காஞ்சிபுரத்தில் நடைபெறவிருக்கும் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு, நானும் பத்மநாபனும் போகத் தயாராக இருந்தோம்.  பத்மநாபனுக்கு வண்டி ஓட்ட வராது.  நான்தான் காஞ்சிபுரத்தில் பேசப் போகிறேனென்றாலும், கூட யாராவது வந்தால் பேச்சுத்துணைக்கு நன்றாக இருக்குமென்று தோன்றியது.  இலக்கியத்தில் ஆர்வமுள்ள பத்மநாபன் என்னுடன் வருவதாகச் சொன்னது எனக்கு மகிழ்ச்சி.  
ஆனால் அவனை கே கே நகரிலிருந்து வண்டியில் அழைத்துக் கொண்டு, மாம்பலம் ரயில்வே நிலையத்தில் வண்டியை வைத்துவிட்டு, காஞ்சிபுரம் பஸ்ஸிற்கு கோட்டைரயில் நிலையத்தில் இறங்கி, எக்ஸ்பிளேனேடில் வண்டியைப் பிடிப்பதாகத் திட்டம்.

நான் அவன் வீட்டிற்குப்போய் அவனை இழுத்து வந்தேன்.  வரும் வழியில், சரவணா ஒட்டலில் டிபன் சாப்பிடலாம் என்றான்.  ‘சரி’ என்றேன். அன்று முழுவதும் நான்தான் அவனுக்கும் சேர்த்துச் செலவு செய்வதாகச் சொன்னேன். அதற்குச் சம்மதித்துத்தான் வருவதாக ஒப்புக்கொண்டான். எனக்கு இலக்கியக் கூட்டம் நடக்குமிடத்தில் பேசுவதற்குப் போய்வரச் செலவாவது தருவதாக 400-க்கும் மேற்பட்ட கூட்டம் நடத்தியவர் கூறியிருந்தார்.  அவர் கொடுப்பதாகச் சொன்ன தொகையில் இரண்டு பேர் போய் வரலாம்.

ஒரு வழியாக நாங்கள் போய்ச் சேர்வதற்குள், இலக்கியப் பத்திரிகைகள் பற்றியும், எழுத்தாளர்களைப் பற்றியும், நாங்கள் பணிபுரியும் இடங்கள் பற்றியும், எங்கள் குடும்பங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு வந்தோம்.  ஒருமுறைகூட பத்மநாபன் என் எழுத்தைப்பற்றி ஒன்றும் சொன்னதில்லை.  இதற்குச் சில காரணங்கள் இருக்கும். முதலில் நானும் அவனும் ஒரே இடத்தில் பணி புரிகிறோம். அதனால், என்னை ஒரு படைப்பாளி என்று பார்ப்பதைவிட, அவனுடன் பணிபுரிகிறேன் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும்.

என் வீட்டிலுள்ளவர்கள் என்னை எப்போதும் எழுதுகிறேன் என்பதற்காகப் பாராட்டுவதில்லை.  அதேபோல், அவனும்… இன்னும் அவனைப்போல் வேறு சில நண்பர்களும்.  என் மனைவி அடிக்கடிச் சொல்வாள்.  எனக்குத் தெரிந்த விஷயத்தைத்தான் நீங்கள் எழுதுகிறீர்கள்.  எனக்குப் படிக்கப் போரடிக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியாது.  என் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், உன் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை நீ எளிதில் எழுதிவிடலாம்.  ஆனால் கற்பனையாக எழுதுவதுதான் கடினம் என்பார்.  அவர் கருத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை.  நம்முடைய அனுபவம் எழுதுவதற்கு எளிதாகத் தோன்றலாம்.  ஆனால் எல்லா அனுபவத்தையும் நாம் படைப்பாக்க முடியாது.  ஒரு அனுபவத்தை அப்படியே எழுதுவதாகத் தோன்றினால், உண்மையில் அது அனுபவத்தை எழுதுவது கிடையாது.  மேலும், ஒரு அனுபவத்தில், ஒரு எழுத்தாளனுக்குக் கிடைப்பது ஒரு பார்வை மட்டுமில்லை.

