
ஜூலை மாதம், 2012இல் என் பாஸ்போர்ட்டை ரின்யூ பண்ணிக்கொள்ளப்போனபோது ஒரு கற்பனை கலந்த நிஜக்கதையை எழுதியிருந்தேன். நினைவு வைத்து இன்னும் சிலாகிப்பவர்களுக்கு மணிப்பூரிலோ அல்லது ஜெயலக்ஷ்மியிலோ லாட்டரி அடிக்கட்டும். புதிதாகப்படிப்பவர்களுக்கு…….ஆல் த பெஸ்ட்!!
அந்தப் பெரிய, இல்லை, மிகப்பெரிய கட்டிடத்தில் விழி பிதுங்கும் கூட்டம் எப்போதும். க்யுவானது மாடிப்படியில் எல்லாம் அசௌகரியமாக இறங்கி கார் பார்க் வரை நீளும். வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல் ஜனங்கள் அல்லாடும். ரொம்பத் தெரிந்தவர் போல ராயசமாக சில ட்ராவல் ஏஜெண்டுகள் நடமாடுவார்கள். அவ்வப்போது நீண்ட காரில் வந்திறங்கும் சினிமா அல்லது அரசியல் VIP ஐ, க்யூவில் காத்திருக்கும் ஜனங்களே வழி அனுப்பி முன்னே செல்லுவதைக் கண் கொட்டாமல் பார்க்கும். மேலே போனாலோ, இன்னும் கூட்டம். பல வித வியர்வை நாற்றங்களின் density ஐ துல்லியமாக உணரும்படி இடிபாடுகள், நெருக்கங்கள். மைசூர் மகாராஜா லெவலுக்கு பந்தா பண்ணும் காரியாலய ஆசாமிகள், அவர்களின் மேலதிகாரிகள்.
பந்தாவாக வெளிநாட்டுக்கு ட்ராலியில் சாமானைத் தள்ளிக்கொண்டு போகிற சந்தோஷத்துக்காக அதற்கு ஒரு மாசம் முன்பு இந்த மாதிரி சாஸ்திரி பவனில் பாஸ்போர்ட் ஆபீசில் மன்னாட வேண்டும்.
அதெல்லாம் அந்தக்காலம்.
இப்போது எப்படி?
நேற்று Passport Seva Kendra என்னும் TCS நடத்தும் ………………….. ஆப்பிசுக்குப் போய்விட்டு வந்தேன்.
எனக்கு ஸ்ருதியை மறக்க முடியவில்லை. ஸ்ருதி கமலஹாசன் இல்லை, ஸ்ருதி கார்மேகம் !
யார் இந்த சுருதி கார்மேகம் ?
சற்றுப்பொறுங்கள்.
ஒவ்வொரு முறையும் immigration இல் கட்டுக்கட்டாய் நான்கு புத்தகங்கள் இணைத்த பாஸ்போர்ட்டைக் காட்டும்போது அவன் என்னை ஏதோ ஒரு மரியாதையுடன் பார்ப்பதும், நான் சும்மா உள்ளுக்குளே ஊறும் பெருமிதத்தை மறைத்துக்கொண்டு சாதாரணமாகப் பார்ப்பதும் முதலில் கொஞ்சம் கித்தாய்ப்பாக இருந்தாலும் போகப்போக ஆயாசமாகிவிட்டது. எவன் அந்த கனமான பாஸ்போர்ட் கட்டை ஒவ்வொருமுறையும் எடுத்து, காட்டி, மறுபடி உள்ளே வைக்க ஸ்ரமப்பட்டு ..பேஜார். மறுபடி பாஸ்போர்ட்டில் பக்கங்கள் தீர்ந்துவிட்ட நிலையில் புது புஸ்தகத்துக்கும் நேரிலேயே போய் தேவுடு காக்கவேண்டும் என்று அறிந்தபோது அலுத்துக்கொண்டேதான் போனேன்.
கையில் வைத்திருந்த அப்பாயின்ட் மெண்ட் லெட்டருடன் ஆபீஸ் வாசலில் ஒரு நீல உடையணிந்த சொர்ணாக்காவால் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
‘ எப்ப அப்பாயிண்டு”
“ மூணு மணிக்கு”
“அப்பா இனாத்துக்கு இவ்ளோ சுருக்கா வந்தே?
“ இல்ல ஒரு ஜாக்கிரதைக்கு..”
