சைக்கிள் – எஸ். கௌரிசங்கர்

Old Indian Bicycle High Resolution Stock Photography and Images - Alamy

ஏதோ சப்தம் கேட்டு சொர்ணம் வாசற் கதவைத் திறந்த போது, தனபால் கேட்டைத் திறந்து தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருந்தது தெரிந்தது. வழக்கமாக சைக்கிளை ஓட்டிக் கொண்டே உள்ளே வரும் தன் கணவன் மெதுவாக சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்து அதை சுவர் அருகே ஸ்டாண்டு போட்டு நிறுத்தியதைப் பார்த்தாள்.

“ஏங்க சைக்கிள் செயின் கழண்டு போயிடுச்சா?”

“இல்லை, அறுந்தே போயிடுச்சு”

தனபால் இப்படிச் சொன்னவுடன் சொர்ணம் படியிறங்கி வந்து சைக்கிளைக் குனிந்து பார்த்தாள். பெடல் செய்யும் சக்கரத்தின் முனையிலும் பின் பல்சக்கர முனையிலும் செயின் அறுந்து இருபுறமும் தரையில் விழுந்து கிடந்தது.

“ஐயையோ! என்னங்க இப்படி அறுந்து கிடக்குது! தள்ளிகிட்டே வந்தீங்களா? எங்கேயிருந்து?”

“பெருங்குடி சிக்னலாண்டையே அறுந்திடுச்சு. அங்கேயிருந்தே தள்ளிகிட்டுதான் வரேன்”

“ஏன்? வழியிலே சைக்கிள் ரிப்பேர் கடையே இல்லையா?”

“இருந்துச்சு… இருந்தாலும் நம்ம கோவிந்தராசு கடையிலே கொடுக்கலாம்ன்னு  வந்துட்டேன். இங்கே வந்தா அவன் கடை பூட்டி இருக்குது.”

“ஏங்க, அவர் கடை ஒண்ணுதானா ஊர்லே?”

“வேறே இருக்கு…. ஆனா கோவிந்தன் ரொம்ப செலவில்லாம நல்லா ரிப்பேர் பண்ணுவான்.”

“ஆமா… உங்க சைக்கிளுமாச்சு, கோவிந்தனுமாச்சு! எத்தனி வருஷம் இந்த இரண்டையும் கட்டிகிட்டு அளுவீங்க? எத்தினி தடவை இதை ரிப்பேர் பண்ணுவீங்க?”

“ஏன் இந்த சைக்கிளுக்கு என்னாடி கொறைச்சல்?”

“ம்… நமக்குக் கல்யாணம் ஆன நாளிலேருந்து இந்த ஓட்டை சைக்கிளை வச்சுகிட்டு இருக்கீங்க. இப்ப முப்பது வருசமாச்சு… இன்னும் இதை வித்துட்டு ஒரு புது வண்டி வாங்கலை நீங்க.”

“அடியே! நீ பொண்டாட்டியா வரதுக்கு முன்னாலே இருந்து இந்த சைக்கிள் என் கிட்டே இருக்குது, தெரிஞ்சுக்கோ. சரி… உன்னையும் கட்டிகிட்டு முப்பது வருஷமாச்சு. உன்னை வித்துட்டு புதுசா ஒருத்தியைக் கொண்டாந்துட்டமா?”

“ஐய!  இருவது வயசு வாலிபன் இவரு! அறுவத்தஞ்சு வயசு கிழம் பேசறதைப் பாரு! யாராவது கேட்டா வளிச்சுகிட்டு சிரிக்கப் போறாங்க”.

சொர்ணம் முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள். வரிசையாக எட்டு வீடுகள் ஒன்றைத் தொட்டுக் கொண்டு மற்றது இருக்கும் ஒரு காலனி அது. தனபாலின் வீடு மூன்றாவது. இரண்டாவது வீட்டின் வாசலில் குப்பையைக் கொட்ட வெளியே வந்த அமிர்தம், வந்த வேலையை மறந்துவிட்டு இவர்கள் பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டு நின்றாள். அதை கவனித்து விட்ட சொர்ணம், “உள்ளே வாங்க” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டின் படியேறி உள்ளே சென்றாள்.

சிறிது நேரம் தன் சைக்கிளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த தனபால், கீழே உட்கார்ந்து அந்த செயினின் ஒரு பக்கத்தைப் பிடித்து விரல்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு அறுந்து கிடந்த மறுபக்க முனையில் பொறுத்திப் பார்த்தார். அது ஒட்டாமல் நழுவி கீழே விழுந்தது. இரண்டு மூன்று முறை இப்படிச் செய்து பார்த்தும் பலனில்லை. அலுத்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு, எழுந்து கைகளைப் பார்த்தார். கருப்பாக மை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை சுவரின் மீது தேய்க்கப் போனவர், சட்டென்று திரும்பிப் பார்த்த போது அடுத்த வீட்டு அமிர்தம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். உடனே கையை அவசரமாக இழுத்து மையை தன் தலை முடியில் தடவிக் கொண்டு வேகமாகப் படியேறி உள்ளே போனார்.   

நேராக பாத்ரூம் போய் கைகால்களை கழுவிக்கொண்டு ஹாலுக்கு வந்த போது, சொர்ணம் கையில் ஒரு கோப்பையோடு வந்து, அதை அங்கிருந்த சிறு மேஜை மீது வைத்துவிட்டு, “டீயைக் குடிங்க” என்றாள். கோப்பையை கையில் எடுத்துக் கொண்ட தனபால், “என்ன! சொர்ணம் கோவிச்சுகிட்டியா?” என்றார். சொர்ணம் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் நின்றதைப் பார்த்துவிட்டு தனபால், “என்ன சொர்ணம் அழுவுறியா?” என்றார்.

