விஷ்வகர்மா தன் திறமையெல்லாம் காட்டவேண்டிய தருணம் வந்தது. தான் செய்யப்போகும் காரியத்திற்கு மனைவி மகள் சூரியதேவன் மற்றும் உறவினர்கள் மந்திரிமார்கள் மற்ற எவருடைய ஒப்புதலும் கிட்டாது என்பதை நன்றாக அறிந்திருந்தார். வெளியே தெரிந்தால் இது பஞ்சமாபாதகம் என்று அவரை மூன்று உலகமும் தூற்றும். உலகத்தைப்பற்றிக் கவலைப்படாதவர் விஷ்வகர்மா. தன்னால் எதையும் செய்யமுடியும் என்ற அகம்பாவமும் கர்வமும் அவருக்கு எப்போதும் உண்டு. தேவலோகங்களையே நிர்மாணிக்கும் தேவ சிற்பி என்பதால் அவருக்குக் கிடைத்த மதிப்பிற்கும் செல்வாக்குக்கும் அளவே இல்லை. தன் எண்ணப் பிரதிபலிப்புகள்தான் நடைமுறைகளாக வரவேண்டும் என்பதில் மிகவும் தீர்மானமாக இருப்பவர்.
பிறவியிலிருந்தே ஸந்த்யா அவருக்கு ஒரு சவாலாக இருந்துவந்தாள். அவள் பிறவியில் ஏற்பட்ட குறையைப்போக்கத் தன்னைப் படைத்த பிரும்ம தேவருக்கும் தெரியாதபடி சில காரியங்கள் செய்தவரல்லவா அவர். இன்று, தான் நினைத்தபடி மகாபிரும்மருத்ரன் ஸந்த்யாவிற்குப் பிறக்கவேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராகிவிட்டார்.
அதன் முதல் படி ஸந்த்யா கருவுற்றிருக்கிறாளா என்று சோதனை செய்யவேண்டியது. அவள் கருவுற்றிருந்தால் அதைக் கலைக்க ஏற்பாடு செய்யவேண்டியது. இவைதான் தனது முதல் கடமை என்று தீர்மானம் செய்தார். அதற்கேற்றாற்போல் காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
” சூரியதேவரே ! அருமை மகளே! காந்த சிகித்சை மிகவும் அற்புதமாக முடிவடைந்துவிட்டது. இனி உங்கள் இனிமையான இல்லற வாழ்விற்கு எந்தவிதத் தடையும் இருக்கமுடியாது. சூரியதேவரின் கிரணங்கள் ஸந்த்யாவை இனி பாதிக்காது. ஆனந்தமாக நீங்கள் இருவரும் வாழ்வைத் துவங்கலாம். இன்றே உங்கள் திருமண நாளை நிச்சயம் செய்துவிடுகிறேன். வருகிற மகரசங்கராந்தியில் உங்கள் திருமணத்தை கோலாகலத்துடன் நடத்திவைக்கிறேன். ஹிம பர்வதத்தில் பரமேஸ்வரன் பார்வதி திருமணம் நடந்ததைவிட மிகவும் சிறப்புடன் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். தேவ உலகமே இதுவரை கண்டிராத அளவிற்கு உங்கள் திருமண விழா சிறப்பாக அமையும். அது சூரியதேவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும். ஆனால் அதுவரை நீங்கள் சற்றுப் பொறுத்திருக்கவேண்டும்.” என்று மேலும் பேசப்போன விஷ்வகர்மாவை சூரியதேவனின் கணீரென்ற குரல் தடுத்தது.
“விஷ்வகர்மா அவர்களே! எங்களை நீங்கள் மன்னிக்கவேண்டும். நானும் ஸந்த்யாவும் பார்த்த ஒரு கணத்திலேயே ஆதர்ச தம்பதிகளாகிவிட்டோம். அவளின்றி நானும் நானின்றி அவளும் இனி ஒரு கணம்கூடப் பிரிந்திருக்க முடியாது. என் இதயத்தில் அவள் சங்கமமாகிவிட்டாள். அதேபோல் அவள் மனம், எண்ணம், உடல் அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன். இனி நாங்கள் பிரிந்திருப்பது என்பது இயலாத காரியம். இன்றே நாங்கள் பெரியவர்கள் உங்கள் முன்னிலையில் சதி-பதிகளாகி விடுகிறோம். தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறோம் ” என்று விஷ்வகர்மாவை வணங்கினான் . ஸந்த்யாவும் அதற்கு உடன்பட்டவள்போல் சூரியதேவனுடன்சேர்ந்து தந்தையை வணங்கினாள்.
