குவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்

Food History Jottings: Charles Carter's 1730 Prunella and Tamarind ...

நன்றி: அழியாச்சுடர்

அப்பா வெளியூருக்குப் போகையில் வண்டிக்குள் யார் பேச்சுக் கொடுத்தாலும், எவ்வளவு முக்கியமாக அது இருந்தாலும் தலையை வெளியே நீட்டி அந்தப் புளிய மரத்தை ஒரு தடவை பார்த்துக் கொள்வார். ஊர்க்கோடியில் குறவர் குடிசைகளுக்கு மத்தியில் பிரம்மாண்டமான மரம் அது. அடியில் பன்றி அடைந்து உரம் கொடுக்க ஊர் பூராவிலும் உள்ள மரங்களில் செழித்துக் கொழித்து நிற்கும் அது. அப்பாவுக்குச் சொந்தமான மரம்.

ஒரு செவ்வகவாக்கில் ஐந்து மைல் விஸ்தீரணத்தில் ஆறு சின்னக் கிராமங்களிலும் இந்தத்gandharvanதாய்க் கிராமத்திலும் அப்பாவுக்கு நிலங்களுண்டு. அத்தனை நஞ்சை புஞ்சை வீடு மரங்களிலும் அப்பாவுக்கு ரொம்பப் பிடித்தமானது இந்த புளியமரம்தான். வெகு தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு குன்று பச்சையாய் நிற்பது போலிருக்கும். அருகில் வந்து அண்ணாந்து பார்த்தால் ஆயிரங்கிளையோடு அடர்ந்து அந்த மரத்திற்குள் ஒரு தோப்பு அசைந்தாடுவது போலிருக்கும்.

எண்ணெய் பூசியதுபோல் வழுவழுவென்றிருக்கும். சிமிண்டுத் திண்ணையில் பகல் பூராவும் அப்பா உட்கார்ந்திருப்பார். நாலு பண்ணையாள்களுக்கும் அஞ்சு கிராமத்துக் குத்தகைக்காரர்களுக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்தே உத்தரவுகள் போகும். எப்போதாவது பர்மாக் குடையை விரித்து நடப்பார்.  ஒரு நாளைக்கு இத்தனை தடவை என்று எண்ணிவிடலாம் இறங்கி நடப்பதை.

அப்பா நடந்திருக்க வேண்டிய நடையெல்லாம் தாத்தா நடந்திருந்தார். சமஸ்தானத்தில் தாத்தா இந்தப் பிரதேசத்தின் பேஷ்கார்.

மஹாராஜா இந்தப் பக்கமாய் ஒரு முறை திக் விஜயம் செய்தபோது தாத்தா ஒவ்வொரு வேளை விருந்தையும் ஒரு உற்சவமாய் நடத்தியிருக்கிறார். மஹாராஜாவின் நாக்கு அது வரை அறிந்திராத ருசியும் பண்டமும் விருந்துகளில். பரிவாரங்கள் தங்கள் வயிறுகளைத் தாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டிய நிலை.

மரியாதை காட்டி வெகுவாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்த தாத்தாவை அழைத்து விரலை அவ்வப்போது நீட்டிக் கொண்டே வந்தார் மஹாராஜா. பின்னால் அந்த நிலங்களெல்லாம் தாத்தாவுக்குச் சமானமாய் வந்தன.

தாத்தா அரண்மனைக்குப் போய் சாசனங்களையும் பட்டயங்களையும் வாங்கி வந்த நாளிலிருந்து எட்டு நாட்களுக்குள் இருபத்தோரு கிராமங்களில் ஆட்களைத் திரட்டினார். தங்களுடையதென்று எண்ணி உழுது கொண்டிருந்த குடியானவர்களை நிலங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் மஹாராஜாவின் சாசனங்களைக் காட்டி விரட்டினார். அடிதடிகளும் நாலு கொலைகளும் நடந்ததாகப் பேச்சுண்டு.

தாத்தா வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டுப் போனார். எந்த ஊரில் யாரு வீட்டிலிருக்கிறார், ராத்திரி எத்தனை மணிக்கு வருவார் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. உள்ளூரில்தான் தங்கியிருக்கிறார் “ஒரு வீட்டில்” என்பது போல் நக்கலாக ஒருவர் சொல்ல “அதெல்லாமில்லை சிறைக்குளமோ பண்ணந்தையோ கீரந்தையோ எங்கேயிருக்காகனு யார் கண்டா” என்று அழுத்தமாய் அடுத்த ஆள் பேசிவிடும்.