“இன்னா ஜாக்கிரதையோ போ! சரி, உள்ளார அங்க போய் ஒக்காரு. ரெண்டே முக்காலுக்கு கூவுவாங்க அந்த மைக்குல”
அக்கா சொன்ன அந்த “அங்கே” வில் சுமார் இருநூறு பேர்.
அது சரி, எப்படியும் ஒரு மணி நேரம் ஆகுமே என்று ஓரமாக இருந்த அழுக்கு டேபிள் போட்ட காபி கார்னரில் ஒரு காபி வாங்கிக்கொண்டு பேன்க்கு அடியில் நின்றேன். காபியை வாய்க்கு அருகில் கொண்டு போகும்போதே, “ஒன்ன உக்காரச் சொன்னா சும்மா தொர கணக்கா நின்னுக்கினு இருக்கியே. போப்பா ஒக்காரு” என்று மறுபடியும் சொர்ணாக்கா.
சுடசுடக் காபி கையில் கொட்ட ஓடிப்போய் உட்கார்ந்தேன்.
சரியாக ரெண்டே முக்காலுக்கு “ மூணு மணி அப்பாயிண்டேல்லாம் க்யூவுல வாங்க” என்று சொர்ணாக்கா கத்த, ஓடிப்போய் நின்றோம். ஐந்தே நிமிடங்களில் க்யூ நகர்ந்து சொர்ணாக்காவை நெருங்கினேனே.
“ மூணு மணிதானே, தொ, அங்கே போ”
வரிசையாக கவுனடர்களில் பெண்கள். லெட்டரைச்சரி பார்த்து லொட்டென்று ஒரு டோக்கன் பிரிண்ட் பண்ணித்தந்து அதோ அங்கே என்று விரட்டுகிறார்கள்.
இங்கே perspective மாறுகிறது.
நீங்கள் சந்திப்பது உலகத்தின் எந்த ஏர் போர்ட்டிலும் காணக்கூடிய ஒரு நீள அறை. முழுவதுமாக குளிரூட்டப்பட்ட சில். கூடவே உறுத்தாத சத்தத்துடன் fan. வரிசையாக சாய்வு நாற்காலிகள். எதிரே சுவரில் ஏழெட்டு பெரிய திரை மானிட்டர்களில் டோக்கன் நம்பர், கவுண்டர் நம்பர் என்று ஓடிக்கொண்டிருந்தது.
இடது பாக்க ஓரத்தில் Costa Coffee போல ஒரு சின்ன pattisseri. அதில் Bounty, Trax சாக்லேட்டுகளுடன் பெப்சி. சகாய விலைதான்!
அதன் சுத்தத்தைப்பார்த்து ஜனங்கள் கிட்டவே போகவில்லை.!
பத்தே நிமிடத்தில் அந்த ஒர டேபிளில் இருந்த ஒருவர் என் பெயரைக்கூப்பிட்டு “ சார். மாடில A 6 கவுண்டருக்கு போங்க என்றார்.
A 6 என்பது ஒரு சின்ன cubicle. அதன் டேபிள் பின்னால் லட்சணமாக ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தது.
முன்னால் நேம் ப்ளேட்டில் ஸ்ருதி கார்மேகம்.
சிரித்து, தயவு செய்து உட்காருங்கள் என்றது தீர்க்கமான ஆங்கிலத்தில்.
உட்கார்ந்தேன்.
“கொஞ்சம் நாற்காலியை பின்னுக்கு தள்ளிக்கொள்ளுங்கள்”.
“இன்னும் இன்னும்”.
“கொஞ்சம் நேரே என்னைப்பாருங்கள்”
என்னது இது என்று நான் குழம்பிக்கொண்டிருக்கையில் க்ர்ர்ர்ர்ர்ர் என்ற சப்தத்துடன் ஒரு கலாஷ்னிகோவ் போல ஒரு கருப்பு குழல் அவள் டேபிளில் இருந்து எழ அதன் வாய் ஒரு முறை திறந்து அதனில் இருந்து ஒரு காமரா “தொபக் என்று வெளியே தலை நீட்டியது.
“ஒ இதா” என்று தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் போல ரிலாக்ஸ் ஆகி லேசாகச்சிரித்துக்கூட வைத்தேன்.
“ப்ளீஸ்! சிரிக்கக்கூடாது, இது பாஸ் போர்ட்டுக்கு ” என்று அதட்டியது.
விர்ர்ர்ர் கிளிக் என்று போட்டோ. எப்போதும் போல கேனத்தனமாக இருந்ததை எண்ணி பெருமூச்சு விட்டேன்.