“பின்னே? சைக்கிளை விக்கிறமாதிரி என்னையும் வித்துடுவீங்களா?”

“நீதானே சொன்னே பழசானா வித்துடணும்னு. அதான் நானும் சும்மா ஒரு விளையாட்டுக்குச் சொன்னேன் சொர்ணம்”

தனபால் குரலில் இருந்த கெஞ்சலை கவனித்த சொர்ணம் லேசாக சிரித்துக் கொண்டாள். தனபாலுக்கு அவள் சமாதானம் ஆகிவிட்டதாகத் தோன்றியது. கோப்பையில் இருந்த டீயை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, காலிக் கோப்பையை அவள் கையில் கொடுத்து, “இப்ப உன்னை வித்தாலும் வாங்கறதுக்கு ஆள் வேணுமில்லை?” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

சொர்ணம் கண்களில் கோபம் பொங்க, தன் கையில் இருந்த கோப்பையை அவர் மீது வீசி எறிவதாக பாவனை செய்து, “வயசானாலும் இந்த வாய்க் கொளுப்பு போகலை பாரு!” என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள். சட்டென்று நின்று திரும்பி, “சைக்கிளைப் பூட்டினீங்களா?” என்று கேட்டாள்.

“செயின் அறுந்த சைக்கிளை எந்தத் திருடன் ஓட்டிகிட்டு போயிடுவான்?”

“ஏன்? உங்களை மாதிரியே எவனாவது தள்ளிகிட்டே போயிட்டான்னா?”

“ஆமாம்! அது எனக்குத் தோணலை பாரு! என் பொண்டாட்டி அறிவே அறிவு!”

“அதுக்காகவே என்னை நீங்க விக்காம இருக்கணும்” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.  சைக்கிளைப் பூட்ட தனபால் வெளியே விரைந்தார்.

இரவு படுக்கப் போகும் முன் சொர்ணம் தனபால் அருகில் வந்து மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.

“இங்க பாருங்க! அந்த சைக்கிளை ஆயிரம் தடவை ரிப்பேர் பண்ணியாச்சு. ஒவ்வொரு தடவையும் நூறு, இருநூறுன்னு அதை வாங்கின காசுக்கு மேலே செலவழிச்சாச்சு. போதும். தொலைச்சுக் கட்டுங்க அதை. யாரும் வாங்கிக்க மாட்டாங்கன்னா, என் கிட்டே கொடுங்க. பளைய இரும்பு வாங்கறவன் கிட்டே கொடுத்தா, பேரிச்சம் பளமாவது கிடைக்கும்”.

“என்ன அப்படி சொல்லிட்டே? எங்க அப்பா எனக்குக் கொடுத்த பொக்கிஷம்டி அது”

“ஆமாம்! பொக்கிஷம். காலணாவுக்குப் பிரயோசனமில்லை”

“சொர்ணம்! என் சைக்கிளைப் பத்தி யார் குறைச்சு சொன்னாலும் எனக்கு கோவம் வந்திடும், ஆமாம் சொல்லிட்டேன். சாதாரண சைக்கிளா அது?”

தனபால் தன் பழைய நினைவுகளில் ஆழந்து போனார்.

“எனக்கு அப்ப நாலு வயசிருக்கும். எங்கப்பா அந்த சைக்கிளை புதுசா வாங்கிட்டு வந்தாரு. ஹம்பர் சைக்கிள். அந்த காலத்திலே அந்த சைக்கிள் யாரு கிட்டேயும் இருக்காது. டபுள் பார். டைனமோ விளக்கு. அது மேலே மஞ்ச துணி சுத்தி போத்தி வைச்சிருப்பாரு. இரண்டு சக்கரத்திலேயும் கலர் கலராக ஒரு மாலை மாதிரி சுத்தி வைச்சிருப்பாரு. சுத்தும் போது பார்க்க அழகா இருக்கும். எங்க அப்பா நல்ல உயரம். அதனாலே அந்த சைக்கிளை வாங்கினாரு. அந்த சைக்கிள்லேதான் எல்லா இடத்துக்கும் போவாரு.”

சொர்ணம் எல்லாவற்றையும் சிரத்தை இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அப்ப ‘கல்யாணப் பரிசு’ சினிமாப் படம் வந்த நேரம். அதிலே ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் சைக்கிள் ஓட்டி கிட்டே பாட்டு பாடுவாங்க. அதைப் பார்த்துட்டு வந்து தானும் சைக்கிள் ஓட்டணும்னு வாங்கினேன் அப்படீம்பாரு. எங்க அம்மா கூட கேலியா பேசுவாங்க. அவங்களை பின்னாலே வைச்சுகிட்டு என்னை, பார்லே ஒரு தனி குட்டி சீட் போட்டு அதிலே உட்கார வைச்சு சினிமாக்கெல்லாம் கூட்டிகிட்டு போவாரு”

அப்படியே சிறிது நேரம் அந்த நினைப்பிலேயே இருந்தார் தனபால். சட்டென்று ஞாபகம் வந்தவர் போல், “வாரம் ரெண்டு தடவை நல்ல துடைச்சி, எண்ணை போட்டு பளபளன்னு வைச்சிருப்பாரு. சைக்கிளை யார் கேட்டாலும் கொடுக்க மாட்டாரு. எனக்குக் கூட கொடுக்கலை. ‘சைக்கிள் கத்துக்க வாடகை சைக்கிள் எடுத்து கத்துக்கோ’ ன்னு சொல்லிட்டாரு. அவருக்கு வயசாகிப் போய் நான் வேலைக்குப் போன பிறகுதான் அந்த சைக்கிளை என் கிட்டே தந்தாரு. அதுவும் அரை மனசோடதான். சாவறதுக்கு கிடக்கும் போது கூட, முதல் நாள் என் கிட்டே ‘தனபாலு, அம்மாவை நல்லா பார்த்துக்கோ. என் சைக்கிளையும் பார்த்துக்கோ. அதை யார் கிட்டேயும் வித்துடாதேன்னு’ சொல்லிட்டுத்தான் கண்ணை மூடினாரு”.

