும் வாழ வேண்டும். அது உங்களைப் புரட்டிப் போட்டுவிடும். முழுமனிதனாக மாற்றும் “ என்று நான் மாணவர்களுக்குச் சொல்லும் போதெல்லாம் எனக்கு “ஹௌரா மெயில்” நினைவுக்கு வரும்.

 

 

கதை சொல்லல்

ஆறு லட்சத்து அறுபத்திரண்டாயிரம் சந்தாதாரர்களுடன் அமோக மாக வலம் வரும் யூ டியூப் சானல் – திவ்ய தர்ஷினி வழங்கும் தமிழ் ஆடியோ புக்ஸின்  சிறுகதைகள் சொல்லும் தளம் ! 

இனிமையான குரலில் தெளிவான உச்சரிப்புடன் சிறந்த கதைகளை அவர் சொல்வது சிறப்பு. 

சுஜாதாவின் இந்தக் கதையைக் கேளுங்கள்!  

 

இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டீர்களா ? – ஜி பி சதுர்புஜன்

புத்தகம் : தமிழர் புத்தகங்கள் – ஓர் அறிமுகம்

தொகுப்பாசிரியர் : சுப்பு

விஜயபாரதம் பதிப்பகம், முதல் பதிப்பு : 2016

பக்கம் 500     சலுகை விலை : ரூ 200

    இந்தத் தொடரில்  நான் பலவிதமான ரசனை மிகுந்த உபயோகமான நூல்களை அறிமுகம் செய்து வருகிறேன் என்பது தொடர்ந்து இந்தப் பகுதியை வாசித்து வருபவர்களுக்குத் தெரியும். நூல் எதைப்பற்றியது என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.. ஆனால் நம்மை நல்ல எண்ணங்களுக்கும், ரசனைகளுக்கும் இட்டுச் செல்கிறதா என்பதை கவனிக்கிறேன். நூல் சிறியதா பெரியதா என்பதும் முக்கியமில்லை என்று நினைப்பவன் நான். பழைய புத்தகமா, புது புத்தகமா என்பது கூட எனக்கு பொருட்படுத்த வேண்டிய விஷயமாகத் தெரியவில்லை.

   பழம் புத்தகமாக இருந்தாலும், நேற்று வெளியிடப்பட்ட புத்தகமாக இருந்தாலும் நாம் படிக்காத புத்தகம் எல்லாமே புதுப் புத்தகம்தான். படிக்க வேண்டிய புத்தகமா இல்லையா என்பதைத்தான் நான் கவனிக்கிறேன். உங்களுக்கும் அறிமுகம் செய்ய நினைக்கின்றேன். 

  சுப்பு அவர்களை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்துள்ள “தமிழர் புத்தகங்கள் – ஓர் அறிமுகம்” என்ற இந்த நூலையே எடுத்துக் கொள்ளுங்கள். 2016ல் முதல் பதிப்பு கண்டதுதான் என்றாலும், என்றும் இளமை மாறாத நூல் இது. தமிழருக்கும் தமிழர் புத்தகங்களுக்கும் எவ்வளவு வருடங்கள் ஆனாலும், தமிழ் இருக்கும் வரை, தமிழன் என்ற பெருமை இருக்கும் வரை, இளமை என்றுமே மாறாததுதானே ?

    சுப்பு அவர்கள் சிரமேற்கொண்டு செய்திருக்கும் இந்த சீரிய பணி பெரும் பணி என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    நூலின் உள்ளே 108 கனமான கட்டுரைகள். அத்துணையும் விதம் விதமான வித்தியாசமான தலைப்புகளில். ஒவ்வொன்றும் தமிழையும் தமிழ் வாழ்வையும் கொண்டாடும் அனுபவம் வாய்ந்த தமிழ் எழுத்தாளர்களாலும், பண்டிதர்களாலும் ரசனையோடு எழுதப்பட்டது. கட்டுரைகள் சிறியதும் பெரியதுமாக இருக்கின்றன. ஆனால் ஒன்றுக்கு ஒன்று  சோடை போனதல்ல. தமிழரின் பாரம்பரிய உணவு போல, பலவிதமான சுவைகள் ஒன்று சேர்த்து பரிமாறப்பட்டிருக்கின்றன. படித்துப் பார்த்தால் தெரியும் அதன் தனித்துவமான சுவை.

  “குழந்தைகளுக்குத்  தமிழூட்டி வளர்க்கும் தாய்மார்களுக்கு இந்தப் புத்தகம் சமர்ப்பணம்” என்னும் அன்பு வரிகளோடு தொடங்கும் இந்நூலை சுப்பு அவர்கள் அழகாக வடிவமைத்திருக்கிறார். பதிப்புரையில் குறிப்பிட்டி ருப்பது போல, இந்தப் புத்தகம் மற்றைய புத்தகங்களிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட புத்தகம்தான். தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், தமிழ் கதாசிரியர்கள், தமிழ் இலக்கியவாதிகள் என 108 பேர் இந்நூலில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். ஏதோ ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்குள் என இல்லாமல், பல்வேறு பொருளில் உயர்ந்த பல கருத்துக்களின் களஞ்சியம் என இந்த நூலினைக் குறிப்பிடலாம்.

   எடுத்துக்காட்டாக சில கட்டுரைத் தலைப்புகளை இங்கே குறிப்பிடுகிறேன் :

  • படி… படி…. நூலைப் படி – சுகி சிவம்
  • புதையலைத் தேடி…..- அ.ச.ஞானசம்பந்தன்
  • உ.வே.சா அவர்களின் சங்க இலக்கியப் பதிப்புகள் – பேராசிரியர் ம வே பசுபதி
  • கங்காதேவியின் “மதுரா விஜயம்” – ரமணன்
  • பாரதியார் கவிதைகள் (மூலமும் உரையும்) – ஓர் அறிமுகம் – முனைவர் வ.வே.சு
  • நாடோடிகளின் பாடல்களா? பாடல்கள் நாடோடிகளா ? – இசைக்கவி ரமணன்
  • தமிழ் சினிமா – சில புத்தக சிபாரிசுகள் – சுப்பு
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – இல. கணேசன்
  • இசை விமர்சனம் – தமிழில் ! – சாருகேசி
  • கடந்த காலத் தமிழ் நாவல்கள் – ஒரு பார்வை – திருப்பூர் கிருஷ்ணன்

    இப்படிப் போகும் இந்த 108 கட்டுரைகளில் “தமிழ்ச் சிறுகதைகள் : தோற்றமும் வளர்ச்சியும்” என்ற என்னுடைய கட்டுரையும் இடம் பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியே.

   படியுங்கள். ரசியுங்கள். பரவசம் அடைவது நிச்சயம்.

இம்மாதக் கவிஞர் – அவினாசி மணி – முனைவர் தென்காசி கணேசன்

avinashi mani | Avinashi Blog
அவினாசி மணி தமிழ்த்  திரைப்படப் பாடலாசிரியர். பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஜானகி சபதம், ஆயிரத்தில் ஒருத்தி, மிட்டாய் மம்மி, போன்ற பல படங்களை இயக்கியவரும் கூட.  
இதில் ஜானகி சபதம், ஆயிரத்தில் ஒருத்தி ஆகிய இரு படங்களில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்களில் ஒருவர்தான் இயக்குனர் பாரதிராஜா.
பின்னாட்களில் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜனின் மாமனாரும் ஆனார்.
கவியரசு கண்ணதாசனின் உதவியாளர்களில் ஒருவராக, தனது திரை வாழ்க்கையைத் துவக்கியவர். ஒருமுறை கவியரசு ஸ்டுடியோவிற்குக் காரில் பயணிக்கும்போது, தயாரிப்பாளர் ஏ கே வேலன் அவர்கள் ஒரு  பாடல் கேட்டிருக்கிறார். கவியரசும் சொல்ல ஆரம்பிக்க, கைகளில் காகிதம் எதுவும் இல்லை.
கவியரசு, பையில் இருந்த சிகரெட் பெட்டியைக் கிழித்து, அவினாசி மணி கையில் கொடுத்து, அட்டையின் பின்பக்கம்  எழுதச் சொன்னாராம். அந்தப் பாடல் தான் – ஆசையே அலை போல – நாம் எல்லாம் அதன் மேலே என்ற தை பிறந்தால் வழி பிறக்கும் பாடல். பின்னாட்களில் கவியரசு தலைமையில் கவியரங்கங்களில் பங்கு கொண்டு இருக்கிறார்.
அடிமைப்பெண் படத்தில் அவினாசி மணி எழுதிய காலத்தை வென்றவன் நீ என்ற பாடல் இவருக்குப் புகழ் தந்தது.. சுசீலா, ஜானகி என இருவர் பாடும் ghazal மெட்டில், திரை இசைத் திலகம் திரு கே வி மகாதேவன் அளித்த பாடல்.
காலத்தை வென்றவன் நீ…
காவியமானவன் நீ…
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றித் திருமகன் நீ…
நடந்தால்
அதிரும் ராஜ நடை
நாற்புறம் தொடரும் உனது படை
போர்க்களத்தில் நீ கணையாவாய்
பூவைக்கு ஏற்ற துணையாவாய்
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
அழகாக
விடிந்திடும் பொழுதும் உனக்காக
வேங்கையின் மைந்தனும் எனக்காக
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ…
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ…
(பாவம் இப்படியெல்லாம் எம்ஜிஆரைப் புகழ்ந்து எழுதியும், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் அளவிற்கு, இவர் கவனிக்கப்படவில்லை என்பது சோகம் )
ஆன்மிகத்தில் இவர் எழுதிய பாடலால் இவருக்குப் புகழ் கொடுத்தது. ஆனால், பாடிய L.R ஈஸ்வரிக்கு எல்லாம் (பணம் உட்பட) கிடைத்தது.    அம்பிகையிடம் சரணடையவைக்கும் அற்புத  வரிகள். இன்றைக்கும் தமிழகமெங்கும் ஒலிக்கும் பாடல்.
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
நெற்றியில் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
பாடும் கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை!
நல்லநேரம் படத்தில், இவர் பாடல் தான் –
ஆகட்டுண்டா தமி ராஜா
நட ராஜா
மெதுவா தள்ளய்யா
பதமா செல்லய்யா
நேற்று இன்று நாளை படத்தில்,
அங்கே வருவது யாரோ
அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ
அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ
கோடிக் கனவுகள் ஆடி வருகுது
கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது
என்ற பாடல் அன்றைய வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பானது.
கன்னிப்பெண் திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல், அன்றைய காலங்களில், இலங்கை வானொலி நிலையம், தினசரி ஒலிபரப்பிய பாடல்.  கண்ணதாசனின் தாக்கம் அப்படியே தெரியும் இந்த பாடலில் ;
ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
பூமகள் பொறுமையும்
நாமகள் இனிமையும்
பூமியில் வந்தது பெண்ணாக
நாணமும் மென்மையும் நாயகி வடிவினில்
காவியம் ஆனது உன்னாலே
அடுத்த வருஷம் இந்த நாளில்
தாலி உண்டாகும்
இந்த அன்னம் பெற்ற
குழந்தை வந்து தோளில் நின்றாடும்
கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்
நினைத்ததை முடிப்பவன் படத்தில்,
கொள்ளை இட்டவன்  நீதான்  (என் உள்ளத்தை)
கொட்டி வைத்தவன் நீதான் (நல் இன்பத்தை)
கன்னமிட்டவன் நீ தான் (என் கன்னத்தில்)
கண்டுகொண்டவள் நான்தான்  
கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
அந்த நாடகம் இந்த மேடையில்
ஆட வந்தது போதும்
எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கை அல்லவோ வாழும்
இந்தப் பாடலில், கடத்தல், கொள்ளை இவற்றைக் காதல், காதலனுடன் இணைத்து எழுதி இருப்பது மிகச் சிறப்பு.
ரிக்ஷாக்காரன் படத்தில்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போல ஆடும்
வித்தாரக்க்கள்ளி
எந்தன் தாளத்தையே
கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
கோபுரங்கள்  சாய்வதில்லை படத்தில் எழுதிய
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாகப் புடிச்சேன்
இதுக்காகத்தானே நானே துடிச்சேன்
மற்றும், ராகங்கள் மாறுவதில்லை படத்தில்  இவர் எழுதிய
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
வரிகள் பாராட்டப்பட்டன.
தொடர்ந்து,   வேடனைத் தேடிய மான், ஜோதி, மகளுக்காக, தங்க வளையல்  போன்ற  படங்களில்  பாடல்கள் எழுதினார்.
1985களில் வெளிவந்த காக்கிச்சட்டை படத்தில் வெளிவந்த இவரின் துள்ளல் பாடல் நல்ல ஹிட் ஆனது.
பூப்போட்ட  தாவணி
போதையில் ஆடுதே
கிண்ணம் நான்
என்னைப் பார்
இன்னும் ஏன்
 உன்னைத் தா  
ராஜாத்தி
       
இப்படிப் பல நல்ல பாடல்கள் தந்து, சிறந்த இயக்குநராகவும் இருந்தாலும், அவர்  அடைய வேண்டிய புகழை அடையவில்லை என்பதே உண்மை நிலை. திறமைக்கு மேல் ஒன்று தேவை – அதன் பெயர் விதி அல்லது அதிர்ஷ்டம்.  அதற்கு இறைவன் தான் அருள வேண்டும்.
அடுத்த மாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி

சரித்திரம் பேசுகிறது! – யாரோ

இரண்டாம் குலோத்துங்கன்

சோழர்களின் வரலாறு பகுதி - 26|இரண்டாம் குலோத்துங்க சோழன்|cholar history in  tamil|2nd kulothunga chola - YouTubeசரித்திரம் பேசத்துணிந்தவன், பெரும் சர்ச்சைகளுக்கு இலக்காக வேண்டும் என்பது பொதுவிதி. இந்த அத்தியாயத்திற்கு இதை இன்னும் ஒரு முறை சொல்லவேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால், நாம் ஒன்று சொல்ல, வாசகர்கள் அது தவறென்று கொதித்தெழுந்து விடக் கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளம். அதற்காக, நாம் சொல்லவந்ததைச் சொல்லாமல் போவதில்லை. சும்மா ஒரு மறுப்புத் துறப்பு (பொறுப்புத் துறப்பு?). அட அதுதாங்க.. டிஸ்க்ளைமர்!

கி.பி.1133 இல்‌ விக்கிரம சோழன், தன்‌ புதல்வனான இரண்டாம்‌ குலோத்துங்கசோழனுக்கு இராஜகேசரி என்ற பட்டத்துடன்‌ சோழநாட்டின்‌ பேரரசன்‌ ஆக்கினான்‌. பொதுவாக, தலைநகரான கங்கை கொண்டசோழபுரத்தில்தான் பட்டமளிப்பு நடக்கும். ஆனால், குலோத்துங்கனுக்குச் சிதம்பரத்தில் பட்டாபிஷேகம் நடந்தது.

சுருக்கமாக, குலோத்துங்கனின் ஆட்சி, மற்றும் போர்கள் பற்றிக் கூறிவிட்டுப் பிறகு சுவையான, சர்ச்சைகள் நிறைந்த சம்பவங்களுக்கு வருவோம். ஆனால், அவன் ஆட்சியில் நடந்த போர்களைப்பற்றி சுருக்கமாகக்கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால், அவன் போர்களே புரியவில்லை! தந்தை விக்கிரமசோழன் ஆண்ட பகுதி பெரும்பாலும் குலோத்துங்கனின் காலத்தில் மாறுபாடில்லாமல் இருந்தது. 

ஒட்டக்கூத்தர் அவைக்களப் புலவராக இருந்து வந்தார். சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதினார். கம்பர் ராமாயணத்தை எழுதினார். இப்படித் தமிழ்ப்புலமை ஆளுமைகள் பலரும் வாழ்ந்த காலம் அது. ஒட்டக்கூத்தரின் மாணாக்கனாக இருந்து தமிழ் கற்றதால், குலோத்துங்கன், புலமை மிகுந்து விளங்கினான். 

இந்த மன்னன் தீவிரமான சிவபக்தன். இவனுக்குத் திருநீற்றுச்சோழன் என்ற பெயர் இருந்தது. வைணவமதத்தின் மீது அவன் கொண்ட வெறுப்பு, வைணவர்களைப் பாதித்தது. மன்னனுக்குத் தொண்டை, (கழுத்தில்) புற்றுநோய் வந்தது. வைணவர்கள் அவனை “கிருமிகாந்த சோழன்” என்று அழைத்து நொந்தனர் (மகிழ்ந்தனர்?)

சர்ச்சைக்கதைகள் பல உண்டு. 

சர்ச்சை 1:

விஷ்ணு மறுப்பால், குலோத்துங்கன், சிதம்பரக் கோவிலிலிருந்து , கோவிந்தசாமி விக்ரகத்தை அகற்றி, வங்கக்கடலில் எறிந்தான். இதைப்பற்றி ஒட்டக்கூத்தர் கூறுவது மட்டுமே ஆதாரமாக உள்ளது. அவர் ‘குலோத்துங்கன் உலா’ என்ற நூலில் கூறுவதாவது:
“குலோத்துங்கமன்னன் ஆட்சியில், விஷ்ணு பகவான், அவரது அசலான இருப்பிடத்துக்கு (அதாவது பாற்கடலுக்கு) அனுப்பப்பட்டார்.” வங்கக்கடலில் எறிந்ததை கவித்துவமாகச் சொல்கிறாராம். என்னே புலவரின் குசும்பு! அந்தக்காட்சியை, தசாவதாரம் திரைப்படத்தில் பார்த்தோமே! அதில் முதல் காட்சி. இரண்டாம் குலோத்துங்கன் வேடத்தில் நெப்போலியன்.

வைஷ்ணவ ஆச்சாரியார் ராமனுஜரைப் பிடித்து தண்டிக்கவேண்டும் என்று மன்னன் தேடினானாம். தண்டனைக்குத் தப்ப, ராமானுஜர் மற்றும் அவரது சிஷ்யர்கள் தப்பித்து, ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடகத்தில் இருக்கும் மேலக்கோட்டை சென்றார்களாம். குலோத்துங்கனின் மறைவுக்குப் பிறகுதான் ராமானுஜர் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பினாராம்.  

இந்தக்கதைக்கு இன்னொரு பக்கம்:
சிதம்பரத்திலிருந்த கோவிந்தசாமி விக்ரகம், சிதைந்து இருந்ததால், அதைப் பழுது பார்க்க, அதை அங்கிருந்து எடுத்த முயற்சிகள், வைணவரை கோபப்படுத்தின. அதனால் அவர்கள், குலோத்துங்கனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, “கிருமிகாந்த சோழன்” என்று அழைத்து தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.

இன்னொரு கதை சொல்லட்டுமா?   இரண்டாம் குலோத்துங்கன் வைணவமதத்தின் மீது வெறுப்புக் கொண்டவனில்லை. ராமானுஜர் தனது சிஷ்யன் (மருமான்) தாசரதியை குலோத்துங்கனுக்கு ஆசிரியராக நியமித்தார். குலோத்துங்கன், ராமானுஜர் அறிவுரைப்படி, தாசரதியை, ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதஸ்வாமி கோவிலில் மேலாண்மை அதிகாரியாக நியமித்தார். இது எப்படி இருக்கு?

இப்படிப் பல கதைகளைச் சொல்லி விட்டோம். இதில் எது உண்மை என்பதை யாரோ அறிவர்?

சர்ச்சை 2: அம்பிகாபதி – அமராவதி.

இதுவும் கதையோ, அன்றிக் கட்டுக்கதையோ! கம்பர் மகன் அம்பிகாபதி, இரண்டாம் குலோத்துங்கனின் மகள் அமராவதியைக் காதலிக்கிறான். மன்னன் காதலை மறுக்கிறான். ஒட்டக்கூத்தர் இதற்கு தீர்வு சொல்லுகிறார்: அதாகப்பட்டது.. ‘அம்பிகாபதி, காதலற்ற, தெய்வீகப்பாடல்கள் நூறு புனைந்து பாடவேண்டும். அப்படிப் பாடி முடித்தால், இருவருக்கும் மணம். தவறினால் மரணம்’. இது ஒட்டக்கூத்தர் முடிவு. அனைவரும் உடன்பட, அரசவையில் , பாடல்கள் துவங்குகின்றன. இளவரசி திரைமறைவில் மறைந்து கேட்கிறாள். முதலில், கடவுள் வாழ்த்து. பிறகு முதல் பாடல். தொடர்ந்து பாட, 99 காதலற்ற பாடல்கள் முடிந்ததும், இளவரசி 100 பாடல் முடிந்தது என்று மகிழ்ந்து திரைவிலக்கி மலர்முகம் காட்டுகிறாள். கடவுள் வாழ்த்தை முதல் பாடல் என்று தவறாகக் கணக்கிட்டு விடுகிறாள். காதலியின் அழகுமுகம் கண்ட அம்பிகாபதி, உணர்ச்சிப் பிரவாகத்தில் காதலைத் தோய்த்து, நூறாவது பாடலைப் பாடி முடிக்கிறான். ஒட்டக்கூத்தர் – அம்பிகாபதி பாடல் போட்டியில் தோற்றதாக அறிவிக்க, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த இறப்பில், ஒரு காதல் காவியம் பிறக்கிறது. கம்பர் மனமுடைந்து சோழநாட்டை விட்டு வெளியேறுகிறார்.

இதை தியாகராஜ பாகவதர் நடித்துப் பாராதவர்கள், சிவாஜிகணேசன் நடித்துப் பார்த்திருப்பீர்கள்.

இந்தக் குலோத்துங்க மன்னனின் ராணிகளைப்பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லையே என்று நீங்கள் படும் ஆதங்கத்தைத் தீர்த்துவிடலாம்.

மன்னனுக்கு இரண்டு ராணிகள் இருப்பதாகத் தெரியவருகிறது. பட்டத்து ராணி தியாகவல்லி. அவள் புவனமுழுதுடையாள் என்றும் அறியப்படுகிறாள். மற்ற அரசி, முக்கோகிலன் – மலையமான் ராஜ்யத்தின் இளவரசி.

பதினேழு ஆண்டுகள் ஆண்ட,  இரண்டாம் குலோத்துங்கசோழன் கதையை முடித்து விட்டு, அடுத்த சோழனைப் பற்றிக் கதைக்கலாம். விரைவில்..

 

 

 

 

உலக இதிகாசங்கள் – ஒடிஸி – எஸ் எஸ்

பீஷியன்  அரசர் அரசி ஆகியோரிடம் ஓடிசியஸ் தனது கதையைத் தொடர்ந்து கூறினான். 

The Odyssey Study Guide Flashcards | Quizlet

நான் எனது சொந்த ஊரான இதாக்காவிற்குப்  போகும் வழியில் உள்ள தடைகளை நீக்குவதற்கு சார்சி கூறிய அறிவுரைகளையெல்லாம் மனதிலே வாங்கிக்கொண்டேன். அவளுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. சொந்த நாடு திரும்ப வேண்டும் என்ற ஆசையினால் அவளுக்கு விரைவில் விடை கொடுத்து விட்டு அங்கிருந்து என் மாலுமிகளுடன் புறப்பட்டேன்

 சார்சி தீர்க்கதரிசனமாகச் சொன்னதெல்லாம் என் மாலுமிகளிடம் கூறினேன்.

