குவிகம் பொக்கிஷம் – வண்ணதாசன் – நிலை –

Vannathasan 1.jpg

நன்றி : அழியாச்சுடர்

‘தேர் எங்கே ஆச்சி வருது?’

‘வீட்டைப் பார்த்துக்கோ.’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு கேட்டாள்.

’வாகையடி முக்குத் திரும்பிட்டுதாம். பார்த்திட்டு வந்திருதோம். நீ எங்கியும் விளையாட்டுப் போக்கில் வெளியே போயிராத, என்ன?’

kalyanjiஅழிக்கதவைச் சாத்திவிட்டு எல்லோரும் வெளியே போனபோது கோமு அவர்களைப் பார்த்துக் கொண்டு உள்ளேயே நின்றாள். கம்பிக் கதவிற்கு வெளியே ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து, தெருப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். முடுக்கு வழியாக, இங்கிருந்து தெருவைப் பார்க்க முடியாது. தெருவைப் பார்க்கவே இன்றைக்கு ரொம்ப நன்றாக இருக்கும். நிறைய ஆட்கள் இந்தத் தெரு வழியாகப் போவார்கள். பெரிய தெரு, மேலத்தெரு, கம்பா ரேழி, பேட்டை ஆட்களெல்லாம் இப்படிக்கூடிப் போவார்கள். பலூன்காரன், தேங்காய்ப்பூ, சவ்வு மிட்டாய்க்காரன், ஐஸ்காரன் எல்லாம் போவான். இன்றைக்கு ராத்திரிகூட ஐஸ் விற்பான். பாம்பே மிட்டாய்க்காரன் வருவான். விறகுக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு அப்பாகூட இந்தத் தெரு வழியாக ஒருவேளை போகலாம். வருமானம் இல்லாத சிலநாட்களில் கோமு இருக்காளா?’ என்று வீட்டு வாசலில் வந்து ஓரமாக நின்று கேட்பது மாதிரி, இன்றைக்கும் வந்தால் நன்றாக இருக்கும். கோமுவுக்கு ஒரு பன்னிரண்டு வயசுப் பிள்ளை சாப்பிடுவதற்கும் கூடுதலாகவே இங்கு சோறு போடுவார்கள். அந்தத் தட்டை மூடியிருக்கிற ஈயச்சட்டியை நிமிர்த்திவிட்டு அப்பாவிடம் கொடுப்பாள். சாப்பிட்டுவிட்டு அப்பா போயிட்டு வருகிறேன் என்று சொல்லாமலே போய்விடுகிறது உண்டு. இன்றைக்கு அப்பா வந்தால் சந்தோஷமாக இருக்கும்.

வாசல் அமைதியாக இருந்தது. எதிர்த்த வீடு இரண்டிலும் கூடத் தேர்ப் பார்க்கப் போயிருந்தார்கள். எதிர்த்த வீட்டுத் தார்சாவில் ஒரே வெட்டுத்துணியாகக் கிடந்தது. தையற்காரர் கைமிஷினில் தைத்துக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். தையற்காரர் உட்கார விரித்த சமுக்காளம்கூட அப்படியே வெள்ளையும் பச்சையுமாக வெட்டுத்துணி சிதறிக் கிடக்கக் கிடந்தது. எதிர்த்த வீட்டுப் பாப்பா ஸ்கூலுக்குப் போகிறது. இங்கே இல்லை, பாளையங்கோட்டைக்கு. இவளுக்கிருக்கிற பாவாடையின் கிழிசலை நாளைக்குத் தைக்க வேண்டும். வீட்டு ஆச்சி கொடுத்த கிழிந்த உள்பாவாடையையும் தைக்க வேண்டும். இந்த டெய்லர் கிழிசலைத் தைப்பாரோ என்னவோ? அழிக்கதவைத் திறந்து அந்தப் பச்சை வெட்டுத்துணியை எடுத்து வரலாம். பச்சை என்றால் திக்குப் பச்சையில்லை; லேஸ் பச்சை. புல் முளைத்த மாதிரி. வேப்பங்காய் மாதிரி. ஈர விறகுக்குத் தொலி உரித்த மாதிரி.

கதவைத் திறந்து கொண்டு போகலாம் என்றால் கதவு சத்தம் போடும். பெரிய கதவைவிட இந்த அழிக்கதவு டங்டங்கென்று குதித்துக் கொண்டே போகும் சத்தத்தில் கட்டிலில் சீக்காய்ப் படுத்திருக்கிற பெரிய ஆச்சி முழித்துவிடக் கூடாது. அந்த ஆச்சி முழித்தால் பெரிய தொந்தரவாகப் போகும். பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘தண்ணி எடுத்துட்டியா? கொடியில் கிடந்த துணியை உள்ளே எடுத்துப் போட்டியா? இன்றைக்கு விளக்குப்பூசைக்குப் பூக்காரன் சரம் கொண்டு வந்து வைத்தானா? அம்மாகுட்டி சாணி தட்ட வரக்காணுமே, ஏன்? தோசைக்கு எவ்வளவு அரைக்கப் போட்டிருக்கிறது? பௌர்ணமி என்ன தேதியில் வருகிறது? எதிர்த்த வீட்டில் ஆள் நடமாடுகிற மாதிரிச் சத்தம் கேட்கிறதே, யார் வந்திருக்கா?’ ஆச்சியின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல ஆரம்பித்தால் விடிந்து போகும். மேலும் கோமுவுக்கு ஆச்சி கேட்கிற எல்லாக் கேள்விகளுக்கும் எப்படிப் பதில் சொல்லத் தெரியும்?

கோமு அழிக்கதவைத் திறக்கவில்லை. அவளுக்கு ஒரு கோட்டை வேலை கிடக்கிறது. ஆற்றுத் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதற்கு முன் தொழுவில் நிற்கிற கன்றுக்குட்டியைப் பிடித்துக் கட்ட வேண்டும்.

கோமு தொழுவத்துக்குப் போகிற நடையில் வந்து உட்கார்ந்து கொண்டு பார்த்தாள். முன்னால் வேலை பார்த்த டாக்டர் வீடு மாதிரி இல்லை இது. அங்கே புதிது புதிதாக எல்லாத் தரையுமே வழுவழுவென்று இருக்கும். இப்படிக் கல்நடையெல்லாம் கிடையாது. இங்கே கட்டுக்குக் கட்டு கல்நடை இருக்கிறது. இந்தத் தோட்டத்துக் கல்நடை மற்ற எல்லாவற்றையும் விடக்குழி குழியாக இருக்கிறது. கழுவி விட்டால் இடம் உடனே காயாது. இந்தச் சின்னச் சின்ன அம்மி கொத்தினதுமாதிரிக் குழிகளுக்குள் கொஞ்ச நேரம் ஈரம் இருக்கும். குளிர்ந்து கிடக்கும்.

கோமுவுக்கு வீட்டை விடவும் இந்தத் தோட்டம் பிடித்திருந்தது. ஒடுக்கமான இந்த இடத்துக்குள்ளேயே சின்னச் சின்னதாக ஒரு கருவேப்பிலை மரம், முருங்கை மரம், தங்க அரளிமரம் மூன்றும் இருந்தது. பெரிதாக வளராமல், ஆள் உயரத்துக்கு மேலே போகாமல், வளர்கிற பிள்ளைகள் மாதிரி அவை இருந்தன. அசலூரில் இருந்து விருந்தாட்கள் வந்தபோது, கோமுவும் வந்திருந்த சிறு பிள்ளைகளும் தங்கரளிப் பூவையும் கருவேப்பிலைப் பழத்தையும் கொண்டுதான் வீடு வைத்து விளையாடினார்கள்.

கோமு இங்கே வேலைக்கு வரும்போது கன்றுக்குட்டி ரொம்பச் சிறுசாக இருந்தது. பால் குடித்து விட்டு அது ஆளில்லாத தோட்டத்தில் காலை உதறி உதறித் துள்ளிகொண்டு ஓடுவதையும், மறுபடியும் அம்மா ஞாபகம் வந்துபோல், தொழுவுக்கு ஓடிவந்து மடுவைச் சுவைப்பதையும் அடுத்த நிமிஷம் வாலைத் தூக்கிக் கொண்டு ஓடுவதையும் பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும். அப்போது இருந்த செவலை நிறம் போய் ரோமம் எல்லாம் உதிர்ந்து ஜாடை, குணம் எல்லாம் இப்போது மாறிவிட்டது. நிறையக் கள்ளத்தனமும் வந்து விட்டது. ஆள் வருகிற சத்தம் கேட்டால் பசுவுக்கு அந்தப்புறம்போய் அழிப்பக்கம் நின்றுகொள்கிறது. இழுத்துக் கட்ட முடியவில்லை. செக்கு மாதிரி அசையாமல் நிற்கிறது. என்றைக்கு அது கயிறை அத்துக் கொண்டு போய்ப் பாலைக் குடித்து, கோமுவுக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்கப் போகிறதோ, தெரியவில்லை.

கோமு, காலை மிதித்து விடுமோ என்கிற பயத்துடன், கயிறை நீளமாகத் தள்ளிப் பிடித்து இழுத்துக் கொண்டு தொழுவில் இன்னொரு பக்கத்தில் கட்டினதும், அது முட்டவருவது போல் அவள் பக்கம் வந்து முழங்கைப் பக்கம் நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது. கருநீலமான அந்த வழுவழுப்பான நாக்கு படப்படக் கோமுவின் கையில் கூச்சமெடுத்தது. அது இன்றைக்கு அவளிடம் ரொம்பப் பிரியமாக நடந்து கொண்டது போல் இருந்தது. கொம்பு முளைக்கப் போவது போல் புடைத்த தலையைச் சொறிந்தபடி, இன்னொரு கையைக் கழுத்தில் போட்டு ‘லட்சுமீய்’ என்று அவளே செல்லமாக ஒரு பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கட்டிக் கொண்டாள். கன்றுக்குட்டி சட்டென்று தலையை உலுக்கிப் பிடுங்கிக் கொண்டபோது ஒன்று இரண்டு மூன்று என்று தொடர்ந்து வேட்டுச்சத்தம் கேட்டது.

தேர் பக்கத்தில் வந்திருந்தால்தான் இப்படி உஸ்ஸென்று சீறிக்கொண்டு வேட்டு வெடிப்பது கூடக் கேட்கும். எங்கேயிருந்து பார்த்தாலும், இப்படி வேட்டு வானத்தில் புகைந்து கொண்டு போய் வெடிப்பது தெரியும். ஏரோப்ளேன் பார்க்க ஓடி வருகிற மாதிரி, இதையும் வீட்டுக்குள்ளேயிருந்து ஓடிவந்து எல்லோரும் அண்ணாந்து பார்க்கலாம்.

கோமு ஓட்டுச்சாய்ப்புக்கு வெளியே வந்து வானத்தைப் பார்த்தபடியே நின்றாள். நீலமும் வெள்ளையுமாகக் கிடந்த வானத்தில் ஒரு கொத்து போல நாலைந்து பெரிய கலர் பலூன்கள் மாத்திரம் அலைந்து கொண்டிருந்தன. எத்தனை பலூன், எத்தனை ஜவுளிக் கடை நோட்டீஸ், பொருட்காட்சி நோட்டீஸ் எல்லாம் இன்றைக்குப் பறக்கும். மேலே வீசப்படுகிற அந்தப் பச்சை சிவப்பு மஞ்சள் நோட்டீஸ்கள் மடங்கி மடங்கிக் கோலாட்டு அடிப்பதுமாதிரி எவ்வளவு அழகாகக் கீழே வரும். கோமு அந்த நோட்டீஸைப் பொறுக்க எவ்வளவு பிரயாசைப் பட்டிருக்கிறாள். புத்தம் புதிய நோட்டீஸின் ஒரு பாகம் மாத்திரம் காலில் மிதிபட்டு மணலும் சரளும் முள்ளுமுள்ளாகக் குத்திக் கிடக்கும்போது எவ்வளவு கஷ்டமாக இருக்கும். அதை எடுத்துப் பார்க்கும்போது இப்போது அந்தப் பலூன் கூட விலகி நகர்ந்துவிட்டது. வானம் மட்டும்தான் மேலே, கடல் மாதிரி, குளம் பெருகினது மாதிரி.

O O O

தேரோட்டத்திற்காகத் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறானோ என்னவோ! இன்றைக்குக் குழாயில் எடுக்க எடுக்கத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. கொப்பரை, தொட்டி, மண்பானை, எவர்சில்வர் குடம் எல்லாவற்றிலும் தண்ணீர் எடுத்து ஊற்றின பிறகு கூடக் குடம் நிரம்பிச் சரசரவென்று பெருகிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறது என்று தெரியவில்லை. கோமு குழாய்ப்பக்கம் நின்றுகொண்டே இருந்தாள். குடத்திலிருந்து பாதத்தில் தண்ணீர் வழிந்து, காலுக்கடியில் குளிர்ந்து பெருகிக் கொண்டிருக்கும்போது-

‘நீ ஒத்தையிலயா வீட்டில இருக்க, தேர்ப் பாக்கப் போகலையா?’ என்று யாரோ கேட்டார்கள். சத்தம் மேலே இருந்து வந்தது.

‘மேலே பாரு – இங்க இங்க!’ பின்னால் இந்த வீட்டுச் சுவரை ஒட்டி இருக்கிற இன்னொரு வீட்டு மச்சில் இருந்து அந்த வீட்டு அக்கா சத்தம் கொடுத்தாள். அந்த அக்காவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் மச்சுத் தட்டோட்டியில் நின்று தேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மச்சும் இருந்து, சமைந்து பெரிய மனுஷியான அக்காக்களும் இருக்கிற நிறைய வீடுகளில், அவள் இதைப் பார்த்திருக்கிறாள். கோமுகூட ஒரு தடவை அப்படி மச்சுத்தட்டோட்டியில் நின்று தேர் பார்த்திருக்கிறாள். அவள் பார்த்த சமயத்தில் அந்த மச்சில் இருந்து தேர் முழுவதும் தெரியவில்லை. இருக்கிற ஆட்கள் தெரியவில்லை. வடம் கண்ணில் தட்டுப் படவில்லை. தேரின் மேலே உள்ள தட்டு அலங்காரமும், உச்சியிலுள்ள கும்பமும், சிவப்புக் கொடியும், முக்குத் திரும்பும்போது தேரின் விலாவும் வாழைமரமும் தெரிந்தது. அதுவும் நன்றாகத்தான் இருந்தது. எங்கே பார்த்தாலும் நம்மைச் சுற்றி மச்சுத் தட்டோட்டியும், புகைக் கூண்டும், ஓட்டுக் கூரையும், இடையில் சில இடங்களில் வேப்பமரமும், வேப்பமரத்துக்கு அந்தப்புறம் இன்னொரு ஓட்டுச்சிவப்பும், இதுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு தலையை மாத்திரம் தூக்கிப் பார்ப்பது போலத் தேர் வருவதும் நன்றாகத் தான் இருக்கும். இந்த வீட்டு மச்சில் போய்ப் பார்க்கலாம் என்றுகூடத் தோன்றியது. அந்த வீட்டிற்கு வழி இந்தப் பக்கம் இல்லை. தெருவைச் சுற்றி முன்பக்கமாகப் போக வேண்டும். வீட்டைப் போட்டுவிட்டு அப்படிப் போக முடியாது. குடம், வாளி எல்லாவற்றையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டு எல்லோரும் வரும் வரை பேசாமல் நடையில் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

O O O

கோமு நடையில் உட்கார்ந்திருக்கும் போதே பையப் பைய இருட்டி விட்டது. எப்படி இருட்டு வந்தது என்றே தெரியவில்லை. தேரோட்டமும் இன்றைக்குத்தான். பௌர்ணமியும் இன்றைக்குத்தான். நல்லவேளை, இரண்டும் ஒரே நாளில் வந்தது. இல்லாவிட்டால் இரண்டு நாளுக்கு முந்தின ராத்திரியும் வீடு மெழுக வேண்டும். அடுப்படி கழுவ வேண்டும். எல்லார் சாப்பாடும் முடிந்து அடுப்படி கழுவுவதற்குள், தூக்கம் தூக்கமாய் வரும். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் பைப்பில் வேறு தண்ணீர் அடிக்க வேண்டும்.

இந்த வீட்டு நடையில் கோமு இப்படித் தனியாக வாசலில் உட்கார்ந்ததே இல்லை. இன்னும் ஏழு மணி ஆகாத இருட்டுக்குள் உட்கார்ந்திருப்பது கூடப் பயமாக இருந்தது. நிலாவெளிச்சம் இருக்கிறது என்றாலும் இப்படி யார் ஒத்தையில் இருக்க முடியும்? இவள் உட்கார்ந்திருந்த நடையை ஒட்டி இவள் ஆவிச் சேர்த்துக் கட்டுவதற்குக் கஷ்டப்படுகிற மாதிரி வழுவழு என்று ரெண்டு மரத்தூண் இருந்தன. அந்த ரெண்டின் நிழலும் வாசல் பக்கம் ரெண்டு பள்ளம் தோண்டிக் கோமுவை நடுவில் உட்கார்த்தினது போல விழுந்திருந்தன. எதிர்த்தவீட்டிலும் நான்கு கல்தூண்கள் ஊதாவாகக் கலர் அடிக்கப்பட்டு நின்றன. இப்படி உயரம் உயரமாக இருட்டுக்குள் அவளைச் சுற்றி இருக்கிற தூண்கள் ஒரு பயங்கரமான பிராணி பின்னங்கால்களை ஊன்றி நடந்து வருவது மாதிரி நிற்கிறதாகப் பட்டது. அந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் அசைந்தால்கூட எல்லாம் சேர்ந்து ஒரே கவ்வாகக் கவ்வி அவளைப் பிடித்துக் கொள்ளும் என்று தோன்றியது. உள்ளே கட்டிலில் சீக்காகப் படுத்திருக்கிற பெரிய ஆச்சியுடன் பேசுவது ஒன்றுதான் வழி.

‘கூப்பிட்டேளா ஆச்சி?’ கோமுவைக் கூப்பிடாவிட்டாலும், ஆச்சி படுத்திருக்கிற கட்டில் பக்கம் தானாகப் போய், ஸ்விட்சைப் போட்டாள். ஒரு குதி குதித்துப் போட்ட பிறகுதான் ஸ்விட்ச் எட்டியது. எலக்ட்ரிக் லைட் வெளிச்சத்தின் கூச்சத்தில் கண்ணை இடுக்கிக் கொண்டு ‘யாரது?’ என்று ஆச்சி எழுந்திருந்து உட்கார்ந்தாள்.

வாசலில் இருந்த பயம் இப்பொழுது முழுசாகக் குறைந்துபோய், கோமு பெரிய ஆச்சியுடன் பேச ஆரம்பித்தாள். எல்லோரும் வெளியே தேர்ப் பார்க்கப் போயிருக்கிற விபரத்தைச் சொன்னாள். அப்போதே போய்விட்டார்கள் என்றும் இது வருகிற நேரமென்றும் சொன்னாள். ‘கூட்டம் ஜாஸ்தியா?’ என்று ஆச்சி கேட்டதற்கு, ‘எக்கச்சக்கம் கூட்டம். தெரு அடைச்சுக் கோடிச்சனம் போய்ட்டு வருது’ என்று சொன்னாள். ‘நீ தேர்ப் பார்க்கலையா?’ என்று ஆச்சி கேட்டதும் கோமுவுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. ‘பார்க்கணும்.’ என்றும், ‘எல்லோரும் வந்த பிறகு போகணும்’ என்றும் ‘ஜோலி இதுவரை சரியாக இருந்தது’ என்றும் சொன்னாள். ‘ஐயோ பாவம். நீயும் பச்சைப் பிள்ளைதானே. போகணும் வரணும்னு தோணத்தானே செய்யும். போயிட்டு வா, போய்ப் பார்த்துட்டுவா, அவங்க வரட்டும்’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள்.

கோமுவுக்கு ஆச்சியின் வார்த்தைகள் மேற்கொண்டும் சந்தோஷம் கொடுத்தன. ‘ஆச்சி, குடிக்கறதுக்கு வென்னிகின்னி வேணுமா?’ என்று கேட்டாள். ‘இப்போ ஒண்ணும் வேண்டாம்!’ என்று ஆச்சி சொல்லியும் கோமுவுக்குச் சமாதானம் ஆகவில்லை. ‘போய்ட்டு வா, போய்ப் பார்த்துட்டு வா’ என்று உத்தரவு மாதிரி ஆச்சி திரும்பத் திரும்பச் சொன்னது கோமுவுக்குப் புல்லரித்தது. ஆச்சி பேச்சு கொடுக்காமல் படுத்துக் கொண்டது கோமுவுக்குச் சங்கடமாக இருந்தது. கோமு மெலிந்து நீண்டிருக்கிற பெரிய ஆச்சியின் கால்களை மெதுவாக ஒத்தடம் கொடுக்கிறது மாதிரிப் பிடித்துவிட ஆரம்பித்தாள்.

வாசலில் கிருகிரு மிட்டாய்க்காரன் சத்தம் கேட்டது. இன்றைக்கும் கூட அவன் அதே நேரத்துக்குத்தான் வந்திருக்கிறான். கோமு இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்த நாளில் இருந்து, அநேகமாகத் தினசரி ஒவ்வொரு ராத்திரியும், கிட்டத்தட்டத் தோசைக்கு அரைக்கிற நேரத்தில், அவன் இப்படி மிட்டாய் விற்றுக் கொண்டு போவதைப் பார்க்கிறாள். இந்தத் தெருவில் சரியாக வெளிச்சம் கூடக் கிடையாது. இந்த வெளிச்சம் குறைவிற்குள் அவன் வெறுமனே கிருகிருவென்று கையில் உள்ளதைச் சுற்றிக் கொண்டு, இன்னொரு கயிற்றில் கையிலிருந்து தராசு மாதிரித் தொங்குகிற வட்டச் சுளவுத் தட்டில் கத்தரிக்காய் மிட்டாய், சீனிக்குச்சி, தேங்காய்ப்பூ, சம்மாளிக்கொட்டை எல்லாம் இருக்க போகிறான். நடுவில் சிமினியில்லாமல் எரிகிற பாட்டில் விளக்கு ஒன்றின் வெளிச்சம் புரண்டு புரண்டு நடுங்கி, தட்டில் மிட்டாய்க்கு மத்தியில் கொஞ்சம் சில்லறை கிடப்பதைக் காட்டும். கோமுவின் அப்பா மாதிரித்தான் இவனும் பார்ப்பதற்கு இருக்கிறான். இரண்டு பேரும் வேட்டிதான் கட்டியிருப்பார்கள். சட்டை கிடையாது. தலைப்பாகை உண்டு. அதற்குப் பதிலாக யாரும் கூப்பிடாமலே வீடு வீடாக உள்ளே வந்து, ஒவ்வொரு வளவிலும் கொஞ்சநேரம் நின்று கிருகிருவெனச் சுற்றுவான். யாராவது வாங்கினால் உண்டு.