சில சமயம் விடியற்காலைகளில் சிவந்த கண்களோடு வந்து சேர்வாராம். வந்ததும் பரபரவென்று வீட்டு ஆள்கள் ஒரு அண்டா நிறையத் தண்ணீரைக் கொண்டு வந்து வாசலில் வைப்பார்கள். குளிரக் குளிரக் குளித்து வேட்டி துண்டை நனைத்துப் போட்டு விட்டு வீட்டிற்குள் நுழைவாராம்.

தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு அப்பா நடக்கையிலே மஹாராஜா இந்தியப் பிரஜையாகிவிட்டார். சாசனங்களையும் பட்டயங்களையும் அப்பா கையில் ஒப்படைத்துவிட்டுத் தாத்தா கிழக்குக் காட்டில் எரிந்தபோது முதல் தேர்தல் முடிந்து ஓட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த நேரம்.

கிராமங்களில் நீண்டு கிடந்த புஞ்சைகளை அப்பா அந்தந்த கிராமத்துக்குப் பெருங்குடியானவர்களிடம் வாரத்துக்கு விட்டு விட்டார். செவற்காட்டுப்பனைகளைப் பாட்டத்துக்கு விட்டார். தை மாசியில் வீட்டு மச்சிலும் குளுமைகளிலும் பட்டாசாலையிலும் நெல்லும் கம்பும் வரகும் கேப்பையும் ஒரு புறமாகவும் மிளகாய்,போலிருக்கும். ஒவ்வொரு தடவையும் பெட்டியைத் திறந்து மூடிவிட்டுத் திண்ணையில் உட்கார்கையில் அப்பா முகத்தில் வேர்வையும் அதிருப்தியும் தெரியும்.

ஊர்க்கோடி புளியமரம் தளதளவென்று நிற்கிறது. அதிலிருந்துதான் வருசத்திற்குண்டான புளி வருகிறது. ஆனால் ஒப்படைத்து விட்டுப் போன சாசனங்கள் பத்திரங்கள் எதிலும் ஏன் ஒரு சின்னத் துண்டு காகிதத்தில் கூட இந்த மரத்தைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை.

ஒரு நாள் சுப்பையா மாமா அப்பா பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேச்சுவாக்கில் “மண்டபத்து மல்லி, மண்டபத்துப் புளி ரெண்டுக்கும் சமமா ஒலகத்திலெ எங்கேயும் கிடையாது” என்று சொல்லிவிட்டார். அப்பா இதைக் கேட்டதும் அம்மாவைக் கூப்பிட்டார். “அந்தக் கொறட்டுப் புளியிலே கொஞ்சங் கொண்டாந்து மாப்பிள்ளட்ட குடு” என்று சொல்லிவிட்டு, “இன்னைக்குக் குழம்பு ஒங்க வீட்டிலெ இந்தப் புளியிலெ. விடிய வந்து சொல்லுங்க மாப்பிள்ளை, மண்டபத்துப் புளி ஒசத்தியா; கொறட்டுப் புளி ஒசத்தியானு”

மறுநாள் சுப்பையா மாமா திண்ணையில் வந்து உட்கார்ந்ததும் சொன்னார். “இந்தக் கொறட்டுப் புளிக்குச் சரியா  மண்டபத்துப் புளியும் நிக்காது; மதுரைப் புளியும் நிக்காது!”

‘கொறட்டுப் புளி’ என்று அப்பா சொல்வது ‘குறவீட்டுப்புளி’ என்பதன் சுருக்கம். ‘குறவீடு’ என்று வருகிற எதையும் வேறு மாதிரித்தான் சொல்வார். அப்படிப் பேசி முடித்ததும் எதையோ மறைத்துத் தப்பித்து விட்ட திருப்தியில் பலர் முன்னிலையில் தன்னை மறந்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்.

ஆள்பத்தி அறையின் இரும்புப் பெட்டியைத் திறந்து சாசனங்களையும் பத்திரங்களையும் பார்த்து முடித்த சில சமயங்களில் அப்பா திண்ணையிலிருந்து இறங்கிக் குடையை விரித்தும் விரிக்காமலுமாய் ஓடப் போகிற மரத்தைக் கயிறு போட்டு வைக்கப் போவது போல் ஓடுவார். கொழுந்து விடும் நேரம், பூப் பூக்கும் நேரம், பிறை பிறையாய்ப் பிஞ்சு விடும் நேரங்களில் இப்படிப் போய் மரத்தடியில் நிற்பார்.

“அய்யா மகன் வந்திருக்கார் விலகுலெ” என்று சத்தம் போட்டு, வேடிக்கை பார்க்க வரும் குறவீட்டுப் பிள்ளைகளைச் சேரிக் கிழவர்கள் விரட்டுவார்கள். மரத்தடியில் அடைந்து கிடக்கும் பன்றிகளை விரட்டி மேட்டுப்பக்கம் கொண்டு போவார்கள். பன்றிக் கழிவுகளைத் தள்ளி ஒரு புறமாய் ஒதுக்குவார்கள்.

