Daily Archives: August 11, 2017
தலையங்கம்
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
நாம் எல்லோரும் சமமா?
இரவிலே வாங்கினோம் விடியவே இல்லை
அவ்வளவு மோசமா?
சுபாஷ் சந்திர போஸின் வீரம், காந்தியின் அகிம்சை , நேருவின் பெருமிதம், சாஸ்திரியின் விவேகம், இந்திரா காந்தியின் தைரியம், மோடியின் பெருமை எல்லாம் நமது நாட்டை எங்கே எடுத்துச் சென்றிருக்கிறது ?
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும் பற்றி கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் அங்குஸ் மாடிசன் கூறுகிறார் :
கி பி 1000 வது ஆண்டில் உலகப் பொருளாதரத்தில் இந்தியாவின் பங்கு 27 சதவீதம். சீனா மற்றும் ஐரோப்பா எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு முன்னணியில் இருந்தது. அதே நிலை தான் கி பி 1500 லும். அப்போது உலக அளவில் நமது பங்கு 25 சதவீதம்.
விடுதலைக்குப்பிறகு இந்தியாவின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே !
இந்தியா எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறது என்று தெரிகிறதா?
ஆனால் நேரு , இந்திரா காந்தி காலத்தில் நாம் கடைப்பிடித்த பாதுகாக்கப்பட்டச் சந்தை முறையால் நாம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தோம்.
ஆனால் 1991 இல் உலக மயமாக்கப்பட்டவுடன் இந்தியா முன்னேற்றப் பாதையில் நடக்க ஆரம்பித்தது.
2005இல் 9 வது இடத்தில் இருந்த நமது நாடு 2011இல் மூன்றாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. நமக்கு மேலே சீனாவும் அமெரிக்காவும் தான் இருக்கின்றன.
கேம்ப்ரிட்ஜ் கருத்துப்படி 2040 இல் சீனா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் இருந்து உலகை ஆளும்.
எனவே நாம் சீனாவைத் தோற்கடிக்க வேண்டியது டோக்லாமில் மட்டுமல்ல; பொருளாதாரத் துறையிலும் கூட.
டிட்பிட்ஸ் :
நம்முடன் காங்கோவும், பஹ்ரைனும், தென் கொரியாவும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.
நமது இந்தியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா என்பவர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியார் பாடல் ஒரு போட்டியில் மூன்றாவது பரிசைப் பெற்றதாம்.
இந்த வருடம், சுதந்திர நாளில், நாம் , நமது நாட்டைப் புதிய இந்தியாவாக மாற்றும் உறுதியை எடுத்துக் கொள்ளப்போகிறோம்.
மோடி சொல்கிறார் என்பதற்காக அல்ல.
இது நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
குவிகம் பதிப்பகம் துவக்க விழா
மே மாத குவிகம் நிகழ்வில் “புத்தகங்கள் பதிப்பிக்க எளிய வழி’ என்னும் தலைப்பில் திரு ஸ்ரீகுமார் அவர்கள் உரையாற்றினார். தற்போது நடைமுறையில் இருக்கும் மாற்றுப் பதிப்பக முறையான “PRINT ON DEMAND” பற்றியதாகும். ( விவரத்திற்கு ஜூன் குவிகம் இதழைப் பார்க்கவும்)
அந்நிகழ்வில் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயத்தில் ஒன்று, நம் நண்பர்களில் பெரும்பாலோர் புத்தகங்களை எழுதியும் வெளியிட்டும் இருக்கிறார்கள். ஆனால் வழக்கமான பதிப்புமுறையில் வெளியிடும்பொழுது, அதிக முதலீடு செய்ய வேண்டி இருப்பதுடன், அடிக்கப்பட்ட புத்தகங்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கிவிடுகிறது என்பதும் உண்மை .
இந்த மாற்றுப் பதிப்பக முறையைப் பரிசோதித்துப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணத்தில் குவிகம் மின்னிதழில் எஸ் கே என்ற பெயரில் தொடர்ந்து வெளிவந்த “படைப்பாளிகள்” என்னும் தொடர் கட்டுரைகளைப் புத்தக வடிவில் மாற்றும் முறையில் இறங்கினோம்.
அப்போது தோன்றிய எண்ணம்தான் “குவிகம் பதிப்பகம்”. மேலும் நண்பர்கள் புத்தகம் வெளியிட எண்ணினால் அவர்களுக்கு ஒரு உதவியாகவும் குவிகம் பதிப்பகம் விளங்கவேண்டும் என முடிவு செய்தோம்.
அதன்படி குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தகமாக “சில படைப்பாளிகள்” வெளிவந்தது.
புத்தக வெளியீடு நிகழ்வு ஞாயிறு 23 ஜூலை 2017 அன்று ராயப்பேட்டையில் நடைபெற்றுவந்த புத்தகத் திருவிழாவில் ‘விருட்சம் சந்திப்பு’ கடையில் நடந்தது.
புத்தகத்தை திரு செந்தில் (பரிசல்) அவர்கள் வெளியிட்டார்கள். எதிர்பாராதவிதமாக கவிஞர் வைதீஸ்வரன், எழுத்தாளர்கள் திரு எஸ். ராமகிருஷ்ணன், திரு சச்சிதானந்தம் திரு கண்ணன் கலந்து கொண்டார்கள்.
குவிகம் பதிப்பகம் தொடக்க விழா, இலக்கியச் சிந்தனை மற்றும் இலக்கிய வாசலும் இணைந்து நடத்தும் ஜூலை மாதக் கூட்டங்களுடன் நிகழ்ந்தது.
திரு.ப லக்ஷ்மணன் குவிகம் பதிப்பகத்தைத் தொடங்கி வாழ்த்துரை வழங்கினார். திரு புதுவை ராமசாமி மற்றும் திரு கண்ணன் முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.
புத்தகம் வெளியிட விரும்பும் நண்பர்களுக்குச் சில குறிப்புகள்:
புத்தகம் வெளியிடுவது இன்றைய சூழ்நிலையில் கடினம் அல்ல .
முதலில் உங்கள் கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றை வோர்ட் டாகுமெண்டாகத் தயார் செய்துகொள்ளுங்கள்.
அவற்றை ஒற்றுப் பிழை, மற்றப் பிழைகள் இல்லாமல் இருக்கும்படி பிழை திருத்தவும். ( உதவிக்குத் தேவையானால் http://vaani.neechalkaran.com/ என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.) ஒன்றுக்கு மேற்பட்டவர் பார்த்துத் திருத்துவது நலம்.
மின்னஞ்சல் (kuvikam.com ) தொடர்புகொள்ளவும்.
கொடியின் துயரம் – கவிஞர் வைதீஸ்வரன்
எங்களுக்கெல்லாம் ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதுவும் தெருவெல்லாம் வீடெல்லாம் பெரியவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வரப் போவது பற்றியும் வெள்ளைக்காரர்கள் ஆகஸ்ட் 15ந்தேதி நாட்டை விட்டுப் போவதைப் பற்றியும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜூலை 1947.
சிறுவர்களான எங்களுக்கு சுதந்திரம் என்றால் என்ன என்று கொஞ்சம் புரியாமலும் புரிந்த மாதிரியும் இருந்தது. அன்னிய நாட்டு வெள்ளைக்காரர்களை விரட்டிவிட்டு நம்மை நாமே சுதந்திரமாக ஆட்சி செய்து கொள்ளப் போகிறோம் என்றார் அப்பா. எனக்கு ஓரளவுதான் புரிந்தமாதிரி இருந்தது.. ..
எப்படியும் நமக்குச் சொந்தமான இந்தியா நமக்கே கிடைக்கிறது.. என்று நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது .. வீட்டுப் பண்டிகைகள்போல இது ஒரு நாட்டுப்பண்டிகையோ.!
முனிஸிபாலிடி பார்க்குகளில் நட்ட நடுக் கம்பத்தில் பொருத்திய வானொலிப் பெருக்கிகள் வரப் போகும் சுதந்திர நாள் பற்றி சத்தமாக முழங்கிக் கொண்டிருந்தன. தேசியத் தலைவர்களுக்கும் ஆங்கில அரசாங்கத்துக்கும் இடையே நிகழும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தைகளைப்பற்றிய செய்திகளை மாலை வேளைகளில் எல்லோரும் கூட்டங் கூட்டமாகச் சுற்றி நின்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு எல்லாம் ஏதோ கலவரமாக பரபரப்பாகத் தோன்றியது.
அதுவும் இந்தியா இரண்டாகப் பிரியப் போகிறது என்று பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றிய அச்சமும் குழப்பமும் எல்லோர் மனதிலும் ஊடாடிக் கொண்டிருந்தது.
இது நாள்வரை குடும்ப நண்பர்களாகப் பழகி வந்த பல முஸ்லீம் குடும்பங்களை இனிமேல் திடீரென்று வேற்று நாட்டுக்காரர்கள் போலப் பார்க்கப் போகிறோமா என்றுகூடப் பலருக்குக் கலவரமாக இருந்தது!!
என் அப்பாவுடன் நெருங்கிப் பழகி வியாபாரத்தில் பங்கெடுத்த பல முஸ்லீம்கள் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். ஸலீம் மாமாவுக்கு என்னிடம் மிகவும் பிரியம். நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது என்னை அடிக்கடி வெளியில் தூக்கிக்கொண்டு போய் எதையாவது வாங்கித் தருவார். குடும்ப விசேஷங்களுக்குப் பரஸ்பரம் போய்வருவோம்
கிராமபோன் பெட்டிகளில் “ஆடுவோமே…பள்ளு…. பாடுவோமே..” பாட்டும் “வெற்றியெட்டு திக்குமெட்டக் கொட்டு முரசே “ பாட்டும் மூலைக்கு மூலை கேட்டுக் கொண்டிருந்தது. காற்றெல்லாம் சுதந்திர கோஷம்!
நாற்பதுகளில் பாரதியார் பாடல்களைக் கூட்டமாக வெளியே பாடுவதற்கு சராசரி மக்களுக்குத் தயக்கமாக இருக்கும்……. வெள்ளைக்காரன் பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவானோ என்று பயம்.
பாரதி பாடல்களின் மீது அபார பக்தி கொண்ட என் அப்பாவும் அவர் நண்பர்களும்கூட முன்னிரவில் எங்கள் வீட்டுப் பின் தோட்டத்தில் ராந்தல் விளக்கை சுற்றி அமர்ந்து கொண்டு பாரதி பாடல்களை உரக்கப் பாடாமல் உள்ளத்தோடு சன்னக் குரலில் பாடுவதை நான் கவனித்திருக்கிறேன்
எல்லோருக்கும் சுதந்திரத்தின் மேல் ஆசை இருந்தது. பெருமையாகவும் இருந்தது.. ஆனால் அடிபட்டு ஜெயிலுக்குப்போய் அல்லல்படுவதற்கு ஒரு சிலர்தான் துணிச்சலுடன் தயாராய் முன்வந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் மானசீகமான ஏக்கம் மட்டும் உண்டு
இப்போது அந்தப் பயம் போய் விட்டது. எத்தனையோ ஆண்டுகளாக கட்டிப் போட்டிருந்த கழுத்துக் கயிறு அறுந்து, படல் திறந்து விட்ட ஆட்டுமந்தைகள்போல் ஆரவாரமான சந்தோஷத்தில் அத்தனை பேரும் திக்குத்திசை தெரியாமல் ஆனந்தப்பட்டார்கள்.
கடைகளில் விதவிதமான பாரதமாதாக்கள் கையில் மூவர்ணக் கொடியேந்திக் கொண்டு பத்திரிகைகளில் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன.
பள்ளிக்கூடங்களில் ஆகஸ்ட் 15-ல் பையன்கள் சட்டையில் குத்திக் கொள்வதற்காக பின்னூசியுடன் சின்னச்சின்ன கொடிகள் மூட்டையாக வந்து இறங்கிக் கொண்டிருந்தன. அதோடு மிட்டாய்ப் பொட்டலங்களும் கூட.
எங்கள் தெருவில் என் தெருப் பையன்களெல்லாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடலாம் என்று கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தோம்
ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தயாரிப்பதென்று முடிவாகியது. வெள்ளைப் பேப்பர் வாங்கி’ ஜிலுஜிலுப்பான ஜரிகை அட்டை ஒன்றைக் கத்தரித்து . அழகான நோட்டுப் புத்தகமாக தைத்துக் கொடுத்தான் முருகேசன்.. . எங்கள் நண்பர்களில் அவன்தான் கைவேலைகளில் திறமைசாலி. கந்தசாமி அச்சு அசலாகப் படங்களை கார்பன் பேப்பர் வைத்து நகல் எடுத்து வர்ணம் பூசுவான்.
முகப்பில் விரிந்த கூந்தலுடன் கொடியேந்திய பாரதமாதா படமும் இரண்டாவது பக்கத்தில் மகாத்மா காந்தியும் அடுத்து பாரதியார் படமும் அடுத்த இரண்டு மூன்று பக்கங்களுக்கு பாரதியாரின் தேசீய கீதங்களும் வடிவாகியது.
அடுத்த பக்கத்தில் நாட்டுப்பற்றுபற்றி நான் ஒரு பாட்டு எழுதினேன். மனதுக்குள் கவிதை எழுதுவதாக ஒரு நினைவுடன். எனக்குள் தோன்றும் ஏதாவது ஒரு தாள மெட்டுக்கு ஏற்ற மாதிரி எப்படியோ வார்த்தைகள் வந்து விடும். பெரியவர்கள் அதைப்படிக்கும் போது ஒவ்வொருவரும் ஒரு ராகத்தில் கைகளை ஆட்டிக் கொண்டு பலமாகப் பாடி உற்சாகமாகச் சிரிப்பார்கள்.
அவர்கள் பாராட்டுகிறார்களா பகடி செய்கிறார்களா என்று தெரிந்து கொள்ள முடியாமல்……. . எனக்கு ஆத்திரமாக வரும்…. ஆனால் எல்லோரும் என்னை “என்ன…கவிராயரே! “என்று முதுகில் தட்டிக் கொடுப்பார்கள்.
சேகர் அவன் பாட்டி சொன்னாளென்று ‘ஒரு பாப்பாவும் கீரிப்பிள்ளையும்’ என்று ஒரு கதை எழுதினான்.. ராமு அவன் வெகு நாட்களுக்கு முன் எழுதி வைத்திருந்த ஒரே ஒரு துப்பறியும் கதையை அனுப்பியிருந்தான். .
சில நண்பர்களின் அப்பாக்களும் எங்கள் பத்திரிகைத் தயாரிப்பில் ஆர்வமடைந்து அவரவர்களுக்குத் தெரிந்த உபதேச மொழிகளை அனுப்பியிருந்தார்கள்.
ஒரு வழியாக பத்திரிகை நிரம்பிப் புடைத்து விட்டது. அட்டைகளை ஒட்டும்போது சரியான பசைகளை உபயோகிக்காததும் இந்தப் புடைப்புக்குக் காரணமாக இருக்கலாம்..
பத்திரிகையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போய் பெரியவர்களிடம் பத்திரிகையைக் கொடுத்தோம். படித்து விட்டுத் தருவதற்கு ஒரு நாள் அவகாசம்.
“பேஷ்..பேஷ்….சுதந்திரத்தைக் கொண்டாட சிறுவர் பத்திரிகையா? “என்று தட்டிக் கொடுத்தார்கள். வாசித்து விட்டு ஊக்கத் தொகையாக ஓரணா அரையணா கொடுத்தார்கள்.
நான் சுதந்திரப் பத்திரிகையை ஜேம்ஸ் மாமாவுக்குக் காட்ட மிக ஆவலாக இருந்தேன். ஜேம்ஸ் மாமா சிறைச் சாலையில் அதிகாரியாக இருந்தார். வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவார். வெளியில் டமிலும் பேசுவார்.
அவர் வீட்டில் நாய் பொம்மை போட்ட கிராமபோன் பெட்டி இருந்தது. தினந்தோறும் காலையில் நான் அங்கே போகும்போது, சில சமயம் ஆங்கிலப் பாடல்களைப் போட்டு நடனம் ஆடி ரஸித்துக் கொடிருப்பார். அவருடைய மனைவியும் நீள கவுன் போட்டுக் கொண்டு கூந்தலை அரையாக வெட்டிக் கொண்டு அவருடன் சகஜமாக ஆடுவார்.. வேடிக்கையாக இருக்கும்
அவரிடம் பெரிய வானொலிப் பெட்டி ஒன்றும் இருந்தது. அந்தப் பெட்டியில் காதை வைத்துக்கொண்டு மும்முரமாக வெளிநாட்டுச் செய்திகளையும் போர்ச்செய்திகளையும் கேட்டுக் கொண்டிருப்பார்.
நான் போனபோது கதவைத் தட்டிச் சற்று நேரங் கழித்துத்தான் திறந்தார். உள்ளே இரண்டு பெட்டிகள் திறந்தவாறு இருந்தன. அதில் மாமா துணிமணிகள் சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.. ஏதோ பயணம் போவதற்கு ஆயத்தப்படுவதுபோல் இருந்தது
“ மாமா…..சுதந்திர தினத்துக்கு எங்கள் பத்திரிகை மாமா “ என்றேன்.
அவர் சந்தோஷப் படவில்லை. “ அப்படியா? எனக்கு டமில் படிக்க வராது பையா….என்னா எலுதிருக்கே?””
“சுதந்திரத்தைப்பத்தி…”
“ அடேடே……சொடந்திரமா?….ஹா… ஒங்களை அவுத்து விட்டுட்டாங்களா?.. தம்பி இதை நல்லா ஒட்டக் கூடாதா? இப்பவே… சொடந்திரம் சைடுலே பிரிஞ்சி கிலியற மாதிரி வருதே!…ஹ்ஹ்ஹா..” என்று பத்திரிகையைக் கொடுத்தார். .
அவர் வழக்கமான ஜேம்ஸ் மாமாவாக இல்லையோ? நாங்கள் பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்.
அடுத்த இரண்டு மாதங்களில் அவர் சீமைக்குப் போய் விட்டார்.
ஆகஸ்ட் 15க்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன. கடைகளில் கொடி வியாபாரம் பரபரப்பாக நடந்தது. சிறுவர்கள் கொடி வாங்குவதில் ஆர்வமாக இருந்தார்கள். தங்கள் வீட்டிலேயே கொடி ஏற்ற வேண்டுமென்று சிலருக்கு ஆசை…எனக்கும்தான்….. நான் அப்பாவுடன் சென்று சுமாரான அகல நீளத்துக்கு ஒரு கதர்க் கொடி வாங்கினேன்.
எங்க வீட்டு மொட்டை மாடியில் சுவரோரத்தில் இரும்பு வளையத்தில் ஒரு நீளக் கொம்பைக் கட்டி நிறுத்திக் கொடியை உச்சியில் சுருட்டிக் கட்டி வைத்தோம். உள்ளே பூக்களை வைத்துக் கட்டினோம்.
ஆகஸ்ட் 15ந் தேதி விடியும் போது எல்லோரும் சேர்ந்து கூடி கொடி ஏற்றிப் பறக்க விடவேண்டுமென்று தீர்மானம்.
நாங்கள் நாலைந்து நண்பர்களும் அவர்கள் அண்ணா அக்கா அப்பா அம்மாக்களை 15ந் தேதி காலை ஆறு மணிக்கு மொட்டை மாடிக்கு வரச் சொன்னோம். கொடி ஏற்றத்துக்கு!!
எல்லோரும் சரியாக ஆறு மணிக்கு மொட்டை மாடியில் கூடி விட்டார்கள். பெரியவர்களுக்குள் வயதான மாமா ஒருவரைக் கொடியின் முடிச்சைத் தளர்த்திப் பறக்கவிடச்சொன்னார் அப்பா.
காற்று சுமாராகத்தான் வீசியதால் கொடி தொங்கித் தொங்கித்தான் பறந்தது. இருந்தாலும் எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சியும் பெருமிதமுமாக இருந்தது.. எல்லோரும் கை தட்டினோம்.
என் சிநேகிதர்களில் அனந்து மிக அழகாகப் பாடுவான்.
பாரதியாரின் “தாயின் மணிக் கொடி பாரீர் “ பாட்டைக் கணீரென்று பாடினான். “பட்டொளி வீசி பறந்திடப் பாரீர் “ என்ற வார்த்தையைக் கேட்க எல்லோருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. வார்த்தை அளவுக்குக் கொடி எதிரே பட்டொளி வீசிப் பறக்கவில்லையென்று தோன்றியது. எனக்குக் குறைதான்….. பறக்காமல் லேசாக ஆடிக் கொண்டிருந்தது.
கொடி பறப்பதைப் பின்னணி கோஷத்தோடு சினிமாத்திரையில் பார்க்கும்போதுதான் உணர்ச்சிகரமாக இருக்கிறது. வெளியே பறப்பதற்குக் கொடி காற்றை நம்பி இருக்கிறது.
சில பெரியவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள். என் அப்பாவின் கண்கள் ரொம்பவே கலங்கி இருந்தது. என் அக்காவும் நானும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கினோம்
பெரியவர்கள் “ சபாஷ்…கவிராயரே!” என்று என் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு மெதுவாகக் கீழே இறங்கினார்கள்.
அப்போதுதான் ஸலீம் மாமா வந்தார். அவசரம் அவசரமாக வந்தார்..
“ என்ன மாமா…இவ்வளவு லேட்டு! சுதந்திரம் வந்து எவ்வளவு நேரம் ஆயிடுத்து?” என்று சிரித்தேன்.
அவர் சிரிக்கவில்லை. “ எல்லாம் போயிடுத்துப்பா” என்று அப்பாவைப் பார்த்தார். அழுகை பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு.
அப்பா சலீம் மாமாவைப் பார்த்தவுடன் மேலும் கலங்கிப் போய் அவர் தோளைப் பற்றிக் கொண்டு தனியாக நகர்ந்தார்.
“ என்ன ஆச்சு? தகவல் தெரிந்ததா? “
ஸலீம் மாமா பொங்கி வந்த துக்கத்தைப் வாய்க்குள் பொத்திக் கொண்டு அப்பாவிடம் கேவிக் கொண்டே ஏதோ சொன்னார். பிறகு குலுங்கிக் குலுங்கி அழுதார்..
அப்பா “ அய்ய்ய்யோ… உன் தம்பி குடும்பமா….டெல்லீ…லே…யா…. ” என்று கத்தி விட்டார். “ அப்பாவுக்கும் அழுகையை அடக்க முடியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டார்
ஸலீம் மாமா தள்ளாடிக் கொண்டே மெதுவாகக் கீழே இறங்கினார்.
“மாமா..மாமா….ஸ்வீட் எடுத்துக்கோங்கோ…” என்று கத்தினேன். அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் படி இறங்கிக் கொண்டிருந்தார்.
“அப்பா…அப்பா,,,என்னப்பா…என்னப்பா.. ஆச்சு?…..””
அப்பா ஒரு மூலையில் கொடியின் கீழே இடிந்து உட்கார்ந்து விட்டார்.
“ அப்பா…அப்பா….” நான் அவரைத் தொட்டுக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.
“ டேய் பேசாம நீ கீழே போடா…. ஸலீம் மாமாவுக்குக் குடும்பத்துலே இப்போ பெரிய துக்கம்…….நம்ம மாதிரி குடும்பங்களுக்கும் இப்போது ஆபத்தான சமயம்தான்.. ஊரெல்லாம் சாவு…..ரத்தம்….ரணம்…… ……பேசாம போடா……..” என்றார்.
நான் போகாமல் நின்று கொண்டிருந்தேன்.
அப்பா… என்னைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினார். “ இப்போ நமக்கு சுதந்திரம் வந்துட்டுதுன்னு மார் தட்டிக்கிறதா…………… மாரடிச்சுக்கிறதான்னு தெரியலேடா…..?…. எல்லாம் போறும்…..கீழே வாடா…நீ…….” கோபத்துடன் எழுந்திருந்தார்
பறப்பதற்கு சக்தியில்லாமல் கொடி வருத்தமாகத் தொங்கிக் கொண்டிருந்தது அந்த முதல் சுதந்திர நாளில்!!
சரித்திரம் பேசுகிறது -யாரோ
ராமகுப்தர் (துவக்கம்)
வாசகரே! நாம் படித்த சரித்திரத்தில் சமுத்திரகுப்தருக்குப்பின் இரண்டாம் சந்திரகுப்தன் பதவியேற்று ‘பொற்காலம்’ அமைத்தான் – என்று படித்திருப்போம்.
ஆனால் சரித்திரத்தைச் சற்றுக் கூர்ந்து படித்தால்…
அங்கே… ‘நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!’
உண்மை…
சரித்திர வல்லுனர்கள் இடையில் நடந்த இந்த சரித்திரத் துகள்களை இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் கண்டெடுத்தனர்.
இங்கு இதிகாசம் போன்ற ஒரு கதை கிடைக்கிறது.
காதல், வீரம், பாசம், துரோகம், நாடகம், வேஷம் அனைத்தும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
கதை சொல்வோம்:
சமுத்திரகுப்தனின் மூத்த மகன் ராமகுப்தன்…
சமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்பு நடத்திய நாட்களில் …
பாடலிபுத்திரத்தில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவன் – ராமகுப்தன்.
சமுத்திரகுப்தனின் இளைய மகன் சந்திரகுப்தன்…
சமுத்திரகுப்தனின் ஆட்சியில் படையெடுப்புகளில் எல்லாம் ..
நேரடியாகக் களமிறங்கிப் போரிட்டு வெற்றிகளைப் பெற்றுத் தந்தவன் – சந்திரகுப்தன்.
அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சந்திரகுப்தனின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.
சமுத்திரகுப்தனும் தனக்குப்பின் அரசனாக வர சந்திரகுப்தனே தகுதியானவன் என்று உணர்ந்திருந்தான்.
சமுத்திரகுப்தன் மந்திரியை அழைத்து:
“மந்திரியாரே… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எனது தந்தை முதலாம் சந்திரகுப்தர் என்னை விட மிகவும் தைரியசாலி”
அவனது வார்த்தைகள் வேதனையை வெளியிட்டது.
மந்திரி: “மன்னவா… உலகமே அஞ்சும் மகாராஜாதிராஜரான தங்களுக்கு தைரியத்தில் என்ன குறைவு. அகில உலகமே தங்கள் பேரைக் கேட்டாலே நடுங்குகிறது”
சமுத்திரகுப்தன்: “மந்திரி… இது உனக்குத் தெரியாதவை அல்ல. இருப்பினும் மறுபடியும் கூறுகிறேன் கேள்!
என் தந்தை எனது திறமைகளை நன்கு அறிந்திருந்தார். எனக்குப் பல அண்ணன்மார்கள் இருந்த பொழுதிலும்.. அவர் தைரியமாக, மக்கள் அவையில்… என்னை ‘அரசன்’ என்று அறிவித்தார். எனக்கு நன்றாகத் தெரியும்…
எனது மூத்த மகன் ராமகுப்தன் ஒரு வீரனாக வளரவில்லை.. நான் எடுத்த படையெடுப்புகளில் ஒன்றில் கூட அவன் பங்கு பெறவில்லை..
வீரமற்று ஒரு கோழையாகவே இருந்திருக்கிறான்.
இன்றும் நான் அவனை மாளவத்தின் ஆளுநராக வைத்திருக்கிறேன்.
அதன் தலைநகரான உஜ்ஜயினியில் இருந்துகொண்டு அவன் அங்கு தனது பெயரில் தங்க நாணயங்களை வெளிவிட்டு வருகிறான்.
சக மன்னன் ருத்ரசிம்மா-II மற்றும் அவன் இளவரசன் ருத்ரசிம்மா-III இருவரும் அருகிலேயே பெரும் சக்திகொண்டு உள்ளனர்.
அவர்கள் என்னிடம் அன்று தோற்று ஒளிந்தாலும் இன்று அவர்கள் தினவெடுத்த தோள்களுடன் தெனாவெட்டாகத் திரிகின்றனர்.
ராமகுப்தன் அவர்களைத் தாக்காமல், அவர்களை வெற்றி கொள்ளாமலும் அடங்கிக் கிடக்கிறான்.
சந்திரகுப்தனோ ..
வீரத்தின் சிகரம் ..
வெற்றியின் நாயகன்…
மக்களின் காவலன்..
அவனை அரசனாக அறிவிப்பது தானே நீதி..நியாயம்..உத்தமம்..
ஆனால் அதை அறிவிக்க என் நெஞ்சில் தயக்கம்…
இப்போழுது சொல்லுங்கள்…
நான் தைரியசாலியா?”
மாவீரன் புலம்புகிறான்..
இந்திய நெப்போலியனின் இரும்பு இதயம் கரும்பு போல் நெகிழ்ந்தது.
புத்திரப்பாசங்கள் எப்பேர்ப்பட்ட வீரர்களையும் பலவீனமாக்கும்!
மந்திரி கூறுகிறார்:
“மன்னவா … நான் இன்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்… தங்களுக்குப் பின் சந்திரகுப்தரை அரசராக்குவேன்.”
மாமன்னன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
ஆனால் அந்த மந்திரி…
இந்நாளைய மந்திரி போன்றவர்..
ஊழலின் மொத்த உருவம்…
மந்திரியின் எண்ணம் எல்லாம்:‘சந்திரகுப்தன் அரசனானால் நேர்மையான ஆட்சி செய்வான். ஆனால், ராமகுப்தன் அரசனானால் தனக்குப் பொன்னும் பொருளும் கொடுப்பான்’.
மந்திரி கட்சி மாறினான்.
சில நாட்களிலே…
சமுத்திரகுப்தன் மறைந்து விட்டான்.
இரும்புக்கரங்களால் உலகையே வென்ற மாவீரன்.
சுவர்க்கத்திற்குப் படையெடுக்கப் போயினன் போலும்!
ராமகுப்தன் மந்திரியை அழைத்தான்.
“மந்திரியாரே!
நான் அரசனானால் இந்நாட்டை நீங்களே நிர்வகிக்கலாம்.
பொன் மூட்டைகளுக்கும்… பெரும் நிலங்களுக்கும் தாங்கள் அதிபதியாகலாம்.
தந்தை இறந்த இன்றே எனக்கு முடி சூட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
காலம் தாழ்த்தினால் சந்திரகுப்தன் ஏதாவது செய்து அரியணையைப் பறித்துக்கொள்வான்.”
மந்திரி:
“ராமகுப்தரே! நீங்கள் தான் இந்நாட்டு மன்னர்..
அதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
சில நாட்கள் பொறுக்க வேண்டுவது மிகவும் அவசியம்.
மக்கள் அனைவரும் மன்னர் இறந்த துக்கத்தில் மூழ்கியுள்ளனர்.
உங்கள் பட்டாபிஷேகத்தை யாரும் கொண்டாடமாட்டார்கள்.”
மந்திரி தொடர்ந்தார்..
“மேலும் இன்னொரு முக்கிய சமாசாரம்” அவன் காதில் முணுமுணுத்தார்.
ராமகுப்தனின் முகம் சூரியப்பிரகாசம் அடைந்தது.
“அமைச்சரே… இந்த ஆலோசனை ஒன்றுக்காக .. உங்களுக்கு எதையும் தரலாம்..”
சூழ்ச்சிகள் ரகஸ்யமாகும்பொழுது அதன் சக்தி இன்னும் அதிகமாகும்.
காலம் காலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பேரழகி தோன்றி மக்களின் நெஞ்சங்களை ஈர்த்து- மாமன்னர்களைத் தன் வசமாக்குவர்.
மகாபாரதத்தின் திரௌபதி.. புத்தர் காலத்தில் ஆம்ரபாலி…இந்நாளில் ஐஸ்வர்யாராய் …என்று சரித்திரம் படம் பிடித்துக் காட்டும்.
இவர்கள் அனைவரும் அழகு மட்டும் கொண்டிருக்கவில்லை.
அறிவிலும் மேம்பட்டிருந்தார்கள்.
அந்த வரிசையில் அன்று…
துருவாதேவி…
இளவரசி..
பேரழகி..
அவள் அழகின் பெருமை காட்டுத் தீ போல நாட்டில் பரவியிருந்தது.
அழகுடன் கூடிய அவளது அறிவும் மற்றும் துணிச்சலும் நாடறிந்தது.
சந்திரகுப்தனின் மாவீரமும் அவனது போர் சாகசங்களும் அவள் மனதில் காதலைத் தூண்டியது.
அவனது வசீகரமும், அறிவும், கலையார்வமும் அவளை வெகுவாக ஈர்த்தன.
சந்திரகுப்தனும் துருவாதேவியை எண்ணிக் காதலால் உருகினான்.
நளன் – தமயந்தி போல் இருவரது காதலும் தூது விட்டு வளர்ந்தது.
சமுத்திரகுப்தன் மறையுமுன்…
சந்திரகுப்தன் தந்தையிடம் சென்று அவனிடம் தன் காதலைக் கூறியிருந்தான்.
சமுத்திரகுப்தன் தனது தள்ளாத நிலையிலும் …
அவர்கள் இருவரது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தான்.
சந்திரகுப்தனும் துருவாதேவியும் தேன்பூக்களில் விழுந்த தேனீக்கள் போலாயினர்..
காதல் ஒரு போதை!
நினைத்தவுடனே அது போதை தரும்!
திருமணம் செய்து கொள்வதைவிட அதற்குக் காத்துக் கிடப்பதில் உள்ள சுகம்.
சுகமோ சுகம்…
சமுத்திரகுப்தன் காலமாகி வாரமிரண்டு சென்றது.
ராமகுப்தன் சந்திரகுப்தனை அழைத்தான்.
மந்திரியாரும் உடன் இருந்தார்.
ராமகுப்தன்:
“சந்திரகுப்தா!
தந்தையின் மரணம் நமது நாட்டையே ஆட்டிவிட்டது…
அரசன் இல்லாத நம் நாட்டை அந்நிய மன்னர்கள் தாக்க முயலுவர்.
அதை நீ தான் படைத்தலைமை ஏற்று தடுத்துக் காக்கவேண்டும்.
தந்தையார் சாகும் முன் மந்திரியாரிடம் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.
அதை அவர் சொல்லக் கேள்”
மந்திரியார் விஷயங்களைத் திரித்துக் கூறினார்:
“சந்திரகுப்தா!
மாமன்னர் தன் கடைசி நாட்களில் பெரும் துயரத்தில் இருந்தார்.
தான் மன்னனாவதற்காகத் தன் அண்ணன்களை அழிக்க நேர்ந்த கொடுமைதனை நினைத்து நினைத்துப் பெரிதாகப் புலம்பினார்.
அவர் அழுது அன்றுதான் நான் பார்த்தேன்”
மந்திரியின் குரல் தழுதழுத்தது.
நடிப்பில் அவர் சிவாஜி கணேசனை மிஞ்சினார்.
மந்திரி தொடர்ந்தார்:
“மன்னர் என்னிடம் சொன்னது:
மந்திரி… இதுபோல் நமது குப்தர் பரம்பரையில் இனி நடக்கக்கூடாது.
சந்திரகுப்தன் மாவீரன் … அவன் படைத்தலைவனாகி நமது நாட்டை எதிரிகளிடமிருந்து காக்க வேண்டும். ஆனால் அரசனாக என் மூத்தமகன் ராமகுப்தன்தான் வரவேண்டும். சந்திரகுப்தன் அவனை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும்.
இதை நீ அவனிடம் எடுத்துக் கூறிச் செய்வாயா? என்று கேட்டார். “
மந்திரி சொல்வதைக் கேட்டு சந்திரகுப்தனுக்கு மனம் உருகியது..
பாகாய் உருகியது.
“மந்திரியாரே!
தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு ஒன்றும் இல்லை…
ராமகுப்தனுக்கு என் ஆதரவு என்றும் உண்டு.
குப்தர்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு அவனது ஆட்சிக்கு என்னால் எந்த குந்தகமும் வாராது”
உண்மையாக … நேர்மையாக அவனது வாக்கு கம்பீரமாக ஒலித்தது.
சதிகள் … சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்திருக்கிறது..
‘இராமாயணத்திலிருந்து… பாகுபலி வரை’ சதிகள் காவியங்களை நடத்தி வந்துள்ளது.
மந்திரிகள் சூழ்ச்சி செய்வதும் ஊழல் செய்வதும் இந்நாளில் சகஜமாகி விட்டது.
அந்நாளிலும் அதற்கு விதிவிலக்கு இல்லை.
அடுத்த வாரமே ராமகுப்தனின் முடி சூட்டு நாள் குறிக்கப்பட்டது.
மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
ஆனாலும் சந்திரகுப்தன் மகிழ்வோடு ஆதரித்தான்.
முடி சூட்டும் நாளுக்கு முதல் நாள்..
ராமகுப்தன் மந்திரி தனக்குத் தந்த ரகசிய ஆலோசனையை அமுலாக்கத் தொடங்கினான்.
துருவாதேவியை அழைத்தான்.
“துருவாதேவி…
உனது அழகு பிரசித்தியானது..
உனது அறிவோ அபரிமிதமானது.
நீ மாபெரும் சாம்ராஜ்யத்திற்கு ராணியாக வேண்டியவள்.
நீ சந்திரகுப்தனுக்கு நிச்சயமாகி உள்ளாய்.
அவனை மணந்தால் நீ இளவரசியாகவே இருப்பாய்.
என்னை மணந்து அகில உலகின் முடி சூடிய ராணியாக விளங்குவாய்.
நான் உனது அடிமை“
துருவாதேவி நெருப்பில் விழுந்த மயில் போல் துடித்தாள்.
“இளவரசே!…
நான் ஏற்கனவே மணமாக உள்ளேன்.
சந்திரகுப்தர் எனது காதலர்.
என் கணவனாக உள்ளார்.
என்னை விட்டு விடுங்கள்”
தைரியமாகத்தான் சொன்னாலும் … அழுகையை அவளால் அடக்க முடியவில்லை..
ராமகுப்தன்:
“துருவாதேவி!
நான் நாளை அரசன்…
எனது ஆணைக்கு சந்திரகுப்தன் கட்டுப்படுவேன் என்று உறுதி கொடுத்திருக்கிறான். மேலும் நீ என் ஆணைக்குக் கட்டுப்படவில்லை என்றால் சந்திரகுப்தனுக்கும் ஆபத்து காத்திருக்கிறது”
அவன் குரலில் ஒரு அச்சுறுத்தும் தொனி..
மறுநாள்…
முடி சூட்டு விழா ஆரம்பத்தில்..
அமைச்சர் அறிவித்தார்:
“இளவரசர் முடி சூடுமுன், ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முதலில் நடைபெறும், பின் இருவரும் மகாராஜாதிராஜா- மகாராணி என்று முடி சூட்டப்படுவர்”
மக்கள் திகைத்தனர்.
சந்திரகுப்தன் நிலை குலைந்து போனான்.
துருவாதேவி மேடையில் ஏறினாள்:
“சந்திரகுப்தரே.. எனது திருமணம் தங்களுடன் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
உங்கள் பதில் என்ன”
சந்திரகுப்தன் பெரும் சங்கடத்திற்கு ஆளானான்.
அவனிடம் வீரத்திற்குக் குறைவில்லை.
ஆனால் இது என்ன சோதனை.
“துருவாதேவி!
நீ என்றுமே என் இதயத்தில் இருப்பாய்.
என்றாவது ஒரு நாள் நான் மன்னனானால் நீ தான் என் ராணி..
ஆனால்… இன்று நான் என்ன சொல்வேன்?
அண்ணன் நாட்டைக் கேட்டான்.,,
கொடுத்தேன்..
அண்ணன் என் கண்களைக் கேட்கிறான்…
அன்பால் விளைந்த கொடுமை…
என்ன செய்வேன்!”
புலம்பினான்.
துருவாதேவி சந்திரகுப்தன் தன்னைக் காப்பான் என்று நம்பியிருந்தாள்…
திக்பிரமை அடைந்தாள்.
ராமகுப்தன்:
“சந்திரகுப்தா! மன்னனாகும் நான் உன்னிடம் வேண்டுவது இது ஒன்று தான்.
மேலும் இது குப்தச் சக்ரவர்த்தியின் ஆணை..
இதை மீறுவது ராஜத்துரோகம் மட்டுமல்ல.
தந்தையின் ஆணையை மீறுவதுமாகும்.
தந்தை உன்னை எனக்கு என்றும் பணியுமாறு ஆணையிட்டிருக்கிறார் என்பதை அறிவாயல்லவா?”
காதலர் இருவரும் துடித்தனர்.
விதி வலியது.
ராமகுப்தன்- துருவாதேவி திருமணம் முடிந்தது..
ராமகுப்தன் குப்தச் சக்ரவர்த்தியானான்..
‘பாகுபலி- The Beginning’ போல இது ராமகுப்தன் – துவக்கம்.
இனி வருவது ‘பாகுபலி- The Conclusion’….
மன்னிக்கவும்..
ராமகுப்தன் – மறைவு.
காத்திருங்கள்…
விக்ரம் வேதா – விமர்சனம்
விஜய் சேதுபதி : நான் ஒரு கதை சொல்லட்டா?
மாதவன்: அது மட்டும் வேண்டாம்… என்னென்னவோ சொல்லி என்னை செண்டிமெண்டா யோசிக்க வைச்சுட்டு நீ பாட்டுக்கு முருங்க மரம் ஏறிடுவே!
விஜய் சேதுபதி : அது எப்படி சார்! என் கண்ணில படம் பாத்திங்களா ? அப்படியே சொல்றீங்க?
மாதவன்: ஏய்! வால் இருக்கிறதனால பூனையும் எலியும் ஒண்ணுன்னு ஆகுமா? நாம ரெண்டு பேரும் தாடி வெச்சா ஒண்ணாயிடுவோமா? திருடன் திருடன் தான். போலீஸ் போலீஸ் தான் !
விஜய் சேதுபதி: சும்மா சொல்லக் கூடாது சார் ! படம் முழுசும் நீ டக்கரா வெறைப்பா உர்ருன்னு இருக்கே! லாயர் பொண்டாட்டி கிட்டேயாவது கொஞ்சம் குஜாலா இருக்கக் கூடாது?
மாதவன்: அதையும் நீதானே கெடுத்தே! உனக்கு அவ வக்காலத்து வாங்கினதினால என் வீட்டிலேயும் பிரச்சினை! உனக்கென்ன அப்படி ஒரு என்ட்ரி? ஷோலே அம்ஜத்கான் மாதிரி.
விஜய் சேதுபதி: பின்னே! நீ பாட்டுக்கு டுப்பு டுப்புன்னு எங்க ஆளுங்களை எல்லாம் சுட்டுட்டு நிம்மதியா தூங்கிடுவே! நான் சும்மா இருக்க முடியுமா? அதனாலதான் நானும் ரவுடிதான்னு காமிச்சேன்!
மாதவன்: ஆனாலும் படம் பூராவும் நீ கலக்கறே! டசக்கு டசக்குன்னு பாட்டு ! அட்டகாசமான பிஜிஎம்! நிறைய பன்ச் டயலாக் வேற! உன் காட்டுலே மழை!
விஜய் சேதுபதி: ஏன் சார்! உனக்கு என்ன கொறைச்சல். சிரிச்சா ரொம்பவும் அழகா இருக்கே! பொண்டாட்டியைக் கொஞ்சி ‘யாஞ்சி’ன்னு செம பாட்டு பாடறே! அது என்ன சார் யாஞ்சி? எனக்கும் ரொமான்ஸ் கதை இருக்குன்னு சொல்றேன், எவனும் கேக்கமாட்டேங்கிறான்.
மாதவன்: உன் கதையில செண்டிமெண்ட் தூக்கலா இருக்கு. அதை வைச்சுட்டுதானே இரும்பா இருந்த என்னை வளைச்சுப்பிட்டியே !
விஜய் சேதுபதி : நான் செண்டிமெண்ட்காரன்தான். என் தம்பி, அவன் பொண்டாட்டி, கூட இருக்குற பசங்க – இவனுகளுக்கு பிரச்சினைன்னு வந்தா அதத் தீக்கறதுக்கு என்ன வேணுமுன்னா பண்ணுவேன்.
மாதவன்: இதுல என்ன பெருமை வேண்டியிருக்கு? கடைசியில நீ தான் துரோகத்தையும் காட்டிக் கொடுத்தே! என் உயிரையும் காப்பாத்தினே! அது சரி , சண்டை போடும்போது ‘ நான் நல்லா கன் பிடிக்கிறேனா சார்னு ‘ லொள்ளு காட்டி ஸ்டைல் வேற பண்ணறே? அப்ளாஸ் வாங்கவா?
விஜய் சேதுபதி: அது கிடக்கட்டும் சார்! கடைசியா ஒரு கேள்வி . இந்தக் கதையில கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்கிறேன். “செஞ்சவனைப் போடறதா? இல்லே செய்யச் சொன்னவனப் போடறதா?”
மாதவன் : நான்தான் ஒத்துக்கிட்டேனே! செய்யச் சொன்னவனைத் தான்னு !
விஜய் சேதுபதி: அப்ப சரி ! நாம என்ன கலக்கினாலும் நம்மளை நடிக்க வைச்ச டைரக்டர்கள்தானே கிரேட்?
மாதவன்: சந்தேகமேயில்லை! அவங்கதான் கிரேட்! ஆனா அதைச் சொல்லி நீ தப்பிச்சுக்க முடியாது.
விஜய் சேதுபதி: நீயும்தான் சார்!
(இருவரும் துப்பாக்கியை எடுத்து மற்றவர் மீது குறி வைக்கிறார்கள்)
ஊமைக்கோட்டான் என்கிற ஞான பண்டிதன் – புலியூர் அனந்து
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை – புத்திசாலி இல்லை”
காலையில் எழுந்தவுடனேயே காப்பி சாப்பிடுவதற்கு முன்பே ஏதாவது ஒரு பாடல் வரிகள் (பெரும்பாலும் சினிமா பாட்டுதான்) என் மண்டைக்குள் சுற்ற ஆரம்பித்துவிடும். மேலே சொன்னது இன்றைய பாட்டு. இப்படி தத்துவப்பாடல் என்று இல்லை. சமயத்தில் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ கூட வரும். (‘இந்தாடிப் பொண்ணு வடை முறுக்கு’ம் வரலாம்)
என் அலுவலகத்தில் ஒருவர் விசிலிலேயே பாட்டிசைப்பார். ‘தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம்’ விசிலடித்தால் காலையில்தான் எழுதுபொருள் வியாபாரி சபாபதி வந்து போயிருப்பார். ‘அப்பனைப் பாடும் வாயால்’ பாட்டா, அப்படியானால் பெரும்பாலும் எம் கே ட்ரான்ஸ்போர்ட் கணக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பார்.
அதுமாதிரி, என்னைச் சுற்றும் பாடல்களுக்கு நேற்றைய நிகழ்வுகளிலோ அல்லது கனவிலோ தொடர்பைத் தேடித்தேடி எனக்கு அலுத்துவிட்டது.
போகட்டும். இந்த சந்திரபாபு பாட்டிலே இரண்டு விதமான மனிதர்களைக் குறிப்பிட்டாலும் நான் அவர் குறிப்பிடாத மற்ற இரண்டுவித மனிதர்களில் ஒருவன். (புத்திசாலியும் அல்ல, வெற்றி கண்டவனும் அல்ல). ‘ஆயிரம் பேர் நடுவில் நீ நடந்தால்’ பாட்டில் வருகிற மாலைகள் விழாத 999 பேரில் ஒருத்தன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது கலிங்கப் போர் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் இறந்து கிடக்கும் வீரர்களில் ஒருவனாகத்தான் (அதுவும் கடைசி வரிசையில்) படுத்துக்கிடக்க நேர்ந்தது.
இப்படி அடையாளமில்லாத யாரோ ஒருவனாகவே எட்டாம் வகுப்பின்போது இருந்திருக்கிறேன் என்றால், அதற்கு முன் ஏதாவது நினைவிற்கு வருகிறதா என யோசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் அத்தை, மாமா, சின்னம்மா, பெரியம்மா, பெரியப்பா, பெரியம்மா என்று பலரும் உண்டு. அவர்களது பிள்ளைகள் என் சம வயதிலும், பெரியவர்களாகவும், சின்ன வயசுக்காரர்களாகவும் நிறையப்பேர். ஒவ்வொரு பையன் அல்லது பெண்ணைப்பற்றியும் ஏதாவது சிறு வயதுக் குறும்போ, புத்திசாலித்தனமோ, வேடிக்கையோ கொண்ட குட்டிக்கதைகள் பல பேசிப் பேசியே நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
என்னைப்பற்றிய கதைகள் இல்லையென்றே சொல்லிவிடலாம். மரத்திற்குப் போட கரையான் எண்ணெய் வாங்கிவரச் சொல்ல, நான் குழந்தைகளுக்குப் போடும் கரப்பான் எண்ணெய் வாங்கிவந்து அடி வாங்கியது நினைவில் இருக்கிறது.
ஒரு குட்டிச் செய்தி மட்டும் உண்டு. வாசலோடு போன கீரைக்காரியைக் கூப்பிடுமாறு வீட்டிற்குள்ளிருந்து பாட்டி குரல் கொடுத்திருக்கிறாள். திண்ணையில் உட்கார்ந்திருந்த நான் சும்மா இருந்துவிட்டேனாம். பாட்டி ‘கடன்காரா.. கட்டையில போக’ என்று வழக்கமான ஆசீர்வாதத்துடன் சத்தம் போட்டாளாம். முட்டுச் சந்தில் போய்க்கொண்டிருந்த கீரைக்காரி, திரும்பி இப்படித்தானே வரணும் என நான் அமைதியாகப் பதிலளித்தேனாம். என்னுடைய மூன்று நான்கு வயதில் நான் ஒன்றும் மோசமில்லை என்று சொல்வதற்காக இந்தக் கதையைச் சொல்வார்கள்.
ஆனால் எப்படி நாளடைவில் என் பெயர் ரிப்பேர் ஆகியது என்று தெரியவில்லை. சரஸ்வதி சபதத்தில் பேசமுடியாத சிவாஜி புலவனாகவும் கோழை ஜெமினி வீரனாகவும் ஆவதாக வரும். என் கேஸ் தலைகீழோ என்னவோ? இல்லையென்றால் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே’ என்பதுபோல் புத்திசாலிக் குழந்தைதான் என்றும் வருமோ என்னவோ? போகப்போகத்தான் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் போலிருக்கிறது.
இஸ்கூல்ல போடுகிற அன்றைக்குப் பல பிள்ளைகளுடன் ‘ப்ளஷரில்’ (அந்தக் காலத்தில் ‘கார்’ பிளஷர் என்றுதான் சொல்லப்படும். கார் என்று சொன்னால் அது பஸ்.) போனாலும் மறுநாள் முதல் வயல்காடு, கால்வாய்கரை என்று கால்நடைதான். ஆடிப்பாடிக்கொண்டு தூக்குச்சட்டியில் சாப்பாட்டோடு பள்ளிக்குப் போனதும், ஒரு காரணமுமின்றி சில நாள் வாய்க்காலில் குதித்து விளையாடிவிட்டு ஈரத்தோடேயே ஸ்கூல் போனதும் லேசாக நினைவிருக்கிறது. என்றாவது கூட வந்த பையன்கள் மீன் பிடிக்க முயன்றால் நான் பள்ளிக்கு ஓடிவிடுவேன். சுத்த சைவம் அல்லவா?
