தலையங்கம்

1எடிட்

 

Image result for தமிழக அரசியல்

Image result for தமிழக அரசியல்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்து மிதமான தட்ப வெட்ப  நிலை  உருவாகி வருகிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்டது. இந்த வருடம் 98 சதவீதம் மழை இருக்கும் என்று வானிலை ஜோதிடர்கள்  சொல்லுகிறார்கள்! பலிக்குமா தெரியவில்லை !

அரசியலில்?

தினகரன் சிறையிலிருந்து வெளியே வந்து தனது விளையாட்டைத் தொடங்கிவிட்டார். சதுரங்க வேட்டை ஆரம்பமாகிவிட்டது. அரசியல் சேவகர்கள் அதற்குத் தகுந்தபடி இங்கும் அங்கும் நட(ன)மாட ஆரம்பித்து விட்டார்கள். ஜெயலலிதாவின் கட்டைவிரலுக்குக் கீழே இருந்து  பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்த  எம் எல் ஏக்கள், மந்திரிகள் இன்று இபிஸ், ஓபிஸ், தினகரன் என்று மூன்று சக்கர  சர்க்கஸ் விளையாட்டில் ‘பார்’ ஆடிக்கொண்டிருக்கிறார்கள். தான் கீழே விழாமல் இருக்க எந்தக் கையை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளத்  தயாராய் இருக்கிறார்கள்.   ‘நான் ஈ’ என்று  சொல்வது  போல  ‘எங்கே சர்க்கரை?’ என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலினோ, அண்ணன் எப்போ விழுவான் திண்ணை   எப்போ காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்களுக்கோ குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் டச் அப் வேலை செய்யவே நேரம் போதவில்லை

பி ஜே பியோ ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த அக்கன்னா (ஃ) –  அதிமுக என்ன செய்யப் போகுதோ என்று நூல் விட்டுக் கொண்டிருக்கிறது.

பா மு காவுக்கும் , விஜயகாந்த் கட்சிக்கும் பகல் கனவு காணவே நேரம் போதவில்லை

நாட்டு நடப்பு, நிர்வாகம் இவற்றைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

மக்களும்  ஜல்லிக்கட்டை விட்டுவிட்டு ஜி‌ டி பி , ஜி‌ எஸ் டி, மாட்டிறைச்சி, டாஸ்மார்க் , நீட் தேர்வு என்று பிசியாகிவிட்டார்கள்.

படிப்பாளிகள் இணைய தளங்களில் மீம்ஸ் போட்டுவிட்டு அப்பீட் ஆகிவிடுகிறார்கள் !

ரஜினியும் தன் பங்குக்கு ‘ம்மேய்ய்ய்’  … என்று வாய்ஸ் கொடுத்துக் கொண்டு 2.0க்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.

நாமும் தலையங்கம்  எழுதி விட்டு  சோம்பலை முறித்துக்  கொள்வோம்!

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு தான் !!

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

இதோ குப்தர் வருகிறார் ! பராக்! பராக் ! 

Image result

 

Indian-style Kushan embossed and chased silver dish showing a yaksha drinking, 3rd or 4th century ce, Gupta period, found near Tank, northwestern Pakistan; in the British Museum. Diameter 25.15 cm.

பகலவன் உலகை ஒளியூட்டுமுன்…
அது முதலில் அடிவானத்திலிருந்து சிவப்புக் கம்பளம் வீசுகிறது.
இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் ஆட்சியில் 300 ஆண்டுகள் சூரியனைப்போல் ஒளிவீசியது.
சந்திரகுப்தர்-1, சமுத்திரகுப்தர், சந்திரகுப்தர்-2 என்று மாமன்னர்கள் நாட்டை பொற்காலமாக்கினர்.
ஆனால் அதற்கு அடித்தளமிட்டு சிவப்புக் கம்பளம் வீசியது யாரென்று சற்று பார்ப்போம்.

முதலில் ஸ்ரீகுப்தன்!

குஷான பேரரசில் பெரு நிலக்கிழாராக இருந்த ஸ்ரீகுப்தன் தற்கால பிகார் மாநிலமான மகதத்தில் கி பி 240-இல் குப்தப் பேரரசை நிறுவி, கி பி 280 முடிய ஆண்டான்.

ஸ்ரீகுப்தன்… சரித்திரப்பாடத்தில் ஆர்வம் கொண்டவன் போலும்!
முன்னாளில் பிம்பிசாரன் செய்தது போலவே ..
லிச்சாவி நாட்டு இளவரசியை மணந்து மகதத்தை சீதனமாகப் பெற்று மகத நாட்டை விரிவு படுத்தினான்.