வேறு எவரேனும் விஷ்வகர்மாவின் இடத்தில் இருந்தால் இப்படித் தன் திட்டம் முறியடிக்கப்படுகிறதே என்று பதறிப்போயிருப்பார்கள். ஆனால் விஷ்வகர்மா செயல்களில் காட்டும் சாதுர்யத்தைத் தன் பேச்சிலும் காட்டினார். தன் மனத்தில் ஏற்பட்ட சலனத்தை முகத்தில் சிறிதளவுகூடக் காட்டிக்கொள்ளாமல் புன்னகையோடு கூறினார்.
“உங்கள் இருவருக்கும் இடையே உருவாகியிருக்கும் புதிய பந்தத்தை நான் நன்கு அறிவேன். உங்கள் திருமணம் திட்டமிட்டப்படி மகரசங்கராந்தியில் நடைபெறும். அதுவரையில் நீங்கள் பொறுத்திருக்கவேண்டும் என்றுதான் கூறினேனே தவிர பிரிந்திருக்கவேண்டும் என்று சொல்லவில்லை”.
” புரியவில்லை தந்தையே ” என்று வார்த்தையால் ஸந்த்யாவும் பார்வையால் சூரியதேவனும் வினவினர்.
” முதலில் செயலைச் சொல்கிறேன் . பிறகு அதைப் புரியும்படி சொல்கிறேன். செயல் என்னவென்றால் சூரியதேவன்தான் பர்வதத்திற்குச் செல்லவேண்டும். அவர்கூட ஸந்த்யாவின் ஸ்வரூபம் வரும். அதுபோல ஸந்த்யா இங்கிருப்பாள். அவள்கூட சூரியப் பிரபை இருக்கும். அதாவது ஸந்த்யாவின் ஸ்வரூபம் என்ற முப்புரப்பரிமாணப் பிரதியை சூரியதேவனுடன் அனுப்பிவைக்கிறேன். அதற்கான மந்திரம் என்னிடம் இருக்கிறது. அதை ஸந்த்யா உச்சரித்தால் அவள் ஸ்வரூபம் உங்களுடன் வரும். ஸந்த்யாவிற்கும் அதற்கும் கொஞ்சங்கூட வித்தியாசம் இருக்காது. அந்த ஸ்வரூபம் பேசும், பாடும், ஆடும். அதைத் தொடலாம். உணரலாம். ஸந்த்யா இல்லையே என்ற எண்ணமே சூரியதேவனுக்குத் தோன்றாது. தாம்பத்திய உறவைத்தவிர நீங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்.
ஸந்த்யாவிற்கு என்னால் சூரியதேவனின் ஸ்வரூபம் தர இயலாது. ஆனால் அவளை ஒரு பளிங்கு அறையில் இருத்தி சூரியப் பிரபை விளக்கை ஏற்றிவைத்து சூரியதேவன் தன்னுடனே இருப்பதுபோன்ற பிரமையை என்னால் ஏற்படுத்தித் தரமுடியும். இதற்கு நீங்கள் இருவரும் ஒத்துழைக்கவேண்டும். ஏனென்றால் உங்கள் திருமணத்தை பிரும்மா விஷ்ணு சிவன் மூவரும் ஒன்று சேரும் காலத்தில்தான் செய்வதாக அவர்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்.” என்று மேலும் ஒரு அஸ்திரத்தைப் போட்டார் விஷ்வகர்மா.
வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்ட சூரியதேவனும் ஸந்த்யாவும் விஷ்வகர்மாவின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
சரி என்று புறப்படத் தயாரான சூரியதேவனை நிறுத்தினார் விஷ்வகர்மா.
” நீங்கள் புறப்படுமுன் உங்கள் இருவருக்கும் ஒரு சாந்துக் குளியல் செய்யவேண்டும் . காந்தச் சிகித்சை செய்துகொண்டவரும் செய்வித்தவளும், அதைத் தொடர்ந்து சாந்துகுளியல் செய்து கொள்ளவேண்டும். அப்போதுதான் காந்தப் பொடிகளின் கதிர்வீச்சு மற்றவரைத் தாக்காமல் இருப்பதோடு உங்கள் உடலிலிருந்தும் அறவே போய்விடும். அதற்கு நம் பளிங்கு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இருவரும் அதோ மூலையில் தெரியும் இரு கூண்டுகளுக்குச் செல்லுங்கள். அவை தானாகவே உங்களைக் குளியல் அறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். ” என்றார் விஷ்வகர்மா.