இந்த வீட்டு வாசலில் முடுக்குப் பக்கம் இருக்கிற கல்லை ஒட்டித்தான் எப்போதும் அவன் நிற்பான். அழிக்கதவு வழியாக முகத்தைப் புதைத்துக் கோமு பார்த்தபோது, அவன் அங்கேதான் நின்றிருந்தான். யாருமே இல்லாத வாசலில் இன்னும் அந்தத் தூண்கள் கால்கள் தூக்கிப் பயம் காட்ட, தாயக்கட்டத்தில் மலை ஏறின காய் மாதிரி அவன் மிட்டாய்த்தட்டும் விளக்கு வெளிச்சமுமாக நின்றான். கோமுவுக்கு ரோஸ் ரோஸான கம்மாளிக்கொட்டை வாங்கலாமா என்றிருந்தது. அவளுக்கு நாலணா திருவிழாத்துட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ‘செலவழிச்சிராதே, அவ்வளவுத்தையும்!’ என்று எச்சரிக்கை பண்ணியே கொடுத்திருக்கிறார்கள். ஐந்து பைசாவுக்கு வாங்கினால் கூட ஐந்து கொட்டை கொடுப்பான். ‘வாங்கிச் சாப்பிடலாமா?’ கோமுவுக்கு என்ன செய்வது என்று ஓடவில்லை. உள்ளே தொட்டிக்கட்டு மாடக்குழிக்குப் போய், அந்த முழு நாலணாவை மனசே இல்லாமல் எடுத்துக் கொண்டு வந்தபோது அவனை வாசலில் காணோம். முடுக்கு வழியே சத்தம் மாத்திரம் கிருகிருவென்று தெருவைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தது. போனதுகூட நல்லதுக்குத்தான். இல்லாவிட்டால் எல்லாம் செலவழிந்திருக்கும். சில்லரை மாற்றிவிட்டால் கையில் துட்டுத் தங்காது.

எல்லோரும் ரொம்பச் சந்தோஷமாக வந்தார்கள். கூட்டத்துக்குள் ஒருத்தருக்கொருத்தர் பேசுவதற்காகச் சத்தமாகப் பேச ஆரம்பித்து, அப்படியே வீட்டுக்கு வந்த பிறகும் பேசிக்கொண்டும் வந்தார்கள். தனித்தனியாய்ப் போன எதிர்த்த வீட்டுக்காரர்கள்கூட இருட்டுக்குள் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று சேர்ந்து வந்தார்கள். எல்லோர் வீட்டிலும் ஒரே சமயத்தில் லைட் போட்டுக் கொண்டதால் வாசலே வெளிச்சமாகி விட்டது. பலூன் மொரமொரப்பு, ஊதல் சத்தம் எல்லாம் கோமுவைத் தாண்டிப் போயின.

தேர் ஒரே நாளில் இந்த வருசம் நிலைக்கு (நிலையத்துக்கு) வந்துவிட்டதாம். இப்படித் தேர் ஒரே நாளில் ஓடி நிலைக்கு நின்று ஒன்பது வருஷம் ஆயிற்றாம். கூட்டமானால் சொல்லி முடியாதாம். . நகரக்கூட ‘இங்க அங்க’ இடமில்லையாம். லாலா-சத்திரமுக்கில் இருந்து ராயல் டாக்கீஸ் முக்கு வரை தேர் பச்சைப்பிள்ளை மாதிரி குடுகுடுவென்று ஒரே ஓட்டமாக ஓடியதாம். தெப்பக் குளத்தெரு அம்பி மாமா வீட்டுத்தட்டோட்டியில் நின்று பார்த்தார்களாம். தேர் அசைந்து வர்ர மாதிரி என்கிறது சரியாகத் தான் இருக்கிறதாம். அவ்வளவு அழகாம் அது.

கோமு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே நின்றாள்.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன் தேர் பார்த்தவர்களில் ஒருத்தருக்கு ஒருத்தரே மாறி மாறி இவ்வளவையும் பேசிவிட்டு நடை ஏறினார்கள். நடை ஏறும் சமயம் கோமு சிரித்துக் கொண்டே கைப்பிள்ளையை வாங்கின பொழுது –

’என்னடி பண்ணிக்கிட்டு இருந்தே இவ்வளவு நேரம், ஆற்றுத் தண்ணீர் பிடிச்சு வச்சியா இல்லையா?’ என்று தெய்வு ஆச்சி கேட்டாள்.

‘பிடிச்சாச்சு’ என்று கோமு சொன்னதைக் கேட்காமலேயே எல்லோரும் உள்ளே போனார்கள். கோமு மறுபடியும் வாசலிலேயே உட்கார்ந்தாள்.

‘துவையலுக்குப் பொரிகடலை வேணும், தேங்காய் கூடக்  காணாது. பிள்ளையைக் கொடுத்துட்டுக் கடைக்குப் போயிட்டு வா’- உள்ளேயிருந்து சத்தம் வந்தது.

O O O

கோமு பொரிகடலையும் தேங்காயும் வாங்கின கையுடன் தேரையே பார்த்து கொண்டு நின்றாள். தேர் நிலைக்கு வந்து நின்றிருந்தது. ரோட்டில் கார், பஸ் ஒன்றுமில்லாமல் அகலமாக இருந்தது. தேரின் வடம் ஒவ்வொன்றும் நீளம் நீளமாக அம்மன் சன்னதி வரைக்கும் பாம்பு மாதிரி வளைந்து வளைந்து கிடந்தது. தேர் சகல அலங்காரங்களுடனும் தோரணங்களுடனும் வாழைமரத்துடனும் நிலவுவெளிச்சத்தில் மௌனமாகப் பேசாமல் நின்றது. கோமுவோடு கோபித்துக் கொண்டு சண்டை போட்டது போல் தோன்றியது. தேருக்குக் கீழே காஸ்லைட் வைத்துக்கொண்டு, இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் வடத்துக்குமேல் உட்கார்ந்திருந்தார்கள். வடத்துக்கு மேல் இப்படி குந்த வைத்து உட்கார்கிறதே பாவம். அதோடு அவர்கள் பீடியும் குடித்துக் கொண்டிருந்தார்கள். கோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தேர்ப்பக்கத்தில் போய்ப் பார்க்கவும் பயமாக இருந்தது. தேர்ப்பக்கத்தில் போக வேண்டும். ஒரு மாதிரி எண்ணெய் மக்கு அடிக்கும் தேரில். அது நன்றாக இருக்கும். போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டால் என்ன பண்ண?

கோமு மறுபடியும் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தள்ளிப்போய்ப் பார்த்தாள். புதிதாக கலர் அடித்த நாலு குதிரையும் பாய்கிற மாதிரிக் காலைத் தூக்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு வெள்ளைக்குதிரைதான் பிடித்திருந்தது. அந்த வெள்ளைக் குதிரையில் ஏறிக் கொண்டால் மானம்வரை பறந்து போகலாம். ஏரோப்ளேன் மாதிரி போகலாம். கோமு சிரித்துக்கொண்டே தள்ளித் தள்ளிப் பின்னால் போய்க்கொண்டிருந்தாள். தென்னை ஓலையைத் தரையில் தடவித் துழாவுகிற குட்டியானை தும்பிக்கை மாதிரி வடம் கிடக்கிற இடத்துக்கு வந்ததும் கோமுவுக்குத் தேர் இழுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. தோளில் பையை நன்றாகக் கக்கத்துக்குள் கொருத்துப் போட்டுக்கொண்டு, குனிந்து சவுரி சவுரியாக நுனியில் பிய்த்திருந்த வடத்தைத் தூக்கிப் பார்த்தாள். முடியவில்லை. தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு கோமு நிமிர்ந்து பார்த்தாள்.

தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Gilgamesh's lament by merriya on DeviantArt

எங்கிடுவின் மரணம் கில் காமேஷுக்கு அளவில்லா துக்கத்தை மட்டுமல்ல மரணபயத்தையும் ஏற்படுத்தியது.

“ என் நண்பன் எங்கிடுவிற்காக அழுவதற்கு நான் இருக்கிறேன். எனக்காக யார் இருக்கிறார்கள்? நானும் ஒரு நாள் இப்படி மாண்டு போவேனே! அதை நினைக்கும் போதே மனத்தின் அடித்தளத்தில் ஒருவித பயம் உண்டாகிறதே! இந்த சாவிலிருந்து யாரும் தப்பவே முடியாதா?.” என்ற எண்ணத்துடனே அவன் காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்தான்.

‘என்  மரண பயத்தைப் போக்கிக்கொள்ள ஒரே வழி நான் சாவையும் வெற்றி கொள்ள வேண்டும். எல்லோரையும் வென்ற நான் சாவையும் வெல்வேன். இன்று முதல் என் குறிக்கோள் அமரத்துவம்தான்’  என்று உறுதி பூண்டான்.. ஆனால் அமரத்துவம் என்பதை எந்த மனிதனாலும் பெறமுடியாது என்று  அவன் சந்தித்த அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறினார்கள்.  இதனால் அவன் உறுதி மேலும் அதிகரித்ததே தவிரக் கொஞ்சமும் குறையவில்லை

அப்பொழுது அவனுக்கு உத்னபிஷ்டிம் என்ற ஒரு மனிதன் சாகாமல் என்றும் அமரனாக இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. உலகில் பெரும் பிரளயம் வந்து அனைவரும் அழிந்துபோனபோது அவன் ஒருவனை மட்டும் தேவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அழியாமல் காப்பாற்றினார்களாம். சாவை வென்ற அவனை நித்யமனதேவன் என்று எல்லோரும் அழைத்தார்கள் சூரியதேவனின் நந்தவனத்திற்கு  அருகே உள்ள தேசத்தில் அவன் இருப்பதாகவும்  அறிஞர்கள் கில்காமேஷுக்குக்  கூறினார்கள்.

உத்னபிஷ்டிமைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக நெடிய நீண்ட பயணத்திற்குத் தயாரானான். எண்ணத்தைச் செயலாக்க அவனைவிடச்  சிறந்தவர் யாருமில்லை. காடு மலை வனாந்திரங்களையெல்லாம் கடந்து போனான். வழியில் சிங்கங்கள் அவனைத்  தாக்க வந்தன. அவன் தயங்காமல் தன் இடுப்பிலிருந்த கோடாரியைக்  கையில் எடுத்துக் கொண்டு அவற்றின் மீது பாய்ந்து போரிட்டான்.  பல சிங்கங்கள் மடிந்தன. மற்றவையெல்லாம் அவனுக்குப் பயந்து ஓடின.

Gilgamesh and the Scorpions | Ancient mesopotamia, Epic of gilgamesh, Ancient sumerian

இலக்கை நோக்கி அவன் பயணம் தொடர்ந்தது பல நாள் பயணத்திற்குப் பிறகு மாஷி என்ற மலைத்தொடருக்கு வந்தான். அதன் உயரமான இரு சிகரங்கள் வானத்தைப் பிளந்துகொண்டு மேலே சென்றிருக்கின்றன. அதன் வேர்கள் பாதாளம் வரை பாய்ந்திருக்கின்றன. சூரியனின் வெளிச்சத்தையே தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சிகரங்கள் அவை. அதன் வாசலில் இலட்சக்கணக்கான  கொடுந்தேள்கள் காவல் இருந்தன. அவை ராட்சசத்தன்மையும் மனிதத் தன்மையும்  கொண்ட பயங்கரமான பிராணிகள். அவற்றின் தலைகளைச் சுற்றி ஓடும் காந்த ஒளி சூரியனின் கிரணங்களைப்  பிரதிபலித்து எதிரே நிற்பவரைச் செய்யலாற்றவராக்கிவிடும் தன்மை உடையது.  அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.

கில்காமேஷ் அந்தத் தேள் கூட்டத்தின் முன்னே நின்றான். அவற்றின் தகதகப்புள்ள காந்த வெளிச்சம் அவன் கண்களைக் கூசச் செய்தது.அவன் தன் கண்களை ஒரு வினாடி மூடிக்கொண்டான்.ஒரே விநாடிதான். பின் கண்களை அகலாத திறந்துகொண்டு தன் கோடலியை எடுத்துக் கொண்டு அவற்றைத் தாக்க முன்னேறினான்.    

தங்கள் கூட்டத்திற்கு எதிரே ஒருவன் தைரியமாக வருவதை அந்தத் தேள் கூட்டத்தின் தலைவனும் தலைவியும் பார்த்துத் திகைத்துப்போயினர். இவன் நிச்சயம் மனிதனாக இருக்க முடியாது. என்று உணர்ந்தனர். உண்மையில் மூன்றில் இரண்டு பங்கு தேவன் ஒரு பங்குதான் மனிதன், அதுமட்டுமல்ல அவன் கடவுளின் குழந்தை  என்ற உண்மையையும்  அவை அறிந்துகொண்டன.

அதனால் தேள்களின் தலைவன் அவனைத் தாக்காமல் அவனிடம் அங்கு வந்த காரணத்தைக் கேட்டுத் தன் விசாரணையைத் துவக்கியது.

“ நான் சாவை வெல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் பணியில் என்னை ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். அதுதான் என வாழ்வில் இலட்சியம். அதற்குக் காரணம் என நண்பன் எங்கிடு. அவன் மரணத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை எப்படியாவது உயிர்ப்பிக்கவேண்டும் என்று பல நாட்கள் அவன் உடலைப் பத்திரப்படுத்தி  வைத்திருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. என் கண்ணீர் அவனை உயிர்ப்பிக்கவில்லை. அவன் போன பிறகு என் உள்ளத்தில் அமைதி இல்லை.அதனால் சாவுத் தேவனை எதிர்க்கப் புறப்பட்டுவிட்டேன். சாவை வென்ற உத்னபிஷ்டிம் என்ற மாமனிதன் இந்த சிகரங்களுக்கு அப்பால் இருப்பதாக அறிந்தேன். அதனால் அவனைச் சந்திக்கப் போகின்றேன். என்னைத் தடுக்காதீர்கள் “ என்று பதில் கூறினான் கில் காமேஷ்.

அந்தத் தேள் தலைவன், “ தேவ குமாரா! நீ செய்வது மிகவும் அபூர்வமான காரியம். மனிதனாகப் பிறந்த எவனும் சாவை வெல்லும் பணியில் ஈடுபட்டதில்லை. இப்படி ஒரு கடினமான பயணத்தையும் மேற்கொண்டதில்லை.  இதுவரை நீ  கடந்து வந்த பாதையே  மிகவும் கடுமையானது. இனி நீ செல்ல விரும்பும் பாதை இது வரை யாரும் கடக்காதது. இந்த சிகரங்கள் சூரியனை மறைத்துக் கொள்வதால் இங்கு எப்போதும் இருள்தான் கப்பியிருக்கும்.அந்த இருளில் பன்னிரண்டு காதம் செல்லவேண்டும். பாதையும் சரியாகத் தெரியாது. நீ எப்படி இதைக் கடந்து செல்லப் போகிறாய்? “ என்று வினாவினான்.

“நான் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. கஷ்டமோ துன்பமோ எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நான் தொடர்ந்து செல்வேன். மலைகளைத் தாண்ட எந்த வழியில் செல்லவேண்டுமோ அந்தக் கதவைத் திறந்துவிடுங்கள்” என்று கில்காமேஷ் பணிவன்புடன் கூறினான்.

அவன் உறுதியைக் கண்டு வியந்து பாராட்டிய  தேள் தலைவன் அவனுக்கு ஆசிகள் வழங்கி மாஷி மலைகளைத் தாண்டிப்போகும் கதவையும் திறந்துவிட்டான்.    

கில்காமேஷ் அந்த அந்தகார இருளில் தைரியமாகத் தன் பயணத்தைத் துவக்கினான். கும்மிருட்டாக இருந்தது. காலை  எங்கே எடுத்து வைப்பது என்பதே புரியவில்லை. இருந்தாலும் முன்னேறிக் கொண்டே சென்றான். ஒவ்வொரு காதமாகக் கடக்கக் கடக்கப் பாதை மேலும் மேலும் கடினமாக மாறத்  தொடங்கிற்று. எட்டாவது காதத்தில் அவனால் தொடர்ந்து முன்னே செல்ல முடியவில்லை. கோபம்  கொண்ட கில்காமேஷ் சிங்கம் போல உரக்கக் கர்ஜித்தான். அப்பொழுது மெல்லிய காற்று அவன் உடலைத் தழுவி உடல் வழிகளைப் போக்கியது. இருந்த குகையின் முடிவு தென் படுவதுபோல தூரத்தில் இலேசாக வெளிச்சம் தெரிந்தது. பதினொன்றாம் காதம் கடந்தபோது சூரியனின் உதய வெளிச்சம் கண்ணில் பட்டது. பன்னிரண்டாவது காதம் தாண்டியபோது சூரியனின் ஒளிக் கிரணங்கள் கண்களைக் கூசச் செய்வதைப்  பார்த்தான்.

அங்கே சூரியனின் நந்தவனம் தெரிந்தது. மலர்க்கூட்டம் தெரிந்தது. தூரத்தே கடல் தெரிந்தது.  அதில் முத்துக்கள் பளிச்சிட்டன. அவற்றிற்கு நடுவே சூரிய கடவுள் காமேஷ் அமர்ந்திருந்தார். அவர் தனக்கு வழி காட்டுவார் என்று எதிர்பார்த்து அவரை வணங்கினான். ஆனால் சூரியதேவன், ‘கில் காமேஷ்! எந்த மனிதனும் வர இயலாத இடத்துக்கு நீ வந்திருக்கிறாய். ஆனால் நீ விரும்புகிற சாவில்லாத வாழ்வை உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால் நீ திரும்ப உன் ஊருக்கே போய்விடு “ என்று அறிவுரை வழங்கினார்.

தான் போற்றி வணங்கும் காமேஷ் கடவுளே இப்படிக் கூறுவதைக் கேட்டும் கில் காமேஷ் மனதைத் தளரவிடவில்லை.” சூரியதேவனே ! எத்தனையோ கடினமான பாதைகளைக் கடந்து வந்தபிறகு நான் எடுத்த காரியத்தை முடிக்காமல் திரும்புவதா? என்  தலை மண்ணில் புரண்டு செத்து விடுவதா நான்? உன் ஒளி ஒன்று இருந்தால் போதும். நான் என பயணத்தைத் தொடர்வேன். நான் செத்தே மடிந்தாலும் உன் ஒளியைக் கண்டுகொண்டே சாவேன்! அந்த வாரத்தை மட்டும் எனக்குத் தா!” என்று வேண்டிக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

Babylonian Mythology Enkidu being tempted by Ishtar. From the Epic of Gilgamesh - Enkidu is being tempted in order to fight Gilgamesh. After a painting by Wallcousins in ' Myths of Babylonia '

அப்போது சூரிய நந்தவனத்தில் ஒரு கோடியில் சிதுரி என்னும் திராட்சை மதுவின் அரசி அவள் உடம்பு யாருக்கும் தெரியாதவாறு சால்வை போர்த்திக்கொண்டிருந்தாள். மிருகங்களின் தோல்களையே ஆடையாக உடுத்தி மிகுந்த களைப்புடன் தூரத்தில் வரும். கில்காமேஷைப் பார்த்தாள்.   

“யார் இவன்? இங்கு ஏன் வருகிறான்? இவனைப் பார்த்தால் துஷ்டனாகத் தெரிகிறான். எதற்காக இவன் இங்கே வருகிறான்? இவனை  இந்தப்பாதையில் அனுமதிக்கக் கூடாது” என்று யோசித்து அவன் வரும் வழியை அடைக்கும்படி அங்கிருந்த கதவைத் தாளிட்டு குறுக்குப் பூட்டையும் போட்டு ஒன்பது தாழ்ப்பாள்களையும் போட்டாள்.  கதவுக்கு வெளியே நின்று எதிரே வரும் கில்காமெஷை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

ஏன் இந்த மதுவரசி என்  வழியை அடைக்கிறாள் என்பதைப் புரியாத கில்காமேஷ்  மனம் குழம்பி நின்றான்.

(தொடரும்)   

 .  

   . 


Rating: 1 out of 5.

சரித்திரம் பேசுகிறது – யாரோ

இராஜாதித்தன் தொடர்ச்சி

குவிகம் | தமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்

இராஜாதித்தன் முன்கதை:

சோழன் பராந்தகன், பாண்டியப் போர்க்களம் கண்டு வெற்றியுடன் இருக்கையில், வடதிசை அரசுகள் எதிரிகளாகிறது. பட்டத்து இளவரசன் இராஜாதித்தன் அந்த பகைகளைத் தடுக்கத் திட்டமிடுகிறான். பகை மேகங்கள் கருக்கத் தொடங்குகிறது. இனி நாம் தொடர்வோம்.

தஞ்சாவூர் அரண்மனையில் ஒரு காட்சி:
இளவரசர்கள் இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன் மூவரும் அரசியல் பேசக் கூடினர். முதலில் குடும்பப் பேச்சு தான் நடந்தது.

இராஜாதித்தன் – கண்டராதித்தனின் மனைவியின் உடல் நிலை பற்றி வினாவினான். கண்டராதித்தன் “சிவன் சோதனை! அவள் வாழும் நாட்கள் சில நாட்களே என்று தோன்றுகிறது” – என்றான்.

இராஜாதித்தன் “கண்டராதித்தா! அந்தப்புரத்தில் அந்த இளம் பெண் – அது தான் அந்த மழவன் மகள் – உன் மனைவியைக் கண் போலக் காத்து வருகிறாளே. உன் மனைவியின் நலத்துக்காகத் தினமும் சிவபூசை செய்து வருகிறாளே” என்றான்.

“ஆமாம் அண்ணா! அவளது சிவபக்தியும், அன்பும் என் மனதுக்குப் பெரும் நிம்மதி தருகிறது” – என்றான் கண்டராதித்தன்.

இராஜாதித்தன் “கண்டராதித்தா! அந்த மழவன் மகளை நீ திருமணம் செய்து கொள். உங்கள் இருவருக்கும் ஒருமித்த சிவஞானம் இருப்பது நல்ல பொருத்தம்” என்றான்.

இராஜாதித்தன் சொல்வதின் உண்மையை உணர்ந்த கண்டராதித்தன் மௌனம் சாதித்தான்.

இராஜாதித்தன் அரிஞ்சயனைப் பார்த்து “அரிஞ்சயா! கல்யாணி எப்படியிருக்கிறாள்? உனது குட்டிப் பராந்தகன் எப்படியிருக்கிறான்? அவனது அழகைப் பார்த்து, இனி நான் அவனை சுந்தரன் என்று தான் கூப்பிடப்போகிறேன்” -என்றான்.

அரிஞ்சயன் “அண்ணா .. அனைவரும் நலம். தம்பிகள் நாங்கள் மணமுடித்து வாழும் போது, நீங்கள் இன்னும் மணமுடிக்காதது ஏன் அண்ணா? விரைவில் சோழச்சக்கரவர்த்தி ஆகவுள்ள தாங்கள் சோழ வம்சவிருத்திக்காக விரைவில் மணமுடிக்க வேண்டும்” – என்றான்.

இராஜாதித்தன் சிரித்தான்.
“நமது முன்னோர்கள் கனவு கண்டனர். விஜயாலயன், ஆதித்தன், பராந்தகன் என்று ஒவ்வொருவரும் வீரம் ஒன்றை மட்டும் பயிரிட்டு, சோழ நாட்டை சாம்ராஜ்யமாக்கக் கனவு மட்டுமல்ல – செய்தும் காட்டினர். ஆனால், அந்தப்பணி முழுதாக  நிறைவேறவில்லை. பாண்டியன் தொங்கிக்கொண்டிருக்கிறான். கங்க நாடு பூதகனின் வசமாக வாய்ப்புகள் உள்ளன. அவன் நமது எதிரியாகவும் உருவாகக் கூடும். இராட்டிரகூடம் நமக்கு வைரியாகிவிட்டது. இந்தப்பகைகளை ஒருங்கே அழித்த பின் தான் நான் திருமணம் செய்வேன்.”- என்றான்.

