இலக்கிய சிந்தனை 561+ குவிகம் இலக்கியவாசல் 21

 

டிசம்பர் 17 . ஒரு முக்கியமான நன்னாள்.

நாற்பது வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலக்கிய சிந்தனையின் நிறுவனாரான பெருமதிப்புற்குரிய லக்ஷ்மணன் ஐயா அவர்களின் கட்டளைப்படி இலக்கிய சிந்தனை நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வும் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே நிகழ்வாக நடைபெற்றன .

இனியும்  இப்படியே தொடர்ந்து நடக்கட்டும் என்ற அவரது ஆணையை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கியுள்ளோம்!

அதன்படி, குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016  நிகழ்வு இலக்கிய சிந்தனையின் 561 வது மாதாந்திரக் கூட்டத்துடன் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 17-12-2016 அன்று நிகழ்வுற்றது.

இலக்கியசிந்தனையின் சார்பில் திரு லக்ஷ்மணனின்  உரையுடன் தொடங்கி திரு தேவக்கோட்டை வ. மூர்த்தி அவர்கள்  “உயிர்த்தேனும் மரப்பசுவும்” என்ற தலைப்பில் தி ஜ வின்     இரு நாவல்களைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார். அதன் காணொலித் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.        ( நன்றி: விஜயன்)

தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் டிசம்பர்  2016 நிகழ்வாக இலக்கிய வாசல் சுந்தரராஜனின் அறிமுக உரையைத் தொடர்ந்து “நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்”  என்னும் தலைப்பில் கவிஞரும், ஓவியரும், விமர்சகரும் ஆன திரு இந்திரன் தனது சுவையான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் நேரடித் தொகுப்பு இதோ !

ஒரே நிகழ்வில் இரு மனம்கவர் உரைகளுடன் கூடிய நிகழ்ச்சி    கிருபாநந்தனின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.

பொங்கட்டும் பொங்கல் —- — கோவை சங்கர்

img_8094 img_8093
பூமியெலாம் பொன்விளைய
ஆசிகூறும் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கட்டும் பொங்கல்

வீடுவாழ நாடுவாழ
சுற்றத்தார் சுகித்துவாழ
மகிழ்ச்சிவெள்ளம் பொங்கிடவே
பொங்கட்டும் பொங்கல்!

 

நிஜ மாயை

நிஜ மாயை – ( Augmented Reality) –

(குவிகத்தில நாம வைச்ச பேர் தான் !)

Screenshot of Alibaba video on the Buy+ virtual shopping experienceScreenshot of Alibaba video on the Buy+ virtual shopping experience

(Image copyright ALIBABA) 

சீனாவில் பிரபலமான அலிபாபா நிறுவனம் ஒரு   மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்திருக்கிறது. இதைப்  போட்டுக்கொண்டு பார்த்தால் மால்களில் – கடையில் இருக்கும் பொருட்கள் அப்படியே தத்ரூபமாக நம்  கண்களில் தெரியும் – விலை மற்றும் அவற்றின் குறிப்புகள் உட்பட.

அப்படியே உங்கள் கண்ணை அசைத்து எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.

இந்த மாயக் கண்ணாடியை விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு அட்டையை உங்கள் கைபேசியில் இணைத்துக் கொண்டால் அதன்  மூலம் பொருட்களைக்  கடையிலிருந்து நேரடியாக வாங்கலாம்.

நம்ம ப்ளிப்  கார்ட், அமேசான் போன்றவைகளை  இது ஓரம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போகிமேன் விளையாட்டும் இந்த நிஜமாயையை  வைத்து உருவாக்கப்பட்டதுதான்.

சபாஷ் சரியான போட்டி !