காஞ்சிபுரத்தை நாங்கள் அடைவதற்குள் கூட்டம் தொடங்கி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் ஒரு இலக்கியப் பத்திரிகையின் விமர்சனக் கூட்டம் அது.  முதலில் பேச ஆரம்பித்தவர்கள் அப் பத்திரிகைகயைப் பலவாறு பாராட்டிப் பேசினார்கள்.  காலை கூட்டம் முடிந்தபிறகு, எல்லோருக்கும் சாப்பிடுவதற்குப் பொட்டலம் ஏற்பாடாயிற்று.  இலக்கியக் கூட்டத்திற்காக ஒரு ஓட்டல் இலவசமாக ஏற்பாடு செய்திருந்தது.  கூட்டம் நடைபெற ஒரு பள்ளிக்கூடம் இலவசமாக இடமும் தந்திருந்தது.

 இதை நடத்தும் இலக்கிய அன்பர், அது எத்தனையாவது கூட்டம் என்ற தகவலுடன், அக் கூட்டத்திற்கு யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்பி யார் யார் வர மறுத்தார்கள் என்பதைப் பெருமையாகத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.  பின் கூட்டம் நடைபெறுவதற்கு நன்கொடை வழங்கியவரின் பட்டியலை வாசித்தார்.  தமிழ்நாட்டில்  வெளிவரும் சஞ்சிகைகள், புத்தகங்கள் ஒரு பக்கத்தில் குவிக்கப்பட்டிருந்தன.  பத்மநாபன் எழுந்துபோய் என் பேரைச் சொல்லி கிரெடிட்டில் புத்தகங்கள் சிலவற்றை எடுத்தக் கொண்டான்.

மதியம் பேச ஆரம்பித்தவர்கள், இலக்கியப் பத்திரிகையைத் தாக்கிப் பேச ஆரம்பித்தார்கள். அதற்குச் சாதியம் பூசத் தொடங்கினார்கள்.  மரியாதைக்குரிய படைப்பாளிகளை திட்டத் தொடங்கினார்கள். எனக்கு இருப்புக்கொள்ளவில்லை.  கூட்டம் ஏதோ திசையில் போகத் தொடங்கியது.  நான் பேசுவதற்கான வாய்ப்பு இன்னும் வரவில்லை.  ஆனால் நேரம் அதிகமாகிக்கொண்டிருந்தது.  பத்மநாபனும் நெளிந்தான்.  வந்தது வேஸ்ட் என்றான்.  கூட்டத்தில் ஒரு சாரர் தாக்கத் தொடங்க, பத்திரிகையிலிருந்து வந்திருந்தவர்கள் அதற்குப் பதில் அளித்துக்கொண்டிருந்தார்கள்.  எதற்கு இதுமாதிரியான கூட்டம் என்று தோன்றியது.  மணி ஏழு.  எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.  கூட்டம் நடத்துபவரிடம் சென்று,  “நான்  போய்வருகிறேன்” என்றேன்.  “இல்லை நீங்கள் பேசிவிட்டுத்தான் போகவேண்டும்”  என்று என்னைப் போகவிடாமல் தடுத்தார்.

என்முறை வந்தபோது, மணி எட்டாகிவிட்டது.  நான் அவசர அவசரமாகப் பேசினேன்.  பிறகு கூட்டம் நடத்துபவரிடமும், இலக்கியப் பத்திரிகையைச் சேர்ந்தவர்களிடமும் சொல்லிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு பத்மநாபனும், நானும் நகர்ந்தோம்.