அங்கிருந்து கப்பலில் புறப்பட்டு ,  தேவர்கள் பாடும் பகுதியை நெருங்கினோம்.  அங்கே ஒரு பயங்கரமான அமைதி நிலவியது . எனது மாலுமிகள் ஒவ்வொருவரும் மிக வேகமாகத்  துடுப்புப்  போட்டு அந்த இடத்தில் இருந்து விரைந்து செல்ல முயற்சிசெய்தோம்.

Odysseus and the Sirens

 நான் ஒரு பெரிய மெழுகு கட்டியை எடுத்துக் குறுக்கி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு வீரரின் காதுகளையும் மூடிவிட்டேன். பிறகு ப்  நான் கேட்டுக் கொண்டபடி என் மாலுமிகள் என்னைப் பாய் மரத்துடன் சேர்த்து பிணைத்தனர்.  கரையிலிருந்து பாடும் தேவர்கள் எங்களைப்  பார்த்துத்  தங்கள் பாடலைப்  பாடத் துவங்கினர். ‘இந்தப் பாடல் உங்களுக்கு வெற்றியைத் தரும். இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்!’ என்று எங்கள் அனைவரையும் வரவேற்கவும் செய்தனர். அதைக்  கேட்டு அவர்களுடைய பாடலைக்  கேட்க வேண்டுமென்ற வேட்கை எனக்குள் அதிகமாக எழுந்தது.  நான் என் கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு என் மாலுமிகளிடம் கெஞ்சினேன்.  ஆனால் என் முதல் உத்தரவுப்படி அவர்கள் என்னை அவிழ்த்து விடவில்லை. பாடல் கேட்காத வெகுதூரம் சென்ற பிறகுதான் அனைவரும் காதில் இருந்த மெழுகுத்  துண்டுகளை எடுத்தும் என் கட்டுகளையும் அவிழ்த்து விட்டனர்.  இப்படி நாங்கள் சைரன்கலின்  மயக்கும் பாடல்களிலிருந்து ஒருவாறு தப்பினோம்.

 பிறகு எங்கள் கப்பல்கள் சில்லாவின் குகையை நெருங்கியது. முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. நான் என் வீரர்களுக்குத்  தைரியத்தை ஊட்டினேன். ஆனால் நான் எதிர்பார்க்காத வகையில் என் வீரர்களில் ஆறு பேரைத் தூக்கிக் கடலில் தள்ளினாள் அந்த சில்லா. நாங்கள் மிக ஜாக்கிரதையாக  உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவர்களின் பார்வையிலிருந்து தப்பி  ஹீரோசின் தீவை அடைந்தோம்.

அந்தத் தீவுதான் தேவர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் இருக்கும் அழகிய தீவு.

 ஆனால் அங்கே கரை இறங்கி சற்று ஓய்வெடுத்துவிட்டு பிறகு செல்லலாம் என்று வீரர்கள் கெஞ்சினார்கள் வேறு வழி இல்லாமல் நானும் அதற்குச் சம்மதித்தேன் கண்டிப்பாக அங்குள்ள கால்நடைகளைத் தொல்லைப்படுத்தக் கூடாது என்றும் எக்காரணம் கொண்டும் தீவுக்குள் செல்லக் கூடாது என்று என் வீரர்களை  எச்சரித்தேன். எல்லோரிடம் சத்தியம் வாங்கியே நாங்கள் அந்தத் தீவுக்குள் இறங்கினோம்.

 கப்பலில் உள்ள உணவுப் பொருள்கள் இருக்கும்வரை அவர்கள் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார்கள்.  காற்று அனுகூலமாக இல்லாததால் நாங்கள் அங்கே கிட்டத்தட்ட ஒரு மாத.காலம்  தங்க வேண்டியிருந்தது.  நான் கடவுளிடம் உதவி கேட்பதற்காகக் கடற்கரைக்கு வந்த சமயத்தில் என் மாலுமிகள் அங்கிருந்த கால்நடைகளை வேட்டையாடிச் சமைக்கத் துவங்கினர்.  மேற்கொண்டு என்ன ஆபத்து வருமோ என்று பயந்து உடனே அந்த இடத்தை விட்டுக் கிளம்பும்படி உத்தரவிட்டேன்.  கடலில் நாங்கள் வெகுதூரம்  சென்றபோதிலும் வழி எங்கும் தென்படவில்லை சுற்றிச் சுற்றி வருவதாகவே உணர்ந்தோம்.  இருட்டு எங்கள் கப்பலை  மேலே செல்ல இயலாமல் அப்படியே நிறுத்திவிட்டது. சூறைக் காற்று  வேறு கப்பலைக்  கடுமையாகத்  தாக்கியது

 தங்கள் கால்நடைகளை உண்டதால் கோபம் கொண்ட தேவர்கள் எங்கள்மீது வேல்களை வீசினார்கள். பல மாலுமிகள் கப்பலிலிருந்து வீசப்பட்டு கடலில் விழுந்து இறந்தனர். கப்பலின் பக்கவாட்டு பலகைகளும் பிளந்து கொண்டன. நான் பாய்மரத்தை இருக்க பற்றிக் கொண்டு சூறாவளியுடன் போராடினேன். வேறு வழி தெரியாமல் மீண்டும் சில்லா இருந்த தீவுக்கு வந்து சேர்ந்தோம்.

Journal Entry #5: Scylla and Charybdis | by Collin Sharp _ Student - LeesvilleRdHS | Mediumநான் ஒரு உயரமான மரத்தில் வவ்வால் போலத் தூங்கிக்கொண்டு கீழே இருப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு  அந்தக்  கொடுமையான ராட்சசத் தீலிருந்து நீந்தியே ஒரு பலகைமீது அமர்ந்துகொண்டு வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் கடலில் மிதக்க ஆரம்பித்தேன் பத்தாவது நாள் நான் ஒஜீஜியா தீவு போய்ச் சேர்ந்தேன்.  அங்கேதான் கலிப்சோ என்ற தேவி வசிக்கிறாள் அவள் என்னைக் காப்பாற்றிப்  பராமரித்தாள். என்மீது அன்பு காட்டினாள். நானும் அவளும் அந்தத் தீவிலேயே ஒரு வருடம் கணவன் மனைவிபோல் இருந்தோம்.  அந்தக் கதையைத்தான் நான் உங்களிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவளிடமிருந்து விடை பெற்றுத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். “

என்று சொல்லி ஒடிசியஸ் தனது கதையை முடித்துக்கொண்டபோது அந்தப் பகுதி மொத்தமும் அமைதியாக இருந்தது.

 அரசரும் அரசியும் என் கதையைக்  கேட்டு மிகவும் உருகிவிட்டனர்.          “உங்கள் துயரங்கள் நீங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.  நீங்கள் உங்கள் தாய் நாட்டுக்கு விரைவில் செல்வீர்கள்.  உங்களுக்காக எங்கள் நாட்டிலிருந்து விலை உயர்ந்த  பொருட்களைப்  பரிசுகளாகத்  தரத்  திட்டமிட்டு இருக்கிறோம்.” என்று கூறி அந்த நாட்டு அரசரும் அரசியும் இளவரசியும் மற்ற குடிமக்களும் ஓடிசியசிற்கு விடை கொடுத்தனர்.  அவர்கள் அனைவரது ஆசிகளுடன் அவர்கள் அன்போடு தந்த எண்ணற்ற பரிசு பொருட்களையும் பெற்றுக்கொண்டு ஓடிசீசஸ் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக்  கூறிவிட்டுக்  கப்பலில் ஏறினான்.

அங்கிருந்து அவனது சொந்த நாடான இத்தாக்கா அருகில் இருந்ததால் விரைவில் நாட்டை அடைந்துவிடலாம் என்ற மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருந்தான் ஓடிசியஸ். அந்த மகிழ்ச்சியுடன் நன் நாட்டுத் துறைமுகத்தை அடைந்தான் ஓடிசியஸ்.

ஆனால் ஓடிசியஸ் இவ்வளவு சௌகரியமாக இத்தாக்கா  போய்ச் சேர்ந்ததைப் பொசைடன் கொஞ்சமும் கூட விரும்பவில்லை.  அதனால் அவர்களது சொந்தத் துறைமுகத்தை நெருங்கும்போது ஒரு பெரிய பாறாங்கல்போலத்  தன்னை மாற்றிக்கொண்டு கடலில் நின்றான்.  அதுமட்டுமல்லாமல் அவன் ஊரே அவன் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு பனி மூட்டத்தால் மறைத்தான்.

தாய் நாட்டிற்கு திரும்பி வந்த ஓடிசியஸ் தன் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் ஆசையோடு பார்த்தான். ஆனால் அவனுக்கு எதுவும் விளங்காததால் அவன் மனம் நிம்மதி இன்றித் தவித்தது. சொந்த நாடு வந்தும் அந்த நாடு தனக்கு அன்னிய நாடுபோல் தோன்றுகிறதே என்று பெருந் துயருடன் வேதனைப்பட்டான் .

அப்போது அதீனா அங்கு வந்து அவனது துயரினைப் போக்கும்படி பனித் திரையை விளக்கினால். அவன் நாட்டை அவனுக்குக்  காட்சி கொடுத்தாள். அதுமட்டுமல்லாமல்  அவன் சொந்த அரண்மனையில் மோசமான விதி அவனுக்கு வழங்குவதற்காக ஏராளமான துயரங்களைத்  தயாராக வைத்திருக்கிறது என்பதை முன்னெச்சரிக்கையாகச்  சொன்னாள். அவனுக்கு  மிகவும் பொறுமை வேண்டும் எதையும் தாங்கும் சக்தி வேண்டும் யார் அவமானப்படுத்தினாலும் சகித்துக்கொள்ளும் திறமை வேண்டும் என்று உபதேசித்தாள் .

ஆதினாவின் அன்பும்  ஆசியும் இருந்தால் எல்லாவற்றையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஓடிசியசுக்கு வந்தது. முதலில் இந்தப் பரிசுப் பொருட்களை எல்லாம் ஒரு குகையில் பத்திரப்படுத்த வேண்டும் என்று கூறி வற்றை ஒரு இருண்ட குகையில் வைத்து ஒரு பாறாங்கலலால் அதை மூடவும் செய்தாள் அதினாதேவி.

“ ஓடிசீசஸ்!  இதுவரை நீ வெற்றிக்கு மேல் வெற்றியைப்  பெற்று வந்திருக்கிறாய்! எந்த ஆபத்தையும் தாங்கும் சக்தி இருந்ததால்தான் உன்னால் மீண்டும் இங்கே வர முடிந்தது.  இப்பொழுது உன் அரண்மனையிலிருந்து கொண்டு உன் குடும்பத்துக்குத் தீங்கு செய்யும் அந்தப் பிரபுக்களை எப்படி துரத்த வேண்டும் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். அவர்கள் செய்யும் அட்டகாசங்களையும் ஓடிசியசுக்கு விளக்கமாகக் கூறினாள்.

 அவர்களை முறியடிக்க முதலில்   ஓடிசியசை அங்குள்ள யாரும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஒரு புது உருவத்தை வழங்கினாள்.  பார்ப்பதற்கு அலங்கோலமாகவும் அசிங்கமாகவும் அவன் மாறிவிட்டான். அவன்  மனைவி மக்கள் குழந்தைகள் கூட அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மாறியிருந்தான்.  அவனை ஒரு கிழவனாக மாற்றிக் கையில் ஒரு நீண்ட தடியையும் கொடுத்துக் கிட்டத்தட்ட ஒரு காட்டுமிராண்டி பிச்சைக்காரனைப் போல் இருக்கும் படிச் செய்தாள் .

நீ உன்  அரண்மனைக்குச் சென்று உன் முயற்சியால் அந்தப் பிரபுக்களை வெற்றிகொள். உன்னைத் தேடிச் சென்ற உன் மகனை அழைத்துக் கொண்டு நான் விரைவில் வருகிறேன் என்று கூறி ஆதினாதேவி அங்கிருந்துச்  சென்றாள்.

 சொந்த நாட்டிலும் அவனது வீர பராக்கிரமங்கள் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தன.

 

 

 

 

 

நடுப்பக்கம் – சந்திரமோகன்

மூக்குப்பொடி

மூக்குப்பொடி மகிமை-1 (Post No.11,713) | Tamil and Vedas“ஓசிப் பொடிதனை நாசியில் இட்டால் காசிக்குப் போனாலும் கருமம் தீராது”

“ஊசிக்கழகு முனை முறியாமை, உயர்ந்த பரதேசிக்கழகு இந்திரியம் அடக்கல்,
திரள் நகில்சேர் வேசிக்கழகு தன் மேனி மினுக்கல்,
மிகப் பெருத்த நாசிக்கழகு பொடியென்று சொல்வர் நாவலரே”.

எவ்வளவு அனுபவித்திருந்தால் மூக்குப் பொடியின் மகத்துவத்தை இவ்வளவு அழகாக கூறுவார் மாம்பழக்கவிசிங்க நாவலர்.

ஐம்பது- அறுபது ஆண்டுகளுக்கு நான் ‘பொடி’யனாக இருந்த நாட்களில் மூக்குப் பொடியின் சுவையறியா நாசி பாவம் செய்ததாக பார்க்கப்பட்டது.

N C பட்டணம் பொடி | மைதா கோந்து | Flickrநான் சும்மா சொல்ல வில்லை

“ கொடியணி மாடமோங்கி குலவுசீ ரானைக் காவில்
படியினிலுள்ளார் செய்த பாக்கிய மனையான், செங்கைத்
தொடியினர் மதனன், சோம சுந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே”

என அனுபவித்து பாடியது தமிழ்த்தாத்தா உ. வே.சா அவர்களின் ஆசான் தியாகராசச் செட்டியார்.“ மூக்குப் பொடி போடுகின்ற மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமா வேணும் இந்த கைக்குட்டை” என தூக்குத் தூக்கியில் சிறப்பித்துள்ளார் உடுமலை நாராயணகவி.‘பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் சளி பிடித்து சாவார்” என வள்ளுவரை வம்பிழுக்கும் அளவிற்கு பொடியின் மகத்துவம் பேசப் பட்டது.

என் வயதொத்தவரை “காரம், மணம், குணம் நிறைந்தது” எதுவென விநாடி விணா நிகழ்ச்சியில் கேட்டால் சட்டென அரை நொடியில் T A S இரத்தினம் பட்டணம் பொடி என கண்களை மூடிக் கொண்டு சொல்வோம்.

ஆம், காரத்திற்கு சுண்ணாம்பையும், மணத்திற்கு சுத்தமான பசு நெய்யையும், போதை குணத்திற்கு புகையிலையுடன் சில வாசனைப் பொருட்கள் கலந்த கலவையே மூக்குப் பொடி.TAS ரத்தினம் பட்டணம் பொடி | மைதா கோந்து | Flickrஹைபிரீட் சட்ட புகையிலையை பறித்து பதனம் செய்து புகையிலை தூளாக எடுக்கப் பட்ட பின் மீதமாகும் காம்பே பெரும் பகுதி. இதை இரும்பு சட்டியிலிட்டு சுண்ணாம்பு மற்றும் வாசனைப் பொருட்களை சேர்த்து வறுத்து அரைப்பர். பின் அரைத்ததை சலித்து கல் உரலில் புரச மரக் கட்டை உலக்கையால் பசு நெய் சேர்த்து இடிப்பர். மெல்லிய துகளாக மணக்க மணக்க கிடைப்பதே நம் மூக்குப் பொடி.

தென்னமெரிக்காவின் பிரேசில் போன்ற நாடுகளில் செவ்விந்திய இனத்தவர்கள்தாம் முதலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூக்கில் பொடியை உறிஞ்சத் துவங்கினர். ரமோன் பனெ என்ற ஸ்பானியர் கொலம்பஸுடன் அமெரிக்க கண்டத்திற்கு வந்தார். அவர் ஸ்பெயின் மற்றும் ஆங்கிலேய நாடுகளுக்கு 1490 களில் மூக்குப் பொடியை அறிமுகம் செய்தார்.

சந்தித்ததும் சிந்தித்ததும்: மூக்குத்தூள் - தொடரும் அன்றைய விளம்பரங்கள்....

18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சீமாட்டிகளைக் கண்ட இந்திய மாந்தர்களும் snuff ஐ ‘ நாசிகா சூரணம்’ என பெயர் மாற்றி உறிஞ்சத் துவங்கினர்.

கடைகளில் பீங்கான் குடுவைகளில் இருக்கும் பொடியை நீண்ட ஸ்பூனில் இலாவகமாக எடுத்து வாழை மட்டையில் மடித்து தரும் அழகே அழகு. வாழை மட்டை சாமானியர்களுக்கானது. ஆனால்

“ மட்டை, தகர மடக்கு, ஒளி வெள்ளி
வட்ட உருளை வகையொன்று- கெட்டிப் பொன்
டப்பா எனவே தரத்தினுக் கேற்றபடி
வைப்பார் பொடி டப்பாவை”.பொடி போடுவதில்தான் எவ்வளவு இலாவகம். ஒரு சிட்டிகை, பெரு விரலுக்கும், ஆள் காட்டி விரலுக்கும் இடையே பொடியை எடுத்து சிறிது நேரம் கையில் வைத்திருந்து, கையை சற்றே உதறி பின் மூக்கருகே கொண்டு சென்று அருகில் இருப்பவர் அறியமல் உறிஞ்சும் பொழுது கிடைக்கும் சுகம் எழுத முடியாது. ஆனால் அருகில் உள்ளவர் பார்வையில்
ANNA: இன்று முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. தமிழக கட்சிகள், தொண்டர்கள் கொண்டாட்டம் | Mass announcement by cm mk stalin and Anna medals for 127 uniformed ...“ சிட்டிகை என்றே சிறிதெடுத்துத் தானுதறி
முட்டப் பெரு மூக்கில் முந்தியிட்டு- கொட்டுகிற
காரச்சளியைத் தன் கையாலே தான் துடைக்கும்
கோரம் பொடியர் குணம்”
பொடி போடுவதைப் பற்றி பேசி விட்டு அறிஞர் அண்ணாவின் பொடி போடும் திறமை குறித்து நினைவு கூறாமல் தாண்ட முடியாது.

Mookupodi Siddhar | மூக்குப் பொடி சித்தர் | Gnana Sakthi TV - YouTubeமூக்குப் பொடிச்  சித்தர்  என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவருக்கு  மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தால் மூக்குப் பொடி சித்தர் என்று அழைக்கப்பட்டார். தினகரன், புதுவை முன்னாள் முதல்வர் இரங்கசாமி ஆகியோர் இவரின் பக்தர்களாக அறியப்பட்டனர். இவரைக்  காண வரும் பக்தர்கள் இவருக்கு மூக்குப் பொடியைக்  காணிக்கையாகத் தந்தனர்.பொடி போடுபவர்கள் கையில் ஒரு கைக் குட்டையோ அல்லது அவ்வளவிற்கு கிழிக்கப் பட்ட நைந்த வேஷ்டியோ அவசியம் இருக்கும். ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த துணியை இரு முனைகளிலும் பிடித்து சில சுற்றுகள் சுற்றி மூக்கைத் துடைக்கும் விதத்தில் தான் எத்துனை வகை.நெய்ப் பொடியோ, வறப் பொடியோ பல நூறு ஆண்டுகள் மக்களை போதைப் பொருளாகி ஆட்டுவித்த பொடியை ஒரு பொடிச் சமாச்சாரம் என்று ஒதுக்கி விட முடியாது.

சாதாரணமாகக்  கொடுப்பவர் கை உயர்ந்தும் பெறுபவர் கை தாழ்ந்தும் இருப்பதே மரபு. ஆனால் பொடி கொடுப்பவர் கை  தாழ்ந்தும் பெறுபவர் கை உயர்ந்தும் இருப்பது பொடிக்கு மேலும் பெருமை தரும் பொடி விஷயம். 

மூக்குப் பொடி புற்று நோய்க்கான உரம் என நாம் உணர்ந்து கொள்ள பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன.

சிகரெட்டுக்கும் இக்கதி நேர்ந்தால் நாடு நலம் பெறும்.

 

*ஆழ்வார்களும் கண்ணதாசனும்* *பகுதி 9* – சௌரிராஜன்

Kannadasan | by artist venkatesan | Venkatesan Purushothaman | Flickr
*திருப்பாணாழ்வார்*                                                            Thiruppaan Alvar | Krishna art, Great philosophers, Art

திருப்பாணாழ்வாரின் அருளிச்செயல் ஒன்றே ஒன்று மட்டுமே .‌
அது, *அமலனாதிபிரான்* என்ற தொகுப்பில் பத்தே பத்து பாசுரங்களை உள்ளடக்கியது.
நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பில் மிகக் குறைந்த அளவு பாசுரங்கள் இயற்றிய ஆழ்வார் திருப்பாணாழ்வார் தான்.

பத்து பாசுரங்கள் மட்டும்தான் என்றாலும், பக்தி இலக்கியத்தில், குறிப்பாக வைணவ இலக்கியத்தில், மிகச் சிறந்த இடம் அமலனாதிபிரானுக்கு உண்டு.

திருப்பாணாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன.

முதற்கண், இருவரும் பூமியில் கண்டெடுக்கப்பட்டவர்கள். வில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசிச்செடி அருகே பெரியாழ்வார் கண்டெடுத்த பெண் பிள்ளை நம் கோதை நாச்சியார்.‌
அதுபோல, ஸ்ரீரங்கத்திற்கு அருகே உள்ள உறையூரில் ஒரு நெல் வயலில் பாணர் குலத்தைச் சேர்ந்த ஒருவரால் கண்டெடுக்கப்பட்டவர் நமது திருப்பாணாழ்வார்.
பண் அமைத்து பாடும் குலத்தை சேர்ந்தவர்கள் பாணர்கள்.‌ அவர்கள் தாழ்ந்த குலமாக அறியப்பட்டவர்கள்.

இரண்டாவதாக, ஆண்டாள், திருப்பாணாழ்வார் இருவருமே அரங்கனிடம் அபரிமித பக்தி பூண்டு, ஸ்ரீரங்கத்தில் அரங்கன் சன்னதி முன் நின்று, கருவறைக்குள் சென்று அரங்கனுடன் இரண்டற‌ கலந்தவர்கள்.‌

திருப்பாணாழ்வார் , தாழ்ந்த குலத்தை சார்ந்தவராக இருந்ததால் அக்கால வழக்கப்படி கோவிலுக்குள் சென்று அரங்கனை சேவிக்க முடியாமல், தென்திருக்காவிரியின் கரையில் நின்று கொண்டு ( அம்மாமண்டப படித்துறையில் நின்று கொண்டு என்று வைத்துக் கொள்ளலாம் ) திருவரங்கன் கோயில் நோக்கி சேவித்தவாறு, கேட்பவர் ஊனும் உள்ளமும் உருக , யாழ் இசைத்து அரங்கன் புகழ் பாடியவர்.