“சரி! போதும் அந்தப் பளைய கதை. இப்ப அதுக்கு துருப்பிடிச்சு, கலர் போயி, எல்லா பாகமும் கயண்டு போயி எலும்புக் கூடா இருக்கு. இனிமே அதை வைச்சுகிட்டு என்ன பண்றது?”

“ம்.., கல்யாணம் ஆன புதுசிலே நீ கூடதான் கொழுகொழுன்னு பளபளன்னு இருந்தே. இப்ப எல்லா கயண்டு போயி தொளதொளன்னு இருக்கே. உன்னையும் பழைய இரும்புகாரன்கிட்டே போட்டுரலாமா? பேரீச்சம் பழம் கிடைக்குமா?”

சொர்ணத்திற்கு கோபம் தலைக்கேறியது.

“உங்க பொண்டாட்டியும் அந்த ஓட்டை சைக்கிளும் உங்களுக்கு ஒண்ணா? என்னை தொலைச்சி கட்டிடுங்க. அந்த சைக்கிளோடேயே குடும்பம் நடத்துங்க. எனக்கென்ன? நீங்களாச்சு உங்க ஓட்டை சைக்கிளாச்சு. எக்கேடு கெட்டுப் போங்க”

சொர்ணம் அவசரமாக எழுந்து உள்ளே போய் கதவைப் ‘படார்’ என்று சாத்திக் கொண்டு படுக்கையில் விழுந்தாள். தனபால் மெதுவாக எழுந்து போய் ஒரு டம்பர் தண்ணீர் குடித்துவிட்டு ஹாலிலேயே பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டார்.

ஐம்பது வருஷத்துக்கு முன்னால் தனபாலின் அப்பா, தங்கப்பன் “ஹம்பர்” சைக்கிளை பிராட்வே கடை ஒன்றில் இருந்து வாங்கி வந்திருந்தார். குழந்தை தனபால் தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டுமென்று கேட்டிருந்தான். மாறாக, அப்பா தனக்கு சைக்கிள் வாங்கிக் கொண்டதில் அவனுக்குக் கோபம். “இந்த சைக்கிள்லே ஏற மாட்டேன் போ” என்று அப்பாவிடம் கோபித்துக் கொண்டது அவருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அப்பா அவனைக் கொஞ்சி, “இங்கே பார்! நீ உட்கார்ந்து வர உனக்கு தனி குட்டி சீட்” என்று பெருமையுடன் காட்டி அதில் உட்கார வைத்தவுடன் கோபம் பறந்துவிட்டது. அப்புறம் அப்பா வெளியே போகும் போதெல்லாம் அந்த சைக்கிள் சீட் சவாரிதான். பெரியவன் ஆகி சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட பிறகும் அப்பா அந்த சைக்கிளைத் தொட விடவில்லை. ஸ்கூல் கடைசி பரீட்சையில் தனபால் ஃபெயில். தங்கப்பன், தான் வேலை செய்து வந்த முதலாளியிடம் சொல்லி அவர் சிபாரிசில், ரொம்ப கஷ்டப்பட்டு கிண்டியில் ஒரு ஃபாக்டரியில் வேலையில் அமர்த்தி விட்டார். அதற்குப் பிறகுதான் ஆஃபீஸ் போய் வர அந்த சைக்கிள் தனபாலிடம் வந்தது. நாற்பது வருஷமாக அதுதான் அவருடைய இணை பிரியா நண்பன். வெய்யிலோ மழையோ அதில்தான் சவாரி. நடுவில் இருக்கும் ஃப்ரேமைத் தவிர, மற்ற எல்லா பாகத்தையும் நிறைய தடவை மாற்றி ஆகி விட்டது. இருந்தாலும் அதை விட்டுவிட மனசு வரவில்லை.

ராஜா அண்ணாமலைபுரத்தில், தெற்குக் கோடியில் கால்வாயின் கரையில் ஒரு திடலில் குடிசைகளும் ஓட்டு வீடுகளுமாக பத்துப் பதினைந்து வீடுகள். அதில் ஒன்றில்தான் தனபால் குடும்பம் பல வருஷங்களாக இருந்து வந்தது. பதினைந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள், அந்த இடம் ஒரு ட்ரஸ்ட்க்குச் சொந்தமென்றும், அதில் பல மாடி கட்டிடம் கட்டப் போவதாகவும் உடனே அந்த இடத்தை எல்லோரும் காலி செய்ய வேண்டுமென்றும் நோட்டீஸ் வந்தது.  உடனே போராட்டம் வெடித்தது. போலீஸ், ரவுடி மிரட்டல்களும், சமாதானப் பேச்சு வார்த்தைகளும் ஒரு வருஷம் தொடர்ந்தன. முடிவில், வீடு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் இழப்பீடு தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, எல்லோரும் இடத்தை காலி செய்தார்கள். தனபால், கையில் கிடைத்த பணத்தை வைத்து நாவலூரில் இப்போதிருக்கும் வீட்டை வாங்கினார். பத்து வருஷம் முன்னால் ஒரே பெண் வசந்திக்குத் திருமணமும் முடித்தார்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன், சும்மா இருக்க முடியாமல் திருவான்மியூரில் ஒரு கடையில் வேலை. தினமும், நாவலூரில் இருந்து போய் வருவது இந்த “ஹம்பர்” சைக்கிளில்தான். அதோடு அறுபது வருஷ பந்தம். இன்று வரை அதுவும் தனக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. அதை விற்று விட வேண்டுமா? முடியவே முடியாது.