போகும் அவசரத்தில், கூட்டம் நடத்தும் இலக்கிய அன்பர் பஸ்ஸிற்காக எனக்கு எந்தப் பணமும் தரவில்லை.  அவ்வளவு தூரம் வந்து கூட்டத்திற்குப் பேச சம்மதித்து, அவசரமாகப் பேசிவிட்டுப் போவது, எனக்கு ஏன் என்று தோன்றியது.  பத்மநாபன் கிட்டத்தட்ட திருப்தியற்ற நிலையில் இருந்தான்.  ‘எதற்கு வந்தோம் என்று தோன்றுகிறது’ என்றான்.  ‘நியாயம்தான்’ என்றேன்.

வீட்டிற்கு வந்தபோது இரவு 11க்கு மேல் ஆகிவிட்டது.  அன்றையப் பொழுதை என்னால் மறக்க முடியாது.  ஒருநாள் இப்படி வீணாகிவிட்டதே என்று நினைத்தேன்.  குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இதுமாதிரி போவதை நான் விரும்புவதில்லை.  வாரத்தில் ஒருநாள் தான் குடும்பத்துடன் இருப்பதற்கு நமக்குக் கிடைக்கிறது.  அந்தப் பொழுதைக் குடும்பத்துடன் கழிக்காமல், இலக்கியம் என்ற பெயரால், அடிதடி சண்டை நடக்கும் இடத்திற்கு ஏன் போனோம்?

வீட்டிற்கு வந்தவுடன் ஒரு தகவலை என் பெண் தெரிவித்தாள். ‘எழுத்தாளர் சகாதேவன் மனைவி இறந்துவிட்டார்’  என்ற தகவல்தான் அது.  கேட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. சகாதேவனுக்கு வயது எண்பது இருக்கும்.  அவர் உடல்நிலைதான் சரியில்லாமல் இருந்தது.  அவர் மனைவி எப்படி இறந்திருக்க முடியும்?

சகாதேவனுக்கு மூன்று பெண்கள், ஒரு பையன்.  சகாதேவன் சகோதரர்கள் எல்லோரும் சென்னையில் இல்லை.  சகாதேவன் வேலையிலிருந்து பணிமூப்புப் பெற்றவுடன், தனியாகத் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சந்தில் முதன்முதலில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள். அப்போதெல்லாம் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் நான் அவர்களைப் பார்ப்பது வழக்கம்.  ஆனால், அவர் மனைவி அவர்கள் குடியிருப்புக்குச் சொந்தமான வீட்டுக்காரியுடன் சண்டை போட்டதால், அந்த இடத்தைவிட்டு வேறு இடம் போக வேண்டுமென்று சொன்னதால், மடிப்பாக்கத்திற்குப் போய்விட்டார்கள்.

அதன்பின் சகாதேவன் வீட்டிற்குப் போவது எனக்குக் குறைந்து விட்டது.  சகாதேவனைப் பார்க்கும்போது பல விஷயங்களை அவர் சுவாரசியமாகச் சொல்வார்.  ஒருமுறை அவருக்குச் சர்க்கரை வியாதி இருப்பதைக் கண்டுபிடித்தார்.  அதைப்பற்றிச் சொல்லும்போது, சற்று மனம் வருத்தப்பட்டதுபோல் தோன்றியது.  அவர் அடிக்கடி மருத்துவரைப் பார்த்துச் சர்க்கரை அளவைச் சோதித்து மருந்து சாப்பிடும்படி இருந்தது.

சகாதேவன் அரசாங்க உத்தியோகம் பார்த்துப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே எழுதத் தொடங்கினார்.  அவர் முதல் நாவல், ‘இரண்டும்கெட்டான்’ ஒரு  ஓட்டல் சர்வரைப் பற்றியது.  தமிழ் இலக்கியச் சூழலில் சிறந்த நாவலாகப் பலரால் போற்றப்பட்டது.  அதன்பின் அவர் எழுதிய நாவல்களைப் பலர் கண்டு கொள்ளவில்லை.  அந்த முதல் நாவலை ஒரு சிறு பத்திரிகை திரும்பவும் மறு பிரசுரம் செய்திருந்தது.  அதைப் பிரசுரம் செய்த சிறுபத்திரிகை ஆசிரியரைப் பார்க்கும்போது, ‘ஏதோ நூலக ஆர்டர் கிடைத்ததால் அது பிழைத்தது.  இல்லாவிட்டால் சிரமம்’ என்றார் வருத்தத்துடன்.