ஒரு நாள் அவர் தன்னை மறந்து படித்துறையில் நின்று பாடிக் கொண்டிருக்கையில், அங்கு காவிரியில் அரங்கன் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்துக்கொண்டு அரங்கன் சன்னதிக்கு செல்லவிருந்த லோக சாரங்க முனிவர் என்பவர், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பாணரின் மேல் பட்டால், சுத்தத்திற்கு குறைவு ஏற்படும் என்று திருப்பாணரை விலகிப் போகச் சொன்னார். அரங்கனை நினைத்து லயித்து பாடிக் கொண்டிருந்த பாணருக்கு அது காதில் விழாததால், அவர் மீது கல்லெறிந்து வழி விலகும்படி சொன்னார் லோக சாரங்க முனிவர். அந்தக் கல்லானது பாணர் நெற்றியில் பட்டு குருதி வழிய செய்தது. அரங்கனை சேவிக்க சென்ற முனிவர் அரங்கன் நெற்றியிலும் குருதி வெளிப்படக் கண்டு பதைத்து போனார். அரங்கன் அவரிடம் பாணரின் பக்தி மேன்மையை சொல்லி , அவரை முனிவரின் தோள்களின் மேல் ஏற்றி கோவிலுக்குள் அழைத்து வர சொன்னார்.

அவ்வாறே முனிவர் சென்று, தன் தோளில் அமர்ந்து கொள்ளுமாறு பாணரைக் கேட்க, அது தகாது என்று சொல்லி பாணர் பலமுறை மறுத்ததில். அது அரங்கன் ஆணை என்றவுடன் கடைசியில் முனிவர் தோளில் அமர்ந்தவாறு அரங்கனின் சன்னிதிக்கு வந்தார். ( இதனால் திருப்பாணருக்கு *முனிவாகனன்* என்ற பெயரும் ஏற்பட்டது ).

திருப்பாணர் முதல் தடவையாக (கடைசி தடவையாகவும்) அரங்கனின் அழகை அனுபவித்து, அந்த திருமேனி அழகினை பத்து பாசுரங்களில் வருணித்து பாடினார். அவையே அமலனாதிபிரான் பாசுரங்கள்.‌

*அமலனாதிபிரான்* என்பதை அமலன், ஆதிபிரான் என்று பிரித்துக் கொள்ளலாம்.
*அமலன்* என்றால் அப்பழுக்கில்லாத பரிசுத்தமானவன் என்று பொருள். குறையொன்றுமில்லாத கோவிந்தன் என்று சொல்கிறோமே அப்படி.

அரங்கன் திருவடியிலிருந்து திருமுகம் வரை ஒவ்வொரு பகுதியாக பார்த்து, அனுபவித்து பாசுரம் புனைந்தவர்.

அதில், ஸ்ரீரங்கநாதனை, வாமன / திருவிக்ரமனாக, நரசிம்மனாக, ராமனாக, கிருஷ்ணனாக அனுபவிக்கிறார்.

ஒவ்வொரு பாசுரத்திலும் அரங்கனின் ஒவ்வொரு அவயவத்தில் ( body part ) கண்ணையும் மனதையும் நிறுத்தி பாடுகிறார்..

முதல் பாசுரத்தில் *திருக்கமலப்பாதம்*,

இரண்டில், *இடுப்பில் கட்டிய சிவந்த வஸ்திரம்*,

மூன்றில் *உந்தி* ( தொப்புள் /வயிறு ),

நான்கில் *உதர பந்தம்* எனப்படும் இடுப்பில் கட்டப்படும் ஆபரணம் (யசோதை கண்ணனை கயிற்றினால் கட்டிப்போட்டபோது இடுப்பில் ஏற்பட்ட தழும்பு என்பதாகவும் ‘உதரபந்தத்துக்கு’ வியாக்யானங்கள் உண்டு),

ஐந்தில் *திருமார்பு*

ஆறில் *கழுத்து*

ஏழில் *சிவந்த வாய்*

எட்டில் *செவ்வரிகள் ஓடிய நீண்ட கரிய கண்கள்*

என்று ஒவ்வொன்றாக அனுபவித்து பாடியவர்

ஒன்பதில் , முழுவதுமாக அரங்கனை அனுபவித்து,
*எழில் நீலமேனி ஐயோ, நிறை கொண்டது என் நெஞ்சினையே*

என்று கூறி,

பத்தாம் பாசுரத்தில்,
*அணி அரங்கன்,* *என் அமுதினைக்*
*கண்ட கண்கள்* *மற்றொன்றினைக் காணாவே*
என்று பாடி,
*சொன்னபடியே வேறு ஒன்றையும் காணாமல் , அரங்கனுடன் கலந்துவிட்டார்* .

பத்து பாசுரங்களும் பத்து ரத்தினங்கள். அனைத்தையும் பற்றி எழுத ஆசைதான். நேரமும், விருப்பமும் உள்ளவர்கள் அவற்றை படித்து, பொருளுணர்ந்து, அனுபவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்பொழுது ஆழ்வாரின் இரண்டு பாசுரங்களை எடுத்துக் கொள்ளலாம் என நான் நினைக்கிறேன். அவற்றை ஒட்டி நீண்ட நேரமாக பொறுமையுடன் காத்திருக்கும் நமது கவிஞர் கண்ணதாசனும் வருவார். கட்டுரை நீளமாவதை தவிர்க்க, அவற்றை அடுத்த பகுதியில் தருகிறேன்.

(தொடரும்)

சங்க இலக்கியம் ஓர் எளிய அறிமுகம் –   பாச்சுடர் வளவ. துரையன்

                                   குறிஞ்சிப் பாட்டு

குறிஞ்சிப் பாட்டு | மௌவல் தமிழ் இலக்கியம் குறிஞ்சித் திணையைப் பற்றிய பாடல் என்பதால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு எனப் பெயர் பெற்றது.  குறிஞ்சி என்பது புணர்தலை உரிப்பொருளாகக் கொண்ட திணையாகும்.  இந்தப் பாடல் தோழி செவிலித்தாயிடம் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. இந்நூலை எழுதியவர் புலவர் கபிலர் ஆவார்.. இப்புலவர் பெருமான் எழுதிய பாடல்கள் யாவும் மிகச் சிறப்பானவை. தமிழின் இனிமையை வெளிப்படுத்துபவை. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றில் இவர் எழுதிய பாடல்கள் உள்ளன.

கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நண்பர் இவர். பாரி இறந்தபின் அவருடைய பெண் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக ஏற்றுக் கொண்டவர்.  ஆரிய மன்னனுக்குத் தமிழர்களின் களவு ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் ஆகியவற்றை அறிவுறுத்த எழுதிய குறிஞ்சிப்பாட்டு நம்முடைய பெருஞ்செல்வம்.  அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் கபிலர் இதைப் படைத்துள்ளார்.

தோழி செவிலித்தாயிடம் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஏற்பட்ட காதல் உறவு பற்றிக் கூறுவதாக அமைந்த நூல்  இதுவாகும்.  மிகத் திறமையுடன் அவள் அதை விவரித்துக் கூறித் திருமணம் வேண்டுகின்றாள்.  தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எவ்வாறு சந்தித்தார்கள் என விவரிக்கின்றாள்.  தலைவியும் தோழியும் தினைப்புனக் காவலுக்குச் சென்றது, அருவியில் விளையாடியது, 99 வித மலர்களால் ஆடை புனைந்து அணிந்தது, அங்கு வந்த தலைவனைக் கண்டது, அவன் அவர்களை நாய்களிடமிருந்தும் யானையிடமிருந்தும் காப்பாற்றியது, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே காதல் ஏற்பட்ட சூழ்நிலை, தலைவன் திருமணம் புரிவேன் என்று உறுதிமொழி கொடுத்தது, கற்பு வாழ்க்கையில் விரும்தோம்பலுடன் வாழ்வோம் என அவன் கூறியது, இரவுக்குறியில் அவன் வருவது, வரும் வழியில் அவனுக்கு ஏற்படும் இடையூறுகள், அதை எண்ணி வருந்தும் தலைவியின் நிலைமை ஆகியவற்றை எல்லாம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றாள்.

அன்னாய் வாழி! வேண்டு அன்னை, ஒண்ணுதல்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்,
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்,

வேறு பல் உருவில் கடவுள் பேணி,

நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று,
எய்யா மையலை, நீயும் வருந்துதி (1-8)

 

தோழி செவிலித்தாயை அணுகி வேண்டுவதாக நூல் தொடங்குகிறது, தோழி கூறுகிறாள்.

 ”தாயே! நீ நீடு வாழ்வாயாக!  நான் கூறுவதைக் கேட்பாயாக!  ஒளியுடைய நெற்றியையும் அடர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்த சிறப்பான அணிகலன்களை நெகிழச் செய்த அழிக்க முடியாத கொடூர நோயைக் கண்டு, நீ அஞ்சுகிறாய். ஆதலால் அகன்ற ஊரில் உள்ள, நடக்கப்போவதை அறிவிக்கும் கட்டுவிச்சி, வேலன் முதலியோரைக் கேட்கிறாய். வெவ்வேறு உருவங்களில் உள்ள கடவுளைப் பேணியும், பாராட்டியும், வணங்கியும், பல நிற மலர்களைக் கலந்து தூவியும், அகில் முதலிய நறுமணப் புகையையும், சந்தனம் முதலிய நறுமணப் பொருட்களையும் செலுத்தி, கலக்கமுற்று, காரணம் அறியாது, மயக்கமுடையவளாக நீயும் வருந்துகின்றாய்.

என் தலைவியின் தோற்றத்தையும், வருத்தத்தையும் அறிந்து நான் அவளிடம் காரணம் கேட்டேன். அதற்குத் தலைவி, ”அணிகலன்கள் பாழ்பட்டால், அவற்றைச் சேர்த்து இணைக்க முடியும்.  சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் கெட்டால், மாசற்று விளங்கும் புகழை பழைய நிலைக்குக் கொண்டு வருதல், குற்றமில்லாத காட்சியை உடைய சான்றோர்க்கும் அது எளிமையான செயல், என்று  பழைய நூல்களை அறிந்த அறிஞர்கள்  கூற மாட்டார்கள். பெற்றோரும் அவர்கள் தேர்ந்தெடுப்பவர்க்கு என்னைக் கொடுக்க எண்ணகிறார்கள். தையும் என்னுடைய மடமையும், ஒரு சேரக் கெட, உயர்ந்த தேரை உடைய என் தந்தையின் அரிய காவலைக் கடந்து, இருவரும் ஆய்ந்து தேர்ந்தெடுத்தக்  களவு மணம் இது என நாம் தாயிடம் கூறுமிடத்து, பழியும் உண்டோ? அறிவுறுத்திய பின்னர், இசைந்து வாராது இருப்பினும், பொறுத்திருந்து, இம்மை மாறி மறுமை அடைந்த பொழுது நான் அவனை அடைவதாக என இருப்பேன்” என்று கூறினாள்.

இவ்வாறு தலைவியின் கூற்றைப்பேசிய தோழி தன் நிலையை ஓர் உதாரணத்தால் விளக்குகிறாள்.  ”பகைமை மேற்கொண்டு தாக்கும் இரண்டு பெரிய வேந்தர்கள் இருவரை ஒன்றுசேர்க்கும் பணியில் இருக்கும் சான்றோர் போல, உனக்கும் என் தோழிக்கும் இடையே, நான் அச்சத்துடன் மிகவும் வருந்தி இருக்கின்றேன்.”இவ்வாறு கூறும் தோழியின் துணிவும் சொல்வன்மையும் போற்றத்தக்கதாகும்.

 அடுத்துத் தலைவனோடு தலைவிக்குத் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்பதைக் கூறுகிறாள்“

நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை   35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப,
துய்த்தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல்,
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி
எல் பட வருதியர்” என நீ விடுத்தலின், (35-39)

  “விதையை உடைய மூங்கிலைத் தின்பதற்கு மேல் நோக்கி நின்ற யானை, தன்னுடைய முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்த தும்பிக்கையைப் போல, பஞ்சை ஒத்த மேல் பகுதி உடைய, வளைந்த, முதிர்ந்த, பெரிய கதிர்களை நன்றாகத் தன்னிடம் கொண்ட சிறு தினையைத் தாக்கும் பறவைகளை விரட்டி விட்டு, கதிரவன் மறையும்பொழுதில் திரும்பி வருவீர்களாக”, எனக் கூறி நீ தினைப்புனம் காக்க எம்மை அனுப்பினாய்” என்பது மேற்கண்ட பாடலடிகளின் பொருளாகும். தந்தம், தும்பிக்கையைத் தாங்குவது சிறுதினையானது பெரிய கதிர்களைத் தாங்குவதற்கு உவமையாகும்.

   தோழி மேலும் கூறுகிறாள் “ அத்தினைப்புனத்தில் இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட விளங்கும் இலையையுடைய வேல் ஆயுதத்தைப் போன்று உள்ள மின்னலுடனும் இடியுடனும் கூடிய தொகுதி உடையனவாக, மலை மீது மழையைப் பொழிந்தது. அப்போது நாங்கள் அகன்ற சுனையில் குடைந்து விளையாடினோம்; அடர்ந்த மலையில், எங்கள் மனதுக்கு ஏற்றாற்போல் பாடினோம்; பொன்னில் பதிக்கப்பட்ட நீலமணியின் நிறத்தையொத்த, எங்கள் சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து உலர்த்தினோம்.  சிவந்த கண்களுடையவர்களாக ஆனோம்.” என்று கூறிய தோழி அடுத்துக் கூறுவதுதான் தமிழின் எந்த இலக்கியத்திலும் நாம் காணாததாகும். இது குறிஞ்சிப்பாட்டுக்கே சிறப்பு தருவதாகும்.

“———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)

தோழி கூறுகிறாள். “அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை எருக்கம்பூவுடன், பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோ

பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் தழைத்த மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் பிறவும்” என்று தோழி கூறுவதாக 99 வகையான மலர்களை இங்குக் கபிலர் காட்டுகிறார்.

 

”நாங்கள் தழையினால் செய்த ஆடையைக் கட்டி, பல்வேறு உருவங்களில் அழகான மலர்மாலைகளை எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில் அழகாகக் கட்டி, நெருப்பைப் போல உள்ள நிறத்தையுடைய அழகிய தளிரையுடைய அசோக மர மலர்த் தாது விழுகின்ற, குளிர்ச்சியான நிழலில் இருந்தோம். அப்போது வேட்டை நாய்களுடன் தலைவன் அங்கு வந்தான். வந்தவன்,  “ஒளியுடைய வளையல்களையும், அசையும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், மடமையுடைய அழகான ஈரக் கண்களையுமுடைய இளையவர்களே!  நான் வேட்டையாடிய விலங்கு தப்பிப் போன நிலையில் உள்ளேன்” என்றான். நாங்கள் மறுமொழி கூறவில்லை.

“என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், என்னுடன் பேசுவது உங்களுக்குப் பழியாகுமா, மென்மையானவர்களே?” என்று குரைக்கும்  வேட்டை நாய்களின் கடுமையான குரைத்தலை அடக்கி, எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்.

அப்போது ஒரு யானை கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, தப்பிக்க இடம் அறியாது, விரைவாக, எங்கள் திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள் ஒலிக்க, எங்களின் நாணத்தை மறந்து, விரைந்து, நடுங்கும் மனது உடையவர்களாக, அவனை அடைந்து, கடவுள் ஏறிய மயிலைப் போல நாங்கள் நடுங்கினோம். அவன் அம்பு எய்தி யானையை விரட்டினான். மேலும் அவன், “அழகிய மென்மையான கூந்தலை உடையவளே!  தடுமாறாதே!  அச்சம் கொள்ளாதே! உன்னுடைய அழகிய நலத்தை நுகர்வேன் நான்” என, மாசு இல்லாத தலைவியின் ஒளியுடைய நெற்றியைத் தடவி, அதன் பின் நீண்ட நேரமாக நினைத்து, தலைவியின் தோழியான என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்.

 “——— ————— அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ,
ஆகம் அடைய முயங்கலின்.”

 தலைவன் அவளை  அணுகின பொழுது நாணமும் அச்சமும் அவளிடம் தோன்றியன.  அவளை விரைவாக பிரியவும் அவன் விடவில்லை.  அவளை அணைத்து அவளுடைய மார்பு தன்னுடைய மார்பிலே ஒடுங்குமாறு அவளைத் தழுவினான்.

    தலைவன்., “அவளின் முன்கையைப் பற்றி,  விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே!” உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறியும் நல்ல மணத்தினை இன்னும் சில நாள்களில் நான் நடத்துவேன்” என்று நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறு கூறினான். பசுவைப் புணர்ந்த ஏறு போல், எங்களுடன் வந்து, முழவின் ஓசை நிற்காத பழைய நம்மூரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறையில் எங்களை நிறுத்திவிட்டுச் சென்றான்

அப்புணர்ச்சி தொடங்கி, முதல் நாளில் கொண்ட விருப்பத்துடன் என்றும் இரவில் வரும் தன்மையுடையவன் அவன்.  அவ்வாறு அவன் வரும்பொழுதெல்லாம், காவலர் விரைந்துக் காவல் காப்பினும், சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலா ஒளியைப் பரப்பினும், தலைவியைக் காணாது அவளது மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலை அவன் பெறாவிட்டாலும், குறி இல்லாததை தலைவன் செய்தக் குறியாகக் கருதிச் சென்று மீண்டு மனையில் புகுந்தாலும் வெறுத்தலைச் செய்யான்.  அவன் இளமையைக் கடந்தவன் இல்லை.  தன் செல்வத்தின் செருக்கால், நல்ல குடியில் பிறந்த தனக்குரிய நல்ல செயல்களிலிருந்து விலகியவனும் இல்லை” என்று தோழி தன் சொல்வன்மையினால் தலைவனின் பண்புநலன்களையும் கூறுகிறாள். 

“ அச்சம் தரும் ஊரின்கண் இரவுக் குறியில் கூடுவதற்கு அவன் வருகிறான். அந்த நிலையற்ற நிலையை ஒழுக்கம் அன்று என்று எண்ணி திருமணத்தை விரும்பி, மழைத் துளிகளால் தாக்கப்படும் மலரைப் போல், தன்னுடைய அழகு அழிந்து, இமை சோர்ந்து, கண்களில் ஈரத்தை உடையவளாய்க் கலங்குகின்றாள் இவள்.  இவளுடைய பெரிய, அழகிய, குளிர்ந்த கண்களிலிருந்து தொடர்ந்து கண்ணீர் மார்பில் சொட்ட, நாள்தோறும் வலையில் அகப்பட்ட மயிலைப்போன்று, நலம் தொலைய, மெலிந்து, அவனை நினைக்கும்பொழுதெல்லாம் இவள் அழுகின்றாள். அடுத்துக் கபிலர் அவன் வரும் வழி பற்றிக் கூறுகிறார்.

”—————— —————– கங்குல்
அளைச்செறி உழுவையும், ஆளியும், உளியமும்,
புழல் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும்,
வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமும், சூரும், இரை தேர் அரவமும், 255
ஒடுங்கு இருங்குட்டத்து அருஞ்சுழி வழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்கரும் கராமும்,
நூழிலும், இழுக்கும் ஊழ் அடி முட்டமும்,
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்  
குழுமலை விடர் அகம் உடையவால் எனவே.”

”ஆனால் அவன் வரும் வழியில் இரவில் குகையில் உறையும் புலிகளும், ஆளியும், கரடியும், உள்ளே துளையுடைய கொம்பையுடைய காட்டு ஆவினத்தின் காளைகளும், களிற்று யானைகளும், வலிமையால் கெடுக்கும் கொடூரமான சினத்துடன் கூடிய இடியும், முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பேய்களும், மலைப் பாம்புகளும், உட்படப் பிறவும், தப்ப முடியாத தொல்லையைத் தருவன ஆகியவையும் அவருடைய தொகுதியாக உள்ள மலையின் பிளவுகளில் இருக்கின்றன. வருத்தும் கடவுள்களும், இரை தேடும் பாம்புகளும், ஒடுக்கமான கருமையான குளங்களில், கடினமான சுழிகள் இருக்குமிடத்தில் இருக்கும் வளைந்த கால்களையுடைய முதலையும் இடங்கரும் கராமும், ஆறலை கள்வர்கள் கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கும் இடங்களும் இருக்கின்றன” என்று தோழி கூறுவதுடன் நூல் நிறைவு பெறுகிறது.

”தலைவி தலைவனை நினைத்து வருந்துகிறாள் .அவன் வரும் வழியும் அச்சம் தரக்கூடியது. எனவே தாயே! நீர் அவனை அவளுக்கு மணம் முடிக்க வேண்டும்” என்று தோழி கூறாமல் கூறுகிறாள்.

 

நாயன்மார் வெண்பா – 5 – தில்லை வேந்தன்

                

(ஓர் அடியார்- ஒரு வெண்பா)

 24)  அப்பூதி அடிகள்!

அப்பூதி அடிகள் நாயனார் வரலாறு (தமிழ் Subtitle உடன்) | Apputhi Adigal Nayanar Life History - YouTube

சோழ நாட்டைச் சேர்ந்த திங்களூர் என்ற ஊரில் அந்தணர் மரபில் தோன்றிய அப்பூதி அடிகள் வாழ்ந்து வந்தார். அவர் திருநாவுக்கரசர் நாயனார் பற்றிக் கேள்விப்பட்டு, அவர் மீது அளவற்ற அன்பு பூண்டிருந்தார். தம் மைந்தர்களுக்கும், வீட்டில் உள்ள பொருள்கள், பசுக்கள், தண்ணீர்ப் பந்தல், மடம் முதலியவற்றிற்கும் ‘திருநாவுக்கரசு’ என்ற பெயரைச் சூட்டி இருந்தார்.

ஒரு முறை, திருநாவுக்கரசர் திங்களூர் வழியாக வந்தபோது அங்கிருந்த தண்ணீர்ப் பந்தல், தம் பெயரில் விளங்கியதைக் கண்டு வியப்புற்றார். அங்கிருந்தோரிடம் அப்பூதி அடிகளைப் பற்றிக் கேட்டறிந்து, அவர் இல்லம் சென்றார். சிவனடியார் ஒருவர், தம்மை நாடி வந்துள்ளது அறிந்த அப்பூதியடிகள் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி வரவேற்றார். திருநாவுக்கரசர், “தாங்கள் ஏற்படுத்திய தண்ணீர்ப் பந்தலுக்குத் தங்களுடைய பெயரை வைக்காமல், வேறு ஒருவருடைய பெயரை வைப்பதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அப்பூதியடிகள், திருநாவுக்கரசரின் பெருமைகளை எல்லாம் விளக்கி,  அப்படிப்பட்ட சிறப்பை உடையவரை ‘வேறொருவர்’   என்று கூறுவது சரியல்ல என்று சினத்துடன் கூறினார். “மங்கலமான அடியார் திருக்கோலத்துடன் வந்து, இப்படிக் கேட்கும் நீர் யார்?” என்று வினவினார். “இறைவனின் கருணையால், சூலை நோயினால் ஆட்கொள்ளப்பட்டு உய்தி அடைந்த சிறுமையேன் யான்” என்று திருநாவுக்கரசர் கூறினார்.