குடும்ப சம்பாஷணை அரசியல் சம்பாஷணையாகத் தொடர்ந்தது..

“அண்ணா! அண்ணா! போரின்றி நாம் காரியத்தில் வெற்றி காண முடியாதா?” என்று தம்பி கண்டராதித்தன் கேட்டான். இராஜாதித்தன் சிரித்தான். அவன் குரலில் மிகுந்த ஏளனம் கலந்திருந்தது.

“ஆகா! பேஷாக! மான்ய கேட நகரத்தில், கிழவன் அமோகவர்ஷன் ஆர்ப்பரிக்கிறான்! அவனிடம் தூது அனுப்புவோம். ஏன், நீயும் நானும் செல்வோம்! அந்தக் கிழவன் முன்பு மண்டியிட்டு சோழச்சக்கரவர்த்தியின் மருமகப்பிள்ளைக்கு மீண்டும் சிங்காதனத்தைக் கொடுங்கள். எங்கள் ஆருயிர் சகோதரி வீரமாதேவிக்கு அரசி என்னும் பட்டப்பெயரை மீட்டுக் கொடுங்கள் என்று வேண்டுவோம்” என்று மிகவும் அமைதியான குரலில் இராஜாதித்தன் கூறினான்.

கண்டராதித்தன் மௌனம் சாதித்தான்.
இராஜாதித்தன் தொடர்ந்தான். “கண்டராதித்தா! நம் தந்தையின் போக்கு தான் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. ஈழ நாட்டுப் படைத்தலைவன் சக்கசேனாபதியை ஓடோட விரட்டிய பராந்தக சோழமன்னரா இப்படி இராஷ்டிரகூடர்களின் அவமதிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? இராஷ்ட்டிரகூட படையெடுப்பைப் பற்றிப் பேசியவுடன் அவர் மௌனம் சாதிக்கிறார்”.

இளவரசர்கள் மனம் அன்றைய அரசியலின் வெப்பத்தால் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

மறுநாள், அரிஞ்சயன் வீரம்மாவிடம் சென்றான். “அக்கா, இராட்டிரகூட ராணியாக இருந்த நீங்களும், மாமா கோவிந்தரும் இவ்வாறு நாடு விட்டு வரவேண்டிய காரணம் நாம் அனைவரும் அறிந்தது தான். உங்கள் எண்ணங்கள் என்ன” – என்று கேட்டான்..

வீரமாதேவியின் குரல் கம்மியிருந்தது.
“அரிஞ்சயா, என் சோகக்கதையைக் கேள். வேங்கி நாட்டில் யுத்தமல்லனும், வீமனும் மனக்கசப்புக் கொண்டனர். இவரும் சும்மாயிருக்கக் கூடாதா? யுத்தமல்லனுக்கு உதவி செய்வதற்குத் தன் படைகளை அனுப்பினார். தோல்விதான் ஏற்பட்டது. தோல்வி ஏற்படாமல் என்ன செய்யும்? ‘நம் வீரர்களிலேயே நம்மைப் பிடிக்காதவர் பலர் இருக்கிறார்கள்’-என்பதை இவர் அறிந்து கொள்ளவில்லையே! யுத்த தந்திரம் தெரியவில்லையே! இந்தத் தோல்வியை அறிந்த இவருடைய சிறிய தகப்பன் மகன் கிருஷ்ணதேவன், நாட்டில் தனக்கு வேண்டியவர்களை ரகசியமாகச் சேர்த்து வந்தான். பெண் உகுக்கும் கண்ணீர் எப்போதும் தீயாய் மாறி அழித்துவிடும். எத்தனை கன்னிகள் கண்ணீர் விட்டனரோ! அவர்களின் சாபம் எங்களை நாட்டை விட்டு ஓட்டியது. இரகசியமாகச் சதித்திட்டம் வகுத்த கிருஷ்ணதேவன், ஒரு நாள் போர்க்கொடி உயர்த்தினான். எங்கும் கலகம். தோல்வி நிச்சயம் என்பது தெளிவானது. நான்தான் இவரை வற்புறுத்தினேன். ‘இனி ஒருகணம் கூடத் தாமதிக்கக் கூடாது’ என்று. இரவோடு இரவாகத் தப்பித்து ஓடி வந்தோம். கிருஷ்ணதேவன் முதியவரான தன் தந்தை அமோகவர்ஷனுக்கு முடிசூட்டி அவர் சொற்படி நாட்டை ஆள்கிறான்”

அரிஞ்சயன் : “அக்கா! அண்ணன் இராஜாதித்தன் வீரம் தாங்கள் அறியாததல்ல. உங்கள் வாழ்வுக்காக அவர் செய்த சபதம் வீணாகாது. இன்று தந்தை அவர் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார். விரைவில் யுத்தம் வரும். உங்கள் வாழ்வு மலரும்” என்றான்.

940: பராந்தகனுடைய துன்பங்கள் துவக்கமானது. பூதுகன் கங்க குலத்தில் பிறந்தவன். கங்க மன்னன் பிருதிவிபதியிடம் பகை கொண்டிருந்தான். கங்க நாட்டை அடையத் திட்டமிட்டுக் கொண்டிருந்தான். இராட்டிரகூட மூன்றாம் கிருஷ்ணனின் தங்கை ரேவகாவை மணந்திருந்தான். அதனால் இராட்டிரகூட உதவி அவனுக்கு இருந்தது. கங்கநாட்டின் சில பகுதிகளை ஆளத்தொடங்கியிருந்தான்.

அன்று மாலை – செய்திகள் சுடச்சுட வந்தன.
பல மாவீரர்கள், மன்னர்கள் – ஒரே நாளில் மரணம்!

பராந்தகனின் உற்ற நண்பன் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவீபதி. பிருதிவிபதியின் மகன் மாவீரன் விக்கியண்ணன் பல போர்களில் சாகசம் செய்து கங்க நாட்டுக்கு வெற்றி சேர்த்தவன். விக்கியண்ணன் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்தான். அவன் அன்று இறந்துவிட்டான். வந்த மரணம், அவன் தந்தை பிருதிவிபதியையும் அன்றே தின்றது. இப்படி இரு தலைவர்களும் ஒரே நேரம் இறந்தது, பூதகனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. இந்தச் சமயத்துக்காகப் பல வருடங்கள் காத்திருந்த பூதகன் உடனே அரியணையைக் கைப்பற்றி கங்க நாட்டு மன்னனானான். கண்ணிமைக்கும் நேரத்தில் இவை அனைத்தும் நிகழ்ந்து விட்டது.

சற்று வடக்கே, இராட்டிரகூட நாட்டு மன்னன் அமோகவர்ஷனும் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தான். அவனும் அன்றே மரணம் அடைந்தான்.

எமன் அன்று ரொம்பவும் சுறுசுறுப்பாகப் பணி புரிந்திருக்கிறான்  போலும். பல அரச உயிர்களைக் கவர்ந்து சென்றான். அமோகவர்ஷனின் மகன் மூன்றாம் கிருஷ்ணதேவன் மன்னனானான். ஒரு நாளில் இத்தனை மாற்றங்கள் சோழ நாட்டுக்கு வடக்கே நடந்து முடிந்தது.

ஆக, ஒரே நாளில் சோழநாட்டுக்கு எதிரான கூட்டணி – பூதகன், மூன்றாம் கிருஷ்ணன் – இவ்விருவருடனும், வாணர், வைதும்பர் என இவர்களது கூட்டணி வலுப்பெற்றது.

அன்று மாலையே பராந்தகன் இளவரசர்களை அவசரக்கால அடிப்படையில்  அழைத்தான்.
பராந்தகன் சொன்னான்: “இராஜாதித்தா! ஒரே நாளில் நமது வட நாட்டு நட்பு அரசுகள் அனைத்தும் நமக்குப் பகைவராக்கிவிட்டன. அந்தக் கூட்டணி வலுவாகியுள்ளது. எனக்கு இன்னும் போர் வெறி தணியவில்லை. எத்தனை ஆசையுடன் நான் மதுரைக்குச் சென்றேன்! அரியணையில் அமர்ந்து பாண்டிய மகுடத்தைச் சூடிக்கொள்ள விரும்பினேன். அது கிடைக்காமல் போன ஏக்கம் என்னை இன்னும் வாட்டுகிறது. வீரமாதேவி இன்று கலங்கிய கண்களுடன் இங்கு வந்திருக்கிறாள். அவள் துயரத்தை நான் இன்னும் தீர்க்காமல் இருக்கிறேனாம். என் மருமகனை அடித்து விரட்டியவனை இன்னும் சிங்காதனத்திலிருந்து இறக்காமல் இருக்கிறேனாம். இப்படிப் பலர் கூறுவதைக் கேட்கிறேன். வெகு தூரத்திலுள்ள மான்யகேடம் நோக்கிச் செல்வது முறைதானா? போர்த்தந்திரப்படி நான் கேட்கவில்லை. பல காத தூரம் படைகளை நடத்திச் செல்ல வேண்டுமே, அது சரிதானா?”-என்றான்.

பதில் சொல்ல வந்த இராஜாதித்தனைக் கையசைப்பில் நிறுத்திய பராந்தகன் மேலும் சொன்னான். “விக்கியண்ணன் வேறு இறந்துவிட்டான். அவன் தந்தை பிருதீவிபதியும் மகனைத் தொடர்ந்து இறந்தான். பல்லாண்டுகளுக்கு முன்பு வாணர் நாட்டைக் கங்க நாட்டரசன் பிருதிவீபதிக்கு நாம் பரிசு கொடுப்பதாக அறிவித்தோம். இப்போது கங்க நாட்டில் பூதுகன் ஆட்சி செலுத்துவதால் கொடுத்த பரிசை நாம் திரும்பப் பெறுவதோ, பரிசைப் பறிப்பதோ தகாது. இராஜாதித்தா! நேரம் இன்று வந்துவிட்டது. எதிரிகள் வலுவாகிக்கொண்டு வருகின்றனர். படைகளைத் திரட்டு“ என்று உத்தரவிட்டான்.

தந்தையின் அந்தக் கட்டளையைத் தானே அவன் நெடுநாட்களாக எதிர் பார்த்திருந்தான்! அவன் அகமலர்ச்சியுடனும் தினவெடுத்த தோள்களுடனும், துடிக்கும் கரங்களுடனும், தந்தையின் எதிரே போய் நின்றான்.

பனித்துளி...: சோழர்கள் வரலாறு அத்தியாயம் 2 - இடைக்காலச் சோழர்கள்

மாவீரன் இராஜாதித்தன் போர் ஆணை கேட்டதும், இரை பார்த்த சிங்கம் போல மகிழ்ந்தான்.

சரித்திரத்தில் அவனுடைய பதிப்பை விட, அவனுடைய  பாதிப்பு தான் அதிகம். அது என்ன? கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமே!

நகுலனின் இவர்கள் – அழகியசிங்கர்

 

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள் | nagulan 100 - hindutamil.in

‘இவர்கள்’ என்ற நகுலனின் புத்தகம். 142 பக்கங்கள் கொண்ட க்ரவுன் அளவு புத்தகம்.  நேரத்தையெல்லாம் பார்க்கவில்லை.  படித்துக்கொண்டிருந்தேன்.  முதல் 1 மணி நேரத்தில் 40 பக்கங்கள் படித்தேன்.  பிறகு மூடி வைத்துவிட்டேன்.  12 மணிக்குச் சாப்பிட்டபிறகு நன்றாகத் தூங்கிவிட்டேன்.  3 மணிக்கு எழுந்து ஒரு இடத்திற்குப் போனேன்.  திரும்பி வரும்போது 6.30 மணி ஆகிவிட்டது.  திரும்பவும் நகுலனின் ‘இவர்கள்’ எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

இந்த நாவல் முழுவதும் எழுத்தாளர்களைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் பேசுகிறார் நவீனன் என்ற பெயரில்.  ஒருவரை ஒருவர் சந்திக்கிற பேசுகிற நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.  நாவலின் முடிவில் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ராமநாதன் என்ற பெயரில் க.நா.சுவை ஒரு பாத்திரமாக மாற்றிக்கொண்டு எழுதுகிறார்.  இந்த நாவலில் கேசவ மாதவன் என்ற பெயரில் எந்த எழுத்தாளர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.    நகுலன் இப்படித்தான் எல்லோர் பற்றியும் சொல்லிக்கொண்டு போகிறார்.

இன்னொரு கதாபாத்திரம் நல்ல சிவம் பிள்ளை.  இது மௌனியாக இருக்குமென்று நினைக்கிறேன்.  இப்படி தான் சந்தித்த எழுத்தாளர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றி விடுகிறார்.

‘ராமநாதனைப் பார்த்தபின் பரிசுத்த ஆவியாக இருந்த நான் நிழலாக மாறினேன்  என்றால் நல்லசிவன் பிள்ளையைப் பார்த்த பின் நிழலாக இருந்தவன் பேயாக மாறினேன் என்று சொல்ல வேண்டும்,’ என்று எழுதியிருக்கிறார்.

நகுலனின் புத்தகங்களை ஒரு முறை இல்லாமல் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அலுப்பாகவே இருக்காது.  இவர் புத்தகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டு விட மாட்டார்கள்.

க.நா.சுவைபற்றி அவர் சொல்கிற விஷயங்கள் வேடிக்கையாகக் கூட இருக்கும்.

இப்படி எழுதுகிறார் : ‘சில சமயங்களில் எனக்குத் தோன்றாமல் இருந்ததில்லை.  இவர் ஆண்-பெண் வேறுபாடையே ஒப்புக் கொள்கிறாரோ என்று, அவருக்கு நோட்புக் எழுதும் பழக்கம் உண்டு.  தினம் எதாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்பார்.’

இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள். ‘நான் யார்?’ என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.

நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் ‘நேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை,’என்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்.

பளிச்சென்ற வரிகள் பக்கம் பக்கமாகத் தொடர்கிறது.

‘அந்தப் பெரிய கோவிலில் என்னை முதலில் கவர்ந்தது கட்டற்ற ஒரு வெட்டவெளிதான்’

ராமநாதன் என்ன சொன்னார்?  அனுபவத்தைத் தேடிக்கொண்டு நீ எங்கும் போக வேண்டாம்.  அது உன் முன் இரைந்து கிடக்கிறது,

பெக்கட்டைப் படிக்கிறபோது எழுதுவதற்கு ஒன்றுமில்லை.  ஆனாலும் எழுது, எழுது என்று ஏன் இந்த நச்சரிப்பு.  அவனும் எழுதவில்லையா? பக்கம் பக்கமாக, ‘ஒன்றும் இல்லாததை’ பற்றி.

மரம் நிற்கிறது என்ற தலைப்பைப் பிடித்துக்கொண்டு அப்பாவைப் பற்றி பலவற்றைச் சொல்கிறார்.

இங்கே முக்கியமாக ஒரு  விஷயத்தைச் சொல்கிறார்: தன்னைப்போல்தான் அம்மாவும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.  அவனுக்குத் தோன்றியது – “சுயம் – நசித்துக்கொள்வதின்” மூலம் தான் தன் சுயத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று நினைத்துக்கொண்டதாகத் தோன்றியது.  இதற்குச் சூழ்நிலையென்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  இதே அடிப்படையில் தான் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவனுக்கு இந்தச் ‘சுயம் – நசித்துக்’ கொள்வது என்பது ஒரு மகத்துவமான தத்துவமாகப் பட்டது.

நகுலன் உண்மையிலே எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.

 

ரெளத்திரம் பழகு ? – கவிஞர் இரஜகை நிலவன்

Tamil Film 'Mannan' Presses the Limits of Using Violence on a Female Nemesis | PopMatters

மருத்துவ மனையில் தேவி கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. தூக்கமுமில்லாமல் விழிப்புமில்லாமல் ஒரு நிர்மலமான புன்னகையில் படுத்திருந்தாள்.

தீபக் மருத்துவ மனைக்குள் வந்த போது, “டாக்டர். உங்களைப்பார்க்க வேண்டுமெனக் கூப்பிடுகிறார்” என்றாள் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த வெண்ணாடை பெண்மணி.

“வாருங்கள் தீபக். எப்படியிருக்கிறீர்கள்” என்றார் டாக்டர் அறை உள்ளே நுழைந்த தீபக்கிடம்.

“காலை வணக்கம் டாக்டர். நலமாக இருக்கிறேன். தேவி  எப்படி இருக்கிறார்கள் ? ” என்றான்

”  தேவி ஓரளவு தேறி வருகிறாள். அவளை நாம் ஐ.சி.யு -விலிருந்து சாதாரண அறைக்கு மாற்றி விடலாம் என்று நினைக்கிறேன்.” என்று அவர் ஆரம்பிக்க, தீபக் ஏதோ சொல்ல முயல,”கவலைப்படாதீங்க. அங்கேயுள்ள எல்லா வசதிகள் எல்லாம்  இங்கே இருக்கும்” என்றார்.

“அது நல்லா தெரியும். இப்பவே அவங்களை எல்லாரும் பார்க்கிறதுக்கு வரணும்ணு துடிச்சிக்கிட்டிருக்காங்க..  ஒரு தொழிற்சாலைக்கு இயக்குனர் (டைரக்டர்).. திடீர்னு மயக்கம் போட்டுவிழுந்தவுடனே… பலரும் பலவிதமா பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நிறைய பேர் பார்க்கணும்ணு துடிச்சிக்கிட்டிருக்காங்க..  அதனாலே அவங்க கொஞ்சம் நாளைக்கு அங்கேயே இருக்கிறது

நல்லதுண்ணு அவங்கம்மா நினைக்கிறாங்க”

“அவங்க அம்மா நினைக்கிறாங்களா? இல்லை.. உங்கள் அபிப்பிராயமா?”

“டாக்டர். நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி”

”சரி. அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது நீங்கள் அவர்களை பார்க்கவோ பேசவோ முயல்வது நல்லதல்ல..”

“பரவாயில்லை டாக்டர். உங்களிடம் சில செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்”என்றான் தீபக், டாக்டரின் அனுமதியோடு தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டே..

“என்ன மாதிரிச் செய்திகள் தீபக்”…?

“இவர்களுடைய இந்த தொழிற்சாலையில் எத்தனை ஆண்டுகளாக மருத்துவ இயக்குனராக (மெடிக்கல் டைரக்டர்) பணி புரிகிறீர்கள்?”

”நான். என் மருத்துவ மனையையே கவனிக்க முடிவதில்லை. தேவியின் அப்பா எனக்கு உயிர் நண்பன். அவன் கண்டிப்பாக நீதான் இருக்கவேண்டும் என்றான். சரி என்று ஆரம்பித்து ஏறக்குறைய இருபத்திரெண்டு ஆண்டுகள் கடந்து விட்டன .”

“தேவி இவ்வளவு சாந்தமாக இருக்கிறார்களே.. எப்படி முடிகிறது…யார் இல்லை என்று வந்தாலும் அள்ளிக்கொடுப்பது.. தவறு செய்பவர்களையும் அதிகம் அதட்டாமல்…ஒரு கம்பெனியின் டைரக்டர் எவ்வளவு கம்பீரமாக.. எவ்வளவு  கறாராக இருக்கவேண்டும். ஏன் இவ்வளவு சாந்த சொரூபியாக..” என்று தீபக் முடிப்பதற்குள் டாக்டர் விழுந்து விழுந்து சிரித்தார்.

“என்ன டாக்டர். நான் என்ன ‘ஜோக்கா அடிக்கிறேன். இப்படி சிரிக்கிறீர்கள்”? என்றான் தீபக்.

“சிரிக்காமல் என்னப்பா செய்ய முடியும். இவளுடைய கோபத்தினாலே தான் இவ அப்பனே செத்துப்போனான்” என்றார் டாக்டர்.

“என்னது?…கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது…தேவி கோபக்காரியா…இந்த நான்கு ஆண்டில் ஒருமுறை கூட அவர்கள் கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை…”

”ஆம். அவள் அப்பா இறந்து போனதிலிருந்து ரொம்பவே மாறிப்போனாள்.”

“கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா டாக்டர்”

“சரி… என்ன குடிக்கிறீர்கள்… டீயா… காபியா?” என்றார் டாக்டர்.

“தேவி கோபக்காரி என்பது கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. டீ… காபியெல்லாம் அப்புறம்..சொல்லுங்க டாக்டர். எப்படி மாறினார்கள்?”

”ம்…” என்று பெருமூச்சு விட்ட டாக்டர், “ தேவி.பள்ளியில் படிக்கும் போதே அடிக்கடி தொழிற்சாலைக்கு வருவதுண்டு. நீ படிக்கிற பொண்ணு.. பேக்டரிக்கு ஏன் அடிக்கடி வருகிறாய் என்றால் எங்க அப்பாவுடைய பேக்டரிக்கு நான் வராமல் வேற எங்க வீட்டு நாயா வரும் என்று சீறுவாள்.

ஏதாவது பேக்டரி ஒர்க்கர்ஸ் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கை நீட்டி அடிப்பாள். சும்மா வேலைய விட்டுத்தூக்கு என்பாள்.

அந்த நேரத்திலே அங்கே யூனியன் வேற இருந்தது. ஒரு நாள் மெசின் ஓடிக்கிட்டேயிருக்கும்போது ஒரு லேபர் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

இவள் வந்து ஓங்கிச் சவுட்டி ( காலால் மிதித்து) விட்டு அவன் எழுந்ததும் ஓங்கிக்கன்னத்தில் அறைந்திருக்கிறாள்.

யூனியன் தலைவர் மன்னிப்புக்கேட்கச் சொன்னதற்கு “ஒரு சாதாரண வேலைக்காரன் அவன் ஒழுங்காக வேலை செய்யாமல் இருந்ததற்கு தான் அடித்தேன். மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று சொல்லிவிட்டாள்

இவளுடைய அப்பா எவ்வளவு சொல்லியும் இவள் கேட்கவேயில்லை. யூனியனிலும் மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ள..

ஒரு ஆயா சூடாக டீ கொண்டு வரவில்லை என்று அவள் முகத்திலேயே தூக்கி ஊற்றியிருக்கிறாள்.

ஒழுங்காக பெருக்கவில்லை என்பதற்காக ஸ்வீப்பரை பாத்ரூமில் வைத்து அடித்திருக்கிறாள்

அடுத்த நாள் ஒரு ஒர்க்கர் சரியாக வரவில்லை என்று அவன் காலை வாரி விட.. அவன் தலையில் அடிபட்டு, அவன் இவளை திரும்பி அடிக்க கையை ஒங்க..இவள் கீழே கிடந்த சங்கிலியை எடுத்து இரத்தம் வரும்வரை “என்மேலயே கையை ஓங்குகிறாயா?” என்று சொல்லி சொல்லி அடித்திருக்கிறாள். அவன் மயங்கி விழ,  மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப் பட…திரும்பவும் யூனியனிலும் பிரச்சினை பூதாகராமாக உருவெடுக்க… “ நான் பொண்ணுண்ணு பார்க்காமல் கைய ஓங்கினான். அதான் கீழே கிடந்த சங்கிலியை எடுத்து அடித்தேன்” என்று அவள்

போலீசில் புகார் கொடுக்க… பணத்தைக் கொடுத்து ஒரு வழியா பிரச்சினை தீர்ந்தது”

“ஏயப்பா… அப்படிப்பட்ட பொண்ணா இவங்க…?” ஆச்சரியாமாகக் கேட்டான்

“ம்…அவள் என்னென்ன கூத்து பண்ணிளாள் தெரியுமா? யாரையும் மதிக்காமல் எடுத்தெரிஞ்சி பேசுறது…யார் என்றாலும்.. அவங்க அப்பாவைக் கூட மதிக்கிறது கிடையாது போகபோக அவளை யாருமே கட்டுப்படுத்த முடியவில்லை”

தீபக்,”அது சரி டாக்டர். அவங்க அப்பா இறந்தது கூட…” என்றவனை கை காட்டி விட்டு, உள்ளே வந்த வார்டு பாயிடம், “துரை.ரெண்டு சாயா வாங்கிட்டு வரச்சொல்லு” என்றார்.

