இதன் முன்பகுதியைப் படிக்க விரும்புவர்கள் இந்த லின்ங்கைக் க்ளிக் செய்யவும்
போர் மேகங்கள் சூழ்ந்த அந்த காலகட்டத்தில் குர்ட்ஜிப்பின் பயணங்கள் எதுவும் எளிதாக இருக்கவில்லை. பெரும்பாலும் நடைப்பயணம். கிடைத்தால் குதிரைப்பயணம். சில நேரங்களில் கப்பல் பயணம். . இப்படிப் பயணித்துக்கொண்டேஇருக்கிறான். உள் சுதந்திரந்திற்கான சூட்சுமத்தைத் தேடி குர்ட்ஜிப் மேற்கொண்ட பயணத்தில் கிருத்துவ குருமார்கள், இஸ்லாமிய சூபிகள்,புத்த துறவிகள்,பாரத தேசத்து ஞானிகள் என்று பலரையும் சந்திக்கிறான். ஒவ்வொரு சந்திப்பும் குர்ட்ஜிப் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
” Time buries the wisdom under the sand ” .” ஞான ரகசியம் மணலுக்கு அடியில் எங்கோ புதைக்கப்பட்டிருக்கிறது ” என்பது குர்ட்ஜிப்பின் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே குர்ட்ஜிப் எகிப்தை நோக்கிப் பயணிக்கிறார் – மணலுக்கு முந்தைய எகிப்து என்ற ரகசியத்தை கண்டறிவதற்காக……….
மணலுக்கு முந்தைய எகிப்தின் தோல் வரைபடம் ஒன்று ஒரு பாதிரியிடம் இருப்பதைப்பார்த்து மிகுந்த உணர்ச்சி வசப்படுகிறார் குர்ட்ஜிப். பாதிரி அறியாமல் அவர் வீட்டிற்குள் நுழைந்து மிகவும் சாமர்த்தியமாக அந்த தோல் வரைபடத்தின் பிரதி ஒன்று எடுத்துக்கொண்டு வருகிறார் குர்ட்ஜிப். வரைபடத்தில் உள்ள மணலுக்கு முந்தைய எகிப்தைக் கண்டறிவதற்காக ஒரு நண்பரின் துணையோடு எகிப்து செல்கிறார். எகிப்தில் பிரமிடுகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார். குர்ட்ஜிப் எதையும் மேம்போக்காகப் பார்க்கிற மனிதர் இல்லை. இசை,நடனம், சிற்பம் எதுவாக இருந்தாலும் அதை ஊடுருவி அதன் உள்ளே மறைந்திருக்கக்கூடிய அதிநுட்பமான உண்மையைக்கண்டறியக்கூடிய அபூர்வமான ஆற்றலைப்பெற்றிருந்தார் குர்ட்ஜிப். பிரமிடுகளைச்சுற்றிலும் (Sphinx) ஸ்பிங்ஸ் எனப்படும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட பிரம்மாண்டமான சிலைகள் காணப்படும். அந்த ஸ்பிங்ஸ் சிலைகளைப்பற்றிய குர்ட்ஜிப்பின் கருத்துக்களைப் படிக்கும்போது அவரது நுட்பமான அறிவு நம்மை வியக்க வைக்கிறது. ” ஸ்பிங்ஸ் என்பது ஒரு அபூர்வமான கலைப்படைப்பு. இயல்பான மனித மனத்திலிருந்து உருவாகிய சிலை அல்ல அது. மாறாக மிகுந்த கணிதத்தன்மையோடும், திட்டமிடலோடும், எண்ணங்களை, செய்திகளை, தகவல்களை, பாரம்பரிய ரகசியங்களை, பயத்தை, எச்சரிக்கையை, பாதுகாப்பு உணர்வை, கருணையை, தைரியத்தை, எதிர்ப்புணர்வை, இன்ன பிற உணர்வுகளை திட வயமாக்கி வடிக்கப்பட்ட மஹா சூட்சுமம் அது. வெளியிலிருந்து அதை கவனிக்கும் மனித மனத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அது தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அச்சிலையை அன்றாடம் கடந்து செல்லும் உள்ளூர்வாசிகளுக்கு ஒருவித சமாதானத்தையும், பாதுகாப்பு உணர்வையும் தரும் அச்சிலை வெளியிலிருந்து படை எடுத்து வருபவனுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் அதிர்வு கொண்டது.”
