அத்தியாயம் 1
நடிப்பது என்பது என்ன ?
இதற்கு ஏதாவது விளக்கம் உள்ளதா ?
Acting Is Behaviour. Acting Is Enactment. Acting Is Communication . என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் .
நடிப்பது என்பது ஒரு விதமான பாவனை, நடத்தை.
நடிப்பது என்பது ஒரு விஷயத்தை பாவித்துக் காட்டுவது.
நடிப்பது என்பது ஒரு தகவல் தொடர்பு என்றும் கூறலாம்.
இப்படி பலவிதமான விளக்கம் கூறி அது என்ன எப்படி என்று ஆரம்பத்திலேயே உங்களை யோசிக்க வைப்பது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.
நடிப்பது உங்களுக்குப் பார்க்கும்போது சில சமயம் வியப்பாகவும் சில சமயம் மிகவும் சுலபமாகவும் தோன்றும்.
சுலபமாகக் தோன்றும் ஒரு நடிப்பு
உண்மையிலேயே சுலபம்தானா?
சுலபம்தான் ரொம்ப ஈஸிதான் என்று உங்களைச் சொல்ல வைக்கும் ஒரு முயற்சிதான் இந்தக் கட்டுரை.

நடிப்புபற்றி மேல் நாடுகளில் பலவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுப் பலவிதமான வடிவங்களை அதற்குக் கொடுத்து வெகு விவரமாக எழுதியுள்ளனர்.
அதன் இரண்டு பிரபலமான வடிவங்கள் ஒன்று
STANISLAVISKI STYLE
மற்றொன்று
BRECHT STYLE .
இவற்றைப்பற்றி விவரமாக அறியத் துவங்கினால் உங்களைக் கொஞ்சம் குழப்பத்திலும் ஆழ்த்தலாம்.
நமது அமைப்பில் நடிப்புபற்றிப் புரிந்து கொள்ளவும், இந்தக் கலையில் திறமைசாலியாக மாறவும் தற்சமயம் இந்த இரண்டு கலாசாரங்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு மிகவும் எளிதான முறையில் நடிப்புபற்றிப் பல விளக்கங்களை அளிப்பதும் சந்தேகங்களுக்குப் பதில் தருவதும் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இந்தப் பயிற்சியை எவ்வளவு எளிதாக்க முடியுமோஅவ்வளவு எளிதாகவும் மிகவும் சுவாரஸ்யமாகக் கற்றுக்கொள்ள வைப்பதும் தான் எனது ஆசை.
பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து படிப்பதை சுவாரஸ்யமில்லாமல் செய்து விடக் கூடாது அதே சமயம் எளிதாகத் தோன்றக்கூடிய ஒரு முயற்சியைக் கடினமாக்கி விடக்கூடாது.
சரி யாரெல்லாம் நடிகர்களாக ஆகலாம் ?
வெறும் பயிற்சியினால் மட்டும் நடிகராகிவிட முடியுமா?
எந்த வயதில் நடிக்க ஆரம்பிக்கலாம்?
நடிப்பதற்கு அழகு முக்கியமா?
இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் பல இடங்களில் இந்தத் தொடரில் புதைந்து உள்ளன.
அதற்கான உதாரணக் காட்சிகளுடன் கவனமாக ஒரு அத்தியாயமாகப் பிரித்துப் புரிந்துகொள்ளுங்கள்.
செயல்முறை விளக்கங்களுக்கு நேரிடையாகத்தான் சந்திக்க வேண்டும்

நம் எல்லாருக்குமே நடிப்பது என்பது மிகவும் சுலபமான ஒன்றாகவே தோன்றும்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் , நம்மில் பலர் ஏதாவது ஒரு நாடகத்தையோ சினிமாவையோ பார்த்துவிட்டு வந்தால் உடனே அதில் சிலர் பேசும் வசனத்தையோ அல்லது சிலரது நடிப்பையோ நாமும் செய்து காட்ட விரும்புகிறோம் அல்லது செய்கிறோம்.
