சென்னையில் மழைக் காலம்


2015 டிசம்பர் ஒன்றுக்குப் பிறகு சென்னையில் லேசாக மழை பெய்தால் கூட வெள்ளம் முதல்மாடிவரை வந்துவிடுமோ என்று பயப்படவைத்துவிட்டது.
மழை வெள்ளமும் ஏரித்திறப்பும் சென்னை வாசிகளுக்குப் புதியதல்ல என்றாலும் பயம் புதிது.
எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோதே, உடல் நலமின்றி இராமாவரம் இல்லத்தில் இருந்தபோதே செம்பரம்பாக்கம் ஏரி திறந்ததால் வெள்ளம் அவரது வீட்டைச்சூழ, அவரைக் கட்டமரத்தில் அழைத்து வந்து கன்னிமரா ஹோட்டலில் தங்கவைத்தனர். இது நடந்தது 1985இல்.
மக்களின் இன்றைய பயத்துக்குக் காரணம் நீர் நிலைகளை அழித்தது, பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டியது, ஏரிகளில் வீடு கட்டியது, அரசு இயந்திரங்களின் கையாலாகாததன்மை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
மழை வேண்டும்; வெள்ளம் வேண்டாம். அதற்கு வழி, நாம் திருந்துவதுதான்.
இல்லையென்றால் இயற்கையால் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்படுவோம்.