ஒருசமயம் அவரை நான் பார்க்கும்போது, அவருடைய சகோதரர் இறந்துபோன தாக்கத்தால் அவர் எழுதிய கவிதைகளைக் காட்டினார்.  அன்று அவர் வீட்டில் நான் சாப்பிட்டேன்.  பாலக்காட்டு சமையல்.  ருசியாக இருந்தது.  அவர் மனைவிக்கு எழுத்துமீது எந்த நம்பிக்கையும் கிடையாது.  ‘ஒரு பைசாவுக்கும் போகாத என்ன எழுத்து’ என்பார்.  அவருக்கும் ஒரு குறை.  ‘நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உங்கள் நண்பர்களைப் பற்றி உங்களுக்குச் சாதகமானவற்றைப் பற்றி எழுதுகிறீர்கள்.  என்ன இருக்கிறது அதில்’  ,என்பார்.  ‘இரண்டும்கெட்டானில் ‘வரும் வரதனை எனக்குத் தெரியும்.  இங்க வந்து நிற்பான் என்பார்.  அவரும் அவர் மனைவியும் சண்டை போடும்போது, சகாதேவன் பேசாமலிருப்பார்.  வெற்றிலைச்சாறு வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும்.  ‘நான் ஏதாவது பேசினால், இன்னும் சத்தம் போடுவாள்.  அவள் குறையைச் சொல்லிவிட்டுப் போகட்டுமென்று விட்டுவிடுவேன்’ என்பார் வேடிக்கையாக.

அவர் மனைவி இறந்த செய்தியை என்னால் நம்ப முடியாமலிருந்தது.  “என்னிக்குச் செத்துப் போனா? “என்று என் பெண்ணிடம் கேட்டேன்.  “இன்று காலைதான்.  நீங்க கூட்டத்துக்குப் போனவுடனே செய்தி வந்தது” என்றாள் பெண். எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது.  இந்தப் பாழாய்ப்போன கூட்டத்திற்குப் போகாமலிருந்தால், சகாதேவன் வீட்டிற்குப் போயிருக்கலாம்.

சகாதேவன் வீட்டில் போன் இல்லையென்பதால், எப்படித் தொடர்புகொண்டு பேசுவதென்பது எனக்குத் தெரியவில்லை.  வழக்கம்போல், அலுவலகம் சென்றேன்.  செவ்வாய்க்கிழமை  முன்னதாக வீட்டைவிட்டுக் கிளம்பி, அவர் வீட்டுக்குச்சென்று துக்கம் விசாரிக்கலாமென்று தீர்மானித்தேன்.  முன்னதாகவே அலுவலகத்தில் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதற்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.

சகாதேவனைப் பார்க்க அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர் வீட்டில் ஒரே கூட்டம். பேய் அமைதி.  சகாதேவன் தாடியை மழிக்காமல் கோரமாகக் காட்சி தந்தார்.  துக்கம் அவர் முகத்தில் அறைந்திருந்தது.  அவர் பக்கத்தில் போய் அமர்ந்தேன்.  “நேற்று நீ வருவாய் என்று எதிர்பார்த்தேன்.  மாமி காரியம் நேற்றுதான் நடந்தது” என்றார். “எனக்குத் தெரியாமல் போய்விட்டதே?” என்றேன் சற்று வருத்தத்துடன். “இந்துவில் செய்தி கொடுத்திருந்தேன்” என்றார்.  “யாரும் வரவில்லையா?”  என்று கேட்டேன் ”  “இல்லை” என்றார்.  இது எனக்குச் சற்று வருத்தமாக இருந்தது. அவருடன் பழகிய இலக்கிய நண்பர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.  