வைணவ மதத்தைச் சேர்ந்திருந்தாலும் – சீனாவிலிருந்து வந்த புத்த துறவிகளுக்கு நாளந்தா அருகிலுள்ள மிருகஷிகவன என்ற இடத்தில் ஒரு கோவிலைக் கட்டிக் கொடுத்தான்.

பின்னாள் வந்த இரண்டாம் சந்திரகுப்தனின் மகள் பிரபாவதி குப்தா ஸ்ரீகுப்தனை ‘மகாராஜா ஸ்ரீகுப்தன்” என்றும் குப்த சாம்ராஜியத்தை நிறுவினவர் (ஆதி ராஜா) என்றும் ‘புனே கல்வெட்டுகளில்’
குறித்திருக்கிறாள்.

ஸ்ரீகுப்தரின் மகன் கடோற்கஜன் குப்த நாட்டை கி பி 280 முதல் 319 முடிய ஆண்டான்.

(கடோற்கஜ குப்தன்)

இவர்களது தலைநகரம் – பாடலிபுத்திரம்.
அது … பிம்பிசாரன் காலத்திலிருந்து மௌரியர்கள் காலம் கடந்து பல சாம்ராஜ்யங்களின் மாபெரும் தலைநகரம்.

ருத்ரதாமன் தொடங்கிய சம்ஸ்கிருத மொழி குப்தர்களின் ஆட்சி மொழி ஆயிற்று.

கடோற்கஜ குப்தனின் மகன் முதலாம் சந்திர குப்தன்…
மகாராஜாதிராஜா என்று பட்டம் சூட்டப்பட்டவன்.
மனைவி – குமாரதேவி.
அவள்.. லிச்சாவி நாட்டு இளவரசி.

மனைவி அமைவதெல்லாம்…
இறைவன் கொடுத்த வரம்…
அது சில மகாராஜாக்களை மகாராஜாதிராஜாவாக ஆக்குகிறது!!

குப்தர் பரம்பரை அப்போது தான் பிறந்திருந்தது.
ஆனால் லிச்சாவி பரம்பரை பல நூற்றாண்டுகளாக புகழ் பெற்று விளங்கியது.

மணாளன் மன்னாதி மன்னனாக இருக்கும் போது …
மனைவியர் பெரும்பாலும் ‘மஹாராணி’ என்று மட்டுமே பெயர் எடுப்பர்.
அதில் வெகு சில ராணிகளே அரசியலிலும் பெயர் பெற்றவர்கள்.

குமார தேவி இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவள்.
பெரும் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டவள்!

நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் அரசி – குமாரதேவி!
உலக சரித்திரத்திலே இது முதல் முறை!!

முதலாம் சந்திர குப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவர் மகன் சமுத்திர குப்தர் தன்னை பெருமையுடன் ‘லிச்சாவி தகித்ரா’ என்று அழைத்துக் கொண்டு – தனது தாய் வழியைப் பெருமைப் படுத்துகிறார்.
‘குப்தன் மகன்’ என்று கூறாமல் ‘லிச்சாவி மகளின் மகன்’ என்று தன்னைக் கூறி மகிழ்கிறான்.

இப்படியாக… முதலாம் சந்திரகுப்தன் குப்தப்பேரரசை துவக்கிவைத்தான்.

இங்கு ஒரு கதை விரிகிறது.

சந்திரகுப்தனுக்கு இரண்டு மகன்கள்.
பெரியவன் கச்சா!
சிறியவனின் பிற்காலப் பெயர் சமுத்திரகுப்தன்!
சமுத்திரகுப்தன் மாவீரன்.
இருபத்தைந்து வயது கொண்ட வாலிபன்.
உடல் வலி கொண்ட வாட்டசாட்டமான பலசாலி.
சந்திரகுப்தன் அடைந்த போர் வெற்றிகளுக்கு சமுத்திரகுப்தனின் வீரமே காரணமாக இருந்தது.
அவன் உடலில் போர்க்களத்தில் பெற்ற தழும்புகள் நூற்றுக்கும் மேலானவை.
(பொன்னியின் செல்வர் ரசிகர்களே! இவன் அண்ணன் பழுவேட்டரையின் அண்ணன்!!)
சந்திரகுப்தன் சமுத்திரகுப்தனைப் பெரிதும் விரும்பினான்.

சந்திரகுப்தன் வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்…
தனக்குப் பின் யார் அரசனாவது என்று முடிவு செய்யும் நேரம்..

