முதல் பகுதி :

“ தந்தையே ! இது என்ன புதுக் கதை? என்னிடமும் குறைபாடு இருக்கிறதா? குறைபாடு உள்ளவற்றைத் தங்களால் படைக்க முடியுமா?”
“ மகளே! நீ கேட்கும் கேள்வியின் அர்த்தம் உன் தந்தைக்குப் புரியாதது அல்ல. தேவ உலகத்தைப் படைக்கும் தேவ சிற்பி அவர். குறை என்ற சொல்லே அவர் எண்ணத்தில் என்றைக்கும் இருந்ததில்லை.
ஆனால் உன்னைப் படைக்கும் போது அவர் மனதில் ஏதோ ஒரு பொன்மான் ஓடியது. அதனால் என் கருவில் நீ மானாக உருவெடுத்தாய். ஜனித்த உடனேயே அதை உணர்ந்த அவர் அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவரால் முடியாதது ஏதேனும் உண்டா என்ன? பொன் மானாகக் கருவில் இருந்த உன்னை உருக்கிப் பிறகு பெண்ணாக மாற்றினார். அதனால் கோபம் கொண்ட பிரும்மர் பிறப்பை மாற்றும் அதிகாரத்தை இவரிடமிருந்து பறித்து விட்டார். அதைப்பற்றி நாங்கள் அதிகம் கவலைப் படவில்லை.
நீ பிறந்த உடனேயே உனக்குச் சூரியதேவன்தான் கணவன் என்பதை அன்றே தீர்மானித்தோம். ஆனால் ஒரு முறை நீ விளக்குக்கு அருகில் சென்றாய். அப்போது உன் நெற்றியிலும் முதுகிலும் சிவப்புத் திட்டுக்கள் தோன்றின. நீ உருக ஆரம்பித்தாய். அப்போதுதான் நான் மிகவும் பயந்தேன். உன் தந்தை உன்னை மாற்ற முயற்சி செய்தார். மறுபடியும் உன்னை உருக்கித்தான் செய்யவேண்டும் என்று சொன்னார். பிரும்மர் கோபமும் நினைவுக்கு வந்தது. அதனால் நான் உன்னை மறுபடி உருக்கச் சம்மதிக்கவில்லை. வேறு வழிகளைக் காணும்படி அவரை வேண்டிக்கொண்டேன்.
அவரும் அரை மனதுடன் சந்திரனின் அமைதிக் கடலில் இருக்கும் ஒரு வகைப் பொடியைப் பாரிஜாத மலரில் தோய்த்து உன் தேகமெல்லாம் பூசினார் . அதற்குப்பிறகு இந்த உலகில் உள்ள எந்த வெப்பமும் உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.
மேலும் சூரியதேவனுக்கு உன்னைத் திருமணம் செய்யும் எண்ணத்தையும் கைவிட்டோம். சூரியனின் வெப்பத்தை நீ தாங்குவாயா என்ற பயம்தான் காரணம். அதனால் உன்னைச் சூரியனிடமிருந்து மறைக்க விரும்பினோம். காற்றில் இருக்கும் ஒரு முலக்கூற்றைப் பிரித்து அதில் மூன்று பங்கு சேர்த்து விண்ணில் குடைபோல அதைப் பரப்பி வைத்தோம். சூரியனின் வெளிச்சம் வரும்; ஆனால் அவனுடைய வெப்பக் கண்கள் அந்தக் குடையைத் தாண்டி உன்னை அணுக முடியாது.
இப்படி உன்னைப் பொத்திப்பொத்தி வளர்த்தோம். ஆனால் சென்ற ஆண்டு நம் கானகம் பற்றிஎரிந்தபோது அதிலிருந்து கிளம்பிய புகை அந்தக் குடையை ஓட்டை போட்டுவிட்டது என்று தெரிகிறது. சூரிய தேவன் உன்னைப் பார்த்தது மட்டுமல்லாமல் உன்னுடன் காந்தர்வ விவாகமும் செய்து கொண்டான். உன் உடலில் பூசிய பூச்சு முழுவதும் அழிந்துவிட்டது.
நீ அவனுடன் மணம் புரிந்துகொண்டு வாழவேண்டுமானால் சூரியதேவன் தன்னுடைய கொடும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். அதற்குத் தந்தையாரிடம் உள்ள காந்தப் படுக்கை மூலம் சாணை பிடித்துக்கொள்ள ஒப்புக் கொள்ளவேண்டும். தொடந்து ஒவ்வொருமுறை சூரிய கிரகணத்தின் போது காந்தச் சாணை பிடித்துக்கொள்ளவேண்டும். அதற்கு அவனைச் சம்மதிக்க வைக்கவேண்டியது உன் பொறுப்பு “ என்றாள் சந்தியாவின் அன்னை.
‘தன் பிறப்பில் இத்தனை மர்மமா? தன் குறைபாட்டை எப்படிப் போக்கிக் கொள்வது ? சூரியதேவன் தனக்காகத் தன் பிரகாசத்தைக் குறைத்துக் கொள்வாரா?’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டே கவலையில் ஆழ்ந்தாள் ஸந்த்யா !
ஆனால் சூரியதேவனோ விஸ்வகர்மாவின் நகரத்தில் தனக்குக் கிடைக்கும் உபசரிப்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.
இரண்டாம் பகுதி :

எந்தச் சுழ்நிலையிலும் தன்னிலை தவறாத எமதர்மராஜன் கம்பீரத்தோடு அவைக்கு முன் வந்து நின்றான். அங்கு குழுமியிருக்கும் இலக்கிய ஆர்வலர்களைப் பார்த்தான். மேடையில் அமர்ந்திருக்கும் ஜெயகாந்தனைப் பார்த்தான். அவருக்கு அருகில் அமர்ந்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் எமியையும் பார்த்தான்.