அவர் அவர்களுக்குத் தொலைபேசியில் யார் மூலமோ தகவலை அறிவித்தும் இருந்தார்.  “நான் தினமணியில் இந்தச் செய்தியைக் கொண்டு வருகிறேன்” என்றேன். அப்போது அவருடைய பெரிய பெண்  ;வீல்’ என்று பெரிதாகக் கத்தினாள். அவள்  என்னைவிடப் பெரியவள்.  அந்த ‘வீல்’ சத்தம் அடிவயிற்றிலிருந்து என்னை என்னமோ செய்தது.  அதுவரையில், சகாதேவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மாமி இல்லாததை உணரவில்லை.  ஆனால் அந்தக் கத்தல், மாமி அங்கில்லை என்ற உணர்வைப் பலமாக உண்டாக்குவதுபோல் இருந்தது.

“மாமி எப்படிப் போனாள்? நல்லாதானே இருந்தாள்” என்று கேட்டேன்.

“மாமிக்கு ஒருவாரமா உடம்பு சரியில்லை.  கால் வீங்கி இருந்தது.  உதவிக்கு என் சிஸ்டர் பையன் இருந்தான். சனிக்கிழமை டாக்டர்கிட்டே போய் மருந்து வாங்கிச் சாப்பிட்டாள்.  அவன் ஏதோ ஊசி போட்டான்.  ராத்திரி சீக்கிரமாத் தூங்கப் போயிட்டா. காலையில் எழுப்பறேன் எழுந்திருக்கவே இல்லை” என்றான்

சகாதேவன்  அவர் பக்கத்தில் படுத்திருந்த மனைவி இறந்ததுகூடத் தெரியாமல் இருந்திருக்கிறாரே என்று தோன்றியது.  நான் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு, அலுவலகம் கிளம்பினேன்.   முதலில் தினமணி அலுவலகத்துக்குச் சென்றேன்.  அங்கு செய்தியைப் போடும்படி கேட்டுக்கொண்டேன்.  பொதுவாக இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், இலக்கியக் கூட்டங்களைப் பற்றிய அறிவிப்பைத் தினமணி அக்கறையுடன் செய்துவருகிறது.  எழுத்தாளர்களுக்குள்ளே நடைபெறும் சந்திப்புகளை ஒரு பரிவர்த்தனைபோல் செயல்பட்டு வருகிறது. செய்தியை அடுத்தநாள் வெளியிடுவதாகச் சொன்னார்கள்.

நான் தினமணி அலுவலகத்திலிருந்து என் அலுவலகம் கிளம்பினேன்.  எனக்கு சகாதேவன் நினைவாக இருந்தது. யாருடனும் அவர் இல்லாமல், தனியாகவே இருந்து பழக்கப்பட்டவர் சகாதேவன். உண்மையில், அவர் மனைவியின் வீம்புக்காகத்தான் அவர் தனியாக இருக்க நேரிட்டது.  இல்லாவிட்டால், அவர் அவருடைய பெண்கள் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ இருந்து விடுவார்.  அவர் மனைவியால் யார் வீட்டிலும் அனுசரித்து இருக்க முடியாது.  அவர் தனியாகக் குடும்பம் நடத்த, அவர்களுடைய பெண்களும், பிள்ளையும் பலவிதத்தில் உதவி செய்தார்கள்.  ‘இன்னும் சில தினங்களில் போன் வந்துவிடும்’  என்று சகாதேவன் குறிப்பிட்டிருந்தார்.  இனி அவர்  தனியாக இங்கே இருக்க முடியாது.  அவர் பையன்  இருக்கும் மும்பைக்குப் போய்விடுவார். கிட்டத்தட்ட இலக்கியத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த  கொஞ்சநஞ்ச தொடர்பும் போய்விடும்.  எண்பது வயதில் அவரால் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.  இனி தொடர்பு இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன?

Image result for chennai man in scooter and a car close by in chennai

சிக்னலுக்காக அண்ணா சாலையில் நான் வண்டியுடன் இருந்தபோது, சகாதேவனைக் குறித்துப் பலவாறு யோசித்துக் கொண்டிருந்தேன்.  நான் வண்டியில் ஓரிடத்தில் நிற்கும்போது காலை அகலமாக வைத்துக்கொண்டு நிற்பது வழக்கம்.  பச்சை சிக்னல் வந்தவுடன், நான் திடீரென்று வண்டியைக் கிளப்பினேன்.  பின்னால், ஒரு மாருதி கார் என் காலை பதம் பார்த்தது.  குறிப்பாகக் கால் சுண்டுவிரலை அது பதம் பார்த்தது.  நான் துடித்துப்போய்விட்டேன்.  ‘ஆ’ என்று பெரிதாகக் கத்திவிட்டேன்.

Image result for கால் விரல்கள்

காரிலிருந்த பெண், என்னைப் பார்த்து ‘சாரி’ என்றாள்.  நான் வலி பொறுக்கமுடியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து அடுத்த சிக்னலில் நின்றிருந்தேன்.  அந்த மாருதி காரும் என்னைத் தொடர்ந்து என் பக்கத்தில் வந்து நின்றது.  அதை ஓட்டிக்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்தேன்.  நடுத்தர வயது.  பார்க்க அழகாகவே இருந்தாள்.  திரும்பவும் என்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள்.  நான் ‘பரவாயில்லை’ என்றேன்.

அலுவலகத்தை அடையும்வரை என் சிந்தனை முழுவதும் கால் சுண்டுவிரலில் வியாபித்திருந்தது.  சுண்டுவிரலைப்பற்றி நான் இதுவரை கவனம் இல்லாமலிருந்ததும், அது குறித்து கவனம் கார் ஏறியது மூலம் ஏற்பட்டதாகத் தோன்றியது.  பிறந்ததுமுதல் இன்றுவரை நான் கால் சுண்டுவிரலைப்பற்றி ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை என்பதுதான்.  அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.  கண்கள் என்னைப் பெரிதும் பாதித்தது உண்டு.  உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் ஏதாவது உபத்திரவம் ஏற்பட்டால், நம் கவனம் அதன் மீது செல்லாமலிருந்ததில்லை.  எப்படி இந்தக் கால் சுண்டுவிரலைப்பற்றிக் கவனிக்காமலிருந்தேன் இதுவரை.  கால் சுண்டுவிரல் மீது கார் ஏறினது கூட, அதன் மீது கவனம் வைத்துக்கொள் வைத்துக்கொள் என்று ஞாபகப் படுத்துவதற்காகத்தானா? புரியவில்லை.

அலுவலகத்தில் நான் காலை நொண்டியபடி வந்தேன்.  அதைக் கவனித்த மாலதி என்கிற அலுவலகப் பெண்மணி, “என்ன சார், ஆச்சு உங்கள் காலுக்கு” என்று விசாரித்தாள்.

அவளிடம் கேட்டேன், “நீங்கள் கால் சுண்டுவிரலை ஒரு பொருட்டாக எண்ணியதுண்டா?” என்று.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.  நான் அவளிடம் விளக்கினேன். என் கால் சுண்டுவிரல் மீது ஒரு அழகான பெண்,  பெண், அவள் மாருதி காரை ஏற்றிவிட்டாள்.  எனக்கு வலி தாங்கமுடியவில்லை என்றேன்.

மாலதி அதைக் கேட்டுச் சிரித்தாள்.

“அந்தப் பெண் இரண்டு முறை என்னைப் பார்த்து,  சாரி என்று சொன்னாள்.  காரை ஏற்றியவுடன் நான் பெரிதாகக் கத்தினேன்,” என்றேன்.

மாலதியுடன் அதைக்கேட்ட மற்றவர்களும் சிரித்தார்கள்.  அன்று முழுவதும், கால் சுண்டுவிரல் வலியைக் கொடுத்துக்கொண்டே இருந்தது.