அரசவையைக் கூட்டினான்.
மந்திரிகள் குழுமியிருந்தனர்.
மன்னரின் ஆலோசகர்கள், தளபதிகள் தங்கள் இருக்கையில் இருந்ததனர்.
இளவரசர்கள் மன்னன் அருகே தங்கள் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

சந்திரகுப்தன் மெல்ல எழுந்தான்.
‘அனைவருக்கும் வணக்கம்!
இத்துணை நாள் என்னுடன் பயணித்து இந்த குப்தராஜ்யத்தை உருவாகிய உங்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த குப்த ராஜ்ஜியம் – மேலும் பல நாடுகளை வென்று – மாபெரும் சாம்ராஜ்யமாக வர வேண்டும்.
பின்னால் வரும் குப்த மன்னர்கள் கலை, கல்வி, இலக்கியம், அறிவியல் என்று பல துறைகளிலும் இது வரை நாம் காணாத சாதனை படைக்க வேண்டும்.

மௌரியர்கள் ஆட்சியை விட சிறப்பாக நமது ராஜ்ஜியம் இருக்கவேண்டும்.
அவர்கள் மக்களுக்கு நிகழ்த்திய கொடுமைகளை குப்தர்கள் நிகழ்த்தகூடாது.
நாட்டில் அமைதியும் ஒழுக்கமும் என்றும் நிலவ வேண்டும்.

இது இந்த பார்த்திபனின் கனவு!
இதை நிறைவேற்றும் பெரும் பொறுப்பு அடுத்து வரும் மன்னர் கரங்களில் இருக்கிறது.
நான் மன்னன் பதவியிலிருந்து விலகும் நாள் வந்து விட்டது.
எனக்குப்பின் குப்த மன்னனாக நான் அறிவிப்பது….”

இங்கு ஒரு மௌனம் …

அனைவரது இதயமும் அந்த மௌனத்தில் நின்று விட்டது…

‘சமுத்திர குப்தன்’- என்று கூறினான்.

சபையில் அனைவரும் ‘ஆஹா’ என்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர்.

மூத்தவன் கச்சாவின் முகம் வெகு பயங்கரமாக மாறியது.
இதை அவன் எதிர்பார்த்திருக்கிறான் என்று தோன்றியது.
அரசவையில் தன் ஆட்களை அவன் குவித்திருந்தான்.
‘தந்தையே.. மூத்தோன் இருக்க இளையோன் அரசாள்வது என்பது நடக்காது. இந்த அரியாசனம் எனது”
அவனது ஆட்கள் மன்னரை அரியணையிலிருந்து அப்புறப்படுத்தினர்.
கச்சா அரியணையில் அமர்ந்தான்.
‘இன்று முதல் நானே குப்த மன்னன்’ என்று பிரகடனம் செய்தான்.
அவையோர் திக்பிரமையில் உறைந்து நின்றனர்.
கச்சாவின் வீரர்கள் சமுத்திரகுப்தனை நெருங்கு முன் அவன் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டான்.
கச்சாவின் வீரர்கள் சமுத்திரகுப்தனைத் தேடிக்கொண்டிருந்தனர்.
கச்சாவின் சட்டவிரோதமான அரசு தொடர்ந்தது.
கச்சா தன் பெயரில் தங்க நாணயங்கள் வெளியிட்டான்.

மாவீரன் சமுத்திரகுப்தன் விரைவில் படை திரட்டி- கச்சாவை வென்று – குப்த ராஜ்யத்திற்கு மன்னனாக முடி சூட்டிக்கொண்டான்.

இந்தியாவின் பொற்காலம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

இனி நடப்பது விரைவில் காணுவோம்…

 

 

எமபுரிப்பட்டணம் -(எஸ் எஸ் )

 

IMG_6692

சூரியதேவனுக்குத் தன் பராக்கிரமத்தைப்பற்றி , தன் அழகைப்பற்றி,  தனக்குத்  தேவ உலகில் கொடுக்கப்படும் மரியாதையைப்பற்றி எப்போதும் ஒருவித கர்வம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.  தன்னைச் சுற்றிவரும் கிரகங்கள், தன்னைச் சார்ந்துவரும் மற்ற வானுலக பூலோக அமைப்புகள், தன்னிடமிருந்து வெளிச்சம்பெறும்  கிரகங்கள் என்று எல்லாமே தன்னுள் அடக்கம் என்ற எண்ணம் சூரியதேவனை எப்போதும் ஓர் உயர்ந்த பீடத்திலேயே வைத்திருக்கும்.

இன்று சூரியன், விஷ்வகர்மாவின் மகள் ஸந்த்யாவைப் பார்த்து மயங்கியது உண்மைதான்.  அந்த அழகுப் பதுமையுடன் சற்றுமுன் கலந்து உறவாடியதைப் பற்றி எண்ணும் போதெல்லாம்    அவன் நெஞ்சிலும் உடலிலும் இன்ப  அலைகள் பெருகிப் பிரவாகம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதும் அவனுக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் ஸந்த்யாவிற்காகத் தரையில் இறங்கியதால் தன்னை இந்தத் தேவதச்சர் எப்படிக் குறைபாடு உள்ளவன் என்று கூறமுடியும் ? ‘என்னிடம்  குறைபாடு இருக்கிறது என்ற எண்ணமே தவறல்லவா? ‘ என்று சூரியதேவன் ஆணித்தரமாக நம்பியதின் விளைவாக உலகங்களைப் படைக்கும் விஷ்வகர்மாவைச்  சுட்டெரிக்கும் கண்களால் நோக்கினான்.

