ஆறாம் சர்க்கம்
தந்தையிடம் விவாகம் பற்றி பேசுவதே உசிதமென தோழி மூலம் கூறினள்
சிவபெருமான் பதிலை நாடி வெட்கத்தில் நாணி பேசாமல் நின்றாள்
பிரானும் அப்படியே செய்வதாய்க் கூறி சப்தரிஷிக்களை எண்ணினார்
நினைத்த மாத்திரத்திலேயே சப்தரிஷிக்களும் அருந்ததியும் அங்குவந்தனர்
சிவனைக் காணவருவதால் ஆகாயகங்கையில் நீராடிவிட்டு வந்தனர்
கானகக் கற்பகமரம் போல் அணிகலன் இருந்தும் பற்றின்றி இருந்தனர்
சப்தரிஷிக்கள் வருவது கண்டு சூரியதேவனும் வணங்கி வழிவிட்டான்
பிரளய காலத்தில் விஷ்ணு காத்த பூமிபோல அழிவின்றி இருந்தவர்கள்
பிரும்மருக்கு உலகைப்படைப்பதில் உதவிய ஆதி பிரும்மரும் இவர்களே
தவத்தினால் தூய்மைபெற்ற இவர்கள் தொடர்ந்து தவத்தைத் செய்தனர்
சப்த்ரிஷிகளுக்குள் முதலாமவர் வசிஷ்டர் அவர் பாதம் பணிபவள் அருந்ததி
அருந்ததியுடன் வந்த சப்தரிஷிகளை சிவனும் மகிழ்வுடன் வரவேற்றார்
வசிஷ்டர் அருந்ததி இல்லறம் கண்ட பிரான் அந்த அறத்தையே விரும்பினார்
மன்மதன் தூண்டியபோது சினந்தவர் தர்மம் தூண்டியபோது மகிழ்ந்தார்
சிவனைக் காணும் பேறுபெற்ற முனிவர் பிரானைப் பூஜித்து பேசலுற்றார்
“தர்மம் காத்து வேதம் போற்றியதன் பலனை இன்று யாம் பெற்றோம்
உலகையே காக்கும் பிரான் எங்களை நினைத்தது பாக்கியத்தின் பாக்கியம்
சிவனை நினைத்தாலே முக்தி சிவனே நினைக்க பெற்ற பேறுதான் என்னே
சிகரத்தில் இருக்கும் நாங்கள் இன்று மகோன்னதபதவி அடைந்தோம்
திருஷ்டி பெற்ற நாங்கள் எண்ணத்தில் செயலில் மேலும் உயர்ந்தோம்
எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்பதும் தாங்கள் அறியாததல்ல
கண்ணால் கண்டாலும் தங்கள் ஆற்றல் அறியும் ஆற்றல் எங்களுக்கில்லை
முத்தொழிலையும் புரிந்து வரும் தங்களின் தற்போதைய கோலமென்ன?
எது எவ்வாறாயினும் எங்களுக்கு இட்ட கட்டளைஎன்னவென்று இயம்புங்கள்
முனிவர் உரைகேட்ட நம்பிரான் புன்னகையில் பிறை மின்ன பதில்அளித்தார்
“முனிவீர்காள்! சுயநலமின்றி உதவுதல் என்செயலென நீவிர் அறிவீர்!
தாரகாசுரனை அழிக்க என்மகன் வரவேண்டும் என்பது தேவர்களின் அவா
அக்னிபோன்ற மகனைத் தரவேண்டி பார்வதியை மணக்க விழைகின்றேன்
இமவான் இல்லம்சென்று பார்வதியைப் பெண்கேட்டு நீவிர் வரவேண்டும்
யாகத்தில் பாகம் பெரும் இமவானின் சம்மந்தம் எனக்கும் பெருமை தரும்
பெருமைமிக்க தங்களுக்கு மணம் பேசி முடித்தல் இயலாத செயலன்று
அருந்ததிதேவி உடன்வந்தது அனுகூலமாய் உறுதுணையாய் இருக்கும்
இமவான் நகர் சென்று மணம் பேசி முடித்து எமைக்காண வந்திடுவீர்”
சிவனும் மணவாழ்வை விரும்புகிறார் எனஅறிந்த முனிவர் மனமகிழ்ந்தனர்
சிவன் ஆணையை சிரமேற்கொண்டு முனிவர் அனைவரும் புறப்பட்டனர்
மனோவேகம் கொண்ட அவர்கள் விண்வழியே ஔஷதிப்ரஸ்தம் சென்றனர்
முனிவர் அடைந்த ஔஷதிப்ரஸ்தம் சொர்க்கத்தை விஞ்சிய எழில்நகரம்
கங்கை அணியாக ஒளிச் செடிகள் மின்ன ரத்தினங்கள் மதிலான நகரம்
மனிதரும் விலங்கும் பறவையும் கொஞ்சிக் குலாவிடும் எழில் நகரம்
மேக ஒலியுடன் மிருதங்கமும் போட்டியிடும் உயர் மாளிகை நிறை நகரம்
கல்பக மரஉச்சியில் பட்டுத்துணி பறக்க இயற்கைப் பதாகையுடை நகரம்
மாடத்தில் மின்னும் நட்சத்திரங்கள் விரித்த மலரென அழகூட்டும் நகரம்
இரவில் செல்லும் காதல் பெண்களுக்கு செடிகளே ஒளிகாட்டும் நகரம்
காதல் நோய் தவிர்த்து மற்ற நோய்நொடி அறியா மாந்தர்வாழ் நகரம்
ஊடல் புரியும் காதல் பெண்ணின் கோபத்தை காதலர் ரசிக்கும் நகரம்
நகரைச் சுற்றி எழில்மலைகள் உத்யான வனமாகக் கொஞ்சும் நகரம்
சொர்க்கத்தை விஞ்சும் ஔஷதிப்ரஸ்தம் சப்தரிஷிக்களை மயக்கியது
வான்வழி வந்த சப்த முனிவர் சடாமுடி பறக்க இமவான் இல்லம் சென்றனர்
நீரின் அலையில் தெரியும் சூரியபிம்பமென முனிவர் ஒளிவீசி நடந்தனர்
முனிவர் வருகை கண்டு இமவான் வணக்கத்துடன் எதிர்கொண்டு சென்றான்
மலையென வருபவன் இமவானே என மனதால் கண்டு தெளிந்தனர் முனிவர்
வணங்கி வரவேற்ற இமவான் தானே வழிகாட்டி அழைத்துச் சென்றான்
அந்தப்புரம் வந்த முனிவர்களை ஆசனத்தில் அமர்த்தி கைகூப்பி பேசினான்
“ முனிவரீர் மேகமின்றி வந்த திடீர் மழைபோல் தங்கள் வருகை இனியதே
பெருமக்கள் வரவு எனக்குப் பெருமையையும் உயர்வையும் தருகின்றன
பெருந்தகையர் பாதம் பட்டதும் என் மலைவடிவு புண்ணியத் தலமாயிற்று
கங்கையும் முனிவர்தம் பாதத்துளிகளும் எம்மைப் புனிதமாக்குகின்றன
பாதம்பட்டதால் மலைவடிவும் சேவை ஏற்றதால் மனிதவடிவும் பேறு பெற்றன
முனிவரீர் வருகை தந்த மகிழ்ச்சி என் உடலெங்கும் கொப்பளிக்கிறது
முனிவரீர்தம் ஒளிவெள்ளம் என்மன இருளை அறவே அகற்றிவிட்டது
எதையும் சாதிக்கவல்ல பெருமக்களுக்கு அடியேன் என்ன செய்ய இயலும் ?
தங்களுக்குப் பணி புரியும் வாய்ப்பினைத் தவறாமல் தந்தருளுங்கள்
நான் என் மனைவி மகள் அனைவரும் தங்கள் அடிமை ஆணையிடுங்கள்”
இமவான் கூற்று பலமுறை சொல்வது போல் மலைகளில் எதிரொலித்தது