மதிப்புற்குரிய பேராசிரியர் திரு மா. வயித்தியலிங்கன்  அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் எழுதிய சிலேடை வெண்பா பற்றிக் குறிப்பிட்டார். 

அதைக் கேட்டு அவர் அனுமதியுடன் இங்கே தந்துள்ளேன்: 

மாணவருக்கும் பிரியாணிக்கும் உள்ள சிலேடை !  

image

மட்டனிதம் போடுகையால் மாண் குருமா ராசியினால் 

தொட்ட விரும்புகை தோய் மணத்தால் – திட்டமுற 

மாணாக்கர் என்றும் பிரியாணி ஆவார்கள் 

காணாக்கால் கண்டு கொள்ளப்பா!

மாணவர் : தினம் மட்டம் போடுவர் , குருமார் ஆசி  பெற்றவர்கள்,  புகை பிடிப்பதால் கையைத் தொட்டால் மணம் வீசும்,  

பிரியாணி: இதமான மட்டன்  போடுவது, குருமாவுடன் வருவது, சாப்பிட்ட கை மணம் வீசும் ,

 செல் போனைப் பற்றி அவருடைய இன்னொரு அருமையான வெண்பா!  

image

காது செவிடாகும் காசு பறிபோகும் 

வாதோடு வம்பு வளருமே – பேதாய்கேள் 

பொய்யே வளரும் பொழுது பழுதாகும் 

கையிலே செல்லிருந்தக்  கால்! 

இந்தக் கவிதைப் பூங்காவில் விவேக சிந்தாமணி என்ற பெயரில் வந்துள்ள சில கவிதைகளைத் தந்துள்ளேன்! படிப்பதற்கு சுலபமாகவும், மிகவும் பொருள்  பொதிந்ததாகவும், பஞ்ச் வரிகளுடன் கூடிய பாடல்கள் இவை! 

கிட்டத்தட்ட 135  பாடல்கள் கொண்ட இந்த விவேக சிந்தாமணியை எழுதிவர் யார் என்பதே தெரியவில்லை! 

ஆனால் அத்தனையும் முத்துக்கள்! 

பயனில்லாத ஏழு ஐட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள்! 

image

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை  அடக்கா வேந்தன் குருமொழி  கொள்ளாச்  சீடன்
பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனிலை ஏழுந்தானே!


அடுத்த பாடலைப் படியுங்கள்: 

image

ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ
 அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
 வழியினிலே கடன்காரர் மறித்துக் கொள்ள
கோவேந்தர் உழுதுண்ட கடமைக் கேட்க
  குருக்கள் வந்து தட்சிணைக்குக் குறுக்கே நிற்கப்
பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கக்
 பாவிமகன் படுந்துயரம் பார்க்கொணாதே!

மாடு கன்னு போட, மழை பெய்ய, மழையில் வீடு விழ , மனைவி நோய்வாய்ப்பட,  வேலைக்காரன் சாக, நிலத்தில் ஈரம் காயும் முன்னே விதைக்கலாம் என்று போகும் போது கடன்காரன் வழி மறிக்க, அரசாங்க வரிப் பணம் கேட்டு ஆள் வர,குருக்கள் வந்து தட்சிணை கேட்க, புலவர் ஒருவர் பாடிப் பரிசு கேட்க மனுஷன் பட்ட கஷ்டம் பார்க்க சகிக்காது!  

இது தான் சோதனை மேல்  சோதனை கேஸ் ! It never rains it pours என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒருத்தனுக்கு வரும் தொடர் துன்பங்களைப் பாருங்கள்!:


பெண்கள் மன்னிக்க!

image

ஆலகால விஷத்தையும் நம்பலாம்
  ஆற்றையும் பெருங்காற்றையும் நம்பலாம்
கோலமத யானையை  நம்பலாம்
   கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்
காலனார் விடு தூதரை நம்பலாம்
  கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்
சேலை கட்டிய மாதரை  நம்பினால்
  தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!


இந்தப்  பாட்டைப் படித்தால்   தூக்குத் தூக்கிப்  படத்தில் வரும்   “பெண்களை நம்பாதே "பாடல் ஞாபகம் வரும்!