எகிப்தில் குர்ட்ஜிப்பின் தேடல் முடிவுக்கு வர காரணமாக இருந்தது ஒரு ஞானியின் சந்திப்பு. “இதுவரை தெரியாத ஒன்றைப்பற்றித் தெளிவாக முடிவு கட்டியிருக்கும் உங்களின் மனதால் அதை ஒருக்காலும் புரிந்து கொள்ள முடியாது – ஒருவேளை மணலுக்கு முந்தைய எகிப்து என்ற விஷயத்தை நீங்கள் கண்டு பிடித்து விட்டாலும் கூட.” ” முடிவான உண்மையைக்குறித்த குறியீடுகளை காலம் காலமாக நம் முன்னோர்கள் விட்டுச்செல்கிறார்கள் என்பது உண்மையில்லையா?” “உண்மைதான். ஆனால் அந்த குறியீடுகளைப் புரிந்து கொள்ள உன் முந்தைய முடிவுகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். மேலும் எல்லா குறியீடுகளும் உமக்கானதல்ல. உமக்கல்லாதவற்றை விட்டு கடந்து போகும் முதிர்ச்சியை நீர் பெற்றுக்கொள்ள எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்”. இந்த சந்திப்பினால் எகிப்திய தேடல் முடிவு பெறுகிறது. குர்ட்ஜிப்பின் பயணங்களில் மிகவும் முக்கியமானது ‘சர்மௌங் ரகசிய ஞான மடாலய’ பயணம்
சர்மெளங் மடாலயம்’ என்பது சூபி ஞானமரபுகள் ஒன்றின் ரகசியப்பயிலகம்(Esoteric School). ஏராளமான சூபி ஞானிகளை உருவாக்கிய ஞானப்பொக்கிஷம் ‘சர்மெளங்’. முடிவான உண்மையின் ரகசிய சாவியைக்கொண்டது அந்த மடாலயம். பொதுவாக இவர்கள் பயிற்சிகளையும், சாதனைகளையும், வெளிப்படையாகச்செய்வதில்லை. அவை மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அதுவுமல்லாமல் ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த மடாலயம் இடம் மாற்றம் செய்யப்படுகின்றன. அந்த மடாலயம் இராக்கில் ஒரு ரகசியப் பள்ளத்தாக்கில் இருப்பதைக் கேள்விப்படும் குர்ட்ஜிப் தன் நண்பர் ஒருவரின் துணையோடு மிகவும் சிரமப்பட்டு அந்த இடத்தைக் கண்டடைகிறார். மிகுந்த முயற்சி செய்து சூபிகுருமார்களின் நம்பிக்கையைப்பெற்று மடாலயத்தின் உள்ளே நுழைந்து விடுகிறார். சர்மெளங் ரகசிய பயிற்சிகளையும் கற்றுக்கொள்கிறார். சர்மெளங்கின் பரீட்சார்ந்தங்களில் குறிப்பிட்ட உடலசைவுகள் மற்றும் சில அசையா அபிநயங்களின் மூலம் சில சக்தி நிலைகள் தட்டி எழுப்பப்படுகின்றன. காலம் காலமாக ஒரேபோன்ற(monotonous) சில வார்ப்பசைவுகளைக்கொண்ட மனித உடலை சில முத்திரைகள், இசை, மற்றும் உடலசைவுகளைக்கொண்டு அதனுடைய பழக்க வரிசை உடைப்பதன் மூலம் எண்ண ஓட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் ஏற்படும். அதனால் மனம் ஒடுங்குகிறது. இந்த உடற்சக்தியின் உருப்படிவுகளை(pattern) மாற்றியமைக்க சர்மௌங்கிகள் சில நடன சூத்திரங்களை,முத்திரைகளை,அபிநயங்களை நீண்ட காலம் ஆய்ந்து வடித்திருக்கின்றனர். இந்த இயங்கு தியானப்பயிற்சிகளை மிகுந்த தீவிரத்தோடு மேற்கொள்கிறார் குர்ட்ஜிப். உடலாற்றலை சமன்படுத்தி, எண்ணங்களை,உணர்வுகளை சாந்தப்படுத்தும் அந்தப் பயிற்சிகளால் குர்ட்ஜிப்பின் உடல் லேசாகியது. எண்ணங்கள், குறிப்பாக, பெண்களைக் குறித்த சிந்தனைகள் அறவே அற்றுப்போனது. இதுவே தான் தேடிவந்த முடிவான உண்மை என்று, பயிற்சியில் தன்னை தீவிரப்படுத்திக்கொண்டார் குர்ட்ஜிப். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவங்கள் தோன்றி மறைந்தன. உடலும், மனமும் லயமானது. கண்ணுக்குத் தெரியாத முடிச்சுகள் அனைத்தும் மெல்ல மெல்ல விடுபடுவதுபோல் இருந்தது. தன் இருப்பைக் குடைந்து துளைத்துக்கொண்டிருந்த கேள்விகள், உள்ளத்தை உரசி ஒலி எழுப்பிக்கொண்டிருந்த ஐயங்கள் எல்லாம் மறைந்து போயின. இந்த அனுபவங்கள் எல்லாம் கொஞ்ச காலமே நீடித்தது. ஷேக் என்ற ஞானியின் சந்திப்பு குர்ட்ஜிப்பை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது…..