அடுத்த நாளும் கோவிந்தராசு சைக்கிள் ரிப்பேர் கடையைத் திறக்கவில்லை. “அவனோட மச்சினி புருஷனை வேலூர் ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காங்களாம். உதவிக்கு இவன் போயிருக்கான். அதான் கடையைத் திறக்கலை. பத்து நாள் ஆகுமாம். நான் பஸ்ஸிலேயே போறேன்” என்று விசாரித்து விட்டு வந்து தனபால் சொர்ணத்திடம் சொன்னார். பத்து மைல் சைக்கிளில் போவதைக் காட்டிலும் பஸ்ஸில் போவது நல்லதுதான் என்று நினைத்து அவளும் ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் மதியம் வாசல் மணி அடிப்பதைக் கேட்டு சொர்ணம் கதவைத் திறந்தாள். நடு வயதைக் கடந்தவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“யாருப்பா?”

“நான் ஆறாம் நம்பர் வீட்டிலே தச்சு வேலை செய்யறேன்மா. அம்மா உங்களை கேட்கச் சொன்னாங்க”

ஆறாம் நம்பர் தினகரன் வீட்டில் தரை டைல்ஸ் மாத்தி, ரிப்பேர் செய்து மராமத்து வேலை நடப்பதை அவர் மனைவி நாலு நாள் முன்னால் சொன்னது சொர்ணத்திற்கு ஞாபகம் வந்தது.

“என்ன கேட்கச் சொன்னாங்க? எங்க வீட்டிலே ஒரு ரிப்பேர் வேலையும் இப்ப இல்லை”

“அதில்லைம்மா! இதோ உங்க வீட்டு வாசல்லே நிக்கிறது உங்க சைக்கிள்தானே?”

“ஆமாம்! எங்க வீட்டு ஐயாவுது? ஏன் கேட்கிறே?”

“இது பழைய சைக்கிள்தானே? விலைக்குக் கொடுப்பீங்களா?”

“ஐயய்யோ! அது விக்கிறதுக்கில்லை. ரிப்பேருக்காக நிக்கிது.  கொடுக்கறதுன்னா எங்க வீட்டுக்காரரைத்தான் கேட்கணும்.”

“கேட்டு வைங்கம்மா! நான் இன்னும் நாலு நாள் வேலைக்கு வருவேன். காசு கொடுத்துட்டு வாங்கிக்கிறேன்.”

சொர்ணம் தனபாலைக் கேட்கவில்லை. கேட்டால் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று தெரியும். “வீணாக சண்டைதான் வரும். ஏன் வம்பு? அவராச்சு, அவர் சைக்கிளாச்சு, நமக்கென்ன?” என்று இருந்து விட்டாள். ஆனால் விஷயம் அதோடு நிற்கவில்லை. மனசில் சுழன்று சுழன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த சைக்கிளை விற்றால்தான் என்ன? சொந்த பெண்டாட்டியை விட அந்த ஓட்டை சைக்கிள்தான் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது. “என்னை பழைய இரும்புக்காரனிடம் போட்டு விடுவாராமே? பார்க்கிறேன்”. தன் வீட்டிலேயே தனக்கு ஒரு சக்களத்தி இருப்பது போலத் தோன்றியது சொர்ணத்துக்கு. அதை ஒழித்துக் கட்டினால்தான் நிம்மதி.

நாலு நாள் கழித்து, மீண்டும் அந்த தச்சு வேலைக்காரன் வந்தான்.

“ஐயா என்னம்மா சொன்னாரு? சைக்கிளை கொடுத்துடலாம் இல்லை?”

“ஐயாவுக்குக் கொடுக்க இஷ்டம் இல்லை. நான்தான் வயசாயிடுச்சு, நீங்க இனிமே சைக்கிள் ஓட்ட வேண்டாம்னு சொல்லி சம்மதிக்க வைச்சிருக்கேன். ரொம்ப ராசியான சைக்கிள். சரி! எவ்வளவு கொடுப்பீங்க?”

“பழைய சைக்கிளு. என்ன ஒரு இருநூறு ரூபாய் கொடுக்கலாம்”

“இருநூறா? வேண்டாம். அது இங்கியே இருக்கட்டும். நீங்க வேறே வாங்கிகுங்க”

“என்னம்மா? செயினு கூட அறுந்து கிடக்குது. புது செயின் மாத்தி, டயர் மாத்தி ஓவராயில் பண்ணி ரோட்டிலே ஓட்ட லாயக்கா ஆக்கிறதுக்கே மேலே எழுநூறு, எண்ணூறு ஆகும்.”

“அதான். இது வேணாம். நீங்க புது சைக்கிளே வாங்கிகுங்க”

“என்னம்மா, இப்படிச் சொல்றீங்க? எனக்கு செலவிருக்கும்மா. சரி! இருநூத்து ஐம்பது கொடுத்திடறேன்”

“இல்லை, நான் ஐயாவைக் கேட்டு நாளைக்குச் சொல்றேன்”

“எனக்கு இன்னியோட வேலை முடிஞ்சிருச்சும்மா. நாளைக்கு நான் வர மாட்டேன். சரிம்மா! கடைசி விலை, முன்னூறு ரூபாய்.”

அவனிமிருந்து கடைசி விலையை வாங்கிக் கொண்டு சொர்ணம் சைக்கிள் சாவியை அவனிடம் கொடுத்தாள்.

