Related image

ஆட்டோ ஓட்டுநர் பவ்யமாகக் கையைக் கட்டிக் கொண்டுச்  சொன்னார், “மேடம், டாக்டர் உங்களைப் பார்க்கச் சொன்னாங்க”. நான் “உட்காருங்கள்” என்று சொன்னவுடன், “எனக்கு இல்ல, என் சின்னப் பாப்பாவுக்கு. பாப்பாவெல்லாம் பார்ப்பீங்களா?” என்று விசாரித்தார். பார்ப்பேன் என்று சொன்னேன். இப்போது சவாரி இருப்பதால் நாளைக்கு அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி, நேரம் குறித்துக் கொண்டு சென்றார்.

மறு நாள் தன் மகளுடன் வந்தார். அவள் பெயர் எஸ்தல், ஐந்து வயது. மெலிந்த உடம்பு, இரண்டு ஜடை போட்டு, முகவாட்டத்துடன் வந்திருந்தாள். சிரிப்பை மறந்துவிட்டது போல் எனக்குத் தோன்றியது. அவளைப் பார்த்தவுடன் என்னுள் ஏதோ வருடியது, என்ன இது?

அவள் அப்பா, ஜான் சொன்னார், “டாக்டரிடம் தான் எப்பவும் வருவோம். எல்லாம் சரியாகிவிடும். முதல் முறையாக வேறு ஒருவரிடம்…மேடம் தப்பா எடுத்துக்காதீங்க. எஸ்தல் நல்லாத் தான் இருந்தா. இப்ப தான் இப்படிப் படிப்புல கம்மி மார்க், அழுவது, நிறையக் கோவம், சரியா சாப்பிடாம…..” மேலே சொல்ல முடியாமல் அழுதார்.

உடனே எஸ்தல் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு “அப்பா…” என்று விசும்பினாள். நான் அவர்களைச் சமாதானப் படுத்திய பிறகு , எஸ்தலிடம் பேப்பர், க்ரையான் பென்சில் கொடுத்து “கொஞ்ச நேரம் ஏதாவது வரையலாமா?” என்றேன், ஜான் என்னை புதிராகப் பார்த்தார்.

எஸ்தல் கொஞ்சம் வரைந்தாள், என்னவென்று கேட்டதற்கு, சொல்லத் தடுமாறுவது போல் தோன்றியது. அவள் அப்பாவைக் கூர்ந்து பார்த்தாள்.  பிறகு என்னைப் பார்த்தாள். அவளிடம் “அப்பா வெளியே இருக்கவா? அப்பா இங்க இருக்கனும் என்றாலும் பரவாயில்லை” என்றேன். மெதுவாக, “அப்பா..” என்று இழுத்தாள். நான் ஒன்றும் சொல்லாமல் அவளைப் பார்த்தேன். ஜான் உடனே “ஆ, நான் வெளியே இருக்கேன். நீ, உனக்கு என்ன வேணுமோ பேசு. மேடம், சின்னப் பொண்ணு, தவறா சொன்னா மனசுல எடுத்துக்காதீங்க” என்று சொல்லி வெளி ஹாலில் உட்கார்ந்தார்.

நான் கதவை மூடி விட்டு வந்தேன். பார்த்தால், எஸ்தல் நின்று கொண்டு இருந்தாள். உட்கார் என்று சொன்னதற்கு, “மிஸ் பதில் சொல்ல நிக்க வேண்டும் என்று சொல்லிருக்காங்க” என்றாள். புரிய வைத்ததும் உட்கார்ந்தாள்.

அவள் மனதில் உள்ளதைப் பேசச் சொன்னேன். எஸ்தல் விவரித்தாள், அவளுக்கு அவளுடைய தம்பிப் பாப்பா வேண்டும் என்றாள். அவனை, மதர் மேரி தூக்கி வைத்துக் கொண்டதால் அவனுடன் விளையாட முடியவில்லை என்றாள். படிக்கவும் கடினமாக இருக்க, ஃபெயில் மார்க் தானாம். அம்மாவிடம் பேசப் பயமாக இருக்கிறது என்று சொல்லும் பொழுதே கண்கள் தளும்பியது. ஏன் என்று கேட்டதற்கு, அம்மா இவளை இப்பொழுதெல்லாம் திட்டி, “போ, செத்துப் போ” என்று சொல்லி அடிக்கிறாளாம்.