மற்றக் குடிசைகளிலிருந்து விலகி ஒரு குடிசை மரத்திற்கு வடக்கில் தனியாய் உண்டு. வெளியில் உண்டாகும் சேரி அசுத்தங்கள் அந்தக் குடிசையருகே வந்துவிடாதவாறு சுற்றி ஒரு தீ வட்டம் நின்று காப்பதுபோல் பளிச்சென்றிருக்கும்.

அப்பாவின் குரலைக் கேட்டதும் குடிசைக்குள்ளிருந்து ஒரு கிழவி கண்ணில் பூ விழுந்து பார்வை தெரியாமல் கம்பூன்றி வெளியில் வருவாள். குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் ஆகாயத்திலிருந்து வந்து பிறந்ததுபோல் கிழவியின் மகள் தாத்தா ஜாடையில் தாத்தா நிறத்தில் வந்து நிற்பாள். அப்பாவுக்கும் அந்தப் பொம்பிளைக்கும் பதினைஞ்சு வயசு வித்தியாசமிருக்கும்; சின்னவள்.

அந்தப் பொம்பிளையும் அவள் புருஷனும் பிள்ளைகளும் குறவர் கூட்டத்திலிருந்து விலகித் தனியாய் நிற்பார்கள். கிழவியும் மகளும் அப்பா பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் வாஞ்சையோடு கேட்பார்கள். அப்பா புறப்பட்டுப் போகும் போது அந்தப் பொம்பிளை அவர் பார்க்கும்படி முன்னே வந்து குப்பைக்கூளங்களைக் காலால் தள்ளி வழி செய்வாள். இவர்களின் இந்தச் செய்கைகளால் அப்பா தடுமாறி நடப்பார். வீடு வரும்போது மறுபடி முகம் மாறி வந்து சேர்வார்.

வெகுநேரம் யோசனையில் கிடப்பார். கணக்குப் பிள்ளையைக் கேட்டு விடலாமென்று அப்பாவுக்குப் பலமுறை தோன்றியதுண்டு. இந்த மரம் நிற்கும் நிலம் யாருக்குச் சொந்தம் என்று அவரிடம் கேட்கலாம். தன் பெயருக்கே ரசீது போடச்  சொல்லலாம் வரி கட்டியதாக. ஆனால் மரம் இருக்கும் இடம் நம் பெயரிலில்லை என்று கணக்குப்பிள்ளைக்கு நாமே சொல்லிக் கொடுத்தது போலாகிவிடும். சொத்து விஷயத்தில் அவசரப்படக்கூடாது. போகிற வரை போக வேண்டும். அப்பா, கணக்குப் பிள்ளைக்குச் சொல்லி விடும் ஞாபகம் வந்து ஒவ்வொரு முறையும் நிறுத்தி வைத்தது போக அந்த எண்ணத்தையே சில நாளில் மறந்து விட்டார்.

வருசா வருசம் புளியம்பழ உலுக்கல் அப்பா முன்னால் விமரிசையாய் நடக்கிறது. மூடை மூடையாய்ப் புளி வீட்டுப் பட்டாளத்துக்கு வருசத்து. புளியம்பழ உலுக்கலுக்கு முதல் நாளே அப்பா ஆள் சொல்லி விடுவார். மறுநாள் காலை அப்பா போகுமுன்னால் பன்றிக் கழிவுகளைக் கூட்டிப் பொட்டலாக்கி வைத்திருப்பார்கள்.

அப்பா பத்து ஆள்களோடும் ஒரு கட்டுச் சாக்குகளோடும் வெயில் வந்ததும் வருவார். வருசா வருசம் இது ஒரு சடங்கு போல் நடக்கும். உலுக்கலுக்கு முன் கிழவியின் மகள் கிழவியின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து மரத்தருகில் நிறுத்துவாள். கிழவி மரத்தைத் தொடுவாள்; தடவுவாள்; கும்பிடுவாள். குருட்டுக் கண்ணிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வடியும். மகள் மெல்லக் கிழவியை அகற்றி அழைத்துக் கொண்டு குடிசைப் பக்கம் போவாள்.

அப்பா இவைகளையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் நிற்பார். சீக்கிரமாய் இந்தச் சடங்கு நடந்து முடியவேண்டுமென்பது போல் பொறுமை இழப்பார். இது முடிந்ததும் பலசாலிகளாயுள்ள எட்டு பேர் திசைக்கு ஒருவராய் ஒரே நேரத்தில் கிளைகளில் ஏறி மேற்கொப்பைப் பிடித்துக் கொண்டு கூத்தாடுவார்கள்.