விஷ்வகர்மாவுக்கு சூரியதேவனின் கோபக்கனல்  புன்னகையையே வரவழைத்தது. எந்த ஆண்பிள்ளைக்கும்  கையும் களவுமாகப் பிடிபடும்பொழுது அவனுக்கு வரும் கோபத்தின் அளவிற்கு அர்த்தம் இல்லை என்பது அவருக்குத் தெரியாதா என்ன? அதுவும் பெண்ணின் தந்தையிடமே பிடிபட்டுவிட்டோமே என்ற ஆத்திரமும் அவனிடம் சேர்ந்திருக்கிறது.   அவை எல்லாவற்றையும்விட ‘நான் அவனைக் குறைபாடு  உள்ளவன் என்று சொன்னது அவனை அதிகம் பாதித்திருக்கிறது’ என்பதை உணர்ந்த விஷ்வகர்மா அவனைச் சமாதானம் செய்யப்புறப்பட்டார்.

‘சூரிய தேவனே ! நீ தான் என் மகள் ஸந்த்யாவிற்குத் தகுந்த கணவன் என்பதை நான் அவள் பிறந்த  உடனேயே தீர்மானம் செய்துவிட்டேன். நீயே அவளைத்  தேடிவரும் காலம் வரும் என்பதை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவளைப் பார்த்ததும் நீ நேரே என்னிடம் வருவாய், நானும் உன் கவுரவத்திற்கு ஏற்றபடி மிகச்  சிறப்பாக உங்கள் திருமணத்தை முடிக்கவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். பார்த்ததும்   காதல், அதுவும் உடனே  காந்தர்வத் திருமணத்தில்   முடிவடைந்துவிட்டது என்றால்    இதற்கு மேல் நான் என்ன சொல்ல? இருப்பினும் ஸந்த்யாவின் தேக ஸௌந்தர்யத்தில்  ஒரு மந்திர முடிச்சு இருக்கிறது.  அதைச் சரிசெய்யும் காலமும் வந்து விட்டது. ” என்று விஷ்வகர்மா தனது இரண்டாவது அஸ்திரத்தையும் வீசினார் சூரியதேவன் மீது.

விஷ்வகர்மாவின் இந்த இரண்டாவது கணையும் சூரியனைப் பாதித்தது. அவன் கண்களில் சஞ்சலத்தின் ரேகை படிய ஆரம்பித்தது. அதைக் கண்ணுற்ற விஷ்வகர்மா ‘சூரிய தேவா! கலங்க வேண்டாம்! நாம் அரண்மனைக்குச் சென்று இதுபற்றி முடிவெடுக்கலாம்!   அந்தத் தங்கப் பொய்கையில் இருவரும் முழுகி விட்டு நம் அரண்மனைக்கு வாருங்கள். உங்களை வரவேற்க ஏற்பாடுகள் செய்ய நான் முன்னே செல்கிறேன். உங்கள் இருவருக்கும் என் ஆசிகள்! ” என்று கூறிவிட்டு முன்னே நடந்தார் விஷ்வகர்மா !

IMG_1106

தந்தை நகர்ந்ததும் மறைவிடத்திலிருந்து ஸந்த்யா வெளியே  வந்தாள். தந்தையின் வார்த்தைகள்  அவளுக்கு அமிர்தம்போல் இனித்தன. சூரியதேவனின் கால்களில்  விழுந்தாள். சூரியனும் அவளை அப்படியே வாரிஎடுத்து அணைத்துக் கொண்டான். இருவருக்கும் இடையே வாய்ச்   சொற்கள் தேவையில்லாமல் இருந்தன. அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டுத்  தங்கப் பொய்கையை  நோக்கி நடந்தான். அவன் முதலில் தண்ணீரில் இறங்கிப் பிறகு மெதுவாக ஸந்த்யாவிற்கும் கைலாகு கொடுத்துத் தண்ணீரில்  இறக்கினான். இருவரும் தண்ணீரில் ஒரே சமயம் மூழ்கினார்கள். சூரியன் முதலில் நீரிலிருந்து வெளியே வந்தான். முதல் நாளே அவனை மயக்கிய ஸந்த்யாவின் பொன்னிற முதுகு தண்ணீருக்குள்ளிருந்து மெதுவாக வரத் தொடங்கியது.  