ஐயப்பன் திருப்புகழ் – சு.ரவி

Image result for ayyappan and murugan
இரவுபகல் பகலிரவு
ஐயப்பன் திருப்புகழ்
தனனதன  தனனதன தனதான  தானதன
தனனதன  தனனதன தனதான  தானதன
தனனதன  தனனதன தனதான  தானதன.            தனதான
  இரவுபகல்  பகலிரவு எனமாறி மாறிஇரு
பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை
புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற             உழல்வேனை
  இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்
அபயமென மரணபய மணுகாம லேநினது
சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை        தரவேணும்!
  அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை
அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை
அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு         மணிமார்பா!
 அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி
சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு
பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில்    உறைவோனே!
விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை
அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்
கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய      சிவபாலா!
 விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை
உலவிவர, ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்
நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ         அருள்வோனே!
அரசு,மரு தகில்,கதலி  கமுகால் பலாவளர
அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்
அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்;    ஜதிகூறும்
 அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி
தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென
எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர்         பெருமாளே!

 

சிற்றிதழ்கள் உலகம்

உலக அளவிலான சிற்றிதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள், பதிவதற்கான தளம் – ” சிற்றிதழ்கள் உலகம்” என்ற மின்னிதழ்.

கிருஷ்.ராமதாஸ் அவர்களின் முயற்சியால் இந்தப் பொங்கல் சமயத்தில் வெளிவந்திருக்கிறது! 

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ், துபாய் அருகில் உள்ள அல் அய்ன் நகரில் தஞ்சை திரு.வரதராசன் அவர்களால்  13.01.2017 அன்று வெளியிடப்பட்டது . முதல் பிரதியை  திரு.கருணாகரன் அவர்கள் பெற்றுக்கொள்ள  நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

Image may contain: 10 people, text

சென்னை புத்தகக்  கண்காட்சியிலும் இது வெளியிடப்பட்டது.

Image may contain: 5 people, people standing

வாழ்க! வளர்க! இவர்தம் தொண்டு !!

ராவேசு கவிதைகள்

ஆதவன் துயில் கொண்டான்

Image result for sun set

இனிய மாலையில் ஆதவன்
தன் கிரணங்களை மறைத்து
துயில் கொண்டான்
காரிருள் சூழ்ந்தது கண்டாய்
காலை விடியும் வரை
அவன்வரவை கண்மூடி
காத்திருப்போம்
கலங்காதிரு மனமே.

படும்துளி எழில்தரும்
மலர்தனில் தேன்வரும்
வண்டினம் அலைமோதும்
கதிரவன் கீழ்வானில்
காலை விழித்தெழும் .

உதித்தனன் கதிரவன்
செம்பிழம்பாய் கொதித்தனன்
தகித்தனன் வையம்காக்க
முரசுகொட்டி தட்டி எழுப்பினன்
தன்பணி செவ்வனே செய்தனன்
பூஉலகு விழித்தது கண்டு மகிழ்ந்தனன்
தன்பணி தொடர்ந்தனன்
காலை கதிரவன் நமக்கு மேலே
ஆம் நமக்கு மேலேதான்

 

ஏமாற்றம் தரும் வேளை

Image result for disappointment

ஏமாற்றம் தரும் வேளை
அன்பும் போலி
வாழ்வும் போலி
நினைவும் போலி
புன்னகையும் போலி
அதனால்
நியாயம் எங்கே
நேர்மை எங்கே
நிஜங்கள் எங்கே
வலை வீசி தேடினும்
புலப்படாது இங்கே .

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2017

ஜனவரி 6 முதல் 19 வரை சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரில் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் பபாசி வழங்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது.  நிறைய மக்கள் நிறைய புத்தகங்கள்   வாங்குகிறார்கள்.

இது கண்காட்சி அல்ல, கண் கொள்ளாக் காட்சி !

இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப்  பற்றி விவரமாக அடுத்த மாதம் பார்க்கலாம் !

இப்போதைக்குச்  சில புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

No automatic alt text available.

Image may contain: car, sky and outdoor

தமிழ் விதி – இலக்கணம்

Image result for tamil language history and culture

தமிழில் அனைவருக்கும் தகராறு  க் , ச் ,  ட் , த், ப்  போன்ற மெய் எழுத்துக்களை இரு வார்த்தைகளுக்கு நடுவே எப்பொழுது சேர்க்க  வேண்டும் , எப்போது  சேர்க்கக் கூடாது என்பது தான்.