உடனே அப்பூதி அடிகள்,  இரு கைகளையும் தலை மேல் குவித்து,  நிலத்தில் விழுந்து நாவுக்கரசரின் திருவடிகளை வணங்கினார்.

தம் இல்லத்தில் திருவமது செய்ய வேண்டும் என்ற அப்பூதி அடிகளின் வேண்டுகோளுக்குத் திருநாவுக்கரசர் இணங்கினார். அப்பூதியாரின் மனைவியார் வகை வகையான நல்ல உணவைச் சமைத்த பின்னரத் தம் மூத்த மகனை வாழை இலைக் குருத்து  அறுத்துக் கொண்டு வருமாறு அனுப்பினார். மகன், வாழை இலைக் குருத்தை அறுக்கும் போது ஒரு பாம்பு   கையைச் சுற்றிக்கொண்டு அவனைக் கடித்தது. பாம்பை உதறிவிட்டு அவன் வெகு விரைவாகச் சென்று வாழை இலையை அன்னையிடம் கொடுத்து விட்டுக்  கீழே விழுந்து உயிரை விட்டான். அவன் இறந்ததால், அடியாருக்கு அளிக்கும் விருந்து தடைப்படக்கூடாது என்று கருதிய பெற்றோர், அவன் உடலை மறைவாக வைத்து விட்டு, நாவுக்கரசரை, உணவு உண்ண அழைத்தனர்.

திருநாவுக்கரசர், அனைவருக்கும் திருநீற்றை அளித்து விட்டு , மூத்த பிள்ளையையும் திருநீறு இடுவதற்கு அழைக்குமாறு கூறினார். அப்பூதியார், ,”அவன் இப்போது இங்கு உதவான்”. என்றார்.

ஐயம் கொண்ட திருநாவுக்கரசர் உண்மையைக் கூறுமாறு  கேட்டதும் வேறு வழி இன்றி அப்பூதியார் நடந்ததைக் கூறினார். “நீர் செய்தது நன்றாக உள்ளது!” என்று கூறிய நாவுக்கரசர், மைந்தனின் உடலைச் சிவபெருமான்  அருள்  செய்யுமாறு திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தைப் போக்கினார். உயிர் பெற்றெழுந்த அவனுக்குப் புனிதமான  திருநீற்றை அளித்தார்.அடியார் திருவமுது செய்ய இடையூறு ஆயிற்றே என்று பெற்றோர் வருந்தினர்

பிறகு அவர்கள் அனைவரும் அருகில் அமர, அப்பூதியாரின் இல்லத்தில் திருநாவுக்கரசர் திருவமுது செய்தார்.தாம் பாடிய பதிகத்தில் அப்பூதியாரின் தொண்டினைச் சிறப்பித்துப் பாடிச் சென்றார்.. இவ்வாறு திருநாவுக்கரசரின் திருப்பெயரைத் துதித்துக் கொண்டு, அப்பூதியார்  பொருள் வளம் சிறந்து,  சிவ நெறியில் செம்மையுடன் வாழ்ந்து, தில்லை அம்பலத்தில் ஆடுகின்ற உமையொரு பாகனின் பொற்பாதங்களை அடைந்தார்.

 

அப்பூதி அடிகள் வெண்பா

 

அரவால் மகனிறந்தான் ஆனாலும், அப்பர்

வரவால் விருந்தளித்த வள்ளல் – திருவார்ந்த

திங்களூர் அப்பூதி திண்திறல் மெய்யன்பை

இங்குநாம் ஏத்தல் இனிது

 

                                    ******************”

 

                 25) திருநீலநக்க நாயனார்

திருநீலநக்க நாயனார் / Thiruneelanakka Nayanar - YouTube

காவிரி பாயும் சோழநாட்டில் மறை ஓதும் அந்தணர்கள் வாழ்ந்த சாத்தமங்கை என்ற ஊரில் தோன்றியவர் திருநீலநக்கர், சிவ பூசை செய்வதும், அடியாரை உபசரித்துப்  பணிவதும் அவர் மேற்கொண்ட இரண்டு செயல்களாகும். ஒரு திருவாதிரை நாளில்,  நீலநக்கர்

சாத்தமங்கையில்  இருந்த அயவந்தி  என்ற கோவிலில் பூசை செய்யத் தம் மனைவியுடன் சென்றார். அவர், திருவைந்தெழுத்தை எண்ணித் தொழுது கொண்டிருந்த போது ஒரு சிலந்தி இறைவனின் மேனி மீது விழுந்தது. அதனால் அஞ்சிய  திருநீலநக்கரின் மனைவியார் ஒரு இளங்குழந்தையின் மீது விழுந்த சிலந்தியை நீக்குவதைப் போன்று அன்புடன் ஊதித்  துமிந்து திருமேனி மேல் இருந்த சிலந்தி போகுமாறு செய்தார் (துமிந்து –  காற்று,வாய் நீருடன் செல்லுமாறு ஊதுதல்)

அச்செயலைக்  கண்டு மனம் பதைத்த திருநீலநக்கர், “அறிவற்றவளே,  நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு அந்த அம்மையார், “இறைவன் திருமேனி மீது சிலந்தி ஒன்று விழுந்தது அதனால் இவ்வாறு துமிந்தேன்” என்று கூறினார். “நீ வாய் நீர் படுமாறு செய்ததால் நான் உன்னைத்  துறந்து விட்டேன்” என்று கூறிச் சென்றார். நாயனாரின் மனைவியார் கோவிலிலேயே தங்கிவிட்டார்

அன்று இரவு நாயனாரின் கனவில் இறைவன் தோன்றி, “உன் மனைவி ஊதிய பக்கம் தவிர, மற்றப்  பக்கங்களில் எல்லாம் கொப்புளங்கள் உண்டாகி உள்ளன, பார்,!” என்றார்.மறுநாள் கோவிலுக்குச் சென்ற நாயனார் இறைவன்  அடிகளில் விழுந்து வணங்கித்  தம் மனைவியை அழைத்துக்கொண்டு இல்லத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்தார்.

ஞானசம்பந்தரைப் பற்றி அறிந்திருந்த நாயனார் அவரைக் காண வேண்டும் என்று பெரிதும் விழைந்தார். ஒருமுறை சம்பந்தர் ஊருக்கு வந்தபோது, பெரிதும் மகிழ்ந்து வரவேற்றார். அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவருடைய மனைவியாரும் வந்திருந்தனர்.

திருநீலநக்கரின் இல்லத்தில்  அமுது செய்த சம்பந்தர், அங்கேயே தங்கினார். சம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கத் திருநீலகண்ட யாழ்பாணருக்கும், அவரது மனைவியாருக்கும் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே தங்க இடம் கொடுத்தார். அப்போது வேதிகையில் உள்ள அக்கினி முன்பை விட மேலாக வலஞ்சுழித்து எரிந்தது.

சம்பந்தர் அயவந்திப் பெருமானை வழிபட்டுத்  திருப்பதிகம் பாடினார்.

சீர்காழியில்  சம்பந்தரின் திருமண நிகழ்ச்சியில் திருநீலநக்கர்  பங்கு பெற்றுச்  சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.

 

         திருநீலநக்கர் வெண்பா

 

சிவன்மேல் விழுந்த சிலந்தியை ஊத

அவரைச் சினந்தே அகன்றார் – அவன்கனவில்

கொப்புள்கள் காட்டவும் கூட்டிவந்தார்; சம்பந்தர்

ஒப்பில்  அடிபணிந்தார் உற்று!

 

           (அவரை – நாயனாரின் மனைவியை)

                              (அவன்- சிவன்)

 

விளக்கம்:

சிவபெருமான்  திருமேனி மேல் விழுந்த சிலந்தியைத் திருநீலநக்கரின்  மனைவியார் வாயால் ஊதி அகற்றியதால் சினந்த நாயனார் அவரைத்  துறந்து விட்டுச் சென்றார். இறைவன் கனவில் தோன்றி கொப்புளங்களைக் காட்டி. உண்மையை விளக்கியதும் கோவிலுக்குச் சென்று தம் மனைவியைக் கூட்டி வந்தார். ஞானசம்பந்தப் பெருமானின் ஒப்பில்லாத திருவடிகளை உற்றுப் பணிந்தார்.

                   

             26) நமிநந்தியடிகள் நாயனார்.

63 Nayanmargal history|நமிநந்தியடிகள் நாயனார்|Nayanar history|Naminandiadigal|periya puranam|Nayanar - YouTube

திருவாரூருக்கு அருகில் உள்ள ஏமப் பேறூர் என்ற ஊரில், அந்தணர் மரபில் தோன்றியவர் நமிநந்தி அடிகளார். அவர், இம்மையிலும் மறுமையிலும் சிவபெருமான் திருவடிகளே துணை என இரவும், பகலும் வணங்கி வந்தார், நாளும், திருவாரூர் சென்று வணங்கும்  இயல்பினைக் கொண்டிருந்தார்.

ஒருமுறை, திருவாரூரில் உள்ள கோவிலுக்குச்  சென்ற போது, அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று விரும்பினார். அப்போது மாலை ஆனதால் தம் ஊருக்குச்  சென்று எண்ணெய்  கொண்டு வர இயலாது என்பதை உணர்ந்தார். திருவாரூரிலேயே அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கேற்ற நெய் தருமாறு வேண்டினார். அந்த வீட்டில் இருந்த சமணர்கள், ,”கையிலே கனலை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு  எதற்கு? . இங்கு நெய் இல்லை. வேண்டுமானால் நீரைக் கொண்டு விளக்கேற்றுங்கள்” என்று ஏளனமாகக் கூறினர்.

மனம் வருந்திய நமிநந்தி அடிகளார், சிவபெருமான் கோவில் முன்பு உள்ளம் உருகிப்  பணிந்து வணங்கினார். “நமிநந்தியே,  கவலையை விடுக. அருகில் உள்ள குளத்தில் உள்ள  நீரை முகந்து வார்த்து விளக்கேற்றுக” என்ற  அருள்மொழி ஆகாயத்தில் கேட்டது. அதைக் கேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், “இஃது இறைவன் அருளே!” என்று எண்ணிக் குளத்தின் நடுவே சென்று நீரை முகந்து, திரி இட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். விடியும் அளவும் எரியும் வண்ணம் பல திருவிளக்குகளை ஏற்றினார்.

இவ்வாறு ஆருரில் இரவில் நீரால் திருவிளக்கு ஏற்றி விட்டுப்  பிறகு தமது ஊராகிய ஏமப் பேறூருக்குச்  செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நமிநந்தி அடிகளின் செயலால் கலக்கமுற்ற சமணர்கள் அவ்வூரை விட்டு அகன்றனர். சோழ மன்னனும் கோயிலுக்கு அறக் கொடைகள் பல அளித்தான்.அடிகளார், திருவாரூரில் பங்குனி உத்திரப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்

ஒரு நாள் மணலி என்ற ஊரிலே அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களுடன் கலந்து இருந்து இறைவனைத் தரிசித்தார்.

பிறகு வீடு திரும்பிய போது, உள்ளே செல்லாமல் திண்ணையிலேயே தங்கி இருந்தார். பலவகை மக்களுடன் கலந்து இருந்ததால் நீராடிய பின்பே மனைக்குள்  செல்ல வேண்டும் என்று கருதினார்.

அப்போது நமிநந்தி அடிகளாருக்கு உறக்கம் வந்தது. கனவிலே தோன்றிய வீதி விடங்கப் பெருமான், “நமிநந்தியே, திருவாரூரில் பிறந்தார் அனைவரும் என்னுடைய கணங்களே. அதை நீ காண்பாய்!” என்று சொல்லி மறைந்தான். மக்களிடையே பிரிவோ,

வேறுபாடோ  காண்பது தவறு என்பதை உணர்ந்து கொண்டவர், வீட்டின்  உள்ளே சென்று சிவ பூசையை முடித்தார்.

மறுநாள், திருவாரூர் சென்ற போது, அங்கிருந்த மக்கள் அனைவரும் சிவ வடிவத்தில் தோற்றம் அளிப்பதைக் கண்டு உண்மை தெளிந்தார். அனைவரும் இறைவனின் வடிவமே ஆவர்  என்பதை உணர்ந்து கொண்டார்

சிவனடியார்களுக்கு வேண்டியவை  எல்லாம் செய்து கொடுத்து, நெடுங்காலம் திருத்தொண்டு ஆற்றித்  திருவாரூர்ப்  பெருமான் திருவடியை அடைந்தார்.

அப்பர் இவரை “தொண்டர்களுக்கு ஆணி” என்று சிறப்பித்துள்ளார்.

 

       நமிநந்தியடிகளார் வெண்பா

 

நெய்யின்றிப் பொய்கையின்  நீரால்  விளக்கேற்றி

வையம் வியப்புற வார்த்தாரே – மையிருக்கும்

கண்டத்தான் போல்மக்கள் காட்சிகண்(டு) உற்றுண்மை

மண்டுபிழை விட்டார் மனம்!

 

(தொடரும்)

 

 

 

குவிகம்- சிவசங்கரி மாதாந்திர சிறுகதைத் தேர்வு – மே 2024- கலாவதி பாஸ்கரன்

 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இம்மாதத்தின்  மிகச் சிறந்த கதையாக நான் தேர்ந்தெடுத்தது  இதுதான் – கலாவதி பாஸ்கரன் 

ஓய்வு               தினமலர் 07.04.2024                                  பர்வீன் பானு

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கதைகள் பற்றிய சிறு குறிப்புகள்:

 

ஓய்வு               தினமலர் 07.04.2024                                  பர்வீன் பானு

ஓய்வு பெற்ற அனைவரும் கண்டிப்பாக படித்து , உணர வேண்டிய கருவை கொண்ட கதை. மிக எளிமையான நடையில், ஆக்க பூர்வமான யதார்த்தத்தை வெளிபடுத்தும் களம். தற்போது உள்ள சூழலில், ஓய்விற்குப் பின் தனித்து வாழும் தம்பதிகளிடையே ஒரு பெரிய இடைவெளி பெரும்பாலும் வந்து விடுகிறது. கதாசிரியர் இந்தக் கதையில் வெளிப்படுத்தும் தீர்வு வித்தியாசமாகவும் , நடைமுறைக்கு எளிமையாகவும், எதிர்காலம் பற்றிய கவலைக்கு சரியான அணுகுமுறையாகவும் இருப்பது மிகவும் பாராட்டத் தக்கது.

கணங்கள்       வாசகசாலை 16.04.24                                ஹேமா ஜெய்

வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் விடுமுறைக்காக ஏங்கி அதை நன்கு அனுபவிக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு. விடுப்பு முடிந்த உடன் நேரத்தை வீண் செய்து விட்டோம் என நினைப்பதும் உண்டு. இதை மிக அழகாக, நேர்த்தியாக கூறியுள்ளார் ஆசிரியர்.

ஆல்பம்          வாசகசாலை 16.04.24                                ரம்யா அருண்

கணவனிடம் ஆரம்பம் முதல் வெளிப்படையாக இருக்க நினைக்கும் பெண் பேசும் சொற்கள் அவளுக்கு எதிராக திரும்பி, விவாகரத்தில் முடிய, கடைசி வரை அந்த பெண்ணால் அப்படிப்பட்ட வெளிப்படை தன்மையுடன் இருக்க முடியவில்லை என்பதை நல்ல கதையோட்டத்துடன்  எடுத்து காட்டுகிறார்.

வீண்                சொல்வனம் 14.04.24                                   ஞான சேகர்

ஒரு பையனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பலர் மூலம் நிதி திரட்டி கொடுத்தவர், அந்த பையனின் அப்பா தன் சொந்தப்  பணத்தில் வீடு கட்டுவதை பார்த்து, பணம் இருந்தும் தன் பிள்ளைக்கு மருத்துவ செலவுக்கு உதவாததால் மனம் உடைகிறார். ஆனால் அந்த பையன் விபத்தில், போதையில் இறந்து போவது, ஒரு எதிர் பாரா திருப்பமாக முடிவடைகிறது.

 

பிரமிக்க வைத்த புத்தகங்கள்-5     – மீனாட்சி பாலகணேஷ்

 

சார்த்தா – கன்னட மூலம் – எஸ் எல் பைரப்பா.

                   சார்த்தா – தமிழாக்கம் – ஜெயா வெங்கட்ராமன்

சார்த்தா

 

நமது பாரத தேசத்தின் பல்வேறு கலாச்சாரங்களையும், வரலாற்றினையும் ஒருவாறாவது அறிந்துகொள்ள வேண்டுமென்றால் பலமொழி எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்க வேண்டும். இந்த ஞானோதயம் சமீப காலங்களில் எனக்கு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சாகித்ய அகாதமி பரிசுபெற்ற கன்னட எழுத்தாளர் திரு எஸ் எல் பைரப்பாவின் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இவர் தீவிரமான எழுத்தாளர். பொறுமையாக ஆராய்ந்து, உண்மைகளைத் துருவித் தோண்டியெடுத்து எழுத்தில் பதிவு செய்பவர். இவருடைய கன்னட நவீனங்கள் தற்போது தமிழில் திரு ஜெயா வெங்கட்ராமனாலும் ஆங்கிலத்தில் மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே ஆவரணா (தமிழில் திரை) எனும் நாவலைப்பற்றி நான் எழுதியதை நீங்கள் படித்திருக்கலாம். திரை ஒரு அருமையான மொழிபெயர்ப்பு; இது மட்டும் இல்லாவிட்டால் கன்னட எழுத்தாளுமைகளின் இத்தனை தீவிரமான வாசகியாக, ரசிகையாக நான் மாறியிருக்க இயலாது.

அதே போலத்தான் இந்தப் புத்தகமும் – ‘சார்த்தா’. அதன் பெயரை மொழிபெயர்க்காமல் அப்படியே தந்துள்ளார் ஜெயா வெங்கட்ராமன் அவர்கள்.

‘சார்த்தா’ எனும் பெயருக்கு பைரப்பா அவர்களின் விளக்கத்தைப் படிப்பதே சுவாரசியமாக உள்ளது. கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பரதக் கண்டத்தில் நடந்ததாகப் பல நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்துகொண்டு நாவலை எழுதியுள்ளேன் என்கிறார். யானை, குதிரை, கோவேறு கழுதை, பல நூறு வண்டிகள் இவற்றில் வாணிகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு பெருங்கூட்டங்களாக வணிகர்கள் வெகுதூரத்திலுள்ள இடங்களுக்குப் பயணம் செய்து வியாபாரம் செய்து வந்ததனை அக்காலத்தில் ‘சார்த்தா’ என்று கூறுவார்கள் என்கிறார். தமிழில் ‘வாணிகக்குழு’ எனலாம்.

கதாநாயகனான நாகபட்டன் எனும் வாணிகத் தொடர்பற்ற அந்தணனின் வாய்மொழியாகவே, அவனுடைய அனுபவங்களாகவே நாவல் வெகு சுவாரசியமாக நகர்கிறது. நானூறு பக்கங்கள், நம்மை அந்த நாகபட்டன் பயணிக்கும் ‘சார்த்தா’வுடன் எங்கெங்கோ – பரதக் கண்டத்தில் தான் – அழைத்துச் செல்கின்றன. பல வேறுபட்ட அனுபவங்களில் அவனுடன் பங்குகொள்ள வைக்கின்றன.

தனது நாட்டின் அரசனான அமருகன் கேட்டுக்கொண்டதன்படி, சார்த்தா எனும் குழுவின் அரசியல், பொருளாதாரம் பற்றிய செயல்பாடுகளை, அவர்களுக்கே தெரியாமல் அறிந்து கொள்ள வேண்டி, அரசனால் ‘சார்த்தா’ கூட்டத்துடன் அனுப்பி வைக்கப் படுகிறான் நாகபட்டன். தாய், இளம் மனைவி இவர்களை விட்டு, திரும்பச் சில ஆண்டுகளாவது ஆகும் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறான் அவன். வழியில் அவன் சந்திக்கும் பலவிதமான மனிதர்கள், விசித்திரமான சம்பிரதாயங்கள், இன்னல்கள், புதுவிதமான அனுபவங்கள் இன்ன பிறவின் கலவையே இந்நாவல். கட்டாயமாக இது விக்கிரமாதித்தன் கதையல்ல. அதற்கும் மேற்பட்ட அற்புதமான கலாச்சார, மத, இன வழக்கங்களை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி. ‘சார்த்தா’வில் பலதரப்பட்ட மக்கள் உண்டு. அவரவர்களுக்கு ஏற்றபடி சமைக்க ஆட்கள், பொருள்கள், பிறகு குழுக்களுக்குப் பொழுதுபோக்காக அவர்கள் தங்குமிடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள், வண்டிகளைப் பழுதுபார்க்கும் தச்சர்கள், மருத்துவர்கள், சார்த்தாவினைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் காவல் வீரர்கள், சார்த்தாவின் தலைவர்கள் எனப் பல்வேறு மனிதர்களைக் கொண்ட பெரும்குழு அது. வழியில் பாதுகாப்பாகத் தங்கி, கூடாரம் அமைத்து, சமைத்து, சாப்பிட்டு, பயணிக்கும் கூட்டம் அது.

நாகபட்டன் இணைந்து செல்லும் ஒரு சார்த்தாவின் மூலம், பரதக் கண்டத்தின் பன்முகங்களை, கலாச்சார, மத (பௌத்தம், இந்து, சிறிது இஸ்லாம்), ஆன்மீகம், கலை (முக்கியமாக சிற்பக்கலை) இவற்றின் வாயிலாக, பலவிதமான, அறிவினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சுவையான புனைவுகளுடனும், ஆச்சரியமான திருப்பங்களுடனும், நடத்திச் செல்வது பிரமிக்க வைப்பது.

நாளந்தா பல்கலைக் கழகம் பற்றிய தகவல்கள், பயிலும் முறை, யாரெல்லாம் அங்கு வந்து பயிலலாம், கல்வி கற்கச் சேரலாம் எனவெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது. மதுரா பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை. யோக விளக்கங்கள், எங்கோ இருக்கும் மற்றவர் மனதைப் படிக்கும் முறை, கூடுவிட்டுக் கூடு பாய்வது, புத்தமத சமாச்சாரங்கள், பலவிதமான வகையில் தாந்த்ரீகத்தைப் பயிலும் மனிதர்களைப் பற்றிய தகவல்கள், அவர்கள் செய்யும் ரகசிய பூஜைகள், செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்யும் முறைகள், இவற்றையெல்லாம் கோர்வையாக, கதைமாந்தர்களின் அனுபவ வாயிலாக, நிதானமாக, ஆழ அறிந்து கொள்ளும்படி பாத்திரப் புனைவுகளுடன் கதையை மிக அற்புதமாக நடத்திச் செல்கிறார் கதாசிரியர்.