அதன் அழகைப் பருகியவண்ணம் இருந்த சூரியன் கண்களில் ஏதோ ஒன்று புதியதாகத் தென்பட்டது. ‘ அது என்ன அவள் முதுகில் சிவப்பாக .. ஒரு திட்டு போல.. முதல் நாள்  ரதத்திலிருந்து பார்த்த போதும்  ஏன்  இன்றைக்குப் பார்த்த போதும் , ஏன் அதற்கும் மேலாகச் சற்று முன் இன்ப உறவில் ஈடுபட்டிருந்த சமயத்திலும் அது தென்படவில்லையே! ஒருவேளை ஆசை மயக்கத்தில் கவனிக்கத் தவறிவிட்டேனா? நிச்சயமாக இருக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் அவன் கண்களின் கூர்மையைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் என்றைக்கும் இருந்ததில்லை.  இருக்கப்  போவதும் இல்லை !

அப்படியானால் அது என்ன? பொன்னில் செம்பு கலந்தாற்போல அது என்ன சிறிய திட்டு?

மெல்ல எழுந்தாள் ஸந்த்யா. அவள் முகத்திலும்  பொட்டு வைத்தது போல அதே மாதிரி சிறிய சிவந்தத் திட்டு ! அது அவள் அழகுக்கு அழகூட்டுவதாக  இருந்தாலும்  அவன்  கண்களை ஏனோ அது உறுத்தியது.  “ஸந்த்யா! இது என்ன சிவந்த திட்டு முதுகிலும் முகத்திலும் ?” என்று அவன் கேட்டதும் அவள் திடுக்கிட்டு  ” இருங்கள் இன்னும் இரு முறை முழுக   வேண்டும்” என்று சொல்லி அவன் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இரண்டாவது முறை நீரில் முழுகி மெதுவாக எழுந்தாள். ‘என்ன ஆச்சரியம்! முதுகில் இருந்த அந்தச் சிவப்புத் திவலை மறைந்து விட்டதே! முகத்திலும் அதைக் காணவில்லையே? மூன்றாவது முறை அவள் நீரில் மூழ்கினாள். மூழ்கியவள் மூழ்கியவள்தான் . எழுந்திருக்கவே இல்லை ! அப்படியே மறைந்து விட்டாள்.

சூரிய தேவன்  திடுக்கிட்டான். அதுமட்டுமல்லாமல் அந்தப் பொய்கையின் நீரும் மறைந்து விட்டது. சூரியனின் உடம்பிலிருந்த நீர்த் திவலைகளும் மறைந்து விட்டன.  அவன் உடைகளும் மாறியிருந்தன. அவன் கண்ணெதிரே பொய்கை இருந்த இடத்தில் ஒரு சிறு விமானமும் காத்துக்கொண்டிருந்தது.

விஷ்வகர்மாவின் சித்து விளையாட்டு ஆரம்பித்துவிட்டதா?

(முதல் பகுதி தொடரும் – இரண்டாவது பகுதி ஆரம்பம்)

 

 

இரண்டாம் பகுதி ……………………….

Related image

 

” அண்ணா ! இது என்ன சொர்க்கபுரியா அல்லது நரகபுரியா? “

ஏன் இப்படிக் கேட்கிறாய்  எமி? நீ சென்றால் நரகபுரியும் சொர்க்கமாக மாறிவிடும் என்பது உண்மை தான்! உன் கரம் பட்ட இடமெல்லாம் புண்ணிய பூமியாக மாறிவிடும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த யமுனை   நதி அல்லவா  நீ? அப்படி  ஒரு வரத்தையல்லவா நம் தந்தை வேண்டிப்பெற்றிருக்கிறார்!”

” ஆனால் அண்ணா ! நான் நடந்து வரும்போது  சில இடங்களில்    நரகத்தின் காட்சிகளைக் கண்டேன். கொதிக்கும் எண்ணையின் வாசத்தை உணர்ந்தேன். சாட்டையின் சவுக்கடிகள் சத்தமும் கேட்டது. அவை உண்மையா அல்லது என் பிரமையா?”