அவனும் ”சரி டாக்டர்” என்று கிளம்பினான்.

”ம்… தேவிக்கு மருந்து கொடுக்க சொல்ல வேண்டும். ஒரு நிமிடம்” என்று சொல்லி விட்டு, ” நர்ஸ் சீதாவை வரச்சொல்” என்றார் பெல்லடித்தவுடன் வந்த கம்பவுண்டரிடம்.

“எஸ் டாக்டர்” என்றவாறு  உள்ளே வந்தாள் நர்ஸ் சீதா.

“தேவிக்கு இப்போ எப்படி இருக்கு.?” என்றார்

“பரவாயில்லை டாக்டர். திரும்பவும் சலைன் போட்டிருக்கு”என்றாள்

“சரி. நான் இதில் குறிப்பிட்டிருக்கும் மருந்துகளை கொடு” என்று மருந்து எழுதியிருந்த பேப்பரைக் கொடுத்தார்.

அவள் சென்றபின் சாயா வர, இருவரும் டீ எடுத்துக்கொள்ள, டாக்டர் தொடர்ந்தார்.

” தீபக். இது நீ தெரிந்து கொளவதற்காகத் தான் சொல்கிறேன். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். அவனும் தலையாட்ட, டாக்டர்,” ஒரு நாள் அவளுடைய அப்பா எங்கோ வெளியூர் போயிருக்க, நான் கூட ஒரு விசிட்டிங்கிற்காக தொழிற்சாலைக்குப் போயிருந்தேன்.  அங்கே, யூனியன் லீடர் ராமு, ஏதோ ஒரு விசயத்தை யூனியனிலும் பிரச்சினையாக்கப் போகிறேன் என்று கத்திக்கொண்டிருந்தான்.

அவள் மேசையிலிருந்த பேப்பர் வெயிட்  உருண்டகல்லை எடுத்து கோபத்தில் வீச, அவன் தலையில் பட்டு…. “

“என்னாச்சு டாக்டர்?” என்றான் பதட்டத்துடன் ..

“யூனியன் லீடர் ராமு குளோஸ். ஆமா.. செத்துப் போனான்.

போலீஸ் யாரையெல்லாமோ விரட்ட… தேவியோட அப்பா பணம் கொடுத்து எல்லாரையுமே சரி பண்ணினார்.

ஆனால் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்.”

டாக்டர் கண்களைத்துடைத்துக் கொண்டு “என் நல்ல நண்பனை இழந்து விட்டேன்”என்றார்.

அதன் பிறகு தேவியே முழுக்க பொறுப்பெடுத்துக் கொண்டாள்.

அப்புறமா நான் என்ன சொன்னாலும் கேட்டாள். அதான் பார்க்கிறீர்களே… ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு போன்ஸ்… வேலைக்காரர்களுக்கு தனி வீடு, இன்சூரன்ஸ், பிள்ளைகளுக்கு இலவசப் படிப்பு… என்று எப்படியோ மாறிப் போய் விட்டாள்”

“அவங்கப்பா இறந்து போனது அவங்களை மாத்தியிருக்கலாமில்லையா” என்றான்.

“இருக்கலாம்” என்று டாக்டர் சொன்னபோது,

“டாக்டர்! தேவி உங்க இரண்டு பேரிடமும் பேச வேண்டுமாம்” என்றாவாறு நர்ஸ் உள்ளே வந்தாள்

“அவள் எழும்பியாச்சா…? வெரிகுட். வாங்க தீபக் போய் பார்க்கலாம்” என்றவாறு டாக்டர் முன்னே நடக்க தீபக் பின் தொடர்ந்தான்

எழும்பி அமர்ந்திருந்த தேவி, “ ஹாய். தீபக்.. டாக்டர்.. என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப்போறீங்க…?” என்றாள்

“மெதுவாக பார்க்கலாம்?” என்ற டாக்டர் “தீபக் ஏதோ கேட்க வேண்டுமாம்” என்றார்

“என்ன தீபக். என்ன விசயம்?” சிரித்துகொண்டே கேட்டாள்

“உங்க அப்பா இறந்ததினாலேயா இப்படி மாறி விட்டீர்கள்?” என்றான் தீபக்.

தேவி டாக்டரைத் திரும்பிப்பார்க்க… “அவனுக்கு எல்லாம் தெரியும்” என்று தலையாட்டினார்.

“அது அப்படியில்லை தீபக். அந்த யூனியன் லீடர் ராமு இறந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு இறுதி யாத்திரைக்கு போயிருந்தேன். அவர்கள் வாழ்க்கை நிலை… அந்த அம்மா.. அவருடைய மனைவி ‘இனி என்ன செய்யப் போகிறேன்’ என்று கத்திய கதறல்.. சரி…. அன்றோடு என் கோபம் பிடிவாதமெல்லாம் போய் விட்டது” என்றாள்

“அப்படீன்னா… அந்தச் சூழ் நிலையைப் பார்த்து நீங்க ஒரு பெண் புத்தனாகிட்டீங்க” என்றான்.

”அப்படியும் இருக்கலாம். ஆமாம் . தொழிற்சாலை எப்படி நடக்கிறது?’ என்றாள்.

”  நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் மற்ற நோயாளிகளைப்  பார்க்கிறேன்” என்று நடந்தார் டாக்டர்.

 

குலசாமி – ரேவதி ராமச்சந்திரன்

பழம், காய்கறி தள்ளுவண்டி மானியம் பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் -புதுவையில் வெளியீடு!

‘சாமீ, ……..காயீ, பழம் எல்லாங் கொண்டு வந்தேஞ்சாமி.. எடுத்தாரவா???’

முத்துவின் கட்டைக் குரல் அறிவழகன் பூஜையில் அவனைக் கரடியாக்கியது. ‘சாந்தீ.. என்னன்னு பாரு. அவன் வாசப்படியிலே இந்த கத்து கத்துறானே!!! ஓர் அஞ்சு நிமிஷம் சாமி கிட்ட நிக்க முடியல இந்த வீட்ல’ பொறிந்து விழுந்தான். மீண்டும் கவசம்.. பொல்லாதவரைப் பொடிபொடியாக்கும்’

சாந்தி ஓடி வந்து ‘என்ன முத்து இன்னிக்கு சீக்ரமே வந்துட்டீங்க’ என்று அவசர அவசரமாகக் கேட்டாள்.

‘ஆமாம்மா பெரியாஸ்பத்திரி போற வேலையிருக்கு. அங்கிட்டு போனா சடுதியிலே வர முடியுமா சொல்லு? உனுக்கு முந்தா நாள் குடுத்தது காயீ, பழமெல்லாம்.  தீர்ந்திருக்குமே. அதான் குடுத்துட்டு போவோம்னு ஓடியாந்தேந்தாயீ..’

சாந்திக்கு ஆச்சர்யம். ‘என்ன நீ கணக்கு வெச்சிருக்கியா? இவ்ளோ பெரிய ஃப்ளாட்லே யார் யாருக்கு என்னென்ன குடுத்தோம், எப்ப எவ்ளோ தீர்ந்திருக்கும்னு?’

மிகவும் அசால்டாக ‘பின் இது என் வேலையில்லயாம்மா?? நமக்கு எப்போ என்னா குடுக்கணும்னு இம்மாம் பெரிய உலகத்தில அத்தினி ஜனத்துக்கும் சாமி கணக்கு வெக்குது. நான் இந்த ஓர்  அபாட்மெண்டுக்கு வெச்சுக்கறேன். அம்புட்டுத்தேன்’ என்று சிரித்தார் முத்து. பல்லற்ற பாண்டுரங்கநாய்த் தெரிந்தார் சாந்திக்கு.

‘சரி சரி குடு. நிஜமாவே காய் பழமெல்லாம் தீர்ந்துதான் போய் விட்டன. உனக்குத் தெரிந்த கணக்குக்கூட இந்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை. இரு இரு அப்படியே கொஞ்சம் பலகாரமும் மோரும் தரேன். சாப்பிட்டு விட்டுப் போ என்ன’ என்று ஆஸ்வாசமாய் சொன்னாள் சாந்தி.

‘அம்மா தாயீ.. நீ குடு, நா எடுத்துகினு போய் சாப்டுக்கறேன். இன்னுஞ்சாமி கும்புடல. கும்புட்டு சாப்டுறேன்’ என்று கூடையைக் கையில் எடுத்தான்.

‘அட நீ என்ன ரொம்ப அதிசயமா இருக்கே!! அதெல்லாம் வேற பண்ணுவியா? உனக்கு ஸ்லோகமெல்லாம் அதான் பாட்டெல்லாம் தெரியுமா? தமிழே ததிங்கிணத்தோம் போடுது!? இதுல என்ன சொல்லி சாமி கும்புடுவே?!?!’ ஆச்சர்யத்தில் படபடவென பொரிந்தாள் சாந்தி.

‘அட நா என்னாம்மா உன்ன மாதிரி சார் மாதிரி படிச்சா இருக்கேங்? ஒண்ணியுமில்ல. ஏதோ எங்க ஆயா சொல்லும். அதுக்கு அது ஆயா சொல்லிக்குடுத்துச்சாங். ஆனா ஒண்ணு. நீ சாரோட ஊட்டாண்ட வந்து பாரேங். ஆச்சர்யப்பட்டுப்பொய்டுவே மா. அம்புட்டு ரெஸ்பான்ஸு.  சாமி நல்ல சாமி மா. அது எம் பாட்ட கேக்கும். அந்தப் பாட்டுக்கு பதில்லாஞ்சொல்லும்.’ முத்து கண்ணகல தலையைத்தலையை ஆட்டி அவனுலகத்திலிருந்து சந்தோஷமாகப் பேசியது சாந்தியை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

‘ஓ  அப்படியா?? சரி நீ பலகாரத்த எடுத்துட்டுப் போ. நானும் சாரும் உன் வீட்டுப் பக்கம் வந்து  பார்க்கறோம். நீ சொல்றதே ஸ்வாரஸ்யமா இருக்கே!!’

‘வா தாயீ வா’ என்று கிளம்பினான் முத்து.

சாந்தி பொறுமை இல்லாமலும் பலவித கற்பனைகளோடும் இங்கும் அங்கும் நடைப்பயணம் போட்டாள் அறிவழகனின் ‘சரணம் சரணம் சண்முகா சரணம்’ வரை கஷ்டப்பட்டு காத்திருந்து பின் சொன்னாள். ‘ஏங்க ப்ளீஸ் வாங்க அப்படி என்ன தான் அவந் சாமி பணணுதுன்னு பாக்கணும் வாங்க போகலாம்’ என்று கையைப் பிடித்து இழுத்தாள்.

அறிவழகனுக்கு இதில் சுத்தமாக இஷ்டமில்லை. பிடிக்கவும் இல்லை. ‘அங்கயெல்லாம் ஒரே நாஸ்டியா இருக்கும் ஷாந்தி; அங்க என்னத்த போய் பார்க்கணும் உனக்கு. அவன் தான் ஏதோ ஒளர்றான். சாமியாவது ரெஸ்பாண்ட் பண்றதாவது. இதெல்லாம் டைம் வேஸ்ட். ஆளை விடு. எனக்கு வேற வேலை இல்லையா என்ன’ என்று கம்ப்யூட்டர் எதிரில் உட்கார்ந்து விட்டான். அவனை இப்போது அசைப்பது ப்ரம்மப்ப்ரயத்தனம்தான். இருந்தாலும் சாந்தி விடுவதாக இல்லை.

‘இல்லங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விதமா அந்த ரெஸ்பான்ஸ் இருக்குன்னு பார்க்க ரொம்ப ஆசையா இருக்குங்க. கூட்டிட்டு போங்க. திரும்பி வந்து உங்களுக்குப் பிடித்த சப்பாத்தியும் தேங்காய்ப்பால் குருமாவும் செய்து தரேங்க’ என்று நயமாகப் பேசினாள்.

அந்தப் ப்ளீஸா, இல்லை சப்பாத்தி குருமாவா, இல்லை அந்த கொ(ஞ்)சலா ஏதோ ஒன்று இவனை அசைக்க மேலும் இதனைத் தள்ள முடியாமல் கிளம்பினான் அறிவழகன். கார் அந்தத் தெருவில் நுழையாதோ என்னமோ என்று கராஜிலிருந்து ஸ்கூட்டரை வெளிக் கொணர்ந்தான். இத்தனை நேரம் ஸ்வாமிக்கு செய்ததை விட வழியெங்கும் சாந்திக்கு அர்ச்சனை செய்தான். ஆனால் என்ன! பள்ளிக்கூடம் படிக்கும் பையன் மாதிரி சாந்தி அதையெல்லாம் எந்தக் காதிலும் வாங்கவில்லை. அர்ச்சுனனின் அம்பு மாதிரி அவளுக்கு முத்து வீடு ஒன்று தான் குறியாக இருந்தது.

முத்து தெருவிலுள்ள பப்ளிக் டாய்லெட்டில் குளித்து, சுத்தமாகி, தன்னுடைய  குடிசை பக்கத்தில் நடைபாதையில் ஒரு பழைய ராமர் படம் வைத்து, இரண்டு காட்டுப் பூவை அதன் தலையில் போட்டு, ஓர் அலுமினிய நசுங்கிய தட்டில் சாந்தி கொடுத்த பலகாரத்தை வைத்து இரு கைகளையும் தட்டி அவனுடைய ஸ்லோகத்தை சொல்லலானான்:

ராமா ராமா வா வா கோசல ராமா வா வா

பாலா ராமா வா வா சீதா ராமா வா வா

காட்டுக்கு போனியே வா வா சீதய தொலைச்சியே வா வா

ஆஞ்சனேயா வா வா சீதா எங்கே கண்டு பிடி

ராவணன குத்திப்போட்டு சீதம்மாவ கொண்டு வா

காப்பாத்தி அயோத்தி கூட்டி வா வா

கொன்னாம்பாரு ராவணநை சீதம்மாவ கூட்டியாந்தான்

ராமன் அனுமன் அல்லாருமே அயோத்திக்கே வந்தாங்க

நல்லாருங்க எல்லோரும் கதைய் கேட்ட அல்லாருக்கும் நல்லதெல்லான் நடக்கட்டும்

Monkeys feast in this daily ritual - The Hindu

முத்து முடித்ததும் அவனை மொய்த்தது ஒரு பத்து குரங்குகள். அத்தனைக்கும் பலகாரங்கள் கொடுத்து, தானும் சாப்பிட்டுத் திரும்பியவன் சாந்தியையும் அறிவழகனையும் திடுக்கிட்டுப் பார்த்தான். குழந்தைத்தனமாக. கைக் கொட்டி சிரித்துக்கொண்டே யதார்த்தமாக ‘இன்னம்மா எஞ்சாமி வந்துச்சு பாத்தியா?! அது என் பாட்டு கேட்டு ஓடியாந்துடும். நான் குடுப்பதைச் சாப்ட்டு அது பாட்டுக்கு எங்குனா போய்டும்.  நாளைக்கு திரும்ப பாட்ட பாட சொல்லோ வரும். எஞ்சாமிகிட்ட பேசாம அதுக்கு சோறு வெக்காம நான் சாப்பிட முடியுமா சொல்லு. அது கீதில்ல பசியோட. என் பொஞ்சாதி என்னை விட்டுப் போன அப்புறம் எங்களுக்கு குழந்தையும் இல்லாததினால் இவங்கதான் எனக்கு குழந்தங்க, என்னைப் பெற்ற சாமியும் கூட. இப்ப நீ கூட பாத்தியே எப்படி சொல்லு’ என்றான்.

சாந்தி கண்களில் ஆச்சரியம். வார்த்தைகள் இல்லை. இவன் அறிவாளியா, பாமரனா, பக்திமானா? எதில் சேர்த்தி?! வேண்டா வெறுப்பாக வந்த அறிவழகனோ கண்களில் மிரட்சியோடு பார்த்து சிலை ஆகி விட்டான். ‘இலக்கண சுத்தமான பூஜையில் இல்லாத ஒன்று இவனுடய எளிமையான பூஜையில் உள்ளது’ என்று அவன் மனம் சொல்லியது.

ஆம் எளியோரும் பெரியோரும் இறைமுன் ஒன்றே! எல்லாவற்றையும் இறையேயென்றுணர்.’                                     

                                                  

சாக்லேட் பேப்பர் – எஸ் எல் நாணு

 

கயாவில் துளசி செடி வளராததற்கும், பல்குனி நதி வற்றியதற்கும் - தினசரி தமிழ்

காலையில் எழுந்து பால்கனியில் எட்டிப் பார்த்த எனக்கு எரிச்சலாக வந்தது.  காரணம் பால்கனி திண்டில் கிடந்த பிரித்த சாக்லேட் பேப்பர்கள். நாங்கள் இருப்பது முதல் தளத்தில். எங்களுக்கே மேலே இன்னும் ஆறு தளங்கள். முதல் தளம் என்பதால் எங்கள் பால்கனியை ஒட்டி ஒரு திண்டு உண்டு. அதில் என் சகதர்மணி துளசி மற்றும் பெயர் தெரியாத சில செடிகளை உரம் போட்டு வளர்க்கிறாள். தினமும் காலையில் பார்த்தால் இரண்டு மூன்று பிரித்த சாக்லேட் பேப்பர்கள் செடிகளில் ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருக்கும். அதிலும்  துளசிச் செடி என்றால் அதற்கு ரொம்பவே பிடிக்கும் போலிருக்கிறது. தினமும் ஒரு சாக்லேட் பேப்பராவது துளசிச் செடியில் மடியாக விழுந்து அதன் மருத்துவ மணத்தில் மூழ்கியிருக்கும்.

உடனே என் சகதர்மணிக்கு இது அச்சான்யமாகப் படும். (துளசிச் செடி லெஷ்மி ஸ்வரூபி.. எச்ச சாக்லேட் பேப்பர் அதுல படலாமோ?) ரொம்பவே பிரயத்தனப் பட்டு அந்த சாக்லேட் பேப்பரை நான் அகற்றும் வரை விடமாட்டாள். ஆனால் மறுபடியும் மாலையில் மூன்று நான்கு சாக்லேட் பேப்பர்கள் தங்கள் இடத்தைப் பிடித்து ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருக்கும். எனக்கு அந்த சாக்லேட் பேப்பர் விழுவதை விட அதை உடனே அப்புறப் படுத்த என் சகதர்மணி என்னை விரட்டுவது தான் ரொம்பவே கடுப்பாக இருக்கும்.

எங்கள் பிளாட்டில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் யாரை என்று குற்றம் சாட்டுவது?

“பேசாம அசோசியேஷன்ல கம்ப்ளெய்ன் பண்ணுங்கோ” என்று சகதர்மணி உத்தரவு.

“இதுக்கெல்லாம் அசோசியேஷன் கிட்டப் போக முடியாது.. நாம தான் பார்த்துக்கணும்.. இரு.. என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்”

என்று அவளை அடக்கி விட்டு நிஜமாகவே யோசித்தேன் (நம்புங்க சார்!!)

அப்போது இந்தச் செய்தியை பத்து செகண்டுக்குள் நூறு பேருக்கு அனுப்பா விட்டால் என் தலை சுக்கு ஆயிரமாக (பத்து மடங்கு) வெடிக்கும் என்று வாட்ஸ் ஏப்பில் ஒரு செய்தி வரவே எனக்கு ஒரு திடீர் யோசனை..

எங்கள் குடியிருப்பு வாசிகளுக்கென்று ஒரு தனி வாட்ஸ் ஏப் க்ரூப் இருக்கிறது. அதில் பிரச்சனையை விளக்கி தயவு செய்து பிரித்த சாக்லேட் பேப்பரை பால்கனியிலிருந்து தூக்கி எறியாத படி உங்கள் குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணுங்கள் என்று செய்தி அனுப்ப முடிவு செய்து.. அதிசயமாக உடனே அனுப்பியும் விட்டேன்..

சுவரில் அடித்த பந்து போல் உடனே பதில் வந்தது..

“எங்கள் வீட்டில் இல்லை”

“நாங்கள் டஸ்ட் பின் பயன் படுத்த எங்கள் குழந்தைகளைப் பழக்கியிருக்கிறோம்”

“எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதே இல்லை.. சாக்லேட் தின்பது உடல் நலத்துக்குக் கேடு” (புகைப் பிடிப்பது… அதே சாயல்)

ராக்கெட் வேகத்தில் இந்தப் பதிலெல்லாம் வந்ததே தவிற செடிகளில் சாக்லேட் பேப்பர் விழுவது மட்டும் நிற்கவில்லை.

அடுத்த கட்டமாக என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்..

நான் சீனியர் கணக்கதிகாரி(!) என்பதால் “ஆடிட்” ஞாபகம் வந்தது. அதாவது மேல் தளத்திலிருந்து ஒவ்வொரு குடும்பமாக அக்கு வேறு ஆணி வேராகப் பிரித்து யார் இதை செய்யக் கூடும் (எனக்கு தினமும் வேலை வைக்கக் கூடும்) என்று ஆராய்வது என்ற முடிவுக்கு வந்தேன்..

மேல் தளத்தில் கன்னைய்யா லால். குஜராத்தி குடும்பம். குஜாராத்திகள் நிறைய இனிப்பு சாப்பிடுவார்கள்.. அவர்களின் ஊறுகாய் கூட இனிப்பாகத் தான் இருக்கும்.. அதுவும் அவர்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் வேற.. நிச்சயமாக சஸ்பெக்ட் நம்பர் ஒன்.. காகிதத்தில் குறித்துக் கொண்டேன்..

ஆறாவது தளத்தில்.. எங்கள் அசோசியேஷன் கமிட்டி மெம்பர் ஸ்ரீவத்ஸன்..

“இது ரொம்ப தப்பாச்சே.. நீங்க என்ன பண்ணறேள்.. குளோஸா வாட்ச் பண்ணுங்கோ.. கேட்ச் த கல்ப்ரிட் ரெட் ஹேண்டட்”

போன் பண்ணி உபதேசம் பண்ணினார்.

இவர் சொன்னார் என்பதற்காக ராத்திரி பகல்னு பார்க்காம பால்கனிலேர்ந்து அண்ணாந்து பார்த்துண்டேவா நிக்க முடியும்?

அதற்குக் கீழே பல்பீர் சிங் குடும்பம்.. அதிலும் மூன்று குழந்தைகள்.. பஞ்சாபிகள் சாக்லேட் பிரியர்கள் என்று என் நண்பன் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.. கண்டிப்பாக சஸ்பெக்ட் நம்பர் டூ..

அடுத்ததாக பிரதாப் ரெட்டி.. அவன் மனைவி சரளா.. ஐ.டி.யில் வேலை பார்க்கும் புதுமண தம்பதிகள்.. அவர்களுக்கு சாக்லேட் சாப்பிடும் சுவாரஸ்யம் இருக்குமா என்பது சந்தேகமே..