அரைக்கண் மூடிய நிலையிலேயே தாமோதரன் சார் பாடம் நடத்தியதும், ஸ்கூலுக்கு வராத பயல்களை வந்திருக்கும் பையன்களில் சிலரை ஏவிக் கூட்டிவரச் செய்ததும் நிழலாக நினைவில் இருக்கிறது. நான் நன்றாகப் படித்தேனா இல்லை மக்கு என்று பேரெடுத்தேனா என்பது நினைவில்லை.
இதெல்லாம் மூன்றாம் வகுப்பு வரை. அண்ணனுக்கு ஆறாம் வகுப்பிற்கு அந்த ஊரில் பள்ளி கிடையாது. அப்போது என் தாத்தா தான் குடும்பத் தலைவர். அவருக்கு என்ன தொழில் என்று நினைவு இல்லை. அப்பாவிற்கு டவுனில் ஒரு ஆபீஸ் வேலை கிடைத்தது, தாத்தாவும் ஒரு வக்கீலிடம் வேலைக்குச் சேர்ந்தது, இவற்றோடு அண்ணன் ஸ்கூலையும் முன்னிட்டு குடும்பத்தோடு அந்த நகரப் பிரவேசம்.
‘நாலாங் க்ளாஸ்’ படிக்கும்போதுதான் யூனிபார்ம் என்னும் சீருடை ஆரம்பித்தது. எல்லாப் பள்ளிகளுக்கும் காக்கி நிக்கரும் வெள்ளைச் சட்டையும்தான். இப்போதுபோல பல வண்ணங்களில் கட்டம்போட்ட கோடுபோட்ட சட்டையெல்லாம் கிடையாது. ஆங்கிலப் பாடங்கள் ஆறாம் வகுப்பில்தான் தொடங்கும். வகுப்பு லீடர், ரெட் ஹவுஸ், எல்லோ ஹவுஸ், ப்ளூ ஹவுஸ், விளையாட்டுப் பீரியட், மாஸ் டிரில், இன்ஸ்பெக்ஷன் என்று அதிகாரிகள் வருவது போன்றவைகள் அறிமுகமான காலம் அது. ‘பெரியவனே’ என்று ஆசிரியர்களால் விளிக்கப்பட்டு, அந்தப் பெயர் நிலைக்கத் தொடங்கியதும் அப்போதுதான்
முதல் முறையாக பெஞ்சில் ஏறி நின்றது பாட சம்பந்தமாக இல்லை. மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அது கடைசி பீரியட். கந்தசாமி சார் பூகோளம் நடத்திக்கொண்டு இருந்தார். பக்கத்திலிருந்த ரவி, என்னை நிமிண்டி கிசு கிசு என்று ஒரு விஷயம் சொன்னான். “வகுப்பில் இரண்டு பையன்கள் பேசிக்கொண்டு இருந்தால், கந்தசாமி சார், ‘வொய் ஆர் யூ டாக்கிங்?’ என்று எழுந்திருக்கச் சொல்வார். தமிழில் பாடம் நடத்தும்போது ஏன் இங்க்லீஷில் கேட்கிறார், அதுவும் பேசுகிறவனை விட்டுவிட்டுச் சரியாகக் கேட்டுக்கொண்டு இருப்பவனைத்தான் எழுந்திருக்கச் சொல்கிறார் என்று புரிவதில்லை” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கந்தசாமி சார் என்னைப் பார்த்து, “யூ ஸ்டாண்ட் அப். வொய் ஆர் யு டாக்கிங்?” என்றதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சார் கடுப்பாகி வகுப்பு முடியும் வரை என்னை பெஞ்சில் ஏறி நிற்க வைத்துவிட்டார். அவமானம் ஆத்திரம் தாங்காமல் குளத்தங்கரையில் உட்கார்ந்து ஒரு பாட்டம் அழுதுவிட்டு வீடு போய்ச்சேர்ந்ததாக ஞாபகம்.
அப்போதெல்லாம் வகுப்பு லீடர், ஹவுஸ் லீடர் என்றெல்லாம் இருந்ததில்லை. என்னைப்பற்றி நல்லவிதமாகவோ பொல்லாத விதமாகவோ பேச்சும் கிடையாது. முதல் முதலாகக் கெட்ட பெயர் வாங்கிய சம்பவம் இதுதான்.
அந்த வாரம் கடைசி இரண்டு நாளும் நான் ஸ்கூல் போகவில்லை. குலதெய்வத்திற்குச் செய்வதற்காக ஊருக்குப் போய்விட்டோம். சனிக்கிழமை அடுத்த தெரு கோபாலைப் பார்த்து என்ன விசேஷம் என்று கேட்டேன். திங்கள் காலையில் சரித்திரம் டெஸ்ட் என்று பாடங்களின் பெயர்களையும் சொன்னான். நான் தயாராகத்தான் ஸ்கூல் போனேன்.
ஆனால் உண்மையில் அன்று சயின்ஸ் டெஸ்டாம். கோபால் வேண்டுமென்று பொய் சொல்லியிருக்கிறான். எனக்கு சோகமும் ஆத்திரமும் தாங்கமுடியவில்லை. தெரிந்ததை எழுதியிருக்கலாம். என்ன கிறுக்குத்தனமோ, வெறும் பேப்பரைக் கொடுத்துவிட்டேன். சயின்ஸ் வாத்தியாரும் சரி, வீட்டிலும் சரி, என்ன காரணம் என்று கேட்காமலேயே ரொம்பத் திமிர் என்று தண்டனை கொடுத்தார்கள். என்னுடைய பக்க நியாயத்தை அல்லது காரணத்தை நானாகவாவது சொல்லியிருக்கலாம் இல்லையா? ஏன் சொல்லவில்லை?
இப்போது நினைக்கையில் தோன்றுகிறது —- வாயைத் திறக்க வேண்டிய சமயத்தில் திறக்காமல் கஷ்டப்படுவது என்னுடைய ‘கேரக்ட’ராகத் தொடங்கியது அப்போதுதானோ?
வகுப்பில் ஓரிரு முரட்டுப் பையன்கள் உண்டு. (ஒருவன் சோமசுந்தரம், இன்னொருத்தன் ஆண்டனி, மூணாவதா ஒருவனும் உண்டு. பெயர் நினைவில்லை). அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அலட்சியமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆசிரியர்களைப்பற்றிப் பேசும்போது ஒருமையில் பேசுவார்கள். அவர்களுக்கு மற்ற மாணவர்களிடையே ஒரு ‘ஹீரோ இமேஜ்’ கூட சமயத்தில் ஏற்படும். என்ன காரணமோ, நான் அந்த குரூப்பில் இல்லை.
(சொல்ல ஆரம்பித்ததும்தான் எப்படிச் சொல்லலாம் என ஒரு பிடிப்பு வருகிறது. முடிந்தவரையில் காலக்கிரமத்தில் சொல்வது சௌகரியமாக இருக்கிறது.)
எமபுரிப்பட்டணம் (எஸ் எஸ்)
முதல் பகுதி :
“ தந்தையே ! இது என்ன புதுக் கதை? என்னிடமும் குறைபாடு இருக்கிறதா? குறைபாடு உள்ளவற்றைத் தங்களால் படைக்க முடியுமா?”
“ மகளே! நீ கேட்கும் கேள்வியின் அர்த்தம் உன் தந்தைக்குப் புரியாதது அல்ல. தேவ உலகத்தைப் படைக்கும் தேவ சிற்பி அவர். குறை என்ற சொல்லே அவர் எண்ணத்தில் என்றைக்கும் இருந்ததில்லை.
ஆனால் உன்னைப் படைக்கும் போது அவர் மனதில் ஏதோ ஒரு பொன்மான் ஓடியது. அதனால் என் கருவில் நீ மானாக உருவெடுத்தாய். ஜனித்த உடனேயே அதை உணர்ந்த அவர் அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவரால் முடியாதது ஏதேனும் உண்டா என்ன? பொன் மானாகக் கருவில் இருந்த உன்னை உருக்கிப் பிறகு பெண்ணாக மாற்றினார். அதனால் கோபம் கொண்ட பிரும்மர் பிறப்பை மாற்றும் அதிகாரத்தை இவரிடமிருந்து பறித்து விட்டார். அதைப்பற்றி நாங்கள் அதிகம் கவலைப் படவில்லை.
நீ பிறந்த உடனேயே உனக்குச் சூரியதேவன்தான் கணவன் என்பதை அன்றே தீர்மானித்தோம். ஆனால் ஒரு முறை நீ விளக்குக்கு அருகில் சென்றாய். அப்போது உன் நெற்றியிலும் முதுகிலும் சிவப்புத் திட்டுக்கள் தோன்றின. நீ உருக ஆரம்பித்தாய். அப்போதுதான் நான் மிகவும் பயந்தேன். உன் தந்தை உன்னை மாற்ற முயற்சி செய்தார். மறுபடியும் உன்னை உருக்கித்தான் செய்யவேண்டும் என்று சொன்னார். பிரும்மர் கோபமும் நினைவுக்கு வந்தது. அதனால் நான் உன்னை மறுபடி உருக்கச் சம்மதிக்கவில்லை. வேறு வழிகளைக் காணும்படி அவரை வேண்டிக்கொண்டேன்.
அவரும் அரை மனதுடன் சந்திரனின் அமைதிக் கடலில் இருக்கும் ஒரு வகைப் பொடியைப் பாரிஜாத மலரில் தோய்த்து உன் தேகமெல்லாம் பூசினார் . அதற்குப்பிறகு இந்த உலகில் உள்ள எந்த வெப்பமும் உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.
மேலும் சூரியதேவனுக்கு உன்னைத் திருமணம் செய்யும் எண்ணத்தையும் கைவிட்டோம். சூரியனின் வெப்பத்தை நீ தாங்குவாயா என்ற பயம்தான் காரணம். அதனால் உன்னைச் சூரியனிடமிருந்து மறைக்க விரும்பினோம். காற்றில் இருக்கும் ஒரு முலக்கூற்றைப் பிரித்து அதில் மூன்று பங்கு சேர்த்து விண்ணில் குடைபோல அதைப் பரப்பி வைத்தோம். சூரியனின் வெளிச்சம் வரும்; ஆனால் அவனுடைய வெப்பக் கண்கள் அந்தக் குடையைத் தாண்டி உன்னை அணுக முடியாது.
இப்படி உன்னைப் பொத்திப்பொத்தி வளர்த்தோம். ஆனால் சென்ற ஆண்டு நம் கானகம் பற்றிஎரிந்தபோது அதிலிருந்து கிளம்பிய புகை அந்தக் குடையை ஓட்டை போட்டுவிட்டது என்று தெரிகிறது. சூரிய தேவன் உன்னைப் பார்த்தது மட்டுமல்லாமல் உன்னுடன் காந்தர்வ விவாகமும் செய்து கொண்டான். உன் உடலில் பூசிய பூச்சு முழுவதும் அழிந்துவிட்டது.
நீ அவனுடன் மணம் புரிந்துகொண்டு வாழவேண்டுமானால் சூரியதேவன் தன்னுடைய கொடும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். அதற்குத் தந்தையாரிடம் உள்ள காந்தப் படுக்கை மூலம் சாணை பிடித்துக்கொள்ள ஒப்புக் கொள்ளவேண்டும். தொடந்து ஒவ்வொருமுறை சூரிய கிரகணத்தின் போது காந்தச் சாணை பிடித்துக்கொள்ளவேண்டும். அதற்கு அவனைச் சம்மதிக்க வைக்கவேண்டியது உன் பொறுப்பு “ என்றாள் சந்தியாவின் அன்னை.
‘தன் பிறப்பில் இத்தனை மர்மமா? தன் குறைபாட்டை எப்படிப் போக்கிக் கொள்வது ? சூரியதேவன் தனக்காகத் தன் பிரகாசத்தைக் குறைத்துக் கொள்வாரா?’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டே கவலையில் ஆழ்ந்தாள் ஸந்த்யா !
ஆனால் சூரியதேவனோ விஸ்வகர்மாவின் நகரத்தில் தனக்குக் கிடைக்கும் உபசரிப்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.
இரண்டாம் பகுதி :
எந்தச் சுழ்நிலையிலும் தன்னிலை தவறாத எமதர்மராஜன் கம்பீரத்தோடு அவைக்கு முன் வந்து நின்றான். அங்கு குழுமியிருக்கும் இலக்கிய ஆர்வலர்களைப் பார்த்தான். மேடையில் அமர்ந்திருக்கும் ஜெயகாந்தனைப் பார்த்தான். அவருக்கு அருகில் அமர்ந்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் எமியையும் பார்த்தான்.
மேடையில் பேச எழுந்த பேச்சாளர் பேச்சைத் தொடங்குவதற்கு முன் எழுப்பும் நிசப்தம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது கேட்க அமர்ந்திருப்போரை ஒருவித பய உணர்ச்சியில் – கிலேசத்தில் மிதக்க வைக்குமாம். சாதாரண பேச்சாளருக்கே இந்த நிலை என்றால், எமதர்மராஜன் நிற்கும்போது அங்கிருந்த அனைவரும் தாங்கள் பூலோகத்தில் அனுபவித்த மரண பயத்தை அந்தச் சில வினாடிகளில் அனுபவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் முதலில் வரவேற்றுப் பேசிய நண்பர் பூலோகத்திலேயே சர்ச்சைக்குப் பேர்போனவர். அவர் பேசுகிறார் என்றால் அவருடைய ஆதரவாளர்கள் பத்துப் பேரைத் தன் பாதுகாவலுக்காக அழைத்துக் கொண்டு போவார். அவர் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் யாரவது முன்னணி எழுத்தாளரைப்பற்றி ஏதாவது தரக்குறைவாகச் சொல்லுவார். அதைக் கேட்கவும், அதன் காரணமாகக் கூட்டத்தில் கலாட்டா செய்வதற்கும் நிறைய ஆட்கள் வருவார்கள். சொல்லப்போனால் அவர் கூட்டங்களில் ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே அதிகம் வருவார்கள். சில சமயம் அவர் மீது கல்லும் வீசப்படும். அவர் எதற்கும் அஞ்சா நெஞ்சர். ஒருமுறை அவர் மீது எறிந்த செருப்பை லாவகமாகப் பிடித்துக்கொண்டு அதைக் கோபாவேசமாக ஆட்டிக்கொண்டே ஒரு மணி நேரம் பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படிப் பேசி இலக்கியக் கூட்டத்தை அவமதித்துவிட்டார் என்று ஒருவர் அவர் மீது மான நஷ்ட வழக்கு வேறு போட்டார்.
அப்படிப்பட்ட அவர், இன்று எமதர்மராஜனைக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு, நரகாபுரி மக்களுக்காக வாதாடி, மேடையிலேயே பதில் கூறுமாறு எமனுக்கு உத்தரவிட்டது ரொம்பவும் அதிகம் என்று அனைவரும் பயந்தனர். அதனால் எமனின் நிசப்தம் அனைவரையும் ஊசி முனையில் நிற்க வைத்தது. அந்த அமைதியைக் கிழித்தது எமனின் கணீர் என்ற குரல்.
“ உங்கள் இலக்கியக் கூட்டத்தில் – அதுவும் மதிப்பிற்குரிய ஜெயகாந்தன் பேசும் விழாவில் கலந்து கொள்வதற்காக நானும் என் சகோதரியும் வந்தோமே தவிர நரகாபுரி மக்களின் நிலைமையைப் பற்றி விவாதிப்பதற்கு அல்ல. இருப்பினும் கேள்வி என்று வந்தபிறகு அதை ஒதுக்கித் தள்ளுவது முறையல்ல.
முதலாவதாக உங்களுக்கு இங்கு கிடைக்கும் சுகமும் துக்கமும் நாங்கள் தருவதல்ல. நீங்களே தேடிக்கொண்டவை. அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். தினை விதைத்தால் தினைதான் கிடைக்கும் ; வினை விதைத்தால் வினைதான் கிடைக்கும். இது ஆண்டவன் தீர்ப்பு அல்ல. நீங்கள் செய்த நல்லவற்றையும் கெட்டவற்றையும் சித்திரகுப்தன் மிகத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறான். அதன் கருத்துப்படி தர்மம் , நியாயம் ஆகியற்றின் அடிப்படையில் தர்மராஜனான நான் கொடுத்த தீர்ப்புக்கு, மறு பரீசிலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆயினும் நரகாபுரியில் துடிக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு சலுகை தர விரும்புகிறேன். அதற்காகத்தான் என் சகோதரி எமியையும் அழைத்து வந்திருக்கிறேன். அவள் என்ன செய்யப் போகிறாள், அதனால் நரகாபுரி மக்களின் கஷ்டம் எப்படிக் குறையப் போகிறது என்பதைப் பற்றி எமி பேசும் போது எடுத்துரைப்பாள். இப்போது நம் மதிப்பிற்குரிய நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் உரையைக் கேட்க உங்களைப்போல நானும் ஆவலாயுள்ளேன். கேட்போமா? “ என்று கூறிவிட்டு அமர்ந்தான் எமதர்மராஜன்.
அட ராஜாராமா….! நித்யா சங்கர்
காட்சி – 1.
(ராஜாராமன் வீடு. ராஜாராமன் குளித்து ஆபீஸ் செல்ல டிரஸ்
செய்து கொண்டு ஹாலுக்கு வருகிறான்)
ராஜா : (கொஞ்சலாக) மனோ… மனோ…
(மனோரமா சமயலறையிலிருந்து வருகிறாள்)
மனோ: (எரிச்சலோடு) அடாடாடா… ஏன் என்ன வேணும்..?
ராஜா : (அவள் கையைப் பார்த்துவிட்டு கிண்டலாக) ஆ..கையிலே
கரண்டி கிரண்டி ஒண்ணும் இல்லையே…!
மனோ: ஆமாமா.. அதுக்குத்தான் குறைச்சல்..
ராஜா : பின்னே.. நீ வற தோரணையைப் பார்த்தா ஒரே போடா
போட்டுடுவே போலிருக்கே…! நான் கூப்பிட்ட தோரணை
என்ன… நீ வர வேகமென்ன… ச்ச்ச்.. பரிபாடற்குரியது…
பரிபாடற்குரியது…
மனோ: பேச்சுக்கு மட்டும் குறைச்சலே இல்லே…
ராஜா : ம்… ஆதௌ கீர்த்தனாரம்பத்துலே என்று தொடங்குவாங்க… நீ என்னடான்னா… அடாடான்னு ஆரம்பிச்சு வெச்சிருக்கே… பார்ப்போம்.. நடத்து..
மனோ: உங்களுக்கென்ன..?
ராஜா : மனோ.. நீ இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல்?
வேளா வேளைக்கு சமைச்சுப் போட்டுடறே.. உப்பு,
காரமெல்லாம் சரியா இருக்கா என்பதெல்லாம் வீண்
கேள்வி. சாப்பிடறது நான்தானே… அதுக்குத்தானே
உன்னைக் கல்யாணம் பண்ணிட்டிருக்கேன்.
மனோ: என்ன..? என்ன சொன்னீங்க..?
ராஜா : ஆமா… டிரஸ்ஸைத்தான் எடுத்துக்கோயேன்.. டிரஸ்ஸ¤ம்
தெச்சுக் கொடுத்துடறே.. ·பிட் சரியா இருக்கான்னால்லாம்
கேட்டுக்கக் கூடாது…
மனோ: ஆமாமா… உங்களுக்கெல்லாம் தெச்சுத் தரேன் பாருங்க..
என்னைச் சொல்லணும்…
ராஜா : நான் நல்லா இருக்குன்னுதானே சொல்றேன். அதனாலே
தானே அதை ஹோம் கன்ஸம்ஷனுக்கு வெச்சுட்டு
வெளி விவகாரத்துக்கு வேறே டெய்லரை எங்கேஜ்
பண்ணிட்டிருக்கேன்.
மனோ: (கண்ணைக் கசக்கிக் கொண்டு) இங்கே பாருங்க இனிமேல்
ஒண்ணும் பேசாதீங்க.. என்னை அவமானப்படுத்தறதுலே
உங்களுக்கு என்னதான் இன்பம் கிடைக்குதோ..?
ராஜா : ஐயோ.. உன்னையா… நானா..? அவமானப்படுத்துறதா..?
அப்புறம் நான் இந்த வீட்டிலே எப்படி இருக்கிறது..?
எனக்கு வேறே போக்கிடம் ஏது?
மனோ: ஏன் இப்படி எரியற நெருப்பிலே எண்ணையை வார்க்கறீங்க..?
ராஜா : ம்… அப்பத்தானே குப்புன்னு புடிச்சு கபகபன்னு எரியும்..
எரியற நெருப்பிலே பின்னே தண்ணியா வார்ப்பாங்க..?
மனோ.. ஒரே ஒரு கேள்வி… இதுக்கு விடை சொல்லு
பார்க்கலாம்… நெருப்போ, புகையோ இல்லாமல்
கொழுந்து விட்டு எரியறது எது..? சொல் பார்க்கலாம்..?
மனோ: (எரிச்சலோடு) உங்க கேள்வியைக் கொண்டு குப்பையில்
போடுங்க..
ராஜா : (சிரித்துக் கொண்டே) ஏன்.. நான் சொல்லட்டுமா.. ஹியூமன்
மைன்ட்… இப்போ உன் மைன்ட் எரிஞ்சிட்டிருக்கு பார்…
மனோ: ஆமாமா… அதையெல்லாம் பார்த்து விசாரிக்க உங்களுக்கெங்கே டைம்..?
ராஜா : அதுக்கு டைம் இல்லாமலா உன்கிட்டே பேசிண்டிருக்-
கேன்..? நானும் உன்னை சிரிக்க வைக்கணும்னு என்ன
வெல்லாமோ சொல்லிப் பார்க்கிறேன்… முடியலையே…
ஆமா.. இன்னிக்கு என்ன தேவியின் முகம் பார்க்கச்
சகிக்கலே…
மனோ: என் கவலை எனக்கு.. நீங்க எதுக்கு அதைத் தெரிஞ்சுக்-
கிட்டு வேதனைப் படணும்..?
ராஜா : ஓ.. தேவிக்கு அத்தனை கோபமா..? இங்கே பார் மனோ..
உன் வேதனையைப் பார்த்துட்டு நான் ஆனந்தமா இருக்க
முடியுமா..? கணவன் மனைவவின்னு உறவை ஏன்
ஏற்படுத்தி இருக்காங்க தெரியுமா..? அவங்களுக்குள்ள
இன்பங்களையும், துன்பங்களையும் பங்கிட்டுக் கொண்டு
ஒருவருக்கொருவர் ஆதரவா இருக்கணும்னுதானே..!
உன்கிட்டே என்ன நான் கூடத் தெரிஞ்சு கொள்ளக்
கூடாத ரகசியம் இருக்கா என்ன..?
மனோ: ஆமாமா.. போதனை பெரிசாத்தான் இருக்கு.. போதிப்பவங்களும் அதைப் ப்ராக்டீஸில் கொண்டு வந்தா
தேவலை….
ராஜா : ஓ… அதுதானா? உனக்குத் தெரியாத இரகசியம்
என்கிட்டே என்ன இருக்கு? நான்தான் ஆபீஸிலிருந்து
வீட்டுக்கு வந்ததும் டேப் ரிகார்டர் மாதிரி கடகடன்னு
அன்னன்னிக்கு நடந்ததை எல்லாம் ஒப்பிச்சிடறேனே..!
மனோ: அப்போ எனக்குத் தெரியாத இரகசியம் உங்ககிட்டே
ஒண்ணுமே இல்லையா..?
ராஜா : ஊஹூம்… பார் மனோ… நான், பலராமன், கோவிந்தன்,
கிருஷ்ணன், நாலு பேருமா ஸண்டே.. ஸண்டே எக்ஸ்கர்ஷன் போயிட்டு வரோமே… சாதாரணமா ·ப்ரண்ட்ஸெல்லாம் எக்ஸ்கர்ஷன் போய்ட்டு வந்தா அப்போ நடந்ததையெல்லாம் வைஃப் கிட்டே சொல்லிட்டா இருப்பாங்கா..? அதைக் கூட நான் உன்னிடம் ஒப்பிச்சிடறேனே.. அப்படியும் நான் ஏதோ மறைச்சிருக்கிற
மாதிரியல்லவா பேசறே..?
மனோ: ம்… அதைத்தானே கேட்டேன்… என் கிட்டே எக்ஸ்கர்ஷன்
போய்ட்டு வரேன்னு சொல்லி ஸண்டே ஸண்டே எங்கே
போறீங்க..?
ராஜா : (திடுக்கிட்டு குழப்பத்தோடு) என்ன மனோ..? இப்படிக்
கேட்கறே..? எக்ஸ்கர்ஷன்தானே போய்ட்டு வரோம்..
மனோ: (கோபத்தோடு) என்னை இனியும் நீங்க ஏமாத்த முடியாது.