தேர்ந்த வீரனொருவன் வெகு லாகவமாக நடத்திச் செல்லும் பஞ்சகல்யாணிக் குதிரை போல தொய்வேயற்ற நடையில் கனகச்சிதமாக கம்பீர நடை பயிலும் எழுத்து. அதற்குச் சற்றும் சளைக்காத மொழியாக்கம். படிக்கும் ரசிகனுக்கு வேறென்ன வேண்டும்? இன்னும் பலமுறையாவது படிக்க வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.

நாகபட்டன் பலவிதமான அனுபவங்களை எதிர்கொள்வதனைப் பற்றிப் படிப்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. மண்டனமிஸ்ரரின் சீடனான அவன் முதலில் அரசனின் ஆணைப்படி காசி பல்கலைக்கழகத்தில் பெரும் ஆசிரியர்களிடம் கல்வி கற்கப் போகிறேன் என்று கூறித்தான் சார்த்தாவுடன் இணைந்து கொள்கிறான். பின்பு சிலவேறு காரணங்களால் அது நிறைவேறாதபோது மனம் சிறிது தளர்கிறான். நம்பும்படியாக நாடகமாட வேண்டுமே! அவன் செல்லும் சார்த்தாவின் தலைவர்களான சார்த்தவாஹர்கள் கல்வியில் தேர்ந்த பண்டிதனான நாகபட்டனிடம் அவ்வப்போது கருத்துக்களுக்காக வருகிறார்கள். சார்த்தா குழு முதலில் மதுராவை அடைகிறது. எதிர்பாராத தடங்கலினால் அவர்கள் சில ஆண்டுகள் அங்கேயே தங்க வேண்டி வருகிறது. அப்போது நாகபட்டன் ஓரிடத்தில் தங்கி, நாடகக்குழு ஒன்றில் இணைந்து பிரதான வேடமான கிருஷ்ண வேடத்தில் நடிக்கிறான்.

சிற்பக்கலையின் அணுகுமுறைகளை எவ்வாறு இந்துப் பண்பாட்டிலிருந்து பௌத்தத்திற்கு எடுத்துச் செல்கின்றனர் என அறிந்து திகைக்கிறான்.

நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து நடிப்பவன் பிரதான நடிகையான சந்திரிகையை சந்திக்கிறான். அவர்களுடைய நட்பு வளர்கிறது. அவளும் யோக சாஸ்திரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். கதை இவ்வாறு செல்கிறது.

இதற்கிடையே தான் வளர்த்துக் கொண்ட தனது யோக சக்தியால் தனது இளம் மனைவியை அரசன் அமருகன் தன் வசப்படுத்திக் கொண்டுவிட்டான் என அறிந்து கொள்கிறான். அதனால் ஊர் திரும்பும் ஆவல் அறவே அற்றுப் போகிறது.

ஒரு கட்டத்தில் நாகபட்டன் ஒரு வாமாச்சாரியை (தாந்த்ரீகனை) சந்திக்கிறான். அந்த அனுபவங்கள் ஆச்சரியமும் அதீதமும் மிக்கவை. இவ்வாறு பலவிதமான அனுபவங்களுக்கும் உள்ளாகிக் கடைசியில் திரும்பவும் சந்திரிகையிடமே செல்கிறான்.

நாளந்தா பல்கலைக் கழகத்தில் ஒரு பிட்சுவின் மேற்பார்வையில் கற்கச் செல்கிறான். சுவடிகளைப் பிரதி எடுக்கும் வேலை கிடைக்கிறது. அவ்வனுபவங்களும் புதுமையானவை.

இவ்வாறு அனுபவங்களின் விரிவான திரளாக இருக்கும் நாவலின் போக்கைச் சுருக்கமாக எழுதுவது இயலாதது.

எட்டாம் நூற்றாண்டின் சமயாச்சாரியர் ஆதிசங்கரரைப் பற்றிய சுவாரசியமான வரலாற்றின் முக்கிய பகுதி, அவர் மண்டனமிஸ்ரர், அவர் மனைவி பாரதி இவர்களுடன் ஈடுபடும் சொற்போர் – இது என் உள்ளத்தை மிகவும் கவர்ந்து மிகுந்த பிரமிப்பில் ஆழ்த்திய பகுதி. அச்சொற்போரின் ஒரு நிகழ்வாக ஆதிசங்கரர் செய்யும் பரகாயப் பிரவேசத்தை வெகு இயல்பாக, இறந்துவிட்ட அந்நாட்டு அரசனின் உடலை ஒரு கருவியாக்கிக் காட்டும் சாமர்த்தியம் (இது முன்பே சரித்திரத்தில் பதிந்திருந்தாலும் கூட) அசாத்தியம். அந்த மன்னன் அமருகனை ஒரு காமுகனாக்கிக் காண்பித்து, நாகபட்டனின் அழகிய இளம் மனைவியை அடைவதற்கே அரசன் அவனை ஊரை விட்டு அனுப்பிவிட்டதாகக் கதையின் முதலிலேயே அறிந்து கொண்டு விடுகிறோம். நாகபட்டன் சார்த்தாவின் ரகசியங்களை அறிந்து கொண்டு வருவதென்பது ஒரு வலுவற்ற காரணம் எனப் புரிந்து போகும். பல ஆண்டுகளின் பின்பு ஆதிசங்கரர், தர்க்க வாதத்தில் வெற்றிபெற தான் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு அனுபவ உண்மையை அறிந்து கொள்வதற்காக, இறந்துவிட்ட அந்தக் காமுகனான அரசனின் உடலில் கூடுபாய்ந்ததனைத் தொடர்பு படுத்தும் கதாசிரியரின் சாமர்த்தியம் பிரமிக்கத் தக்கது.

எந்தவொரு சிறு நிகழ்வும் காரண காரியமின்றி இப்புதினத்தில் நிகழ்வதில்லை. மண்டனமிஸ்ரர், பாரதிதேவி, ஆதிசங்கரர் இவர்களுக்கிடையேயான தர்க்க வாதத்தைப் பலமுறை நிதானமாகப் படிக்க வேண்டும். இதனைப் புரிந்து கொள்வது எளிதில் சாத்தியமன்று. அருமையான இலக்கிய, தத்துவ, வேதாந்தப் பதிவு இதுவாகும். வாசகர்களுக்காக ஆவலுடன் ஆத்மார்த்தமாக கதாசிரியர் பதிவு செய்துள்ள பகுதி இதுவே. மொழிபெயர்ப்பும் கனகச்சிதம். படிக்கும்போது உடல் சிலிர்க்கின்றது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் புதினத்தின் உச்ச நிகழ்வே இதுவாகும். ஆனால் கதைப்படி இதுவல்ல எனப் படிப்பவர்களுக்கும் தெரிந்து விடும்.

           நாகபட்டனின் நட்பிற்கும் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவளாகி அவனைக் கடைசியில் தனது குருவின் ஆணையால் மணந்தும் கொள்ளும் பெண்ணான சந்திரிகை இன்னொரு பிரமிப்பை உருவாக்கும் கதாபாத்திரம். தனது யோக சாதனைகளால் ஆன்மீகத்தில் உயர்ந்து நிற்கும் பெண்மணி.

           சொல்லிக்கொண்டே போகலாம். சொல்லிக் கொடுக்கும் வார்த்தையும் கட்டிக்கொடுக்கும் சோறும் எத்தனை நாள் வரும்? வாங்கிப் படியுங்கள் இந்த அருமையான புத்தகத்தை! நம் பாரத தேசத்தின் பண்டைய கலச்சாரத்தின் பதிவுகளை அறிந்து கொண்டு பிரமிக்கலாம்.

(மீண்டும் சந்திப்போம்)

 

 

 

 

 

 

 

அதிதி – இரண்டாம் பகுதி – பானுமதி

Soldiers in a jeep hi-res stock photography and images - Alamy

இராணுவ வாகனம் அவர்களை கொல்லூர் மலையடிவாரத்தில் இறக்கி விட்டுச் சென்றது. சிலுசிலுவென்று காற்று வீசியது. சூழலில் பச்சை வாசனையை நுகர முடிந்தது. நீலமும், பச்சையுமாக இயற்கை அன்னை காட்சி தந்து கொண்டிருந்தாள்.

‘நாம ஒரு ப்ளாட் வாங்கிப் போடணும் இங்க. ஒரு பெரிய செட்டி நாட்டு பாணில வீடு கட்டணும். நாம எல்லோரும் இங்க குடியிருக்கணும். வாசலுக்குப் பக்கத்துல நமக்கே நமக்கான ஒரு ஆய்வுக் கூடம். நாம் செய்யறதப் பாத்து உலகமே வியந்து போகணும்.’

“எதுக்கும் உங்க அப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லிவை. அவர் ஃபினான்ஸ் பண்ணலன்னா, எங்களுக்கா ஐவேஜூ இல்லம்மா.”
‘அப்படியா சேதி, வரதட்சணை கேசுல மாட்டிப்ப, ஜாக்ரத’ என்று சிரித்தாள் சித்ரா.

இவர்கள் நால்வர் மட்டுமே பயணிக்கும் ஹெலிகாப்டர் தயாராக நின்றிருந்தது. விமான ஓட்டுனருக்கு 25 வயதிருக்கலாம். பார்த்தால் காஷ்மீரைச் சேர்ந்தவர் போல், செழுமையான கன்னங்களுடன், ரோஜா நிற இதழ்களுடன், செவ்வரிக் கண்களுடன், உயரத்திற்கேற்ற பருமனாய், சிவப்பும், வெளுப்பும் கலந்த மேனியாய் அவர் இருந்ததைப் பார்த்த சித்ரா, சுந்தரத்தைப் பார்த்து ‘ஜஸ்ட் மிஸ்ட்; உன்னப் பாக்கறத்துக்கு முன்னாடி இவரப் பாத்திருந்தேன்னா, உன் விக்கெட் காலி’ என்றாள். “இப்பயும் மோசமில்ல; நானே அவங்கிட்ட தூது போறேன். எப்பட்றா தப்பிக்கலாம்னு நானே யோஜனை செஞ்சுண்டிருந்தேன். சித்ரா கண்ணு, எங்கிருந்தாலும் நீ வாழ்க, என் இதயம் அமைதியைக் காண்க” என்று மாற்றி கர்ணகடூரமாகப் பாடினான் சுந்தரம்.

‘வில் யூ போத் ஷட் அப்? எத்தன அழகா மலை  வளஞ்சு வளஞ்சு வருது. திடீர் திடீர்ன்னு அருவிகள் பாலாகப் பொங்கி வழியறது. நீண்ட வால் குரங்குகள், சிங்க முகத்தோடு கிளைக்குக் கிளை தாவுது.’

“ஆரம்பிச்சுண்டான்டா தங்கத் தமிழன்; வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்; மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும். அதுக்கு மேலத் தெரியாம சுந்தரம் தவிப்பான்.” என்றவுடன் அனைவரும் சிரித்தார்கள்.

‘இப்ப நாம் எதுக்காக குடஜாத்ரிக்குப் போறோம், அதுவாவது நெனவுல இருக்கா?’ என்றாள் ஆனந்தி

“என்ன ஹனி இது? வான் ஆய்வு அமைப்போட வரைபடம் போட்டவ நீதானே? முன் தயாரிக்கப்பட்ட கட்டிடத் தொகுதிகள புல்லி அமைப்பு மூலம் ஏத்தினது சித்ரா. அதுல ரேடார் கண்ணுக்குத் தப்பும் வலைகளை, தளத்த அமைச்சது சுந்து. அதோட நுண்ணிய தொலை நோக்கி, ஒலி அதிர்வு பதிவுக் கருவி, கட்டிடத்தின் உள்ளே இருக்கும் ஒளி, ஒலி, பிற சாதனங்கள் வெளியே தெரியாத மாதிரியான வண்ணப்பூச்சு, எட்டுத் திசையையும் கண்காணிக்க ஒரு ரோபோ என எல்லாம் செஞ்சது நா.” என்றான் விமலன்.

“கடும் மழை, இருண்ட காடு, கோடையிலேயே சூர்யக் கதிர் காட்டுக்குள்ள ஒப்புக்கு எட்டிப் பாக்கும். மலை திடீர்னு சரியும்; அந்த இடங்கள்ல பாறையா, மரமான்னு தெரியாது. தொடர்ன்னு பேரே தவிர சீரான பரப்பில்ல. பாத குறுகி, ஒத்தக் காலக் கால வச்சு, முதுகுல சுமையோட, வயித்ல பசியோட எத்தனப் போராட்டம் இந்த இரகசிய வானத் திட்டத்ல.”

‘சரி, நாம் எதிர்பாக்கறது கலவையான ஒண்ணான்னா இருக்கு? பிரபஞ்ச இரகசியமா, வேற்றுக் கோள் உயிரினமா, அயல் நாடுகள், குறிப்பா அண்டை நாடுகள் மற்றும் மேற்கத்திய தேசங்கள் நம்மை உளவு பாக்கிறதான்னு கண்டுபிடிக்கிறதா, இல்ல எல்லாமுமேவா?’ எனக் கேட்டாள் ஆனந்தி.

“இது எல்லாமும்தான். எந்த ஆராய்ச்சியும் குறிப்பிட்ட நோக்கத்தோடதான் ஆரம்பிக்கும். ஆனா, எதிர்பாக்காதது நடக்கறச்சே என்ன ஒரு ப்ரமிப்பு வரும் தெரியுமா?”

‘வேற்றுக் கோள்ல உயிரிகள் இருக்கலாம். ட்ரேப்பிஸ்ட் கிட்டத்தட்ட நம்ம சூரியன் போல’

“ஆறு லைட் இயர்ஸ் தொலைவுல இருக்கே அந்தப் பதினோரு கோள்ல எதிலாவது உயிர்கள் இருக்காதா என்ன?”

‘சரி, இருக்கட்டும். அவங்க தேவர்கள், கந்தர்வர்கள், கிம்புருடர்கள், நாரதர்….’ என்று அடுக்கினான் சுந்தரம்.

“ஏன்டா, ப்ரும்மா, விஷ்ணு, இந்திரனெல்லாம் உன் வாயில வல்ல?” என்று கலாய்த்தாள் சித்ரா.

‘ஜோக்ஸ் இருக்கட்டும், ராபர்ட் ஷப்பைரோ சொன்னாரே- உயிரோட எல்லா அடிப்படைக் கூறுகளையும் உண்டாக்க முடியும்னு. சேர்மானம் தெரிஞ்சா உயிர் வந்துடாதா?’

“வரலாம். உனக்குத் தெரியுமில்ல ட்ரேக்கோட ஃபார்முலா. நட்சத்ரம் வரதுக்கே ஒரு சோலார் நிற வேணும்; அதுல கிரகத்தோட கூடின நட்சத்ரம்1 சதவீதம்; அதுலயும் உயிர் வாழறதுக்கு சாத்தியக்கூறு நாலு தானாம். அதுகளும் 0.25 சதவீதம் தான் உயிரை உருவாக்குமாம்.”

‘இருக்கட்டுமே. விண்கல்லுல கூட புரதம் இருக்கே’ என்றாள் ஆனந்தி.

ஓரளவு சமமாக இருந்த தளத்தில் அவர்கள் குதிப்பதற்கேற்றவாறு கயிற்றில் பிணைத்து நால்வரையும் பாதுகாப்பாக இறக்கி விட்டது வானூர்தி.

ஹோவென்று காற்று இரைந்தது. அத்தனை உயரத்திலும் பூச்சிகள் மரங்களில் அப்பியிருந்தன. தலையைச் சிலுப்பிச் சிலுப்பி அவற்றை உதிர்க்க முயன்ற மரங்கள் தோற்றுப் போய் காற்றிடம் செல்லமாக முறையிட்டன. சுழன்றடிக்கும் காற்று அருகில் எங்கோ பாயும் அருவியின் நீர்த்திவிலைகளை இவர்கள் மேல் தெளித்துச் சென்றது.

தரையில் குதித்த இடத்திலிருந்து இவர்கள் இன்னமும் 25 கி மீ மேலேறிச் செல்ல வேண்டும். ஏரோஜெல் நார்களால் அமைந்த தெர்மல் சூட் என்ற உஷ்ண ஆடையை அணிந்திருந்தாலும், அனைவரையும் குளிர் நடுங்க வைத்தது. சிறு மண் சட்டியில் ஏற்றப்பட்ட மின் காந்த நெருப்பினால் உடலில் இதமான சூடு பரவவும் அவர்களால் குறுகிய பாதையில் மேலேற்றத்தில், முதுகில் சுமையோடு செல்ல முடிந்தது.

இந்த மலையை ஏன் குடஜாத்ரி என்று சொல்கிறார்கள் என்றாள் ஆனந்தி.

“இவள் மலைகளில் மல்லிகைப் பூவை ஒத்தவள் என்று ஒரு பொருள். வாசம் மிகுந்த மல்லிகைப் புதர்களால் நிரம்பிய காடு என்று மற்றொரு பொருள்.” என்றான் விமலன்.

‘ஆஹா, மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ?’ என்று சுந்தரம் பாட ஆரம்பித்தவுடன் அந்தச் சிறு பாதையில் மற்றவர்கள் ஓட ஆரம்பித்தனர்.

ஆய்வு மையத்திற்கு வந்துவிட்டார்கள். இந்த முறை பிரித்துப் பிரித்து எடுத்து வந்துள்ள பெரும் தொலை நோக்கியை மலையின் மறு முனையில் நாளை பொருத்த வேண்டும். சுந்தரமும், ஆனந்தியும் அதன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்க விமலனும், சித்ராவும் அனைவருக்குமான சூடான சூப்பையும், வென்னீர் ஊற்றியதும் பதினைந்து நிமிடங்களில் சுவை மிக்க உப்புமாவாக மாறும் ‘ரெடி டு ஈட்’ உணவையும் தயாரித்தார்கள். மலையையே முழுங்கும் அளவிற்கு பசித்தது அனைவருக்கும். அதற்குள் அம்மா கொடுத்தனுப்பிய சத்துருண்டைகள் இரண்டை கபளீகரம் செய்த சுந்துவை முறைத்த விமல், டப்பாவைப் பறித்து ஆளுக்கொன்றாகக் கொடுத்தான். ‘டேய், இத இப்பவே காலி பண்ணினா, வாய்க்கு ருசியா அப்றம் ஒண்ணும் இருக்காதுடா.’

“சரிடா, என் பாட்டைக் கேட்டு நீங்கள்லாம் ஓடலேன்னா, நான் ஏன்டா இப்படித் திங்கப் போறேன்?”

‘பாடியே எங்களை மலைக்கு விரட்டிய வீரன்னு உனக்கு டைட்டில் வழங்குவதில் இந்தச் சித்ரா பெரு மகிழ்ச்சி அடைகிறாள்.’

ஒலி அதிர்வினைப் பதிவு செய்யும் கருவி சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவ முப்படைத் தலைமை தளபதியிடமிருந்து செய்தி வந்திருந்தது. ‘நீங்கள் நால்வரும் சரி சமமாகப் பணிகளைப் பிரித்துக் கொண்டு செய்கிறீர்கள். அதற்கு எங்கள் வாழ்த்து. சில முக்கிய நிகழ்வுகளை நீங்கள் கவனித்து நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என அரசு நம்புகிறது. திரிபுராகிட்ட மிகச் சமீபத்தில் பறக்கும் தட்டு மிகத் தாழ்வாக பறந்து வந்து மீண்டும் வான்வெளியில் சென்று மறைந்து விட்டது என்ற செய்தியும் உங்களுக்குத் தெரியும். அது என்ன என்று வடகிழக்கு இராணுவக் கேந்திரமும், இந்திய தொழில் நுட்பக் கழகமும் ஆராய்கின்றன. ஆனால், போதுமான தகவல் இல்லை. எங்கள் ஊகம், பாதையை மாற்றி அது மீண்டும் எந்தத் திசையிலும் வரலாம். அதிக விழிப்புடன் இருங்கள்.’

“யெஸ், சார்”

‘ஏதேனும் ஒரு சூழலில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தால், விமலன் சொல்படி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். ஆல் த பெஸ்ட்.’

நால்வருக்கும் இதுவரை இப்படியெல்லாம் தோன்றவில்லை. ஆனால், தலைமை சொல்வது சரியெனப் பட்டது. விமலனுக்கு மட்டும் ஏன் பெரும்பான்மையினரின் கருத்துப்படி செயலாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை என்று தோன்றியது.

தேன் கூடுகளாய் விண்மீன்கள். கரு நிற வானில் மிகுந்த ஒளியுடன் விகசித்து நின்றன. வெள்ளி எழுந்து வியாழம் உறங்கியதைப் பார்த்தார்கள். சனிக்கோள், செவ்வாய் இரண்டும் சம நேர்க்கோட்டில் தென்பட்ட இரண்டு நாட்களை வியந்தார்கள். திறம்மிக்க தொலை நோக்கி விதவிதமான கோணங்களில் கிரக இயக்கங்களையும், விண்மீன்கள் சிந்தும் ஒளி, வான்வெளியில் பயணித்து எந்த வேகத்தில் பூமியை அடைகிறது என்பதையும் உடனுக்குடன் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள கணினித் திரையில் காட்டிக் கொண்டிருந்தது. அதன் சிக்கலான கணிதத்தை ஆனந்தி ஆர்வமுடன் படித்து பிறர் புரிந்து கொள்ள எளிதாக விளக்கினாள்.

பட்டுக் கரு நீலப் புடவை பதித்த நல் வயிரம்.
நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி என்று சீட்டி அடித்தான் விமலன்.

(இன்னும் வரும் )

இராஜகுமாரன் – ரேவதி ராமச்சந்திரன்

 (புது முயற்சி – கதை உரையாடல் வடிவத்தில்)

Indian caregiver nurse taking care of senior female patient in a wheelchair  at park. Stock Photo | Adobe Stock

‘என் செல்ல அம்மாக்கு என்ன இன்னைக்கு கோபம்?’

‘ஒண்ணும் இல்லை’

‘ஒண்ணும் இல்லாமலா முகம் இப்படி வாடி போயிருக்கு!’

‘நேத்து கடுதாசி வந்தது’

‘ஓஹோ அதுதான் விஷயமா, சரி தெரிஞ்ச கதைதானே இதுக்கு போய் ஏன் கவலைப் படற?’