அன்று மாலையில் தனபால் வீட்டிற்கு வந்த போது, வாசலில் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ந்து போனார். அவசரமாக உள்ளே நுழைந்தவர், துணியை மடித்துக் கொண்டிருந்த சொர்ணத்தைப் பார்த்து, “சொர்ணம், சைக்கிளைக் காணலை. நீ சொன்ன மாதிரியே எவனோ தள்ளிகிட்டு போயிட்டான்” என்று கத்தினார்.  சொர்ணம் பதில் ஒன்றும் சொல்லாமல் துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள். “பூட்டிதானே வைச்சிருந்தேன்” என்று சொன்னவர் சட்டென்று சாவி வைக்குமிடத்தில் பார்த்த போது சைக்கிள் சாவியைக் காணவில்லை.

“சொர்ணம், சைக்கிள் சாவியும் காணலை. எவனோ வீடு புகுந்து சாவியை எடுத்துகிட்டு போய் வண்டியை தள்ளிகிட்டு போயிட்டான் போலிருக்கு. நான் பேசறதெல்லாம் உன் காதிலே விழுதா?”

சொர்ணம் மெதுவாக அவர் அருகில் வந்து “கத்தாதீங்க. எல்லாம் சொல்றேன். முதல்லே கைகாலை களுவிட்டு வாங்க. டீ தரேன்” என்று சொல்லிவிட்டு சமையல் அறைப் பக்கம் திரும்பினாள். தனபால் அவள் தோளைப் பிடித்து வேகமாகத் திருப்பினார்.

“அதெல்லாம் அப்புறம். என் சைக்கிளுக்கு என்ன ஆச்சு? அதைச் சொல்லு முதல்லே”

சொர்ணம் சில வினாடிகள் அவர் முகத்தைப் பார்த்து விட்டு, பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“சொல்லு, என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு”

“அந்த ஓட்டை சைக்கிள் விலை போயிடுச்சு. அதை வித்துட்டேன்.”

தனபால் பேயறைந்தவர் போல் ஆனார்.

“யார் கிட்டே?”

“ஆறாம் நம்பர் வீட்டுக்கு தச்சு வேலைக்கு வந்தவர் கிட்டே. முன்னூறு ரூபாய் கிடைச்சது. எடுத்து வைச்சிருக்கேன்”

“இப்ப நான் உன்னை அதை விக்கச் சொன்னேனா?”

“இல்லைன்னா இன்னும் பத்து வருஷம் அந்த ஓட்டை வண்டியை வைச்சுகிட்டு, நீங்க கஷ்டப்பட்டு மிதிச்சுகிட்டு தினம் நூறு மைல் போயிட்டு வருவீங்க. நான் ஒவ்வொரு நாளும் “நீங்க முழுசா திரும்பி வரீங்களா?”ன்னு இங்கே வயித்திலே நெருப்பைக் கட்டிகிட்டு காத்துகிட்டு கிடக்கணும். நீங்க அதை விக்க மாட்டீங்கன்னு தெரியும். அதான் நானே முடிவு பண்ணி வித்துட்டேன்.”

தனபாலுக்கு தலை சுழல்வது போல இருந்தது. தலையை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து விட்டார். வாய் கேவிக்கேவி அழ, கண்களில் நீர் பெரிதாக வழியத் தொடங்கியது.

“இப்ப என்ன ஆகிப் போச்சு? ஏதோ எளவு விழுந்துட்ட மாதிரி இப்படி அளுவுறீங்க! நான் இன்னும் உசிரோடதான் இருக்கேன். அந்த சைக்கிள்தான் செத்து போய் ரொம்ப நாளாச்சு”

“அடிப்பாவி! உசிரில்லாத ஜடமா அது? உசிருள்ள ஜீவன்டி அது. சொந்தக் குழந்தைபோல இத்தினி வருஷமா அதை வைச்சு காப்பாத்திகிட்டு வந்தேன். ஒரு நொடியிலே கேவலம் முன்னூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வித்திட்டியே? கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்தக் குழந்தை இனிமே திரும்பக் கிடைக்குமா?”

“ஆமாம், கோடி ரூபாய் கொடுப்பாங்க! முன்னூறு ரூபாய்க்கே அவன் முக்கிகிட்டு கொடுத்தான். துருப்பிடிச்சுப் போய், அங்கமெல்லாம் அக்கக்கா கழண்டு போய் கிடக்குது. அதுக்கு உசிரு இருக்காம். இங்கே பொண்டாட்டி உசிருள்ள ஜீவனாத் தெரியலை. அதை விட அந்த சைக்கிள் ஒசத்தியாப் போயிடுச்சு.”

தனபால் ஆத்திரத்தோடு எழுந்து, அவள் கன்னத்தில் பலமாக அறைந்தார். அவள் தன் கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்தாள்.

“ஆமாண்டி! அது நான் பிறந்ததிலேருந்து என் கூட இருக்குது. நீ இடையிலே வந்தவதான். உன்னை விட அந்த சைக்கிள் எனக்கு ஒசத்திதான். போ! என் கண் முன்னாலே நிக்காதே!”

சொர்ணம் அவர் கண்களில் இருந்த வெறியைப் பார்த்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, பேசாமல் போய் படுக்கையில் விழுந்தாள். அன்றிரவு இருவரும் சாப்பிடவில்லை. பேசவில்லை. ஒரு மயான அமைதி அந்த வீட்டில் நிலவியது.

மறுநாள், நீண்ட நேரமாகியும் தனபால் படுக்கையை விட்டு எழுந்திருக்காததைக் கண்டு சொர்ணம் உள்ளே போய் பார்த்தாள். அவர் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். சற்று தள்ளி நின்று கொண்டே, “ஏங்க, மணி ஒம்பது ஆவுது. நீங்க வேலைக்குப் போகலையா?” என்றாள். பதிலில்லை. “ஏங்க, எளுந்திருங்க” என்று சொல்லிக் கொண்டே அவரை தொட்டு எழுப்பப் போனவள், அவர் உடல் சுடுவதை கவனித்தாள். சட்டென்று நெற்றியில் கை வைத்துப் பார்த்த போது கையில் நெருப்பாய் சுட்டது.