ஆனால், அப்பா அன்பாகப் பேசுவாராம். சர்ச்சுக்குக் கூட்டிச் செல்வாராம். தினம் லேட்டாக வருவதால் வரும்வரை விழித்துக் கொண்டிருக்க முடியவில்லை என்றாள்.  ஸ்கூலிலும் டீச்சர் திட்டுகிறார்கள், ஒரு சிலர் பாசமாகவும் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எஸ்தலிடம் வரைந்ததை முடிக்கச் சொன்னேன். அவளை வெளியில் உட்கார வைத்து, ஜானை  உள்ளே அழைத்தேன்.

ஜான் சொன்னார், எஸ்தல் இவர்களின் முதல் குழந்தை.மனைவி மெர்ஸீயோ ஆண் பிள்ளைக்கு ஆசைப் பட்டாள். எஸ்தல் பிறந்ததும் பாசமாக வளர்த்து வந்தாள். ஆனால் எஸ்தலிடம் சொல்லிக் கொண்டே இருப்பாளாம், “நீ மட்டும் ஆண்பிள்ளையா இருந்திருந்தா எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும்!”என்று. ஒரு வருடத்திற்கு முன் இவர்களுக்கு இரண்டாவது குழந்தைப் பிறந்தது. மெர்ஸீ ஆசைப் பட்டது போல் ஆண் குழந்தையே. குடும்பமே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

மெர்ஸீ, பையனை (டேவிட்) மிகக் கவனமாகவும், பாசமாகவும் வளர்த்து வந்தாள். அவனிடமே நிறைய நேரம் இருப்பாள். எஸ்தலை நெருங்க விடமாட்டாள். கீழே போட்டு விடுவார்களோ என்று அஞ்சி, டேவிடை வேறு யாரும் தூக்கிக்கொள்ள விட மாட்டாள். ஜானிடம் தரும் பொழுது கூட “இப்படிச் செய்யுங்க, இப்படி இல்லை” என்று பட்டியலிட்டே தருவாளாம்.

எல்லோரும் எஸ்தலிடம் “நீ அக்கா, பொறுப்பா இரு. அம்மாவுக்கு உதவி செய்” என்பார்கள். அவளும், “அம்மா டேவிடிற்கு, நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்பாள். டேவிடை பற்றிக் கேட்டால் மெர்ஸீக்குக் கோபம் வந்து, அவளை அடிக்கத் தொடங்கினாள்.

எட்டு மாதம் முன்பு, டேவிட் காய்ச்சல் வந்து இறந்து விட்டான். மூன்றே நாளில் எல்லாம் முடிந்தது. மெர்ஸீயால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிள்ளை உயிரோடு தான் இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.  அடக்கம் செய்ய அவள் அனுமதிக்கவில்லை. துயரத்தின் முதல் கட்டமான “அதிர்ச்சி”யில் இப்படித் தோன்றும். அவளிடமிருந்து பலவந்தமாக டேவிடைப் பிரித்து அடக்கம் செய்தார்கள். எஸ்தலைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளைக் கை காட்டி “இது போயிருக்கக் கூடாதா? என் ராஜா போயிட்டுதே” என்று அழுதாள் அந்தத் தாய்.

எஸ்தலுக்கு என்னவென்று புரியவில்லை. தன் அம்மா ஏன் தன்னிடம் பேசுவதில்லை, தள்ளிவிடுகிறாள் என்று இந்த ஐந்து வயது எஸ்தல் நினைத்து, தவித்தாள். ஜானும்,  பாதிரியாரும் அவளைச் சமாதானப் படுத்த முயன்றார்கள்.

நாளடைவில், எஸ்தல் சாப்பிடுவது, சிரிப்பது குறைந்தது. படிப்பிலும் கவனம் தவறியது. தனித்து இருந்தாள்.  எஸ்தலின் மாற்றத்தை அவள் வகுப்பு ஆசிரியர்கள் கவனித்து வந்தார்கள். இந்த நிலைமை பல வாரங்கள் நீடித்திருந்ததால், இதைக் குறித்துப் பெற்றோருக்குக் கடிதம் அனுப்பினார்கள். கடிதத்தை டாக்டரிடம் காண்பித்தபோது, அவர் எஸ்தலை என்னிடம் அனுப்பி வைத்தார். இந்த அறிகுறிகள் “சைல்ட்ஹூட் டிப்ரஷன்” என்பதைச் சார்ந்தது.

