அவியல் அகவல் ! – சதுர்புஜன்

 

அம்மா கை உணவு (20)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
 17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
 18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
 19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
 20. சுண்டலோ சுண்டல் ! அக்டோபர் 2019 

 

அவியல் அகவல் !

Image result for அவியல்

 

அவியல் ! அவியல் ! அவியல் !

அவியலைப் போல ஒரு சுவையொன்று இல்லை – இதனை

தெளிவீர் ! தெளிவீர் ! தெளிவீர் !

 

ருசிகளில் உயர்ந்தது அவியல் – இதனை

உலகம் முழுவதும் உரைப்பேன் !

உரைப்பு, தித்திப்பு என்று சுவை

சொல்லமுடியாமல் தவிப்பேன் !

கையில் எடுத்தது தெரியும் – அது

வாயினில் விழுவது அறியேன் !

வாயில் உணரும் முன்னே – என்

உடலே புல்லரிக்குமென்பேன் !

 

அவியல் நாக்கினில் படரும் – அப்போது

அறுசுவையும் நான் உணர்வேன் !

காயினைக் கடிக்கும்போது – அது

கரையும் ; நானும் கரைவேன் !

குழைந்த பருப்பு சோறும் – அவியல்

கலந்து வாயில் மோதும் !

கரையில் மோதும் கடல் போல் – என்

கற்பனை சிறகடித்து ஆடும் !

 

கத்திரிக்காய் பிஞ்சுகள் நான்கு – கூட

அவரைக்காய் கைப்பிடி ஒன்று !

பூசணிக்காய் சிறு துண்டு – ஒற்றை

முருங்கையும் சேர்ந்தால் நன்று !

உருளை நிச்சயம் வேண்டும் – கூடவே

மொச்சையும் சேர்ந்தது இன்று !

 

தேங்காயும் நல்தயிரும் தேவைக்கேற்ற உப்பும்

மிளகாயும் சேர்ந்திடும் உடனே !

அத்தனையும் சேர்ந்து ஓர் அருமைப் பதத்திலே

அன்னையும் தருவாள் அவியல் !

 

அவியலின் பெருமையை அளந்திட முயன்றேன் –

தோற்றது கவிதையே அன்றோ !

அன்னையின் கை மணம் அளவிட முயன்றேன் –

தோல்வி கவிஞனுக்கன்றோ !

 

 

இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் ராமகிருஷ்ணன் – எம்பாவாய் -எஸ் கே என்

முதல் பகுதியைப் படிக்க விரும்புவர்களுக்கு இதோ இணைப்பு:

“எம்பாவாய்” சிறுகதைபற்றி …..  (தொடர்ச்சி)

 

Image result for எஸ் ராமகிருஷ்ணன் எம்பாவாய்

அபிமான எழுத்தாளர் வாஹினி காலை உணவருந்த வீட்டிற்கு வருகிறாள் என்பதை நன்மதியால் நம்பமுடியவில்லை. மைத்துனர் விநாயகம் சொல்லியபடி கேசரி, வடை, இட்லி, பொங்கல் என்று செய்துவிடலாம்.  ஆனால் வாஹினியுடன் என்ன பேசுவது?

விருந்து தயார். கணவர் (நல்லவேளையாக) கடை திறக்கச்  சென்றுவிட்டார். தனக்குப் பிடித்த புடவையை அணிந்துகொள்கிறாள். இருவருக்கும் சேர்த்தே மல்லிகை தொடுத்து வைக்கிறாள்.

வாஹினியை வாசலிலேயே வரவேற்கிறார்கள். நேற்றையக் கூட்டத்துக்கு வந்த ஒரே பெண்மணி என நன்மதியை அடையாளம் காண்கிறாள் வாஹினி. சற்று நேரம் கழித்துச் சாப்பிடலாம் என்கிறாள் வாஹினி. உரையாடல் நடக்கிறது.

“எவ்வளவு நாவல் படிச்சிருப்பீங்க?”

“நூறு இருநூறு இருக்கும். கையில் கிடைக்கிறது எல்லாம் படிச்சிடுவேன். லைப்ரரியில் இருந்து கண்ணன் எடுத்துக்கிட்டு வந்து கொடுப்பான் என்றாள் அம்மா.

