![]()
ஒரு குழந்தையின் கள்ளங்கபடமற்ற நம்பிக்கையையும் அதை ஊட்டிய அந்தப் பெண்ணின் தந்தையையும் பற்றிய கதை : அந்தக் கதையின் முடிவு இப்படி அமைகிறது.
பி எஸ் ராமையா என்ற மணிக்கொடி எழுத்தாளர் எழுதிய காலத்தால் அழியாத கதை !
இதைப்படித்த பின் முழுக்கதையையும் படிக்கவேண்டும் என்று தோன்றாமல் போகாது.
அழியாச்சுடர் என்ற இணையதளத்தில் தேடிப் படியுங்கள்!
……………………………..
அடுத்த வினாடி ஒரு விண்மீன் நிலை தவறிச் சுடர் வீசிக் கொண்டு வானத்தினின்று கீழே விழுந்து மறைந்தது. அதன் பிரயாணம் சில வினாடிகளே கண்ணுக்குத் தெரிந்தது.


குழந்தையின் கண்களில் கண்ணீர் பெருகியது. இரண்டு கண்களினின்றும் இரண்டு நீர் வடிவமான முத்துக்கள் கீழே உதிர்ந்தன. அந்தச் சின்னஞ் சிறு இருதயத்தில் விவரிக்க இயலாத, சுருக்கென்று தைக்கும் ஒரு வேதனை காணுகின்றது. குழந்தை விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அழுகையினிடையில் ‘அப்பா!?’ என்று இரும்பை உருக்கும் குரலில் கூப்பிட்டுக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.
சோமசுந்தரம் அப்பொழுதுதான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அருகிலிருந்த மேஜை மீதிருந்து ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். குழந்தையின் குரலைக் கேட்டவுடன் அவருடைய கையினின்றும் புத்தகம் ‘தொப்’பென்று கீழே விழுந்தது. அவருடைய இருதயம் ஆயிரம் சுக்கல்களாகச் சிதறி விழுந்ததுபோல் இருந்தது. உடல் பதைத்தது.
’என்னடா கண்ணே! என் ராசாத்தி அல்லவா! என் ரோஹிணிக்குஞ்சை யார் என்ன செய்தார்கள்?’ என்று படபடப்புடன் கேட்டுக் கொண்டே குழந்தையை வாரித் தூக்கித் தோளின்மேல் சாத்திக் கொண்டார்.
‘அப்பா! எனக்குத் தெரிஞ்சு போச்சு’ என்று விக்கல்களுக்கும் விம்மல்களுக்கும் இடையில் சொன்னாள் குழந்தை.
‘என்னடா கண்ணே, தெரிஞ்சுபோச்சு?’
’அப்பா நம்ப ஊரிலே, யாரோ ஒரு பொய் சொல்லி விட்டார் அப்பா!’
விக்கல்கள், விம்மல்கள், ஹூங்காரத்துடன் ஒரு அழுகை.
‘ஏன் அம்மா அப்படித் தோன்றுகிறது உனக்கு?’
‘நீதானே அப்பா சொன்னே, நாம் ஒரு நிஜம் சொன்னால் ஒரு நட்சத்திரம் பிறக்கிறதுன்னு, அப்போ…. ஒரு நட்சத்திரம்… கீழே விழுந்தா….. யாரோ ஒரு பொய்…. சொல்லிட்டாங்கன்னுதானே……….. அர்த்தம்? சுவாமியினுடைய………. மனசு……….. இப்போ……….. எப்படி இருக்கும் அப்பா? ………… எனக்கே……….. நிறைய…….. அழ வரதே…..’ என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள் அந்தக் கபடமற்ற குழந்தை.
அந்தப் பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இருதயம் இருதயத்தினோடு தனது சொந்த பாஷையில் உணர்த்த வேண்டிய புனிதமான ஒரு துக்கம்