நடந்ததைப் பற்றி எஸ்தலிடமிருந்து மேலும் புரிந்து கொண்டேன். அவள் எல்லா இடங்களிலும் தன் தம்பிப் பாப்பாவைத் தேடினாள். தேடுவதைப் பார்த்துச் சர்ச்சைச் சுத்தம் செய்யும் ஆயா எஸ்தலிடம் சொன்னாள் “உன் தம்பி பாப்பாவை மதர் மேரி தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள். டேவிடைப் பார்க்கத் தோணிச்சுனா மதர் மேரியைப் பார்க்க வா” என்றாள். எஸ்தல் தினம் சென்றாள், பார்த்தாள். ஆனால் டேவிடோ வந்து விளையாடவில்லை, மதரும் பேசவில்லை.

வீட்டிற்கு வந்தால், மெர்ஸீ அழுவதும், எஸ்தலைப் பார்த்ததும் “நீ போ, சாவு” என்று சொல்லி அடிப்பதுமாக இருந்தது. வீட்டின் எல்லா இடத்திலும் துணியும் குப்பையும், வாடையுமாக இருந்தது. இவை, மெர்ஸீயின் மனநிலையை தெளிவு படுத்தியது.

எஸ்தல் மேலும் விவரித்தாள்: “டேவிடை மதர் மேரி தூக்கிக் கொண்டதால் அம்மா அழுகிறாள். என் தோழியின் அம்மா தினம் மேரி மாதாவுக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பாள். அவர்களைக் கேட்டதற்கு, மேரி மாதாவுக்கு நன்றி சொல்லவே என்றார்கள். அன்றிலிருந்து அப்பாவை வற்புறுத்தி ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுகிறேன்” என்றாள். ஜானுக்கு  எதற்கு இப்படி என்று கேட்க மனம் வரவில்லை என்றார்.

எஸ்தல் என்னிடம் சொன்னாள், “நான் மேரி மாதாவிடம் டேவிட்டைக் கீழே இறக்கச் சொன்னேன். அதற்குப் பதிலா என்னைத் தூக்கிக்கச் சொன்னேன்” என்றாள், சர்வ சாதாரணமாக. மறைந்தவருடன் இருப்பவர்களின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரா?

அவளுக்கு ப்ளே தெரபி (Play Therapy) ஆரம்பித்தேன். குழந்தைகளுக்குள் அலை மோதிக் கொண்டிருக்கும் எண்ணங்களை, உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள ப்ளே தெரபி உதவும். ப்ளே தெரபியில், குறிப்பிட்ட பொருட்களை  வைத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடுவார்கள். விளையாடும் விதங்களிலிருந்து அவர்களின் மனநிலையை நாங்கள் அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல் படுவோம்.

நான் அவள் போக்கில் சென்று இதுவரை பட்ட ரணங்களை மெதுவாக அணுகினேன். உதாரணத்திற்கு, அவள் முதலில் தன்னை தனிமையிலும், மற்றவர்களை ஒன்றாகவும் வைத்தாள். அவளுடன் பேசி, ஆலோசித்து, அவளைச் சுற்றி வரும் நாய்க் குட்டி, வளர்த்து வரும் செடிகளை சேர்க்க, அவளே தானாக அப்பா, தோழி என்று சேர்த்துக் கொண்டாள். இப்படித்தான், குழந்தைகளுக்குப் புரியும்படி செய்து வந்தால், மெதுவாக அவர்களின் மனநிலை மாறும். எஸ்தலுக்கு பல வடுக்கள் இருந்ததால், ஒவ்வொன்றிலிருந்து அவள் மீண்டு வர பல வாரங்கள் தேவைப் பட்டது.

இது நடந்து கொண்டிருக்கையில், அம்மாவின் பங்களிப்பும் மிக முக்கியமானதால், ஜானிடம் மெர்ஸீயை அழைத்துக் கொண்டு வரச் சொன்னேன். மறுத்து விட்டாள். அவளிடம் ஃபோனில் பேசினேன், ஒரே ஒரு முறை தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

துயரம் தாளாமல், டேவிட்டைப் பற்றிய தன் கனவு, ஆசைகள் முதலியவற்றை மெர்ஸீ பகிர்ந்தாள். தூக்கம் இல்லை, சாப்பாடு பிடிக்க வில்லை, பல நேரங்களில் வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கண்ணீரும் கோபமுமாய் இருந்தாள்.