‘இல்ல உனக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது, இதுவாவது தகையுமான்னு   பார்த்தேன்’

‘என்னம்மா 24 வயசு ஒரு வயசா? எனக்குன்னு ஒரு இராஜகுமாரன் குதிரை யிலேயோ, டிரையினிலேயோ இல்லனா மினிமம் ஒரு கார்லயோ வந்துருவான்’

‘சரி சரி வேலைக்கு போற நேரத்துல உன்னை நான் ஏன் கஷ்டப்படுத்தணும், இந்தா டிபன் பாக்ஸ், உனக்குப் பிடிச்ச எலுமிச்சை சாதமும் உருளைக்கிழங்கு பொரியலும் வைச்சிருக்கேன், மிச்சம் வைக்காமல் சாப்பிடு’

**********************

‘என்ன சுதா என்ன ஏதாவது புது விஷயம் உண்டா?’

‘என்னத்த புது விஷயம்? அதே பழைய கதைதான்’

‘ஏன் இப்படி இவர்கள் மனசாட்சி இல்லாம பண்றாங்க, உனக்கு என்னதான் குறைச்சல்?’

‘எதுவுமே குறைச்சல் இல்லை, படிப்பிலிருந்து எல்லாமே ஜாஸ்தியா இருக்கிறது தான் அவர்கள் கண்ணை உறுத்துறது போல இருக்கு, ஆனால் எனக்கு ஒரு விஷயம் தான் புரிய மாட்டேங்குது. இதைச் சொல்லவா மூன்று தடவை கும்பலாக வந்தார்கள்?’

‘மேடம்’

‘எஸ் சார்’

‘என்னடி திடீர்னு சாரு மோருன்னு எல்லாம் கூப்பிடுற?’

‘இல்ல சுகுணா ஃபோனை வச்சுடு, இங்க யாரோ வந்திருக்காங்க, அவங்களை அட்டென்ட் பண்ணணும்’

‘சரி சரி இந்த வரன் தகைந்ததுனா ஒரு குல்பி ஃப்ரீயா வாங்கிக்கலாம்னு  பார்த்தேன்’

‘உன்னோட ஒரு குல்பிக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? நான் உனக்கு ஒன்னென்ன இரெண்டே வாங்கித் தரேன், அதுக்கென்ன, உனக்கு இல்லாத குல்பியா, சரி வைக்கிறேன்.’

************

‘சொல்லுங்க சார் என்ன வேணும்?’

‘எங்க அப்பாவ கூட்டிட்டு நான் மதுரைக்கு போகணும்’

‘அதுக்கு நீங்க இரயில்வே ஸ்டேஷனுக்கில்ல போகணும் டிக்கெட் புக் பண்ண, இது ஹாஸ்பிடல்’

‘மேடம் ரொம்ப ஹாஸ்யமா பேசுறீங்க’

‘இல்ல இல்ல பிராக்டிகலா பேசுறேன்’

‘எங்க அப்பாவாலே நடக்க முடியாது’

‘அதுக்கு நீங்க ஒரு கடைக்கு போய் வாக்கிங் ஸ்டிக் வாங்கலாம்’

‘மேடம் என்ன பேச விடுங்க’

‘நான் ஒண்ணும் உங்களுக்கு மாஸ்க் போட்டு விடலையே, இல்லை பேச  மேடை கட்டி மைக் தரவா, சொல்லுங்க’

‘எங்க அப்பாவை கூட்டிட்டு மதுரைக்கு போகணும், அதுக்கு எனக்கு ஒரு வீல் சேர் வேணும்’

‘இதுக்கு நீங்க ஏதாவது பர்னிச்சர் கடையோ இல்லையென்றால்…..’ ‘இல்லைங்க மேடம், பக்கத்தில் கடையில எங்க அப்பாவுக்கு ஏற்ற மாதிரி வீல் சார் இல்லை, என் பிரண்டு தான் அப்ப சொன்னான், இந்த ஹாஸ்பிடல்ல இருக்கு, ரெண்டு நாள் கடன் வாங்கி எடுத்துட்டு போ என்று’

‘சாரி சார் அப்படி எல்லாம் கொடுக்க முடியாது’

‘சுதா நர்ஸ் மனசு வச்சா எதுவுமே நடக்கும், ரெண்டு மூணு நாள் அவன் இங்க ஹாஸ்பிடல்ல தங்கி இருந்தப்ப உங்களோட ஹாஸ்பிடாலிட்டி, நீங்க எல்லோரையும் அன்பாக நடத்தற விதம், எல்லாரும் உங்களுக்கு கொடுக்கிற மரியாதை, எல்லாம் பார்த்து தான், அவங்க மனசு வச்சா நிச்சயம் முடியும்னு சொல்லி அனுப்பி விட்டான்’

‘உங்க பிரண்டுக்கு ஒரு நன்றி சொல்லுங்க, ஆனா இதுல நான் மனசு வைக்கிறது ஒண்ணும் இல்ல சார், எங்க சீப் என்ன சொல்வார் என்று தெரியவில்லை, எப்படி இதை போய் கேக்கறதுன்னு எனக்கு புரியல’

‘வாயாலேதான்’

‘ஒ இது என் டெக்னிக்கா’

‘உங்க சீப்க்கு உங்க மேல இருக்கிற நல்ல அபிப்பிராயத்தை எனக்காக கொஞ்சம் யூஸ் பண்ணி வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும், இரண்டு நாள்ள அப்படியே திருப்பிக் கொண்டு வந்து விடுவேன், நீங்க தான் கொஞ்சம் மனசு இரங்கணும்’

‘நான் என்ன மலை மேலேயா உட்கார்ந்துண்டு இருக்கேன், இறங்கி வர,  சரி, உங்களுக்காக கேட்டுப் பார்க்கிறேன்’

***************

‘என்னம்மா சுதா, என்ன இவ்வளவு தூரம் தேடி வந்திருக்க டியூட்டி நேரத்திலே!’

‘சார் இங்க தங்கி இருந்த ஒரு பேஷண்டோட பிரண்டு வீல் சேர் கடனா கேட்கிறார் இரண்டு நாளைக்கு, அவங்க அப்பாவை மதுரை கூட்டிட்டு போகணுமாம்’

‘சுதா நீ கேட்டு நான் இல்லைன்னு சொல்லுவேனா, சரியான வேண்டுகோளாக இருந்தா பார்த்து நம்ம கண்டிஷன் சொல்லி வீல்சேரை கொடுத்து அனுப்பு, ரெண்டு நாளைக்கு வேண்டிய வாடகை பணத்தை  வாங்கிக்கொள், பத்திரமா திருப்பி வந்துடணும், பேஷண்டுகளுக்கு ரொம்ப அவசியம் அப்படின்னு சொல்லி கொடுத்து அனுப்பு, அது திரும்பி வருவதை நீ உறுதிப்படுத்திக்கோ, நீ எல்லார் மேலையும் காட்டுற பரிவு இரக்க குணம் இதைப் பார்த்து உனக்கு இந்த சலுகை வழங்குகிறேன்’

‘ரொம்ப நன்றி சார், என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் சேர்த்து’

‘நீங்க ரொம்ப லக்கி,  இந்த ஃபார்ம்ல கையெழுத்து போட்டு வீல் சேர் எடுத்துட்டு போங்க. இரண்டு நாள் வாடகையுடன் வீல் சேர பத்திரமா திருப்பி கொண்டு வந்து கொடுத்துடுங்க, தயவுசெய்து என்னோட நல்ல பெயரை காப்பாத்துவீங்கன்னு நினைக்கிறேன்’  

************

‘மேடம் இந்தாங்க வீல் சேர், ரொம்ப நன்றி, ரொம்ப உபயோகமாக இருந்தது, நான் வருகிறேன்’

********

‘இது என்ன வீல் சேர் சைடு பாக்கெட்ல ஒரு பேப்பர் இருக்கு, அவர் மறந்து போய் வச்சிட்டு போயிட்டாரா, ஏதாவது பில்லா இருக்க போகுது, இல்லையே இதன் மேல் என் பெயர் எழுதி உள்ளதே! ‘அன்புள்ள சுமதி, நான் நேராக விஷயத்துக்கு வருகிறேன், நீங்க பேசின விதம், பிறருக்கு உதவற குணம், ஆனா அதுலயும் ஒரு கண்டிப்பு, மேலதிகாரர்களுடன்  பழகும் விதம், அந்த அதிகாரிகள் உங்க மேல வச்சிருக்க மதிப்பு இதெல்லாம் பார்த்தவுடன் நீங்கதான் என்னோட வருங்கால மனைவி என்று எண்ணி விட்டேன், நான் ஒரு பெரிய கம்பெனியில் உயர் அதிகாரியாக இருக்கிறேன். என் அப்பா அம்மா என்னுடன் தான் இருப்பார்கள். என் ஒரு தங்கைக்கு கல்யாணம் ஆகி விட்டது. இனி முடிவு உங்கள் கையில்’

************

‘அம்மா அம்மா, ரெண்டு நாள் முன்னாடி நான் சொன்னேன் இல்லையா, என்னோட இராஜகுமாரன் காரிலேயோ, தேரிலியோ வருவான் என்று ஆனால் வந்தது வீல் சேரோடு’

 

                                          ரேவதி ராமச்சந்திரன், ஜான்சி

 

 

என்னுயிர் நின்னதன்றோ. – அனந்த் ரவி

இந்தச் சிறுகதை “இலக்கிய வீதி இனியவன் நினைவு சிறுகதைப் போட்டி”யில்  இரண்டாம் பரிசாக ரூபாய் 30000 வென்றுள்ளது.

சிறப்புக் கட்டுரை: மரண தண்டனை தூக்கு மேடை ஏறட்டும்! - மின்னம்பலம்வானிலை சரியாக இருந்ததால் விமானம் சரியான நேரத்திற்குக் கிளம்பியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாட்டுக்குச் செல்கிறோம் என்ற நினைப்பில் மிதந்து கொண்டு இருந்தேன் நான். வழக்கமாக சுவையற்று இருக்கும் விமானக் கம்பெனியின் உணவு கூட அன்று சுவை கூடி இருந்ததாகப் பட்டது. எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். தேவையில்லாமல் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ மனதில் ஏற்றிக் கொள்ளும் போது, நம்மை சுற்றி இருக்கும் இடங்களோ, நடக்கும் நிகழ்வுகளோ கூட அதற்கேற்றார் போல மாறி விடும். விமானப் பணிப் பெண் கொடுத்த உணவைத் திருப்தியாக உண்டு விட்டு, இலேசாகக் கண் அயரலாம் என்று நினைத்தேன் எப்பொழுதுமே எனக்குத் தூக்கத்திற்கு மாத்திரை மருந்துகள் தேவையே இல்லை. ஏதாவது ஒரு புத்தகத்தில் அமிழ அரம்பித்தால் அப்படியே ஒரு பத்து நிமிடங்களுக்குள் கண்கள் அயர ஆரம்பித்து விடும் அப்படியே தூங்கி விட வேண்டியதுதான்.

ஆனால் இன்றைக்கு அது நடக்காது போலத் தோன்றியது. ஏனென்றால் பக்கத்து சீட்டில் அமர்ந்து இருக்கும் இளம் பெண் ஏதேனும் தொல்லைக் கொடுத்துக் கொண்டே வந்தாள். அவள் கைகள் என் மேல் இடித்த வண்ணம் இருந்தன. விமானம் கிளம்பியதில் இருந்து ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த பெண் ஏதோ பதட்டத்திலேயே இருக்கிற மாதிரி தெரிந்தது. உள்ளே வந்து இருக்கையில் அமரும் போதே கவனித்து விட்டேன். கண்களில், உடலில் ஒரு பதட்டம். மேலே பெட்டியை வைக்கும் போது கைகளில் ஒரு சின்ன நடுக்கம். நேராக உட்காராமல் சற்று சரிந்தே உட்கார்ந்தாள். சிறிது நேரம் வலப்புறம் திரும்பி மடிந்து அமர்ந்தாள். பொறுக்காமல் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே மீண்டும் இடப் பக்கம் மடிந்து அமர்ந்து கண்களை மூடினாள். ஒரு ஐந்து நிமிடங்கள் கூட அவளால் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார முடியவில்லை. முகத்தைப் பார்த்தால் இந்தியர் மாதிரிதான் தெரிந்தது. இந்தியா போய் சேர இன்னும் எட்டு மணி நேரம் ஆகும். அது வரை இப்படித்தான் பதட்டத்திலேயே இருப்பாளா? தன் உடையை திருகிக் கொண்டும், முடியை இழுத்துக் கொண்டும், பிறகு சற்றுநேரம் கண்களை மூடியும்….என்று பதட்டத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டேதான் இருந்தாள். காபி, டீ எதுவும் வேண்டுமா என்று கேட்கப் பட்ட போது அவைகளை மறுத்தாள். உடல் நிலை சரியில்லையோ?

முதலில் என்ன விஷயம் என்று கேட்கலாமா என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று முடிவு செய்து கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தில் கண்களை ஓட்ட ஆரம்பித்தேன். ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று இரண்டே நிமிடங்களில் எனக்குப் புரிந்து போனது. அவளைத் தவிர்த்து விட்டு புத்தகத்தில் அமிழ மனம் ஒத்து வரவில்லை. என்ன ஏது என்று கேட்டு விடலாமா என்று ஒரு சமயம் தோன்றியது ஆனால் மற்றொரு புறம் எனக்கெதுக்கு வம்பு? எதையாவது கேட்கப் போய் அது வேறெதுவிலாவது கொண்டு போய் விடலாம் என்றும் தோன்றியது.. ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டேன். புத்தகத்தில் என் கவனத்தை வலுவாகச் செலுத்தினேன். ஹூஹும் மனம் பிடிவாதம் பிடித்தது. கண்கள் புத்தகத்தில் லயித்தனவே அல்லாமல் மனதில் எதுவும் விழ வில்லை. ஒரு முறை என்னை சுற்றி ஒரு முறை பார்த்துக் கொண்டேன். பிறகு புத்தகத்தை மூடி வைத்து விட்டு மெல்ல கண்களை மூடினேன்.

நேரம் ஆக ஆக பக்கத்து இருக்கையில் அவளுடைய அவஸ்தை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. பணிப்பெண்கள் சுற்றிச் சுழன்று குடிப்பதற்கு, சாப்பிடுவதற்கு என்று எதையாவது கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். ஆனால் என் பக்கத்து இருக்கைக்காரி அது எதையும் கவனித்த மாதிரியே தெரியவில்லை.  தொடர்ந்து ஒரு பதட்டத்திலேயே இருந்தாள். அவளுடைய முழங்கை என் மேல் இடித்த வண்ணமே இருந்தது.

என்னால் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை. மெல்ல அவளைத் திரும்பி நேராக பார்த்தேன். வயது இருபத்தி ஐந்து அல்லது ஒன்றிரண்டு கூடுதலாக இருக்க வேண்டும். கவலையை தெளிவாகக் காட்டும் முகம். என் கண்களை நேரில் பார்ப்பதைத் தவிர்த்த மாதிரிதான் எனக்குத் தெரிந்தது. தாங்க முடியாமல் “எதாவது உதவி தேவையா? என்று அவளிடம் ஆங்கிலத்தில் கேட்டே விட்டேன். என் கையிலிருந்த புத்தகத்தை பார்த்தவள் “இல்லை” என்று தமிழில் பதில் கொடுத்தாள்.

தமிழகத்தைச் சேர்ந்தவள்தான். அப்பாடா என்றிருந்தது. “இல்லை உன்னைப் பார்த்தால் ஏதோ பதட்டத்தில் இருப்பதைப் போல எனக்குப் படுகிறது” நானும் தமிழுக்கு மாறினேன். மெல்லக் கண்களை மூடிக் கொண்டாள். எதையோ சொல்வதற்கு தயாராகிறாள் என்று எனக்கு பட்டது. அமைதியாகக் காத்திருந்தேன். அரை நிமிட அமைதிக்குப் பிறகு என்னை ஏறிட்டுப் பார்த்தாள். கண்களில் இலேசாக கண்ணீர் துளிகள் தெரிந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. அவளது உதடுகள் துடித்தன. அழுகையை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள்.

“நாளைக் காலையில் என் தந்தையை தூக்கில் போடுகிறார்கள்.”

என் காலடியில் உலகம் சடாரென நழுவினதைப் போல உணர்ந்தேன் நான்.. ஒரு வெடிகுண்டைத் தூக்கி என் மேல் போட்டதைப் போலத் திடுக்கிட்டுப் போனேன். இதயம் துடிப்பது ஒரு வினாடி நின்றுவிட்டதோ என்று பட்டது. இது என்ன இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டாள்!? என்ன சொல்வது என்று எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை. இதென்னக் கொடுமை? இந்தச் சிறிய வயதில் இவளுக்கு இப்படி ஒரு சோதனையா? அடப் பாவமே! என்று என்னையுமறியாமல் சற்று சப்தமாகவே கூறி விட்டேன். அவள் எங்கோ பார்த்தபடி தன் கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள். எனக்கும் மனம் கலங்கிப் போயிருந்தது. அவளிடம் என்ன பேசுவது? அவளைச் சமாதானப் படுத்த வேண்டுமா? அதை எப்படி செய்வது? அவளைப் பார்த்துப் பார்த்து மனது கலங்கிப் போனேன் நான் ஒரு ஐந்து நிமிடங்கள் நாங்கள் இருவரும் எதையும் பேசவில்லை. விமானம் பறக்கும் போது கேட்கும் ஒரு விதமான அலுப்பூட்டும் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்தப் பச்சாதாபம், பரிதாபம் சிறிது நேரம்தான். அப்படியே என் உணர்ச்சிகள் சரசரவென்று தலைகீழாக மாறத் தொடங்கின.. என் அனுதாபம், பச்சாதாபம் வடிந்து போக மெல்ல மெல்ல அவள் மேல் இனம் காண முடியாத ஒரு கோபம் வளர ஆரம்பித்தது. கண்களில் எரிச்சலோடு அவளை இப்போது உற்று நோக்கினேன். ஓங்கி அறையலாமா என்று கூட வந்தது எனக்கு. .

“இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை?!” என்று மெல்லிய குரலில் கேட்டேன். பின் பக்க இருக்கைகளில் இருப்பவர்களில் ஓரிருவர் மெல்ல எங்களை கவனிக்க ஆரம்பிப்பது தெரிந்தது. என்னுடைய எரிச்சலையும் கோபத்தையும் கட்டுப் படுத்துவது மிகவும் சிரமாக இருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு அடிக்குரலில் மீண்டும் கேட்டேன். “போன வாரமே நீ இந்தியாவில் இருந்திருக்க வேண்டாமா? அவரைப் பார்த்து பேசுவதற்குக் கூட அனுமதி கொடுத்திருப்பார்களே கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாமல் இங்கே ஒரு விமானத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய்?” கோபத்தில் என் வார்த்தைகள் பாம்பு மூச்சு விடுவது போல வந்தன. என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதே மிகவும் கஷ்டமாக இருந்தது.

என்ன இந்த காலப் பிள்ளைகள் இப்படி இருக்கிறார்கள்? உறவுகளுக்கு இவ்வளவுதான் மரியாதையா? என்றெண்ணிப் புழுங்கினேன். பெற்றவர்கள் மேல் கூடவா மதிப்பு இல்லை? என்னை அமைதிப் படுத்திக் கொள்ள நான் மிகவும் சிரமப் பட வேண்டியிருந்தது. அவளோ அமைதியாக கண்களை மூடி மூடித் திறந்துக் கொண்டிருந்தாள். தன் கவலையை என்னிடத்தில் ஏற்றி விட்டதில் அவளுக்கு சற்று நிம்மதியாக இருக்கும் போல இருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் பாவமாகக் கூட இருந்தது. சிறு வயது, உலகம் தெரியாமல் இருக்கலாம். ஒரு வேளை லீவு எடுத்துக் கொண்டு இந்தியா வர முடியாமல் இருந்திருக்கலாம். நியாயமான காரணத்தினால் கூட அவள் இந்தியா செல்லாமல் இருந்திருக்கலாமோ? விசா, பாஸ்போர்ட் இது மாதிரி ஏதாவது சிக்கல்கள் இருந்திருக்கலாமோ? இந்தியாவிற்குப் போவதால் விசா தேவை இருந்திருக்காது. பின் வேறு என்னவாக இருந்திருக்கும்? கேள்விகளும் பதில்களும் என்னை சுற்றி சுற்றி வந்தன. நானும் இருக்கையில் சாய்ந்து மனதை அலைபாய விட்டேன்.

இப்போது அவளுடைய பதட்டம் இடம் மாறி என்னைத் தொற்றிக் கொண்டது. உட்கார முடியாமல் தடுமாற ஆரம்பித்தேன் நான். சே! எனக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தி என் பயணத்தின் அமைதியைக் கெடுத்து விட்டாளே! அவளை மறக்க வேண்டும். நான் யார் இதில்? யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? யார் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? மித மிஞ்சிய எரிச்சலில் இந்த கேள்விகளை நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

எங்களுக்குப் பின் புற இருக்கைகளில் இருந்து வீடியோ பார்ப்பவர்களின் மெல்லிய சப்தங்கள் வந்து கொண்டிருந்தன. விமானத்தின் இரைச்சல் அதிகமானதாகத் தெரிந்தது. பணிப்பெண்கள் அங்கும் இங்குமாக நடந்து பயணிகளின் தேவைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் குசுகுசுப்பான பேச்சு சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. கண்களை மூடி அப்படியே இருந்தேன். பயணிகள், சேவைக்கு அழைக்கும் மணியை அழுத்தும் போது எழும் மென்மையான “டிங்” என்ற சப்தம் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தது.

அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று தெரியவில்லை. அவள் பழையபடியே மாறி மாறி அமர்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை அவள் மாறும் பொழுதும் அவள் முழங்கை என் மேல் இடித்துக் கொண்டே இருந்தது. என் கோபத்தை மெதுவாக விழுங்கிக் கொண்டிருந்தேன். மேலும் ஒரு அரை மணி போயிருக்கலாம். அவளைப் பார்த்தேன். அழுது கொண்டிருந்திருப்பாள் போல இருந்தது. பெண்களுக்கு அழுகை என்ற ஆயுதத்தைக் கடவுள் கொடுத்து விட்டான். நினைத்த நொடியில் அதை உபயோகப் படுத்திக் கொள்வார்கள். மெல்ல அவள் கையை பற்றி ஆதரவாக அழுத்தினேன். சற்று அவளை ஆசுவாசப் படுத்தலாம் என்கிற நோக்கில், “அப்பிடி என்ன குற்றம் செய்தார் உன் அப்பா?” என்று அவளிடம் அடிக் குரலில் கேட்டேன். என் பின் இருக்கைக்காரர் அநேகமாக எங்களையே கவனித்துக் கொண்டிருந்தார் என்றுதான் நினைக்கிறேன். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். உதடுகள் துடிக்க மெல்லிய குரலில் எனக்கு பதில் சொன்னாள்.

