மணிரத்தினத்தின் இருவர் படப் பாடல்
நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்.
மலர் போன்றவளே.. சற்று இங்கே நில்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
செங்கனி ஊறி மிகவும் இனிப்பாக இருக்கும் உன் இதழ்களைதிறந்து உன் மொழியால் என்னுடன் பேசு..
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
அதாவது அன்று ஒரு நாள் முழு நிலவின் போது அந்தபுரத்தில் உள்ள குளத்தில் நெற்றியில் முத்து போல நீர் உருண்டோட நீராடிய பெண்மணி நீயா??
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
திருமகன் என்றால் எல்லா நற்பண்புகளும் கொண்ட ஒருவன். திருமகனே என்னை சற்று பார்.
வெள்ளை குதிரையில் வந்தவனே.. வேல் போன்ற என் கண்கள் கூறும் வார்த்தைகளை கேள்..
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அன்று முழுநிலவில் நான் அந்தபுர குளத்தில் நீராடுகையில் என்னை பார்த்தவன் நீயா..
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன..
மான்களின் விழிகளை கொண்ட இந்த பெண்ணின் கண்களில் இருந்து வரும் பார்வை, அம்புகளை போல என் மனதை துளைக்கிறது..
பாண்டினாடனைக் கண்டு என்உடல் பசலை கொண்டதென்ன..
பாண்டி நாட்டு வீரனே.. உன்னை கண்டதும் என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது..
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
அன்று நான் முழு நிலவின் வெளிச்சத்தில் கண்ட அந்த காட்சி..
இன்றும் என் கனவில் தோன்றிக்கொண்டே இருக்கிறது..
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை..
இடையினில் மேகலை இருக்கவில்லை..
உன்னை காணாத துயரத்தில் துடித்து துடித்து இளைத்து போனேன்.
இளைத்த காரணத்தினால் என் இடுப்பினில் மேகலையும் நிற்கவில்லை..
யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன
என் தாயும் உன் தாயும் எந்த விதத்திலும் சம்மந்தபடாதவர்கள்..
ஆனாலும் நம் இருவரது இதயமும் ஒன்றாக கலந்தது எப்படி??
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன
நானும் நீயும் எந்த விதத்திலும் தெரிந்தவர்கள் இல்லை..
ஆனாலும் எப்படி நமக்குள் இந்த உறவு ஏற்பட்டது??
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.
ஒரே ஒரு முறை தான் என்னை நீ தொட்டாய்..
அதுவே என்னுள் ஒரு அரும்பு பூத்தது போல ஆகி விட்டதே..
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.
நீர் மண்ணோடு கலந்து பிரிக்க முடியாதது போல எப்படி ஆகின்றதோ அப்படி நம் நெஞ்சங்கள் சேர்ந்துவிட்டது எப்படி??