அவர் சொல்வதைக் கேட்பதைத்தவிர வேறு வழி ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட சூரியதேவன் மௌனமாக இடது கோடியில் இருக்கும் கூண்டிற்குள் சென்றான். உள்ளே சென்றதும் கூண்டு மூடிக்கொண்டது. மெதுவாக சுழன்று விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
ஸந்த்யா வலது கோடியில் இருக்கும் கூண்டில் நுழைந்தாள். அவள் கூண்டு உடனே பறக்கவில்லை. விஷ்வகர்மாவின் ஆணைப்படி ஒரு மரகத பசுமை ஒளி வட்டம் அந்தக் கூண்டின் மேல் பகுதியிலிருந்து கீழ்ப் பகுதி வரை சுற்றிச்சுற்றி வந்தது. ஸந்த்யாவின் உடலினுள் இருக்கும் ஒவ்வொரு மூலக் கூறுகளையும் படம் பிடித்துக்கொண்டே வந்தது.
அவள் கருவில் மூன்று உயிர்கள் தோன்றியிருப்பதை அந்த ஒளிவட்டம் படம் பிடித்துக் காட்டியது. அதைப்பார்த்த விஷ்வகர்மாவின் கண்கள் தீப்பிழம்பைக் கக்கின.
சாந்துக் குளியலின்போது ஸந்த்யாவின் கருவில் இருக்கும் மூன்று உயிர்ப்புள்ளிகளையும் அழிப்பதற்கு மருந்து தயார் செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டார் விஷ்வகர்மா. ஸந்த்யாவின் கூண்டையும் பறக்கும்படி ஆணையிட்டுவிட்டு மருந்தைத் தயாரிக்கச் சென்றார் விஷ்வகர்மா.
அந்த மரகத ஒளிவட்டம் ஸந்த்யாவின் கால் நிழலில் பதுங்கியிருக்கும் ராகுவையும் காட்டிக் கொடுக்கத் தவறவில்லை. ஆனால் அவள் கருவில் இருக்கும் மூன்று உயிர்களைக் கண்டதும் காலடியில் தெரியும் ராகுவை விஷ்வகர்மா பார்க்கத் தவறிவிட்டார். அதனால் ஏற்பட்ட விபரீதங்கள் விஷ்வகர்மாவையே பின்னால் நிலை குலையச்செய்தன .
(தொடரும்)
இரண்டாம் பகுதி
ஆரக்கிளிலிருந்து வந்தவர் மிகவும் சாமர்த்தியசாலி. தான் சமாளிக்கவேண்டியது மும்மூர்த்திகள், முப்பெரும்தேவியர்கள், மற்றும் விநாயகர், முருகன் ,எமன், சித்திரகுப்தன் என்பதை நன்கு அறிந்தவர். இந்த பிராஜக்டுக்காகவே புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். டேட்டாபேசில் ஆராய்ச்சி செய்து டாக்டரேட் வாங்கி, பல கம்பெனிகள் இவரைத் தங்கள் நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளத் துடித்தபோது அனைத்தையும் உதறிவிட்டு ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் சேர்ந்து சுவாமி தத்தாம்ஸானந்தா என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர். தத்தாம்ஸ் என்றால் சமஸ்கிருதத்தில் டேட்டா என்று அர்த்தம்.
பாகவதம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து அதில் பரந்து விரிந்துள்ள தகவல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து, மிகப் பெரிய தீஸிஸ் எழுதியவர் தத்தாம்ஸானந்தா. ராமர், கிருஷ்ணர் பிறந்தபோது இருந்த கிரக நிலைகள், மகாபாரதப் போர்களின்போது கூறப்பட்ட அமாவாசை போன்ற திதிகள் இவற்றையெல்லாம் இணைத்து இதிகாச காலங்களை மிகத் துல்லியமாக வரிசைப்படுத்தியவர். அத்துடன் ஆர்யபட்டரின் தத்துவங்கள், இன்றைய கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாவதற்குக் காரணமாக இருந்தவர். வானவியல் , கணிதவியல் இரண்டிலும் தேர்ச்சிபெற்ற பல அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாகக் கிடிதபதம் என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் கல்ப மன்வந்த்ரா யுகா போன்ற பெரிய அளவில் காலத்தைக் குறிக்கும் பதங்கள் தற்கால அண்ட இயலை ஒத்திருக்கிறது என்று வாதிட்டார். மேலும் கணிதபதம், காலக்ரியபதம், கோலபதம் போன்ற தத்துவக் கோட்பாடுகளையெல்லாம் விளக்கி உலகப் புகழ்பெற்றவர்.