“நீங்கள் லைப்ரரிக்குப் போக மாட்டீங்களா?”

“இந்த ஊர்ல எந்தப் பொண்ணும் லைப்ரரிக்குப் போக மாட்டாங்க”

“ஏன் போன பூதம் பிடிசிக்கிடுமா?”

“போகணும்னு ஆசைதான். ஆனா விடமாட்டாங்க.”

மாதவிடாய் தினங்களில் இருக்க வேண்டிய இருட்டு அறை, கழிப்பறையில்லாத  வீட்டில் ஒதுங்குவதற்கான குட்டிச்சுவர், எதற்கும் தேவைப்படும் கணவரின் அனுமதி போன்றவை வாஹினிக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் கொடுக்கின்றன..

வெளிநாட்டுக் கணவர், அவரைப் பேரிட்டு அழைக்கும் வாஹினி, கல்கத்தாவில் தனித்துவாழும் வாழ்க்கை … இவை நன்மதிக்கு வியப்பைக் கொடுக்கின்றன..

வாஹினியின் கட்டாயத்தின்பேரில் சேர்ந்தே உணவருந்துகிறார்கள்.

“நல்ல சாப்பாடு. இப்படி சாப்பிட்டா தூக்கம்தான் வரும். அப்புறம் வைட் போட்டிடும்.”

அம்மா சிரித்தபடியே சொன்னாள்

“கோவில் வரைக்கு ஒரு நடை போயிட்டு வந்தா பசிச்சிடும்”

“போகலாமா? எனக்கு யானை பாக்கணும்” எனக்கேட்டாள் வாஹினி.

கோவில் அருகே டீக்கடையில் டீ குடிக்கிறார்கள். பால்கோவா வாங்கிச் சாப்பிடுகிறார்கள். ஆண்டாள் பாசுரத்தை நன்மதியைப் பாடச்சொல்லி கைதட்டி ரசிக்கிறாள் வாஹினி.

எல்லோராலும் எழுத முடியுமா என்று நன்மதி கேட்கிறாள். நீகூட எழுதலாம் என்கிறாள் வாஹினி. நன்றாகப் பாடுகிறாய்.. பெரிய குடும்பம்… நிறைய அனுபவங்கள்.. கட்டாயம் எழுதமுடியும் என்கிறாள். “உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று கூறி கையசைத்து விடை பெறுகிறாள் வாஹினி.

Image result for சிறுகதை

அந்தச் ‘சட்டைக்காரி’யை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டதற்காக சீறுகிறார் நன்மதியின் கணவர். புத்தகம் படிப்பது நிறுத்தப்படுகிறது. புதிய புத்தகங்கள் வாங்கிவரமட்டேன் என்று மைத்துனரும், நூலகத்திலிருந்து கொண்டு வரமாட்டேன் என்று மகனும் உறுதி அளித்த பிறகு  கோபம் குறைகிறது.  இரண்டு  மாதங்கள் கழித்து புத்தகங்கள் வீட்டிற்கு வர்த்தொடங்குகின்றன..

நன்மதியின் பெயரில் சிறிய பார்சல் வருகிறது. வாழ்க்கையிகேயே அவள் பெயருக்கு வந்த ஒரே தபால்  அதுதான். நட்பைப் பாராட்டி வாஹினி எழுதியிருந்தாள். கூடவே ஒரு கைக்கடிகாரம். கடிதத்தை கண்ணீர்  பொங்கப் படிக்கிறாள் நன்மதி.

அன்றிரவு அப்பா அம்மாவோடு மறுபடி  சண்டை போட்டார். “உனக்கு எதுக்குடி அவள் வாட்ச் அனுப்பிவைக்குறா? ஏதாவது பணம் கிணம் குடுத்தியா” என்று திட்டினார். அம்மாவிற்கு வாஹினி எழுதிய கடிதத்தை  கிழித்துப் போட்டுவிட்டு கடிகாரத்தை தூக்கி வேலைக்காரப் பெண்ணிடம் கொடுத்துவிட்டார். அம்மா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம்  இடம் பெயர்ந்து தென்காசி போய்விடுகிறது. வாஹினியும் ஸ்ரீவில்லிபுத்தூரும் நினைவுகளில் இருந்து மறையத் தொடங்குகின்றன.

ஆனால் இன்று அம்மாவின் கடிதத்தைப் படித்தபோதுதான் அவள் வாஹினிக்கு நன்றி தெரிவிக்க பதில்  கடிதம் எழுதியிருந்தாள் என்பது புரிந்தது. இதை எப்படி எழுதினாள், எப்படி அனுப்பிவைத்தாள் எதுவும் எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அம்மாவின் கடித வரிகளைப் படிக்கப் படிக்க அது என் மனதை வதைப்பதாக இருந்தது.

கடிதத்திலிருந்து சில  வரிகள் …

உன் நாவல்களைப் படிக்கும்போது நீ எப்படிப் பேசுவாய் என நானாக உன் குரல் ஓன்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆச்சரியம், அதே குரலில்தான் நேரிலும் நீ பேசினாய்……

நீ மேடையில் பேசும்போதுகூட எவ்வளவு அறிவாளி நீ என்று நினைத்திருந்தேன். ஆனால் உன்னோடு பழகியபோதுதான் நீயும் என்னைப் போலவே பிரிவை, தீராத தனிமையை அனுபவிக்கிறாய் என்பதைப் புரிந்துகொண்டேன். நீயும் நிராகரிக்கப் பட்டிருக்கிறாய். பரிகசிக்கப்பட்டிருக்கிறாய்.. உனக்குள் பீறிடும் அன்பிற்கான ஏக்கத்தை என்னால் உணரமுடிகிறது…..

நீ எழுதப் போராடுபவள். நான் படிக்கப் போராடுபவள். என்னைப் போலுள்ள பெண்கள் எழுத வருவதற்கு இன்னும் நூறு வருஷமாகிவிடும்.

இனி எனக்கு கடிகங்கள் எழுதாதே. முடிந்தால் உன் கதையில் என்னை கதாபாத்திரமாக்கிவிடு.

எனக்கு இனி நீ தேவையில்லை. உன் நாவல்களே போதும்…  

நன்மதியின் மகனான கதைசொல்லிக்குத் துக்கமும் வேதனையும் ஏற்படுகிறது. வாஹினி மறைந்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. அம்மாவின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கான நூலகத்தை உருவாக்கவும் வாஹினியின் எல்லாக் கதைகளையும் படித்து, அம்மாவை கதாபாத்திரமாக ஆகியிருக்கிறாளா என்று தெரிந்துகொள்ளவும்  தோன்றுகிறது.

அம்மா புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் கூட  என்னிடமில்லை என்பது அந்த நிமிடம் தாங்க முடியாத குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது.

என்று கதை முடிகிறது.

இந்தக் கதைக்கு வைக்கப்பட்டுள்ள பொருத்தமான கவித்துவமான தலைப்பு கதைக்கு அழகூட்டுகிறது. மகனின் வார்த்தைகளில் கதை சொல்லப்படுவது தாக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.

 

மனதைக்கவரும் சங்கீதம்

நல்ல இனிமையான சங்கீதம் – அழகான தமிழ் வரிகள் – காதில் தேன் வந்து பாயும். கேட்டு மகிழுங்கள்!! 

Image result for குழலூதி மனமெல்லாம் lyrics

ராகம் – காம்போஜி          

தாளம் – ஆதி

இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்

பாடியவர்: பித்துக்குளி முருகதாஸ் 

 

பல்லவி

குழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ – சகி ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ –

அனுபல்லவி

அழகான மயிலாடவும் – (மிக மிக ) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் –

மத்யம காலம்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமிதி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)

சரணம்

மகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ……..
மிகவும் எழிலாகவும் ……. காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ….

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)

 

 

குவிகம் இல்லச் செய்திகள்

 

குவிகம் அக்டோபர் மாத நிகழ்வுகள்

அக்டோபர் 6 அன்று குவிகம் இல்லத்தில் இலக்கிய அமுதம் சார்பில் கோமல் ஸ்வாமிநாதன் பற்றி  திரு இந்திரன் அவர்கள் பேசினார்கள்.