இன்னும் சொல்லப் போனால் , “என்ன பெரிசா நடிக்கறாங்க ?ரெண்டு டைலாக், இதை நான் ரொம்ப சுலபமா பேசிடுவேன் “என்று நடித்தும் காண்பிப்போம்.
ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்த்தால் அதே நகைச்சுவைத் துணுக்கை நாம் பல முறை சொல்லிக் காண்பிப்போம்.
ஆனால் இது ஒரு மிமிக்ரி போன்றதுதான்.
நாம் இதையே ஒரு காமிரா முன்னாலோ அல்லது மேடையில் ரசிகர்கள் முன்னாலோ முதலில் செய்ய வேண்டியிருந்தால் நாம் திறமையாகச் செய்திருப்போமா என்பது ஒரு கேள்விக்குறி.
இது உங்கள் திறமைக்கு சவால் . இது தான் ஒரிஜினல் நடிப்பு .அங்கே உங்களைச்சுற்றிப் பல விஷயங்கள் உள்ளன.
வசனம், காட்சி அமைப்பு , இயக்குனர், காமிரா, ஒலி, ஒளி, பார்வையாளர்கள் என பலர் உங்கள் கவனத்தைக் கலைக்கக் கூடும். மேலும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற சவால் வேறு. இதில் நீங்கள் வெற்றிகரமாக வெளிவரும்போது ஒரு சிறந்த நடிகராக மாறுகிறீர்கள்.
இதைத்தான் சத்யஜித்ரே அவர்கள் தனது “ அபினேத்ரி” என்ற ஒரு தொலைக்காட்சிப் படத்தில் மிக நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்.
இந்தப் படத்தில் , ஓர் இயக்குனர் தனது படப் பிடிப்பிற்காக ஒரு கிராமத்திற்கு வந்திருப்பார். வந்த இடத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டிய நடிகை படப்பிடிப்பிற்கு வந்திருக்க மாட்டார்.
படத்தை அன்று தொடங்க வேண்டிய கட்டாயம்.அந்தக் கிராமத்தில் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்லும் இயக்குனர். நண்பரிடம் தனது நிலைமையை எடுத்துச் சொல்லும்போது நண்பரின் மனைவியைப் பார்க்கிறார். ஆச்சரியப்பட்டுப் போகிறார்.
கற்பனையில் சித்தரித்துவைத்த நாயகியை நூறு சதவிகிதம் நண்பரின் மனைவியிடம் பார்க்கிறார்.
நண்பரிடம் தயங்கித் தயங்கி , அவரது மனைவியைத் தன் படத்தில் நடிக்க வைக்கமுடியுமா எனக் கேட்க, நண்பர் மனைவியைக் கலந்து ஆலோசிக்க …..
நண்பருக்கோ ஏகப்பட்ட பணக் கஷ்டம். தேவை..!
இருவரும் சம்மதிக்கின்றனர்.
மறுநாள்-படப்பிடிப்பு நாள்
ஒப்பனை செய்யப்படும்போதே, நண்பரின் மனைவிக்குக் கைகால்கள் நடுங்கத் துவங்குகின்றன. ஒப்பனை முடிந்தது. படப்பிடிப்புத் தளம். ஒரே ஒரு வரி வசனம் தரப்படுகிறது.
விளக்குகள் பளீரென எரிகின்றன
கேமரா இயங்கத் துவங்குகிறது. ‘ ஆக்ஷன் ’ என்கிறார் இயக்குனர்.
நண்பரின் மனைவிக்கு வேர்த்துப் போகிறது . நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது. வார்த்தைகள் வரவில்லை. கைகளும் முகமும் இயங்க மறுக்கின்றன.
20க்கும் மேற்பட்ட டேக்குகள் . களைத்து, சலித்துப் போகிறார் இயக்குனர்.
