சு தமிழ்ச்செல்வி
எளிய மக்களின் நீண்ட வாழ்வின் நுண்ணிய பகுதிகளை அவர்கள் மொழியிலே பதிவு செய்யும் சு.தமிழ்ச்செல்வி, அவரது அளம், மாணிக்கம் மற்றும் கீதாரி ஆகிய நாவல்களுக்காக நன்கு அறியப்பட்டவர். இவரது சிறுகதைகளிலும் பெண் விவசாயக் கூலிகள் சந்திக்கும் அவலங்களும் இயலாமையும், பல சமயங்களில் வேறு வழிதெரியாது மூட நம்பிக்கைகளை கைக்கொள்ளுவதும் காணப்படுகின்றன. ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். “மாணிக்கம்” புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான விருதினைப் பெற்றவர்.
அவரது ‘யதார்த்தம்’ என்கிற கதை..
* * * * * * *

“ஏய், இங்க யாரு ஊளையிடறது? கொஞ்சம்கூட அறிவில்லாம..” கத்திக்கொண்டே வந்தாள் அந்த நர்ஸ்.
என்று தொடங்குகிறது. இடம் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாலுக்கா தலைநகரான திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை. அழுதழுது வீங்கிப் போயிருந்த மாரியப்பனும் தலைவிரிகோலமாய் மரத்தடியில் ஆஸ்பத்திரிக்கு வெளியே திடீர் திடீரென பெருங்குரலெடுத்து அழும் அவன் மனைவி கண்ணம்மாவும் அவனது அம்மா காலை நாலரை பஸ்ஸில் வருவாள் என எதிர்பார்த்துக்கிடந்தார்கள். வரும்போது ஏதேனும் பணம் தோதுபண்ணிக் கொண்டுவரலாம். அவள் வந்தால்தான் இவர்கள் ஊருக்குப் போகமுடியும். கையில் இருந்ததோ இரண்டு மூன்று ரூபாய்கள்தான். இயலாமையும், துக்கமும் நெஞ்சை அழுத்துகிறது.
இப்படியெல்லாம் ஆகுமென்று தெரியுமா என்ன? நேற்று காலையிலேயே மூன்றரை வயது மகனுக்கு உடம்பு காய்ந்து கொண்டு இருந்தது. பக்கத்து ஊர் ஆசுபத்திரியில் காண்பிக்கலாம் என மனைவியின் கோரிக்கை. ஆனால் அங்கு போய்விட்டு வந்து நடவுக்குப் போக சாத்தியமில்லை. இருவரும் சம்பாதிக்கும் குறைந்த வருமானத்தில்தான் வாழ்க்கை. வேலை கிடைக்கும் ஒரு சில நாட்களிலும் ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால்..? ‘முக்குட்டு’ கடையிலிருந்து காப்பித்தண்ணியும் ‘சொர’ மாத்திரையும் வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குப்போகத்தான் தீர்மானித்தாள்.
இருபோக சாகுபடி நடந்த நாட்களில் எதாவது வேலை கிடைத்துக்கொண்டே இருக்கும். வாய்கால் எல்லாம் காய்ந்து அல்லாடும் விவசாயத்தில் வேலை என்று கிடைப்பதே மிகச் சொற்பம்.
வேலை முடிந்து வீடு திரும்பும் கண்ணம்மா, காய்ச்சல் கண்ட மகனுக்கு ரசம் வைத்துக் கொடுக்க சிறு நண்டுகளைத் தேடிப்பிடித்து மடியில் கட்டிக்கொண்டு வந்தாள்.
மகனுக்குக் கிட்ட நெருங்கவே முடியாத காய்ச்சலில் தூக்கித்தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. வேலை சீக்கிரம் முடிந்தாலும் கூலி பெறத் தாமதமாகி அப்போதுதான் வீடு திரும்பிய மாரியப்பன், மகனைத் தோளில் போட்டுக்கொண்டு, மனைவியுடன் ஏழரை மணி பஸ் பிடித்து இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தான்.