( தகராறுக்கு  முதலில் எந்த ‘ர’ போடவேண்டும் என்று கேட்டதற்கு தகராறு எப்பவும் சிறியதா  ஆரம்பிச்சு  பிறகுதான் பெரியதா முடியும். அதனால்  முதலில் சின்ன ‘ர’ போடுங்க , அப்பறம் பெரிய ‘ற ‘ போடுங்க! என்றாராம்)

Image result for tamil language history in tamil

இந்த வல்லின மெய்யெழுத்துக்களைச்   சேர்ப்பதை  வல்லினம் மிகும் இடங்கள் என்றும், சேர்க்கக் கூடாத இடங்களை  வல்லினம் மிகா இடங்கள் என்றும் சொல்லுகிறோம்.

சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல்,  சேர்க்கக் கூடாத இடத்தில் சேர்த்தால் அர்த்தமே மாறுபடுவதுடன் ஓசை நயமும் கெட்டுவிடும்.

ஆகவே, வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெளிவாக அறிதல் வேண்டும்.

கீழே கண்ட விதிகளையும் உதாரணங்களையும் படித்தால் இந்தத் தகராறு நமக்கு வராது.

வல்லினம் மிகும் இடங்கள்

1. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளை அடுத்தும், எ என்னும் வினாவை அடுத்தும் வரும் வல்லினங்களாகிய க், ச், த், ப் மிகும்.

அ + பையன் = அப்பையன்
இ + செடி = இச்செடி
எ + பணி = எப்பணி

2. அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி,எப்படி என்னும் சுட்டு வினாச் சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.

அந்த + கோவில் = அந்தக்கோவில்
அங்கு + சென்றான் = அங்குச்சென்றான்
எங்கு + போனான் = எங்குப்போனான்

3. இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்.

நூலை + படி = நூலைப்படி
பாலை + குடி = பாலைக்குடி

4. நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

அவனுக்கு + கொடுத்தான் = அவனுக்குக்கொடுத்தான்
பணிக்கு + சென்றான் = பணிக்குச்சென்றான்
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும்.
தண்ணீர் + குடம் = தண்ணீர்க்குடம்
மரம் + பெட்டி = மரப்பெட்டி
பூட்டு + சாவி = பூட்டுச்சாவி
விழி + புனல் = விழிப்புனல்.

6. பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

பச்சை + பட்டு = பச்சைப்பட்டு
பச்சை + கிளி = பச்சைக்கிளி

7. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்.

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
மல்லிகை + பூ = மல்லிகைப்பூ.

8. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.

மலர் + கண் = மலர்க்கண்
தாமரை + கை = தாமரைக்கை.

9. ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும்.

தீ + சுடர் = தீச்சுடர்
பூ + கூடை = பூக்கூடை.

10. ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

அழியா + புகழ் = அழியாப்புகழ்
ஓடா + குதிரை = ஓடாக்குதிரை.

11. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்.

பத்து + பாட்டு = பத்துப்பாட்டு
எட்டு + தொகை = எட்டுத்தொகை.

12. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர், நெடில் தொடர்க் குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகும்.

ஆடு + பட்டி = ஆட்டுப்பட்டி
நாடு + பற்று = நாட்டுப்பற்று.

13. முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும்

பொது + தேர்வு = பொதுத்தேர்வு
திரு + குறள் = திருக்குறள்.

14. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

சால + பேசினான் = சாலப்பேசினான்
தவ + சிறிது = தவச்சிறிது.

15. ஆய், என, இனி, ஆக முதலிய இடைச்சொற்களின் பின் வல்லினம் மிகும்

என + கூறினான் = எனக்கூறினான்
இனி + காண்போம் = இனிக்காண்போம்.

வல்லினம் மிகா இடங்கள்.

1. அது, இது, அவை, எவை என்னும் சுட்டுச் சொற்களின் பின்னும், எது, எவை என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + பறந்தது = அது பறந்தது.
அவை + பறந்தன = அவை பறந்தன.
எது + தங்கம் = எது தங்கம்
எவை + சென்றன = எவை சென்றன.

2. ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துக்களின் பின் வல்லினம் மிகாது
அவனா + சென்றான் = அவனா சென்றான்
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.

3. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது,

மலர் + பூத்தது = மலர் பூத்தது
வண்டு + பறந்தது = வண்டு பறந்தது.

4. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

அத்தனை + படங்கள் = அத்தனை படங்கள்
இத்தனை + பறவைகள் = இத்தனை பறவைகள்.
எத்தனை + காக்கைகள் = எத்தனை காக்கைகள்.

5. வினைத்தொகையில். வல்லினம் மிகாது.

ஊறு + காய் = ஊறுகாய்
சூடு + சோறு = சுடுசோறு.

6. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.

கபிலபரணர்
இரவுபகல்.

7. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.

தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
கடல் + கடந்தார் = கடல் கடந்தார்.

8. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லினம் மிகாது.

பூவொடு + சேர்ந்த = பூவொடுசேர்ந்த
கபிலரோடு + பரணர் = கபிலரோடுபரணர்.

9. எட்டு, பத்து தவிரப் பிற எண்களுக்குப் பின் வல்லினம் மிகாது.

ஒன்று + கொடு = ஒன்றுகொடு
இரண்டு + பேர் = இரண்டுபேர்.

10. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது.

வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
வாழிய + பல்லாண்டு = வாழிய பல்லாண்டு.

11. இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.

சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.

12. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிறபெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது.

கற்ற + சிறுவன் = கற்ற சிறுவன்
சிறிய + பெண் = சிறிய பெண்.

தமிழ் கண்ட இலக்கண விதிகளைக் கொண்டு சந்திப் பிழைகளை நாவி மென்பொருள் திருத்துகிறது.

விதிகள் மிகுமா? உதாரணம்
நிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும் மொழியில் கசதப வந்தால் ஆம்  வினாத்தாள்
ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும். ஆம் பூப் பறித்தான், கைக் குழந்தை
அகர, இகர ஈற்று வினையெச்சம் முன் ஆம் வரச் சொன்னான், ஓடிப் போனான்
நிலைமொழியில் உயர்திணை இல்லை திரு கண்ணன், சிவ பெருமான்
இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஆம் தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள்
பண்புத் தொகை ஆம் வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்
வினைத் தொகை இல்லை காய்கதிர்,பழமுதிர்சோலை
உம்மைத் தொகை இல்லை கபில பரணர்
உவமைத் தொகை ஆம் முத்துப்பல், கமலச் செங்கண்
உவமை விரி இல்லை முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல்
உருபும், பயனும் உடன் தொக்க தொகை ஆம் தமிழ்ப் பேச்சு
ஊர்ப் பெயர்களின் அடுத்து ஆம் திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
எழுவாய் தொடர் இல்லை சாத்தன் வந்தான்
அடுக்குத் தொடர் இல்லை பாம்பு பாம்பு
விளித் தொடர் இல்லை சாத்தவா
தொரிநிலை வினைமுற்றுத் தொடர் இல்லை வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்றுத்தொடர் இல்லை பொன்னனிவன்
பெயரெச்சம் இல்லை வந்த பையன், பறந்த புறா
எதிர்மறைப் பெயரெச்சத்தில் இல்லை வாடாத பூ, ஓடாத குதிரை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆம் அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை, பாடாத் தேனீ
நெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சம் இல்லை வந்து போனான்
வன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம் ஆம் போட்டுக் கொடுத்தார்
இடைச்சொற்றொடர் இல்லை மற்றொன்று
உரிச்சொற்றொடர் இல்லை நனிபேதை
இரட்டைக் கிளவி இல்லை தடதட
எட்டாம் வேற்றுமை இல்லை தலைவா கொடும், நாடே தாழாதே
ஏழாம் வேற்றுமை விரி இல்லை தரையில் படுத்தான்
ஏழாம் வேற்றுமைத் தொகை இல்லை தரை படுத்தான்
7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்ப்பாம்பு
ஆறாம் வேற்றுமை விரி இல்லை கண்ணனது கை
ஆறாம் வேற்றுமைத் தொகை ஆம் புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில்
6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஐந்தாம் வேற்றுமை விரி இல்லை மதுரையின் வடக்கே
ஐந்தாம் வேற்றுமைத் தொகை இல்லை தமிழ் பேசு, ஊர் நீங்கினான்
5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வாய்ப்பாட்டு, கனிச்சாறு
நான்காம் வேற்றுமை விரியின் பின் ஆம் கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை
நான்காம் வேற்றுமைத் தொகை ஆம் வேலிக் கம்பி,பொன்னி கணவன்
4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு
மூன்றாம் வேற்றுமை விரியின் பின் இல்லை தந்தையோடு சென்றான்
மூன்றாம் வேற்றுமைத் தொகை இல்லை கை தட்டினான்
3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் வெள்ளித் தட்டு
இரண்டாம் வேற்றுமை விரியின் பின் ஆம் பூனையைப் பார்த்தான்
இரண்டாம் வேற்றுமைத் தொகை இல்லை நீர் குடித்தான்
2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆம் நீர்க்குடம்
முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய் வேற்றுமை இல்லை கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய் காப்பாற்றுவாள்
வன்தொடர்க் குற்றுகரம் ஆம் ட்டு,ற்று…
திரு, நடு, முழு, பொது ஆம் திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி
நிலை மொழியில் மகரம் கெட்டால் ஆம் இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு.