நேத்து தற்செயலா உங்க ஃப்ரண்டு கிருஷ்ணன் மனைவி
கமலாவைப் பார்த்தேன். பேசிட்டிருக்கும்போது உங்க
எக்ஸ்கர்ஷனைப்பத்திப் பேச்செடுத்தேன்.. அவளுக்கு
ஒரே ஆச்சரியமாப் போச்சு.. ஸண்டே அவ ஹஸ்பென்ட்
வெளியிலே போறதேயில்லையாம்.. போறதா இருந்தா
அவளையும் கூட்டிக்கிட்டுத்தான் போறாராம்…
ராஜா : (திடுக்கிட்டு) என்ன..? அவளைப் பார்த்தாயா..? எல்லாம்
தெரிஞ்சிடுத்தா..?
மனோ: (பாதி அழுகையும், பாதி கோபமுமாக) நான் உங்களுக்கு
என்ன கெடுதல் செய்தேன்..? என்கிட்டே உண்மையை
ஏன் மறைக்கறீங்க…?
ராஜா : ஸாரி மனோ.. அந்த ஒரு விஷயத்தைப்பற்றி மட்டும்
என்னைத் துளைத்துத் துளைத்துக் கேட்காதே… நம்ம
குடும்பம் சந்தோஷமா இருக்கணும். அதை முன்னிட்டாவது என்னை அதைப்பத்திக் கேட்காதே..!
மனோ: எனக்கு துரோகம் செய்யறீங்கன்னு எனக்குத் தெரிஞ்ச
பிறகு இன்னுமா நம்ம குடும்பத்திலே மகிழ்ச்சி துள்ளி
விளையாடும்.
ராஜா : (தடுமாறி) ஐயோ மனோ.. நான் சொல்றதைக் கேள்..
என்னை உனக்குத் தெரியாதா..? நான் உனக்குத் துரோகமா
ஏதாவது நினைப்பேனா..?
மனோ: பின்னே என்ன..? என்கிட்டே சொன்னா என்ன..?
சொல்லுங்களேன்…
ராஜா : மனோ.. பிளீஸ்.. தயவு பண்ணேன்.. என்னை அதைப்பத்திக் கேட்காதே. என்னை நம்பு…
மனோ: நான் உங்களை இத்தனை நாள் மனமார நம்பிட்டுத்தான்
இருந்தேன். இந்தக் காலத்துலே யாரைத்தான் நம்ப
முடிகிறது…?
ராஜா : நான் சொல்றதுலே ஏன் உனக்கு நம்பிக்கை ஏற்பட
மாட்டேன் என்கிறது..? உண்மையை உடைச்சுச்
சொல்லிடலாம். ஆனா அது வீண் மனஸ்தாபங்களுக்குக்
கொண்டு போயிடும்.. நான் ஒண்ணுமே தப்பா செய்ய
மாட்டேன் நம்பு…
மனோ: தப்பொண்ணுமில்லையானா ஏன் என்கிட்டேயிருந்து
மறைக்கறீங்க..?
ராஜா : ஐயோ… ஆளை விடு. நான் ஆபீஸ் போய்ட்டு வரேன்..
(போகிறான்.. மனோரமா கண்ணீரோடு நிற்கிறாள்)
காட்சி – 2
(மனோரமா இடிந்து போய் வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள்.
கமலா வருகிறாள்)
கமலா : (வந்து கொண்டே) மனோரமா.. மனோரமா..
மனோ: (திடுக்கிட்டுச் சமாளித்துக்கொண்டு) ஓ.. கமலாவா…வா..
கமலா : வீட்டிலே நிம்மதியா இருக்கவே முடியலே.. உன்னைப்பற்றிய நினைப்புத்தான்.. நீ அவர்கிட்டே கேட்டியா…
மனோ: (பெருமூச்சோடு) கேட்டேன்…
கமலா: என்ன சொன்னார்..?
மனோ: (விரக்தியாக) ச்.. என்ன சொல்றது..? கேட்டதும் திடுக்கிட்டார்..
கமலா: ஓகோ.. மாட்டாரா,,? நாம இவ்வளவு ரகசியமா
போறோமே.. அவளுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு
திடுக்கிட்டுப் போயிருப்பார்..
மனோ: திடுக்கிட மட்டுமா செஞ்சார்.. கோபம் வேறே வந்துடுத்து.
கமலா: பின்னே கோபம் வராதா..? ‘என் மனைவி இவ எனக்கு
அடிமைப்பட்டவதானே.. இவளென்ன நம்மைத் தட்டிக்
கேட்கறதுன்னு கோபம் வந்துருக்கும்..
மனோ: அப்புறம் கேள்.. சிள்ளுன்னு எரிஞ்சு விழுந்தார்..
கமலா: இந்த ஆம்பிளைகளுக்குத்தான் எத்தனை அகம்பாவம்..
தான் என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நெனப்பு
போலிருக்கு… சம்சாரம் தட்டிக் கேட்டா சள்ளு புள்ளுன்னு
எரிஞ்சு விழுந்துட்டா ஆயிடுச்சா..? மனோரமா! அவரை
அப்படியே விட்டுட்டா உனக்குத்தான் ஆபத்து..
மனோ: அவர் பேசின பேச்சுக்களைக் கேட்டதும் எனக்கும்
எக்கச்சக்கமா கோபம் வந்துடுத்து. நானும் எனக்கு
துரோகம் பண்ணப்போறீங்களான்னு கேட்டுட்டேன்..
கமலா: வெரி குட்… இந்தக் காலத்து ஆம்பிளைகள்கிட்டே வெட்டு
ஒண்ணு துண்டு ரெண்டாத்தான் பேசணும்.. அப்போ
என்ன சொன்னார்…?
மனோ: நான் உனக்கு துரோகம் செய்வேனா..? என்மேலே
உனக்கு நம்பிக்கை இல்லையான்னு கெஞ்ச ஆரம்பிச்-
சுட்டார்…
கமலா: அப்படி வந்தாரா வழிக்கு…!
மனோ: வராம விடுவேனா..? எனக்குத்தான் உன் அட்வைஸ்
இருக்கே…
கமலா: ஆமாம்.. மனோ.. உனக்கு ஏதாவது யோசனை வேணும்னா
தாராளமா கேள்…
மனோ: கமலா… கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கறபோது
எனக்கு எத்தனை இன்பமா இருக்கு தெரியுமா..? நாங்க
ரெண்டு பேரும் மன வேற்றுமை இல்லாம வாழ்ந்த
வாழ்க்கை…
கமலா: மனோ.. தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது.. நீ எங்கே
தைரியத்தை இழந்திடுவையோன்னுதான் நான் வந்துருக்கேன்.
மனோ: (திடீரென்று கோபத்தோடு) அடச்சீ… நீ எனக்கு
தைரியம் சொல்லவா வந்துருக்கே..
கமலா: (திடுக்கிட்டு) மனோ… என்ன சொல்றே?
மனோ: வம்பு… வம்புலே உனக்குள்ள அக்கறை.. ஊர் வம்பு
ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தே… நான் அகப்பட்டேன்..
கமலா: (சிறிது காரமாக) மனோ.. வண்டி வழிமாறிப் போகுது..
மனோ: அதெல்லாம் நேராத்தான் போகுது.. குறுக்கு புத்தி
உள்ளவங்களுக்கு அப்படித்தான் தெரியும். எங்க
குடும்பம் மகிழ்ச்சியா இருக்கறதைப் பார்த்து ஏன்
உனக்கு இவ்வளவு பொறாமை..? அதைக் கெடுக்க
ஏன் இப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டே..?
கமலா: அந்த மகிழ்ச்சி நீடிக்கணும்ங்கற நல்ல எண்ணத்துலேதான்
சொன்னேன்.. ஜாக்கிரதையா இரு.. பின்னாலே கஷ்டப்படாதேன்னு சொல்லத்தான் இந்த வெய்யில்லே வந்தேன். எனக்கென்ன வீட்டிலேயிருந்து இந்த வெய்யில்லே இங்கே வரணும்னு தலையெழுத்தா என்ன..?
மனோ: தலையெழுத்தல்ல… ஊர் வம்புலே உள்ள ஆசை.. யார்
யார் சண்டை பிடிச்சுக்கறாங்கன்னு பார்த்து கிளப்லேயும்,
பீச்லேயும் உட்கார்ந்து பேசறதுலேயுள்ள ஆசை…
கமலா: (கோபமாக) மனோரமா…
மனோ: கமலா.. ஸோ ஸாரி… இனியும் இங்கே நிற்காதே.. போயிடு
என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு…
கமலா: மனோரமா… ஆத்திரத்துலே என்னவெல்லாமோ பேசறே..
மனோ: ஷட் அப்… இங்கேயிருந்து போயிடு.. கெட் அவுட்..
கமலா: வந்த வேளை சரியில்லை.. என்னமோ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நயமா அவர்கிட்டே கேட்டு உன் உரிமைகளைக் காத்துக்க.. அவ்வளவுதான் நான் சொல்வேன்… வரேன்….
(போகிறாள்)
மனோ: உதவாக்கரைகள்.. பிறர் விஷயத்துலே தலையிடறதுலே
ஏக அக்கறை…
மனசாட்சி: (சிரித்துக் கொண்டே) முட்டாள்.. உனக்கு உன் மேல்
உள்ள எரிச்சல்லே அவளைத் திட்டி அனுப்பிட்டே..
அதனாலே உன் சந்தேகம் தீர்ந்தா போயிடும்..? உன்
மனசு நிம்மதி அடைஞ்சுடுமா..? ஆதரவு சொல்லவாவது
அவளை வெச்சுட்டிருக்கலாமே… ம்… பெண்புத்தி
பின்புத்திதானே..?
மனோ: நான்தான் என்ன செய்வேன்… இந்த சந்தேகம் எனக்கு
வராமலே இருந்திருக்கக் கூடாதா..? ஆண்டவனே,
ஏன் இப்படி ஒரு புயலைக் கிளப்பிவிட்டே… ஆமா..
அவர்கிட்டே நயமாத்தான் கேட்டுப் பார்ப்போமே..!
(கண்ணீரோடு திகைத்து நிற்கிறாள்)
(உண்மையில் ராஜாராமன் நல்லவனா கெட்டவனா..
தெரிந்து கொள்ள அடுத்த இதழ் வரும் வரை
காத்திருக்க வேண்டும்)
(தொடரும்)
தேவதச்சன் – ஆவணப்படம்
நூல் உலகம் தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி இப்படிக் கூறுகிறது:
தேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களைக் கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டுத் திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களைக் கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச்செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று
தேவதச்சனின் கவிதை ஒன்று:
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.
விஷ்ணுபுரம் விருது வாங்கியவர் தேவதச்சன்
அவரைப் பற்றிய ஆவணப்படம் இதோ:
புத்தகப் பை – குறும்படம்
மூன்று லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து நெகிழ்ந்த படம்
சமீபத்தில் வெளியான ’ஸ்கூல் பேக்’ என்ற குறும்படம், இணைய ரசிகர்களிடையே வைரலாகி இருக்கிறது.
புதுடெல்லியைச் சேர்ந்த தீரஜ் ஜிண்டால் இயக்கிய இந்தக் குறும்படம், 22 விருதுகளைக் குவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஒரு தாய்க்கும் மகனுக்குமான உணர்வை எடுத்துச்சொல்கிறது இந்தக் குறும்படம்.
2014-ம் ஆண்டு, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தை மையப்படுத்தி குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறும்படத்தில்…
பெஷாவரில் ஒரு குடும்பம். அம்மாவும் மகனும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். தந்தை ராணுவத்தில் இருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகிறான் மகன் ஃபரூக். பள்ளியில் நடந்த கதைகளை அம்மாவிடம் சொல்கிறான். அவன் அம்மா, “சரி, நான் உனக்கு ஸ்நாக்ஸ் தருகிறேன்” என்கிறார். அதற்கு ஃபரூக், பள்ளியிலேயே சாப்பிட்டுவிட்டதாகச் சொல்கிறான். அவன் அம்மா, ”சரி, நாளை உனக்குப் பிறந்தநாள். உனக்குப் பிடித்த உணவைச் செய்துதருகிறேன்” என்கிறார். அவன் குதூகலமாகிறான்.
சிறிது நேரம் கழித்து ஃபரூக் தன் அம்மாவிடம், “நாம் அன்று மார்க்கெட்டில் பார்த்த ’ஸ்கூல் பேக்’ எனக்கு வேணும்மா” என்கிறான். அவன் அம்மா அதைப் பற்றிய நினைவு இல்லாமல், “எங்கே பார்த்தோம்?” என்று கேட்கிறார். அந்த ஸ்கூல் பேக்கின் விவரங்களை விளக்குகிறான் ஃபரூக். அப்போது அம்மா, “இப்போது நமாஸ் செய்யும் நேரம். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ’நமாஸ்’ செய்யச் செல்கிறார். ஃபரூக் ஏமாற்றமடைகிறான்.
அன்றிரவு அவன் மீண்டும் அம்மாவிடம் ஸ்கூல் பேக் கேட்டு நச்சரிக்கிறான். அவன் அம்மா, “சும்மா நச்சரிக்காதே” என்கிறார். “எனக்கு ஸ்கூல் பேக் வாங்கித் தராவிட்டால், நாளை பள்ளிக்குப் போகமாட்டேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான் ஃபரூக்.
மறுநாள் காலை… புத்தகப்பை கிடைக்காத ஏமாற்றத்தோடு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறான் ஃபரூக். அவன் அம்மா, கதவைத் திறக்கும்படி கூறுகிறாள். அவன் கோபத்துடன், “முடியாது, நான் உன்னுடன் பேசவே மாட்டேன்” என்கிறான். சில நொடிகள் கழித்து, அவன் கதவு திறந்து பார்த்து ஆச்சரியமடைக்கிறான். அவன் கேட்ட ஸ்கூல் பேக் அங்கே இருக்கிறது. குதூகலமாக ஒடிச்சென்று, அம்மாவை அணைத்துக்கொள்கிறான்.
“நான் உனக்கு மிகவும் தொல்லை தருகிறேன். இனி அப்படிச் செய்யமாட்டேன். நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான். “என் மகனுக்கு இன்று ஏழு வயது. நீ மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று பூரிக்கிறார் அம்மா. அவன் மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் செல்கிறான். பள்ளியில், நண்பனிடம் அந்த புத்தகப்பைபற்றிப் பெருமையோடு பேசுகிறான்.
வீட்டில் அவனுக்குப் பிடித்த உணவைத் தயாரித்தவாறு ரேடியோவில் செய்தி கேட்கிறார் அம்மா. அப்போது, ராணுவ பள்ளியில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த செய்தி ஒலிபரப்பாகிறது. அம்மாவின் முகம் மாறுகிறது. அதேநேரம் வீட்டின் கதவு தட்டப்படுகிறது. ஒரு காவல் துறை அதிகாரி அந்தப் புதிய புத்தகப்பையுடன் நிற்கிறார். அவள் அதிர்ச்சியில் உறைகிறாள்.
( நன்றி : விகடன் )
ராஜ நட்பு – ஜெய் சீதாராமன்
ராஜ நட்பு
வருடம் கிபி 1011. கைடான் பேரரசு என்றழைக்கப்படும் வடகிழக்கு சீனப் பகுதியை லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷெங்க்ஸான் ஆண்டு கொண்டிருந்த அந்தக் காலம் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்று பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல காலங்களில் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு முடிவில் பேஜிங் என்று நிலைத்து நின்ற புகழ் பெற்ற நகரம் லியாவ் வம்சத்தின் தென் தலைநகரம். அதில் நியூஜீ இஸ்லாமியர் தொழும் பள்ளிவாசல் சின்னம் இன்றும் நிலைத்து நின்று மசூதியாய் விளங்கிவருகிறது.
அங்கு ஸான்மியாவ் என்னும் புகழ் பெற்ற ராஜபாட்டையில் (இப்போதுகூட அந்த சாலையைக் காணலாம்) பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பேரரச லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷேங்க்ஸானின் ராஜ மாளிகை பேஜிங்கிலேயே மிகப் பெரியதாய், கம்பீர தோற்றத்துடன் கண்களுக்கு விருந்தாய் காட்சி அளித்துக்கொண்டு காணப்பட்டது. வானத்தில் படபடவென்று சிறகடித்துக்கொண்டு பறந்து சென்றுகொண்டிருந்த பறவைக் கூட்டங்கள் மாளிகையின் அழகை மேலும்மேலும் கூட்டிக் காட்டியது.
அது மன்னரின் 29வது வருட ஆட்சிக்காலம். அந்த மாளிகையின் அந்தரங்க ராஜசபைக் கூடம் ராணுவ அதிகாரிகளைக்கொண்டு கூட்டப்பட்டு ஷெங்க்ஸான் வருகைக்காகக் காத்திருந்தது. மன்னர் வருகை தந்ததும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஷேங்க்ஸான் எல்லோரையும் வணங்கிவிட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
முக்கிய மந்திரி எழுந்து வணங்கிவிட்டு நிகழ்ச்சி நிரலை விளக்கினார். “இன்றையக் கூட்டம் முக்கியமாக கோரியேவ் படையெடுப்பு சம்பந்த அடுத்த ராணுவ நடவடிக்கைகளை பரிசீலித்துத் தகுந்த முடிவெடுக்கக் கூட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகக் கடல் கடந்து வணிகம் புரியும் வியாபாரிகளின் தலைவர் தென் இந்திய சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ராஜராஜ சோழரிடமிருந்து ஒரு முக்கிய ஓலையுடன் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றார்.
ஷேங்க்ஸான் ராணுவ தளபதியை நோக்கி, “நமக்கும் கோரியேவ் (தற்போதைய வட கொரியா) நாட்டிற்கும் உள்ள பகை இன்று நேற்றையது அல்ல. அவர்கள் ஸாங்க் தேசத்துடன் நட்பு கொண்டு நம்மை எதிர்த்தபோது நமது 8 லட்ச படைவீரர்கள் அவர்களை ஸோங்க்ஸோன் ஆற்றுக் கரையில் நடந்த போரில் வென்று அப்போது எடுத்த உடன்படிக்கையின்படி கோரியேவ் நமது அடிமை நாட்டாக்கப்பட்டது. அதனால் கோரியேவ்/லியாவ் அமைதி 20 வருடம் வரை நீடித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரியேவ் தளபதி காங்க் ஜோ, மன்னர் மோக்ஜாங்கை கொலை செய்து, பதிலாக ஹியான்ஜாங்கை சிம்மாசனத்தில் பொம்மை போல் அமர்த்தி அவனே அரசாள நினைத்திருக்கிறான். அவனைத் தண்டிக்க நாம் அனுப்பிய நான்கு லட்சம் படை வீரர்கள் முதலில் வெற்றி அடைந்ததாகத் தோன்றி, பிறகு யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் முடிந்திருக்கிறது. எனவே பகை நீடிக்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது! இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் இதற்கான விடை புலப்படுகிறதா? “என்று கேட்டார்.
தளபதி, “காங்க் ஜோவின் படைபலம் தற்சமயம் உச்சக் கட்டத்தில் உள்ளது. அவனை உடன் வெல்ல நாம் நமது படை பலத்தை அதிகரிப்பதைத்தவிர எனக்கு வேறு வழி ஏதும் புலப்படவில்லை” என்று கூறினார்.
ஷேங்க்ஸான் பதிலுக்கு, “உடன் நாம் அவர்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய சேனையை உருவாக்குவோம்! அதற்கான முயற்சிகளை உடன் தொடங்க ஏற்பாடு செய்ய ஆரம்பியுங்கள்! இடை இடையே அவர்கள் நமக்குக் கொடுக்கும் தொல்லைகளையும் நாம் சமாளித்தே ஆகவேண்டும்! சேனை உருவாக்கும் முயற்சி முழுமையடைய ஒரு வருடமோ அல்லது இரு வருடமோ தேவைப்படலாம். ஆனால் நமது முயற்சியின் குறி காங்க் ஜோவை முழுமையாக, தப்பாமல் சிதறடிக்க வேண்டும்! வெற்றி நமக்கே என்று வெறியுடன் முயற்சிகளைத் தொடங்குங்கள்! ” என்று சொல்லி முடித்தார்.
அடுத்த ஆலோசனை, எப்படி இந்தப் பெரிய முயற்சி தொடங்கி முடிக்கப்படவேண்டும் என்பதில் எல்லோரும் முனைந்து, கலந்தாலோசித்து முடிவெடுத்தார்கள்.
சம்பவப் பட்டியல் அதிகாரி நடப்பவை அனைத்தையும் குறித்துக் கொண்டார்.
பிறகு ஷேங்க்ஸான் கையைத் தட்டி “யார் அங்கே? என்னைக் காண விழையும் கடல் கடந்து சென்று வணிகம் புரியும் வியாபாரிகளின் தலைவரை வரச்சொல்லுங்கள்” என்று உத்திரவிட்டார்.
பொது அறிவிப்பாளர், “க்வின் ம்யூ”என்று கூறி அறிவிக்கப்பட்டபின் வந்த வணிக தலைவர் ஷேங்க்ஸானை வணங்கி நின்றார்.
“என்ன காரணமாய் என்னைக் காண வந்துள்ளீர்?”என்றார் சக்கரவர்த்தி .
“அரசே! தென் கிழக்கு ஆசியாவின் வேறு நாட்டுத் துறைமுக நகரங்களுக்குச்சென்று பொருள்களைப் பரிமாற்றம் செய்யும் வணிகத் தலைவராக பல வருடங்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இந்திய உபகண்டத்தின் தென் பகுதி சோழ நாட்டுடன் நமக்கு வணிக ஒப்பந்தங்கள் ஏற்கனவே இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அங்கு பல மாதங்களுக்கு முன் சென்றிருந்தபோது சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழ தேவர் என்னைப் பார்க்க அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் அவரைக் காணச்சென்றிருந்தேன்.
சக்கரவர்த்தி பக்கத்தில் இருந்த பெட்டகத்தைச் சுட்டிக்காட்டி ‘இதை உங்கள் சக்ரவர்த்தி ஷேங்க்ஸானிடம் பத்திரமாக சேர்ப்பிக்க வேண்டும். இதில் அவருக்கு என் அன்புக் காணிக்கையாக வைரம், வைடூரியம், பவழம், முத்து முதலியவற்றை வைத்திருக்கிறேன். எங்களுக்குள் இதுவரை காணிக்கை பரிமாற்றங்கள் எதுவும் நடை பெறவில்லை. இப்போது மட்டும் இவை எதற்காக என்ற வினா அவர் மனதில் எழலாம்! அதற்கான விடை பெட்டகத்தில் உள்ள மூன்று எழுத்தோலைகளில் இருக்கிறது. அதைப் படித்தபின் அவர் சந்தேகங்கள் நிவர்த்திக்கப்படும் என்று கூறிப் பெட்டகத்தை என்னிடம் எடுத்துப்போகக் கேட்டுக் கொண்டார்’” என்று க்வின் ம்யூ கூறிப் பெட்டகத்தை எடுத்து வந்த இரு பணியாட்களிடம் அரசர் முன் வைத்துத் திறந்து காட்டச்சொன்னார்.
சக்கரவர்த்தி பெட்டியில் மூன்று எழுத்தோலைகளையும் அதனுடன் இருக்கும் கையில் வரைந்த படங்கள் நான்கையும் பார்வையிட்டார். அதன் கீழ் தகதகவென ஜ்வலிக்கும் ஆபரணக் கற்களைக் கண்டு வியந்து அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முதல் எழுத்தோலையைக் கையில் எடுத்துப் பிரித்தார். அதில் சீன மொழியில் எழுதியிருந்ததைக் கண்டு திருப்தி அடைந்தவராய் பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பவப் பட்டியல் அதிகாரியிடம் கொடுத்து உரக்கப் படிக்கச் சொன்னார். அதிகாரி படிக்க ஆரம்பித்தார்.
‘நான் வாங்மெங் என்று அழைக்கப்படும் உங்களால் நியமிக்கப்பட்ட கலாச்சார தூதுவன். கிழக்கு ஆசிய நாடுகளில் நமது கலாச்சாரங்களை பரப்புவதுதான் எனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய வேலை. ஒரு பயணத்தின்போது வர்த்தகர்களையும் என் குழுவையும் மற்ற யாத்ரீகர்களையும் தாங்கி வந்த வணிகக் கப்பல் தென் இந்தியாவின் சோழநாட்டுத் துறைமுகமான நாகப்பட்டினத்தில் 1001ம் வருடம் நுழைந்தது.
பல போர் மரக்கலங்கள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு அதிலிருந்து வருவோரும் செல்வோருமாக இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நான் கண்ட காட்சிகள் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தி கேள்விக் குறியையும் எழுப்பின. சோழ படை வீரர்கள் ஆயிரமாயிரம் போர்க் கைதிகளை கையில் விலங்கிட்டுக் குதிரை வண்டிகளில் ஏற்றிய வண்ணமிருந்தனர். குதிரை வண்டிகள் சோழக் குதிரைப்படைப் பாதுகாப்புடன் ஒவ்வொன்றாக விரைந்து சென்று கொண்டிருந்தன. அதற்கான விவரத்தை அறிய என் மனம் துடிதுடித்தது.
நமது பாரம்பரிய பாடல்களும், நடனங்களும் கொண்ட நாடகங்கள் முதலில் நாகப்பட்டினத்தில் அரங்கேற்றப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றன. பிறகு தலைநகரமான தஞ்சாவூரை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். வழிநெடுக எங்கள் நாடக நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு கடைசியாகத் தஞ்சாவூரை வந்தடைந்தோம்.
