பனி மூட்டம், அடர்த்தியான செடிகள், முள்ளும் சுள்ளியும் எங்கும் இருந்தது. பேருந்து ஓட்டும் விதத்திலிருந்து அவனுக்கு இந்தப் பாதை பரிச்சயமானது எனத் தெரிந்தது. அந்த குக்கிராமத்தில் வண்டியை நிறுத்தினான். விடியற் காலை நான்கு மணி.
சுஹா, பேருந்தை விட்டு கீழே இறங்கினாள். இங்கே மெடிக்கல் கேம்ப் செய்ய வந்திருந்தாள். இது முதல் முறை அல்ல. டாக்டர் பட்டம் பெற்றதிலிருந்தே மெடிக்கல் கேம்ப் வாய்ப்பை தேடி எடுப்பாள். இதுவும் அப்படி ஒன்றுதான்.
கல்யாணம் நிச்சயமாகும் போதுகூட சுஹாவின் பெற்றோர் இவளுடைய இந்த மெடிக்கல் கேம்ப் செய்யும் தீர்மானத்தைப் பற்றிக் கூறியிருந்தார்கள். பரிபூரணமான வரவேற்பு கிடைத்தது.
மாமியாரின் பேச்சுத் துணைத் தோழிகள் இதைப் பாராட்டினார்கள். அவர்களில் பலர் கேம்பிற்குப் பல விதமாக உதவி செய்ய முன் வந்தார்கள். மாமியாருக்குப் பெருமை ஒரு பக்கம், எனினும் கவலை மனதைக் குடைந்தது “நமக்கு வீட்டில் கை கொடுத்து உதவுவாளா” என்றே. மாமனார் சமாதானம் சொல்லிப் பார்த்தார். பலன் அளிக்கவில்லை.
இந்த முறை மெடிக்கல் கேம்ப், அங்கு இருக்கும் மருத்துவர்களுடன் கூடிச் செய்வதற்கென்று சுஹா தனியாக வந்து இருந்தாள். அந்த விதத்தில் வித்தியாசமான அனுபவம்.
இறங்கின இடத்திலிருந்து வெகு தூரத்திற்கு வெறிச்சோடியாக இருந்தது. யாரும் இல்லை. எதுவும் தென்படவில்லை. கும்மிருட்டு. கவலை கலந்த பயம் அவளைக் கவ்வியது. ஏற்கனவே பயணம் முழுதும் டிரைவர் அவளை மீண்டும் மீண்டும் பார்த்தது அவளுக்குக் கூச்சமாக இருந்தது.
டிரைவர் அவளை மேலும் கீழும் பார்த்தபடி “பயமா” என்று வினவினான். சுஹா அவனை ஒரு முறை முறைத்தாள். தான் போட்டிருக்கும் சுடிதாரை மேலே இழுத்துக் கொண்டாள்.
டிரைவரும் அவளை அருவருப்புடன் பார்த்து, “நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை” என்றான். இந்த அவநம்பிக்கை தான் அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவனுக்குக் கோபம் குபீர் என வந்தது. அமைதிப் படுத்திக் கொண்டான். அமைதி பெற, எச்சில் துப்புவது அவன் பழக்கம்.
தன்னுடைய கையிலிருந்த எதையோ தேய்த்து சுத்தி விட்டு – சுஹா இதைக் கவனித்து நடுங்கினாள். அவனோ அதைப் பற்றவும் வைத்து விட்டான். பனியோடு புகை மூட்டமும் சூழ்ந்தது.
ஓர்சில நொடிகளில், பக்கத்தில் எங்கோ பல குரல்கள், சரக்கு சரக்கென்று காய்ந்த இலைகள் நொறுங்கும் சப்தமும் எழுந்தது. என்னவென்று புரிவதற்குள் அந்தப் பனி மூட்டம், புகை நடுவில் யாரோ தென்பட்டது போலத் தோன்றியது.