“என் கணவரைக் கொன்று விட்டார். ஆணவக் கொலை”

வியப்பின் விளிம்புக்கே சென்று விட்டேன் நான். இதென்ன என்று அதிர்ந்து போனேன். அடுத்தடுத்து அணுகுண்டுகளா? என்ன இவள் இவ்வளவு சோகங்களைத் தன்னுள் புதைத்து வைத்துக் கொண்டிருக்கிறாள்? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் மனமும் உடலும் பரபரப்பாக மாறின.  என்ன செய்வாள் இவள்? கணவனைக் கொன்றவர் என்கிற விதத்தில் தந்தையை வெறுப்பாளா? பெற்றெடுத்த தந்தை என்கிற விதத்தில் அவருக்காக, அவருடைய மரணத்திற்காக வருத்தப் படுவாளா? அதுவும் இயற்கையான மரணமா? அசாதாரண, வன்முறையான மரணம் ஆயிற்றே! மறுபடியும் அவளை உற்றுப் பார்த்தேன். வேறேங்கோ வெறித்துப் பார்த்த படி தன்னை மிகுந்த சிரமத்துடன் கட்டுப் படுத்திக் கொண்டு உட்காரந்திருந்தாள். அழுதழுது வற்றிப் போயிருப்பாள் என்பது புரிந்தது. இந்த சிறுவயதில் இப்படி ஒரு சோதனையா என்றும் நினைத்தேன். என்ன தலைவிதி இவளுக்கு? ஏன் இவளை ஆண்டவன் இப்பிடி சோதிக்கிறான்? நான் ஊமையாகி விட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. அவளால் வேறு என்ன செய்ய முடியும்? கணவனின் கொலைகாரன், இருந்தால் என்ன இறந்தால் என்ன என்கிற நினைப்பில் முதலில் வர வேண்டாம் என்று இருந்திருப்பாள். பிறகு என்ன காரணத்தினாலோ, யாருடைய அறிவுருத்தலாலோ வர வேண்டும் என்று கிளம்பியிருக்கலாம். எனவே தாமதாமாகி இருக்கலாம். ஆண்டவா இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது என்று தோன்றியது. எவ்வளவு கொடுமையான ஒரு மனோ நிலையில் இந்தச் சின்னப் பெண் இருந்திருக்க வேண்டும்.

மிகுந்த யோசனைக்குப் பிறகு, “நம்ப ஊரில் சூரிய உதயத்திற்கு முன் தண்டனையை நிறைவேற்றி விடுவார்களே.” என்றேன் அவளிடம். அப்படி சொல்வது கூட அநாகரீகமோ என்று ஒரு கணம் எனக்குத் தோன்றியது. மெல்ல ஒரு வினாடி என்னிடம் பார்வையைத் திருப்பியவள், “உம்…தெரியும்” என்று முனகினாள்.

“இந்த விமானம் சென்னையை விடிகாலையில்தான் சென்றடையும்” என்றேன்.

சற்று திரும்பி அமர்ந்தவள், “தெரியும்” என்றாள்.

“அப்புறம். எல்லாம் தெரிந்து கொண்டு எதற்கு போகிறாய்? நீ வரப்போவது யாருக்காவது தெரியுமா அங்கே?” என்று கொஞ்சம் எரிச்சலோடு வினவினேன்.

“நீங்கள் சொல்வது சரி. முதலில் போவது இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். பிறகு அவருடைய ஞாபகங்கள் என்னை வாட்டத் தொடங்கின. திரும்பத் திரும்ப என்னுடைய சிறுவயதும், அதில் அவர் என்னை வளர்த்த விதமும் தோன்றிக் கொண்டே இருந்தன. கணவன் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் ஆகின்றன. அப்பாவையாவது அவருடைய கடைசி நிமிடத்தில் உயிரோடு பார்த்து விட முடியுமோ என்கிற பேராசையில் லண்டனில் இருந்து கடைசி நேரத்தில் கிளம்பி விட்டேன்.” அவளை மறுபடி உற்றுப் பார்த்தேன். “இதுதான் இந்திய நாட்டின் பண்பாடோ?” என்று எனக்குத் தோன்றியது.

நான் நினைத்தது சரிதான். போவதா, வேண்டாமா என்ற மனப் போராட்டத்தில் நேரத்தைக் கடத்தி இருக்கிறாள். கடைசியில் தானாடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. பாசம் அவளைக் கலைத்துப் போட கிளம்பி இருக்கிறாள். இவள் நேற்று இரவு சென்னையில் இருந்திருந்தால் கூட அவரைப் பார்க்க அனுமத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இரண்டு நாட்களுக்கு முன் தான் உறவினர்களை அனுமதிப்பார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். இவள் இப்பொழுது அங்கு போய் என்ன சாதிக்கப் போகிறாள்? கண்டிப்பாக அவளது தந்தையை அவளால் உயிரோடு பார்க்கவே முடியாது. கெஞ்சிக் கூத்தாடினால் கூட அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே.

“இந்த விமானம் அதிகாலை ஐந்து மணிக்குதான் சென்னையை சென்றடையும். விமான நிலையத்தில் சடங்குகள் அனைத்தையும் முடித்து கொண்டு நீ சிறைச்சாலையை சென்றடைய கண்டிப்பாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடும். அப்பொழுது எல்லாமே முடிந்து போயிருக்கலாம்.” என்ற என் அபிப்ராயத்திற்கு அவள் பதில் எதுவும் கூறவில்லை. கண்கள் மூடியிருந்தன. தன்னையே மறந்து நிலைமையை அசை போடுகிறாள் என்று நினைத்தேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் பிரச்சினை என் மண்டையில் ஏறி விட்டது. எதாவது செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். என்ன செய்வது என்று புரியவில்லை. இந்த விமானம் இன்னும் ஒரு மணி நேரம் முன்னதாக சென்னையை அடைய முடியுமா? எனக்குத் தெரியவில்லை. எழுந்தேன். பணிப்பெண்ணை அழைத்து கேப்டனோடு பேச வேண்டும் என்றேன். அவள் ஓரக் கண்ணால் என்னையும் என் சக பயணியையும் பார்த்துக்கொண்டே  கேப்டனோடு உள்பேசியில் பேச ஆரம்பித்தாள்.

கேப்டன் வெளியே வந்தார். ஆறடியை தொடும் உயரம். மழு மழு என்று சிரைக்கப் பட்ட தாடை. சிரிக்கும் கண்கள். என் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு முன் சீட்டில் அமர்ந்தார். “என் உதவி எதற்காகத் தேவைப் படுகிறது?” என்று நாசூக்காகக் கேட்டார். நான் தணிந்த குரலில் அவரிடம் நிலைமையை விளக்கினேன். அமைதியாக முழுவதும் கேட்டார். “என்னால் எதுவும் செய்ய முடியாதென்றே நினைக்கிறேன். வேண்டுமானால் சென்னைக்கு பேசி இந்தப் பெண்ணை முதலில் வெளியே அனுப்ப முயற்சி செய்யலாம். அதையும் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒரு முயற்சிதான்” என்று பதிலளித்தார். “இவள் தன் தந்தையைக் கடைசி கடைசியாகப் பார்ப்பதும், பார்க்க முடியாமல் போவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது” என்று அவர் கைககளைப் பிடித்துச் சொன்னேன். அவர் வெறுமனே சிரித்தார். அந்த சிரிப்பு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.

திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தேன். கலக்கத்திலும் வருத்தத்திலும் அமிழ்ந்து அவள் தூங்கி விட்டதைப் போல இருந்தது. “என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகி விட்டது” என்கிற ஒரு சின்ன திருப்தியோடு நானும் சற்று கண்களை மூடிக் கொண்டு தூங்க முயற்சித்தேன். அதற்குள் செய்தி மெல்ல விமானம் முழுவதும் பரவத் தொடங்கி விட்டது. பலர் குசுகுசுவென்று செய்தியை அசைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

சரியாக அடுத்த நாள் காலை ஐந்து மணி பத்து நிமிஷத்துக்குதான் விமானம் சென்னையில் இறங்கியது. சொன்னபடியே எல்லோரும் அவளை முன்பாக அனுப்பி வைத்தோம். பலரும் அவளுக்காகப் பிரார்த்தனையும் செய்தோம். பலரின் கண்கள் கலங்கி இருந்தன. சென்னையில் அன்று நல்ல மழை. விமான நிலையத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்து விட்டு அவள் ஒரு வாடகைக் காரில் ஏறும் பொழுது மணி சரியாக ஐந்து முப்பது.  என்னுடைய அலைபேசி எண்ணை அவளிடம் கொடுத்து, எல்லாம் முடிந்த பின் சாவகாசமாக என்னிடம் பேசச் சொன்னேன். அதற்கு பிறகு நான் என் வழியே செல்ல ஆரம்பித்தேன். அவளை மறந்து விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தேன். ஆனால் மனம் துடித்துக் கொண்டேதான் இருந்தது. என்ன ஆயிற்றோ தெரியலையே? அவள் அந்த இடத்திற்கு போய் சேரும் போது கண்டிப்பாக மணி ஏழு ஆகியிருக்குமே. அவளால் அவள் அப்பாவை உயிரோடு பார்க்க முடிந்ததா? சட்டப்படி அவள் அனுமதிக்கப் படுவாளா? அதுவும் தண்டனை நிறைவேற்றப்படும் சமயத்தில் யாரையாவது உள்ளே வர அனுமதிப்பார்களா? என்றெல்லாம் கேள்விகள் என்னை சுற்றிக் கொண்டே இருந்தன. சட்டத்திற்கு உணர்ச்சிகள் புரியாதே!

இந்த வேதனை எனக்கு இரண்டு நாட்கள் நீடித்தது. இரண்டு நாள் கழித்து அவள் பேசினாள். அவள் குரலே என்னைக் கலக்கியது.  மெல்லிய குரலில் என்ன நடந்தது என்பதை விவரித்தாள் அந்த துர்பாக்யவதி.

***********

அந்தப் பெண் சிறைச்சாலையை அடையும் பொழுது எல்லாமே முடிந்திருந்தது. சிறையிலிருந்து சிறைக்கைதியைக் கிளப்பி அழைத்துக் கொண்டு போகும் போது யாரையும் அனுமதிக்கும் வழக்கமே கிடையாது. அவள் வந்த பொழுது அவளின் தந்தையை மேடைக்கு அருகே கொண்டு சென்று விட்டனர். எனவே அவளால் தன் தந்தையை உயிரோடு காணவோ அவரோடு பேசவோ முடியவில்லை. இது அவளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. சரியான நேரத்திற்கு வரத் தவறி விட்டோமே என்று கதறி அழுதாள். அப்பாவைக் கடைசி நிமிடத்தில் காணப் போகிறோம் என்கிற மிகுதியான துடிப்பில் பசி, தூக்கம், களைப்பு எல்லாம் மறந்து இருந்தவளுக்கு. அது இல்லை என்றானவுடன் மிதமிஞ்சிய சோர்வில் தடுமாற ஆரம்பித்தாள்.. ஏமாற்றமும், சோகமும் அவளைச் சூழ்ந்து கொண்டன.

சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்குப்புப் பின் அவள் அதிகாரியின் அறைக்கு அழைத்து செல்லப் பட்டாள். அறைக்குள் வந்தவள் பட்டும் படாமலும் தன் இருக்கையில் அமர்ந்தாள். ஒரு இறுக்கமான அமைதி சிறிது நேரம் அங்கே நிலவியது. அந்த அமைதி அவளைக் குலைத்துப் போட்டது. திடீரென்று உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். இருபத்தி நாலு மணி நேரமாகப் பதுக்கி வைத்திருந்த சோகம் எல்லைகளின்றிப் பீறிட்டுக் கிளம்பியது. குலுங்கிக் குலுங்கி அழுதாள். அதிகாரி அமைதியாக அவளை அழ விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீ வருவாய் என்று அவர் உணர்ந்திருந்தார்” என்று மெல்லிய குரலில் அவளுக்கு அதிகாரி சொன்னார். அந்த வார்த்தைகளால் அடிபட்டுத் திடுக்கிட்டவளாய் அவள் நிமிர்ந்தாள். அவளுடைய கேவல்கள் இன்னும் அதிக வீரியமாயின. உலகத்தையே மறந்தவளாய் கதறி அழ ஆரம்பித்தாள்.

“ஆனால் எப்படி வருவாய்? எப்போது வருவாய் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை..” வெடித்துக் கிளம்பும் தன் கேவல்களை அடக்கிக் கொள்ள அவள் மிகவும் முயற்சித்தாள். அதிகாரி கண் ஜாடை காட்டவே வெளியில் காத்துக் கொண்டிருந்த ஒரு காவலர் உள்ளே வந்தார். அவர் கையில் ஒரு சிறிய பார்சல்.

“என் மகள் கண்டிப்பாக என்னைத் தேடி வருவாள். அப்போது நான் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது. இருந்தாலும் அவளுக்கு நான் எதாவது தர வேண்டும். தந்தே ஆக வேண்டும். அதில் நான் இருக்க வேண்டும். அது அவளுக்கு என்னை அவள் வாழ்வின் கடைசி நிமிடம் வரை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவள் என்னை உயிரோடு இருப்பதாக உணர வேண்டும். என் வேண்டுகோள் அரசுக்கு இதுதான். என் கடைசி ஆசையும் இதுதான். என் முகத்தை கடைசியாக மூடிய அந்தக் கறுப்புத் துணியை அவளிடம் கொடுத்து விடுங்கள். அதில் கண்டிப்பாக நான் இருப்பேன். என் கடைசி மூச்சு அதில் உறைந்து இருக்கும்தானே? என் பார்வை அந்த இருளை மட்டுமே கடைசியில் பார்த்திருக்கும். அந்தத் துணியில் என் பார்வை உறைந்திருக்கலாம். என் மூச்சுக் காற்று கூட வெப்பத்தோடு அவளுக்காக அங்கே காத்துக் கொண்டு இருக்கலாம். அதை அவளுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் அவள் என்னைக் காணுவாள்” என்று உன் தந்தை சொன்னார். 

அதைக் கேட்டதும் அவள் இன்னும் உடைந்து போனாள். “ஐயோ அப்பா! என்று அவள் கதறக் கதற, அவளின் நடுங்கும் கைகளில் அந்த பார்சலைக் காவலர் வைத்தார். என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியாமல் கதறி அழுதபடி அந்த துணிப் பார்சலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாளாம் அந்தப் பெண். அவள் கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தனவாம். எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து விட்டோம். பெற்று வளர்த்தத் தந்தையை அவருடைய கடைசி காலத்தில் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று அந்த சிறைச்சாலையே கிடுகிடுக்கும் படி கதறினாளாம்.

“என் அப்பாவையே ஒரு குழந்தையாய் என் கைகளில் ஏந்திக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன் என்று அவள் என்னிடம் போனில் நடுங்கும் குரலில் சொன்னாள். அதற்கு பிறகு அவள் பிணவறைக்கு அழைத்துச் செல்லப் பட்டாளாம்.

                                                         *******************************************

 

பை மாமா ! – லக்ஷ்மி நாராயணன் – மே

Dad meets daughter for the first time after 40 years

காவ்யா தன் பிறந்தகம் வந்து இன்றோடு ஒரு நாள் முடிந்து விட்டது. அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு காவ்யாவை நேற்று அவள் வீட்டில் விட்டுச் சென்றான் புருஷன்காரன்.

அப்படி ஒன்றும் வயது ஆகவில்லைதான். இருந்தாலும், அவள் தாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை. குறிப்பாக கணவர் காலமாகிப் போன பிறகு இப்படிச் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. ஏதோ மகளின் விருப்பத் திற்காக சிம்பிளாக கொண்டாட இசைவு தெரிவித்தவள், கிஃப்ட் எதுவும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டாள்.

காலை குளித்துவிட்டு மகளுடன் கோயிலுக்குச் சென்றாள் செண்பகம். வீட்டிலேயே சாதாரண சாப்பாடு தயாரானது. ஸ்வீட்டுக்கென்று ஒரு துளி சர்க்கரையே போதும் என்ற முடிவு !

காவ்யா வீட்டில் இருந்து அனைவரும் செண்பகத்திற்கு அலை பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மரியாதை நிமித்தம் பிறந்த நாள் பரிசாக சம்பந்தி வீட்டார் கொடுத்த புடவை, ரவிக்கைத் துண்டு இவற்றைமகள் மூலம் பெற்றுக் கொண்டாள் செண்பகம்.

நேரம் போனதே தெரியவில்லை. இரவு எட்டு மணி என்பதை அறிவிக்கும் வகையில் ஹாலில் மாட்டியிருந்த சுவர்க் கடிகாரம் எட்டு தடவை அடித்து ஓய்ந்தது. அதே நேரம் அழைப்பு மணி ஒலிக்க நிமிர்ந்தாள் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த காவ்யா. அவள் கையில் இருந்த மாத இதழ் தானாக நழுவி விழுந்தது, வந்திருப்பது யார் என்ற கேள்வி அவள் மனதில் விஸ்வரூபம் எடுத்தது !

ஒரு ஃபங்ஷனுக்குச் சென்றுள்ள அம்மா திரும்ப எப்படியும் ஒன்பது மணிக்கு மேலாகி விடும். அதனால் அம்மாவாக இருக்க முடியாது.

ஒரு வேளை புருஷனாக இருக்குமோ ? நாளை மாலைதான் வந்து அழைத்துப் போவதாக கூறியிருந்தான். ஏதாவது அர்ஜண்ட் மேட்டராக இருந்திருந்தால் தன் செல்லுக்கு காண்டாக்ட் பண்ணியிருப்பான். அதனால் அவனாகவும் இருக்க முடியாது. அப்படி யென்றால் வேறு யார் இந்த நேரத்தில் வந்திருப்பர் ? குழப்பத்தில் இருந்தபோது இரண்டாவது முறையாக அழைப்பு மணி சத்தம் கேட்டது.

இந்தத் தடவை சத்தம் சற்று கர்ண கடூரமாய் ஒலிப்பது போல் இருந்தது. வேர்த்து
விறு விறுத்துப் போய் எழுந்து வெளி லைட்டை ஆன் செய்தவள், மெயின் டோரை திறந்து பார்த்தாள். சட்டென முகம் மலர்ந்தது. மனதில் இருந்த பயம் தெளிந்தது.

பூட்டியிருந்த வெளி கிரில் கேட்டுக்கு அப்பால் மாமனார் ராகவன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. உடனே சாவியை எடுத்து வந்து கிரில் கேட்டைத் திறந்த காவ்யா, ” வாங்க மாமா ! ” வாய் நிறைய வரவேற்றாள்.

” இங்க ஒரு வேலையா வந்தேன்மா! அட வந்ததுதான் வந்தோம் அப்படியே உங்கம்மாவைப் பார்த்து பர்த் டே விஷ் பண்ணிட்டுப் போகலாம்னு நப்பாசை …”

” அடாடா ! ” அங்கலாய்த்தாள் காவ்யா.

” என்னம்மா ஆச்சு ?”

” ஸாரி மாமா ! அம்மா வீட்டுல இல்லை. ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருக்காங்க. அதோடு நீங்க காலையில் ஃபோனில் அம்மாவுக்கு வாழ்த்துச் சொல்லிட்டீங்களே. அதுவே அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்தான் மாமா !”

” இருந்தாலும் நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுதுன்னு சந்தோஷப்பட்டேன்…ஹூம் ! கிடைச்சும் யூஸ் இல்லாமப் போயிடிச்சு. ” மிகுந்த ஏமாற்றத்தோடு கூறிய மாமனாரைப் பார்க்க பாவமாய் இருந்தது காவ்யாவிற்கு.

“பரவாயில்லை, அப்படியெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க மாமா. உள்ளே வாங்க !”

சுற்று முற்றும் பார்த்தார் ராகவன். உள்ளே வராமல் தயங்கி நின்றபடி ஏதோ
யோசிப்பது போல் தெரிந்தது. கதவைத் திறந்தவுடன் சிரித்தபடி உள்ளே நுழைந்து சுவாதீனமாக இருக்கையில் உட்காரும் மனுஷர் இன்று அப்படிச் செய்யாதது கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது காவ்யாவிற்கு.

” என்ன மாமா யோசனை ? வாங்க… ” மீண்டும் அழைத்தாள் காவ்யா.

தன் தோள்களை குலுக்கியவர், ” இல்லம்மா, நான் கிளம்பறேன். அம்மா வந்தா நான் வந்துட்டுப் போனதாச் சொல்லு !” என்று கூறி விட்டு திரும்பி நடந்தார்.

காவ்யா திடுக்கிட்டாள். தாமதிக்காமல், கேட்டைச் சாத்தி விட்டு ” மாமா..மாமா..” என்றபடி அவர் பின்னாடியே ஓடினாள். ” இவ்வளவு தூரம் வந்துட்டு ஒரு வாய் காஃபிகூட குடிக்காமல் போறீங்களே ?” லிஃப்ட் அருகில் சென்று நின்ற மாமனாரிடம் கேட்க அவர் மென்மையாகச் சிரித்தார்.

” நல்ல பொண்ணும்மா நீ ! இந்த ராத்திரி நேரத்தில் யாராவது காஃபி குடிப்பாங்களா ? அதோட நான் என்ன மூணாவது மனுஷனா இப்படி விழுந்து விழுந்து உபசரிக்க ?” செல்லமாகக் கடிந்து கொண்டார்.

” அதுக்கில்ல மாமா ! அம்மா இருந்திருந்தால் உங்களை நல்லா கவனிச்சிருப்பாங்க.
அவங்க இல்லாததால நான்தான் கவனிக்கணும் இல்லையா ? அப்படிச் செய்யாமல் போனால் அம்மா என்னைத் திட்டுவாங்க!”

” உங்கம்மாவைப் பத்தி நல்லாவேத் தெரியும். அவங்க ரொம்ப சாஃப்ட் டைப் ! ஒண்ணும் திட்டமாட்டாங்க…அதை விடு. நீ நாளைக்கு வந்திடுவே இல்ல ?”

” வந்திடுவேன் மாமா ! உங்க மகன் ஆஃபிஸ் விட்டதும் நேரா இங்க வந்து என்னை கூட்டிக்கிட்டுப் போறதா சொல்லியிருக்கார்.”

” ஏன்னா, நீ அங்க இல்லாம உன் மாமியாருக்கு கையும் ஓடல்ல, காலும் ஓடல்ல…”

“ புதுசா கல்யாணம் ஆனவ நீ ! அதனால் கொஞ்ச நாள் ஜாலியா இருன் னு சொல்லிட்டு எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யறாங்க அத்தை. என்னை ஒரு வேலையும் செய்ய விடறது இல்ல. நீங்க இப்படி சொல்றீங்களே மாமா !”