இந்திரன் அவர்களுக்கும் கோமல் அவர்களுக்கும் தொடர்பு சுபமங்களா இதழ் காரணமாகவே இருந்தது. ஒரு மாத  இதழை ஒரு இலக்கிய இதழாக மாற்றியதோடு கலை இலக்கியம் சார்ந்த வேறுபட்ட கருத்துக்கள் கொண்ட பலரை ஒரே பத்திரிகையில் எழுதவைத்து சாதனை படைத்த கோமல்  ஒரு ‘டெமோக்ராட்’ என்றார் இந்திரன்.

எந்த கடுமையான விமர்சனத்தையும் (கண்ணியம் குறையாதிருந்தால்)  வெளியிட கோமல் தயங்கியதே இல்லை என்றார். கோமல் மறைவிற்குப்பின் இதழைத் தொடர அதன் பதிப்பாளர்களுக்கு எண்ணம் இல்லை. எனவே சுபமங்களா கோமலுடன் உடன்கட்டை ஏறிவிட்டது என்று சொல்லப்பட்டது என்றார்.

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

அக்டோபர் 13 அன்று ஊடகவியலாளர் மற்றும் சினிமா விமர்சகர் செந்தூரம் ஜகதீஷ் அவர்கள் கலந்துகொண்டார்.

ஒரு சிற்றிதழ் மிகக்குறைந்த சந்தாதாரர்களுக்காகவே வெளிவரும். மற்ற வார மாதப் பத்திரிகைகள் போல் கடைகளில் காசுகொடுத்து வாங்கப்படுவது மிக அரிது. இவர் ‘செந்தூரம்’ தொடங்கியபோது திரு பெரியார்தாசன் இவருக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சிற்றிதழ் எத்தனை பிரதிகள் அடிக்கலாம் என யோசித்துக்கொண்டு இருந்தபோது 500 பிரதிகள் அடிக்க வைத்திருக்கிறார் பெரியார்தாசன். அவர் பங்குபெறும் கூட்டங்கள் தோறும் ‘செந்தூரம்’ இதழ்  விற்க வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு சிறுபத்திரிகை விற்கப்பட்டது பெரிய ஆச்சரியம், செந்தூரம் சினிமா சிறப்பிதழ் கமலஹாசன், கலைஞர் உட்பட பல பிரமுகர்களின் நூலகத்தில் இருந்தது என்பது அந்த இதழுக்கு ஒரு பெருமைதான்.

ஜகதீஷ் அவர்களின் இன்னொரு ஆர்வம் ஓஷோ  பற்றியது. பல விஷயங்களுக்கு  ஓஷோ அளிக்கும் விளக்கங்களும் வழிகாட்டுதலும் தன்னை முற்றிலும் கவர்ந்தது  என்றார்.

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அக்டோபர் 20 அன்று நடந்த அளவளாவல் நிகழ்வில் கல்யாணமாலை நிறுவனர்கள் திரு மோகன், திருமதி மீரா நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்,

தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் செய்து வருகையில் “கல்யாணமாலை” நிகழ்வுக்கான எண்ணம் உருவாகியது. அதை நடத்திவைக்க அப்போது பிரபலமாக இருந்த சிலரை அணுகியிருக்கிறார்கள். நிகழ்வினை வடிவமைக்கும் அடிப்படை கருத்துகள் இவர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை. சில வாரங்கள் கழித்து மோகன் அவர்களே உரையாடல் நிகழ்த்துபவராக பணி செய்ய “கல்யாணமாலை”  பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரே தொலைக்காட்சியில்  இருபது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் ஒரே நிகழ்வு என்னும் பெருமையைப் பெற்றது.

அனுபவத்திலிருந்து குறிப்பிட்ட செய்திகளில் ஒன்று ..

மிக அதிகமான நிபந்தனைகளுடன் வரன் பார்க்கத் தொடங்குபவர்கள் பல சம்பந்தங்களை தட்டிக் கழித்து பல வருடங்கள் செலவழித்துவிடுகிறார்கள். கடைசியில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைத்துணை முதலில் உறுதியாக இருந்த பல நிபந்தனைகளுக்கு மாறாகவே இருப்பதுதான்  முரண்.

