முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’ என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன், அவளை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். ஆனால் அவள் தந்திரமாக அவனைக் கீழே தள்ளிக் கொல்கின்றாள்……

 

 பத்திரை வருந்திப் புலம்புதல்

 

பொன்பொருள், வீடு, தோற்றப்

       பொலிவுடன் இளமை சேர்ந்தால்,

இன்பமே விளையும் என்பர்.

       எனக்கது நடக்க வில்லை!

முன்புநான் செய்த வற்றால்

      மூண்டதோ இந்தத் தொல்லை?

அன்பினால் நாயின் வாலை

       அசைத்தனன்  நிமிர வில்லை!

         

   காதலிலும் தோற்றேன், என்றன்

     கணவனைக் கொன்று தீர்த்தேன்,

கோதிலாக் குடிப்பி  றப்பும்

     குன்றிடப் பழியைச் சேர்த்தேன்.

தீதிலா  உறவை   மீண்டும்

      சென்றுநான் காண மாட்டேன்.

ஏதுநான் செய்வேன் ஐயோ

      எங்குநான் செல்வேன் அந்தோ?

 

கால்போன போக்கில் நடந்து செல்லல்

 

ஆல்போன்ற தொல்வணிகக் குலத்தில் தோன்றி

      அருங்கல்விக் கேள்வியெலாம் மறந்து விட்டுச்

சேல்போன்ற விழிமங்கை சிந்தை கெட்டுச்

        சிறுகாம வலைப்பட்டு துன்ப முற்றுச்

சால்பற்ற கள்வனுக்கு வாழ்க்கைப் பட்டுச்

       சரிவினிலே கொடியவனைத் தள்ளி விட்டுக்

கால்போன போக்கினிலே நடந்து சென்றாள்

      கல்முள்ளும் மெல்லடியால் கடந்து சென்றாள்

 

அழகிய கூந்தலைப் பனங்கருக்கால் பறித்தல்

 

மனையை வெறுத்தாள், மகிழ்ச்சி வெறுத்தாள்,

வினையை வெறுத்தாள், விதியை வெறுத்தாள்,

தனையும் வெறுத்தாள், தலையின் குழலைப்

பனையின் கருக்கால் பறித்தாள் எறிந்தாள்.

 

            (குழல் — கூந்தல்)

 

சுருண்ட முடி வளரக் குண்டலகேசி ஆதல்

 

வண்டினங்கள் மொய்க்கின்ற மலர்சுமந்த கருங்குழலைக்

கண்டவர்கள் உளம்வருந்தக் களைந்தனளே பத்திரையாள்

மண்டுகின்ற சுருள்முடியும் வந்தங்கு வளர்ந்திடவும்,

குண்டலத்துக் கேசியெனக் கொண்டனளே புதுப்பெயரை.

           (குண்டலகேசி– சுருண்ட முடி கொண்டவள்)

 

 புத்த மதத் துறவியிடம் தன் கதையைக் கூறுதல்

ஐம்பெரும் காப்பியங்கள் கதை | பட்டம் | PATTAM | tamil weekly supplements

சுமையுடலால்  சோர்வடைந்து துயருற்றுத் திரிகையிலே,

தமையுணர்ந்த புத்தனவன் தகவுடைய அடியவராம்,

அமைதிநிலை துறவியவர் அவளெதிரில் நடந்துவர,

இமைவிரியக் கண்டவளும் எடுத்துரைத்தாள் துயர்க்கதையை

(தொடரும்)