அறிவியல் புனைகதை – தமிழுக்குப் புதிதா?
விருட்சம் கதை வாசிப்பு நிகழ்வில் ந.பிச்சமூர்த்தி அவர்களின் ‘விஞ்ஞானத்துக்குப் பலி’ சிறுகதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1951 வாக்கில் எழுதப்பட்டுள்ள அந்தக் கதையின் கரு இன்றைய எந்த விஞ்ஞானக் கதையையும் விஞ்சக்கூடியதாக இருந்தது! ந.பி., ஒரு வழக்கறிஞர். ஹனுமான், நவ இந்தியா போன்ற பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தவர். மேலை நாட்டு இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்.
டாக்டர் சேதுராவ் – ‘ஸயன்ஸ்’ டாக்டர் – அவர் தன் நண்பருக்குச் சொல்வது போல கதை.
யுத்தத்திற்காகக் கொலைக் காற்று, ஆகாய விமானம், விஷ வாசனை, டார்ப்பிடோ இவற்றைக் கண்டுபிடித்து, மனித குலத்துக்கு அழிவைத் தேடும் ஸயன்ஸ் பண்டிதர்களின், “புத்தியின் விபசாரம்” இது என்கிறார் நண்பர் – ஈஸ்வரன் கொடுத்த மூளையை ஹிம்சை செய்வதற்கும், கொல்வதற்கும் உபயோகிப்பதில் அவர் நண்பருக்கு வருத்தம்.
“கடவுளைப் போல சுயமாக சிருஷ்டி செய்ய ஸயன்ஸ் பேர்வழிகள் தலைகீழாக நின்று வருகிறார்கள். எச்.மே. என்பவர் ஆல்பா என்னும் ஆளை (இயந்திர மனிதன்) செய்திருக்கிறார். ”உடலெல்லாம் இரும்புக் கூடு, கண், வாய், மூக்கு, செவி அவ்வளவும் உண்டு. மின்சாரத்தால் அவ்வளவு உறுப்புகளும் வேலை செய்கின்றன. ஆல்பா சாதாரணக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கிறதாம்; உலவுமாம். நம் தேசத்து வெற்றிலைப் பெட்டி மிராசுதார் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். பகுத்தறிவு இருப்பதாகத் தெரியவில்லை; தானாகவும் ஒன்றும் செய்யாது. ஆகவே ஆல்பாவிடம் கொஞ்சம் உஷாராகப் பழக வேண்டுமாம். ஆல்பா ஒரு வேளை இரைந்து கத்தினால், அவ்வூரில் இருக்கும் அவ்வளவு கண்ணாடிகளும் நொறுங்கிப் போகின்றனவாம். இன்னும் அதன் பிரதாபங்கள் பலவாம்”. சொல்கிறார் முனைவர் சேதுராவ்.
“ஆல்பாவை உருவாக்கிய மே யின் குரல் மாறி, கர கரக்க, அடையாளம் காண முடியாத ஆல்பாவின் வலது கை ஸயண்டிஸ்டின் கை மேல் விழுந்து, அவருக்கு ஏகப்பட்ட எலும்பு முறிவுகள்! ஆல்பாவின் சிருஷ்டி கர்த்தர், ஆல்பாவின் அடிமையானார்.”
ஐரோப்பிய ஸயன்ஸ் காங்கிரஸில் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டித்து நாடு திரும்பும் சேதுராவ், அவர் வீட்டில் வீடு கூட்டும் பாப்பாயியைக் கொலை செய்ததற்காகக் கைது செய்யப்படுவதாகவும், அவளைக் கொலை செய்தது ஆல்பா என்பதும், குரல் வித்தியாசம் தெரியாமல் அவளை அது கொன்று விட்டதாகவும், அதன் கழுத்தில் உள்ள ஒரு திருகாணியைத் திருகி அதை அமைதிப்படுத்துவதாகவும் கனவு காண்கிறார்! கதைப்படி, அவரது எதிர்ப்புக்கு, சயிண்டிஸ்ட் ஆல்பாவை அனுப்பிக் கொலை ராவைக் கொலை செய்யச் சொல்கிறார். அது ராவ் வீட்டில் அச்சத்தில் கத்தும் பாப்பாய்யைக் கொன்று விடுகிறது! பரிசோதனையாகச் செய்யப்பட்ட ஆல்பா, உயிரினத்தைக் கொல்லும் அபாயமாக மாறிவிடுகிறது!
சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதுகிறோம் என்றறியாமலே எழுதியிருப்பாரா ந.பி. என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில், அறிவியல் புனைகதை பற்றி ஓரளவுக்கு ஞானம் வந்தபிறகு, பல வித்தியாசமான அறிவியல் புனைகதைகளை வாசித்த பிறகு, அன்றே ‘சை ஃபி’ யின் கூறுகளுடன் தமிழில் பல புனைகதைகளைக் காணமுடிவது வியக்கத்தக்கது. ந.பி. கதையின் பல கூறுகள் சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வருவதைக் காணலாம்.
ஸயின்ஸ்ஃபிக்ஷன் – விஞ்ஞானக் கதை, அறிவியல் புனைகதை – என்பது என்ன?
ஹெச் ஜி வெல்ஸ் – Father of Science fiction (அ) அறிவியல் புனைகதைகளின் ஷேக்ஸ்பியர் எனப்படுகிறார். தி டைம் மெஷின் (1895), தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மோரோ (1896), தி இன்விசிபிள் மேன் (1897), தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்(1898) போன்றவை அவரது அறிவியல் புனைகதைப் படைப்புகளில் புகழ் பெற்றவை.
அறிவியல் புனைகதை (Sci – Fi) – எதிர்காலத்தைப் பற்றிய யூகங்கள் சார்ந்து புனையப்படும் கதைகள் – அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, காலப் பயணம், இணையான பிரபஞ்சங்கள், வேற்று கிரக வாழ்க்கை, மனிதர்கள் என தற்போது நிலவும் உண்மைகளுடன், கற்பனைகளைக் கலந்து, எதிர்காலம் அல்லது கடந்த காலம் பற்றிய நிகழ்வுகளைப் பற்றிச் சொல்வது! “கருத்துக்களின் இலக்கியம்” என்றவொரு மாற்றுப் பெயரும் உண்டு.
அறிவியல் புனைகதைகளுக்கான ‘திருப்திகரமான வரையறை’ இதுவரை பிடிபடவே இல்லை.
ஐசக் அசிமோ : “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு, மனிதர்களின் எதிர்வினைகளைக் கையாளும் இலக்கியத்தின் கிளையாக அறிவியல் புனைகதைகளை வரையறுக்கலாம்” என்கிறார்.
1926 ல் முதல் ‘அறிவியல் புனைகதை இதழ்’ – அமேசிங் ஸ்டோரிகள் என்ற பெயரில் – ஹ்யூகோ ஜெர்ன்ஸ்பேக் வெளியிட்டார். முதல் இதழில் அவர் எழுதியது சிந்திக்கத்தக்கது.
“அறிவியல் உண்மையும், தீர்க்கதரிசனப் பார்வையும் கலந்த ஒரு வசீகரமான காதல் …. இந்த அற்புதமான கதைகள் வாசிப்பை மிகவும் சுவாரஸ்யமாக்குவது மட்டுமல்ல – அவை எப்பொழுதும் போதனையானவை. அவை அறிவை வழங்குகின்றன… மிகவும் சுவையான வடிவில்…. இன்றைய புதிய சாகசங்கள், நாளை நனவாக்க முடியாதவை அல்ல… வரலாற்றுச் சிறப்பு மிக்க பல சிறந்த அறிவியல் கதைகள் இன்னும் எழுதப் பட வேண்டும் .. “
20 – 21 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் புனைகதைகளின் அபரிமிதமான வளர்ச்சியும், அவை எதிர்காலம் குறித்து எழுப்பும் வினாக்களும், விசாரங்களும் வியக்க வைப்பவை. சுற்றுச் சூழல் பிரச்சனைகள், இணையத்தின் தாக்கங்கள், விரிவடைந்துவரும் தகவல் உலகம், நானோ தொழில்நுட்பம், பற்றாக்குறை சமூகங்கள் எனப் பல தளங்களில் அறிவியல் புனைகதைகளுக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
சீவக சிந்தாமணி, மணிமேகலை, கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி, விக்கிரமாதித்தியன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், பாரதியாரின் சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள், ஞானரதம் போன்றவற்றிலும் அறிவியல் புனைகதையின் கூறுகள் இருப்பதை உணரமுடிகிறது. மாய யதார்த்தம், அமானுஷ்யம், சர்ரியலிசம் போன்ற பல வகைப் புனைவுகளில், அறிவியல் புனைகதைகளின் சாயல்கள், கூறுகள் இருப்பதைக் காணமுடியும்.
புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்பில் “பிரேத மனிதன்” என்ற கதை, பல பிரேதங்களிலிருந்து உருவாக்கப்படும் ஓர் உடல், தப்பிச் சென்று அனைவரையும் அழிக்கும் அபாயம் வந்துவிடுகிறது என்பதாகப் போகிறது. அறிவியல் புனைகதைகளில், பரிசோதனையாக செய்யப்படுபவை, விபரீதமான எதிர்வினைகளுக்கு வழி கோலுகின்றன என்கிற அடிப்படைக் கருத்தைக் காணலாம். மரபணுக்களில் செய்யப்படும் மாற்றங்கள், வேற்று கிரக ஆராய்ச்சிகள், வேற்று கிரக உயிரினங்களால் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகள், புனைவுலகம், டைம் மெஷினில் முன்னும் பின்னும் சென்று எதிர்கொள்ளும் விளைவுகள் என பரிசோதனைகளின் விபரீதங்கள் சுவாரஸ்யமான சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிவிடுகின்றன. அறிவியல் விநோதங்களை, தன் கற்பனையில் உருவாகும் புனைவுகளுடன், எதிர்காலத்தில் நிகழக்கூடிய சுவாரஸ்யமான அபாயங்களையும், வாழ்க்கையின் அபத்திரமான கணங்களையும் சொல்வது ஒரு கலை – அறிவியல் புனைகதை எழுதும் கலை!
புதுமைப் பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ – ஒரு முரண்பட்ட புதிய சூழலை உருவாக்கி, அதற்கான விதிகளையும் வரையறுப்பது என்ற வகையில் சிறந்த விஞ்ஞானப் புனைகதையாக – ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள புனைகதைகளுக்கிணையாக – எழுதியுள்ளார் பு.பி. – இந்த வகைக் கதைகளுக்கு தமிழில் புதுமைப்பித்தன்தான் முதல்வர் – சுஜாதா (‘அறிவியல் புனைகதைகளின் கூறுகள்’ கட்டுரையில்).
சுஜாதாவின் திமிலா, நச்சுப்பொய்கை, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, ஆ போன்ற கதைகளில் அறிவியல் புனைகதை கூறுகள் அதிகமாகக் காணக் கிடைக்கின்றன.
சுதாகர் கஸ்தூரியின் 6174, 7.83 ஹெர்ட்ஸ் போன்றவையும், இரா முருகன், ஆர்னிகா நாசர் (எனக்குத் தெரிந்த வரையில் சொல்கிறேன். இதற்கு மேல் ஏராளமான அறிவியல் புனைகதைகள் தமிழில் கிடைக்கின்றன!) போன்றவர்களின் கதைகளும் இவ்வகையில் அடங்கும்.
சமீபத்தில் மகாகவி பாரதியாரின் சிறுகதைகளை வாசித்தேன். வித்தியாசமான பார்வையில், அவரது கதைகள் பலவற்றில் அறிவியல் புனைகதையின் கூறுகள் தென்படுகின்றன எனத் தோன்றியது. ஆராயலாம்.
(ஆதாரம்: 1. ந. பிச்சமூர்த்தி ‘மோகினி’ சிறுகதைத் தொகுப்பு – சந்தியா பதிப்பகம்
2. சுஜாதா – விஞ்ஞானச் சிறுகதைகள் – உயிர்மை பதிப்பகம்.
3. Internet references to Science fiction stories in Tamil
4. புதுமைப் பித்தன் சிறுகதைகள் தொகுப்பு மீ.ப. சோமசுந்தரம்.)