மேடையில் பேச எழுந்த பேச்சாளர் பேச்சைத் தொடங்குவதற்கு முன் எழுப்பும் நிசப்தம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது கேட்க அமர்ந்திருப்போரை ஒருவித பய உணர்ச்சியில் – கிலேசத்தில் மிதக்க வைக்குமாம். சாதாரண பேச்சாளருக்கே இந்த நிலை என்றால், எமதர்மராஜன் நிற்கும்போது அங்கிருந்த அனைவரும் தாங்கள் பூலோகத்தில் அனுபவித்த மரண பயத்தை அந்தச் சில வினாடிகளில் அனுபவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் முதலில் வரவேற்றுப் பேசிய நண்பர் பூலோகத்திலேயே சர்ச்சைக்குப் பேர்போனவர். அவர் பேசுகிறார் என்றால் அவருடைய ஆதரவாளர்கள் பத்துப் பேரைத் தன் பாதுகாவலுக்காக அழைத்துக் கொண்டு போவார். அவர் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் யாரவது முன்னணி எழுத்தாளரைப்பற்றி ஏதாவது தரக்குறைவாகச் சொல்லுவார். அதைக் கேட்கவும், அதன் காரணமாகக் கூட்டத்தில் கலாட்டா செய்வதற்கும் நிறைய ஆட்கள் வருவார்கள். சொல்லப்போனால் அவர் கூட்டங்களில் ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே அதிகம் வருவார்கள். சில சமயம் அவர் மீது கல்லும் வீசப்படும். அவர் எதற்கும் அஞ்சா நெஞ்சர். ஒருமுறை அவர் மீது எறிந்த செருப்பை லாவகமாகப் பிடித்துக்கொண்டு அதைக் கோபாவேசமாக ஆட்டிக்கொண்டே ஒரு மணி நேரம் பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படிப் பேசி இலக்கியக் கூட்டத்தை அவமதித்துவிட்டார் என்று ஒருவர் அவர் மீது மான நஷ்ட வழக்கு வேறு போட்டார்.
அப்படிப்பட்ட அவர், இன்று எமதர்மராஜனைக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு, நரகாபுரி மக்களுக்காக வாதாடி, மேடையிலேயே பதில் கூறுமாறு எமனுக்கு உத்தரவிட்டது ரொம்பவும் அதிகம் என்று அனைவரும் பயந்தனர். அதனால் எமனின் நிசப்தம் அனைவரையும் ஊசி முனையில் நிற்க வைத்தது. அந்த அமைதியைக் கிழித்தது எமனின் கணீர் என்ற குரல்.
“ உங்கள் இலக்கியக் கூட்டத்தில் – அதுவும் மதிப்பிற்குரிய ஜெயகாந்தன் பேசும் விழாவில் கலந்து கொள்வதற்காக நானும் என் சகோதரியும் வந்தோமே தவிர நரகாபுரி மக்களின் நிலைமையைப் பற்றி விவாதிப்பதற்கு அல்ல. இருப்பினும் கேள்வி என்று வந்தபிறகு அதை ஒதுக்கித் தள்ளுவது முறையல்ல.
முதலாவதாக உங்களுக்கு இங்கு கிடைக்கும் சுகமும் துக்கமும் நாங்கள் தருவதல்ல. நீங்களே தேடிக்கொண்டவை. அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். தினை விதைத்தால் தினைதான் கிடைக்கும் ; வினை விதைத்தால் வினைதான் கிடைக்கும். இது ஆண்டவன் தீர்ப்பு அல்ல. நீங்கள் செய்த நல்லவற்றையும் கெட்டவற்றையும் சித்திரகுப்தன் மிகத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறான். அதன் கருத்துப்படி தர்மம் , நியாயம் ஆகியற்றின் அடிப்படையில் தர்மராஜனான நான் கொடுத்த தீர்ப்புக்கு, மறு பரீசிலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆயினும் நரகாபுரியில் துடிக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு சலுகை தர விரும்புகிறேன். அதற்காகத்தான் என் சகோதரி எமியையும் அழைத்து வந்திருக்கிறேன். அவள் என்ன செய்யப் போகிறாள், அதனால் நரகாபுரி மக்களின் கஷ்டம் எப்படிக் குறையப் போகிறது என்பதைப் பற்றி எமி பேசும் போது எடுத்துரைப்பாள். இப்போது நம் மதிப்பிற்குரிய நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் உரையைக் கேட்க உங்களைப்போல நானும் ஆவலாயுள்ளேன். கேட்போமா? “ என்று கூறிவிட்டு அமர்ந்தான் எமதர்மராஜன்.