அப்படிபட்ட ஒருவர்தான் இந்த எமபுரிப்பட்டணம் பிரஜாக்டை எடுத்துச் செல்லமுடியும் என்பதை அறிந்த நாரதர் தத்தாம்ஸானந்தாவை நேரில் சந்தித்து அவருடைய உதவி மிகவும் தேவை என்றும், இதை வெற்றிகரமாக முடித்தால், தேவ உலகமே அவருக்குக் கடமைப்பட்டிருக்கும் என்றும் விளக்கினார்.
சுவாமி தத்தாம்ஸானந்தா ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. பகவான் தனக்குத் தந்த ஆணையாக ஏற்றுக்கொண்டார். நாரதர் கூறியபடி ஆரக்கிளில் சேர்ந்தார்.
தான் வணங்கும் தெய்வங்கள் அனைவரையும் சந்திக்க இது மாபெரும் வாய்ப்பாக அவருக்குத் தோன்றியது. ஆனால் அவர்கள் முன்னிலையில் எப்படிப் பேசுவது என்று முதலில் ஒரு கணம் தயங்கினார். அவரது இந்தத் தவிப்பைப் போக்கவேண்டியது முதல் கடமை என்று உணர்ந்த நாரதர் ஒரு மாய வலையை சுவாமி தத்தாம்ஸானந்தா மீது போர்த்தினார். `அது அவருக்குப் புதிய உணர்வைக் கொடுத்தது. அமர்ந்திருப்பவர்கள் தெய்வங்கள் என்ற எண்ணம் மாறி அவர்கள் கிளையண்ட் என்ற உணர்வைத் தோற்றுவித்தது.
அதன்பின் சுவாமி தத்தாம்ஸானந்தா பிராஜக்ட் டைரக்டராக மாறினார்.
ஆரக்கிள் டேட்டாபேசில் இருக்கும் பாதுகாப்பு வளையங்களைப்பற்றி அழகாக எடுத்துரைத்தார். தகவல்கள் எப்படி குறியீடாகப் பாதுகாக்கப்படும் என்றும், தேவையான அளவு தகவல், தேவையானவர்களுக்குப் பகுத்துத் தரப்படும் என்ற என்கிரிப்ஷன் , ரிடாக்சன் விவரங்களை அனைவரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தார்.
ஏற்கனவே என்கிரிப்ஷன்பற்றி அறிந்திருந்த எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் அவர் கூறிய கருத்துப் புரிந்தது மட்டுமன்றிப் பிடித்தும் இருந்தது.
எமபுரித் தகவல்கள் டேட்டாபேசில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை எமனுக்கும் வந்தது.
“யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் “என்று சுவாமி தத்தாம்ஸானந்தா கூறினார்.
பன்னிரண்டு கரங்கள் மேலே எழும்பின. முருகன் எழுந்து நின்றார். “ஆரக்கிள் என்றால் என்ன என்பதைப்பற்றி நீங்கள் கூறவேயில்லை. அது என்ன என்பதை இந்த சபையோர் தெரிந்துகொள்ளும்படி விளக்கலாமே?” என்று வினவினார்.
பிரவணத்துக்குப் பொருள்கேட்டுப் பதில் தெரியாத பிரும்மரையே சிறையில் அடைத்த முருகன் ஆயிற்றே! சுவாமி தத்தாம்ஸானந்தா தயங்கினார்.
“ஆரக்கிள் என்பது ஒரு நிறுவனம். அதுதான் இந்த டேட்டாபேஸை எல்லாம் …..”
” நான் அதைக்கேட்கவில்லை. ஆரக்கிள் என்ற சொல் எதைக் குறிக்கிறது?” முருகன் ஆணித்தரமாகக் கேட்டார்.
ஆரக்கிள் என்பது கிரேக்க பெண் பூசாரிகளைக் குறிக்கும் சொல். அந்தப் பூசாரிணிகள் தங்களை வேண்டி வழிபடும் மக்களுக்கு பின்னால் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைச் சொல்லும் திறமை படைத்தவர்கள். அதைப்பற்றிய ஒரு சுவையான கதை உண்டு.
சுவையான தொடர்கள்! வாழ்த்துக்கள்!
LikeLike