அழகிய சிங்கர் நவீன விருட்சத்தின் ஆசிரியர். மற்றும் 36 புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறார். அவருக்கென்று அருமையான நண்பர் வட்டம் இருக்கிறது. மாதா மாதம் விருட்சம் இலக்கியக் கூட்டம் வேறு நடத்துகிறார்! நிறைய கதைகளையும் கவிதைகளையும் எழுதிய அழகிய சிங்கர் ( இந்தியன் வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்) அவர்கள் கைவண்ணத்தில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பத்திரிகை “ நவீன விருட்சம்” . .
நவீன விருட்சம் ஒரு தாள் – இலக்கியக் – கலைப் பத்திரிகை.
வருடத்திற்கு நான்கு இதழ்கள். அடுத்த ஆண்டு நூறாவது இதழைத் தொடப் போகிறது!
டிசம்பர் 2014ல் வந்துள்ள நவீன விருட்சத்தின் 96வது இதழைப் பார்ப்போம்!
முதலில் தன் இதழைப் பற்றி அவரே விமர்சனம் செய்கிறார். இதைக் கொண்டு வந்த அவருக்கும் படிக்கும் வாசகருக்கும் ஒருவிதப் பெருமையை உருவாக்குகிறது என்பதை உறுதியாக நம்புகிறார்!
“உறக்கத்துக்குள் ஒரு உறுத்தல் ” என்ற ஒரு கதை! வைதீஸ்வரன் எழுதியது! ஒருவர் கனவில் ஏசுநாதர், சங்கராச்சாரியார், புத்தர், கலைஞர் கருணாநிதி தனித்தனியாக வந்து அவருடன் நண்பர் போல பேசி ,பழகி, அழுது, ஆரவாரித்ததைச் சொல்லுகிறார்.! நல்ல கற்பனை!
“இவனை இப்படியே விடக்கூடாது ”என்று ந . ஜயராமனின் கதை.சுந்தரம் என்ற துருவாசர் மாதிரி இருக்கும் சிறுவன். அவனுடன் எப்படி அவன் அம்மா அப்பா அண்ணா அக்கா பேசிக் கோபப்படுகிறார்கள் என்பது முடிச்சு.
‘பஸ் அடியில் விழவா?’ என்ற குறுங்கதை அசோகமித்திரனின் ஒரு பக்க முத்திரைத் த்ரில்லர்!
ஸீ வை குருஸ்வாமி சர்மா என்பவரால் எழுதப்பட்ட “பிரேம கலா வத்யம்” என்ற தமிழின் மூன்றாவது நாவலைப் பற்றிய விமர்சனத்தைப் பற்றி ஐராவதம் விமர்சனம் செய்திருக்கிறார்.
நாலைந்து வசன கவிதைகள். பொறுமையோடு படித்தேன். புரிய மாட்டேன் என்கிறது. ‘என் குத்தமா ? உன் குத்தமா ?
கள்ள வாரணம் என்ற பெயரில் பிள்ளையார் அமிர்தத்தைத் திருடி திருக்கடவூரில் இருப்பதை கிரிக்கெட் எல்லாம் சேர்த்து –படிக்க ஜாலியாகத் தான் இருக்கு – சொல்லியிருக்கிறார் கணேஷ்ராம்.
ஐராவதம் அவர்களின் மறைவு அனைத்து கதைகளிலும் கட்டுரைகளிலும் தெரிகிறது. அவருக்கான சிறப்பிதழ் என்றே இதைச் சொல்லலாம். சா. கந்தசாமியும் அவரை நினைவு கூர்கிறார். மறைந்த முத்தையாப் பிள்ளையின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இரவில் தூக்கமின்றித் தவித்து நெஞ்சுவலியில் துடித்து மடியும் முதுமையின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார் எஸ்..சங்கரநாராயணன் .
அழகியசிங்கரின் சுயசரிதக் கட்டுரை!
எஸ்.வி.வேணுகோபாலனின் கதை – பவழவண்ணன் என்ற கவிதை எழுதுபவரைப்பற்றி. உலகம் நமது பெருமையைப் புரிந்து கொள்ளவில்லை என்ற கற்பனையிலேயே இருந்து வறுமையில் வாடி மடிந்து போகிறார் பவழவண்ணன் . அவர் சாதாரணமானவர் என்ற உண்மையை ஏன் நண்பர்கள் அவரிடம் சொல்லவில்லை என்ற கோபத்தில் அவர் எழுதியவற்றை அவருடன் தகனம் செய்கிறாள் அவரது சகோதரி. ’அளவு கடந்த சுய மதிப்பீடு’ செய்து கொள்ளும் நம் அனைவருக்கும் இது ஒரு சாட்டையடி!
மொத்தத்தில் – விருட்சம் ஆட்டுக்குச் சொந்தம் அல்ல. பசுவுக்குச் சொந்தம். அதாவது நுனிப்புல் மேய்பவர்களுக்கு அல்ல. அசை போடுபவர்களுக்கு!
(மறைந்த ஜெயகாந்தன் அவர்கள் விருட்சம் கூட்டத்திற்கு வந்தபோது எடுத்த படம் – வலையில் கண்டெடுத்தேன்! . சிவப்புச் சட்டையில் அழகிய சிங்கர்.