ஆதாரம்:
தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகள்
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பு
தமிழ் இணைய பல்கலைக் கழக இலக்கணப் பாடங்கள்

http://tech.neechalkaran.com/p/tamil-grammar.html

http://dev.neechalkaran.com/p/naavi.html#.V0Hi15H5ihd

தலையங்கம்

 

Image result for அம்மா சின்னம்மா

தமிழகத்தில் அம்மா போய் சின்னம்மா வந்தாகிவிட்டது.

முகமாற்றம் மட்டுமல்ல !

அ தி மு க வின் தலைமைப் பதவி சின்னம்மாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் தந்தாகிவிட்டது.

ஓ பன்னீர்செல்வத்தை எப்போது எப்படி போகச் சொல்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிச்சன் கேபினெட்டை மக்கள் கேபினெட்டாக மாற்ற நினைக்கிறார்கள்.

பின்னணி பாடியவர்  திரைக்கு முன்னால்  வர விரும்புவது புரிகிறது.

அது வரும்வரைக்கும் தமிழகத்தின் சாதாரணக் குடிமகனுக்கு இது ஏட்டுச்  சுரைக்காய்தான்,  அகடமிக் இன்டிரஸ்ட் தான்.

எப்போது சின்னம்மா அரசுக் கட்டிலில் அமர்கிறார்களோ அப்போதிலிருந்து அவரது  ஒவ்வொரு நடவடிக்கையும் தராசுத் தட்டில் வைக்கப்படும்.

அவரது நேற்றைய மற்றும் இன்றைய செயல்பாடுகளை முழுச் சுதந்திரத்தோடு விமரிசிப்பது மட்டுமல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசிக்க நேரக்கூடும்.

எதிர்க்கட்சிகளும் வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்.

தமிழகத்தில் அப்போது உண்மையான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

அப்போது சொல்லுவோமா ‘பலே  வெள்ளையம்மா !’

1எடிட்

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.   

dr1

அப்பாவின் (நினைவில்) கடைசிப்  பக்கம்!

விடியற்காலை ஐந்து மணிக்கு வந்த போன் கால், அப்பா தூக்கத்திலேயே எங்களை விட்டுப் பிரிந்ததைச் சொல்லியது.

உழைப்பும், நேர்மையும், தளரா மனமும் கொண்டு, சந்தித்த அத்தனை சோகங்களையும், இடர்களையும் கடந்து, தன் குழந்தைகளுக்காகவே வாழ்ந்த, அப்பா, மறைந்தார்.

மிகக் குறைந்த வருமானம் – பெரிய குடும்பம் – வாழ்க்கையில் எதிர்நீச்சல் மிகக் கடுமையானதாக இருந்தது. குழந்தைகள் படிப்பு மட்டுமே முக்கியம் எனத் தன் உடலை வருத்தி அவர் எதிர்கொண்ட கஷ்டங்கள் கண்ணில் நீர் நிரப்புவன.