“என்னங்க, உடம்பு சுகமில்லையா? ஜுரமா?” என்றாள்.

மெதுவாக போர்வையை விலக்கிக் கொண்டு கண்களைத் திறந்த தனபால் பதில் பேசவில்லை. உடல் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

“என்னங்க இப்படி சுடுது! உடம்பு நடுங்குது. வாங்க உடனே போய் டாக்டரைப் பார்ப்போம்”

“வேணாம். பத்து போட்டு, கசாயம் குடுச்சா எல்லாம் சரியாப் போய்டும்”

மூன்று நாள், “கசாயம்” குடித்தும் ஒன்றும் சரியாகவில்லை. அதற்கு மேல், தாமதிக்கக் கூடாது என்று சொர்ணம், வாசலில் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி, அவரை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, திரவியம் டாக்டர் கிளினிக்குக்குப் போனாள்.

டாக்டர் திரவியம் அந்தப் பகுதியில் ரொம்ப பிரசித்தம். “அஞ்சு ரூபாய் டாக்டர்” என்று பெயர் வாங்கியவர். யாராயிருந்தாலும் எந்த வியாதியாயிருந்தாலும் ஃபீஸ் “அஞ்சு ரூபாய்”தான். அதுவும் கட்டாயமில்லை. கையில் இருப்பதை அங்கிருக்கும் உண்டியலில் போட்டு விட்டுப் போகலாம். காசில்லாவிட்டால் அதுவும் தேவையில்லை. கூடிய வரைக்கும் மருந்து இலவசம். நூறு பேருக்குமேல் இருந்த கூட்டத்தைக் கடந்து, தனபாலின் முறை வர இரவு எட்டு மணி ஆகிவிட்டது.

“என்ன பண்ணுது?”

“மூணு நாளா உடம்பு ஜுரம் டாக்டர். கண்ணு முளிக்கவே இல்லை”.

“உடம்பு குளிர் நடுக்கம் மாதிரி இருக்குதா?”

“முதல்லே இருந்தது. இப்ப இல்லை”

எல்லா கேள்விகளுக்கும் சொர்ணம்தான் பதில் சொன்னாள்.

“என்ன குடுத்தீங்க?”

“கசாயம் கொடுத்தேன். சரியாகல்லை. கஞ்சிதான் குடிச்சாரு”

“சரி பார்ப்போம்”

டாக்டர் எல்லாம் பார்த்தார். பிறகு ஒரு சீட்டில் எழுதி நீட்டினார்.

“வைரல் ஃபீவர்தான். மருந்து எழுதிக் கொடுத்திருக்கேன். கொஞ்சம் விலை அதிகமான மாத்திரை. என் கையிலே இல்லை. வெளியிலே வாங்கிக்குங்க. கஞ்சி கொடுங்க. ரசம் சாதம், இட்லி, பன்னு கொடுக்கலாம். தயிர், மோர் வேணாம். ஒரு வாரம் கழிச்சு பார்க்கிறேன்”

ஒரு வாரம் ஆகியும் தனபாலின் உடம்பு முழுசாக சரியாகவில்லை. ஜுரம் குறைந்திருந்தது. ஆனாலும் உடம்பு பழைய தெம்பு, உற்சாகம் கொள்ளவில்லை. சோர்ந்து படுத்துக் கொண்டே, எதையோ பறிகொடுத்தவர் போல எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். சாப்பாடும் சரியாக உள்ளே போகவில்லை. பல வேளைகளில் மறுத்துவிட்டார். சொர்ணம் எத்தனையோ முறை அவரை உற்சாகப்படுத்திப் பேசியும் ஒன்றும் தெளிவாகவில்லை. ஒருவாரம் கழித்து மீண்டும் டாக்டர் திரவியத்திடம் அழைத்துக் கொண்டு போனாள்.

“என்ன, எப்படி இருக்கீங்க?”

“இனிமே இருந்து என்ன பிரயோசனம் டாக்டர்?”

தனபாலின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் டாக்டர் அதிர்ந்து விட்டார்.

“ஏன் இப்படி விரக்தியாகப் பேசுறீங்க? இப்ப என்ன ஆயிடுச்சு? ஜூரம் வந்தது. போயிடுச்சு. இனிமே மறுபடியும் நல்லா சாப்பிட்டு நல்லா ஓய்வெடுத்துகிட்டு உடம்பைத் தேத்திக்க வேண்டியதுதானே? இதிலே என்ன கஷ்டம்?”

“இனிமே இந்த உடம்பைத் தேத்தி என்ன ஆகப் போவுது?” என்று சொல்லிவிட்டு தனபால் எழுந்து விட்டார்.

“சரி! நீங்க வெளியே இருங்க. நான் உங்க வீட்டுக்கார அம்மா கிட்டே மருந்து, டானிக் எல்லாம் எழுதித் தரேன்”

ஒரு நடைப்பிணம் போல தனபால் மெதுவாக நடந்து, வெளியே போனார். அவர் போனதும், திரவியம் சொர்ணத்திடம். “ஏம்மா? வீட்டிலே சமீபத்திலே ஏதாவது துக்க சமாசாரம் நடந்ததா? வேண்டியவங்க யாராவது இறந்து போயிட்டாங்களா?”

“இல்லீங்களே”

“பின்னே ஏன் இவ்வளவு சோகமா, விரக்தியா பேசறாரு? ஏதாவது முக்கியமான பொருள் தொலைஞ்சு போச்சா?”

