குண்டலகேசி || ஐம்பெரும் காப்பியங்கள் || KUNDALAKESI - YouTube

முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளை ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று கொல்ல முனைகிறான். ஆனால் அவள் தந்திரமாக அவனைக் கீழே தள்ளிக் கொல்கின்றாள்.

பிறகு, மனம் வெறுத்துக் கால் போன போக்கில் அலைந்தவள், வழியில் கண்ட புத்த மதத் துறவியிடம் தன் கதையைக் கூறுகின்றாள்………..

பௌத்த சமய நூல்கள் – Nakkeran

குண்டலகேசியின் கலக்கம்

போகும் இடமெது புரிய வில்லையே,
ஆகும் நிலைமையும் அறிய வில்லையே,
நோகும் உளத்தினில் நூறு கவலைகள்,
பாகு கனிமொழி பகர்ந்து கலங்கினள்.

புத்த மதத் துறவி ஆறுதல் கூறுதல்

கலங்கும் மங்கையைக் கண்ட துறவியும்
இலங்கும் துயரமும் இடரும் போகுமே
துலங்கும் புத்தனின் தூய திருவடி
நலங்கொள் அமைதியை நல்கும் என்றனன்

புத்தன் பெருமையை எடுத்துரைத்தல்

பிறப்பின் தன்மையைப் பெரிதும் அறிந்தவன்,
சிறப்பு மிகுந்தவன், தெளிவு தருபவன்,
வெறுப்பும் அற்றவன், விருப்பும் செற்றவன்,
குறிப்பு ணர்ந்தவர் கொள்ளும் கொள்கையன்.

மாரன் அம்பினை மனத்தில் வென்றவன்,
ஓரும் அறவழி உணர்ந்து நின்றவன்,
ஊரும் உலகமும் உயிரும் உய்ந்திடச்
சேரும் மழையெனச் செய்யும் அருளினன்.

( மாரன் — மன்மதன்)

 

துறவியின் அறவுரை

கருவாக உயிர்த்திருந்து மண்ணில் வந்தோம்;
கையிலொரு பொம்மையுடன் குழந்தை ஆனோம்;
உருவிலொரு மிடுக்கொளிரும் இளமை பொங்க
உறுவதெலாம் இன்பமெனத் திளைத்துப் போனோம்;
வரவிருக்கும் மூப்பதனை மறந்தே போனோம்.
வாழ்க்கையிலும் காலை,பகல் இரவு மேவும்.
ஒருவாறு வாழ்வியல்பை உணரும் வேளை,
ஓடிவிட்ட காலவெள்ளம் வருமோ மீள?.
ஓடாமல் அலைகின்ற கடல்போல் ஆசை,
உள்ளத்தில் எழுகின்ற வாழ்வின் ஓசை,
தாவாத கிளையுண்டோ மனக்கு ரங்கு?
தள்ளாடி விழுஞ்சேற்றில் விளையும் தீங்கு..
மூவாசைப் புதைசேற்றில் வீழ்ந்து விட்டு,
மூள்சினமும் களவும்பொய் கொள்வார் கெட்டு..
காவாத நல்லொழுக்கப் பயிரை மேயக்
காமமெனும் முரட்டாடு சீறிப் பாயும்.

தின்பது, தின்று தூங்கித்
திரிவது, வாழ்வில் வந்த
இன்பமாய் மனத்தில் எண்ணி
இன்னலின் வலையில் வீழ்வோம்.
ஒன்பது வாயில் ஓட்டை–
ஒழுகிடும் அழுக்கின் மூட்டை,
என்பது புரிந்து விட்டால்,
இவ்வுடல் பற்று நீங்கும்.

ஆளென வளர்ந்து வந்தோம்,
அழகினில் பெருமை கொண்டோம்,
வாளென நாள்கள் வாழ்வை
வகிர்தலை அறிய மாட்டோம்.
மீளவும் பிறவி என்னும்
வெவ்விய தன்மை, புத்தன்
தாளினை அடைந்துய் வோர்க்குத்
தரையினில் உண்டோ அம்மா,?
( வகிர்தல் – அறுத்தல்)

 

மனம் தெளிந்த குண்டலகேசி துறவு பூணுதல்

விண்டநல் மொழிகள் காதில்
வியனுல(கு) அமுதாய்ப் பாயக்
குண்டல கேசி உள்ளம்
கொண்டது தெளிவின் எல்லை
பண்டுநான் இன்னல் உற்றேன்
பரிவுடன் அறமும் அன்பும்
மண்டிடும் புத்தன் காட்டும்
வழியினிச் செல்வேன் என்றாள்

அழகினைத் துறந்தேன், உள்ள
ஆசையை அறவே விட்டேன்,
பழகிய உறவும் நட்பும்,
பற்றுமே மறந்தேன் முற்றும்.
அழுகையில் பிறந்த வாழ்க்கை
ஆசையாம் துன்பத் தீயில்,
மெழுகென அழிதல் கண்டேன்,
மெய்ந்நெறித் துறவு பூண்டேன்.

புத்த மடத்தில் பயி்ற்சி பெறுதல்

துறவியுடன் புத்தமதத் தூயமடம் தனையடைந்தாள்
பிறவிகளின் உண்மைகளும் பிறப்பிறப்பின் தன்மைகளும்
அறம்விளக்கும் நன்மைகளும் ஆசைகளின் புன்மைகளும்
திறமையுடன் பலசமயம் செப்புநெறி பயின்றறிந்தாள்.
வாதத் திறமை

பூவொரு புயலாய் மாறிப்
புலன்களை வென்றாள். எங்கும்
நாவலோ நாவல் என்று
நாட்டினாள் கொடியை நாட்டில்.
மேவிய வாதம் எல்லாம்
வெற்றியும் பெற்றாள். மக்கள்
யாவரும் வணங்கிப் போற்றும்
இணையிலாப் புகழும் உற்றாள்

(அக்காலத்தில், நாவல் மரக் குச்சியைத் தரையில் ஊன்றி, ” நாவலோ நாவல்” என்று கூறி, ” நான் வாதத்திற்கு ஆயத்தமாக உள்ளேன்.என்னுடன் வாதிட யாராவது வருகிறீர்களா?” என்று அறைகூவல் விடுப்பது வழக்கம்)

குண்டலகேசியின் தொண்டும், சிறப்பும்

வறியவர்க்கும் எளியவர்க்கும் முதிய வர்க்கும்
வாழ்வினிலே யாருமின்றித் தவிப்ப வர்க்கும்
அறவியிவள் உதவியவர் துயர்து டைத்தாள்
அறச்செல்வி இவளென்று பெயர்ப டைத்தாள்
நெறியுரைத்த புத்தனவன் வழிந டந்தாள்
நிலையழிந்தும் நெஞ்சுயர்த்தித் தடம்ப தித்தாள்
செறிவுடைய செந்தமிழின் காவி யத்தில்
சிறப்புடனே தனக்கெனவோர் இடம்பி டித்தாள்!

( அறவி- பெண் துறவி)

வாழ்த்து!

மடல்விரி நறும்பூ வாக
மகிழ்ச்சியின் மணமே சூழ்க!
இடரெலாம் மறைந்து போக
இன்பமும் அன்பும் வாழ்க!
கடலொடு விண்ணும் மண்ணும்
கடுவெளி அனைத்தும் வாழ்க!
சுடரொளி வையம் வாழ்க!
துலங்கிடும் உயிர்கள் வாழ்க!

(நிறைவுற்றது)