ராஜராஜ சோழ சக்கரவர்த்தி பல வேலைகளுக்கு நடுவில் கடைசியாக எங்களுக்குப் பேட்டி அளித்தார். மொழி பெயர்ப்பவர்கள் உதவியோடு அவருடன் பேசத் தொடங்கினேன். ‘என் பெயர் வாங்மெங். மன்சூரியாவிலிருந்து லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷேங்க்ஸான் பரிபாலிக்கும் பேஜிங் நகரத்திலிருந்து கப்பலில் வணிகர்களோடு எங்கள் கலாச்சார நாடக குழுவுடன் வந்திருக்கிறேன். அதை உங்கள் முன் அரங்கேற்ற விரும்புகிறேன். அனுமதி வழங்க வேண்டும்..’என்றதும் அதற்கு உடன் அங்கீகாரம் அளித்தார்.
அவரின் முன் எங்கள் நாடகக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர் நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டினார். முக்கியமாக வாள் கேடயம் அணிந்த வுஷு தற்காப்புக் கலை நடனங்கள் அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தியன.
பிறகு அவர், “எவ்வளவு நாட்கள் இங்கு தங்கப் போகிறீர்கள்”என்று வினவ “மூன்று மாதங்களில் வணிகர்களுடன் புறப்பட வேண்டியிருக்கும்”என்று பதில் அளித்தேன்.
சக்ரவர்த்தி சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பிறகு என்னைப் பார்த்து “நான் கேட்கும் கேள்விக்கு நன்கு யோசித்துப் பதிலளியுங்கள். என் குருதேவர் அருள்மிகு கருவூரார் சம்மதத்துடனும் ஆசியுடனும் ஒரு பிரம்மாண்டமான 143 முழங்கள் உயரம் கொண்ட ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கவிருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளேன். நீங்கள் நாகப்பட்டினத் துறைமுகத்தில் இறங்கியதும் பல கைதிகளை எங்கள் போர் வீரர்கள் நடத்தும் விதத்தைப் பற்றியும், எப்படிக் கையாளப்படுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கலாம்! எங்கள் வட இலங்கை படையெடுப்பின்போது கைதிகளான அந்த ஒரு லட்சம் போர் வீரர்களை இந்தப் பணியில் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். இரண்டு வருடங்களில் ஆலயத்திற்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படும். இது முற்றிலும் உயர்ந்த உறுதியான கருங்கற்களை உபயோகித்தே கட்டப்படும். அதற்குத் தேவையான கற்கள் கொண்ட மலைகள் தஞ்சாவூர் சுற்றுப்பகுதியில் எங்கும் கிடையாது.
இங்கிருந்து 50 கல் தொலைவிலுள்ள நார்த்தாமலையிலிருந்து கல் பிளந்து அளவுபடுத்தப்பட்டு எங்கள் மிகப்பெரிய யானைப்படையின் யானைகளை உபயோகித்து எடுத்து வரப்படும். இக்கைதிகளை முதலில் நார்த்தாமலையிருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையை உறுதி செய்து செப்பனிட உபயோகித்துக் கொள்ளப் போகிறேன். 15 தளங்கள் கொண்ட கோபுரத்தின் விமானத்தில் மொத்த 290,000 பாரம் எடையுடைய கருங்கற்கள் சிற்பங்களை ஏற்றி ஒன்றோடொன்று வலுவாகக் கற்களாலேயே பின்னிப் பிணைந்து இணைக்கப்பட்டுக் கட்டப்படும். விமானம் கூர்நுனி வெற்று விமானமாகக் கொண்டதாக இருக்கும். விமானத்தின் உச்சியில் 179 பாரம் எடை கொண்ட ஒரே கோளக் கல் கும்பம் ஒன்று பொருத்தப்படும். அதற்காக 20 யானைகள் மற்றும் குதிரைகளோடு 143 முழ உச்சிக்கு இழுத்துச் செல்லக்கூடிய சாய் தளப் பாதை ஒன்று அமைக்கப்படும்.
ஆயிரமாயிரம் சிற்பிகள், கொல்லர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், கணித அறிவுடன் துல்லியமாய் தீர்மானித்து முடிவு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், தச்சர்கள், கணக்காயர்கள், வைத்தியர்கள், சமையல்காரர்கள், காவலர்கள் முதலியோர் வேலை செய்ய, தங்க, உண்ண, சிகிச்சை பெற வைத்தியசாலை முதலியவை பிரத்தியேகமான இடங்களில் அமைக்கப்படும். அவர்கள் உண்ணுவதற்கு வேண்டிய பொருட்கள், சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படும். கைதிகளைப் பாதுகாப்புடன் வைத்துக் கட்டிக்காக்க தேவைக்கும் மேற்பட்ட வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இதைக் கட்டி முடிக்க 7 வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது”என்று கூறி சக்ரவர்த்தி சிறிது மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.
“இதில் சம்பந்தப்பட்ட அத்துணை பேரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கத் தஞ்சாவூரிலேயே தங்கி உங்கள் நாடகக் குழு நிகழ்ச்சிகளை நடத்த முன்வந்து உதவ உங்களுக்குச் சம்மதமா?இதற்கான பதிலை நீங்களும் உங்கள் குழுவும் நன்கு கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவைத் தெரிவியுங்கள். நாளை மறுபடி சந்திக்கலாம்”என்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார். நான் வியப்பில் ஆழ்ந்து திக்குமுக்காடிப் போனேன். அத்துடன் அன்றைய சபை கலைந்தது.
(அடுத்த இதழில் தொடரும் )
கலாம் சலாம் – வைரமுத்துவின் வரிகளில்
வாத்தியார் சாமி – என் செல்வராஜ்
அப்போது எங்கள் பள்ளியில் மதிய உணவு பெரும்பாலும் சம்பா கோதுமையில் சமைத்த சாதம் தான். நானும் எனது வகுப்பு தோழர்களும் சேர்ந்து தினமும் சமைப்போம். ஒரே ஒரு பெரியவர் மட்டும் சமையல் செய்ய வருவார்.நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாராயணசாமி ஆசிரியர் எனது வகுப்பு ஆசிரியர்.அவரே தலைமை ஆசிரியரும் கூட. கோதுமையைச் சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு பெரிய பாத்திரத்தில் எண்ணை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல்போட்டுத் தாளித்துவிட்டு, கோதுமை அளவுக்குத் தகுந்தாற்போல தண்ணீர்விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த பின்பு கோதுமையை பாத்திரத்தில் போட்டு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். தண்ணீர் சுண்டி கோதுமை சாதம் பதத்துக்கு வந்ததும் இறக்கவேண்டும்.
இதில் பெரும் பகுதி வேலையை நானும் எனது நண்பர்களும் செய்வோம். சில சமயங்களில் தலைமை ஆசிரியர் வந்து சமையலறையில் கூடவே நிற்பார். மாலையில் பால் பவுடரில் தயாரித்த பால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவார்கள். தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அவர் ஊர் சிதம்பரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் இருந்தது. தினம் போய்வர சிரமம் என்பதால் பள்ளியிலேயே தங்கிவிடுவார். வாரம் ஒரு முறை மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குப்போவார். பால் பவுடர், பாமாலின் ஆயில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வருவதாகப் பேசிக்கொண்டார்கள்.
அந்த பள்ளியின் அருகிலேயே ஒரு பிரைவேட் வாத்தியார் தங்கி இருந்தார். அவர் நீண்ட தாடி வளர்த்துக்கொண்டு சாமியார் போலவே இருந்தார். அதனால் நாங்கள் அவரை சாமியார் வாத்தியார் என்றுதான் சொல்வோம்.அவர் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்களுக்கு வகுப்பு எடுப்பார். என் அப்பா என்னை அவரிடம் பிரைவேட்டாகப் படிக்க சேர்த்து இருந்தார். அவர் நன்றாக சொல்லித் தருவார். வாய்ப்பாட்டை தலைகீழாகச் சொல்லச் சொல்வார்.அதற்காக பலமுறை வாய்ப்பாட்டைப் படிக்கவேண்டும். கணக்குக்கு அடிப்படையானது வாய்ப்பாடு என்பதால் அவர் அதில் அதிகம் கவனம் செலுத்தினார் என்று நினைக்கிறேன்.சொல்லாவிட்டால் பிரம்படி தான்.
ஒழுங்காகப் படிக்காத பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை அழைத்து வரவேண்டும். சாமியார், ” பையன் சரியாகப் படிக்கவில்லை.அடித்துத்தான் படிக்கவைக்கவேண்டும். அடிக்கக்கூடாது என்றால் டியூஷனை விட்டு நிறுத்தி விடுங்கள் ” என்பார். பெரும்பாலான பெற்றோர்கள் நன்றாக அடித்துப் படிக்க வையுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்.அப்புறம் அவர் இஷ்டம்தான். ஒரு முறை ஒரு மாணவனைக் கருங்கல் தூணில் கட்டி வைத்து எல்லா மாணவர்களையும் விட்டு அடிக்கச்சொன்னார். யாராவது அடிக்க மறுத்தால் அந்த மாணவனை அடித்து விடுவார்.அதற்குப் பயந்து நாங்கள் எல்லோரும் அந்த அண்ணனை அடித்தோம். பயம்தான். இருந்தாலும் என்ன செய்வது. அவர் அடிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் நிறுத்தமாட்டார். பிரம்பு ஒடியும்வரை கூட அடிப்பார்.
எனக்கும் அவரிடம் அடி வாங்கிய அனுபவம் உண்டு. அப்போது நான் வாய்ப்பாடு படித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் அவர் ஏதோ கேட்டார். நான் கவனிக்கவில்லை போல. உடனே என்னை அவர் அழைத்தார். ஏதோ வாய்ப்பாடுதான் கேட்கப்போகிறார் என்று நான் நினைத்து அவரின் அருகில் சென்றதுமே என்னை அடிக்க ஆரம்பித்தார். கையில் இருந்த வாய்ப்பாடு புத்தகத்தைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன்.அவர் அடித்த அடியெல்லாம் வாய்ப்பாட்டுப் புத்தகத்தில் விழ அது கிழிந்து சுக்கலானது. கடைசியாக அவர் அடிப்பதை நிறுத்தியபோது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏன் அடித்தார் என்று அவரிடம் கேட்க முடியாது.
மாலை ஆறு மணிக்கு பிரைவேட் முடிந்ததும் வீட்டுக்குச் சென்றேன். அப்பா என்னிடம், ‘ஏன் கண் கலங்கி இருக்கிறாய் ‘ என்றார். ‘ஒண்ணுமில்லேப்பா’ என்றேன். மீண்டும் மீண்டும் அவர் கேட்டார். கடைசியில் அழுது கொண்டே, “சாமியார் வாத்தியார் என்னை அடிச்சிட்டாரப்பா “என்றேன். ‘எங்கே அடிச்சார்? காட்டு!’ என்றார் அப்பா. கை விரல்களில் அடிபட்டு ரத்தம் வந்திருந்தது. சில விரல்கள் வீங்கி விட்டன. பள்ளிப் பையில் இருந்த வாய்ப்பாட்டை எடுத்துக் காட்டி , ‘இதத் தூக்கி அடியைத் தாங்கிக்கிட்டேம்பா’ என்றதும் அப்பா கோபம் அதிகமானது. சட்டையக் கழட்டி முதுகைக் காட்டினேன். முதுகும் பாதி அளவு வீங்கி இருந்தது. என் அம்மா என் காயங்களையும் வீக்கத்தையும் பார்த்ததும் ‘முதல்ல போயி அந்த வாத்திய என்னன்னு கேளுங்க’ என்றார். ‘காலயில போயி கேக்கிறன்’ என்றார் அப்பா.
மறுநாள் காலையில் பிரைவேட் நடக்கும் இடத்துக்கு என்னுடன் வந்தார். சாமியாரைப் பார்த்து வணக்கம் வைத்தார். சாமியார் என்ன விஷயம் என்று கேட்டார். என் மகனை ஏன் மோசமாக அடித்திருக்கிறீர்கள் என்று கேட்ட அப்பாவிடம்” அவன் படிக்கும் போது நான் சொன்னதை கவனிக்கவில்லை. அதனால்தான் அடித்தேன் என்றார். வீக்கம் ஓரளவு வடிந்திருந்த கை மற்றும் முதுகை அப்பா காட்டச்சொன்னார். சாமியார் ஒன்றும் சொல்லவில்லை. கிழிந்துபோன வாய்ப்பாட்டை எடுத்துக்காட்டி இது எப்படிக் கிழிந்தது எனக் கேட்டார் அப்பா. பதிலில்லை சாமியாரிடம். அப்பா கோபத்துடன் இனிமே என் பையன் பிரைவேட்டுக்கு வரமாட்டான் என சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு விடு விடுவென சென்றுவிட்டார். பிரைவேட் படிப்பது அத்துடன் நின்று போனது.
எங்கள் பள்ளி ஒரு பெரிய ஓட்டு வீட்டில் இயங்கியது. ஒரு முறை எனது ஆசிரியர் மேலே ஏறி பரணில் இருந்த புத்தகங்களை சுத்தம் செய்யச் சொன்னார்.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கட்டு கட்டாய் கட்டப்பட்டுக் கிடந்தன. அந்த புத்தகங்கள் யாராவது அதை திறந்து பார்க்க மாட்டார்களா என்று பரிதாபமாக பார்ப்பது போலத் தெரிந்தன.
ஒவ்வொரு கட்டையும் அவிழ்த்து அதில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றாக சுத்தம் செய்து மீண்டும் கட்டினேன். சில புத்தகங்களின் தலைப்பு என்னைப் படிக்கத் தூண்டியது. அவற்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டேன். வாத்தியாரிடம் கேட்டால் தருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு.
இன்னும் பல கட்டுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். நான் வாத்தியாரிடம் நாளை மீதியை சுத்தம் செய்கிறேன் சார் என்றேன். அவரும் சரி என்றார். அந்த சில புத்தகங்களை அவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். இரவோடு இரவாக அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட்டேன். மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது அந்தப் புத்தகங்களை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் அவை இருந்த கட்டுகளுக்குள்ளேயே வைத்துவிட்டேன். அன்றும் சில கட்டுக்களைச் சுத்தம் செய்தேன். அதில் பிடித்த சில புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். சுத்தம் செய்த ஒவ்வொரு நாளும் சில புத்தகங்களை எடுத்து வந்து இரவிலேயே படித்துவிட்டு மறுநாள் அதே கட்டில் வைத்து விடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.
பல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவற்றை வீட்டுக்கு எடுத்துவர வழி தெரியவில்லை.வாத்தியாரிடம் கேட்க பயம். அவை எல்லாம் மாணவர்களுக்கான பள்ளி நூலகத்தின் புத்தகங்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆத்திச்சூடிக் கதைகள், குறள் நெறிக்கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் இன்னும் பல கதைகளைப் படித்தேன். அந்த கதைகள் எனக்குக் கதைகளின்மீது ஒரு ஆசையைத் தூண்டி விட்டது.
ஐந்தாம் வகுப்புப் படிப்பு முடிந்து ஆறாம் வகுப்பு படிக்க கானூர் என்கிற பெரிய கிராமத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். கானூர் எங்கள் ஊரில் இருந்து 4 கிமீ தொலைவில் இருந்தது. தினமும் நடந்துதான் போகவேண்டும். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. தமிழில் சிறப்பாக படிக்கக்கூடியவனாக இருந்தாலும் ஆங்கிலம் அவ்வளவாக வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது. தமிழில் பாடப்புத்தகங்களைத்தாண்டிக் கிடைக்கும் கதைப் புத்தகங்கள் எதுவானாலும் படிக்கும் வழக்கம் இருந்தது.
தினமும் காலையில் பள்ளிக்குப் போகும்போதே கானூர் டீக்கடையில் தினத்தந்தி படிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தேன். தினமும் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு கதை என்னைக் கவர்ந்தது. சிந்துபாத்தும் லைலாவும் தினசரி தினத்தந்தியில் கதைபடிக்கும் ஆர்வத்தை வளர்த்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் என் ஊரில் இருந்த டீ கடையில் பேப்பர் படித்து வந்தேன். அப்போதெல்லாம் ஊரின் டீ கடையில் தினத்தந்தியும் முரசொலியும் தான் வரும். . அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். திமுக கிளை செயலாளர் வீடு எனது வீட்டுக்கு அருகில் இருந்தது. அவரிடமிருந்து அண்ணாவின் சிறுகதைகள் வாங்கிப் படித்தேன். அதில் உள்ள புலிநகம், திருமலை கண்ட திவ்ய ஜோதி, செவ்வாழை, பிடி சாம்பல் ஆகிய சிறுகதைகள் இன்றைக்கும் எனது நினைவில் இருக்கின்றன.
ஆங்கிலம் வரவில்லையே என்று வருந்தினேன். ஒரு நாள் என் பிரைவேட் வாத்தியார் சாமியார் எங்கள் பள்ளிக்கு வந்து எனது வகுப்பு ஆசிரியரைச் சந்தித்தார். எனது வகுப்பு ஆசிரியர் சிவம், ஆங்கில ஆசிரியரும் அவரே. சாமியார் எனது ஆசிரியரிடம் என்னைப்பற்றி ” சார், அவனுக்கு ஆங்கிலம் தவிர அனைத்துப் பாடங்களிலும் நல்ல மார்க் வாங்குவான்.ஆங்கிலம் மட்டும் அவனுக்கு நல்லா சொல்லி கொடுத்தீங்கன்னா அவன் நல்லா படிச்சு ஒங்க பள்ளிக்குப் பேர் வாங்கிக் கொடுப்பான் ” என்று சொன்னார். எனது ஆசிரியர் ” இவ்வளவு தூரம் ஒங்ககிட்டப் படிச்ச ஒரு பையனுக்காக வந்து சொல்றீங்களே அப்பவே இவனது திறமை எனக்குப் புரியுது. நிச்சயம் நான் அவன ஆங்கிலம் படிக்க வைக்கிறேன் ” என்றார்.
எனக்கோ ஆச்சரியம்.அவரிடம் நான் படித்ததோ சில மாதங்கள் தான். என்னை அவர் கடுமையாக அடித்ததால் நான் பிரைவேட் போவதையே என் அப்பா நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர் எனக்காக வந்து என் ஆசியரிடம் சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது. சாமியார் என் மனதில் இன்னும் உயர்ந்து நின்றார்.
மீண்டும் ஆங்கிலம் படிக்க ஒரு பிரைவேட்டில் சேர முடிவு செய்தேன். அப்பாவும் ஒத்துக்கொண்டார். கிருஷ்ணன் என்பவர் பிரைவேட் நடத்தி வந்தார்.
அவர் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வந்தார். மாலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார். அவர் வரமுடியாதபோது அவரது மனைவி மாலதி அக்கா வகுப்பெடுப்பார். அவர் ஒரு பட்டதாரி. தமிழில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்தை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டது அப்போதுதான். எனது வகுப்பாசிரியரின் உதவியுடன் ஆங்கிலம் ஒரு வழியாக எனக்குப் படிக்க வந்துவிட்டது. ஆனால் அதனோடு கூடவே ஒரு பிரச்சினையும் சேர்ந்துகொண்டது. பொருள் தெரியாமல் என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை.அதனால் அடிக்கடி ஆசிரியரிடம் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டு நோட்டில் எழுதிக்கொள்வேன்.அதன் பிறகுதான் என்னால் மனப்பாடம் செய்ய முடிந்தது. அப்பாவிடம் இதைச்சொன்னேன். அவர் அடுத்த வாரமே பழைய புத்தகக் கடையில் கிடைத்த லிப்கோ ஆங்கிலம் -தமிழ் அகராதி வாங்கி வந்து கொடுத்தார். அது எனக்கு ஆங்கிலத்தை விரைவாகக் கற்றுக்கொள்ள உதவியது.
மாலதி அக்காவிடம் நிறைய பைண்டு செய்யப்பட்ட சரித்திர நாவல்கள் இருந்தன. பொன்னியின் செல்வன், பாண்டிமாதேவி, வேங்கையின் மைந்தன் போன்ற நாவல்களைப் படித்தேன். அதனால் எனக்கு வரலாற்றின் மீதும் வரலாற்று நாவல்கள் மீதும் ஆர்வம் அதிகமானது. வரலாறு நன்றாகப் புரிந்தது.இந்தக் கதைகள் சேர, சோழ , பாண்டியர் வரலாறை எனக்கு எளிதாகப் புரியவைத்தன.
ஒரு நாள் தோப்பின் அருகில் இருந்த என் உறவினர் மூர்த்தியின் டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட கேட் போடப்பட்ட கொட்டகை அது. கேட்டின் உயரம் பத்து அடி இருக்கும். இரண்டு பகுதிகளையும் கொஞ்சம் விலக்கினால் என்னால் உள்ளே புகுந்து விடமுடியும் என்று தோன்றியது. அந்தக் கொட்டகையில் என்ன படிக்கக் கிடைக்கும் என்று பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கேட்டை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். அங்கே குமுதம் புத்தகங்கள் ஏராளமாகக் கிடந்தன.அங்கேயே உட்கார்ந்து குமுதம் புத்தகத்தைப் புரட்டினேன். அதில் ராஜதிலகம் என்ற சாண்டில்யன் தொடர்கதை வந்திருந்தது. புத்தகங்களைத் தேதிவாரியாக அடுக்கினேன். முதல் இரண்டு குமுதம் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆசை வந்தது. எப்படியும் கடையில் பழைய பேப்பர்காரனிடம்தான் போடப்போகிறார்கள். அதற்கு முன் படித்துவிட்டுத் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடலாம் என்று நினைத்தேன். யாரும் வரவில்லை என்பதை வெளியே எட்டிப்பார்த்து உறுதி செய்துகொண்டபின் இரண்டு புத்தகங்களை என் சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்து விட்டேன்.
வீட்டுக்கு வந்ததும் அதில் வந்திருந்த ராஜதிலகம் தொடரைப் படித்தேன். அந்த கொட்டகையில் இருக்கும் குமுதம் புத்தகம் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்ற வெறியை சாண்டில்யன் என்னுள் உருவாக்கி விட்டார். படித்து விட்டு அந்த புத்தகங்களைப் பத்திரமாக வைத்தேன். அந்தப் பக்கம் போகும் போது இரண்டு புத்தகங்களை எடுத்து வருவது எனக்கு வாடிக்கையாகி விட்டது. உள்ளூர எனக்குப் பயம். எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொண்டு சென்று வைக்க மனமில்லை.முழுவதும் படித்து முடித்த பின் அனைத்துப் புத்தகங்களையும் கொட்டகையில் வைத்து விடலாம் என நினைத்தேன்.
சாண்டில்யனின் அந்தக் கதை அவ்வளவு அற்புதமானது. பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவனின் வரலாற்றை அருமையான கதையாக மாற்றியிருந்தார். சில அத்தியாயங்களே எனக்குக் கிடைத்தன. போருக்காக ராஜசிம்மன் தயாராவதையும், அந்தப் போரில் இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய மன்னன் தோற்று ஓடியதையும் கூரம் செப்பேடு குறிப்பிட்டு இருப்பதையும் அதில் எழுதி இருந்தார். இன்னும் எத்தனையோ வாரம் அதற்கு முன் வந்திருக்கும். அவை கிடைக்கவில்லை. அந்தக் கதையைப் படித்ததில் இருந்து முழுமையாக ராஜதிலகம் தொடர்கதையைப் படிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றிவிட்டது. வாங்கும் வசதி எனக்கு இல்லை.எனக்குத் தெரிந்து குமுதம் புத்தகத்தை மூர்த்தி மட்டுமே என் ஊரில் வாங்கினார்.
எப்போதும் போல அந்த டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூர்த்தி அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நான் மெல்ல மெல்ல நடந்து சென்று அந்த குமுதம் புத்தகங்களின் பக்கம் அமர்ந்தேன். படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு புத்தகங்களை என் இடுப்பில் சட்டைக்குள் வைத்துக்கொண்டு எழுந்தேன். திரும்பிய அடுத்த நிமிடமே” நில்லுடா திருட்டு பயலே “என்று என்னைத் திட்டியவாறு மூர்த்தி எழுந்து வந்தார்.என் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இத்தனை நாளாய் நான் பயந்து கொண்டிருந்தது நடந்தே விட்டது.
நான் எதிர்பாராத வகையில் அவர் என்னைத் தன் செருப்பால் அடிக்க ஆரம்பித்தார். அவமானத்தால் என் மனம் குன்றிப்போனது. சில அடிகள் அடித்தபின் என்னை அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டு விட்டார். அந்த கொட்டகையின் அருகில் குடியிருந்த சாமியார் வாத்தியார் சத்தம் கேட்டு அங்கு வந்தார். மூர்த்தியிடம் ஏன் அவனைக் கட்டிப்போட்டு இருக்கிறாய் எனக்கேட்டார். “சாமியாரே அவன் என்னோட குமுதம் புத்தகத்தைத் திருடிவிட்டான்.அதனால் தான் அடித்தேன், கட்டிப்போட்டேன்” என்றார் மூர்த்தி.
என்னருகே வந்த சாமியார் “ஏண்டா திருடினே என்று கேட்டார்.
” சார் நான் படிக்க எடுத்திட்டுப்போனேன்.திருட நினைக்கல சார் “
“புத்தகத்தை எங்கே வச்சிருக்க? “
“எல்லாம் வீட்டிலதான் சார் இருக்கு”
“கேட்டு வாங்கிட்டுப் போயிருக்கலாமில்லையா ?
” யாரும் இல்லாததால கேட்க நினைக்கல, தப்புதான் சார். இனிமே அப்படிச் செய்யமாட்டேன்”.