இதெல்லாம்  துயரத்தினால் வரக்கூடியவையே. இது, “க்ரீஃப் ரியாக்க்ஷன்” (Grief reaction), இழப்பினால் நேரிடும். இழந்தவரின் படிப்படியான நிலையை அற்புதமாக முதலில் விவரித்தவர் ஏலிஸபெத் க்யூப்ளர்-ராஸ் (Elisabeth Kübler-Ross) அவர்கள். இந்த நிலையின் முதல் கட்டம், “ஷாக்”. அடுத்த கட்டத்தில் “மறுத்தல்”, இதில், “இல்லை, இப்படி நடக்கவில்லை” என்பது நிலவும். இதனால், மறைந்தவரைத் தேடுவதும், காத்திருப்பதும் நேரிடலாம். அடுத்ததாக “கோபம்” தோன்றி, ஏன்? எதற்கு என்ற கேள்விகள் எழும்.  பின்னர், “பேரம்” (“இதற்குப் பதிலாக…”). கடைசியில் “ஏற்றுக் கொள்வது”. ஒவ்வொரு கட்டத்தை தாண்டுவது அவர் அவர் நிலை, மனபலம், உறவு வலுவைப் பொறுத்ததே!

காயம் பட்ட நிலையில் நமக்குத் தெம்பு வரவழைக்கவே நம் கலாச்சாரங்களில் பல விதமான சடங்குகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். செய்தி தெரிந்ததுமே, நேரிலோ, தொலைப்பேசியிலோ இழப்பை விசாரிக்கும் பழக்கம். இதனால், இழந்தவர்களுக்கு தங்களின் மனக்குமறல்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. சடங்குகள் செய்யும் நாட்களில், உறவினர்கள் கூடி தோள் கொடுப்பது மன ஆறுதல் தருகிறது. மரணத்தை ஏற்றுக்கொள்ளப் பக்குவப் படுத்தவே ஒரு வருடத்திற்குச் சடங்குகள் தொடர்கின்றன, பண்டிகை கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப் படுகிறது.

மெர்ஸீக்கோ ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆசை. நிறைவேறிய பின் அதை இழந்த துயரத்தினால், “நான் டேவிடிடம் போறேன்” என்று பதட்டப்படும் நிலைக்கு மாறினாள். ஓடிச் சென்றுவிடும் அவளை கூட்டிக் கொண்டு வந்தார்கள். இது மன உளைச்சலுக்கான அறிகுறி. தற்கொலைச் சிந்தனை இருந்ததால் அதிலிருந்து விடுவிக்க, தற்காலிகமாக மாத்திரை கொடுக்கப் பட்டது.

என்னுடைய ஸெஷனில், மெதுவாக அவள் கவனத்திற்கு எஸ்தலைக் கொண்டு வந்தேன். மெர்ஸீக்கு எஸ்தல் உயிருடன் இருப்பதே பிடிக்கவில்லை. எஸ்தல் கருப்பு, பெண் பிள்ளை என்பதெல்லாம் அவளை ஆட்டிப்படைத்தது. எஸ்தல் பிறந்த நேரத்தில் மெர்ஸீ பாசமான தாயாகத் தான் இருந்தாள். இதைப் பற்றி அவளை ஃப்ளாஷ் பேக்கில் நினைவூட்டச் செய்தேன். அழுகை, கோபத்துடன் அதைச் செய்தாள். மூன்று வாரத்தில், அவள் நிலை சுதாரித்த பின், எஸ்தலுடன் எங்கேயாவது போக வேண்டும் என்று ஒரு ஹோம் வர்க் அமைத்தேன். ஸ்கூலுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தாள். வாகனங்கள் அதிகமாக இருக்கும் சாலை என்பதால், கையைப் பிடித்துச் செல்ல, மகள் மேல் பாசம் வளர்ந்தது.