“யாரு சொன்னா? இந்தக் காலத்துல ஐ.டி.ல வேலை பார்க்கிறவா தான்.. ஆபீஸ்ல ப்ரீயா கொடுக்கறான்னு நிறைய சாக்லேட் சாப்பிடறாளாம்.. அதனால அவாளுக்கெல்லாம் சீக்கிரமே சக்கரை வியாதி வந்துடறாதாம்.. தினம் வாட்ஸ் ஏப்புல வரதே”

சகதர்மணி சொன்னவுடன் இந்த இளம் தம்பதிகள் சஸ்பெக்ட் நம்பர் த்ரீ ஆகி விட்டனர்.

அதற்குக் கீழே மூன்றாவது மாடியில் எண்பது வயது விஸ்வநாதன் மாமா.. சகுந்தலா மாமி.. சான்ஸே இல்லை..

எங்களுக்கு நேர் மேலே மிஸ்டர் அண்ட் மிஸஸ் அலெக்ஸாண்டர்.. வீட்டையே சுத்தமாக வைத்திருப்பவர்கள். ஒரு தூசு துரும்பு இருக்காது.. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. அவர்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி கூட பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.. அவர்கள் எப்படி குப்பையை வெளியே போடுவார்கள்? அதனால ரூல்ட் அவுட்..

நாங்களே எங்க பால்கனில சாக்லேட் பேப்பர் போட மாட்டோம்.. அதனால நாங்களும் ரூல்ட் அவுட்..

ஆக இப்ப சந்தேகத்தில் இருப்பது மூன்று குடும்பங்கள் தான்..

கன்னையா லால் குடும்பம்..

பல்பீர் சிங் குடும்பம்..

புதுமண தம்பதிகள்.. பிரதாப் ரெட்டி.. அவன் மனைவி சரளா..

இவர்களில் யார் என்று எப்படிப் பிடிப்பது?

அலுவலகத்தில் அரவிந்தனிடம் இதைப் பற்றி பிரஸ்தாபித்தேன். உடனே அவன் வழி சொன்னான்.

“ரொம்ப சிம்பிள். சி.சி.டி.வி. கேமரா மாதிரி ஒண்ணு உன் பால்கனில பிக்ஸ் பண்ணு.. அதை உன் உன் லேப்-டாப்போட கனெக்ட் பண்ணிக்கோ.. அதுல எல்லாம் பதிவாயிரும்.. நீ ஈஸியா குற்றவாளியைப் பிடிச்சிரலாம்”

அரவிந்தன் கொடுத்த பில்ட்-அப்பில் ஏதோ கொலை குற்றவாளியைப் பிடிக்கப் போவது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.

மறுநாளே அரவிந்த் ஒரு ஆளுடன் வந்தான்.. வந்தவர் பால்கனியைப் பார்த்தார். அண்ணாந்து மேலே பார்த்தார். மறுபடியும் கீழே பார்த்தார்.. பின் முகவாயைத் தடவிய படி யோசித்தார்.. பின் கையிலிருந்த ஐ-பேடில் ஏதோ கணக்குப் போட்டார்.. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவராக..

“ஹைட் ரொம்ப அதிகமா இருக்கு.. சாதாரண கேமராவுல க்ளாரிட்டி இருக்காது.. மேகமூட்டம் மாதிரி ஒரு உருவம் தெரியுமே தவிற.. யாரு என்ன ஏதுன்னு பின்பாயிண்ட் பண்ண முடியாது.. அதனால நீங்க கொஞ்சம் ஹை-எண்ட் கேமரா தான் போகணும்”

எனக்கு உடனே வயிற்றில் புளி கரைத்தது.

“ஹை-எண்ட்னா..?”

என்று நான் இழுக்க அவர் என்னை அலட்சியமாகப் பார்த்தார்.

“ஆமா சார்.. ஆள் யாருன்னு தெரியணும்லியா? இம்போர்டட் கேமரா தான் பெஸ்ட்..”

“சரி.. அதுக்கு எவ்வளவு செலவாகும்?”

“பயப்படாதீங்க.. அதிகம் ஒண்ணுமில்லை சார்.. கேமரா.. மத்த ஆக்ஸஸரீஸ்.. இன்ஸ்டலேஷன்.. எல்லாம் சேர்த்து அம்பது ரூபாய்ல முடிச்சுரலாம்.. நீங்க அரவிந்த் சாரோட பிரெண்டாப் போயிட்டீங்க.. அதனலால எனக்கு பிராபிட்லாம் வேண்டாம்.. காஸ்ட் மட்டும் கொடுங்க போறும்”

எனக்கு பகீரென்றது..

ஒரு சாக்லேட் பேப்பரை யார் தூக்கி எறிகிறார்கள் என்று கண்டு பிடிக்க ஐம்பதாயிரம் ரூபாய் செலவா?

“ஓக்கேன்னா சொல்லுங்க.. நாளைக்கே வந்து பிக்ஸ் பண்ணிக் கொடுத்துடறேன்”

யோசித்துச் சொல்வதாக வந்தவரை அனுப்பி விட்டேன்.

“டேய்.. ஆதாரத்தோட கையும் களவுமா குற்றவாளியைக் கண்டு பிடிக்கணும்னா இது தான் ஒரே வழி..”

அரவிந்த் சொன்ன போது நான் பேசாமல் இருந்தேன். உடனே அவன் என் சகதர்மணியிடம் திரும்பி..

“இவன் எப்பவுமே இப்படித் தான்.. உடனே முடிவு எடுக்க மாட்டான்.. நீங்க தாம்மா சரியான ஆளு.. டக்கு டக்குன்னு முடிவு எடுபீங்க.. அதுவும் சரியா முடிவு எடுப்பீங்க..”

அரவிந்த் “நாராயண.. நாராயண” என்று பத்த வைத்து விட்டுக் கிளம்பி விட்டான்.

அடுத்த அரை மணிநேரத்தில் அந்த கேமராவை வாங்கா விட்டால் நான் மனிதப் பிறவி எடுத்ததே வியர்த்தம் என்ற ரேஞ்சுக்கு என் சகதர்மணியின் அருளுரைகள் இருந்தன என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை..

திடீரென்று ஐம்பதாயிரத்துக்கு என்ன செய்வது என்று நான் யோசிக்கும்  நேரத்தில் இது என் சகதர்மணிக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாக உரு மாறிக் கொண்டிருப்பது எனக்குப் புரிந்தது. அதற்குக் காரணம் எதிர்த்த வீட்டு சரோஜா.

“வெறும் சாக்லேட் பேப்பர் தானே.. இதுக்குப் போய் இவ்வளவு கலாட்டா பண்ணுவியா? பேசாம விடுவியா”

என்று சரோஜா கேட்கப் போக..

“அதெப்படி விட முடியும்? இதுவே வேற யாராவது வீட்டுல இப்படிக் குப்பை விழுந்தா விடுவாளா? ஊரைக் கூட்டி தகறாரு பண்ண மாட்டா? இதை விடக் கூடாது சரோஜா..”

“நான் அதுக்குச் சொல்லலை.. சாதாரண சாக்லேட் பேப்பர்.. அதுக்குப் போய்..”

“என்ன சாதாரண சாக்லேட் பேப்பர்?.. ஒரு நாள்னா பரவாயில்லை.. தினம் தினம் இதே பாடாப் போச்சு.. யாரோ வேணும்னே பண்ணறா.. இதை நான் சும்மா விட மாட்டேன்.”

என் சகதர்மணியை உசுப்பேற்றி விட வேண்டும் என்றே சரோஜா கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை ஏன் இவள் புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்…

“இதப் பாருங்கோ.. என் செடில தினம் யாரு எச்ச சாக்லேட் பேப்பரைப் போடறான்னு கண்டு பிடிச்சே ஆகணும்.. என்ன செய்வேளோ ஏது செய்வேளோ தெரியாது.. நாளைக்கே பணத்துக்கு ஏற்பாடு பண்ணி அந்த கேமராவை கொண்டு வரச் சொல்றேள்”

சுப்ரீம் கோர்ட் ஆர்டர். அதற்கு மேல் அப்பீல் கிடையாது.

நல்லவேளையாக இன்று ஞாயிற்றுக் கிழமை. இல்லாவிட்டால் இப்பவே ஏற்பாடு பண்ணச் சொல்லி என்னை விரட்டியிருப்பாள்.

பணத்துக்கு என்ன செய்வது.. பி.எப்.பில் லோன் போட்டால் வர ஒரு மாதம் ஆகுமே.. எப்.டி.யை உடைக்கணுமா? அது மகனின் காலேஜ் அட்மிஷனுக்காக என்று தானே நினைத்திருந்தேன்.. அதைப் போய் ஒரு சாக்லேட் பேப்பருக்காக?… ம்.. வேறு என்ன தான் வழி?

நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே காலிங் பெல் அடித்தது.

ஆறாவது மாடி ஸ்ரீவத்ஸன்..

“ஒரு பேட் நியூஸ்.. நம்ம விஸ்வநாதன் மாமா போயிட்டார்”

என்னால் நம்ப முடியவில்லை.

“நேத்து கூட மாமியைக் கீழ பார்த்தேன்.. மாமா நன்னா இருக்கார்னு சொன்னாரே”

“இப்பத்தான்.. பத்து நிமிஷம் முன்னால மாஸிவ் அட்டாக்..”

சகதர்மணியுடன் உடனே போனேன்.

டாக்டருக்குச் சொல்லி அனுப்பி.. ஐஸ் பெட்டிக்கு ஏற்பாடு பண்ணி..

புளோரிடாவில் இருக்கும் அவர்களின் ஒரே மகனுக்கு தகவல் சொல்லி.. மற்ற உறவினர்கள் யார் என்று மாமியிடம் மெதுவாகக் கேட்டு ஒவ்வொருவரையாக அழைத்து விவரம் சொல்லி..

உடனே வேறு யாரும் துணை இல்லாததால் நானும், சகதர்மணியும் ஸ்ரீவத்சனும் மாமி கூடவே இருந்தோம்..

மாமியைப் பார்க்க நிஜமாகவே பாவமாக இருந்தது.

“கவலைப் படாதேங்கோ.. நாங்க இருக்கோம்”

மாமியின் கையை ஒரு மகனாகப் பிடித்துக் கொண்டேன்.

சிறிது நேரம் மௌனமாக இருந்த மாமி.. மெதுவாகச் சொன்னாள்..

“இனிமே உங்க வீட்டு பால்கனில சாக்லேட் பேப்பர் விழாது”

நான் எதுவும் புரியாமல் மாமியைப் பார்த்தேன்.

“மாமாவுக்கு டயபடீஸ்.. ஆனா சின்ன வயசுலேர்ந்தே சாக்லேட் பிரியர்.. நான் கத்துவேன்னு எனக்குத் தெரியாம பக்கத்து வீட்டுப் பையன் கிட்டச் சாக்லேட் வாங்கிண்டு வரச் சொல்லி ஒளிச்சு வெச்சிருப்பார்.. நான் குளிக்கும் போதோ.. இல்லை சாமான் வாங்க கடைக்கு எங்கயாவது போகும் போதோ சாக்லேட் எடுத்துச் சாப்பிடுவார்.. உரிச்ச சாக்லேட் பேப்பரை எங்காத்துக் குப்பைத் தொட்டில போட்டா எனக்குத் தெரிஞ்சுடும்னு பால்கனி வழியா வெளில போட்டுருவார்.. இது எனக்கு சமீபத்துல பக்கத்து வீட்டுப் பையன் சொல்லித்தான் தெரிஞ்சுது.. ஏற்கனவே அவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு.. எப்ப வேணாலும் எது வேணாலும் ஆகலாம்னு டாக்டர் சொல்லியிருந்தார்.. சரி இருக்கிறவரை சந்தோஷமா இருக்கட்டுமேன்னு நானும் கண்டுக்கலை.. பாவம்.. ”

மாமி விரக்தியாகச் சொல்லி முடித்தாள். அப்போது தான் எனக்கு உரைத்தது.. மாமாவின் உடலை ப்ரீஸர் பெட்டியில் வைத்த போது மாமி அவசரமாக அவர் தலைக்குப் பக்கத்தில் எதையோ வைத்தாள்.. எதேச்சையாக எட்டிப் பார்த்தேன்.. கேட்பரீஸ் சாக்லேட்..

மறுநாள் காலையில் எழுந்து பால்கனியைப் பார்த்த எனக்கு வெறுமையாக இருந்தது.

 

ஆராரோ – ந பானுமதி

Why pregnancy is a biological war between mother and baby | Aeon Essays

கடைசி நிமிடத்தின் வேதனை படிந்த அந்த முகம் சரளாவினுள் எழுப்பிய அலைகளை அவளாலேயே இனம் காண முடியவில்லை. வதங்கிய ரோஜா மாலையைப் போல் தரையில் கிடத்தப்பட்டுள்ள சுந்தரின் உடல்.. புரிந்தும், புரியாமலும் அருகில் ‘அப்பா, ஏந்திருப்பா, வெளயாடணும்ப்பா’ என்று அந்த உடலை உலுக்கிக் கொண்டிருக்கும் ரோஷன். உண்மையாகவே இறந்து விட்டாரா என்ன? நாப்பத்தியோரு வயதில் இதயம் துடிப்பதை நிறுத்தக் கூடுமா? கல்யாணமான புதிதில் இதே போல அவன் படுத்திருந்தது அவள் நினைவிற்கு வந்தது.

இரு வார விடுமுறைக்குப் பின் அன்று தான் சரளா புதிய அலுவலகத்திற்குப் போயிருந்தாள்; திருமணத்திற்கு முன்பே இட மாற்றம் கேட்டு அவள் விண்ணப்பத்திருந்தாள். அதிக வேலையின் காரணமாக சற்று தாமதித்துத்தான் கிளம்ப முடிந்தது. மின்சார ரயில் இரண்டை கூட்டத்தினால் வேண்டுமென்றே தவிர்த்தாள். புது இடம், கல்யாணக் களை இன்னமும் முகத்தில் மீதமிருக்கிறது, காத்திருப்பதில் அர்த்தம் இல்லையென்று ஏறியதில் கசகசவென்ற கூட்டத்தின் நடுவில் கண் தெரியாத சிறுமியர் இருவர் பாடிக் கொண்டே பிச்சை எடுத்த காட்சி அவளை வதைத்தது; கூட்டத்தைச் சாக்காகக் கொண்டு அந்த சிறுமியரின் மார்புகளை இரு அயோக்கியர்கள் பிசைந்து எடுத்தனர். பாட்டு அந்தரத்தில் நின்று, ‘அண்ணா, விட்டுடு’ என்று கதறிய குரல்கள். சரளா உட்பட யாரும் எதுவும் பேசவில்லை. அந்த ஆட்கள் சிரித்துக் கொண்டே அடுத்த நிலையத்தில் இறங்கிப் போயினர். ‘காசு பத்ரம்டீ, இல்லாட்டி அங்க வேற அடி வாங்கணும்’ என்ற ஒரு சிறுமியின் குரலை சரளாவால் இன்றளவும் மறக்க முடியவில்லை. இத்தனை அவமானத்தோடு, கண்களுமில்லாமல் இவர்கள் வாழ்வதற்கு செத்துப் போகலாம் என்று மனதில் தோன்றிய எண்ணத்திற்காகத் தன்னையே கடிந்து கொண்டாள்.

இந்த மனவாதையோடு வீட்டிற்குள் வந்தால், வீடு திறந்திருக்கிறது, கூடத்தில் விளக்குப் போடவில்லை, சமையலறையில் முணுக்முணுக்கென்று சிறிய ஜீரோ வாட் பல்ப் எரிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் படுக்கை அறையிலும் விளக்கில்லை. திறந்திருந்த சாளரம் வழியே வந்த வெளிச்சத்தில் தரையில் சுந்தர் பயமுறுத்தும் கோணத்தில் விழுந்து கிடந்தான். அவள் விளக்கைப் பொருத்தி விட்டு அவனை பயத்துடன் அணுகினாள்; தொட்டு அசைத்தாள், பலகீன பயந்த குரலோடு கூப்பிட்டுப் பார்த்தாள்; சுந்தரிடம் அசைவேதுமில்லை; ‘சுந்தர், சுந்து, சுந்தர் ஐயோ, தெய்வமே, இவருக்கு என்ன ஆச்சு? நா என்ன செய்வேன், சுந்து, ஏந்துருடா ஏந்துருடா’ என்று அவள் அலறிய பிறகு அவன் சடாரென்று எழுந்தான். அவள் திகைத்துப் போனாள். ‘நன்னா ஏமாந்தியா? எத்தன தரம் சொன்னேன், என்ன சுந்துன்னு கூப்டுன்னு, பட்டிக்காடு மாரி மாட்டேன்ன இப்பப் பாத்தியா? எப்படி ஐயாவோட நடிப்பு? எங்க ஆஃபீஸ் ரிக்ரியேஷன் க்ள்ப்ல போடப் போற ட்ராமாவில ஒரு சீன்ல நான் செத்தமாரி நடிக்கணும். ஒரு கல்ல இரண்டு மாங்கா பாத்தியா?’ தன் கைகள் வலிக்கும் வரை சுந்தரின் மார்பில் அன்று குத்தியது இன்று நினைவிற்கு வர இத்தனை சோகத்திலும் அவளுக்கு சிறு புன்னகை வந்தது. இன்று அப்படி அலறினால் அவன் மீண்டு வர மாட்டான். உண்மையாகவே இறந்துவிட்டான்.

முதுகைத் துளைப்பது போல் புகுந்த வீட்டினர் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் அறிவாள். சுந்தரின் சாவிற்கு சரளாவைக் குற்றம் சொல்லும் பார்வைகள் அவை. ஒருக்கால், அவள் தான் குற்றவாளியோ? சுந்தர் அவளுக்கு என்னதான் தரவில்லை? திருமணமான இரு வருடங்களில் சுந்தர் துணிச்சலாகத் தன் வேலையை விட்டான். கைவிடப்பட்ட கப்பல்களை உடைத்து இரும்பு மற்றும் அபூர்வப் பொருட்கள் அதிலிருந்தால் அதைத் தோண்டி எடுத்து சந்தையில் விற்றான். அபூர்வப் பொருட்களின் சந்தையில் பல நேரங்களில் பணம் கொட்டியது. அவர்களின் வாழ்க்கைத்தரமே மாறியது. மூன்றாம் வருடம், அவளது இருபத்தி நாலாம் வயதில் பிள்ளை பிறந்தான். வாழ்வில் கடவுள் இத்தனை போகங்களையும் தந்திருப்பதே அவளுக்கு வியப்பாக, சில நேரங்களில் குற்ற உணர்ச்சியாகக் கூட இருந்தது.

அவள் வேலையை விட்டுவிட்டாள். முன்னர் கற்றுக் கொண்ட வயலினில் நல்ல முன்னேற்றம் அடைந்தாள். நாட்டியக் கச்சேரிகளில் வாசித்தவள் தனிக் கச்சேரிகள் செய்பவளாகவும், பெரும் பாடகர்களுக்கு பக்க வாத்தியம் வாசிப்பவளாகவும் முன்னேறினாள். இணைய வழியில் சொல்லிக் கொடுத்ததில், சுந்தருக்கு இணையாக அவளும் பல நாடுகளுக்குப் பயணித்தாள்.

எத்தனை முறை சொன்னாள், அவள் ஒரு பிள்ளையே போதும் என்று. சுந்தர் கேட்பதாக இல்லை. முப்பத்து நான்கு வயதில் கருத்தரிக்கவே பயப்பட்டாள் அவள். சுந்தர் ஆனந்தக் கூத்தாடினான். கருவில் இருக்கும் போதே குழந்தைக்குக் கண்களில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அவள் அழிக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தாலும், சுந்தர் நம்பிக்கையை விடவில்லை. சரி செய்ய முடியாத குறையோடு கண்களே இல்லாமல், அந்த இடத்தில் வெறும் சதைக் கோளங்களுடன் பிறந்த பெண் குழந்தை. அதை அவள் மனதார வெறுத்தாள். முழுமையான வாழ்க்கை என்ற கர்வத்திற்கு விழுந்த அடியோ இது? இல்லை, அவள் தோற்க மாட்டாள். அவள் பூரணி, இது அபஸ்மாரம். வீட்டிற்கு ஏற்றதில்லை; அவள் அந்தக் குழந்தையை, அந்தக் குறையை, தன்னிடம் வைத்துக் கொள்ள மாட்டாள்.

சுந்தர், உலகின் பெரும் பெரும் மருத்துவர்களிடம் பேசியே ஓய்ந்து போனான். கையறு நிலை; சரளா ஒரு வார்த்தையும் பேசாமல் தன்னைக் குத்திக் கிழிப்பதைப் போலப் பார்க்கும் பார்வையை அவனால் தாள முடியவில்லை.

‘இங்க ஒரு ஹோம்; அங்க வச்சுப் பாத்துப்பாங்களாம்; மொத்தமா முப்பது லட்சந்தான் கேக்கறாங்க.’ என்றாள் அவள்

“என்ன சொல்ற சரளா நீ? அவ நம்ம பொண்ணு; அவள எதுக்கு அனாதையா ஆக்கணும் நாம?”

‘இல்ல, இவள வளக்க முடியாது. அவளுக்கு கண்ணா நா இருக்க முடியாது. நானும் காந்தாரி மாரி கண்ணக் கட்டிக்க வேண்டியதுதான்.’

“பைத்தியமாட்டு பேசற. உனக்கு முடியல்லன்னா ஆளப் போட்டுப்போம். நா உசிரோட இருக்கச்சே எம் பொண்ண எங்கயோ விடமுடியாது.”

‘சுந்து, பி ப்ராக்டிகல். நீ மாசத்ல இருவது நாள் இந்தியாவிலேயே இருக்கறதில்ல. ஐஞ்சாறு மாசமா தள்ளிப் போட்ட கச்சேரியெல்லாம் இன்னும் ரண்டு மாசத்ல ஸ்டார்ட் ஆறது எனக்கு. ரோஷன் இருக்கான், அவன் போறும் நமக்கு. வெறுமன சென்டிமென்ட் பாத்துண்டு வாழ முடியாது.’

“என்னடி பேத்தற. அவ நம்ம பொறுப்பு; அதை சமூகத்தோட தலயில கட்டறது என்ன ந்யாயம்? அப்படித்தான் அந்த கச்சேரிக்கு என்ன அவசியம்? அத விட நீ நம்ம பொண்ண பாத்துண்டு, சந்த்ரசேகருக்கு அவரோட அம்மா  துணையாயிருந்து சொல்லிக் கொடுத்து பெரிய வயலின் வித்வானா ஆக்கின மாரி செய். அது தான் சரி.”

‘சுந்து, அதுக்கான மெனக்கெடல் எங்கிட்ட இல்ல. மேடைல உக்காந்து வாசிக்கறப்போ, பாடம் நடத்தறப்போ, என் திறமையைப் பத்தி டி வில, பேப்பர்ல, காட்றப்போ வரும் பாரு ஒரு சந்தோஷம், அது எனக்கு முக்யம்.’

“அதத்தான் விட்டுடுன்னு சொல்றேன். காலப் போக்ல அதெல்லாம் திரும்ப வந்துடும். நீயும், நம்ம பொண்ணும் சேந்தே கச்சேரி செய்யலாம்.”

