(தேவகியின் எட்டாவது குழந்தையின் வருகைக்கு அனைவரும் காத்திருந்தனர்)
தேவர்கள் வேண்டுதல்
காவலைக் கடுமை யாக்கக்
கட்டளை இட்டான் கம்சன்.
ஆவலும் கொண்டார் தேவர்.
ஆண்டவன் இறங்கி வந்து
தேவகி வயிற்றில் தோன்றும்
அதிசயம் காண வந்தார்
“தீவினை அழிப்ப தற்குச்
சீக்கிரம் வருக’ என்றார்.
மகிழ்ச்சிக் கொண்டாட்டம்
கின்னரர்கள் கந்தர்வர் மகிழ்ந்தார் பாடி.
கேழொளிரும் அரம்பையர்கள் நெகிழ்ந்தார் ஆடி
மன்னுபுகழ் முனிவருடன் சித்தர் ஞானி
வாய்மணக்க இறைபுகழை உரைத்தார் கூடி
பொன்னழகு மலரெடுத்து வான வர்கள்
பொழிந்தனரே மண்ணுலகின் மீது கோடி
ஒன்னலராம் தீயவரை அழித்து நல்லோர்
உறுதுணையாய்க் காப்பவனின் வருகை நாடி!
( கேழொளிரும் – நிறம் மின்னும்)
( ஒன்னலர் -பகைவர்)
பூவாடை அதுபோர்த்திப் பாயும் ஆற்றின்
பொங்கிவரும் புதுப்புனலில் மீன்கள் துள்ளும்
காவாழும் கருங்குயில்கள் களித்துக் கூவும்
காற்றினிலே மலர்மணமும் இசையும் மேவும்
ஈவாராம் நயனுடையார்க்(கு) உவமை யாகும்
இன்கனிகள் உவந்தளிக்கும் மரங்கள் யாவும்
தேவாதி தேவனவன் பிறப்பைக் காணும்
திசையெல்லாம் பேரொளியால் எழிலைப் பூணும்!
( நயன் – நன்மை/ சிறப்பு)
கண்ணன் பிறப்பு
ஆவணி எட்டாம் நாளில்
அமைந்தவோர் தேய்பி றையில்
ஓவற ஒளிர்ந்து மின்னும்
உரோகிணி நாள்மீன் அன்று
கோவலர் குலத்துச் செம்மல்
குவலயம் பிறப்பான் என்று.
மேவின ஒன்பான் கோளும்
மேன்மைகொள் உச்சம் நின்று.
(நாள்மீன்– நட்சத்திரம்)
(ஆவணி மாதம் கிருஷ்ண பட்சத்து அஷ்டமி நாள், ரோகிணி நட்சத்திரம் அன்று ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருந்தன)
. குழந்தையின் தெய்வீகத் தோற்றம்
கருநெய்தல் மலர்நிறமும், கைநான்கும், அணிமார்பில்
தெரிமருவும், இடையினிலே சிறுமஞ்சள் பொற்றுகிலும்,
திருமணியும் கழுத்திலங்க, திகழ்கதையும், சக்கரமும்,
ஒருசங்கும், எனப்படைகள் ஒளிமின்னத் தோன்றினனே
( தெரிமரு– விளங்கும் ஸ்ரீவத்ஸம் என்னும் மரு)
கங்கணமும், தோள்வளையும், கற்றையெனும் செறிகுழலும்,
பொங்கொளிசெய் வைரத்தின் பொன்முடியும், குண்டலமும்,
தங்குமெழில் தோற்றத்துச் சாயாத செங்கதிராய்,
அங்குதிக்கத் தாமரையாம் அகிலமது மலர்ந்ததுவே
பாற்கடல் பள்ளி கொண்ட
பரமனே பிறந்தான் என்று
நூற்கடல் கடந்த தந்தை
நொடியினில் கண்டு கொண்டான்
வேற்கணாள் மதலை நோக்கி
மேன்மைகொள் வடிவம் நீங்கி
ஏற்கநீ வேண்டும் கண்ணே
இயல்புறு தோற்றம் என்றாள்
தெய்வீகக் குழந்தை கூறியவை
என்னையே மகவாய்க் கொள்ள
இருவரும் விழைவு கொண்டு
முன்னதோர் பிறவி நோற்றீர்
மூண்டவப் பயனாய் வந்தேன்
இன்னுமந் நினைவு தோன்ற
இவ்வுருக் கொண்டேன் என்று
சொன்னவன் இயல்பாய்த் தோன்றும்
சின்னதோர் குழந்தை ஆனான்
இந்த நேரம் கோகுலத்தில்
ஏற்ற யசோதை பெண்மகவாய்
வந்து பிறந்தாள் மாயையவள்;
வளர வேண்டும் நானங்கு
தந்தை என்னை அங்குவிட்டுத்
தயக்கம் இன்றி அம்மகவை
எந்தத் தடையும் இல்லாமல்
இங்குக் கொண்டு விடவேண்டும்
.சிறைக் கதவுகள் திறந்து கொள்ளல்
காவலர் உறங்கிப் போகக்
கதவகள் திறந்து கொள்ள
யாவரும் அரண்ம னையில்
இன்றுயில் மயக்கம் ஆழ
மாவிலங் குடைந்து வீழ
மதலையை அன்னை ஏந்தி
ஆவலாய் அணைத்துக் கொண்டாள்
ஆசையாய் முத்தம் தந்தாள்!
( தொடரும்)
வார்த்தைகளின் பிரவாகம் அருமை.
காட்சிகள் கண் முன்னே நிற்கின்றன.
அருமை! மிக அருமை!!
LikeLiked by 1 person
அருமை அருமை மிக அருமை கண்ணன் வரவு நல்வரவாகுக.
LikeLiked by 1 person