” ஆகா! உன் கண்களிலிருந்து எதுவும் தப்ப முடியாது.  நீ பார்த்தது உண்மைதான். அது சொர்க்கத்தில் இருக்கும் நரகத்தின் ஜன்னல். நிழல். மாயை. சில இடங்களில் மட்டும் இது தெரியும்.  சொர்க்கபுரி வாசிகளுக்கு அவ்வப்போது நரகத்தின் காட்சி தெரியவேண்டும். உணவை உண்ணும்போது நம்மை அறியாமல் கார மிளகாயைக் கடிக்கவேண்டும். மலர்ப்படுக்கையில் துயிலும்போது சிறு முள் முதுகைப் பதம் பார்க்க வேண்டும். பாடல் கேட்கும்போது சிறிது அபசுரம் தட்ட வேண்டும். அப்போதுதான் நாம் பெற்றிருக்கும் பொருளின் மதிப்பு நமக்குப் புரியும்.  அதற்காகத்தான் இந்த நிழற்காட்சிகளைப் படைத்திருக்கிறோம் . அதைப்போல நரகாபுரி மக்களுக்கும் சொர்க்கத்தின் நிழற்படம் தெரியும் “

” நன்றாகப் பேசுகிறாய் அண்ணா? எமபுரியில் நீ அதிகம் பேசுவதேயில்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டார்கள்!”

” உண்மை  எமி ! உன்னிடம்தான் நான் அதிகம் பேசுவதாக நானே உணருகிறேன். அதுமட்டுமல்லாமல் இன்று சொர்க்கபுரியில் ஒரு கூட்டத்தில் நான் பேசவேண்டும். “

“அது என்ன கூட்டம்? “

” தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஓர் இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். “

“என்னது? இலக்கியக் கூட்டமா? சொர்க்கத்திலா?  பூலோகத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்த ஆசை இன்னும்  விடவில்லையா? “

” அது  எப்படித்  தீரும் ? எத்தனைப்  பிறவிகள் எடுத்தாலும் மனிதர்களின் பாரம்பரியக் குணம் மட்டும் போகவே போகாது. கோபம், ஆசை, காமம், பேச்சு,   இசை, பாசம், புத்தி, பயம், சாதுரியம், போன்றவை அவன் ஆன்மாவில் ஒட்டிக்கொண்டிருக்கும். இது தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் , கந்தவர்களுக்கும் பொருந்தும்.”

” புதுமையாக இருக்கிறது.  சொர்க்கவாசிகளுக்கே இவ்வளவு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் நரக வாசிகளுக்கு இன்னும் அதிகமான குணங்கள் ஒட்டிக் கொண்டிருக்குமே? . அங்கே இந்த மாதிரி அமைப்புகளெல்லாம் கிடையாதா? “

” சொன்னால் நம்பமாட்டாய்! இங்கே இருப்பதைவிட  அங்கே இது போன்ற அமைப்புகளும் நிகழ்வுகளும் மிக மிக அதிகம். இன்றைய இலக்கியக் கூட்டத்தில் பங்கேற்க சொர்க்கபுரி எழுத்தாளர்களும் நரகபுரி எழுத்தாளர்களும் சேர்ந்தே வருவார்கள்.

“அதெப்படி அண்ணா?”

“இந்தக் கருத்து புரியவேண்டுமானால் உனக்கு இன்னொரு ரகசியத்தையும் சொல்லவேண்டும்.  சொர்க்கம் நரகம்  என்பது நீ நினைப்பதைப்போல இரண்டும் தனித் தனி இடங்கள் அல்ல. இவை இரண்டிற்கும் இடையில் இருக்கும் சுவரும் உண்மையான சுவரும் அல்ல. இது இரண்டும் நான் பார்க்கும் பார்வையில்  தான் இருக்கின்றன. சித்திரகுப்தனுக்கும்  தர்மத்வஜனுக்கும் இந்தப் பார்வை உண்டு. இதை ‘மெய்நிகர்’ என்றும் சொல்வார்கள். அதாவது உண்மையைப் போல இருக்கும் ஆனால் உண்மை அல்ல. இதே இடத்தை நரகபுரியாக மாற்ற என் பார்வையைச் சற்றுத் திருப்பினால் போதும். நாம் நரகபுரியில் இருப்பதை நீ உணர்வாய். இதோ  பார் !”

“இது என்ன மாயம்? என் உடம்பு எரிவதைப் போல இருக்கிறதே? எங்கே போயிற்று சொர்க்கபுரியின் சுகந்த மணம் ? நான் யமுனை நதியாக மாறினால் தான் இந்தத் தீயின் ஜ்வாலையிலிருந்து என்னைக் காத்துக் கொள்ள முடியும் என்று தோன்றுகிறதே?

” கவலைப்படாதே! நாம் நரகபுரிக்கு நாளைக்குத் தான் செல்கிறோம். இதோ நீ தொடர்ந்து வந்த சொர்க்கபுரி  ! அதோ தெரிகிறது பார் இலக்கியக்கூட்டம்.”

” ஆமாம்!  ஒரு சின்ன சந்தேகம்! இலக்கியவாதிகள் அனைவரும் சொர்க்கபுரியில் தானே இருப்பார்கள்?