ஓர் சிறிய கூட்டமே அவள் நிற்கும் இடத்தை நோக்கிப் பரபரப்பாக வந்தது. அவர்களில் ஒரு முதியவர் டிரைவரைப் பார்த்து “தம்பி நன்றி, எப்பவும் போல உங்க தீக்குச்சி வச்சுதான் எங்கு நிக்கிறீங்கன்னு அடையாளம் தெரிஞ்சிது” என்று சொல்லி சுஹாவிடம் “டாக்டர், தாமதத்திற்கு மன்னிக்கணும்” என்றார். அவர் முடிக்கும் முன்னேயே, டிரைவர் “பெரியையா, நீங்க சொன்னாப்பில அம்மாவை முழுக்க முழுக்க கவனிச்சுண்டே தான் வந்தேன்”.
பிறகு டிரைவர் சுஹாவைப் பார்த்து “மேடம் இது உங்கள் டவுனு இல்லை. இங்க எந்த பயமும் தேவையில்லை. எப்பவுமே பாதுகாப்பு தான்” என்றான். சுஹா அவனைச் சந்தேகப் பட்டது தன்னுடைய கற்பனை விகாரம் தான் என உணர்ந்தாள்.
சுஹாவின் மாமியார் நிலையும் கிட்டத்தட்ட இதே சாயலில் தான்…
அன்று காலை நகரத்தில் அடை மழை. சமையலுக்குக் காய்கறி வேண்டுமே! மாமியார் மொட்டை மாடியில் நின்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்றைச் சமையலுக்குக் காய்கனிகள் அவளுடைய கண்முன்னே பூத்துக் குலுங்கி இருந்தன. என்ன விதவிதமானவை!!
இதைப் பார்த்த தன்னையே கோபித்துக் கொண்டாள். செடிகொடிகள் ஒவ்வொன்றும் சுஹா தானாகப் பார்த்துப் பார்த்து வளர்த்து வந்தது தானே?
ஒவ்வொரு செடிகொடிக்கும் பெயர் சூட்டி, அந்தப் பெயரால் தான் அடையாளம் காட்டுவாள். இதெல்லாம் இன்று வரை மாமியார் ரசிக்காத ஒன்று. வீட்டில் வேலை இருக்க, எதற்காக இன்னொன்று? இன்று போல, மழை நேரங்களில், போராட்டம் – பந்த் என்ற அவசர நிலையில் இது தான் எப்போதும் கைதரும், ஆனாலும்…
சுஹா தினமும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்புவதற்கு முன் குழந்தைகளுக்கும் ஆகாரம் தந்துவிட்டுக் கிளம்புவாள். “சுஹா நீ எப்படியோ எல்லாம் அலட்சியமாகச் செய்வது, இப்போதுதான் தெரிகிறது!” குழந்தைகளைத் தயார் செய்கையில் மனைவியை மனதார பாராட்டி நினைத்துக் கொண்டான் அவள் கணவன். “எல்லாம் சரியாக இருக்கா” என்று குழந்தைகளைக் கேட்க, “அப்பா, நீயும் அம்மா போலவே நன்னா தலையை வாரி டிரஸ் பண்ணி விட்டுருக்க!”.
தன் சுஹாவை பற்றி நினைத்துப் பிரமித்தான். வீட்டிலும் அம்மாவிற்கு உதவுவது, வெளியிலும் கடும் உழைப்பாளி. “ஏதோ ஒரு விதத்தில் நானும் கை கொடுக்க வேண்டும்…”
அடை மழையினால் வீசும் காற்று செடிகளை, தொட்டிகளைத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. சுஹாவுக்கு குறிப்பாகச் சம்பங்கி மேல் ஆழ்ந்த கவனம். மிகக் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தாள். ஏனோ அதற்குக் காத்தவராயன் எனப் பெயரிட்டாள். காத்தவராயன் மட்டுமே பிடிவாதமாக மழைக்கும்-காற்றுக்கும் அசராமல் அசையாமல், விழாமல் நின்றுகொண்டு இருந்ததைப் பார்த்து மகிழ்ந்தாள் மாமியார்.