எங்களின் உரையாடலைக் கேட்டவாறு இருந்த மூர்த்தி ” சாமியாரே இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க ? என்றார்.
” மூர்த்தி! அவன் படிக்கத்தானே எடுத்துட்டுப் போனான். இந்தப் பழைய குமுதம் புத்தகத்தையெல்லாம் நீ என்ன செய்யப்போற “
“சாமி அது உங்க வேல இல்ல, நீங்க ஒரு வாத்தியாரு. நான் புத்தகத்தைக் குப்பையில கூட போடுவேன். அது என் இஷ்டம். ஆனா இவன் திருடுனது தப்புதானே”
“ஒன் புத்தகம் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம். அதை இந்த பையனுக்குக் கொடேன், அவன் படிக்கத்தானே எடுத்தான்
” முடியாது. நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்க வேணாம். என் எல்லா புத்தகமும் உடனே வந்தாகணும் சாமியாரே” என்றார் மூர்த்தி.
அடிபட்ட வலியுடனும் புண்பட்ட மனதுடனும் இருந்த நான் ” சார் நான் எல்லா புத்தகத்தையும் கொடுத்திடரேன், என்ன விடச்சொல்லுங்க சார் “என்றேன்.
சாமியார் மூர்த்தியைச் சற்று வெளியே அழைத்துப்போனார். மூர்த்தியிடம் ஏதோ பேசினார். சற்று நேரத்தில் திரும்பி வந்த மூர்த்தி முகத்தில் கோபம் குறைந்திருந்தது.என் கட்டை அவிழ்த்து விட்டார். வாத்தியார் என்னை என் வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் கொடுத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு மூர்த்தியிடம் கொடுக்கப்போன அந்த பிரைவேட் வாத்தியார் என் மனதில் மிகப்பிரமாண்ட மனிதராய் உயர்ந்து நின்றார். அவர் சாமியாரல்ல, சாமியாகவே எனக்குத் தெரிந்தார்.
Email:- enselvaraju@gmail.com
நூல்வெளி இணையதளம்
இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்பமுட்டும் இணையதளம் !
“எனக்குத் தோல்வியா”? – மன நல மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்
அன்று காலை, சூசனுக்கு மிகவும் பிடித்தமானதாகவே அமைந்தது. அவள் கோடை விடுமுறை முடிந்து ஒன்பதாவது போகும் முதல் நாள். ஜுன் மாதம்தான், ஆனாலும் அவளுக்குப் பிடித்தாற்போல் மழை பெய்து, எங்கு பார்த்தாலும் எல்லாம் பளிச்சென்று இருந்தது. மேலும், காலைச் சூரியனின் மிதமான ஒளி அழகைக் கூட்டியது! அன்றைய மதிய உணவுக்கு மார்கரெட் பாட்டி அவளுக்குப் பிடித்த எலுமிச்சை சாதத்துடன் மொறு மொறு உருளைக் கிழங்குப் பொரியலும் அத்துடன் மணக்கும் வெள்ளரிப் பச்சடியும் வைத்திருந்தார்.
தன் வகுப்புக்குச் சென்றவுடன் அவளுக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது. சூசனின் அம்மா லிடியாவும் டீச்சர். அவர்கள் சொன்னது போலவே கடவுளுக்குப் பிரார்த்தனை செய்து, தன் இடத்தில் உட்கார்ந்தாள். ஜான் தாத்தா அவள் சிறு வயதில் சொல்லி தந்த “நன்றி” வாழ்த்தையும் முணுமுணுத்தாள்.
ஏதோ பாட்டு மனதிற்குள் சிணுங்க, மீண்டும் தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள் “நல்ல மார்க் எடுப்பதற்காக பிரெஞ்ச் எடுத்திருக்கிறேன். தமிழில் முழு மார்க் எடுப்பது ரொம்பக் கஷ்டம். பிரெஞ்ச் எடுத்தால் முழு மார்க் வாங்கலாம்”. இவள் இப்படி உருக, அவளின் அம்மா, பாட்டி, தாத்தா, அப்பா (அலெக்ஸ்), ஹிந்தி டீச்சர் எல்லோரும் இந்த வகுப்பில் பிரெஞ்ச் எடுப்பதை எச்சரித்தார்கள். தன் வயதிற்கு உரியதான “எல்லாம் எனக்குத் தெரியும்” பன்ச் டயலாக்குடன், “நான் புத்திசாலி, கஷ்டமே இல்லை” என்று பிறர் பேச்சுக்கு இடமில்லாமல் செய்து விட்டாள்.
மதிப்பெண் மட்டுமே சூசனின் குறிக்கோள். அதற்கு ஏற்றாற்போல் மார்க் அதிகம் பெறுகையில், அலெக்ஸ் விதவிதமாக உடைகள் வாங்கித் தந்தார், தாத்தா புது விதமான பேனாக்கள், பாட்டி சிற்றுண்டிகள் செய்து கொடுப்பாள். அம்மாவோ எல்லோரிடமும் சொல்வாள். இந்தப் புகழாரமும், சபாஷ்களும்தான் சூசனுக்கு ஊக்கம் கொடுத்தது. மெதுவாக, மதிப்பெண் இவள் முத்திரையானது.
வகுப்புகளில் சுறுசுறுப்பாகப் பாடங்கள் ஆரம்பித்தது. மாத முடிவில் முதல் வினாடி வினா வைத்தார்கள். மற்ற பாடங்களில் சூசன் ஏறத்தாழ முழு மார்க் எடுத்து விட்டாள். பிரெஞ்சில் ஒற்றை எண்ணாக வாங்கினாள். சூசன் விடவில்லை, நேரம் கூட்டிப் படித்தாள். பிரெஞ்ச் பாடம் படிக்க, தன்னை வற்புறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அவளைப் பொறுத்தவரை எப்பவும் நிறைய மார்க் எடுக்கணும், அப்போதுதான் மதிப்பு. இல்லேன்னா “நானே என்னை மதிக்க மாட்டேன்” என்ற கருத்துடையவள்.
மார்கரெட் வாக்கு கொடுத்தாள், பாஸ் மார்க் எடுத்தால், அவள் சூசனுக்குப் பிடித்த சோமாசி செய்வதாக.
முதல் தேர்வு வைத்தார்கள். இவள் இந்தத் தடவையும் பிரெஞ்சில் மட்டும் ஒற்றை எண் மார்க். “இப்படி மார்க் எடுத்தா யார் மதிப்பார்கள்? தோற்றுவிட்டேன்” என்ற எண்ணம் சூசனுக்கு உறுதியானது.
தேர்வு முடிந்து, இரண்டு-மூன்று நாளிருக்கும், திடீரென உட்கார்ந்த இடத்தில் சரிந்து விழ, தோழிகள் இவளைக் கூப்பிட்டுப் பார்த்தார்கள், ஏதும் பதில் சொல்லவில்லை, கண்கள் திறந்துதான் இருந்தது. டீச்சர் வந்து, முதல் உதவி செய்தார்கள். அவர்கள் அறிந்ததே, சூசன் பயந்த சுபாவம் உடையவள் என்று. எதற்கோ பயந்திருப்பாள் என்று எண்ணினார்கள்.
இரண்டு நாள் கழித்து, மறுபடியும் சரிந்தாள், இந்த முறை, கண்கள் மூடிக்கொண்டது. அம்மாவை அழைத்தார்கள். லிடியா, சூசன் கடிமையாகப் படிப்பதினாலேயே என்று எடுத்துச் சொன்னாள். அடுத்த நாளும் சரிந்ததும் அம்மாவை அவசரமாக அழைத்தார்கள். மார்கரெட்டும் வந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். “வீக்” என்று ட்ரிப்ஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அடுத்த ஐந்து நாளும் இதே போல் சரிய – அம்மா ஓடி வர – மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல; கேசுவால்டி டாக்டர் சூசன் உடம்புக்கு ஒன்றும் இல்லை என்பதை வலியுறுத்தினார். பெரிய டாக்டரை பார்க்கச் சொன்னார்.
அங்கு ஆயா ஒருத்தர் “இந்த வயசுல பாப்பாவுக்கு என்ன டென்ஷன்?காதலா? மக்கா?” எனக் கேட்டாள். பெரிய டாக்டர், பரிசோதித்து என்னைப் பார்க்கச் சொல்லிக் கூடவே “அவர்கள் சொல்வதைக் கடைப்பிடித்தால், சரியாகி விடலாம்” என்பதைச் சொன்னார். நேரத்தைக் குறித்தும் கொடுத்து விட்டார்.
என்னைப் பார்க்க நால்வராக வந்தார்கள். சூசன், அவள் அம்மா, தாத்தா-பாட்டி. பாட்டி எல்லோரையும் அறிமுகப்படுத்தியபடி சொன்னார்கள் “என் தயவில் இருப்பதால், நான் விவரத்தைச் சொல்கிறேன்” என்றவுடன் ஜான் , “ஆமாம், லிடியாவுக்கு ஒரு மண்ணும் தெரியாது, அதான் இங்கேயே இருக்க வேண்டியதா போச்சு” என்றார். லிடியா கண்களில் கண்ணீர் தளும்பியவாறு என்னைப் பார்த்தாள். சூசனும் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான், சூசனைப் பார்த்தபடி, மார்கரெட்டிடம் விவரித்தேன் “கண்டிப்பாக நீங்களும் சொல்லலாம். சூசன் ஏதோ சொல்ல விரும்புவதாக எனக்குத் தோன்றுகிறது. அவளே முதலில் சொல்லட்டும்” என்றவுடன் பாட்டி தன் ஏமாற்றத்தை மறைத்து, “சரி” என்றாள். மூவரையும் வெளியே உட்காரச் சொன்னேன்.
சூசன் முகத்தில் ரிலீஃப் தென்பட்டது. மற்றவர்களிடம் உறுதி அளிப்பதை இவளிடமும் பகிர்ந்தேன். அவளின் அந்தரங்கங்கள் இரகசியமாகவே இருக்கும் என்றேன். தன்னைப் பற்றியும், தனக்கு நேர்ந்ததைப்பற்றியும் சொல்லச் சொன்னேன்.
மிகச் சரளமாக பகிர்ந்து கொண்டாள். அவள் சொன்னதிலிருந்து சூசனுக்குத் தன் மதிப்பீடு, அவள் வாங்கும் மதிப்பெண்களில் அடங்கி இருந்தது என்பதை நன்றாக அறிந்து கொண்டேன். மார்க்கினால் வந்த முத்திரையை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தாள். இந்த வகுப்பில் முன் பின் தெரியாத மொழி எடுத்ததும் மார்க் எடுப்பதற்கே.
சூசன் மெல்லிய குரலில் கைகளைப் பிசைந்தபடி கடந்த முப்பத்தைந்து நாட்களைப்பற்றி மேலும் விவரித்தாள். மார்க் எடுக்கவே எடுத்த மொழி சற்றும் புரியவேயில்லை. இவ்வளவு நாள் இல்லாத ஒன்று ஆரம்பித்தது – பிரெஞ்ச் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிக்கும்பொழுது தூக்கம் வந்து விடுமாம். அம்மாவோ, பாட்டியோ, இவளை எழுப்பி விடுவார்கள். கண் விழித்ததுமே கவலை சூழ்ந்து ‘தப்பு பண்ணி விட்டோம். இனிமேல் தோல்வி தான்’ என்றே மனம் அலறும். இதுவரையில் எல்லோரும் இவளைப் புத்திசாலி என்றே எண்ணியிருந்தார்கள். பிரெஞ்சினால் படிப்பில் முதல் முறை ஒற்றை எண் மார்க் எடுத்ததில் சபாஷ்கள் இல்வாமல் ஆனது சூசனை மிகவும் துன்புறுத்தியது.
இப்படி, நம்மால் நம்மை மாற்றிக் கொள்ள முடியாது, உதவி கேட்டால் தம் மதிப்பீட்டுக்கு பங்கம் என்று எண்ணுவோரைக் கல்வி மன நலத் துறையில் “பிக்ஸட்”(Fixed) மனப்பான்மை உடையவர் என்போம். தோல்விக்கு அஞ்சி, புகழைத் தன் உயிர் மூச்சாகக் கருதுபவர்கள், முயற்சிக்கலாம் என்பதை விட்டுவிடுவார்கள். நான் புத்திசாலி, அதனால் ‘தெரியவில்லை’ என்பதற்கு இடமே இல்லை என்றும் இருப்பார்கள். கஷ்டம் வந்து விட்டால், ‘என்னால் முடியாது’ என்று தளர்ந்து விடுவார்கள். தோல்வியைச் சந்தித்தால், ‘நான் முட்டாள் ‘ என்று முடிவும் செய்து கொள்வார்கள்.
வகுப்பில் தான் சரிந்து விழுந்ததையும் சூசன் விவரித்தாள். முதல் முறை, பிரெஞ்சு பரீட்சையை முக்கால்வாசிதான் எழுதினாள். அடுத்த முறை, கடைசிக் கேள்வி படித்தவாறு சரிந்து விட்டாள். ஈடு செய்ய எழுதிய பரீட்சைகளிலும் ஐந்து நிமிடமாவது சரிந்து விழுந்து விடுவாள். சரிந்தாலும், நினைவு இருக்கும், கண்மூடிச் சரிந்த நேரங்களிலும் பக்கத்தில் பேசுவதும் அவளுக்கு நன்றாகக் கேட்கும்.
அவள் சரிந்து விழுந்த ஒவ்வொரு முறையையும் அவளை நினைவூட்டி வர்ணிக்கச் சொன்னேன். பிரெஞ்ச் வகுப்புக்கு முன்னேயோ, வகுப்பின்போதோதான் சரிந்து விழுந்தாள். மூன்று வாரமாக இதனாலேயே அந்தப் பாடங்களும் தவறியது. அம்மாவை அவசரமாக அழைத்த நாட்களில் அவளை யாரும் எதுவும் கேட்காமல் இருந்தார்கள். ஆயா சொன்ன “காதலா”? “மக்கா?” அவமானமாகக் கருதினாள்.
வெளிப்படையாகத் தன் நிலைமையைப்பற்றி சொன்னதும், நான், சூசனிடம் “இது சரியாகும் என்று தோன்றுகிறதா?” என்று கேட்டேன். கொஞ்சம் யோசித்து “நீங்க என்ன நினைக்கிறீர்கள்? பண்ண முடியும் இல்ல?” பிக்ஸட் மனப்பான்மை உடையவர் போலவே பதிலளித்தாள். “என்னுடன் ஒத்துழைத்தால், முடியும்” என்று உறுதியாகக் கூறினேன். பொதுவாக, இவ்வளவு முன்கூட்டி இப்படிப் பேசுவது என் பழக்கமில்லை. சூசனிடம் அவசரம் இருந்தது. அன்று புதன் கிழமை , வர வாரங்களில் இன்னொரு தேர்வு (படிப்புக்கும், இந்த நிலைமைக்கும்). அதற்குள் அடுத்த கட்டம் வரவேண்டும் எனக் கணக்கிட்டேன்.
நலமாகும் பணியைத் தொடக்கினோம். சூசனை அவள் மனதில் தோன்றும் முதல் அச்சத்தைச் சொல்லச் சொன்னேன். தான் எடுத்த பிரெஞ்ச்தான் என்றாள். இதையே ஆராய்ந்தோம். அவள் பிரெஞ்ச் தேர்வு செய்த காரணத்தை விவரித்தாள். இதன் எழுத்து வடிவம் ஆங்கிலத்துடன் ஒத்துப் போகிறது என்றும் கூறினாள். இதைப் பற்றி மேலும் அலசியதில், இவள் எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் மொழியைத் தேர்வு செய்துவிட்டாள் என்று புரியவந்தது.
சந்தேகங்களைத் தெளிவு பெறாத நிலைமையும் இதில் சிக்கிக் கொண்டதால் இதையும் ஆராய்ந்தோம். சந்தேகங்களை மூடி மறைப்பதே அவள் இந்தக் கட்டத்திற்கு வருவதற்கு ஒரு காரணமானது. சூசன், டீச்சரிடம் சந்தேகங்களை எழுப்பினால் தன்னை முட்டாள் என்றே எண்ணி விடுவாரோ என அஞ்சினாள். சக மாணவரிடம் இதே திரையினால் தன்னை மறைத்துக் கொண்டாள். மொழியைத் தானே தேர்வு செய்ததால் வீட்டிலும் சொல்ல வாய் வரவில்லை. இதெல்லாம் ஒட்டு மொத்தமாக அவளுக்குச் சற்றும் பிடிக்காத ஒற்றை எண்களையும், தோல்வியையும் தந்தது.
உதவி கேட்பதும், தெளிவு பெறுவதும் அவசியம் என்று சூசனுக்குப் புரியவந்தது. உதவி கேட்பதால் தைரியம் கூடவே வளர வாய்ப்பும் உள்ளது. சந்தேகங்களைத் தெளிவு பெறுவதால் தேர்வு செய்த மொழியும் புரிய ஆரம்பிக்கும். அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில், அச்சம், பயம் நீங்கி மன உறுதி வளரும் என்பதும் புரிந்தது.
இதனால் சூசனுக்கு வேறு ஒரு ‘விடுதலை’யும் கண்ணுக்குத் தென்படுகிறது என்றாள். தன் அப்பா புகைபிடிப்பதை அம்மாவிடமிருந்து மறைத்தது அவளை நச்சரித்தது. அப்பா ஏதேனும் வாங்கிக் (மன்னிக்கவும், லஞ்சம்) கொடுத்து அவளைச் சொல்ல விடாமல் செய்தார். ஒற்றை எண் மார்க் எடுக்கையில் ஏனோ இந்த விஷயத்தை மறைத்தது தன் குற்ற உணர்வை அதிகரித்தது என்றாள். மேலும், எல்லோரும் அம்மாவை இவள் முன்னாலேயே “மக்கு” என்பதால் தானும் அம்மாவை உதாசீனப்படுத்தியதும் இவள் மனதை வாட்டியது. அம்மாவிடம் சொல்லி விடலாம் என்று மனம் தயாரானது. அத்துடன் அவர்களை மதிக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் தேட ஆரம்பித்தாள்.
அடுத்த நாள், ஸ்கூல் செல்ல வேண்டாம் என்ற முடிவை மாற்றி இவற்றைப் பயிலப் போகவேவேண்டும் என்று சூசன் உறுதியாக இருந்தாள். லிடியாவும், மார்கரெட்டும் அனுமதித்தார்கள். இவள் அடிக்கடி சரிவதினாலே ஸ்கூலில் ‘உடம்பு நன்றாகிய பின் வா’ என்றார்கள். வீட்டிலும் இதை ஏற்றுக்கொண்டார்கள். சூசன், தன்னைச் சுதாரிக்கப் பொறுப்பு எடுத்துக்கொண்டதால் அம்மாவும் பாட்டியும் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டார்கள்.
சரிந்து விழுவதற்கு ‘கிர்ரக்’ எனப் பெயர் சூட்டினோம். ‘கிர்ரக்’ வந்தால், உடம்பில் ஒவ்வொரு அசைவையும் உடன் தோன்றும் உணர்வுகளையும் கவனித்து எழுதி வரச் சொன்னேன்.
அடுத்த நாள் சூசன் ஸ்கூலுக்குத் தைரியமாகச் சென்றாலும் உள்ளுக்குள் சரிந்திடுவோமோ என்ற நினைப்பு இருந்தது. விழவில்லை. மூன்று முறை ‘கிர்ரக்’ வரும் போல இருக்கையில் அவள் தன்னைத் துல்லியமாகக் கவனித்து சமாளித்து விட்டாள். எழுதியும் வைத்தாள். ஆனால் வீடு திரும்பியவுடன் சரிந்து விழுந்தாள். வீட்டில் விழுந்தது இதுவே முதல் முறை. லிடியா பதறி அவசரமாக என்னைக் கைபேசியில் அழைத்தாள். சூசனிடம் கைபேசியைக் கொடுக்கச் சொன்னேன். அன்று மாலை வரச் சொன்னேன். வந்து விவரித்ததும், அவளும் புரிந்து கொண்டாள், ‘கிர்ரக்கை’ வென்றதை ஒரு வெற்றி என்று. வகுப்பில் தன் நிலைமையைச் சுதாரிக்கத் தெரிந்த சூசனுக்கு, வீட்டிலும் செய்யலாம் என்பதை நான் சொல்லாததால் செய்யவில்லை. ‘கிர்ரக் ‘ கிற்கு அடிமையானாள்.
இதையும் சுதாரிக்க, தன்னைப்பற்றியும் புரிந்து கொள்ள, அடுத்த கட்டமாக சூசனை படிப்பைத் தவிர எந்த எந்தச் செயல்களில் பாராட்டு வருகிறதோ அதைக் குறித்து எழுதச் சொன்னேன். எந்தச் செயல்கள் செய்தால் சந்தோஷம் வருகிறது என்பதைத் தனியாக பட்டியலிடச் சொன்னேன். இரண்டையும், நாள் தோறும் கவனித்து ஒரு வாரத்திற்குச் செய்ய முடிவெடுத்தோம்.
தோசை வட்டமாக வந்தது, சபாஷ் கிடைத்தது, சாப்பாட்டு நேரம் எல்லாம் எடுத்துவைத்து, சுத்தம் செய்தது தனக்குச் சந்தோஷமாக இருந்தது என்றாள். மேலும், பக்கத்து வீட்டு ராணி அக்காவுக்குக் கோலம் போட்டுக்கொடுப்பது (இவர்கள் பழக்கமில்லை, ஆர்வத்தினாலும், ஆசையாலும் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டாள்) மன நிறைவைக் கொடுத்தது. அதே போல், மேல் வீட்டுப் பாட்டிக்குத் துணி மடித்துக் கொடுப்பது, தன் சர்ச்சில் சுத்தம் செய்வதும் மனதிற்கு இதமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ஆயா பூவும் விற்பாள். ஆயாவுக்குத் தெரியாமல் அவள் வேலை செய்யும் நேரம் பார்த்து சூசன் ஒரு நாலைந்து முழம் பூ தொடுத்து வைத்து விடுவாள். தினம் ஆயா “யார் செய்தது” என்று தேடுவாள். பூ தொடுத்ததைப் பார்த்து ஆயா சந்தோஷப்படுவது சூசனுக்குப் பேரின்பம் தந்தது.
இதைத் தவிர, ராணி அக்கா சமைக்கும்போது அவள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவோ, விளையாடவோ செய்தாள். இப்படிச் செய்யச் செய்ய சூசன் தன்னை அறியாமலேயே தன் முத்திரையை விஸ்தாரப் படுத்திக் கொண்டாள்.
மதிப்பெண் மட்டும் அல்ல, மற்ற அடையாளங்களும் உண்டு என்பதை அனுபவிக்க ஆரம்பித்தாள்.
குடும்பத்தினரும் இதற்கு ஏற்றாற்போல் சூசன் எப்படிச் செய்கிறாள், அணுகுகிறாள் என்பதை மட்டுமே குறித்துப் பேசுவதும் பழக்கமாகியது.
இத்துடன், தினம் பிரெஞ்ச் படிப்பு புரிய, பயிற்சி பெற, சந்தேகங்களை யாரிடம் தெளிவு செய்தாள் என்பதையும் ஒரு கால அட்டவணை சொல்லியது. இந்தப் பாடத்திற்கு தினம் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. சூசன் தன் வகுப்பு டீச்சரிடமோ, பக்கத்துத் தெரு வாத்தியாரிடமோ கற்றுக் கொண்டாள். மெதுவாக முன்னேறினாள். சரிந்து விழவில்லை. இன்று வரையில்.
சூசன் என்னிடம் கேட்டாள் “என்னைப்போல் பல பேர் இருப்பார்களா?” மார்க்கும், சபாஷில் மட்டும் ஊக்கப் படுபவர்கள் உண்டு என்றேன். சூசன் பரிந்துரைத்தாள் “நான் உங்களிடம் வந்தேன். இது போல் எவ்வளவு பேரால் முடியுமோ, தெரியவில்லை. நீங்கள் எடுத்துச் சொல்லலாமே”. எப்படி அணுக வேண்டும் என்பதற்குப் பல வழிகள் தென்படும் என்றே இதை எழுத ஆரம்பித்தேன்.
“இப்படி மட்டும்” என்றால் முற்றுப் புள்ளியே!
“இப்படியும்” என்பது முன் ஆரம்பம்!
கடிவாளங்களை அகற்றுவோம்,
சிறகுகளை விரிப்போம்!
***********************************************************************
ஸ்ரோடிங்கரின் பூனை
குவாண்டம் மெக்கானிக்ஸ் நிபுணர் – நோபல் பரிசு பெற்றவர் ஸ்ரோடிங்கர்.
அவர் சொன்ன பௌதிகத் தத்துவம் புரிந்ததோ இல்லையோ அவருடைய பூனைக் கதை மிகவும் பிரபலம். அவருடைய 126வது பிறந்த நாளை கூகுளும் கொண்டாடியது. குவாண்டம் மெக்கானிக்ஸில் அணுவைப் பற்றியும் மற்றும் புரோட்டான் , எலெக்ட்ரான் பற்றிச் சொல்லும்போது அவை எப்படி இருக்கும் , எந்த மாதிரி செயலாற்றும் என்பது அவை இருக்கும் இடத்தைப் பொறுத்தே அமையும்; அவற்றைப் பார்க்காமல் சும்மா சொல்லமுடியாது என்பது அவரது விளக்கம்.
அதெப்படி என்று கேட்டவருக்கு அவர் அந்த பூனைக் கதையைச் சொன்னார்.