‘சுந்து, உங்க வேலய விடமாட்டீங்கள்ல, அந்த மாதிரி தான் இதுவும். அதுதான் பணம் கொடுக்கப் போறோமே? வேணும்னா கூடக் கொஞ்சம் கொடுத்தா போறது. என்னால, எங்கண்ணு முன்ன எம் பொண்ணு பார்வ இல்லாமத் தடுமாற்றதப் பாக்க முடியாது. அந்த ஹோம்ல வசதி இருக்கு; இதப் போல கொழந்தைகள வளத்தறத்துக்குன்னு நெறய பேர் இருக்காங்க; இந்தக் கொழந்தைக்கும் அந்தச் சூழல் தான் நல்லது செய்யும்.’

“அவங்கள்ல ஒத்தரயோ, ரெண்டு பேரையோ நாம உதவியா வச்சிக்கலாம். நம்ம கொழந்த நன்னா இருக்கணும், சரளா. அவ அனாதயில்லடி.”

‘நா என்ன சொல்லணுமோ சொல்லிட்டேன். இந்தப் பொண்ணு நமக்கு மட்டும் கால்கட்டில்ல. ரோஷனுக்கும் தான். நம்மோட இவ இருந்தா, அவனுக்கும் மாரல் ரெஸ்பான்சிபிலிடி வந்துர்றது இல்லியா? நம்ம காலத்துக்கப்றம் அவன்னா இவளைப் பாத்துக்கணும்? இவளுக்காக அவன நாம ஏன் கஷ்டப்படுத்தணும்?’

சுந்தர் மருத்துவரிடமும், அவர் மூலமாக அந்தக் குழந்தைகள் காப்பகத் தலைவரிடமும் பேசினான்.  சுந்தரும், சரளாவும் அந்தக் காப்பகத்தாரோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

மருத்துவர் அவனிடம் சொல்லியிருந்தார், சில நாட்களிலேயே உங்கள் மனைவியின் மன நிலை மாறிவிடும். அது வரைக்கும் குழந்தை ஹோமில் இருக்கட்டும் என்று. ‘ஒரு மாசம் மட்டும் எங்க ரோஷினி, எங்க பொண்ணு, உங்க ஹோம்ல இருக்கட்டும். என் வொய்ஃப் ஒடம்பு தேறின உடனே நாங்க கூட்டிண்டு போயிடறோம். இல்லயில்ல, கொடுத்த முப்பது லட்சம் உங்க ஹோமுக்குத்தான்; பாவம், எத்தன கொழந்தங்க. ஆமாங்க, உங்க எம் டியோட பேசி அக்ரிமென்ட் போட்டு ரிஜிஸ்தரும் செஞ்சாச்சு. பணம் ஹோம் கணக்குக்கு அனுப்ச்சு ரசீது வந்தாச்சு, பாருங்க. கொஞ்சம் ரகசியமா இந்த விஷயத்த வச்சுக்கங்க. என் வொய்ஃப்புக்குக் கூடத் தெரியாது.”

சரளா வீட்டிற்குத் திரும்பி வந்து மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. அவள் குழந்தையை நினைக்கவில்லை; சுந்தர் மறக்கவில்லை; அவன் அவர்கள் கை விட்ட பெண்ணைப் பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் அலட்சியப் படுத்தினாள்; ‘என் மார்ல பால் கட்டிண்டு செத்து செத்துப் பொழச்சிண்டிருக்கேன். நீங்க வேற என்னக் கொல்லாதீங்கோ’.

ஒரு மாதம் முடியப் போகிறது. தாய்ப்பாலின்றி வளரும் தன் பெண்ணை நினைக்கையில் அவன் நெஞ்சு வெடித்து விடுவது போல் வலித்தது. இவளை  எந்த விதத்திலும் ஒப்புக் கொள்ள வைக்க முடியாததில் அவன் மறுகி மறுகி  அதுவே அவன் மனதை உடைத்து உயிரை எடுத்து விட்டதை அறியாமல், ஹோமிலிருந்து அவன் செல்லிற்கு ஃபோன் வந்து கொண்டே இருந்தது.

 

 

 

விரிவாக்கம்! – ஜெ.பாஸ்கரன்

 

இரண்டு பக்கமும் வயல்கள், புறம்போக்கு நிலங்கள் – நடுவே வளைந்து வளைந்து கருநாகம் போல் செல்லும் நேஷனல் ஹைவே எப்போதும் டீசல் வண்டிகளால் நிறைந்திருக்கும்! மத்திய அரசின் ஆணைப்படி, இன்னும் இரண்டு வண்டிகள் செல்லத்தக்கவாறு, அந்தத் தார் சாலையை அகலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. பயணத்தைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் முடிக்கவும், மாநிலங்களுக்கிடையே வர்த்தகம் பெருகவும் இது உதவும் என்று அரசு நம்பியதால் இந்த முடிவு எடுக்கப்ப்பட்டது!

இரண்டு முக்கியமான டவுன்களுக்கிடையே அமைந்திருந்தது புராதனமான அந்த சிவா விஷ்ணு கோயில். விரிவாக்கப்படும் தார் சாலையிலிருந்து நூறு அடிக்குள் இருந்த அந்தக் கோயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. சாலையை அகலப் படுத்த, அந்தக் கோயிலை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. 

இரண்டு டவுன் மற்றும் சுற்றியிருந்த பத்துப் பனிரெண்டு கிராமங்களின் வழிபாட்டுத் தலம்; பல தலைமுறைகள், பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் பெருமாளையும் சிவனையும் விட்டுவிட மனமில்லாத மக்கள் கோயிலை இடிப்பதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிராமத்துப் பெரிசுகளும், மற்ற பக்தர்களும் தார் சாலையில் அமர்ந்து ஒரு நாள் அமைதிப் போராட்டம் நடத்தினர். அளவெடுப்பது, மட்டம் பார்ப்பது என வேலை செய்ய வந்த பொது மராமத்து அரசு ஊழியர்களைத் திருப்பி அனுப்பினர். அரசுக்கு செய்தி எட்டியது.

கோயிலுக்கு எதிரில், சாலையின் மறு பக்கத்தில் ஒரு கிமீ தூரத்திற்குப் புறம்போக்கு நிலம் கிடந்தது. அதில் கொஞ்சம் ‘நீர்நிலை’ புறம்போக்கு, மீதி ‘பாதை’ புறம்போக்கு. கோயிலை இடிக்காமல், சாலையைக் கொஞ்சம் வளைத்து, இந்தப் புறம்போக்கு நிலத்தில் அமைக்கலாம் என்று கலெக்டர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இருந்தாலும் சில அரசியல் கட்சிகள், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தன. “நீர் நிலைப் புறம்போக்கு, தள்ளியிருக்கும் விளை நிலம் இவற்றுக்குக் கேடு விளைவிக்கும் போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும். அதனால், இந்த நிலத்தில் சாலை போடக் கூடாது” – எல்லா எதிர்க் கட்சிகளும் கொடி பிடித்து, பெரிய போராட்டத்தை நடத்தின. மாநிலத்தின் ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தை மிக விரிவான செய்திகளாக்கின.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான இந்த சாலை வழித் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவதுதான் நல்லது என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அரசு, அரசியல், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என எல்லோரும் ஆளுக்கொரு கருத்து சொல்ல, விஷயம் இடியாப்பச் சிக்கலாக மாறியது!

இதற்கென சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப் பட்டார். 

”பாட்டன், முப்பாட்டனெல்லாம் வணங்கிய பெருமாளுங்க. இந்தக் கோயில்தான் எங்க கொலதெய்வங்க. இத்த இடிச்சீங்கன்னா, எங்க பரம்பரைக்கே கெடுதல் வருமுங்க. கோயில வுட்டுட்டு, கொஞ்சம் தள்ளி, பொறம்போக்கு நிலத்துலெ ரோட்ட போட்டுக்கங்க அய்யா, புண்ணியமாப் போவும்”  – ஊர் மக்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தது. 

“ரெண்டு மைல் தள்ளி, கிராமத்து எல்லையில் இருக்கிற அனாதீனம் என்னும் ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்துல இதே கோயிலை, எல்லா ஆகம விதிகளோட கட்டிக் கொடுத்திடச் சொல்றேன்” என்று அரசு உறுதிமொழி  கொடுத்தாலும், பழமையான கோயிலை இடிப்பதில் ஏதேனும் கேடு வருமோ என அஞ்சினர் கிராம மக்கள்.

“இது ஆளும் கட்சியின் சூழ்ச்சி. எல்லா விளை நிலங்களிலேயும் தொழிற்சாலை, தார் சாலை என்று போட்டு, விவசாயத்தை அழிப்பதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்” என்று பெரிய அளவில், செல்வாக்கு பெற்ற தலைவர்கள் எதிர்த்தனர். 

மாதா மாதம் அரசும், எதிர்க் கட்சிகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் என எல்லோருடனும் நடத்திய பேச்சு வார்த்தைகள், எந்த முடிவும் இல்லாமல் தோல்வியில் முடிந்தன. 

ஒரு வருடத்தில் சிவன், விஷ்ணு கோயில் இடம் மாறியது. ‘எங்கும் சாமி இருக்கிறான்’ என்று நம்பும் கூட்டம் ஒன்று மக்களிடையே பேசி, பொறுமையும் நம்பிக்கையும் கொடுத்தது. நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி, முன்னின்று ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் கோயிலை நிர்மாணித்து, பக்தர்களுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுத்தார். ஒரு நல்ல நாளில், கோயில் கும்பாபிஷேகமும் நடந்தது. எதிர்ப்பு ஏதுமின்றி, சிவனும், பெருமாளும் புதிய கோயிலில் அருள்பாலிக்கத் தொடங்கினர்!  

அரசின் திட்டப்படி, சாலை விரிவுபடுத்தப் பட்டது. புறம்போக்கு நிலம் காப்பாற்றப் பட்டது. 

நான்கு வழி புதிய சாலை வந்ததினால், போக்குவரத்தும் அதிகமாகி, சாலையின் இருபுறமும் , கடை கண்ணிகளும் பெருகின. வியாபாரமும் வளமும் சேர்ந்தன. இடையில் இருந்த ‘டோல்’ கேட்டின் வருமானம் கணிசமாகப் பெருகியது.  

முன்பு கோயில் இருந்த இடத்திற்கு எதிர்ப் பக்கத்தில், சாலை போட மறுக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தில், பல வண்ணக் கொடிகளுடன், வீட்டு மனைகள் விற்பனைக்கு தயாராயின. ஞாயிறு தோறும் பேருந்துகளில் மக்கள் வந்து, மனைகளைப் பார்வையிடத் தொடங்கியிருந்தனர்.

புராதனக் கோயிலுக்கு அருகில், நல்ல நிலத்தடி நீருடன், நேஷனல் ஹை வே க்கு மிக அருகில் என வீட்டு மனைகள் விற்பனைக்குத் தயாராகின. 


குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் – சதுர்புஜன்

மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது (Photo)

மழையே வா - இயற்கை கவிதை

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
 13. ஜன கண மன ! – ஜனவரி 2021
 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
 15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
 16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
 17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
 18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
 19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
 20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
 21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021
 22. சிட்டுக் குருவி – மே   2021
 23. ஆகாய விமானம் – ஜூன் 2021
 24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
 25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
 26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
 27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
 28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021

 

 1. மழையே வா !

மழையே மழையே வா வா !

பருவத்தில் நீயும் பெய்தே வா !

உன்னால் நாங்கள் வாழ்கின்றோம் !

உன் வரவால் புத்துயிர் பெறுகின்றோம் !

 

வாழ்க்கைக்கே நீ ஆதாரம் ! –  நீ

இல்லையென்றால் சேதாரம் !

வா வா வந்தெமை வாழ்விப்பாய் !

பூமியில் உயிர்களைக் காத்திடுவாய் !

 

தூறல் ஒன்று வந்துவிட்டால் –

உடனே நாங்கள் அதில் நனைவோம் !

சாரல் என்றால் ஜாலிதான் !

வீட்டுக்கு நாங்கள் வரமாட்டோம் !

 

இடியும் மின்னலும் சேர்ந்தடித்தால் –

என்றும் எனக்கு சந்தோஷம் !

கொட்டும் பெருமழை பெய்துவிடும் !

தண்ணீர் இங்கே சேர்ந்துவிடும் !

 

செடி கொடி மரங்கள் யாவையுமே –

தண்ணீர் இருந்தால் தழைத்துவிடும் !

பூச்சி விலங்கு பறவையினம் –

அனைத்தும் வாழும் மழை இருந்தால் !

 

மரங்களை நாங்கள் வளர்த்திடுவோம் !

மனதினில் அன்பை பயிர் செய்வோம் !

மழையே நீயும் வந்துவிடு !

மகிழ்ச்சியை வாரித் தந்துவிடு !

 

***************************************************

 

 1. பாரதிக்கு பாப்பா சொன்னது…….!

 

பாரதி மீசை பார்த்தாலே

வீரம் பெருகும் – ஆம் பாப்பா !

முண்டாசு தலையைப் பார்த்தாலே

மேனி சிலிர்க்குது பார் பாப்பா !

 

பாப்பா பாட்டு தந்திட்டார் !

வாழும் நெறியைக் காட்டிட்டார் !

பாரதி என் தமிழ்ப் பாட்டனடா !

சாரதி அவனே – தேர் பூட்டிடடா !

 

ஆணும் பெண்ணும் சரி சமமாய் –

வாழும் அறிவுரை கூறிட்டார் !

சாதிகள் இல்லை என்றிட்டார் !

சமத்துவக் கருத்துகள் தந்திட்டார் !

 

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடச் சொல்லிட்டார் !

சக்தியைக் கொண்டாடிட்டார் !

சகலரும் ஒன்றே என்றிட்டார் !

 

ஓடி விளையாடும் போதெல்லாம் –

ஓயாமல் அவரை நினைக்கின்றேன் !

உத்தமன் அவரிங்கு பிறந்ததனால் –

உயர்ந்தது தமிழ்நாடென்றிட்டேன் !

 

பாரதி உன்னைப் போற்றிடுவேன் !

உன் நினைவை என்றும் காத்திடுவேன் !

தமிழ்ப் பாடல் என்றும் பாடிடுவேன் !

பாரதி பாரதி என்றிடுவேன் !

 

 

“தெய்வத்தின் ஒளி” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Why Chennai loves this special school for the deaf - Rediff.com India News

வரும் முன் நலன் காப்போம் என்ற மந்திரத்தைப் பரப்பி விடுவது எப்போதுமே எனது குறிக்கோள். கல்வி-மனநலம் கலவையுள்ள பல வொர்க் ஷாப்பில் இதில் அடங்கும். பல குழந்தைகள் நலனை அடைய இதை ஒரு நல்ல கருவியாகக் கருதினேன். கல்வி-மனநலன் கலவை தகவல்கள் சேகரித்துப் பல மாதங்களுக்கு ஆசிரியர் குழுக்களுக்கு வர்க்ஷாப் வடிவமாகச் செய்வேன். அப்படித் தான் இந்த ஆசிரியர் கூடத்தில் நடந்து கொண்டிருந்தது.

இவர்களுக்கு, குழந்தைகளின் மனநலத்தை எவ்வாறு கண்டறிதல் என்பதைப் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தோம். இதை அவர்கள் வகுப்பில் ஒரு மாதத்திற்குக் கவனித்து, குறித்து வர வேண்டும் என்று அமைத்தேன். அதையொட்டிய பல தகவல்களை வொர்க் ஷாப்பில் நடத்தினேன்.

கால அவகாசம் முடிந்ததும், பலவிதமான கேள்வி, சந்தேகங்கள் குவிந்தன. இங்கே பூஜா டீச்சரின் அனுபவத்தைப் பகிரப் போகிறேன்.

ஆங்கிலம் கற்றுத் தருபவள் பூஜா டீச்சர். தன்னுடைய நான்காம் வகுப்பில் உள்ள அண்ணன் ஆர்யவர்மன், மற்றும் ஒன்றாம் வகுப்பில் உள்ள தங்கை அஸ்வதி இருவரும் “அம்மா” என்ற சொற்கள் வந்தாலே அழுது விடுவதாய்ப் பகிர்ந்தாள். அவர்கள் எழுத்தில் விதவிதமான பிழை இருப்பதாகவும் கூறினாள். பல வாரங்களாக இருவரையும் யாரிடமாவது காட்ட வேண்டும் என்ற நினைப்பு இருப்பதாகவும், என்னுடைய அப்ஸர்வேஷன் (observation) ஹோம்வர்க் செய்யும் போது, இதன் தேவை புரிந்தது என்றாள்.  அவர்களை என்னிடம் அழைத்து வருவதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பேசி முடிவெடுத்தோம்.

அப்படியே, அண்ணன் தங்கை இருவரையும் என்னிடம் அழைத்து வந்தாள் பூஜா டீச்சர். சிறுவர்கள் என்பதால் கூடவே அவர்களின் தாயார் மஹாவிபூதி வரவேண்டும் என்றதால் அவளும் வந்திருந்தாள். இருபத்தி ஐந்து வயதுடையவள்.

ப்ளே தெரபி வடிவில் இரு குழந்தைகளையும் முதலில் ஒன்றாகப் பார்த்தேன். எழுத்தோ, படிப்போ சம்பந்தப்பட்ட எவையும் இல்லாமல் கற்பனைக் கதைகள், பாடல்கள், வரைவது, புதிர், என அமைத்தேன். இருவரும் அம்மா என்ற சொல்லைத் தவிர்த்தார்கள்.

குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்துச் செய்தார்கள். அவர்களைப் பற்றிப் புரிய வாய்ப்பானது. தனித்துச் செய்யவும் அமைத்தேன்.

அவ்வப்போது ஒரு துளி சந்தோஷம் எட்டிப் பார்த்து ஓடிப்போய் விட்டதைக் கவனித்தேன். பகிர்ந்ததில், இன்னல்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொண்டேன்.

மஹாவிபூதி தனக்கு அம்மா யார் என்று தெரியாததால், குழந்தைகள் இந்த சொல்லை உபயோகித்தால் தனியாக அறையில்  மூடிவிடுவாள், குறிப்பாக ரித்திகா பாட்டி அருகிலிருந்தால். இதனால் குழந்தைகள் அந்த சொல்லைக் கண்டே அஞ்சினார்கள். தவிர்த்தார்கள்.

விலங்கோ, பறவையோ, மனிதனோ மணிக்கட்டில் பேண்ட் ஏய்ட்டை (band aid) போட்டு, அதைச் சுற்றிச் சிவப்பு நிறம் போட்டு, அந்த காயத்தை, கட்டை விவரிக்கச் சொன்னால் “அப்பாக்கு” என்றார்கள். இந்த நிலைமையைச் சீக்கிரமாகக் கவனிக்க வேண்டியது என்று எனக்குத் தோன்றியது.

சில ஸெஷன்களுக்கு பிறகு அவர்களாகவே படங்களுக்குப் பெயர் சூட்டினார்கள். எக்கச்சக்கமான பிழைகள். 

இதுவரை நடந்த பல விஷயங்கள் ஆர்யவர்மன், அஸ்வதி மனதில் சங்கடங்கள் நிறைத்திருந்ததைக் குறித்தது. அதற்கு மூல காரணி, அப்பா அடிக்கடி அழுவது, பெற்றோர்கள் இடையே மனஸ்தாபம், அம்மா எப்போதும் “யார் என் அம்மா?” எனப் புலம்புவது என்ற வீட்டுச் சூழல். அதனுடைய ஒரு பிரதிபலிப்புதான், குழந்தைகளின் எழுத்துப் பிழைகள். மன வேதனை இவ்வாறு ஆக்கலாம். இதைச் சரி செய்ய சில ஸெஷன்கள் தேவை என மஹாவிபூதிக்கு விளக்கினேன். தயக்கத்துடன் ஒப்புக் கொண்டாள். பூஜாவிடம் பகிர்ந்தேன்.

ஸெஷன்களில் முளையும் மொட்டுக்கள் போலவே இந்த ஆர்யவர்மன் அஸ்வதி தென்பட்டார்கள். இருவரையும் ஒன்றாகவும் தனியாகவும் பார்த்து வந்தேன்.

குழந்தைகள் ஸெஷன்களில் செய்ததை மையமாக வைத்தே அவர்கள் சங்கிலிக் கதைபோல உருவாக்கும் விளையாட்டு ஒன்று அமைத்தேன். தாம் எழுதுகிறோம் என்ற எண்ணத்திற்கு அப்பால் போவதற்காகவே இப்படி. விறுவிறுப்பாக மூன்று நான்கு வரிகளில் கதை எழுதத் தொடங்கிய கைகள் தயங்கி, பிறகு வாயால் கதையை வளர்த்தார்கள். ஒவ்வொரு உருவாக்கத்திலும், அவர்கள் குடும்ப நிலை, உணர்வுகள் எதிரொலித்தது. திரும்பத் திரும்ப அம்மா குறைபடுவது, அப்பா தான் தோல்வியுற்றவன் என வர்ணிப்பது வந்து கொண்டே இருந்தது.

அவர்களின் எழுத்தில் பல சிக்கல் கண்டதும், மஹாவிபூதி அவர்களுக்குக் கற்றுத்தரும் விதத்தைப் புரிந்து கொள்ள, நான் அவளையும் ஸெஷன்களில் சேர்த்துக் கொண்டேன். மஹாவிபூதி எழுத்துக்களிலும் பல பிழைகள். அவளுடைய கர்வமான சுபாவம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அவளுடைய பெற்றோரின் அதிகமான பாதுகாப்பும். அதாவது தத்து எடுத்தவள் என்பதால் யாரும் அவளைத் திருத்தவோ, குறை கூறவோ கூடாது. அவர்களும் இதில் கடைப்பிடிக்க மஹாவிபூதி தான் பிழையே செய்வதில்லை என நினைத்துக் கொண்டாள். ஆறு ஸெஷன்களில் இதை  விளக்கிட, புரியவைக்க, அவள் ஒப்புக் கொண்டு புரிய வந்தது.

மஹாவிபூதியின் கர்வமான சுபாவம், அவள் மனதில் போராட்டம் இருப்பதைக் காட்டியது. அவளுடைய பிழைகளுக்கும் காரணம் இந்த மனநிலை தான். அத்துடன் அவளுக்கு தன் எழுத்துப் பிழைகளைக் கண்டறியத் தெரியவில்லை. பாடங்களை மனப்பாடம் செய்ததாக ஒப்புக்கொண்டாள். மூவருக்கும், பிழைகளை சரி செய்வதற்கென்று இருக்கும் ஸ்பெஷல் எஜுகேட்டர் (educator) ஏற்பாட்டை அவளுக்கு விளக்கினேன். ஒப்புக்கொண்டாள்.

அதற்கான ஏற்பாடு செய்வதற்கு முன்பு பூஜா டீச்சர், மற்ற ஆசிரியர்களிடமும் உரையாடி பிள்ளைகளின் கற்றல் முறையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் சில பாடங்களின் நடுவில் பதில் அளிக்காமல், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோம்வர்க் இருந்திடும். வரைபடங்கள் எல்லாம் வெறுப்பு, தனிமையைக் குறித்தது.

ஆர்யவர்மன், அஸ்வதி வகுப்பு ஆசிரியை, குழந்தைகளிடம் தன் குடும்பத்தினரை ஒரு ஆல மரம் போல் பெயர்களுடன் புகைப்படம் ஒட்டித் தயார் செய்யச் சொல்லி இருந்தார். ஆர்யவர்மன் மற்றும் அஸ்வதி இருவரின் மரங்களிலும் அம்மாவின் பெற்றோர் பெயர், படம் தவிர்த்து மீதி எல்லோரும் இருந்தார்கள். பூஜா டீச்சரின் கவனத்திற்கு இது வந்ததும் என்னிடம் காட்டினாள். இது குடும்பத்தில் ஏதோ பிரச்சினை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தது. இதைக் கையாள முடிவெடுத்தேன்.