“டாக்டர், அவர்கிட்டே அறுபது வருஷமா இருந்தது ஒரு சைக்கிள். அது அவரு அப்பா ஆசையா அவருக்குக் கொடுத்தது. அது துருப்புடிச்சு போய், ஓட்டை சைக்கிளா ஆகிப் போயிடுச்சு. அடிக்கடி நிறைய செலவு வைச்சுகிட்டு இருந்தது. நாந்தான் இனிமே அது எதுக்குன்னு…. அவருக்குத் தெரியாம அதை வித்துபுட்டேன். அடுத்த நாள்லேருந்துதான் இந்த ஜுரம்”

சொர்ணம் நடந்ததையெல்லாம் சொன்னாள்.

“ஆகா! அதுதாம்மா காரணம். அந்த சைக்கிள் மேலே அவரு உசிரையே வைச்சிருந்திருக்காரு. அது போனது அவரு மனசை ரொம்ப பாதிச்சிருக்கு.”

“சைக்கிள் போனதுக்கா இவ்வளவு துக்கம்? ரேடியோ போயிருக்கு, டி.வி. வெடிச்சிருக்கு, ஏன் ஒரு தடவை பீரோவிலிருந்த நகைகூட திருட்டுப் போயிருக்கு. அதெல்லாம் அவரை ஒண்ணும் செய்யலையே?”

“அம்மா, இதெல்லாம் மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும். ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேலேயோ, ஒரு பொருள் மேலேயோ இருக்கிற ஆசை, பாசம், ஈடுபாடு மத்தவங்களுக்கு அதே ஆளுகிட்டேயோ பொருள் மேலேயோ அதே அளவு இருக்காது. அந்த ஈடுபாட்டை, பாசத்தை மத்தவங்களாலே புரிஞ்சுக்கவும் முடியாது. உங்க வீட்டுக்காரருக்கு அந்த சைக்கிள் மேலே இருந்த பிணைப்பு அதை இழந்ததிலே, அவருக்கு ஏதோ தன்னோட குடும்பத்திலே ஒருத்தர் செத்துப் போன மாதிரி ஆயிருக்குன்னு தோணுது”

“ஒண்ணும் பயமில்லையே?”

“வயசானவரு. சொல்றதுக்கில்லை. மனசு சரியாகலைன்னா உடம்பும் குணமாகாது”

“இப்ப இதுக்கு என்ன பண்ணறது டாக்டர்?”

“அந்த சைக்கிளை வித்தவர் கிட்டேயிருந்து மறுபடியும் திருப்பிக் கொண்டு வாங்க. உங்க வீட்டுக்காரர் இரண்டு நாள்லே சரியாகி பழையபடி ஆயிடுவார்.”

மறுநாள் காலையில் சொர்ணம் ஆறாம் நம்பர் வீட்டுக்கு ஓடினாள். தினகரன் மனைவியிடம் அவர்கள் வீட்டில் தச்சு வேலை செய்த நபரின் விவரங்களைக் கேட்டாள். “ஏன் கேட்கிறீங்க?” என்றாள் அவள். தன் வீட்டிலும் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி சமாளித்தாள் சொர்ணம். “அவரு பெயர் என்னவோ பன்னீர் செல்வம்னு சொன்னாரு. ஐஸ் அவுஸ் பக்கத்திலே வீடுன்னாரு. எங்க வீட்டுக்காரரைக் கேட்டு அட்ரஸ் வாங்கித் தாரேன்”.

தினகரன் கொடுத்த அட்ரஸை வைத்துக் கொண்டு சொர்ணம் பஸ் பிடித்து விவேகானந்தர் இல்லத்தில் இறங்கி நடந்தாள். ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் தாண்டி ஏதோ ஒரு கான் சாகிப் தெருவில் திரும்பி பழைய நம்பர் புது நம்பர் எல்லாம் விசாரித்து அவன் வீட்டைக் கண்டு பிடித்தாள். நல்ல வேளையாக பன்னீர் செல்வத்தை வீட்டிலேயே பிடித்தாள்.

“என்னம்மா சொல்றீங்க? சைக்கிள் உங்களுக்கே மறுபடியும் வேணுமா? அதைத்தான் காசு வாங்கிட்டு வித்துட்டீங்களே? திருப்பி கேட்டா எப்படிம்மா?

“இல்லை, உங்க காசை நான் திருப்பித் தந்திடறேன். நீங்க சைக்கிளைக் கொண்டு வாங்க. எங்க வீட்டு ஐயா அவரைக் கேட்காம வித்துட்டதாலே என்னைத் திட்டுறாரு”

“அதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும்? இது என்னம்மா நியாயம்?”

“இங்கே பாருங்க, நான் அவரைக் கேட்காம செஞ்சது என் தப்புதான். மன்னிச்சுக்கோங்க. வண்டியைத் திருப்பிக் கொடுத்திடுங்க”

“அது எப்படி? வித்தது வித்ததுதான். அதெல்லாம் திருப்பிக் கேட்க முடியாது”

“இங்க பாருங்க. தகறாரு பண்ணாம கொடுத்தீங்கன்னா நல்லது. இல்லைன்னா….” சொர்ணத்தின் குரல் உயர்ந்தது.

“கொடுக்கலேன்னா என்னா பண்ணுவீங்கோ?”

“நீங்க எங்க காலனிக்கு வேலைக்கு வந்த போது, எங்க வீட்டுக்குள்ளே புகுந்து சாவியைத் எடுத்து, சைக்கிளைத் திருடிக்கிட்டு போயிட்டீங்கன்னு போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுத்திடுவேன். பொம்பளைன்னா போலீஸு உடனே ஆக்‌ஷன் எடுக்கும். உங்களை நாலு தட்டு தட்டி உள்ளே தள்ளிடுவாங்க.” சொர்ணம் தைரியமாகச் சொன்னாள்.

“என்னம்மா இப்படி மிரட்டுறீங்க?” பன்னீர் செல்வத்தின் குரலில் பயம் தெரிந்தது.