ஒரு பூனையைப் பிடித்து ஒரு பெட்டிக்குள் வையுங்கள். அதில் ஒரு ரேடியம் போன்ற கதிர்வீச்சு வரும் பொருளை வையுங்கள். அந்தக் கதிர்வீச்சை அளக்கும் இயந்திரத்தையும் வையுங்கள். அத்துடன் ஒரு சுத்தியலையும் இணைத்து வையுங்கள். அந்த சுத்தியல் அசைந்தால் ஒரு விஷ வாயு உள்ள பாட்டில் உடைந்து விஷம் வெளிவருமாறு செய்யுங்கள்.
அந்த ரேடியம் போன்ற பொருள் கதிர் வீச்சை வெளியிடும் போது அந்தக் கருவியின் முள் அசைந்து , அது சுத்தியலை அசைத்து, விஷ வாயு பாட்டிலை உடைத்து விஷம் வெளியே வரும். அப்போது விஷ வாயு தாக்கிப் பூனை இறந்துவிடும்.
இதில் சஸ்பென்ஸ் என்னவென்றால் கதிர்வீச்சு எப்போது துவங்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது துவங்கினால் முன்னால் சொன்ன மாதிரி தொடர் விளைவுகள் நடக்கும்.
இந்த சமயத்தில் அந்தக் கதிர்வீச்சுப் பொருளில் இருக்கும் அணுக்கள் ஒரு சூப்பர் பொசிஷன்ல இருக்கும்னு பௌதிகம் சொல்கிறது. அதாவது அந்த அணுக்கள் கதிர்வீச்சை வீசின மாதிரியும் வீசாதது மாதிரியும் இருக்கும். கதிர்வீச்சு வந்ததா இல்லையா என்பது அந்த அணுக்களை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.
இது எப்படி என்றால், அந்தப் பூனை உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது மாதிரி.
அதற்கு முன்னாடி அந்தப் பூனையும் சூப்பர் பொசிஷன்ல இருக்கும். அதாவது அந்தப் பூனை உயிருடன் – உயிரற்ற ஆகிய இரண்டும் சேர்ந்த நிலையில் இருக்கும். அது உயிருடன் இருந்திருக்கலாம். அல்லது இறந்திருக்கலாம். அதில் எது சரி என்று எப்போது தெரியும் ? பொட்டியைத் திறந்து பார்த்தால்தான் தெரியும்.
இதுதான் ஸ்ரோடிங்கர், அணுவில் உள்ள புரோட்டான் , எலெக்ட்ரான் ஆகியவை செல்லும் அலைபோன்ற பாதையை விளக்கக் கூறிய கதை!
புரியவில்லை என்றால் நாம அடுத்த கதைக்குப் போவோம் !
கால் சுண்டுவிரல் – அழகியசிங்கர்
நான் அவன் வீட்டிற்குப்போய் அவனை இழுத்து வந்தேன். வரும் வழியில், சரவணா ஒட்டலில் டிபன் சாப்பிடலாம் என்றான். ‘சரி’ என்றேன். அன்று முழுவதும் நான்தான் அவனுக்கும் சேர்த்துச் செலவு செய்வதாகச் சொன்னேன். அதற்குச் சம்மதித்துத்தான் வருவதாக ஒப்புக்கொண்டான். எனக்கு இலக்கியக் கூட்டம் நடக்குமிடத்தில் பேசுவதற்குப் போய்வரச் செலவாவது தருவதாக 400-க்கும் மேற்பட்ட கூட்டம் நடத்தியவர் கூறியிருந்தார். அவர் கொடுப்பதாகச் சொன்ன தொகையில் இரண்டு பேர் போய் வரலாம்.
ஒரு வழியாக நாங்கள் போய்ச் சேர்வதற்குள், இலக்கியப் பத்திரிகைகள் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும், நாங்கள் பணிபுரியும் இடங்கள் பற்றியும், எங்கள் குடும்பங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம். ஒருமுறைகூட பத்மநாபன் என் எழுத்தைப்பற்றி ஒன்றும் சொன்னதில்லை. இதற்குச் சில காரணங்கள் இருக்கும். முதலில் நானும் அவனும் ஒரே இடத்தில் பணி புரிகிறோம். அதனால், என்னை ஒரு படைப்பாளி என்று பார்ப்பதைவிட, அவனுடன் பணிபுரிகிறேன் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்.
என் வீட்டிலுள்ளவர்கள் என்னை எப்போதும் எழுதுகிறேன் என்பதற்காகப் பாராட்டுவதில்லை. அதேபோல், அவனும்… இன்னும் அவனைப்போல் வேறு சில நண்பர்களும். என் மனைவி அடிக்கடிச் சொல்வாள். எனக்குத் தெரிந்த விஷயத்தைத்தான் நீங்கள் எழுதுகிறீர்கள். எனக்குப் படிக்கப் போரடிக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியாது. என் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், உன் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை நீ எளிதில் எழுதிவிடலாம். ஆனால் கற்பனையாக எழுதுவதுதான் கடினம் என்பார். அவர் கருத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை. நம்முடைய அனுபவம் எழுதுவதற்கு எளிதாகத் தோன்றலாம். ஆனால் எல்லா அனுபவத்தையும் நாம் படைப்பாக்க முடியாது. ஒரு அனுபவத்தை அப்படியே எழுதுவதாகத் தோன்றினால், உண்மையில் அது அனுபவத்தை எழுதுவது கிடையாது. மேலும், ஒரு அனுபவத்தில், ஒரு எழுத்தாளனுக்குக் கிடைப்பது ஒரு பார்வை மட்டுமில்லை.
காஞ்சிபுரத்தை நாங்கள் அடைவதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் ஒரு இலக்கியப் பத்திரிகையின் விமர்சனக் கூட்டம் அது. முதலில் பேச ஆரம்பித்தவர்கள் அப் பத்திரிகைகயைப் பலவாறு பாராட்டிப் பேசினார்கள். காலை கூட்டம் முடிந்தபிறகு, எல்லோருக்கும் சாப்பிடுவதற்குப் பொட்டலம் ஏற்பாடாயிற்று. இலக்கியக் கூட்டத்திற்காக ஒரு ஓட்டல் இலவசமாக ஏற்பாடு செய்திருந்தது. கூட்டம் நடைபெற ஒரு பள்ளிக்கூடம் இலவசமாக இடமும் தந்திருந்தது.
இதை நடத்தும் இலக்கிய அன்பர், அது எத்தனையாவது கூட்டம் என்ற தகவலுடன், அக் கூட்டத்திற்கு யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்பி யார் யார் வர மறுத்தார்கள் என்பதைப் பெருமையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார். பின் கூட்டம் நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கியவரின் பட்டியலை வாசித்தார். தமிழ்நாட்டில் வெளிவரும் சஞ்சிகைகள், புத்தகங்கள் ஒரு பக்கத்தில் குவிக்கப்பட்டிருந்தன. பத்மநாபன் எழுந்துபோய் என் பேரைச் சொல்லி கிரெடிட்டில் புத்தகங்கள் சிலவற்றை எடுத்தக் கொண்டான்.
மதியம் பேச ஆரம்பித்தவர்கள், இலக்கியப் பத்திரிகையைத் தாக்கிப் பேச ஆரம்பித்தார்கள். அதற்குச் சாதியம் பூசத் தொடங்கினார்கள். மரியாதைக்குரிய படைப்பாளிகளை திட்டத் தொடங்கினார்கள். எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. கூட்டம் ஏதோ திசையில் போகத் தொடங்கியது. நான் பேசுவதற்கான வாய்ப்பு இன்னும் வரவில்லை. ஆனால் நேரம் அதிகமாகிக்கொண்டிருந்தது. பத்மநாபனும் நெளிந்தான். வந்தது வேஸ்ட் என்றான். கூட்டத்தில் ஒரு சாரர் தாக்கத் தொடங்க, பத்திரிகையிலிருந்து வந்திருந்தவர்கள் அதற்குப் பதில் அளித்துக்கொண்டிருந்தார்கள். எதற்கு இதுமாதிரியான கூட்டம் என்று தோன்றியது. மணி ஏழு. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூட்டம் நடத்துபவரிடம் சென்று, “நான் போய்வருகிறேன்” என்றேன். “இல்லை நீங்கள் பேசிவிட்டுத்தான் போகவேண்டும்” என்று என்னைப் போகவிடாமல் தடுத்தார்.
என்முறை வந்தபோது, மணி எட்டாகிவிட்டது. நான் அவசர அவசரமாகப் பேசினேன். பிறகு கூட்டம் நடத்துபவரிடமும், இலக்கியப் பத்திரிகையைச் சேர்ந்தவர்களிடமும் சொல்லிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு பத்மநாபனும், நானும் நகர்ந்தோம்.
போகும் அவசரத்தில், கூட்டம் நடத்தும் இலக்கிய அன்பர் பஸ்ஸிற்காக எனக்கு எந்தப் பணமும் தரவில்லை. அவ்வளவு தூரம் வந்து கூட்டத்திற்குப் பேச சம்மதித்து, அவசரமாகப் பேசிவிட்டுப் போவது, எனக்கு ஏன் என்று தோன்றியது. பத்மநாபன் கிட்டத்தட்ட திருப்தியற்ற நிலையில் இருந்தான். ‘எதற்கு வந்தோம் என்று தோன்றுகிறது’ என்றான். ‘நியாயம்தான்’ என்றேன்.
வீட்டிற்கு வந்தபோது இரவு 11க்கு மேல் ஆகிவிட்டது. அன்றையப் பொழுதை என்னால் மறக்க முடியாது. ஒருநாள் இப்படி வீணாகிவிட்டதே என்று நினைத்தேன். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இதுமாதிரி போவதை நான் விரும்புவதில்லை. வாரத்தில் ஒருநாள் தான் குடும்பத்துடன் இருப்பதற்கு நமக்குக் கிடைக்கிறது. அந்தப் பொழுதைக் குடும்பத்துடன் கழிக்காமல், இலக்கியம் என்ற பெயரால், அடிதடி சண்டை நடக்கும் இடத்திற்கு ஏன் போனோம்?
வீட்டிற்கு வந்தவுடன் ஒரு தகவலை என் பெண் தெரிவித்தாள். ‘எழுத்தாளர் சகாதேவன் மனைவி இறந்துவிட்டார்’ என்ற தகவல்தான் அது. கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. சகாதேவனுக்கு வயது எண்பது இருக்கும். அவர் உடல்நிலைதான் சரியில்லாமல் இருந்தது. அவர் மனைவி எப்படி இறந்திருக்க முடியும்?
சகாதேவனுக்கு மூன்று பெண்கள், ஒரு பையன். சகாதேவன் சகோதரர்கள் எல்லோரும் சென்னையில் இல்லை. சகாதேவன் வேலையிலிருந்து பணிமூப்புப் பெற்றவுடன், தனியாகத் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சந்தில் முதன்முதலில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள். அப்போதெல்லாம் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் நான் அவர்களைப் பார்ப்பது வழக்கம். ஆனால், அவர் மனைவி அவர்கள் குடியிருப்புக்குச் சொந்தமான வீட்டுக்காரியுடன் சண்டை போட்டதால், அந்த இடத்தைவிட்டு வேறு இடம் போக வேண்டுமென்று சொன்னதால், மடிப்பாக்கத்திற்குப் போய்விட்டார்கள்.
அதன்பின் சகாதேவன் வீட்டிற்குப் போவது எனக்குக் குறைந்து விட்டது. சகாதேவனைப் பார்க்கும்போது பல விஷயங்களை அவர் சுவாரசியமாகச் சொல்வார். ஒருமுறை அவருக்குச் சர்க்கரை வியாதி இருப்பதைக் கண்டுபிடித்தார். அதைப்பற்றிச் சொல்லும்போது, சற்று மனம் வருத்தப்பட்டதுபோல் தோன்றியது. அவர் அடிக்கடி மருத்துவரைப் பார்த்துச் சர்க்கரை அளவைச் சோதித்து மருந்து சாப்பிடும்படி இருந்தது.
சகாதேவன் அரசாங்க உத்தியோகம் பார்த்துப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே எழுதத் தொடங்கினார். அவர் முதல் நாவல், ‘இரண்டும்கெட்டான்’ ஒரு ஓட்டல் சர்வரைப் பற்றியது. தமிழ் இலக்கியச் சூழலில் சிறந்த நாவலாகப் பலரால் போற்றப்பட்டது. அதன்பின் அவர் எழுதிய நாவல்களைப் பலர் கண்டு கொள்ளவில்லை. அந்த முதல் நாவலை ஒரு சிறு பத்திரிகை திரும்பவும் மறு பிரசுரம் செய்திருந்தது. அதைப் பிரசுரம் செய்த சிறுபத்திரிகை ஆசிரியரைப் பார்க்கும்போது, ‘ஏதோ நூலக ஆர்டர் கிடைத்ததால் அது பிழைத்தது. இல்லாவிட்டால் சிரமம்’ என்றார் வருத்தத்துடன்.
ஒருசமயம் அவரை நான் பார்க்கும்போது, அவருடைய சகோதரர் இறந்துபோன தாக்கத்தால் அவர் எழுதிய கவிதைகளைக் காட்டினார். அன்று அவர் வீட்டில் நான் சாப்பிட்டேன். பாலக்காட்டு சமையல். ருசியாக இருந்தது. அவர் மனைவிக்கு எழுத்துமீது எந்த நம்பிக்கையும் கிடையாது. ‘ஒரு பைசாவுக்கும் போகாத என்ன எழுத்து’ என்பார். அவருக்கும் ஒரு குறை. ‘நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உங்கள் நண்பர்களைப் பற்றி உங்களுக்குச் சாதகமானவற்றைப் பற்றி எழுதுகிறீர்கள். என்ன இருக்கிறது அதில்’ ,என்பார். ‘இரண்டும்கெட்டானில் ‘வரும் வரதனை எனக்குத் தெரியும். இங்க வந்து நிற்பான் என்பார். அவரும் அவர் மனைவியும் சண்டை போடும்போது, சகாதேவன் பேசாமலிருப்பார். வெற்றிலைச்சாறு வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும். ‘நான் ஏதாவது பேசினால், இன்னும் சத்தம் போடுவாள். அவள் குறையைச் சொல்லிவிட்டுப் போகட்டுமென்று விட்டுவிடுவேன்’ என்பார் வேடிக்கையாக.
அவர் மனைவி இறந்த செய்தியை என்னால் நம்ப முடியாமலிருந்தது. “என்னிக்குச் செத்துப் போனா? “என்று என் பெண்ணிடம் கேட்டேன். “இன்று காலைதான். நீங்க கூட்டத்துக்குப் போனவுடனே செய்தி வந்தது” என்றாள் பெண். எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது. இந்தப் பாழாய்ப்போன கூட்டத்திற்குப் போகாமலிருந்தால், சகாதேவன் வீட்டிற்குப் போயிருக்கலாம்.
சகாதேவன் வீட்டில் போன் இல்லையென்பதால், எப்படித் தொடர்புகொண்டு பேசுவதென்பது எனக்குத் தெரியவில்லை. வழக்கம்போல், அலுவலகம் சென்றேன். செவ்வாய்க்கிழமை முன்னதாக வீட்டைவிட்டுக் கிளம்பி, அவர் வீட்டுக்குச்சென்று துக்கம் விசாரிக்கலாமென்று தீர்மானித்தேன். முன்னதாகவே அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதற்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.
சகாதேவனைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டில் ஒரே கூட்டம். பேய் அமைதி. சகாதேவன் தாடியை மழிக்காமல் கோரமாகக் காட்சி தந்தார். துக்கம் அவர் முகத்தில் அறைந்திருந்தது. அவர் பக்கத்தில் போய் அமர்ந்தேன். “நேற்று நீ வருவாய் என்று எதிர்பார்த்தேன். மாமி காரியம் நேற்றுதான் நடந்தது” என்றார். “எனக்குத் தெரியாமல் போய்விட்டதே?” என்றேன் சற்று வருத்தத்துடன். “இந்துவில் செய்தி கொடுத்திருந்தேன்” என்றார். “யாரும் வரவில்லையா?” என்று கேட்டேன் ” “இல்லை” என்றார். இது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவருடன் பழகிய இலக்கிய நண்பர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.
அவர் அவர்களுக்குத் தொலைபேசியில் யார் மூலமோ தகவலை அறிவித்தும் இருந்தார். “நான் தினமணியில் இந்தச் செய்தியைக் கொண்டு வருகிறேன்” என்றேன். அப்போது அவருடைய பெரிய பெண் ;வீல்’ என்று பெரிதாகக் கத்தினாள். அவள் என்னைவிடப் பெரியவள். அந்த ‘வீல்’ சத்தம் அடிவயிற்றிலிருந்து என்னை என்னமோ செய்தது. அதுவரையில், சகாதேவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மாமி இல்லாததை உணரவில்லை. ஆனால் அந்தக் கத்தல், மாமி அங்கில்லை என்ற உணர்வைப் பலமாக உண்டாக்குவதுபோல் இருந்தது.
“மாமி எப்படிப் போனாள்? நல்லாதானே இருந்தாள்” என்று கேட்டேன்.
“மாமிக்கு ஒருவாரமா உடம்பு சரியில்லை. கால் வீங்கி இருந்தது. உதவிக்கு என் சிஸ்டர் பையன் இருந்தான். சனிக்கிழமை டாக்டர்கிட்டே போய் மருந்து வாங்கிச் சாப்பிட்டாள். அவன் ஏதோ ஊசி போட்டான். ராத்திரி சீக்கிரமாத் தூங்கப் போயிட்டா. காலையில் எழுப்பறேன் எழுந்திருக்கவே இல்லை” என்றான்
சகாதேவன் அவர் பக்கத்தில் படுத்திருந்த மனைவி இறந்ததுகூடத் தெரியாமல் இருந்திருக்கிறாரே என்று தோன்றியது. நான் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.
வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு, அலுவலகம் கிளம்பினேன். முதலில் தினமணி அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கு செய்தியைப் போடும்படி கேட்டுக்கொண்டேன். பொதுவாக இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கியக் கூட்டங்களைப் பற்றிய அறிவிப்பைத் தினமணி அக்கறையுடன் செய்துவருகிறது. எழுத்தாளர்களுக்குள்ளே நடைபெறும் சந்திப்புகளை ஒரு பரிவர்த்தனைபோல் செயல்பட்டு வருகிறது. செய்தியை அடுத்தநாள் வெளியிடுவதாகச் சொன்னார்கள்.
நான் தினமணி அலுவலகத்திலிருந்து என் அலுவலகம் கிளம்பினேன். எனக்கு சகாதேவன் நினைவாக இருந்தது. யாருடனும் அவர் இல்லாமல், தனியாகவே இருந்து பழக்கப்பட்டவர் சகாதேவன். உண்மையில், அவர் மனைவியின் வீம்புக்காகத்தான் அவர் தனியாக இருக்க நேரிட்டது. இல்லாவிட்டால், அவர் அவருடைய பெண்கள் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ இருந்து விடுவார். அவர் மனைவியால் யார் வீட்டிலும் அனுசரித்து இருக்க முடியாது. அவர் தனியாகக் குடும்பம் நடத்த, அவர்களுடைய பெண்களும், பிள்ளையும் பலவிதத்தில் உதவி செய்தார்கள். ‘இன்னும் சில தினங்களில் போன் வந்துவிடும்’ என்று சகாதேவன் குறிப்பிட்டிருந்தார். இனி அவர் தனியாக இங்கே இருக்க முடியாது. அவர் பையன் இருக்கும் மும்பைக்குப் போய்விடுவார். கிட்டத்தட்ட இலக்கியத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச தொடர்பும் போய்விடும். எண்பது வயதில் அவரால் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. இனி தொடர்பு இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன?
சிக்னலுக்காக அண்ணா சாலையில் நான் வண்டியுடன் இருந்தபோது, சகாதேவனைக் குறித்துப் பலவாறு யோசித்துக் கொண்டிருந்தேன். நான் வண்டியில் ஓரிடத்தில் நிற்கும்போது காலை அகலமாக வைத்துக்கொண்டு நிற்பது வழக்கம். பச்சை சிக்னல் வந்தவுடன், நான் திடீரென்று வண்டியைக் கிளப்பினேன். பின்னால், ஒரு மாருதி கார் என் காலை பதம் பார்த்தது. குறிப்பாகக் கால் சுண்டுவிரலை அது பதம் பார்த்தது. நான் துடித்துப்போய்விட்டேன். ‘ஆ’ என்று பெரிதாகக் கத்திவிட்டேன்.
காரிலிருந்த பெண், என்னைப் பார்த்து ‘சாரி’ என்றாள். நான் வலி பொறுக்கமுடியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து அடுத்த சிக்னலில் நின்றிருந்தேன். அந்த மாருதி காரும் என்னைத் தொடர்ந்து என் பக்கத்தில் வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்தேன். நடுத்தர வயது. பார்க்க அழகாகவே இருந்தாள். திரும்பவும் என்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். நான் ‘பரவாயில்லை’ என்றேன்.
அலுவலகத்தை அடையும்வரை என் சிந்தனை முழுவதும் கால் சுண்டுவிரலில் வியாபித்திருந்தது. சுண்டுவிரலைப்பற்றி நான் இதுவரை கவனம் இல்லாமலிருந்ததும், அது குறித்து கவனம் கார் ஏறியது மூலம் ஏற்பட்டதாகத் தோன்றியது. பிறந்ததுமுதல் இன்றுவரை நான் கால் சுண்டுவிரலைப்பற்றி ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை என்பதுதான். அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. கண்கள் என்னைப் பெரிதும் பாதித்தது உண்டு. உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் ஏதாவது உபத்திரவம் ஏற்பட்டால், நம் கவனம் அதன் மீது செல்லாமலிருந்ததில்லை. எப்படி இந்தக் கால் சுண்டுவிரலைப்பற்றிக் கவனிக்காமலிருந்தேன் இதுவரை. கால் சுண்டுவிரல் மீது கார் ஏறினது கூட, அதன் மீது கவனம் வைத்துக்கொள் வைத்துக்கொள் என்று ஞாபகப் படுத்துவதற்காகத்தானா? புரியவில்லை.
அலுவலகத்தில் நான் காலை நொண்டியபடி வந்தேன். அதைக் கவனித்த மாலதி என்கிற அலுவலகப் பெண்மணி, “என்ன சார், ஆச்சு உங்கள் காலுக்கு” என்று விசாரித்தாள்.
அவளிடம் கேட்டேன், “நீங்கள் கால் சுண்டுவிரலை ஒரு பொருட்டாக எண்ணியதுண்டா?” என்று.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அவளிடம் விளக்கினேன். என் கால் சுண்டுவிரல் மீது ஒரு அழகான பெண், பெண், அவள் மாருதி காரை ஏற்றிவிட்டாள். எனக்கு வலி தாங்கமுடியவில்லை என்றேன்.
மாலதி அதைக் கேட்டுச் சிரித்தாள்.
“அந்தப் பெண் இரண்டு முறை என்னைப் பார்த்து, சாரி என்று சொன்னாள். காரை ஏற்றியவுடன் நான் பெரிதாகக் கத்தினேன்,” என்றேன்.
மாலதியுடன் அதைக்கேட்ட மற்றவர்களும் சிரித்தார்கள். அன்று முழுவதும், கால் சுண்டுவிரல் வலியைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.
கதம்பச் செய்திகள்
நமது நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் , துணை குடியரசுத் தலைவர் திரு எம் வெங்கைய நாயுடு.
ரோஜர் பெடரர் – இன்றைய டென்னிஸின் கடவுள் என்று அன்பாய் அழைக்கப்படும் பெருமை வாய்ந்தவர். சமீபத்திய விம்பிள்டன் நாயகர். 19 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்று உலக சாதனையைப் படைத்தவர்.
டீச்சர் : பசங்களா! நல்லா தெரிஞ்சுக்கோங்க! அணிலுக்கு முதுகில ஏன் மூணு கோடு இருக்கு தெரியுமா? ராமருக்குப் பாலம் கட்ட அணில் உதவிச்சாம்; அதனால ஆசையா ராமர் அணிலோட முதுகைத் தடவிக்கொடுத்தாராம். அன்னிலேர்ந்து அணிலுக்கு முதுகில மூணு கோடு அமைஞ்சுடிச்சாம்.
மாணவன்: சும்மா ரீல் விடாதீங்க டீச்சர்! அப்படின்னா சீதை வரிக்குதிரை மாதிரி இல்ல இருப்பாங்க!
டீச்சர்: ????
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழ் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவலை : BIG BOSS ஓவியா
“கண்டதை “எழுதுகிறேன் – ரகுநாதன்
ஜூலை மாதம், 2012இல் என் பாஸ்போர்ட்டை ரின்யூ பண்ணிக்கொள்ளப்போனபோது ஒரு கற்பனை கலந்த நிஜக்கதையை எழுதியிருந்தேன். நினைவு வைத்து இன்னும் சிலாகிப்பவர்களுக்கு மணிப்பூரிலோ அல்லது ஜெயலக்ஷ்மியிலோ லாட்டரி அடிக்கட்டும். புதிதாகப்படிப்பவர்களுக்கு…….ஆல் த பெஸ்ட்!!