ஜான், மகளுக்கும், மனைவிக்கும் முடிந்தவரை ஆதரவாக இருந்தார். அவருக்கும் டேவிட் இறந்த துக்கம் நிறைய இருந்தது. தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சமாளித்துக் கொண்டார். சில பயணிகள், ஜான் முகவாட்டத்துடன் இருப்பதைப் பார்த்து அதை மாற்றப் பல வழிகளைச் சொன்னார்கள். ஜானும்  அவற்றைச்  செய்து  நாட்களை ஒட்டினார். சர்ச் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஜானைப் பாதிரியார் சேர்த்துக் கொண்டதால், அவரின் அரவணைப்பும் இருந்தது. ஃபாதர் அவர்களின் பக்க பலம்!

இன்னொரு பக்க பலம் எஸ்தலின் ஸ்கூல், குறிப்பாக வகுப்பாசிரியை மிஸ் ரீடா. அவர்களுடன் கலந்துரையாடி, பல குறிப்புகளை பகிர்ந்தேன். வகுப்பில் எப்போதும் போல மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, பாட்டுப் பாடுவது, ரைம்ஸ் சொல்வது எல்லாம் தொடர வேண்டும். “வகுப்பு தோழர்” என்று ஒவ்வொரு வாரத்திற்கு இருவரை அமைக்கலாம். அவளின் துயர நிலை இவர்களுக்குப் புரிய சந்தர்ப்பமாக அமைந்து வரும். எஸ்தலின் கவனம் சிதறினாலும் இவர்கள் ஊக்கவிப்பார்கள். மாணவர்கள் வட்டமாக உட்கார்ந்து (ஸர்கல் டைம்) தனக்குப் பிடித்த விஷயத்தை பற்றிப் பேசுவதில் பாஸிட்டிவ் நிலையை உருவாக்க முடியும். முக்கியமாக, வகுப்புக்குள் வந்தவுடன் “இது தான் என்னுடைய இன்றைய நிலை” எனக் குறிக்கும் உணர்ச்சிகளைக் காட்டும் படங்களைத் தேர்ந்தெடுத்து வைக்க வேண்டும். செய்ததுமே, நம் உணர்ச்சிகள் சமநிலைக்கு வந்து விடும். டீச்சர்கள் இதையெல்லாம் செய்து வந்தார்கள். விளைவாக, எஸ்தல் பள்ளிக்குச் செல்வதை மிகவும் விரும்பினாள்!

மேலும் எஸ்தலின் வகுப்பு ஆசிரியர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் குழந்தைகளின் மனோ பாவத்தை எவ்வாறு அடையாளம் காண முடியும், மனநலம் பாதிக்கக்கூடிய நிலைகள் என்ன, வகுப்பில் இதை எப்படிச் சேர்த்து கொள்வது என்று பயிற்சி அளித்தேன்.

எதிர்பாராத இன்னொன்றும் நடந்தது. ஜானின் தாயார், அவர்களுடன் இருக்க முடிவெடுத்து வந்தாள். அவர்கள், பால்வாடி (Balwadi) ஸூபர்வைசர். மிகக் கவனத்துடனும், ஆசையாக மருமகளையும், பேத்தியையும் பார்த்துக் கொண்டார். மெர்ஸீக்கு மன பலம் கூடியது. டேவிடின் நினைவு இருந்தது, ஆனால் மாமியாரின் ஊக்கத்தில் வேளைக்குச் சாப்பிடுவது, வீட்டைக் கவனிப்பது தொடங்கியது, கூடவே எஸ்தலையும் கவனிக்கத் தொடங்கினாள்.

நாளடைவில், மெர்ஸீ கர்ப்பமானாள். எஸ்தல், “பாப்பா வரப் போகிறது” என்றாள். யாராவது, “தம்பியா? தங்கையா”? என்று கேட்டால், பாட்டி சொல்வது போலவே “மேரி மாதா யாரை அனுப்புவாங்கன்னு எனக்குத் தெரியாது, இதுதான் பாப்பா இடம்” என்று காட்டி, சொல்லி மகிழ்ந்தாள்!

மொத்தத்தில், எஸ்தலுக்கு உதவி என்பது பல வடிவங்களில் வந்து சேர்ந்தது. டிப்ரஷன் அதிலும் சைல்ட்ஹூட் டிப்ரஷனில், மன நல ஆலாசகருடன், பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருடைய பங்கும் தேவை. ஒன்றுகூடிச் செய்வதில், (டீம் வர்க்) பல நன்மை மலர்ந்து, பூத்துச் செழிக்கும்!