“பின்னே நயமாச் சொன்னா கேட்கலைன்னா அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கும். சரி, வண்டி எங்கே?”

“வண்டி இப்ப இங்கே இல்லை”

“ஐய்யய்யோ! வண்டியை வித்துட்டீங்களா?”

“இல்லைம்மா! ரிப்பேருக்குப் போயிருக்கு. நடுவுலே இருக்கிற பாரைத் தவிர மத்த எல்லா பார்ட்டும் மாத்த வேண்டியிருந்தது. எனக்கு எண்ணூறு ரூபாய் நஷ்டம்”

“எல்லா நஷ்டத்தையும் நான் கொடுத்திடறேன். பில்லோட, சைக்கிளையும் எடுத்துகிட்டு மரியாதையா நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்து சேருங்க”

இரண்டு நாள் கழித்து, தனபாலின் சைக்கிள் ஒரு ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தது. ஆட்டோ சார்ஜ், விலையாகக் கொடுத்த முன்னூறு உட்பட ஆயிரத்து இருநூற்று முப்பத்தைந்து ரூபாய் பன்னீர் செல்வம் வாங்கி கொண்டு அவளைத் திட்டிக் கொண்டே போய்ச் சேர்ந்தான்.

படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த தனபாலை எழுப்பி கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள் சொர்ணம்.

“பாருங்க! உங்க செல்லக் குழந்தை திரும்ப வந்து சேர்ந்துடுச்சு. வித்தவன் கிட்டே இருந்து திரும்பி வாங்கிகிட்டு வந்துட்டேன். இப்போ சந்தோசம்தானே?”

புதுப் பொலிவோடு நின்ற தன் சைக்கிளைப் பார்த்த தனபாலுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. புது டயர்கள், செயின், புது காரியர், புது சீட், டபுள் பாரைச் சுற்றி ஒரு கவர். புது மெருகோடு சைக்கிள் ஜொலித்தது.

“இது என் சைக்கிளே இல்லை”. சொர்ணம் கலக்கத்துடன் அவரைப் பார்க்க, “கல்யாணப் பொண்ணு மாதிரி ஜொலிக்குது.”

“பின்னே ஆயிரம் ரூபாய் செலவளிச்சா, ஜொலிக்காம எப்படி?’

“ஆயிரம் ரூபாயா? எங்கே வைச்சிருந்தே?”

“அப்பப்ப உங்களுக்குத் தெரியாம சேர்ந்து வைச்சிருந்தேன். தீபாவளிக்கு புதுத் துணிமணி எடுக்கலாம்னு. எல்லாம் மொத்தமா கரைஞ்சி போச்சு”

“போனா போவட்டும் விடு. தீபாவளி ஒரு மாசம் முன்னாலேயே வந்துடுச்சி நமக்கு”

மறுநாள், தனபால் பழையபடி ஆகிவிட்டார். குளித்து, சாப்பிட்டு விட்டு, வேலைக்குக் கிளம்பினார். சொர்ணம் அவர் கையில் சைக்கிள் சாவியை எடுத்து நீட்டினாள்.

“வேணாம் சொர்ணம். நான் பஸ்ஸிலேயே போறேன். அதுவே சவுகரியமா இருக்கு.”

“அப்ப சைக்கிள்?”

“புது சைக்கிளை ரோட்டிலே ஓட்டினா அழுக்குபட்டு வீணாப் போயிடாது?’ என்று சொல்லிவிட்டு தனபால் படியிறங்கினார்.

6 responses to “சைக்கிள் – எஸ். கௌரிசங்கர்

  1. சைக்கிள் ஒரு பொருள் மட்டுமல்ல அது உயிரானது .சில பொருட்கள் சிலருக்கு உயிராகும் உணர்வினை இயல்பான கதையோட்டத்தில் அமைத்திருப்பது சிறப்பு. வாழ்த்துகள்

    முனைவர்.பெ.பகவத்கீதா
    உதவிப்பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி
    திருச்சி-22

    Like

  2. மிகவும் அருமையான கதை. மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது, வாழ்த்துகள் கௌரிசங்கர் சார்!

    Like

  3. எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு சைக்கிள் இருந்தது. நான் அரசு வேலையில் சேர்ந்து மூன்றாவது மாதம் கடன் வாங்கி ஒரு டிவிஎஸ் எக்ஸ்செல் வாங்கி குடுத்தபின்பு தான் அப்பா அந்த சைக்கிளை ஓரங்கட்டினார் வருத்தங்களுடனும் மகிழ்ச்சியுடனும்

    Like

  4. கதை அருமைதான். பஸ்ஸில் போகும் முடிவுக்கு முன் ,புதிய தோற்றத்தோடு வந்த பழைய இரட்டைபார் அம்பரை மீண்டும் பார்த்ததும் தனபால் ,அதன் மேனி தடவி துள்ளிக்குதித்து ஏறிஒரு சுற்று மிதித்து வந்து தனது அறுபதாண்டு பந்தத்தோடு உறவாடி இருக்க வேண்டுமல்லவா. இந்தஉயிர்ப்பை கௌரிசங்கர் இணைத்திருக்கலாம். வாழ்த்துகள் .அம்பர் சைக்கிளில் சுற்றுவது ராயல் என்பீல்டு புல்லட்டில் பயணிப்பதுபோல.

    Like

  5. வாழ்த்துக்கள் கௌரிக்ஷங்கர். அருமையான கதை. முடிவும் வித்யாசமானதும் யதார்த்தமானதாகவும் உள்ளது
    மனைவி தவரு செய்திருந்த போதும் அவரது உணர்வை மதித்து பஸ்ஸில் போக முடிவு செய்தது பாராட்டக்கூடியது.

    Like

  6. கதை மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. எனக்கும் அதே போல சில அனுபவங்களுண்டு . கதாசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.