” அம்மாடி! நீ பக்கத்தில் இருந்தால் உன் மாமியாருக்கு ஒரு ஆத்ம பலம் ! அந்த நினைப்பில் எல்லா வேலைகளையும் கட கடன்னு செஞ்சு முடிச்சிடுவா. அதனால் தானம்மா சொல்றேன். “

மாமனாரின் வார்த்தைகள் சட்டென நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எத்தனை உயர்ந்த மனிதர்கள் ! பெற்ற பெண்ணைப் போல் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மாமியார். அன்பையும் பாசத்தையும் அள்ளி வீசும் மாமனார். கோபமோ, ஆத்திரமோ கொஞ்சமும் இல்லாமல் புன் சிரிப்போடு பழகும் கணவன் . இவர்களின் அன்பு கலந்த அரவணைப்பு மழையில் நனைந்து மகிழும்போது என்ன குறை இருக்க முடியும் ?.

புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த இந்த மூன்று மாதங்களில் ஒரு நாளும் காவ்யா கண் கலங்கியது இல்லை. போட்டி போட்டுக் கொண்டு அனைவரும் அவளை நேசிக்கின்றனர். இதை அடிக்கடி அலைபேசியில் தன் அம்மாவிடம் சொல்லி பரவசப்பட்டிருக்கிறாள் காவ்யா ; நேரிலும் சிலாகித்து பேசியிருக்கிறாள். கேட்ட அவள் அம்மாவுக்கும் ஒரே பூரிப்பாக இருந்தது.

இதையெல்லாம் எண்ணியெண்ணி புளகாங்கிதம் அடைந்திருக்கும் நேரத்தில் திடீரென இருட்டு மழை பொழிய ஆரம்பித்தது கரண்ட் கட்டானதால். எங்கும் மையிருட்டு ! எதுவும் கண்களுக்குப் புலப்படவில்லை.

ஆனால், அந்த இருட்டில் மாமனாரின் வெண்மை நிற முழுக்கைச் சட்டையும், வேஷ்டியும் மட்டும் பளிச்சென்று தெரிய பீதியுற்றாள் காவ்யா.

” என்னம்மா, இருட்டப் பார்த்து பயந்துட்டியா ?” மாமனார் இப்படி கேட்டதும் மேலும் வேர்த்துப் போனது காவ்யாவிற்கு.

” அதில்ல மாமா ! நீங்கள் வந்த நேரத்தில் அம்மா வீட்ல இல்லாமல் போனது; மேற் கொண்டு கரண்ட் வேற கட்டானது, எல்லாமா சேர்ந்து மனசுக்கு சங்கடமாயிருக்கு . ” என காவ்யா சொல்லி சொல்லி முடிக்கவில்லை. உடனே போன கரண்ட் திரும்பி வர அந்த இடமே விளக்கு வெளிச்சத்தில் மீண்டும் பிரகாசமாயிற்று. காவ்யாவிற்கு போன உயிர் திரும்பி வந்தாற்போல் இருந்தது.

” பார்த்தியாம்மா ! கரண்ட் போச்சேன்னு கவலைப்பட்டே. உன் கூக்குரலுக்கு ஆண்டவன் செவி சாய்ச்சுட்டான். கரண்ட் திரும்ப வந்திடிச்சு. உன்னோட நல்ல மனசுபடி எல்லாம் நடக்கறது. ” என்று சொல்லி புன்சிரிப்பொன்றை உதிர்த்தார். மாமனாரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நவமணிகள் போல் உதிர்க்கப்பட நெஞ்சம் நெகிழ்ச்சி கலந்த பெருமையில் விம்மியது. கண்களில் நீர் துளிர்த்தது.

ராகவன் பட்டனை அழுத்திய சில வினாடிகளில் லிஃப்ட் அந்த தளத்தில் வந்து நின்றது. மாமனார் உள்ளே நுழைய கதவைத் திறந்து விட்டாள் காவ்யா. அவர் உள்ளே நுழைந்ததும் கதவை மூடினாள்.

” வரேன்மா!”

” பை மாமா !” பதிலுக்கு லிஃப்ட் கண்ணிலிருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டிருந்தவள் மெல்ல திரும்பி தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.

இதுவரை மாமனார், மாமியார் மற்றும் கணவன் நான்கைந்து தடவைகள் தன் இல்லம் வந்திருக்கிறார்கள். வந்து சில மணி நேரம் தங்கி அளவளாவுவர். சிரிப்பும் கும்மாளமும் அளவோடு இருக்கும். நேரம் போவதே தெரியாது. மாலையில் ஸ்நாக்ஸ் , டீ அருந்தி விட்டுச் செல்வார்கள்.

ஆனால், இன்று வந்த மாமனார் வீட்டினுள் வராதது, தன் கையை நனைக்காமல் அப்படியே சென்றது விசனத்தைக் கொடுத்தது காவ்யாவிற்கு. ஏன் அப்படிச் செய்தார் என விளங்கவில்லை. அம்மா கேட்டால் வருத்தப்படுவாள் என கவலைப்பட்டாள்.

” காவ்யா..காவ்யா..” நன்றாக உறங்கிக் கொண்டிருந்த மகள் தோளைப் பற்றி
செண்பகம் உலுக்க, திடுக்கிட்டு கண் விழித்தாள் காவ்யா.

திரு திரு வென்று விழித்தவளை கோபத்துடன் பார்த்தவள், ” மணி ஒன்பது கூட ஆகல்லே அதுக்குள்ள என்னடி தூக்கம் ? அங்க உன் புருஷன் வீடு ஒரே களேபரமா இருக்கு. என்ன நடக்கறதுன்னு தெரியாமல் நீ பாட்டுக்கு ஹாய்யா தூங்கிக்கிட்டிருக்கே. உன் செல்லுக்கு மாப்பிள்ளை எத்தனை மிஸ்டு கால் பண்ணியிருக்கிறார் பார்..”

அதிர்ந்து போன காவ்யா, ” என்னம்மா சொல்றே , களேபரமா? அப்படின்னா…?” நெஞ்சில் பயத்துடன் கேட்டாள்.

” என்னத்தைச் சொல்வேன்…” என்று சட்டென கண் கலங்கிய செண்பகம், ” உன் மாமனார் ஹார்ட் அட்டாக்குல போயிட்டாராம். விஷயம் சொல்ல உன் செல்லுக்கு மாப்பிள்ளை ட்ரை பண்ணியிருக்கார். நீ எடுக்காததாலே என்னைக் காண்டாக்ட் பண்ணி சொன்னார். ஃபங்ஷன் முடியும் முன்னால புறப்பட்டு வந்துட்டேன். நல்ல வேளையாக நான் சாவி எடுத்துக்கிட்டுப் போனதால கதவைத் திறந்து வரமுடிஞ்சுது.”

அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போன காவ்யா மறு கணம் சுதாரித்துக் கொண்டாள். ” எத்தனை மணிக்கு ?” என கேட்டாள் நடுங்கும் குரலில்.

” எட்டு மணிக்கு.. ?”

சுரீர்ரென்றது . அதே எட்டு மணிக்கு மாமனார் கனவில் வந்தது, பேசியது, பிறகு புறப்பட்டுச் சென்றது எல்லாம் மனதில் நிழல்களாகத் தெரிந்தன. தந்தையைப் போல் பாசத்துடன் பழகிய ஒரு நல்லவரை இழந்து விட்டது தாளொண்ணாத் துயரைத் தந்தது.

கடைசியாக தன்னிடம் விடை பெற கனவில் வந்தது போல் துக்கம் துக்கமாகவும் வர பீறிட்டெழுந்தது அழுகை. மகளின் அழுகையை கட்டுப்படுத்த செண்பகம் பிரம்மப் பிரயத்னமே பட வேண்டியிருந்தது. ஒருவாறு சுதாரித்து தயாராகி அம்மாவுடன் டாக்ஸியில் புறப்பட்டுச் சென்றாள் காவ்யா.

அங்கு ஐஸ் பெட்டியில் வைக்கப் பட்டிருந்த மாமனார் உடலைச் சுற்றி உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் சோகம் தாங்கிய முகத்துடன் அமர்ந்து கொண்டிருப்பது காவ்யா கண்களில் பட்டது. தலை மாட்டில் உட்கார்ந்தபடி அழுதுகொண்டிருக்கும் மாமியார் அருகில் சென்று, குனிந்தபடி அவள் கைகளை தன் முகத்தில் வைத்துக்கொண்டு விம்மியழுதாள். வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. பிறகு நிமிர்ந்தவள் பார்வையில் புருஷன் பட்டான்.

அவன் அருகில் சென்று தன் இரு கரங்களையும் குவித்து கண்ணீர் மல்க வணங்கியவள் வாயிலிருந்து இப்பொழுதும் வார்த்தைகள் வரவில்லை. அவனும் இவளைப் பார்த்தான். அழுதழுது முகம் வீங்கிப்போனவனும் பேசவில்லை. நிலைமை புரிந்தது காவ்யாவிற்கு.

செண்பகம் ராகவனின் மனைவி பக்கம் சென்று அவள் தோளை அணைத்தபடி ஆறுதல் படுத்த முயன்றாள்.

ஐஸ் பெட்டி அருகில் சென்ற காவ்யா மாமனார் உடலின் கால்பக்கம் நின்றபடி கன்னங்களில் நீர் வழிய பார்த்தாள்.

‘ஹூம் ! 54 வயதுதான் ஆகிறது. பி.பி. கிடையாது ; ஷுகர் இல்லை ; நடைப் பயிற்சி, உடற் பயிற்சி எல்லாம் இருந்தும் ஹார்ட் அட்டாக் ! என்ன கொடுமை இது !’ ‘ பார்க்க பார்க்க வேதனை பொறுக்க மாட்டாமல் திரும்ப முற்பட்ட வளுக்கு பொறி தட்டியது.

கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மாமனார் உடலை கூர்ந்து பார்த்தாள். பார்த்தவள் விழிகள் நிலை குத்தி நின்றன !

தான் கனவில் கண்ட அதே வெண்மை நிற முழுக்கைச் சட்டையும் வெண்ணிற வேஷ்டியும் மாமனார் உடலில் காணப்பட்டது !

 

 

 

 

 

“சலுகை அதிகம் தந்ததாலோ?”- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Indian Mother Teenage Daughter Photos and Images & Pictures | Shutterstockகிட்டத்தட்ட அறுபது வருடங்களாகக் குமாரிக்குத் தன் தோழிகளோடு பழக்கம். அருகிலிருந்த பூங்காவில் பல வருடங்களாக நடைப்பயிற்சி செய்யும்போது தங்கள் சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்வதும் உண்டு. தோழியர் பகிர்வதில், குமாரிக்குத் தாம் செய்வதில் எதோ குறையோ எனத் தோன்றியது.

தன் குழப்பங்களைத் தோழிகளிடம் பகிர்ந்தாள். குமாரி சொல்வதைக் கேட்டு, தோழி ஒருவர் என்னைப் பற்றிக் கூறி அவளை என்னிடம் அழைத்து வந்தாள். விவரித்த‌ பின் தோழி வெளியேறினார்.

இங்குப் பேசுவதை யாரிடமும் பகிர மாட்டேன் எனப் புரிந்ததும் குமாரி சரளமாக விவரித்தார். கணவர் மாதவனுடன் தங்களின் ஒரே பெண்ணான ரேவதியுடன் வசிக்கிறோம் என்றார்.

ரேவதியைப் புதுமைப்பெண் சாரத்தை ஊற்றி வளர்த்தோம் என்றார். காரணம், குமாரி மற்றும்  மாதவனின் பெற்றோர்கள் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பு கொண்டதாலும், தீர்க சிந்தனை உடையவர்களாக இருந்ததின் தாக்கத்தினாலும். இதற்காகவே ரேவதியை மணந்தான் மாப்பிள்ளை ராகவன். அவர்களுடைய பெண் விஜியையும் அவ்வாறே வளர்த்தார்கள்.

தற்போது நடப்பதைப் பார்க்கையில், தன்னால்தானோ பதினேழு வயதான விஜியின் நடத்தை என்ற கேள்வி மனதில் எழுகிறது என்றார் குமாரி. யார் எதை எடுத்துச் சொன்னாலும் தகாத வார்த்தைகளால் பதிலளிக்கிறாள், ஏளனம், கூச்சல் போடுகிறாள், யாரையும் மதிக்காமல் நடந்து கொள்கிறாள் என்றார்.

விஜி பிறக்கும் போது ராகவன், ரேவதி இருவரும் முக்கிய பொறுப்பான வேலையிலிருந்தார்கள். விஜியின் பள்ளிச் சந்திப்புகளுக்குக் குமாரியையே போக வைத்தார்கள். மழலையர் பள்ளி இறுதி ஆண்டில், மற்ற பிள்ளைகளைப் போல தன் அம்மா தினமும் வராமல் பாட்டி வருவது ஏக்கத்தை உண்டாக்கியதால் பல உடல் உபாதைகள் நேர்ந்தது. விஜியை சுதந்திரத்திற்குப் பஞ்சம் இல்லாமல் வளர்த்தார்கள் பெற்றோர். பயன் அளிக்கவில்லை, தவறான நடத்தை வலுத்தது.

நாளடைவில் ரேவதி வேலையை விட முடிவானது. அடி மனதில் ஏமாற்றம் நிலவியது. குமாரி மனதிலும். இந்த ஆண்டு விஜி கல்லூரி சேர வேண்டும். தன் இச்சை போல விஜி நடந்து கொள்வது வீட்டினரை வியக்க வைத்தாலும், விஜியின் சொற்கள், பிடிவாத நடத்தையால் செயலற்ற நிலையிலிருந்தார்கள்.

பழி தன்னுடையது எனக் குமாரி ஏற்றுக் கொண்டதால் மனம் வலித்தது என்றாள். இதை செஷன்களில் உரையாடி வர, சமுதாயத்தில் எடுத்துக்காட்டாக இருக்க விரும்பியதில் இவ்வாறு வளர்ப்பு முறை கடைப்பிடித்ததைக் கண்டறிந்தார். கூடவே, தானும் மகளுக்கு அவள் வளரும்போது எல்லைக்கோடுகள் விதிக்காததை உணர்ந்தார். இதன் பிரதிபலிப்பு ரேவதி பெற்றோர் எனப் பாராமல் உபயோகிக்கும் வார்த்தைகள்,‌ ஜாடைகளில்  தெரிந்தது.

இதையே விஜி செய்தாள் என்றதை இதுவரை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. ரேவதிக்கு ஒருதுணையாக இருந்து, எல்லாம் செய்து கொடுத்ததில் மகளை எப்படி உருவாக்க வேண்டும் என நினைத்தது நேராததை உணர்ந்தார். ரேவதி தங்கள் நிழலாக இருக்கிறாளோ? என்று மாதவன் நினைத்தார்.

ரேவதியின் காரியதரிசி போல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு தாம் இயங்கும் இடங்களை அடையாளம் கண்டார்கள் குமாரி-மாதவன். மாற்றம் தேவை என உணர்ந்தார்கள்.

இப்படி அறிதல் புரிதல் செயல்படத் தூண்டுதலாகும். எந்த நிலையிலும் வயதிலும் செயல்படுத்துவதற்கான வழிகளைப் பல ஸெஷன்களில் பார்த்தோம். செயல்படுத்த விஜி, ரேவதி, ராகவன் இவர்களும் வருவதற்கான தேவையை விவரித்தேன். அழைத்து வந்தார்கள்.

சூழலைப் புரிந்து கொள்ள மேலும் கேள்விகளை நான் கேட்க, விஜி தங்களை மதிக்க வேண்டும் என ரேவதி-ராகவன் தம்பதியர் தெரிவித்தார்கள். இதற்கு, தனக்குக் கொடுத்திருந்த சுதந்திரத்தை உபயோகிப்பதாக விஜி பதில் கூறினாள். பெற்றோரையும் மகளையும் தனித்தனியாகப் பார்க்க முடிவெடுத்தேன்.

ரேவதி ராகவன் ஓரளவிற்கு விஜியின் வயதின் தன்மையைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அதையே உபயோகித்து, அந்தப் பருவத்தில் உணர்வுகளை வேறுபடுத்திக் கண்டுகொள்வதின் அவசியத்தை வலியுறுத்தினேன். விஜி தன் உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளும் விதங்களை விவரிக்கச் சொன்னபோது பெற்றோர் விவரிக்க முடியாமல் தவித்தார்கள். இரு வாரங்களுக்கு விஜியின் உணர்வுகள் யாவை, எப்படி வெளிப்படுத்துகிறாள் என கவனித்து வரிசைப் படுத்தச் சொன்னேன்.

செய்து வந்தார்கள் ரேவதி-ராகவன். இருவரும் விதவிதமாக கவனித்ததை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். இருவரின் பட்டியலையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விஜியின் நடத்தைக்கு அவர்களின் எதிர்வினை நேர்மறையா அல்லது எதிர்மறையா எனப் பல ஸெஷன்களில் பிரித்துப் பார்த்தோம். பலமுறை விஜி உணர்வு ததும்பும் போது, சொற்களை வீசும்போது, ரேவதி-ராகவன் தங்களது உடல் மொழி, பதில்கள் இவற்றை ஆராய்ந்து பார்த்துத் தெளிவு பெற்றார்கள்.‌ விஜியின் நடத்தை மூன்று அம்சங்களின் கலவை:  டீனேஜ் வயதினரின் பொங்கும் உணர்வுகள், சலனம்; சுதந்திர வளர்ப்பினால் பேச்சு, நடத்தை தோரணை; பல்வேறு சூழ்நிலைகளைக் கையாளும் விதம் தெரியாமல் தடுமாற்றம். பெற்றோர் இதன் வேறுபாடுகளைக்  கண்டறிந்து நிதானத்துடன் கையாளுவது முக்கியம்.

இந்தப் பயிற்சி செய்யும் போது ராகவன் தான் எப்போதும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளப் பலவகையான விடைகளை உடனடியாகக் கூறிவிடுகிறோம் என்று கண்டுகொண்டார். இது பயன்படாததை ஆராய்ந்தோம். ராகவன் புரிந்து கொண்டார், இப்படிச் செய்வதால் மகளைச் சொந்தமாகச் சிந்தனை செய்ய  விடவில்லை. இது வளரும் வயதில் சிந்தனை, முடிவு எடுக்க வாய்ப்பை ஆக்கிரமித்து விடுகிறது. இந்த வயதினருடன் கலந்துரையாடி முடிவு எடுத்தால் இதைச் செய்யும் முறையை கற்றுக் கொடுக்க வாய்ப்பாகிறது. அதாவது இப்படிச் செய், நான் சொல்லித் தருகிறேன் என்றது இல்லாமல்.

வளரும் பருவத்தில் வாய்ப்பு அவசியம், அவ்வளவுக்கு அவ்வளவு செயல்முறைகளைக் காணுவதும். எடுத்துக்காட்டாகப் பெற்றோர், ஆசிரியர்கள், தாத்தா பாட்டி, உறவினர்கள் என இருக்கலாம். இதை உணர்ந்த  ராகவன், முடிந்த அளவுக்கு தன் வேலையைச் சற்று மாற்றி விஜியுடன் அதிக நேரத்தைக் கழித்தார்.‌ இதற்கு ஸெஷன்களில் கலந்தாலோசித்து செஸ் போன்ற விளையாட்டுகள், காலையில் நடைப்பயிற்சி என்று துவங்கினார்கள்.

விஜி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள எதிர்மறை உணர்வுகளை மட்டுமே உபயோகித்தாள். ரேவதி தானும் அம்மாவுடன் இவ்வாறே செய்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்த்தாள். அதுவும் இந்த பாலினப் பருவத்திற்கு ஒப்பாது எனப் பலமுறை அறிவுரை தந்ததில் விஜி ஒவ்வொரு முறையும் எரிச்சல் ததும்ப, “மா ஏம்மா ரொய்ங் ரொய்ங்னு, விடேன் எனக்குத் தெரியும்.” என முடிப்பதை நினைவுகூறிச் சொன்னாள்.‌ தானும் குமாரியிடம் இதையே சொல்வதின் பிரதிபலிப்போ? திடீரென விழித்தது போல ரேவதி ராகவன் இந்த நடத்தைகளை மாற்றத் தயாரானார்கள்.

முதல் கட்டமாக, தங்களது உணர்வை அடையாளம் கண்டு, அதன் பெயரைச் சொல்லி, அதுதான் தன்னுடைய இப்போதையை நிலை எனக் கண்டுகொண்டு செயல்படுத்த ரேவதிக்குப் பல மாதங்கள் ஆயிற்று.

இதனைச் செயல்படுத்தியதில் ராகவன் மிகச் சரளமாகப் பழகக் கூடிய ஒருவராக மாறியதை விஜியும் ரேவதியும் கண்ணெதிரிலேயே பார்த்தார்கள். இவ்வாறு ஆனதில் ராகவன் புரிந்து கொண்டார், தன் உணர்வை உணர்ந்து கண்டுகொள்வதால் அதன் தாக்கம் குறைந்தது. விளைவு, தெளிவாக யோசித்துச் செயல்பட முடிந்தது. கூடவே தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் கசப்பு, காரமின்றிப் பேசுவதால் மற்றவர்களுக்குத் தான் சொல்வதின் வீச்சு முழுதாக இருந்தது. இதைக் கண்டறிந்ததில் வீட்டில் ஒருவருக்கொருவர் மேல் தாக்கம் அதிகமாக அமைதி அதிகரித்தது.

விஜி தான் வெளிப்படுத்தி வருவதை மாற்றி அமைக்க விரும்பினாள். இதற்காக அவளுக்குப் பெற்றோருடன் ஸெஷன்களை அமைத்தேன்.

மூவரையும் அளிக்கப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் அதை உபயோகித்து வருவதை வர்ணிக்கப் பரிந்துரைத்தேன். ஒருவரை ஒருவர் உறவாடும் போது தாம் நினைப்பதிலும், அதை எதிராளி புரிந்துகொள்வதிலும் அதைச் செயல்படுத்துவதிலும் எத்தனை வித்தியாசம் என அறிந்தார்கள். மேலும் இதை ஆராய, எந்த பொருளைச் சரியாகத் தெரிவிக்கவில்லை என்றதை எடுத்துக் கொண்டோம்.

பெற்றோரின் வளர்ப்பு முறை, ஒழுக்கத்திற்குத் தீட்டிய விதிகள், வெளிப்படுத்த வேண்டிய விதம் எனப் பிரித்துப் பார்க்கச் செய்தேன். அதுவும் முக்கியமாகத் தான் சொல்வதும் செய்வதும் ஒத்துப் போகிறதா அல்ல சொல் ஒன்று செயலோ எதிர்த்திசையிலா என்று ஆராய்ந்தோம். ராகவன்-ரேவதிக்கு உடனடியாக இதனால்தான் விஜி கற்றுக்கொள்ளவில்லை எனப் புரிந்தது. தன் பங்கிற்கு விஜி இதை ஏற்றுக் கொள்ள, தானும் பொறுப்புகளைத் தவறான விதத்தில் கையாண்டதை ஒப்புக்கொண்டாள். அடையாளம் காண்பதும் மாற்ற முடிவெடுப்பதும் முன்னேற்றத்தின் நல்ல அறிகுறிகள்!

மெல்ல மெல்ல, விஜி மலர்ந்தாள்!