” முதலிலேயே நான் சொன்னேன்  இந்தக் கூட்டத்திற்கு இரு சாராரும் வருவார்கள். ஆனால்  யார் சொர்க்க புரியில் இருக்கிறார்கள் யார் நரக  புரியில்  இருக்கிறார்கள் என்பது எங்களில் சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அதனால் இலக்கியவாதிகள் சொர்க்கபுரிவாசியாகவும் இருக்கலாம் நரகபுரிவாசியாகவும் இருக்கலாம்.”

” நீங்கள் இந்தக் கூட்டத்தில் என்ன பேசப்போகிறீர்கள்? “

“நான் மட்டுமல்ல, நீயும் பேசப்போகிறாய் !”

” நானா? “

கூட்டத்தைத் துவக்கி வைத்துப்  பேசப் போகிறவன் நான். நன்றி தெரிவித்துக் கூட்டத்தை முடிக்கப் போகிறவள் நீ “

“அது சரி! என்ன தலைப்பு? யார் தலைமை வகிக்கிறார்கள்? “

” தலைப்பு அக்கினிப் பிரவேசம்   தலைமை வகிப்பவர் ஜெயகாந்தன் “

” எனக்கு மட்டும் சொல்லுங்கள் அண்ணா ! இவர் எந்த புரியைச் சேர்ந்தவர். அப்போது தான் நான் நன்றி உரை கூறுவேன். “

” சொல்லக்கூடாதது பெண்ணிடம் ரகசியம் என்று சொல்வார்கள். ஆனால் தங்கையிடம் சொல்லலாம்”

சொன்னான்.

(தொடரும்)

குவிகம் இலக்கியவாசல் -நிகழ்வும் அறிவிப்பும்

 

மே 27, 2017 சனிக்கிழமை:

குவிகம் இலக்கிய வாசலின் இருபத்தி ஆறாவது நிகழ்வாக “புத்தகங்கள் வெளியிட எளிய  வழி” என்னும் தலைப்பில்  திரு ஸ்ரீகுமார் உரையாற்றி பல உபயோகமானத்  தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவற்றில் ஒரு சில

புத்தககங்கள் அச்சடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரு பதிப்பு என்பது 2500 பிரதிகள் என இருந்தது.

  • அச்சுக்கோர்த்தல் கட்டாயம் என்பதால் அந்தச் செலவு ஒரு புத்தகம் அடித்தலோ 2500 அடித்தாலோ ஒன்று தான் என்பதால் அச்சடிக்கப்படும் புத்தககங்களின் எண்ணிக்கை கூடக்கூட புத்தகத்தின் அடக்க விலை குறையும்.
  • இப்போது தேவைக்கேற்ப  அச்சடிக்கும் ‘ PRINT ON DEMAND’ முறையில் ஒரு புத்தகமோ ஆயிரம் புத்தகங்களோ அடக்கவிலை ஒன்றுதான்.
  • இம்முறையில் குறைந்த செலவில் குறைந்த எண்ணிக்கை பிரதிகள் அச்சடித்து, தேவைப்பட்டால் மேலும் பிரதிகள் தயார் செய்து  கொள்ளலாம்.
  • இந்த முறையில் அடிக்கப்படும் புத்தகத்தின்  தரம் லித்தோ போன்ற மற்ற முறைகளில் அடிக்கப்படும் புத்தகத்தின் தரத்திலேயே இருக்கும்.
  • இந்த அச்சு எந்திரம் போட்டோ காபி எடுக்கும் அதே ஜெராக்ஸ் என்னும் கம்பனி உடையது என்பதால் இதனை ‘ஜெராக்ஸ்’ என்று வழக்கமாக அறியப்படும்.  போட்டோ காப்பி போன்று நாளடைவில் அழிந்துவிடும் எனத்  தவறாக எண்ணப்படுகிறது.
  • வணிகமுறையில் அல்லாது தனது எழுத்து பிறரை அடையவேண்டும் என நினைக்கும் பலருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

அவருடைய உரைக்குப் பின் கூட்டத்திற்கு  வந்திருந்த அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். பெரும்பாலோர் தங்கள் புத்தகங்களை  வெளியிட அதிகம் செலவு செய்தவர்கள் எனத் தெரிய வந்தது. கிடைத்த தகவல்கள் பலருக்குப்  பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தவிர்க்கமுடியாத காரணத்தால் நிகழ்வு  நடக்கும் இடம் மாற்றம் செய்ய நேரிட்டது. புதிய இடம் பற்றிய தகவல் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அம்புஜம்மாள் சாலை ஸ்ரீனிவாச காந்தி நிலையம் வந்து திரும்பிய ஒரு சிலரிடம் மன்னிக்க வேண்டுகிறோம்.