அந்தப் பெரிய, இல்லை, மிகப்பெரிய கட்டிடத்தில் விழி பிதுங்கும் கூட்டம் எப்போதும். க்யுவானது மாடிப்படியில் எல்லாம் அசௌகரியமாக இறங்கி கார் பார்க் வரை நீளும். வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் ஜனங்கள் அல்லாடும். ரொம்பத் தெரிந்தவர் போல ராயசமாக சில ட்ராவல் ஏஜெண்டுகள் நடமாடுவார்கள். அவ்வப்போது நீண்ட காரில் வந்திறங்கும் சினிமா அல்லது அரசியல் VIP ஐ, க்யூவில் காத்திருக்கும் ஜனங்களே வழி அனுப்பி முன்னே செல்லுவதைக் கண் கொட்டாமல் பார்க்கும். மேலே போனாலோ, இன்னும் கூட்டம். பல வித வியர்வை நாற்றங்களின் density ஐ துல்லியமாக உணரும்படி இடிபாடுகள், நெருக்கங்கள். மைசூர் மகாராஜா லெவலுக்கு பந்தா பண்ணும் காரியாலய ஆசாமிகள், அவர்களின் மேலதிகாரிகள்.
பந்தாவாக வெளிநாட்டுக்கு ட்ராலியில் சாமானைத் தள்ளிக்கொண்டு போகிற சந்தோஷத்துக்காக அதற்கு ஒரு மாசம் முன்பு இந்த மாதிரி சாஸ்திரி பவனில் பாஸ்போர்ட் ஆபீசில் மன்னாட வேண்டும்.
அதெல்லாம் அந்தக்காலம்.
இப்போது எப்படி?
நேற்று Passport Seva Kendra என்னும் TCS நடத்தும் ………………….. ஆப்பிசுக்குப் போய்விட்டு வந்தேன்.
எனக்கு ஸ்ருதியை மறக்க முடியவில்லை. ஸ்ருதி கமலஹாசன் இல்லை, ஸ்ருதி கார்மேகம் !
யார் இந்த சுருதி கார்மேகம் ?
சற்றுப்பொறுங்கள்.
ஒவ்வொரு முறையும் immigration இல் கட்டுக்கட்டாய் நான்கு புத்தகங்கள் இணைத்த பாஸ்போர்ட்டைக் காட்டும்போது அவன் என்னை ஏதோ ஒரு மரியாதையுடன் பார்ப்பதும், நான் சும்மா உள்ளுக்குளே ஊறும் பெருமிதத்தை மறைத்துக்கொண்டு சாதாரணமாகப் பார்ப்பதும் முதலில் கொஞ்சம் கித்தாய்ப்பாக இருந்தாலும் போகப்போக ஆயாசமாகிவிட்டது. எவன் அந்த கனமான பாஸ்போர்ட் கட்டை ஒவ்வொருமுறையும் எடுத்து, காட்டி, மறுபடி உள்ளே வைக்க ஸ்ரமப்பட்டு ..பேஜார். மறுபடி பாஸ்போர்ட்டில் பக்கங்கள் தீர்ந்துவிட்ட நிலையில் புது புஸ்தகத்துக்கும் நேரிலேயே போய் தேவுடு காக்கவேண்டும் என்று அறிந்தபோது அலுத்துக்கொண்டேதான் போனேன்.
கையில் வைத்திருந்த அப்பாயின்ட் மெண்ட் லெட்டருடன் ஆபீஸ் வாசலில் ஒரு நீல உடையணிந்த சொர்ணாக்காவால் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
‘ எப்ப அப்பாயிண்டு”
“ மூணு மணிக்கு”
“அப்பா இனாத்துக்கு இவ்ளோ சுருக்கா வந்தே?
“ இல்ல ஒரு ஜாக்கிரதைக்கு..”
“இன்னா ஜாக்கிரதையோ போ! சரி, உள்ளார அங்க போய் ஒக்காரு. ரெண்டே முக்காலுக்கு கூவுவாங்க அந்த மைக்குல”
அக்கா சொன்ன அந்த “அங்கே” வில் சுமார் இருநூறு பேர்.
அது சரி, எப்படியும் ஒரு மணி நேரம் ஆகுமே என்று ஓரமாக இருந்த அழுக்கு டேபிள் போட்ட காபி கார்னரில் ஒரு காபி வாங்கிக்கொண்டு பேன்க்கு அடியில் நின்றேன். காபியை வாய்க்கு அருகில் கொண்டு போகும்போதே, “ஒன்ன உக்காரச் சொன்னா சும்மா தொர கணக்கா நின்னுக்கினு இருக்கியே. போப்பா ஒக்காரு” என்று மறுபடியும் சொர்ணாக்கா.
சுடசுடக் காபி கையில் கொட்ட ஓடிப்போய் உட்கார்ந்தேன்.
சரியாக ரெண்டே முக்காலுக்கு “ மூணு மணி அப்பாயிண்டேல்லாம் க்யூவுல வாங்க” என்று சொர்ணாக்கா கத்த, ஓடிப்போய் நின்றோம். ஐந்தே நிமிடங்களில் க்யூ நகர்ந்து சொர்ணாக்காவை நெருங்கினேனே.
“ மூணு மணிதானே, தொ, அங்கே போ”
வரிசையாக கவுனடர்களில் பெண்கள். லெட்டரைச்சரி பார்த்து லொட்டென்று ஒரு டோக்கன் பிரிண்ட் பண்ணித்தந்து அதோ அங்கே என்று விரட்டுகிறார்கள்.
இங்கே perspective மாறுகிறது.
நீங்கள் சந்திப்பது உலகத்தின் எந்த ஏர் போர்ட்டிலும் காணக்கூடிய ஒரு நீள அறை. முழுவதுமாக குளிரூட்டப்பட்ட சில். கூடவே உறுத்தாத சத்தத்துடன் fan. வரிசையாக சாய்வு நாற்காலிகள். எதிரே சுவரில் ஏழெட்டு பெரிய திரை மானிட்டர்களில் டோக்கன் நம்பர், கவுண்டர் நம்பர் என்று ஓடிக்கொண்டிருந்தது.
இடது பாக்க ஓரத்தில் Costa Coffee போல ஒரு சின்ன pattisseri. அதில் Bounty, Trax சாக்லேட்டுகளுடன் பெப்சி. சகாய விலைதான்!
அதன் சுத்தத்தைப்பார்த்து ஜனங்கள் கிட்டவே போகவில்லை.!
பத்தே நிமிடத்தில் அந்த ஒர டேபிளில் இருந்த ஒருவர் என் பெயரைக்கூப்பிட்டு “ சார். மாடில A 6 கவுண்டருக்கு போங்க என்றார்.
A 6 என்பது ஒரு சின்ன cubicle. அதன் டேபிள் பின்னால் லட்சணமாக ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தது.
முன்னால் நேம் ப்ளேட்டில் ஸ்ருதி கார்மேகம்.
சிரித்து, தயவு செய்து உட்காருங்கள் என்றது தீர்க்கமான ஆங்கிலத்தில்.
உட்கார்ந்தேன்.
“கொஞ்சம் நாற்காலியை பின்னுக்கு தள்ளிக்கொள்ளுங்கள்”.
“இன்னும் இன்னும்”.
“கொஞ்சம் நேரே என்னைப்பாருங்கள்”
என்னது இது என்று நான் குழம்பிக்கொண்டிருக்கையில் க்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தத்துடன் ஒரு கலாஷ்னிகோவ் போல ஒரு கருப்பு குழல் அவள் டேபிளில் இருந்து எழ அதன் வாய் ஒரு முறை திறந்து அதனில் இருந்து ஒரு காமரா “தொபக் என்று வெளியே தலை நீட்டியது.
“ஒ இதா” என்று தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் போல ரிலாக்ஸ் ஆகி லேசாகச்சிரித்துக்கூட வைத்தேன்.
“ப்ளீஸ்! சிரிக்கக்கூடாது, இது பாஸ் போர்ட்டுக்கு ” என்று அதட்டியது.
விர்ர்ர்ர் கிளிக் என்று போட்டோ. எப்போதும் போல கேனத்தனமாக இருந்ததை எண்ணி பெருமூச்சு விட்டேன்.
லதா சிரிப்பாள். உடனே Germany க்கு போன் போகும்.
“ இன்னிக்கு அப்பா போட்டோ எடுத்துண்டா. அதுல..” என்று நான் கிழிபடுவேன். ISD யில் குடும்பமே சிரிக்கும்.
ஸ்ருதி இப்போது என்னுடைய folder திறந்து பேப்பர்களைஎல்லாம் பார்த்து செக் பண்ண ஆரம்பிக்க, நான் அவளையே பார்த்தேன்.
லட்க்ஷணமான முகம். Well carved features! சின்னதாக பொட்டு. காதில் வைர கடுக்கன் ஸ்டைல் ஸ்டட். அலட்சியமாக வாரப்பட்ட, ஆனால் அடர்த்தியான தலை முடி. மாறவே மாறாத ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டிருந்தது.
நிரஞ்சனாவை விட அழகில் ஒரு மாற்றுக்கம்மி என்றாலும் எனக்கென்னவோ சட்டென்று தோன்றியது , இந்தகுழந்தை ஏன் என் இரண்டாவது மருமகளாக வரக்கூடாது?
சிரித்துக்கொண்டே என் எண்ணத்தை நகர்த்தி சுற்று முற்றும் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஸ்ருதி நிமிர்ந்து “ நான் உங்க details படிக்கிறேன், confirm பண்ணுங்க என்றது.
பண்ணினேன்.
இப்போது “ உங்க கையைக்கொடுங்க என்றது.
நீட்டின கையை புஷ்பமாகப்பற்றி அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் சமாச்சாரத்தில் வைத்து “ your prints” என்றது. இன்னொரு கையும் அப்படியே பண்ணிவிட்டு “ ரிலாக்ஸ் “. மறுபடி சிரித்து Thats all sir. நீங்க இப்போ கவுண்டர் Bக்கு போகணும். அங்கே Officer ஆதரைஸ் பண்ணிட்டா நீங்க வீட்டுக்கு போகலாம். பாஸ்போர்ட் Speed Post ல வந்திடும்.” தாங்க யூ பார் யுவர் சப்போர்ட்” என்றது மோகனமாக. அதே அழகுச்சிரிப்பு.
எவ்வளவு ப்ளஸண்டாக இருக்கிறாள் என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அடுத்த பாராவில் நான் விவரிக்கப்போகும் ஸ்ருதி வழி காட்டின சம்பவம் தவிர மற்ற விவரங்கள், வெறும் விவரங்களே. இதோ இன்று பாஸ்போர்ட் வீட்டுக்கு வந்து விட்டது. ஸ்ருதியை மட்டும் மறக்க முடியவில்லை.
B கவுண்டர் எங்கோ இடுக்கில் நம்பர் சீரீஸ் தவறி வைக்கப்பட்டுவிட்டது போலும். கண்டு பிடிக்க முடியாமல் நான் மறுபடி A 6கே வந்து ஸ்ருதியிடம், கேட்டேன்.
“ B கவுண்டரே இல்லியேம்மா”
“ ஒரு நிமிஷம் சார். நானே வந்து வழி காட்டறேன்”.
ஸ்ருதி குனிந்து டேபிள் டிராயரை மூடினாள். பேப்பர்களை நகர்த்தி டேபிளை கொஞ்சம் சரி செய்தாள். பட்டனை அழுத்தி காமரா குமிழை உள்ளே அமர்த்தினாள். scanner ஐ மூடி printer ஐ switch off பண்ணிவிட்டு குனிந்தாள்.
நான் காத்திருந்தேன்.
நிமிர்ந்தவள் கைகளில் crutch. கையிடுக்கில் வைத்துக்கொண்டு முழங்காலுக்கு கீழ் மொண்ணையாக இருந்த வலது காலை எத்தி எத்தி நகர்ந்து என்னைப்பார்த்தாள்.
வெளிறிய என் முகத்தைநோக்கி அதே சிரிப்புடன், “ ஸ்கூட்டர் ஆக்சிடெண்ட் , போன வருஷம் தீபாவளி அன்னிக்கு”
“Come with me “
நான் உறைந்து போய் பின் தொடர்ந்தேன்.
காரில் வீட்டுக்கு வரும்போது அவள் வீட்டில் தத்துக்கொடுக்க சம்மதிப்பார்களா என்று யோசித்ததை என் முட்டாள்தனம் என்பீர்கள்!
நடிப்பு ரொம்ப ஈஸி – பாம்பே கண்ணன் (புதுத் தொடர்)
அத்தியாயம் 1
நடிப்பது என்பது என்ன ?
இதற்கு ஏதாவது விளக்கம் உள்ளதா ?
Acting Is Behaviour. Acting Is Enactment. Acting Is Communication . என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் .
நடிப்பது என்பது ஒரு விதமான பாவனை, நடத்தை.
நடிப்பது என்பது ஒரு விஷயத்தை பாவித்துக் காட்டுவது.
நடிப்பது என்பது ஒரு தகவல் தொடர்பு என்றும் கூறலாம்.
இப்படி பலவிதமான விளக்கம் கூறி அது என்ன எப்படி என்று ஆரம்பத்திலேயே உங்களை யோசிக்க வைப்பது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.
நடிப்பது உங்களுக்குப் பார்க்கும்போது சில சமயம் வியப்பாகவும் சில சமயம் மிகவும் சுலபமாகவும் தோன்றும்.
சுலபமாகக் தோன்றும் ஒரு நடிப்பு
உண்மையிலேயே சுலபம்தானா?
சுலபம்தான் ரொம்ப ஈஸிதான் என்று உங்களைச் சொல்ல வைக்கும் ஒரு முயற்சிதான் இந்தக் கட்டுரை.
நடிப்புபற்றி மேல் நாடுகளில் பலவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பலவிதமான வடிவங்களை அதற்குக் கொடுத்து வெகு விவரமாக எழுதியுள்ளனர்.
அதன் இரண்டு பிரபலமான வடிவங்கள் ஒன்று
STANISLAVISKI STYLE
மற்றொன்று
BRECHT STYLE .
இவற்றைப்பற்றி விவரமாக அறியத் துவங்கினால் உங்களைக் கொஞ்சம் குழப்பத்திலும் ஆழ்த்தலாம்.
நமது அமைப்பில் நடிப்புபற்றிப் புரிந்து கொள்ளவும், இந்தக் கலையில் திறமைசாலியாக மாறவும் தற்சமயம் இந்த இரண்டு கலாசாரங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் எளிதான முறையில் நடிப்புபற்றிப் பல விளக்கங்களை அளிப்பதும் சந்தேகங்களுக்குப் பதில் தருவதும் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இந்தப் பயிற்சியை எவ்வளவு எளிதாக்க முடியுமோஅவ்வளவு எளிதாகவும் மிகவும் சுவாரஸ்யமாகக் கற்றுக்கொள்ள வைப்பதும் தான் எனது ஆசை.
பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து படிப்பதை சுவாரஸ்யமில்லாமல் செய்து விடக் கூடாது அதே சமயம் எளிதாகத் தோன்றக்கூடிய ஒரு முயற்சியைக் கடினமாக்கி விடக்கூடாது.
சரி யாரெல்லாம் நடிகர்களாக ஆகலாம் ?
வெறும் பயிற்சியினால் மட்டும் நடிகராகிவிட முடியுமா?
எந்த வயதில் நடிக்க ஆரம்பிக்கலாம்?
நடிப்பதற்கு அழகு முக்கியமா?
இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் பல இடங்களில் இந்தத் தொடரில் புதைந்து உள்ளன.
அதற்கான உதாரணக் காட்சிகளுடன் கவனமாக ஒரு அத்தியாயமாகப் பிரித்துப் புரிந்துகொள்ளுங்கள்.
செயல்முறை விளக்கங்களுக்கு நேரிடையாகத்தான் சந்திக்க வேண்டும்
நம் எல்லாருக்குமே நடிப்பது என்பது மிகவும் சுலபமான ஒன்றாகவே தோன்றும்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் , நம்மில் பலர் ஏதாவது ஒரு நாடகத்தையோ சினிமாவையோ பார்த்துவிட்டு வந்தால் உடனே அதில் சிலர் பேசும் வசனத்தையோ அல்லது சிலரது நடிப்பையோ நாமும் செய்து காட்ட விரும்புகிறோம் அல்லது செய்கிறோம்.
இன்னும் சொல்லப் போனால் , “என்ன பெரிசா நடிக்கறாங்க ?ரெண்டு டைலாக், இதை நான் ரொம்ப சுலபமா பேசிடுவேன் “என்று நடித்தும் காண்பிப்போம்.
ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்த்தால் அதே நகைச்சுவைத் துணுக்கை நாம் பல முறை சொல்லிக் காண்பிப்போம்.
ஆனால் இது ஒரு மிமிக்ரி போன்றதுதான்.
நாம் இதையே ஒரு காமிரா முன்னாலோ அல்லது மேடையில் ரசிகர்கள் முன்னாலோ முதலில் செய்ய வேண்டியிருந்தால் நாம் திறமையாகச் செய்திருப்போமா என்பது ஒரு கேள்விக்குறி.
இது உங்கள் திறமைக்கு சவால் . இது தான் ஒரிஜினல் நடிப்பு .அங்கே உங்களைச்சுற்றிப் பல விஷயங்கள் உள்ளன.
வசனம், காட்சி அமைப்பு , இயக்குனர், காமிரா, ஒலி, ஒளி, பார்வையாளர்கள் என பலர் உங்கள் கவனத்தைக் கலைக்கக் கூடும். மேலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவால் வேறு. இதில் நீங்கள் வெற்றிகரமாக வெளிவரும்போது ஒரு சிறந்த நடிகராக மாறுகிறீர்கள்.
இதைத்தான் சத்யஜித்ரே அவர்கள் தனது “ அபினேத்ரி” என்ற ஒரு தொலைக்காட்சிப் படத்தில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்.
இந்தப் படத்தில் , ஓர் இயக்குனர் தனது படப் பிடிப்பிற்காக ஒரு கிராமத்திற்கு வந்திருப்பார். வந்த இடத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டிய நடிகை படப்பிடிப்பிற்கு வந்திருக்க மாட்டார்.
படத்தை அன்று தொடங்க வேண்டிய கட்டாயம்.அந்தக் கிராமத்தில் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்லும் இயக்குனர். நண்பரிடம் தனது நிலைமையை எடுத்துச் சொல்லும்போது நண்பரின் மனைவியைப் பார்க்கிறார். ஆச்சரியப்பட்டுப் போகிறார்.
கற்பனையில் சித்தரித்துவைத்த நாயகியை நூறு சதவிகிதம் நண்பரின் மனைவியிடம் பார்க்கிறார்.
நண்பரிடம் தயங்கித் தயங்கி , அவரது மனைவியைத் தன் படத்தில் நடிக்க வைக்கமுடியுமா எனக் கேட்க, நண்பர் மனைவியைக் கலந்து ஆலோசிக்க …..
நண்பருக்கோ ஏகப்பட்ட பணக் கஷ்டம். தேவை..!
இருவரும் சம்மதிக்கின்றனர்.
மறுநாள்-படப்பிடிப்பு நாள்
ஒப்பனை செய்யப்படும்போதே, நண்பரின் மனைவிக்குக் கைகால்கள் நடுங்கத் துவங்குகின்றன. ஒப்பனை முடிந்தது. படப்பிடிப்புத் தளம். ஒரே ஒரு வரி வசனம் தரப்படுகிறது.
விளக்குகள் பளீரென எரிகின்றன
கேமரா இயங்கத் துவங்குகிறது. ‘ ஆக்ஷன் ’ என்கிறார் இயக்குனர்.
நண்பரின் மனைவிக்கு வேர்த்துப் போகிறது . நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது. வார்த்தைகள் வரவில்லை. கைகளும் முகமும் இயங்க மறுக்கின்றன.
20க்கும் மேற்பட்ட டேக்குகள் . களைத்து, சலித்துப் போகிறார் இயக்குனர்.
நண்பரின் மனைவிக்குச் சுத்தமாக நடிக்க வரவில்லை.
சாதாரண ஏழை மனைவி பாத்திரம்தான். ஆனால் நடிக்க முடியவில்லை.. படப்பிடிப்பு ரத்தாகிறது.
இயக்குனர் விதியை நொந்தபடி நண்பரின் மனைவியை வீட்டுக்கு அனுப்புகிறார்.
இத்துடன் கதை முடிந்ததா?
இல்லை!
மறுநாள் காலை.
இயக்குனர் நண்பரைச் சந்திக்கச் செல்கிறார்.
அதற்குமுன் , அந்த வீட்டிற்கு மளிகை கடன் பாக்கியை வசூல் செய்ய ஒருவர் வருகிறார்.
அவரைத் தூரத்தில் கண்டவுடன் , நண்பரின் மனைவி வேகமாக ஓடி வந்து., கணவனைப் படுக்கையில் படுக்க வைத்து, போர்வையை எடுத்து போர்த்திவிட்டுக் கலங்கிய கண்களுடன் அவரை வரவேற்கிறாள்.
தன கணவன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் தன்னால் இந்த மாதக் கடனைத் திருப்பித்தர இயலவில்லை என்பதை மிகத் தத்ருபமாக முகத்தில் சோகத்தை வரவழைத்துக்கொண்டு கண்களில் ( கிளிசரின் இல்லாமலே ) கண்ணீரை வரவழைத்து நாடகமாடி வந்தவரை நம்ப வைக்கிறார்.
வந்தவர் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு , கடனைப் பிறகு பெற்றுக்கொள்வதாகக் கூறி விடைபெற்றுச் செல்கிறார்.
இதைப்பார்க்கும் இயக்குனர் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார். ஒரே ஒரு வசனம் பேசத் திணறிய இவளா இவ்வளவு வசனம் பேசுகிறாள். என்ன ஏற்ற இறக்கங்கள் ! என்ன முகபாவங்கள் ! மற்றவரைக் கலங்கச் செய்யும் நடிப்பு ! எப்படி இவளால் முடிந்தது?
இந்த நடிப்பு யார் சொல்லித் தந்தது?
யார் எழுதிக் கொடுத்த வசனம் ?
அவள்தான் நடிகை.
( அந்த டெலி பிலிமை இங்கே பார்க்கலாம் )
இந்தக் கதையை நான் இங்கே ஏன் சொல்கிறேன் ?
நம்மில் பலரும் இப்படிப் பல சந்தர்ப்பங்களில் அருமையாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அலுவலகத்தில் முதலாளி முன் லீவு கேட்கும்போது.
முதலாளி அடிக்கும் அரதப் பழைய ஜோக்கிற்குச் சிரிக்கும்போது.
மனைவியின் சமையலைப் ( சிலசமயம் ) பாராட்டும்போது.
புது மனைவியை நமக்குப் பிடித்த நடிகையோடு ஒப்பிடும்போது.
காதலியிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்று கூறும்போது.
சாலையில் போலீஸ்காரரிடம் மாட்டிக்கொள்ளும்போது.
நண்பர்களுடன் சினிமாவிற்குப் போய்விட்டு வீடுதிரும்பும்போது.
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதே போன்ற நிகழ்வுகள் நமக்குக் காட்சிகளாக அளிக்கப்படும்போது நாம் எப்படி நடிக்கப் போகிறோம் என்பதற்கு உங்களுக்கு உதவவே இந்தத் தொடர் எழுதப்படுகிறது.
மேலும் இப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் உங்கள் வாழ்வில் மற்றவர்களிடம் பார்க்கும்போது அது உங்கள் நடிப்பிற்கு எப்படி உதவும் என்பதை விளக்குவதே என் நோக்கம்.
( தொடர்ந்து பேசுவோம் )
வென்றது யார் ? நீயா நானா? – வேதகிரி
(முகநூலிலிருந்து )
இது உரைநடையாக இருக்க்கலாம். நாடக வசனமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் நான் கேட்பேன் , கவிதை இதைவிட என்ன உசத்தி ?
மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!
கணவன்: என்ன?
மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???
கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!
மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….
கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..
(மறுநாள் இரவு)
கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?
மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிட்டுவிட்டேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்ச்சியா இருக்காங்கனு???
கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்குதான் அதிக மகிழ்ச்சி…
மனைவி: ம்ம்… எப்படி டா!!!
கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அனைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…
மனைவி: நரகமா???
கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????
(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி…)
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் !
குவிகம் இலக்கியவாசல்
இலக்கிய சிந்தனையின் நிகழ்வும் குவிகம் இலக்கிய வாசலின் நிகழ்வும் இணைந்து வருகிற ஆகஸ்ட் 26, சனிக்கிழமை ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டையில் நடைபெற இருக்கின்றன.
இலக்கிய சிந்தனையின் சார்பில் திரு தேவராஜ சுவாமிகள் ‘ ஸ்ரீ ராமானுஜர்’ என்ற தலைப்பில் பேசுகிறார் !
குவிகம் இலக்கியாவாசல் சார்பாக திரு சதுர்புஜன், திரு சிந்தாமணி சுந்தரராமன் , டாக்டர் பாஸ்கரன் ஆகிய மூவரும் , “எனக்குப் பிடித்த கதை” என்ற தலைப்பில் பேச இருக்கின்றார்கள்.
இத்துடன் குவிகம் பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக சுரேஷ் ராஜகோபாலின் ” நான் என்னைத் தேடுகிறேன்” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது.
அதன் வெளியீட்டு விழாவும் நடைபெறும் .
அனைவரும் வருக!
குவிகம் இலக்கியவாசலின் 28வது நிகழ்வாக கண்ணன் அவர்கள் ” “தமிழில் விஞ்ஞான எழுத்துக்கள் ” என்ற தலைப்பில் ஜூலை 29ஆம் தேதி பேசினார்.
அதே சமயம் இலக்கிய சிந்தனையின் சார்பில் புதுவை ராமசாமி அவர்கள் “கவிக்கோ அப்துல் ரஹ்மான்’பற்றிப்பேசினார்.