வாழ்வா? சாவா?
சரியான நேரத்தில், சரியாக எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கையில் வெற்றிகளைத் தரக்கூடும். மருத்துவத்தில் சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளே உயிர்களைக் காக்கும்!
வாழ்வா, சாவா என்ற நிலையில், இரண்டு உயிர்களில் ஒன்றினைத்தான் காப்பாற்ற முடியும் என்றால் எப்படி முடிவெடுப்பது?
ஃப்ளோரிடாவில் வசிக்கும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஃப்ராங்க் போயெம் விவரிக்கும் கேஸ் ஹிஸ்டரி ஒன்றைப் பார்ப்போம் .
39 வயதான ஆறு மாத கர்ப்பிணிப் பெண் – மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் (HEAMORRHAGE), கோமா நிலையில் அட்மிஷன். ஸ்ட்ரெட்சரைச் சுற்றிலும் உறவினர்கள் வாசல் வரை வந்து நிற்க, வெளியில் எடுத்த ஸ்கேன் , மூளையில் ரத்தம் கசிந்து தேங்கியுள்ளதைக் காட்டியது.
உடனே அறுவைச் சிகிச்சை செய்வதுதான் அவள் உயிர் பிழைக்க உள்ள ஒரே வாய்ப்பு! உள்ளே உள்ள சிசுவின் உயிருக்கும் ஆபத்து சேர்ந்தே இருந்தது. அன்னை உயிருடன் இருப்பது, சிசுவின் உயிருக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.
வெளியில் நடப்பது ஏதுமறியாமல், அம்மாவின் கர்ப்பப்பையில் சுறுசுறுப்பாக நீந்திக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை அல்ட்ராசவுண்ட் தெளிவாகக் காட்டியது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நினைவு திரும்பாவிட்டாலும், அம்மாவின் கருவறையின் பாதுகாப்பான, போஷாக்குடன் கூடிய சூழல் குழந்தைக்கு இன்னும் சிறிது காலம் தேவை – அதுவரை அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைத் தகுந்த முறையில் உயிருடன் வைத்திருக்க வேண்டும்.. டாக்டர் போயெம், தன் சக மருத்துவர்களுடன் – ஒரு டசனுக்கும் மேற்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள் – கலந்தாலோசித்து, அப்பெண்ணின் கணவனுடைய அனுமதியுடன் ஒரு முடிவுக்கு வருகிறார்.
அடுத்த பத்து வாரங்களுக்கு, அப்பெண்ணிற்கு எல்லாவிதமான ‘லைஃப் சப்போர்ட்’ வசதிகளும் செய்யப்படுகின்றன. அறையில் அவளுக்குப் பிடித்த இசை ஒலிபரப்பப்படுகின்றது. உறவினர்கள், நர்சுகள், டாக்டர்கள், மருத்துவமனை சிப்பந்திகள், எல்லோரும் தினசரி சேவைகளை, அவளுக்கு எல்லாம் புரியும் என்பதைப்போல அவளுடன் பேசிக்கொண்டே செய்கின்றனர்.
கருவறையில் சுற்றிவரும் சிசுவுக்குத் தேவையான எல்லாம் தடங்கல் இல்லாமல் கிடைக்க – அன்னையின் டிரிப்பில் உணவு, தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் போன்றவை – வழி செய்யப்படுகின்றன. வெளி உலகம் வந்து தானாக இயங்கும் வரை அன்னை உயிருடன் இருப்பது அவசியமல்லவா?
குழந்தையின் இதயத்துடிப்பு, அசைவுகள் எல்லாம் முறையாகத் தினமும் மானிடர் செய்யப்படுகின்றன. ஏழெட்டு வாரங்கள் சென்று, குழந்தைக்குக் கருவறையில் மூச்சு முட்டல் ஏற்படுகிறது. உடனே அன்னைக்கு சிசேரியன் செக்ஷன் செய்து, குழந்தை – சுமார் மூன்று கிலோ எடை! – உயிருடன் வெளியே எடுக்கப்படுகின்றது – அழகான ஆண் குழந்தை!!
கோமாவிலிருந்து மீளாமல், பின்னர் அன்னையும், தன் கடமை முடிந்ததெனக் கண்ணை மூடிவிடுகிறாள்.
சமூகம், சட்டம், மெடிகல் எதிக்ஸ் எல்லாம் கவனிக்கப்படவேண்டிய கட்டாயம் இந்த சிகிச்சைக்கு இருக்கின்றது. மிகவும் அரிதாகவே ஏற்படக்கூடியது – ஆகும் செலவும் அதிகமானது. இதையெல்லாம் தாண்டி, அந்தக் குழந்தை மருத்துவரின் கைகளில் தன் பிஞ்சுக் கால்களை உதைத்தபோது, ஏற்பட்ட பெருமையையும், நிறைவையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார் டாக்டர் போயெம்!
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு நிலை – நண்பனின் மனைவி ஆறு மாத கர்ப்பிணி – இடைவிடாத வலிப்புடன் வந்தார். வலிப்புகளை உடனே நிறுத்த வேண்டும்; இல்லையேல் அது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். ஈ ஈ ஜி தவிர வேறு டெஸ்ட் எதுவும் எடுக்க முடியாது – எம் ஆர் ஐ ஸ்கானும் 7 மாதங்களுக்குப் பிறகுதான், அதுவும் மிகவும் கவனத்துடன்தான் எடுக்க முடியும். இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையுடன், குழந்தையைப் பாதிக்காத மருந்துகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு வழியாக வலிப்புகளை நிறுத்தினோம்.
ஏழாம் மாதம் செய்த ஸ்கான், எங்களைப் புரட்டிப் போட்டது – தலையில் மிகப் பெரிய கட்டி – எதுவாகவும் இருக்கலாம் – கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்வது அவளுக்கும், உள்ளே வளரும் குழந்தைக்கும் ஆபத்தாய் முடியும். நியூரோ சர்ஜன், மகப்பேறு மருத்துவர், பொது மருத்துவர், டிபி ஸ்பெஷலிஸ்ட் எல்லோரும் விவாதித்தோம் – ஸ்கானில் ஒரு சின்ன ’க்ளூ’ – அது TB கட்டியாக இருக்கும் வாய்ப்பினை உறுதி செய்தது. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த டிபி மருந்துகளைக் கொடுத்து, தாய், சேய் இருவரையும் மானிடர் செய்தோம்.
டியூ டேட்டில், அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை முதலில் காப்பாற்றினோம் – நல்ல வேளை, குறையொன்றும் இல்லாமல் சரியாக இருந்தது குழந்தை!
பின்னர் எடுக்கப்பட்ட ஸ்கேனில், தலைக் கட்டி 90% கரைந்திருந்தது – டிபி தான் என்பது உறுதியானது. மேலும் மூன்று மாதங்களில், கட்டி முழுதுமாகக் கரைந்து, தாயும் சேயும் இன்று வரை நலம்!
வாழ்வா, சாவா என்பதில், ஓருயிரைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை எப்போதுமே மருத்துவர்களுக்குச் சவால்தான்!