=======================================================================================

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 591

“தொண்டரடிப்பொடி ஆழ்வார்”
சிறப்புரை :-திரு தேவராஜ ஸ்வாமிகள்

குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 55

“கலந்துரையாடல் “

எழுத்தாளர்  உஷா சுப்ரமணியன்  அவர்களுடன்

 

வழக்கமாக கடைசி சனிக்கிழமை நடைபெறும்  இலக்கியச் சிந்தனை- குவிகம் இலக்கியவாசல் மாத நிகழ்வு அக்டோபர் 29 அன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. ஆழ்வார்ப்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்திற்குப் பதிலாக குவிகம் இல்லத்தில் நடைபெற்றது.

இலக்கியச் சிந்தனை நிகழ்வாக திரு தேவராஜ சுவாமிகள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பற்றி உரையாற்றினார். விப்ரநாராயணா வாழ்க்கையின் நடுவில் இறைவன் சேவையை விட்டு சிலகாலம் விலகி இருந்திருக்கிறார். பின்னாளில் தொண்டர் அடிப்பொடியாழ்வாராக மலர்ந்தார். அவரது பங்களிப்பான  திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருமாலையின் சிறப்புகளை தேவராஜ சுவாமிகள் எடுத்துரைத்தார்.

குவிகம் இலக்கிய வாசல் சார்பில் எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன் தன்னை எழுத்தாளர் என்பதே பலருக்கு மறந்துபோயிருக்கும் என்று தொடங்கினார்.    எப்போதாவது தான் எழுதிவருகிறேன் என்று சொன்னார்.. பெண்ணியக் கதைகள் பல எழுதியிருந்தாலும் தங்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்தும் பெண்களை கண்டித்தும் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்.

எழுபதுகளில் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிவந்த அவர் நிறுவனங்களுக்காகவும் விளம்பரங்களுக்காகவும் படங்கள் எடுக்கும் தொழிலில் முழுமையாக ஈடுபட்டதால் எப்போதாவது எழுதும் எழுத்தாளர் என்று ஆகிவிட்டதாகத் தெரிவித்தார்.

 

 

அன்றும் இன்றும் … ! — கோவை சங்கர்

Image result for வாழ்க்கை

காதலெனும் சிறகடித்துப் பறந்தே னன்று
சாதலெனும் திசைநோக்கி செல்கிறே னின்று
மெய்க்காத லென்காத லென்றே னன்று
பொய்க்காதல் மயக்கமென உணர்ந்தே னின்று!

தேனமுது அளித்தனளே கன்னி அன்று
வன்சொல்லுந் தெளிக்கின்றாள் நங்கை இன்று
கிடைக்குமென நம்பினேன் மகிழ்வே அன்று
கிடைத்ததோ தாளாத துயரம் இன்று!

அணைத்திடுவா ளெனவெண்ணம் கொண்டே னன்று
பிணங்குகிறா ளுளம்நோக நங்கை யின்று
பேறுசெய்தே னவள்கிட்ட என்றே னன்று
குற்றமென்ன செய்தேனென குழப்பம் இன்று!

பிறருக்கு மாலையிடேன் சொன்னா ளன்று
பிறனுக்கு மாலையிட நின்றாள் இன்று
மணமென்றா லெனையேதான் என்றாள் அன்று
பணங்கொண்ட மாப்பிள்ளை பிடித்தாள் இன்று!

உயிரிற்கும் மேலாகக் கொண்ட நேசம்
மையலொடு காதலிலே துவண்ட கோலம்
கட்டிய கற்பனைக் கோட்டை யெல்லாம்
கட்டோடு மறந்தனளே பாவி இன்று!

தற்கால காதலெலாம் உதட்டின் மேலே
பற்றின்றித் தள்ளிவிடும் சேற்றின் கீழே
எழில்நோக்கிக் காதல்கொளும் மக்காள் நீவீர்
உழலுமென் வாழ்க்கையைச் சான்றாய்க் கொள்வீர்!

 

கலப்படம் எப்படியெல்லாம் செய்கிறார்கள் .. கொடுமை..

அருவம் என்ற சமீபத்தில் வந்த படத்தில் கலப்படம் எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஒரு கொடுமையான பதிவு. 

எப்படியெல்லாம் கலப்படம் செய்கிறார்கள் என்று  பார்த்துத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் இவற்றிலிருந்து நாம் எப்படித்

தப்பிப்பது என்றும் நாம் யோசிக்கவேண்டும். 

கலப்படம் செய்யும் துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களை வேரருக்கவும் வேண்டும்.

செய்வோமா?