தனக்கு ஏற்பட்ட அபூர்வமான அனுபவங்கள் அனைத்தும் மறைந்து போனது குறித்து ஷேக் என்ற ஞானியிடம் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார் குர்ட்ஜிப். அதற்கு அந்த ஞானி கூறியது: “ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை எதிர் நோக்குவது என்பது மின்னல் ஒருமுறை வெட்டிச்சென்ற அதே இடத்தில் மறுநாளும்,அடுத்த நாளும்,ஒவ்வொரு நாளும் சென்று மின்னல் வீச்சுக்காக காத்துக்கிடப்பதைப்போன்றதே.” மிகுந்த விரக்தியோடு குர்ட்ஜிப்பின் கேள்வி வருகிறது .” முடிவான ஞானத்தைப்பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”. ஞானி கூறுகிறார்: “இது நீ வாழ்ந்து வந்த வாழ்க்கையை நீ முழுப்பிரக்ஞையோடு இழக்கத் தயாராக இருக்கவேண்டும். நேரடியாகச்சொல்லப்போனால் நீ சாகத் தயாராக இருக்கவேண்டும்.உன் வாழ்க்கை என்று நான் குறிப்பிடுவது வெறும் பொருள் சார்ந்ததை மட்டும் அல்ல. இது வரை நீ கற்றறிந்த ஆன்மிகப்பாடங்கள்,பயிற்சிகள், பயணங்கள், சூத்திரங்கள்,தத்துவங்கள் எல்லாவற்றையும்தான்.”
ஞானியின் பதிலால் குர்ட்ஜிப் ஏமாற்றமடைகிறார்.விரக்தியின் விளிம்பிற்குச்சென்று மீள்கிறார். மெல்ல மெல்ல அவர் தன் தேடலை முற்றிலும் கைவிடுகிறார். எப்போதென்றே சுட்டிக்காட்ட இயலாத நுணுக்கமான காலக்கசிவின் ஊடே அல்லது காலம் நசிப்படையும்போது குர்ட்ஜிப்பின் கேள்விகள் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடுகிறது.
கால ஓட்டத்தில் குர்ட்ஜிப் தனக்கென ஒரு ஆன்மிகப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் பயணிக்கிறார். இதுவரை இங்கே இருக்கும் ஒட்டு மொத்த ஞான மரபுகளை மூன்றாகப்பிரிக்கலாம். துறவியின் பாதை, பக்கீரின்பாதை, யோகியின் பாதை. இவை மூன்றையும் உள்ளடக்கியும்,தாண்டியும் ஒரு நான்காம் பாதையை பதித்தவர் ஞானி குர்ட்ஜிப். நடனத்தின் அசைவுகளின் மூலமே குர்ட்ஜிப் தனது நான்காம் தடத்தை வடித்தெடுத்திருக்கிறார். இந்திய யோக முறைகளும், பரதநடனமும் குர்ட்ஜிப்பின் நான்காம் தடத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றன.
முடிவுரை: இது நான்காம் தடம் புத்தக விமர்சனம் அல்ல. அந்த புத்தகத்தைப் படிக்கும்போது என் மனதைத் தொட்ட விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த தொகுப்பு பதிப்பிடவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. என் மனதிருப்திக்காக எழுதியது. எழுதுவது என்பது எனக்குக் கைவராத கலை.ஏதோ ஒரு வகையில் என்னை எழுதத் தூண்டிய என் இனிய நண்பர் சுந்தரராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. என் மனதை ரொம்பவும் தொட்ட பல விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையும் எழுதி வைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி.