முன்கதைச் சுருக்கம்
பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.
ஒருநாள் ஊடலின் போது. அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.
அங்கொரு மலை உச்சியில் குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……
இருவரும் மலையேறுதல்
புலியைத் தொடரும் மானாக, — தூண்டில்
பொன்னை விழுங்கும் மீனாக,
வலையை விரிக்க வருவேடன் — இரையில்
மயங்கிச் சிக்கும் புறவாக,
கொலையில் கொடிய வெறியான்பின்– தாவிக்
குதிக்கும் ஆட்டு மறியாக,
மலையில் ஏறும் காளன்பின், — அந்தோ
மங்கை சென்றாள் பேதைமையால்!
தன் உள்ளக் கருத்துத் தோன்றுமாறு காளன் பாடுதல்
அலையலையென விளைபிறவிகள் அவைதுயர்கொடு வரவும்
வலைபுகுந்திடும் கயல்நிரையென மடிந்திறுதியைத் தரவும்
நிலையிழந்திடும் வகைகலந்திடும் நினைவழிந்திடும் உலகில்
கலையுணர்ந்தவர் சுகம்பெறுவதில் கழியுவகையை விழைவர்
அறமெனவொரு வழிநெறியினை அறிவுரையென அளிப்பர்
சிறுமயலெனச் சுகக்கடலதைச் சிடுசிடுமுகம் சுளிப்பர்
திறமறிந்தவர் உளம்மகிழ்ந்திடத் திளைத்திடுவரச் சுகத்தில்
மறமிகுந்தவர் மதுமையல்களில் மனங்களித்திட நினைப்பர்
இதுநாள்வரை முறையேயென எமையேய்த்திடச் சிலபேர்
இதுதீதென, அதுதீதென இழிவாய்மொழி புகன்றார்
விதிதானொரு கொடுவாளென வெறும்வாதமும் புரிந்தார்
மதுவூறிடும் சுகம்தேடிடும் வழிபோவதெம் தொழிலே
நரைகூடிடும் திரைமூடிடும் நமன்கூவிடும் புவிமேல்
உரைநீதிகள் உதவாதவை ஒருபோதிலும் மதியேன்
விரைவாயினிச் சுகம்மேவிட விளையாடுதல் முனைவேன்
தரைவாழ்வினில் மகிழ்வேனெனைத் தடுப்போரிவண் உளரோ?
பத்திரையின் வேண்டுகோள்
கருத்தில் ஊறிக் கலந்திருந்த — பழைய
கள்ள நச்சுக் கொள்கைகளை
வருத்தம் சிறிதும் இல்லாமல் — இசையில்
வடித்தான் காளன். பத்திரையாள்,
பெருத்த வணிகக் குலப்பெண்ணை — மணந்து
பெருமை பெற்ற தகவுடையாய்!
பொருத்தம் இல்லாப் புன்மொழிகள் — விடுத்துப்
புகழ்வாய் இறையின் பெயரென்றாள்.
. காளன் மறுமொழி
சரியென் கண்ணே விளையாட்டைத்
தவறாய் எண்ணிக் கலங்காதே
விரிவெண் முகிலின் விண்ணுலக
மேன்மை முத்தி நிலையளிக்கும்
அரிய அருள்செய் குலதெய்வம்
ஆங்குக் கொண்ட கோயில்காண்!
விரைவில் சென்று படையலிட்டு
வேண்டும் வரத்தைப் பெறுவோம்வா!
குலதெய்வம் காண அழைத்தல்
கொடுக்கின்ற கையினையும் கொடுக்கால் கொட்டும்
கொடுந்தேளின் மிகக்கொடியோன் கூறும் யாவும்
விடுக்கின்ற வெங்கணைகள் ஆகித் துன்பம்
விளைக்கின்ற தன்மையினை அறியா மங்கை
நடுக்கின்றி நம்பியவன் கையைக் கோத்து
நாமுடனே குலதெய்வம் காண்போம் என்றாள்
வெடுக்கென்று முன்சொன்ன சொல்லால் நெஞ்சில்
வெறுப்பென்ற கனல்வளர்த்தோன் புன்ன கைத்தான்!
(தொடரும்)
கடைசிப் பாட்டு அருமையிலும் அருமை அண்ணா!
LikeLike
மிக மிக அருமை காளன் மனம் மாறுவா ரா?
LikeLike
Migavum Viru viruppaga arumayaga erukkiradhu.
LikeLike
மிக மிக நன்று. நீங்கள் என் நண்பர் என்பது என் பெருமை
LikeLike