குழந்தைகள் பெரியவர்களாகி நல்ல நிலைக்கு வந்த பிறகு கூட, ‘தன் கையே தனக்குதவி’ என்று, அறுபதையும் தாண்டி, தன் வேலையில் தொடர்ந்தார். தன் அன்றாட செலவுகளுக்குக் கூடப்  பிறர் கையை எதிர்பார்க்காத மன உறுதி!  ஆற்றில் போட்டாலும் அளந்து போடும் பக்குவம்!  தனக்கு வந்த எந்தப் பொருளையும் – தங்க மோதிரங்கள், வேட்டிகள், சட்டைகள் – அவர் உபயோகப்படுத்தியதாக எனக்கு நினைவில் இல்லை.

நான்கைந்து சட்டைகள், வேட்டிகள், காலுக்கு செருப்பு, ஒரு கைக் கடிகாரம் இவையே அவரது தேவைகளாக இருந்து வந்தன. தன் தேவைகளை மிகவும் சுருக்கிக் கொண்டு, சில அத்தியாவசியங்களுடன், சுறுசுறுப்பாகச் சுற்றி வந்தவர் அவர்.

அவரது போராட்ட வாழ்க்கையே ஒரு பாடம் – அதிலிருந்து முக்கியமான இரண்டு பக்கங்களை இங்கு சொல்வது சரியாக இருக்கும்!

வாழ்க்கையின் ஆதாரம் ‘கர்ம யோக’மே – BE FAITHFUL TO YOUR DAILY ROUTINE – என்ன வந்தாலும், எது நடந்தாலும், தன் தினசரி கடமைகளை – ஆபீஸ் போகும்போதும் சரி, பின்னர் அதை நிறுத்தியபோதும் சரி – தவறாமல் செய்து விடுவார். சாத்திரம், சம்பிரதாயம், நேரம், காலம், மகிழ்ச்சி, வருத்தம் எதுவும் அவரது செயல்பாடுகளை மாற்றிவிட முடியாது. உழைப்பு ஒன்றே வாழ்வின் ஆதாரம் என்பதைத் தானே ஓர் உதாரணமாய் இருந்து உணர்த்தியவர் என் அப்பா!.  நேரத்திற்கு, அளவான உணவு – ஒரு வேளை சாப்பாடு, ஒருவேளை டிபன், இடையே இரண்டு முறை காபி அவ்வளவுதான். அமிர்தமே கிடைத்தாலும் இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடமாட்டார் – அவ்வளவு கட்டுப்பாடு!

தேவைக்கு அதிகமான எதையும் – பொருளோ, பணமோ – உபயோகிக்க மாட்டார். ஆரம்பக்  காலத்தில் இல்லாமை, பின்னர் வாழ்க்கையில் எல்லாம் இருந்தது – அப்போதும், அதே அளவான, பேராசைப் படாத மனம்! தன் பிள்ளைகளே ஆனாலும், எதையும் வேண்டும் என்று கேட்காத குணம். பீரோ நிறைய அவருக்குக் கொடுக்கப்பட்ட துணிகள் – புதுமணம் மாறாமல் – அடுக்கி வைக்கப் பட்டிருந்தன! உழைத்து, சம்பாதித்துச் சேர்த்த பணம் முழுவதும், குழந்தைகள்  பேரிலேயே சேமிப்புப் பத்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன! தனக்கென்று எதையுமே எடுத்துக்கொள்ளாமல், அனைத்தையும் தன் பாசம், ஆசிகளுடன் சேர்த்து எங்களுக்கு வைத்துவிட்டுத் தான் மட்டும் தூக்கத்திலேயே எங்களைப் பிரிந்துவிட்டார்.

எங்களுக்குச் சிறந்த கல்வியும், நிறைந்த அன்பும், பாசமும் கொடுத்து வளர்த்து, தன்னையே தன் உழைப்பாலும், உண்மையாலும் உயர்த்திக் கொண்டு, வாழ்ந்து மறைந்த என் தந்தை ஓர் உன்னதமான மனிதர்!

மீண்டும் பிறந்தால், இவரே என் தந்தையாய் இருக்கவேண்டும் – படைத்தவன் முன் நான் வைக்கும் வேண்டுகோள் இது மட்டுமே!