பழங்கள் உதிர்ந்து சடசடவென்று சத்தங்கிளப்பும். குற வீடுகளின் சின்னப்பிள்ளை எதுவும் பழம் பொறுக்க நடுவில் நுழைந்தால் மண்டையிலடிக்கும். ஒரு பழமே ரத்தம் கசிய வைத்துவிடும்.

மொத்தக் கிளைகளையும் உலுக்கியபின் அப்பா மரத்தைச் சுற்றி வந்து மேல் நோக்கிப் பார்வையிடுவார். ஒரு கிளை விட்டுப் போயிருந்தாலும் அவர் பார்வைக்குப் பட்டுவிடும். எல்லாமும் உலுப்பி முடிந்தவுடன் பத்துப் பேரும் பழங்களை வாரிக் கட்டுவார்கள்.

ஒரு சின்னக் குவியலை அப்பா காலாலேயே குவித்து ஒதுக்குவார். அந்தப் பொம்பிளை வந்து அள்ளிக் கொள்ளும். அள்ளும்போது அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வடியும். மூடைகளை வண்டியிலேற்றி வீட்டில் கொண்டு வந்து இறக்குவார்கள். ஒரு வாரம் முற்றத்தில் காயும். அப்புறம் பதினைந்து பேர்கள் பட்டாசாலையில் உட்கார்ந்து உடைப்பார்கள். மறுபடியும் முற்றத்துக்குப் போகும். அப்புறம் சால்களில் அடையும்.

ஒரு வருசம் உலுக்கலில் போது கிழவி மரத்தைத் தொட்டு அழுது கொண்டிருந்தபோது மகள் புருசன், “ஒங்க ஆத்தாளை இங்கிட்டுக் கூப்பிடு. அசிங்கமாயிருக்கு; சனம் பூராவும் வேடிக்கை பார்க்குது” என்று கோபமாய்ச் சொன்னான். அந்த பொம்பிளை தயங்கியது. “கூட்டிட்டு வரப்போறியா இல்லையாடி” என்று எல்லோருமிருக்கக் காலால் ஒரு உதை விட்டான். ஓடிப்போய்க் கிழவியை இழுத்துக் கொண்டு வந்தாள். அன்று அப்பா காலால் தள்ளிக் குவித்திருந்த புளிக்கு முன்னால் வந்து அவன் “இதையும் அள்ளிக்கிட்டுப் போயிருங்க” என்றான்.

அவன் கை காலெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. அப்பா சற்றுக் கலங்கிப் போனார். விட்டுக் கொடுக்காமல் “இதையும் அள்ளிக் கட்டுங்கடா” என்று சொல்லிவிட்டு நடந்தார். அன்று ஒரு பழம் விடாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தன. அடுத்த வருசம் வழக்கம் போல் மறுநாள் புளியம்பழம் உலுக்க வரப் போவதாகச் சொல்லியனுப்பியிருந்தார் அப்பா. மறுநாள் பத்துப் பேரோடு மரத்தடிக்குப் போகையில் தரையெங்கும் பன்றிக் கழிவுகள் எங்கும் அசிங்கமும் நாற்றமும்.

கயிற்றுக் கட்டிலில் கிழவி உட்கார்ந்திருந்தாள். யாரோ வம்பாய் உட்கார்த்தி வைத்திருப்பது போலிருந்தது. அந்தப் பொம்பிளை புருஷனோடும் பிள்ளைகளோடும் நின்றாள். அப்பா அந்தப் பெண்ணைக் கடுமையாகப் பார்த்தார். “என்ன இதெல்லாம்?” என்று அதட்டினார். சொல்லி வைத்ததுபோல் யாரும் வேலை வெட்டிக்குப் போகாமல் குறவீட்டு ஆள்கள் மொத்தமும் கூடியிருந்தது.

அந்த பொம்பிளை “இனிமேற்பட்டு இந்த மரத்தை நாந்தான் உலுக்குவேன்.” “இதிலே எனக்குப் பாத்தியதை உண்டு…” என்று பேசத் துவங்கியது. அப்பாவுக்குக் கால் நடுங்கியது; உதடு கோணியது. “போதும் போதும் பேச்சை நிறுத்து” என்று அதற்கும் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப்போவதைப் பதறிப்போய் நிறுத்தினார். கயிற்றுக் கட்டிலின் மேல் அந்தக் கிழவி நிச்சலனமாய் உட்கார்ந்து இருந்தாள்.

கூட்டி வந்த ஆள்களைத் திருப்பியழைத்துக் கொண்டு தலையைச் சாய்த்துக் குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார். அதற்கப்புறம் அப்பா ஆள்பத்தி அறைக்குள் நுழைந்து பெட்டியைத் திறந்து சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவே இல்லை

2 responses to “குவிகம் பொக்கிஷம் – சாசனம் – கந்தர்வன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.