நண்பரின் மனைவிக்குச் சுத்தமாக நடிக்க வரவில்லை.
சாதாரண ஏழை மனைவி பாத்திரம்தான். ஆனால் நடிக்க முடியவில்லை.. படப்பிடிப்பு ரத்தாகிறது.
இயக்குனர் விதியை நொந்தபடி நண்பரின் மனைவியை வீட்டுக்கு அனுப்புகிறார்.
இத்துடன் கதை முடிந்ததா?
இல்லை!
மறுநாள் காலை.
இயக்குனர் நண்பரைச் சந்திக்கச் செல்கிறார்.
அதற்குமுன் , அந்த வீட்டிற்கு மளிகை கடன் பாக்கியை வசூல் செய்ய ஒருவர் வருகிறார்.
அவரைத் தூரத்தில் கண்டவுடன் , நண்பரின் மனைவி வேகமாக ஓடி வந்து., கணவனைப் படுக்கையில் படுக்க வைத்து, போர்வையை எடுத்து போர்த்திவிட்டுக் கலங்கிய கண்களுடன் அவரை வரவேற்கிறாள்.
தன கணவன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் தன்னால் இந்த மாதக் கடனைத் திருப்பித்தர இயலவில்லை என்பதை மிகத் தத்ருபமாக முகத்தில் சோகத்தை வரவழைத்துக்கொண்டு கண்களில் ( கிளிசரின் இல்லாமலே ) கண்ணீரை வரவழைத்து நாடகமாடி வந்தவரை நம்ப வைக்கிறார்.
வந்தவர் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு , கடனைப் பிறகு பெற்றுக்கொள்வதாகக் கூறி விடைபெற்றுச் செல்கிறார்.
இதைப்பார்க்கும் இயக்குனர் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார். ஒரே ஒரு வசனம் பேசத் திணறிய இவளா இவ்வளவு வசனம் பேசுகிறாள். என்ன ஏற்ற இறக்கங்கள் ! என்ன முகபாவங்கள் ! மற்றவரைக் கலங்கச் செய்யும் நடிப்பு ! எப்படி இவளால் முடிந்தது?
இந்த நடிப்பு யார் சொல்லித் தந்தது?
யார் எழுதிக் கொடுத்த வசனம் ?
அவள்தான் நடிகை.
( அந்த டெலி பிலிமை இங்கே பார்க்கலாம் )
இந்தக் கதையை நான் இங்கே ஏன் சொல்கிறேன் ?
நம்மில் பலரும் இப்படிப் பல சந்தர்ப்பங்களில் அருமையாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
அலுவலகத்தில் முதலாளி முன் லீவு கேட்கும்போது.
முதலாளி அடிக்கும் அரதப் பழைய ஜோக்கிற்குச் சிரிக்கும்போது.
மனைவியின் சமையலைப் ( சிலசமயம் ) பாராட்டும்போது.
புது மனைவியை நமக்குப் பிடித்த நடிகையோடு ஒப்பிடும்போது.
காதலியிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என்று கூறும்போது.
சாலையில் போலீஸ்காரரிடம் மாட்டிக்கொள்ளும்போது.
நண்பர்களுடன் சினிமாவிற்குப் போய்விட்டு வீடுதிரும்பும்போது.
இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதே போன்ற நிகழ்வுகள் நமக்குக் காட்சிகளாக அளிக்கப்படும்போது நாம் எப்படி நடிக்கப் போகிறோம் என்பதற்கு உங்களுக்கு உதவவே இந்தத் தொடர் எழுதப்படுகிறது.
மேலும் இப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் உங்கள் வாழ்வில் மற்றவர்களிடம் பார்க்கும்போது அது உங்கள் நடிப்பிற்கு எப்படி உதவும் என்பதை விளக்குவதே என் நோக்கம்.
( தொடர்ந்து பேசுவோம் )