அதற்கு முன்பாக, ஏற்கனவே மஹாவிபூதி, ஆர்யவர்மன், அஸ்வதியிடம் சொல்லி அவர்கள் ஆமோதத்துடன் ஸ்பெஷல் எஜுகேட்டரை அறிமுகம் செய்தேன். டீச்சரும் குழந்தைகளும் நன்றாக இணைந்தார்கள். அதுதான் மதர் மேரி டீச்சர்!

குறிப்பாக இந்த மதர் மேரியை ஸ்பெஷல் எஜுகேட்டராகத் தேர்ந்தெடுத்ததில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!! ஒன்று, அவர்களை எல்லோரும் “மதர் மேரி டீச்சர்” என்று அழைப்பது. “அம்மா” என்ற சொல்லைத் தவிர்க்க முடியாது! வாரத்தில் இரண்டு நாளைக்கு வெவ்வேறு பாஷையில் “அம்மா” என அழைப்பது என்ற பழக்கம் வைத்திருந்தாள். மற்ற பாஷையை மதிக்க இந்த சொல்லை ஒரு ஊன்றுகோலாக அமைத்திருந்தாள். அப்படிப்பட்ட மதர் மேரி இவர்கள் படிக்கும், எழுதும் விதத்தைத் திருத்த ஆரம்பித்தாள்.

வகுப்பில் ஆர்யவர்மன், அஸ்வதி மாறிவருவதை அறிந்தேன். அழைத்து வந்த பூஜா டீச்சர் பள்ளிக்கும் எனக்கும் இணைக்கும் பாலமாக இயங்கினாள்.

நன்றாகி வருவதால், குழந்தைகள் என்னிடம் வருவதை வாரத்திற்கு ஒரு முறை என்று குறைத்தேன்.  ஸெஷன்கள் முடியும் போது பல மாற்றங்கள் இருக்கும். ஆனால் மறுபடி வரும்போது அப்பா அசோக் கை அடிபட்டதைப் பற்றிச் சொல்ல, இவையெல்லாம் மறைந்து போயிருக்கும்.

அஷோக் என்னிடம் வரப் பரிந்துரைத்தேன். எரிச்சல் பொங்க வந்தான். ஆர்யவர்மன் அஸ்வதி சொன்னது போல, மணிக்கட்டில் பல கீறல்கள், புதிதாக ஒரு பேண்ட் ஏய்ட். இருபத்தி எட்டு வயதுடையவன். உடை நடை எதிலும் ஆர்வம், விருப்பம் இல்லை என்றான். ஸ்டோர் மேனேஜர், நல்ல சம்பளம். ஆனால் இப்போதெல்லாம் வேலையில் கவனம் செலுத்தக் கடினமாக இருப்பதாகச் சொன்னான். ஏன் கல்யாணம் செய்து கொண்டோம் என்று மனம் தவிக்கிறது என்றான். எல்லா வர்ணனையும் அவன் மன உளைச்சலைக் காட்டியது.

தானே தன்னைக் காயம் படுத்திக் கொள்வது, தற்கொலை எனப் பயமுறுத்திப் பேசுவது, இவை அவனுக்கு மன உளைச்சல் மாத்திரை தேவை என்று எடுத்துக் காட்டியது. அதற்காக மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என அசோக்கிடம் தெரிவித்தேன். நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், நாங்கள் மாத்திரை மருந்து கொடுப்பதில்லை என்றதை விளக்கினேன். சந்திக்க வேண்டிய ஸைக்காட்ரிஸ்ட்டின் விவரங்களைத் தந்தேன். அந்த டாக்டரை அழைத்து, க்ளையண்ட் பற்றிக் கூறி, ஒரு ரிப்போர்டும் அனுப்பி வைத்தேன். மறுநாள் டாக்டர் அழைத்து, அசோக்குக்கு மருந்துகள் தந்ததாகவும், வாரத்தில் இரு முறை தெரப்பி அதாவது நேருக்குநேர் பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

இங்கே, என்னுடன் மஹாவிபூதி ஸெஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அவளுடைய பட்டப் படிப்பு முடித்ததும் கல்யாணம் ஆனது. கொஞ்சமும் பிடிக்காமல் மஹாவிபூதி கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டாள். வீட்டில் ஹாயாக இருக்க வேண்டும் என நினைத்தாள். கல்யாணம் முடிவான பிறகே அவள் இதுவரையில் அறியாத ஒன்றைத் தெரிந்து கொண்டாள்.

அசோக் குடும்பத்தில் கேட்ட போது, மஹாவிபூதியின் பெற்றோர் சுந்தரம், ரித்திகா மஹாவிபூதி தத்து எடுக்கப் பட்டவள், கடவுளின் ஒளி,  என்பதைச் சொல்லி இருந்தார்கள். தன்னை தத்து எடுக்க சுந்தரம் வேலை மாற்றி, ரித்திகா புத்தகக் கடையை மூடியது எல்லாவற்றையும் பற்றி அன்று தான் மஹாவிபூதி தெரிந்து கொண்டாள். திடீரென அதை ஏற்க மிகுந்த வேதனையாக இருப்பதாகக் கூறினாள். தன்னிடம் முன்னரே சொல்லாதது நம்பிக்கைத் துரோகம் என்றாள்.

முதல் சில ஸெஷன்களில். தத்து எடுத்ததைப் பற்றிச் சொல்லாததைப் புரிந்து கொள்ள, சுந்தரம் ரித்திகாவுடன் மஹாவிபூதி வருவதாக ஏற்பாடு. மூவரின் பல உணர்வுகள் பொங்கி எழுந்தது. அதனால் பல தெளிவும் ஏற்பட்டது. சுந்தரம், ரித்திகா தத்து எடுத்ததை மறைக்க வேலையை மாற்றி, வெளியூர் மாறினார்கள். வெளிப்படையாகக் குழந்தை தத்து எடுக்கப் பட்டவள் என்று சொன்னால் ரித்திகா மலடி என்றாகும், சுந்தரம் ஆண்மை கேள்விக்குறியாகும். இதற்கு அஞ்சி அவ்வாறே விட்டார்கள். இப்படிச் செய்ய ரித்திகாவின் தங்கை பரிந்துரை செய்தாள். தத்து எடுத்த நிறுவனம் இதை ஆமோதிக்காததால் அவர்களிடமிருந்தும் விலகி விட்டார்கள். 

யாரும் மஹாவிபூதியிடம் தத்து என்று சொல்லி விடக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். எந்தக் குறையும் தெரியாமல் இருக்க அளவுக்கு மீறிய செல்லம், சலுகைகள் குவித்தார்கள். பெற்றோர் அதிகமாகப் புகழ்வதாலேயே மஹாவிபூதிக்கு தன்னைப் பற்றிய கர்வம். யார் எது சொன்னாலும் அவர்களைத் துச்சமாகப் பார்த்து விட்டுச் சென்று விடுவாள்.

இந்த நடத்தைகள் தாக்கத்தை இப்போதைய வாழ்வில் நேர்வதைப் பட்டியல் இட்டோம். அடுத்த பல வாரங்களுக்கு இவைகளைப் பரிசீலனை செய்தோம். தெளிவு பெற ஆரம்பித்தது. உதாரணத்திற்கு, வருடாவருடம் மஹாவிபூதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் அவளைத் தத்து எடுத்த விடுதியில்  தான் நடைபெறும். . மஹாவிபூதி அங்கே ஏன் போகிறோம் என்ற எந்த சவாலும் கேட்காமலிருந்தாள். கர்வமும் கசிந்தது. அங்கு உள்ள அனாதையாக இருப்போருக்கு உபகாரம் செய்வது என்ற பெற்றோரின் பரந்த மனப்பான்மை என எடுத்துக் கொண்டாள்.

ஸெஷன்களில் இதை எடுத்து பரிசீலனை செய்ததில் மஹாவிபூதி தன்னைக் கண்ணைக் கட்டிய விதத்தை உணர்ந்தாள். பெற்றோரும் இந்த சந்தர்ப்பத்திலும் உண்மையைப் பகிரவில்லை.  ஒரு முறை கூட இது தன்னை அங்கிருந்து எடுத்து வந்ததால் எனச் சுந்தரம், ரித்திக்கா புரிய வைக்க வில்லை.

அதுமட்டுமின்றி மஹாவிபூதியின் சித்தி தன் தரப்பில் பெற்றோருடன் அவளுக்கும் இருக்கும் ஆறு வித்தியாசங்களைக் காட்டினாள். ஏன் இப்படிச் சொல்கிறாள், இவளா எனக்குப் பிடித்த சித்தி என மஹாவிபூதி வியந்தாள்!

சுந்தரம் ரித்திகா உண்மையை முன்னரே சொல்லாததின் விளைவை ஸெஷன்களில் ஆராய்ந்தோம். மூவரும் பகிர்ந்து கொள்ள, மஹாவிபூதி இப்போது புரிந்து கொண்டாள். சொல்லாமல் இருந்தால் நிதர்சனமாக ஓடி விடும் என எண்ணி குழந்தையிடம் சொல்லாமல் விட்டது, தத்து என்ற வித்தியாசத்தைக் காட்டாமல் இருக்க. அவர்கள் மனதில் உண்மை மறைத்து வைக்க ஊசலாடிய போராட்டம். மஹாவிபூதியை தெய்வத்தின் ஓளி ஸ்தானத்தில் வைத்ததாலும். இவ்வாறு தாங்கள் மனதில் நினைத்து நடந்து கொண்டதெல்லாம் எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றதைப் பெற்றோர்கள் பல ஸெஷன்களுக்கு பிறகே உணர ஆரம்பித்தார்கள்.

தன் பங்குக்கு மஹாவிபூதிக்கு தன்னுடைய மனப்பான்மை, கர்வத்தைப் பற்றிய புரிதல் ஆரம்பமானது. அவளுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வரும் என்பதால் தன்னை பற்றி உயர்வாக நினைத்தாள். எழுத்தில் பிழைகளைச் சட்டைப் படுத்தவில்லை. தவறாக எழுதினாலும் திருத்திக் கொள்ளவில்லை. பெற்றோர் நன்கொடை தருவதால் பள்ளியில் ஆசிரியர்கள் பல அட்ஜஸ்ட்மென்ட் செய்ததில் மஹாவிபூதியின் தவறுகள் திருத்தப்  படவே இல்லை. இப்போது ஆர்யவர்மன், அஸ்வதிக்கு உதவுவதற்காகத் தன்னைச் சரிசெய்ய மதர் மேரி டீசர் ஸெஷன்களில் ஆர்வம் காட்டினாள்.

அம்மா அப்பா மேல் கோபம் தளர்ந்து வர, உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டாள். ஸெஷன்கள் போகப்போக மெதுவாகச் சமாதானம் ஆக ஆக, தனக்கென்ற குடும்பம், கல்யாணம் உருவாக்கினார்கள் என்ற நன்றி உணர்வும் தலை தூக்க ஆரம்பித்தது..

உறவுகளைப் பற்றிப் பேசி வரும்போது மஹாவிபூதி செய்யும் இன்னொரு விஷயம் வெளியானது. கல்யாணம் ஆனபிறகும் அப்பா மடியில் உட்காருவது, அசோக், அவன் பெற்றோர், ரசிக்கவில்லை. ரித்திகா எதிர்த்தாலும் உட்கார்ந்தாள். சுந்தரம் மௌனமாக இருந்தான். அதேபோல் பெற்றோர் நடுவில் உட்காருவது, படுத்துக் கொள்வது. நம் கலாச்சாரத்தில் ஒரு கட்டத்தில் இவைகளைத் தவிர்க்கவே பல செய்-தவிர் என்றவை உள்ளன. பாதுகாக்கவே. மேலும் மற்றவர்களுக்குத் தர வேண்டிய இடைவெளி தர, உணர வைப்பதும் இதில் அடங்கும். மீறினால், உறவுகள் இதனால் முறியக் கூடும்.

ஸெஷனின் இந்தக் கட்டத்தில், மஹாவிபூதிக்கு தனக்கும் அசோக்கின் இடையே நேரும் சஞ்சலங்கள் புரிய ஆரம்பித்தது. அசோக்கை அனுப்பிய ஸைக்காட்ரிஸ்டிடம் கலந்து பேசினேன். மெரைட்டல் தெரப்பி (கணவன் மனைவியை சிகிச்சைக்கு பார்ப்பது) செய்ய முடிவானது. மேலும் மஹாவிபூதி மனதில் அசோக் பரிதாபப் பட்டு ஏற்றுக்கொண்டு விட்டதாக எண்ணம் இருந்தது. இந்த எண்ணத்திற்குப் பதில் கிடைக்கும், இருவரையும் ஒன்றாக ஸெஷன்களில் பார்ப்பதில்.

ஆமாம் மறைத்தால் இவ்வாறும் நேரலாம். மஹாவிபூதியின் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது…

 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்- சிவமால்

எண்ணங்கள்: காயத்ரி மந்திரத்தை!

‘ஏன்பா.. அந்தம்மா ஏன் தன் மகனை அப்படித் திட்டிட்டு இருக்காங்க..?’

‘ஆமா.. அவன் நாள் முழுதும் காயத்ரி ஜபம் பண்ணிட்டிருந்தா கோபம் வராதா..?’

‘அப்படியா.. நூற்றி எட்டு காயத்ரி சொன்னாலே குடும்பம் சுபிட்சமா இருக்கும்னு சொல்வாங்க..நாள் முழுதும் ஜபம் பண்ணறார்னா..நல்லதுதானே. அதுக்காகவா திட்டறாங்க..?’

‘ஆனா.. அவன் ஜபம் பண்ணும் காயத்ரி
அந்தக் கடவுளல்ல.. அவனுடைய மனைவி.

பாரதி 100

செப்டம்பர் 11  2021 – நம் செந்தமிழ் நாட்டின் மகாகவி பாரதி   அமரத்துவம் அடைந்து 100 ஆண்டுகள் மறைந்துவிட்டன. 

இம்மாத  குவிகம் அட்டையை அலங்கரிக்கும் பாரதி மகானை  – நம் மனத்தில் என்றென்றும் நினைவில் நிறுத்தி வந்தனை செய்து தமிழ் உள்ளவரை வாழிய நீவிர் என்று வாழ்த்தி வணங்குவோம்.   

 

பாரதி நினைவு நூற்றாண்டு   விழாவை நாம் வானவில் பண்பாட்டு மையம் மிகப் பெருமையுடன் கொண்டாடியது. 

அது சமயம் பாரதிக்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் அவர்கள் கூறினார்கள்.  

அதே விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல சிறப்புத் திட்டங்களை அறிவித்தார். 

தமிழக முதல்வர் பாரதி நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அறிவித்த 14 திட்டங்கள்: 

1. பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், ரா.அ. பத்மநாபன், தொ. மு. சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய. மணிகண்டனுக்கும், தலா மூன்று லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.

4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும், பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிப்படும்.

6. பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டுக்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.

10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

11. உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவுக்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மெட்ராஸ் பாஷையின் வரலாறு

ஸ்ரீராம் சிறந்த சரித்திர வல்லுனர் மற்றும் பாரம்பரியத்தின் காவலர். மியூசிக் ஆகாடமியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்.  

Heritage walks என்ற தலைப்பில் சென்னையின் பல இடங்களுக்குச் சென்று சென்னையின் பாரம்பரியத்தை மக்கள் மனதில் நிலைபெறச் செய்தவர் . 

சென்னைத் தமிழ் பற்றி அவர் என்ன கூறுகிறார் என்று கேட்போமா? 

Sriram V.jpg

யுவ புரஸ்கார் எஸ் பால- பாரதி

பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு - எழுத்தாளர் எஸ்.பால பாரதி தேர்வு - YouTube

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகின்றன.

இதேபோல் சிறந்த படைப்புகளுக்கு யுவ புரஸ்கார், சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் என சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது எழுத்தாளர் எஸ்.பால பாரதியின் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுடன் அவருக்கு 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை அவர் பெற உள்ளார். இதேபோல் துலக்கம், அன்பான பெற்றோரே, சந்துருக்கு என்னாச்சு, புதையல் டைரி, பூமிக்கு அடியில் ஒரு மர்மம் முதலிய நூல்களை யெஸ். பலபாரதி எழுதியுள்ளார்.

இதனிடையே குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும். பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளதாகவும், இந்த நூலுக்கு விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் பாலபாரதி தெரிவித்துள்ளார்.

கம்பன் கவிநயம் – விஜயலக்ஷ்மி

காவிய கவிஞர் கம்பர் | Dinamalar
குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும்                                                                                                                     என்றென்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் ஒரு தமியன்                                                                                                                             சென்றான்
பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான்.
தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள்.
முன்னால் வீசி விரும் கவரி இல்லை.
பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை.
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள்.
இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது.
விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது…வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது.
விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது…இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது.
பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது.
இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான்.

சாதுரியம் - என் நினைவலைகளில் கம்பன்....

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ

 

தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,

சோலையை நாட்டிய மேடையாகவும்

மயிலை நடன மாதராகவும்

குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்

தாமரை மலரை விளக்காகவும்

மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்

வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்

பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து

தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.

இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன.

கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.

பூரண குணம் – செவல்குளம் செல்வராசு

பாலாவுட்

பரிச்சயமில்லாதவர்களைப் பார்த்து புன்னகைத்தால்

என்னவோ போலப் பார்கிறார்கள்

பரிச்சயப்பட்டவர்களோ பயப்படுகிறார்கள்

உறவுகள் சந்தேகங்கொள்கிறார்கள்

நண்பர்கள் புறக்கணிக்கிறார்கள்

 

தின்பண்டம் எட்டாத குழந்தையை

முத்தம் கொஞ்சி ஆசையாகத் தூக்கினால்

கடைகாரர் பதட்டமடைகிறார்

 

உயிரென நேசித்தவர்களோ

தள்ளியிருந்தே ஆறுதல் சொல்கிறார்கள்

 

அன்பில் தத்தளிக்கும் சொற்களை

யாரிடமாவது பேசிவிட ஏங்குகிறேன்

நிராகரிப்பின் வலி தாளாமல்

வசைச்சொற்களைப் பெருக்குகிறது மனம்

 

மனதினுள் ஒப்புவித்தும் தீராத

உபரி சொற்கள்

உதடுகளில் உதிர்ந்துவிடும்போது

சந்தேகிக்கிறாள் அம்மாகூட

 

இன்னும் “கிறுக்கன்” என்றே அழைப்பவர்களுக்கு

எப்படி நிரூபிப்பது நான் பூரண குணமானதை

 

 

 

குண்டலகேசியின் கதை – 14 – தில்லை வேந்தன்

 முன் கதைச் சுருக்கம்:

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’ என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன், அவளை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். ஆனால் அவள் தந்திரமாக அவனைக் கீழே தள்ளிக் கொல்கின்றாள்……

 

 பத்திரை வருந்திப் புலம்புதல்

 

பொன்பொருள், வீடு, தோற்றப்

       பொலிவுடன் இளமை சேர்ந்தால்,

இன்பமே விளையும் என்பர்.

       எனக்கது நடக்க வில்லை!

முன்புநான் செய்த வற்றால்

      மூண்டதோ இந்தத் தொல்லை?

அன்பினால் நாயின் வாலை

       அசைத்தனன்  நிமிர வில்லை!

         

   காதலிலும் தோற்றேன், என்றன்

     கணவனைக் கொன்று தீர்த்தேன்,

கோதிலாக் குடிப்பி  றப்பும்

     குன்றிடப் பழியைச் சேர்த்தேன்.

தீதிலா  உறவை   மீண்டும்

      சென்றுநான் காண மாட்டேன்.

ஏதுநான் செய்வேன் ஐயோ

      எங்குநான் செல்வேன் அந்தோ?

 

கால்போன போக்கில் நடந்து செல்லல்

 

ஆல்போன்ற தொல்வணிகக் குலத்தில் தோன்றி

      அருங்கல்விக் கேள்வியெலாம் மறந்து விட்டுச்

சேல்போன்ற விழிமங்கை சிந்தை கெட்டுச்

        சிறுகாம வலைப்பட்டு துன்ப முற்றுச்

சால்பற்ற கள்வனுக்கு வாழ்க்கைப் பட்டுச்

       சரிவினிலே கொடியவனைத் தள்ளி விட்டுக்

கால்போன போக்கினிலே நடந்து சென்றாள்

      கல்முள்ளும் மெல்லடியால் கடந்து சென்றாள்

 

அழகிய கூந்தலைப் பனங்கருக்கால் பறித்தல்

 

மனையை வெறுத்தாள், மகிழ்ச்சி வெறுத்தாள்,

வினையை வெறுத்தாள், விதியை வெறுத்தாள்,

தனையும் வெறுத்தாள், தலையின் குழலைப்

பனையின் கருக்கால் பறித்தாள் எறிந்தாள்.

 

            (குழல் — கூந்தல்)

 

சுருண்ட முடி வளரக் குண்டலகேசி ஆதல்

 

வண்டினங்கள் மொய்க்கின்ற மலர்சுமந்த கருங்குழலைக்

கண்டவர்கள் உளம்வருந்தக் களைந்தனளே பத்திரையாள்

மண்டுகின்ற சுருள்முடியும் வந்தங்கு வளர்ந்திடவும்,

குண்டலத்துக் கேசியெனக் கொண்டனளே புதுப்பெயரை.

           (குண்டலகேசி– சுருண்ட முடி கொண்டவள்)

 

 புத்த மதத் துறவியிடம் தன் கதையைக் கூறுதல்

ஐம்பெரும் காப்பியங்கள் கதை | பட்டம் | PATTAM | tamil weekly supplements

சுமையுடலால்  சோர்வடைந்து துயருற்றுத் திரிகையிலே,

தமையுணர்ந்த புத்தனவன் தகவுடைய அடியவராம்,

அமைதிநிலை துறவியவர் அவளெதிரில் நடந்துவர,

இமைவிரியக் கண்டவளும் எடுத்துரைத்தாள் துயர்க்கதையை

(தொடரும்)

ஓட்டைப்பானை – எஸ் எஸ்

வாட்ஸ் அப்பில் யாரோ ஒரு ‘சென்டர் பார்வார்ட்’ வெகு  சிரத்தையா ஒரு மெஸ்ஸெஜ்  அனுப்பி இருக்கிறார்  !

Leaking Bucket! 

எங்கிருந்து அவர் இதை எடுத்தாரோ?

எந்த  மகானுபாவர் இதை   எழுதினாரோ ?

அதைத் தமிழில் மொழிபெயர்த்த பாவத்தைத் தவிர வேறொன்றும் நான் செய்யவில்லை 

அனைவருக்கும் நன்றி !!

 

ஓட்டைப்பானை

சோத்து மூட்டை: பௌலோ கோல்கோ வின் குட்டிகதை - 3 , ஓட்டை பானை

சாமி கும்பிடும்போது உம்எண்ணம் அலை பாய்கிறதா ?

புரிந்துகொள் நீர்  ஓர்  ஓட்டைப் பானை என்று!

வந்தவரை வரவேற்று சொந்தங்களை உதாசீனம் செய்கிறீரா  ?

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று!

நண்பர் முகத்திற்கு நேரே புகழ்ந்து  சென்றபின் குறைசொல்கிறீரா ?

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று!