லதா சிரிப்பாள். உடனே Germany க்கு போன் போகும்.
“ இன்னிக்கு அப்பா போட்டோ எடுத்துண்டா. அதுல..” என்று நான் கிழிபடுவேன். ISD யில் குடும்பமே சிரிக்கும்.
ஸ்ருதி இப்போது என்னுடைய folder திறந்து பேப்பர்களைஎல்லாம் பார்த்து செக் பண்ண ஆரம்பிக்க, நான் அவளையே பார்த்தேன்.
லட்க்ஷணமான முகம். Well carved features! சின்னதாக பொட்டு. காதில் வைர கடுக்கன் ஸ்டைல் ஸ்டட். அலட்சியமாக வாரப்பட்ட, ஆனால் அடர்த்தியான தலை முடி. மாறவே மாறாத ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக்கொண்டிருந்தது.
நிரஞ்சனாவை விட அழகில் ஒரு மாற்றுக்கம்மி என்றாலும் எனக்கென்னவோ சட்டென்று தோன்றியது , இந்தகுழந்தை ஏன் என் இரண்டாவது மருமகளாக வரக்கூடாது?
சிரித்துக்கொண்டே என் எண்ணத்தை நகர்த்தி சுற்று முற்றும் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஸ்ருதி நிமிர்ந்து “ நான் உங்க details படிக்கிறேன், confirm பண்ணுங்க என்றது.
பண்ணினேன்.
இப்போது “ உங்க கையைக்கொடுங்க என்றது.
நீட்டின கையை புஷ்பமாகப்பற்றி அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் சமாச்சாரத்தில் வைத்து “ your prints” என்றது. இன்னொரு கையும் அப்படியே பண்ணிவிட்டு “ ரிலாக்ஸ் “. மறுபடி சிரித்து Thats all sir. நீங்க இப்போ கவுண்டர் Bக்கு போகணும். அங்கே Officer ஆதரைஸ் பண்ணிட்டா நீங்க வீட்டுக்கு போகலாம். பாஸ்போர்ட் Speed Post ல வந்திடும்.” தாங்க யூ பார் யுவர் சப்போர்ட்” என்றது மோகனமாக. அதே அழகுச்சிரிப்பு.
எவ்வளவு ப்ளஸண்டாக இருக்கிறாள் என்று என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
அடுத்த பாராவில் நான் விவரிக்கப்போகும் ஸ்ருதி வழி காட்டின சம்பவம் தவிர மற்ற விவரங்கள், வெறும் விவரங்களே. இதோ இன்று பாஸ்போர்ட் வீட்டுக்கு வந்து விட்டது. ஸ்ருதியை மட்டும் மறக்க முடியவில்லை.
B கவுண்டர் எங்கோ இடுக்கில் நம்பர் சீரீஸ் தவறி வைக்கப்பட்டுவிட்டது போலும். கண்டு பிடிக்க முடியாமல் நான் மறுபடி A 6கே வந்து ஸ்ருதியிடம், கேட்டேன்.
“ B கவுண்டரே இல்லியேம்மா”
“ ஒரு நிமிஷம் சார். நானே வந்து வழி காட்டறேன்”.
ஸ்ருதி குனிந்து டேபிள் டிராயரை மூடினாள். பேப்பர்களை நகர்த்தி டேபிளை கொஞ்சம் சரி செய்தாள். பட்டனை அழுத்தி காமரா குமிழை உள்ளே அமர்த்தினாள். scanner ஐ மூடி printer ஐ switch off பண்ணிவிட்டு குனிந்தாள்.
நான் காத்திருந்தேன்.
நிமிர்ந்தவள் கைகளில் crutch. கையிடுக்கில் வைத்துக்கொண்டு முழங்காலுக்கு கீழ் மொண்ணையாக இருந்த வலது காலை எத்தி எத்தி நகர்ந்து என்னைப்பார்த்தாள்.
வெளிறிய என் முகத்தைநோக்கி அதே சிரிப்புடன், “ ஸ்கூட்டர் ஆக்சிடெண்ட் , போன வருஷம் தீபாவளி அன்னிக்கு”
“Come with me “
நான் உறைந்து போய் பின் தொடர்ந்தேன்.
காரில் வீட்டுக்கு வரும்போது அவள் வீட்டில் தத்துக்கொடுக்க சம்மதிப்பார்களா என்று யோசித்ததை என் முட்டாள்தனம் என்பீர்கள்!