ஆஸ்பத்திரிக்கு வந்தபோது நைட் ட்யூட்டி டாக்டர் வந்திருக்கவில்லை. இவ்வளவு மோசமான ‘கேஸ்’ பார்க்க நர்ஸ்களுக்கும் விருப்பமில்லை. காலில் விழாத குறையாக கெஞ்சியதால் வைத்தியம் பார்த்தார்கள். வேண்டாத தெய்வமில்லை. ஊசிபோட்ட மயக்கத்தில் குழந்தை உறங்குகிறான் என்ற நினைப்பிலும், இனி பிள்ளையைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையிலும் ஏதோ டீயும் பன்னும் தின்று கண்ணயர்கிறார்கள். இடையில் திடுக்கிட்டுக் கண்விழிக்கும்போதுதான் புரிகிறது பிள்ளை இறந்து கிடப்பது.
பதினைந்து ரூபாயுடன் முதல் பஸ்ஸில் வந்த கிழவி, பேரப்பிள்ளை போய்விட்டது என்று அறிந்து ஒருபாட்டம் அழுது தீர்த்தாள்.
சரி. இப்போது ஊர் திரும்பவேண்டுமே? கார் என்றால் இருநூற்றைம்பது ஆட்டோ என்றாலும் நூற்றைம்பது.
“அம்மா, நீங்க ரெண்டியரும் அழுது ரெகள பண்ணாதிய. புள்ளைய மடில போட்டுக்கிட்டு பஸ்ஸுலேய போயிருவம்” என்றான்.
துக்கத்தைத் தொண்டையில் அடைத்துக்கொண்டு மூன்றரை டிக்கெட் எடுத்தான். கண்ணம்மாவை சமாளிக்கும் கடமை கிழவிக்கு.
பஸ் நான்கைந்து ஊர்களைக் கடந்திருந்தது. கண்மூடி மயங்கிக் கிடந்தவள் சாமி வந்தவளைப்போல் திடீரென்று எழுந்தாள். கிழவி சுதாரித்துக்கொண்டு பிடித்து அழுத்தி உட்காரவைப்பதற்குள், “ஐயோ.. நான் பெத்த தங்கமே.. ” என்று அலறிக்கொண்டு மகனிடம் பாய்ந்தாள் கண்ணம்மா. ஓடிக்கொண்டிருக்கும் பஸ்சில் நிலைதடுமாறி விழுந்தாள்.
கம்பியில் குத்தி ரத்தம் வழிய மூவரும் இறக்கிவிடப்படுகிறார்கள். எல்லோரும் இரக்கப்பட்டாலும் உதவி செய்ய முன்வரவில்லை. மாரியப்பனுக்குத் துக்கத்தைவிட மனைவிமேல் கோபம் பெரிதாக வந்தது.
அந்த ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த டீக்கடைகளில் கிழவி துக்கத்தைச் சொல்லி அழுதாள்.

பிள்ளை இறந்த இரண்டாம் நாள், துக்கத்துடன் அவனது பொருட்களை வெறித்துப் பார்த்துகொண்டிருந்தாள் கண்ணம்மா. அவளிடம் ‘இப்படியே அழுதுகொண்டிருந்தாலும் செத்த பிள்ளை திரும்பி வரப்போவதில்லை, எல்லோருடன் நடவுக்குப் போனால் வேலை நினைப்பில் எல்லாம் மறந்து போகும்’ என்கிறாள் கிழவி. அந்த ‘டீக்கடை மவரசனுக்கு’ பணம் திருப்பித் தர வேண்டுமல்லவா?
தெருவில், ‘இன்று வேலை கிடைக்கவேண்டுமே’ என்ற பரபரப்புடன், ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருந்தார்கள் நடவு நடப்போகும் பெண்கள். அவளுடன் கண்ணம்மாவும் சேர்ந்து கொண்டாள்.
என்று முடிகிறது.
* * * * * * *
‘இயல்பில் ஆண் பெண் என்னும் ஏற்றத்தாழ்வெல்லாம் இல்லை; உடல் தோற்றத்திற்குத்தான் இந்த ஆண் பெண் அடையாளமெல்லாம்’ என்று சொல்லும் தமிழ்ச்செல்வி பெண்ணியம் குறித்த கோட்பாட்டுரீதியான வாசிப்புப் புரிதலெல்லாம் பெரிய அளவில் தான் கொண்டிருக்கவில்லை என்கிறார். இன்னல்களுக்காட்பட்ட பெண்ணொருத்தி இயல்பாகத் தனது வாழ்வியலைப் பதிவு செய்யும்போது அதுவே பெண்ணெழுத்திற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கத்தான் செய்யும் என்கிறார்
இவரது வலைப்பூவில் மற்ற படைப்புகளின் விவரங்களும் குறிப்புகளும் கிடைக்கின்றன.