*****************************************************************************

வருகிற ஜூன் 24, சனிக்கிழமையன்று இலக்கிய சிந்தனையும் குவிகம்  இலக்கியவாசலும் இணைந்து வழங்கும் நிகழ்வு ஆள்வார்ப்பெட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி  நிலையத்தில்                   6 மணிக்கு நிகழ உள்ளது.

குவிகம் இலக்கிய வாசல் சார்பில் சந்தியா  பதிப்பகம்  நடராஜன் “தமிழில் அகராதி” என்ற தலைப்பில் பேசுகிறார் !

கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!

அனைவரும் வருக !!

 

 

கலப்படம் – அவிச்சது இல்ல -சுட்டது

Image result for ஜோக் படங்கள்

 என்னடா நடக்குதிங்கே?

மதியம் ஜூஸ் குடிக்கக் கடைக்கு போனா கடையில, மேஜை_காலி_இல்ல.. எல்லாம் காதல் ஜோடிங்க ..நான் தனியா வேற போயிருந்தேன்.. என்னடா பன்னலாம்னு யோசிச்சேன் ..
போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா..

#மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜூஸ்_குடிக்குதுடா_ அப்படின்னேன்… அவ்ளோதான் #அஞ்சி_டேபிள் காலி #
ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டேன் …

என்னா_வெயிலு…
((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))) 
 
Related image

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”
– கணக்கதிகாரம்-

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

இது எப்படியிருக்கு? 

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

பிரபல பொருளாதார நிபுணர் ரயிலில் போகும்போது பக்கத்தில் இருந்த  கல்லூரிப் பெண்ணிடம் பேசிக்கொண்டு வந்தார். 

“நீங்க என்ன பண்ணறீங்க ” என்று கேட்டாள்  அவள். 

” நானா? இந்தியப் பொருளாதாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் ” என்றார் அவர்.

அந்தப் பெண் உடனே ” நான் போன வருஷமே அதைப் பாஸ் செய்துவிட்டேன்”  

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

விடுமுறைக்கு சித்தி வீட்டுக்குச் சென்றிருந்த குட்டிப்பெண் கேட்டாள்: 

சித்தி ! நான் பிரிட்ஜிலிருந்த மாம்பழத்தை சாப்பிட்டுக்கவா? 

சாப்பிட்டுக்கோம்மா! 

ரொம்ப தேங்க்ஸ் சித்தி

இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே? பசிக்குதா கண்ணு ? 

இல்லை சித்தி! நான் ஏற்கனவே அதைச் சாப்பிட்டுட்டேன் 

((((((((((((((((((((((((((((((((((((((((  )))))))))))))))))))))))))))))))))))))))))))

Related image

டாக்டர் ! போன தடவை நீங்க எழுதிக் கொடுத்த மருந்தச் சாப்பிட்டதும் வயித்து வலி சரியாப் போயிடுச்சு ! ரொம்ப தேங்க்ஸ் !”

போன தடவை நான் மருந்தே தரலையே! பேனா  சரியா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்ததை எடுத்துக்கிட்டுப் போயிட்டியா? “

(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

Image result for ஜோக் படங்கள்

ஒரு பேரிளம்பெண்ணுக்கு வயது 42. ஆனால் 24 வயது மாதிரி தன்னை நினைத்துக் கொள்வாள். அது மாதிரி உடை அணிவாள். வெளியில் போகும்போதெல்லாம் கடைக்காரர்களிடம் தனக்கு என்ன வயது என்று கேட்பாள். அவர்கள் 25 27 28 என்றே சொல்வார்கள். இல்லை எனக்கு 42 என்று பெருமையாகச் சொல்லுவாள். 

ஒருமுறை பஸ் ஸ்டாப்பில் நின்ற கிழவரிடம் ” எனக்கு என்ன வயதிருக்கும்?” என்று கேட்டாள். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ” நான் உன்னை முத்தமிட்டால்  சரியான வயசைச் சொல்லிவிடுவேன். அது என் ஸ்பெஷாலிட்டி!” என்றார்.

அவள் கொஞ்சம் ஆடிப் போனாலும்  ‘சரி, டெஸ்ட் பண்ணலாம்’   என்று ஒகே  என்று சொன்னாள். கிழவரும் அவளை முத்தமிட்டுவிட்டு ” உனக்கு வயது 42 ” என்று சொன்னார். ஆடிப் போய் விட்டாள். ” எப்படிக் கண்டுபிடித்தீங்க! அந்த ரகசியத்தை எனக்குச் சொல்லிக் கொடுங்க” என்றாள்.

கிழவரும்  ” ஒண்ணுமில்லே! நேத்து கடைக்காரன்கிட்டே நீ கேட்டுக்கிட்டு இருந்தபோது நானும் அங்கே சாமான் வாங்கிக்கிட்டிருந்தேன் ” என்றார். 

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))