தினமும் பூஜை செய்கிறீர  முடிந்ததும்  தூஷனை செய்கிறீர்! 

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று! 

பத்து பைசா பிச்சை போட்டு அவன் வாழ்த்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறீரா?

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று!

ஊருக்குத் தானடி உபதேசம் எனக்கல்ல என்பவரா நீர்  ?

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று!

உம்  கருத்தை ஏற்காதவர்  மீது வெறுப்பை உமிழ்கிறீரா?

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று!

ஏழையைப் பார்த்து அவன் அறிவிலி நான் அறிவாளி என்று கொக்கரிக்கிறீரா?

புரிந்துகொள்ளும் நீர்  ஓர் ஓட்டைப் பானை என்று!

 

அறிவு ஆற்றல் இறையன்பு ஈடில்லா பெருமை என்ற தண்ணீரை

உமது ஓட்டைப்  பானையில் சேமிக்க மட்டும் விரும்புகிறீர்! 

முதலில் ஓட்டைப் பானையின் ஓட்டைகளை  அடையும் !

அப்போதுதான்  அவை உன் பானையில் வந்து நிறையும்  ! 

 

~ You wake up early morning trying to do your Pooja / Prayers /Yoga but your mind is elsewhere and before you know it, you’re done with it, without being mindful of it. (A leaking bucket)

~ You’re very kind to outsiders / people in general and speak with them gently, but with your own family you’re always harsh / rude. (A leaking bucket)

~ You honour and treat your guests well but when they leave, you gossip about them and talk about their flaws. (A leaking bucket)

~ You try to read as much religious books, listen to Satsang /Keertan, participate in social services/ Sewa but you swear, insult, curse daily. (A leaking bucket)

~ You help others but you’re doing it to gain something in return from them and not doing those acts of kindness selflessly. (A leaking bucket)

~ You frequently advice/preach others, but practice none yourself.
(A leaking bucket)

~ You slander other devout persons out of hatred/spite when your views do not meet one another. (A leaking bucket)

~ You look down on others and feel more superior than them, judging their level of knowledge, based on external appearances (A leaking bucket)

*We struggle to fill our “lives”(the bucket) with “earnings” of religion and knowledge (the water), hoping it will retain inside but it is leaked by the many flaws (the holes) that we commit daily.*

An excellent reminder for all to try and patch these holes up so we may progress further on this beautiful path of life.


மனிதனாக இரு! – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 

Man – Social Animal or just Animal? Part 1 – A Thought Blog – By Prateek Devta
சுடர் விளக்காக இரு
அது முடியாவிடில்
பரவாயில்லை
இரவில் சுடர் விடும்
மின் மினி பூச்சிகளை
கொன்று குவிக்காதே !

பள்ளி செல்வதற்கு
மனம் இல்லையா ?
பாதகமில்லை
பள்ளி செல்லும்
பிள்ளையின் புத்தகங்களை
மறைத்து வைக்காதே!

உண்மை பேச உனக்கு
உள்ளம் இல்லையா
அது தவறு இல்லை
அரிச்சந்திரன் வரலாற்றை
குற்றம் குறை கூறி
பொய்யின் உதடுகளுக்கு
சாயம் பூசி மகிழ்ந்து
அழகு பார்க்காதே!

கொடுமைகளைக் கண்டு
மனம் குமுறவில்லையா
குற்றமில்லை
கொடுமை கண்டவுடன்
தடுக்க ஓடும் கால்களை
வெட்டி வீழ்த்தாதே!

மனித நேயமிக்க
மனிதர்கள் மீது
மலர்களை உன்னால்
தூவ முடியாவிடில்
முட்களை வீசி
காயப்படுத்தாதே !

எவ்வுயிரும்
தம் உயிர்போல் நினை
முடியாவிடில்
வாழும் வரையாவது
மனிதனாக இரு !

  யசோதராவின் புன்னகை – மீனாக்ஷி பாலகணேஷ்

Buddhist Channel | Books

           ரவீந்திரநாத் தாகூர் அற்புதமான ஒரு கவிஞர். அதற்கிணையான சுவாரசியமான ‘கதை சொல்லி’; ஆன்மீகவாதி. நாடகங்கள் எழுதியவர். ஒரு திரைப்படத்தையும் தாமே படைத்து இயக்கியவர். அவரது படைப்புகள் அனைத்துமே வங்கமொழி இலக்கியத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நமக்கு அழகாக உணர்த்துவன.

           ‘கீதாஞ்சலி’யில் உள்ளம் பறிகொடுத்துப் பின் அவருடைய படைப்புகளை ஒவ்வொன்றாகத் தேடித்தேடிப் படித்ததுண்டு. உள்ளம் கரைந்து சிந்திக்க வைக்கும் படைப்புகள். ஒவ்வொரு படைப்பிலும், சிறு கவிதையிலும் காணும் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். பல கவிதைகள் பொருள்செறிந்த கதை சொல்வன. அவற்றுள் ஒன்றினையே இப்போது பகிர்ந்துகொள்ள எண்ணியுள்ளேன்.

                                           * * * 

           நள்ளிரவு; சன்னியாசியாகப் போகின்ற ஒரு மனிதன்  உரைத்தான்:

           “இதுவே எனது வீட்டைவிட்டு நீங்கி கடவுளைத் தேட நல்ல சமயம். ஆ! என்னை    இத்தனை நாள் இந்த மாயையில் ஆழ்த்திப் பிடித்திருந்தது யார்?”

           கடவுள் அவனிடம் ரகசியமாகக் கூறினார், “அது நான்தான்.” ஆனால் மனிதனின் காதுகள் அடைத்திருந்தன.

           படுக்கையின் ஒருபுறம் அவன் மனைவி, உறங்கும் குழந்தையை மார்பிலணைத்தவண்ணம் நிம்மதியாகத் தானும் உறக்கத்திலாழ்ந்திருந்தாள்.

           மனிதன் கூறினான்: “யாரவர்கள் ? இத்தனை காலம் என்னை ஏமாற்றிவந்தது?” 

           ரகசியக்குரல் மறுபடியும் கூறியது: “அவர்கள் கடவுள்.” ஆனால் அவன் அதைச்           செவியுறவில்லை.

           குழந்தை ஏதோ கனவுகண்டு அழுதது; தாய் அதனை இன்னும் இறுக            அணைத்துக் கொண்டாள்.

           கடவுள் ஆணையிட்டார்: “நில், முட்டாளே, உன் வீட்டைவிட்டுப் போகாதே!”       ஆனால் அவன் அதையும் கேட்கவில்லை.

           கடவுள் பெருமூச்சு விட்டபடி சலித்துக் கொண்டார்: “எனது ஊழியன் என்னைப்            புறக்கணித்துவிட்டு, பின் என்னைத்தேடி ஏன் எங்கெங்கோ அலைகிறான்?”

    (தோட்டக்காரன்- கவிதைத் தொகுப்பிலிருந்து)

                                               * * *

            At midnight the would-be ascetic announced:

            “This is the time to give up my home and seek for God. Ah, who has held me so          long in         delusion here?”

            God whispered, “I,” but the ears of the man were stopped.

            With a baby asleep at her breast lay his wife, peacefully sleeping on one side of        the             bed.

            The man said, “Who are ye that have fooled me so long?”

            The voice said again, “They are God,” but he heard it not.

            The baby cried out in its dream, nestling close to its mother.

            God commanded, “Stop, fool, leave not thy home,” but still he heard not.

            God sighed and complained, “Why does my servant wander to seek me,         forsaking                         me?” (The Gardener- 75)

         ———————————————————

           படிக்கும் நம் உள்ளத்தை யாரோ பிடித்து உலுக்குகிறார்கள் அல்லவா?

           என் எண்ணங்கள் பின்னோக்கிச் செல்கின்றன……

           சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சந்தித்த இளம்பெண்ணொருத்தி; என் நண்பரின் தூரத்து உறவு. மருத்துவம் படித்துக் கொண்டிருந்தாள். அவள்தாய் வங்கியில் வேலைபார்த்தாள். மிகுந்த பிரயாசையின் பேரில் புத்திசாலியான பெண்ணைப் பெரியபடிப்பு படிக்க வைத்துக்கொண்டிருந்தாள். பெண் பாடுவாள். ஒரு சந்திப்பின்போது, நான் பாடச்சொல்லிக் கேட்டதும், ‘கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்,’ என மிக இனிமையாகப் பாடினாள். அப்பெண்ணை அன்புமிகுதியில் அணைத்துக் கொண்டேன்.

           “மைதிலி, உங்கப்பா என்ன பண்ணறார்?”

           “ஆன்ட்டி, எனக்கு அப்பா இனிமேல் இல்லை,” என்றாள் ஆங்கிலத்தில். “ஐ டோன்ட் ஹாவ் எ ஃபாதர் எனிமோர்.” துணுக்கென்றது. என்ன சொல்கிறாள் இந்தப்பெண்? தகப்பனார் இறந்துவிட்டார் என்பதை இப்படிச் சொல்ல மாட்டார்களே! அதுவும் படித்த பெண்! என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம்  வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”

           எனக்கு வேதனையில் வயிறு குமைந்தது. மணிமணியான இரு சுட்டிப் பெண்கள். தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் அன்பான மனைவி. எதனைத்தேடி அந்த மனிதர் இப்படிச் செய்தார் என யோசித்தேன். விடை கட்டாயம் கிடைக்கவில்லை!!

           அப்பெண்ணின் தாயினிடம் அனுதாபத்திற்கு மாறாகப் பெரும் மதிப்பு உண்டானது. ஒற்றையாக நின்று வாழ்க்கையில் எதிர்நீச்சலிட்டு குழந்தைகளை வளர்ப்பதல்லவோ பெரிய தவம்? தன் சொந்த ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்ட அன்பு சார்ந்த இந்தக் கடமை இயற்றல் அல்லவோ சன்யாசத்தினும் மேலான துறவு! இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது.

                                                                * * *

           தாகூரின் இந்தக் கவிதையைப் படித்தபோதும் அதே வேதனையில் உள்ளமும் உடலும் நெகிழுகிறது. எதனைத்தேடி மனிதர்கள் இந்த சன்யாசப் பாதையை நோக்கி வீணாக ஓடுகிறார்கள்? சிறுவயதிலேயே தேடல் ஆரம்பித்தால் அது உண்மையான தேடல்! இவ்வாறு, இல்லறத்தில் புகுந்து, வாழ்ந்து, பொறுப்புகள் வந்தபின் பாதியில் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஓடுவது ஏன்? ‘கடவுளைத்தேடி’ என்பது அப்பட்டமான பொய் எனவல்லவா தோன்றுகிறது! எதிலிருந்தோ தப்பிக்கப்பார்க்கும் மனபாவம்! அதற்கு இதுவொரு சாக்கு! நமது வாழ்க்கை நெறியும்கூட கிரஹஸ்தாசிரமம் முடிந்து வானப்பிரஸ்தமும் கழிந்தபின்தானே சன்யாசத்தை ஏற்கக் கூறுகிறது?

           தாகூரின் படைப்பு இவர்களையே சாடுவது போலல்லவா இருக்கிறது!

           நீண்டநாட்கள் முன்பு படித்த சித்தார்த்தனின் வாழ்க்கை – வரலாறு (புத்தர்) நிழற்படமாகக் கண்முன் தோன்றியது. அதன் தொடர்பான ஒரு சிந்தனை ஓட்டம் எழுந்தது. தாகூரின் படைப்பின் தொடர்ச்சியாக இதனைப் பொருத்திப் பார்த்தேன். நெகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                                                                * * *

           ஞானம்பெற்ற கௌதம புத்தர் திரும்பத் தனது நாட்டிற்கு வருகிறார். அனைவரும் அவரைக் கொண்டாடி வரவேற்கின்றனர். அரண்மனை வாயிலில் வந்து நிற்கும் அவரை, வளர்ந்த மகன் ராகுலன் எதிர் கொள்கிறான். பின்னால் தூணருகே அமைதியே உருவாக நிற்கிறாள் மனைவி யசோதரை! காவியுடை அணியாவிடினும் எளிய ஆடையில், அணிமணிகள் ஏதும் பூணாமல் அவளே துறவிபோல நிற்கிறாள். கணவனே தன்னைப்பிரிந்து சென்றபின் அலங்காரங்கள் தேவையில்லை என ஒதுக்கிய துறவு மனப்பான்மை. அரண்மனையை நீங்கிச் செல்லவில்லை. ஆனால் ஆடம்பரமான வாழ்வை ஒதுக்கி எளிய உணவையே உண்டாள். கணவன் அளித்துச் சென்ற குழந்தையை நன்கு பொறுப்புடன் வளர்த்துப் பெரியவனாக்கி விட்டாள். கணவன் அவளிடம் அதனைச் செய்யக் கூறிவிட்டுச் செல்லவில்லை! பொறுப்பு இருவருக்கும்தானே? தான் ஒருத்தியாகவே அதனை நிறைவேற்றத் துணிந்தாள் அவள்.

பலவாண்டுகளின் முன்பு சித்தார்த்தன் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியபின்னர், அவளுடைய அழகிற்காகவும், பண்பிற்காகவும் அவளை மணந்துகொள்ளப் பல அரசர்கள் போட்டியிட்டனர். ஒருவர் பக்கமும் அவளுடைய பார்வைகூடத் திரும்பவில்லை.

           இறைவன் தனக்கு விதித்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு தவமாகவே அதனை வாழ்ந்தவளின் முகம் இன்று அந்தத் தவவலிமையின் திவ்வியமான தேஜசுடன் ஜ்வலிக்கின்றது. கணவனை – அல்ல அல்ல – புத்தரைக் கண்ட தலை குனியவில்லை; பதறவில்லை; கண்கள் நீர் பொழியவில்லை; உதடுகள் துடிக்கவில்லை. மாறாகச் சின்னஞ்சிறு புன்னகை இதழ்க்கடையோரம்….

           என்ன சொல்கிறது அப்புன்னகை?

           ‘யார் துறவி எனத் தேவரீர் இப்போது அறிந்து கொண்டீர்களா?’- இப்படித்தானே கேட்பதாக எண்ணினீர்கள்?

           ஆனால் இல்லை! எதற்காக அவள் புத்தரின் மனதைப் பச்சாதாபத்தில் அழுத்தித் தன்னையும் வருத்திக்கொள்ள வேண்டும்? அது துறவிக்கு அழகல்லவே!

           கடமையைப் புறக்கணித்துச் சென்றவர், ஆழ்ந்து தவம் செய்து, வாழ்வே மாயை என உணர்ந்து வந்திருக்கிறார். உலகிற்கும் அச்செய்தியைப் பரப்பப் போகிறார். அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை அவருக்கு!

           “என் கடமையைச் சரிவரச் செய்துவிட்டேன், இதுவே நானியற்றிய தவம்; அதன் பலன்,” என்று உணர்த்தியது அவள் புன்னகை. முகம் மேலும் மலர்ந்து ஆத்மத்திளைப்பில் விகசித்தது.

                                                     * * *

           தாகூரின் படைப்பில், அவர் சொல்லாமல் உட்பொருளாக வைத்தது இதுதானா?

           பதில் உங்களிடமே!

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

“அவன் சிறியேனென்றேனோ ஆழ்வாரைப்போலே”
ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார், திருமாலைப் பாடாமல், தன் ஆசார்யரான நம்மாழ்வாரை மட்டுமே போற்றிப் பாடியுள்ளார்! இவர் பாடிய பாசுரங்கள் திவ்யப் பிரபந்தத்தில் சேர்ந்து சிறப்பு பெற்றன. அது போலவே திருமாலைப் பாடாத இவரை ஆழ்வார்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர் பிறந்த ஊர் திருக்கோளூர் – குலம் -சோழிய பிராம்மணர் குலம்.
சீதையைக் காட்டுக்கனுப்பிய பாவத்திற்காக, பதினாறு ஆண்டுகள் அசையாத பிம்பமாகப் பிறவி எடுக்கிறார் ஶ்ரீராமபிரான். ஆழ்வார்த்திருநகரியில் நம்மாழ்வார் அவதாரம் இவ்வாறாக நிகழ்கிறது.
தன் கட்டளையை மீறிய லட்சுமணனை, ‘மரமாகப் போக’ இராமன் சபிக்க, தன் அண்ணனைப் பிரிய முடியாமல் மனம் வருந்துகிறான் லட்சுமணன். தன் தம்பியின் மனமறிந்த இராமன், அவனை ஆழ்வார்த்திருநகரியில் ஆதிநாதன் கோயிலில் புளிய மரமாக நிற்கச் சொல்கிறார். அவன் நிழலில் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் இருக்கிறார் நம்மாழ்வாராக இராமன்! வேளாண் குலத்தில் உதித்த நம்மாழ்வார், பதினாறு வயது வரையில் உண்ணாமல், பேசாமல் ஒரு ஜடமாக இருந்திருக்கிறார். அவரைவிட வயதில் மூத்தவரும், அந்தண குலத்தைச் சேர்ந்தவருமான திருக்கோளூர் மதுரகவியாழ்வார் அவரது நிஷ்டையைக் கலைத்து அவரது சீடராகிறார் – அவரை மட்டுமே போற்றிப் பாடி, ஆழ்வாராக பரமனடியிலும் சேர்ந்து விடுகிறார்!
ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாகச் சொல்வது வைணவ மரபு! பூதத்தாழ்வார் – சிரசு, பெரியாழ்வார் – முகம், திருமங்கை ஆழ்வார் – நாபிக்கமலம், மதுரகவி, நாதமுனிகள் – திருவடிகள் இப்படி…
இருக்கும் இடத்தை விட்டு அசையாமல், ‘உறங்காப் புளி’ய மரத்தின் கீழ் அமர்ந்தவாறே, பல தலங்களுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார் நம்மாழ்வார். இவரது திருவாய்மொழி கிடைக்க, எல்லா திருத்தலப் பெருமான்களும், இவர் தங்கியிருந்த புளிய மரத்தின் இலைகளில் தரிசனம் தந்ததாகப் புராணம் கூறுகிறது.
பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை, நம்மாழ்வார்,
“விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய், கடல்சேர்ப்பாய்!
மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!
எண்மீதியன்ற புறவண்டத்தாய் எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ?”
என்ற ஒரே பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது!
நான்கு வேதங்களின் சாரத்தை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திருவாய்மொழி எனப் பிரபந்தங்களாக இயற்றியதால், ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனப் போற்றப்படுகிறார் நம்மாழ்வார்.
திருவந்தாதியில் பெருமானிடம் ‘என் மனதினுள் நுழைந்து எனக்குள்ளே தங்கிவிட்டாய். எனவே நான் உன்னைவிடப் பெரியவனா, அன்றி நீ பெரியவனா’ என்று கேட்குமளவுக்கு புண்ணியசீலர் நம்மாழ்வார்….
அப்படிப்பட்ட பெருமை ஏதும் இல்லாதவள் ( “அவன் சிறியேனென்றேனோ ஆழ்வாரைப் போலே” -14) நான் என்று கூறி வைணவத்தின் முக்கியமான 81 சம்பவங்களை ஶ்ரீராமானுஜருக்குச் சொல்கிறாள் திருக்கோளூரில் ஒரு சாதாரண இடையர்குலப் பெண்மணி. அந்தப் பெண் சொன்னவையே ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’ என்னும் ரகசிய கிரந்தமாகும்! அடியார் ஆச்சாரியருக்குக் கூறியது!
ஒற்றை வரியில் சுருக்கமாகச் சொல்லும் அவளது ஞான அறிவை வியந்து, அவள் வீட்டிற்குச் சென்று, அவள் சமத்த உணவை உண்டு அவளை வாழ்த்துகிறார்! ஶ்ரீமன் நாராயணன் முன் சாதி பேதம் கூடாது என உரைக்கும் வைணவத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த ஶ்ரீராமானுஜர் – திருக்கச்சி நம்பிகள் மூலம் காஞ்சியில் எம்பெருமானிடம் தன் ஐயங்களைத் தீர்த்துக் கொண்ட ஶ்ரீராமானுஜர் – ஒரு சாதாரணப் பெண்ணின் ஞானத்தைப் போற்றுகிறார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்று திருக்கோளூர் – தூத்துகுடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையில் ஆழ்வார்த்திருநகரியிலிருந்து 2 கிமி தூரத்தில் உள்ளது. நவதிருப்பதியில் மூன்றாவது தலம்.
(பிரபந்தம் 3409).   
உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 
மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  
(விளக்கம்;
உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர்
திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.).
பெண்களை உயர்வாகச் சொன்னது வைணவம். ஒரு பெண்ணை ஆழ்வாராகவே போற்றுகிறது! திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியத்தில் குறிப்பிடப்படும் பெண்கள் குறித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது!
கண்ணனுக்கும் மற்ற சிறுவர்களுக்கும் உணவு அளித்த முனிபத்தினிகளில் ஒரு பெண்மணி கண்ணனைப் பிரிய மனமில்லாமல் உயிரையே விடுகிறாள்!(3).
சீதாப்பிராட்டி, இராவணனின் அழிவிற்குக் காராணமாகிறார். தன் கற்பின் திறத்தாலும், இராமனின் மீது கொண்ட பக்தியாலும் இது சாத்தியமாகிறது.(4).
அனுசூயை ஒரு தாயைப் போல் சீதைக்கு அலங்காரம் செய்கின்றாளாம்( வேளுக்குடி உபன்யாசத்தில் சொன்னது). மும்மூர்த்திகளுக்கும் தாயாகி அமுது படைத்தவள் அனுசூயை. (7).
இராமன் பாதம் பட்டால், கல்லும் பெண் போல மென்மையாகிவிடும்! ஶ்ரீராமன் பாதம்பட்டு, சாப விமோசனம் பெற்றவள் அகலிகை.(10).
சிறு வயதிலேயே ஞானம் பெற்றவள் ஆண்டாள்! எம் பெருமானை அடைந்தவள் – ‘பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே’ (11).
அசோகவனத்தில் சீதையின் துயர் குறைக்க, ஆறுதல் வார்த்தைகளைச் சொல்கிறாள் திரிசடை(18).
இராவணன் இறந்த போது கதறும் மண்டோதரி, ‘இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்களே’ என்கிறாள் (வால்மீகி) (19).
தேவகியைப் போல தெய்வத்தைப் பெறும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்?(22).
கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை – பெற்றவள் தேவகிக்குக் கூட வாய்க்காத பேறு (24).
மற்றும் சபரி, கொங்குப்பிராட்டி, திரெளபதி, நீரில் குதித்த கணப்புரத்தாள் என புராணத்தின் பெண் பாத்திரங்களின் பெருமைகளைச் சொல்லி, ‘இம்மாதிரி ஏதும் செய்யாத நான் இந்தப் புனிதமான திருக்கோளூரில் முயலின் புழுக்கையைப் போல, இருப்பதில் ஏதும் பயனில்லை – ஆகவே ஊரை விட்டுச் செல்கிறேன்’ என்று வருந்திச் சொல்வதாய் அமைந்துள்ளது ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’!
( உதவிய புத்தகங்கள்:
 1. குவிகம் கிருபானந்தன் இப்புத்தகம் பற்றிக் கூறினார். திரு டி வி ராதாகிருஷ்ணன் அழகாகத் தொகுத்துள்ளார். வானதியின் பதிப்பு ‘திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்’ – வாசிக்க வேண்டிய புத்தகம்!
2. வேணு சீனிவாசனின் 12ஆழ்வார்கள் –
திவ்ய சரிதம். (கிழக்கு பதிப்பகம்).)