கண்ணன் கதையமுது-14

கண்ணன் வெண்ணெய்ப் பானையை உடைத்தல்

மனைதனில் யசோதை ஓர்நாள்
மத்தினால் தயிர்க டைந்தாள்.
அனைவரும் தத்தம் வேலை
ஆழ்ந்தனர் காலை வேளை.
கனலெரி அடுப்பில் பாலும்
காய்ந்துபின் வழிந்தே ஓட,
வினையினை நிறுத்தி விட்டு
விரைவுடன் இறக்கப் போனாள்.

(வினையினை- செய்து கொண்டிருந்த வேலையை)

இத்தரை உய்ய வந்த
எம்மிறை சின்னக் கண்ணன்
மத்தினைக் கையில் பற்றி,
மனத்தினில் குறும்பு முற்றி,
மொத்தினான் பானை மீது;
முழுவதும் வெண்ணெய், வெள்ளைக்
கொத்தெனக் கொட்டக் கையில்
கொண்டதை ஓடிப் போனான்.

 

யசோதை கண்ணனை உரலில் கட்டுதல்

 

உடைந்தவப் பானை கண்டாள்
உறுசெயல் மத்தைக் கண்டாள்
கடைந்தவெண் ணெய்யும் கீழே
கானக நதியாய்க் கண்டாள்
உடையெலாம் வெண்ணெய் பூசி
ஓடிய மகனைக் கண்டாள்
அடஉனைக் கயிற்றால் கட்டி
அடக்குவேன் கொட்டம் என்றாள்

வரத்தினைத் தரவே வந்த
வண்முகில் பின்னே ஓடித்
துரத்தியே பிடித்த அன்னை
தொல்லையைத் தீர்க்க வேண்டிப்
பொருத்தமாய்க் கயிற்றால் கட்டப்
பூண்டனள் மனத்தில் எண்ணம்
வருத்தமே கொண்ட வன்போல்
மயக்கவே அழுதான் மாயன்.

கயிற்றின் அளவு குறைதலும், பிறகு சரியாக இருப்பதும்

கயிற்றினை உரலில் கட்டிக்
கண்ணனை அருகி ழுத்து
வயிற்றினில் கயிற்றின் மற்றோர்
வார்முனை கட்டப் பார்த்தாள்
முயற்றினில் தோற்றாள், நீளம்
முழுதுமே குறைந்த தாலே
செயற்றிறம் குறைந்து வேர்வை
சிந்தியே மேனி சோர்ந்தாள்

(வார் – கடைகயிறு / churning rope)

(முயற்றினில்- முயற்சியில்)

அன்னையின் துன்பம் போக்க
அன்புடன் பவளம் போன்ற
சின்னவாய் இதழ்வி ரித்துச்
சிந்தினான் குறுந கையை.
முன்னதாய்க் குறைந்த போதும்,
முயன்றிடக் கயிறும் நீள,
என்னவோர் விந்தை என்றே
எண்ணியே கட்டி னாளே

உரலை இழுத்துக் கொண்டு இரண்டு மரங்கள் இடையே தவழ்தல்

மகிழ்ந்த அன்னை சென்றவுடன்
மதலை மெல்லத் தரைதவழத்
திகிரிப் பொம்மை போலுரலும்
திகழ்ந்து பின்னே தொடர்ந்ததுவே.
மகனும் வீட்டுத் தோட்டத்தில்
மருத மரங்கள் இரண்டிடையே
புகுந்தான், உரலும் குறுக்காகப்
போக முயன்று சிக்கியதே

(திகிரிப் பொம்மை – பொம்மைச் சக்கரம்)

 

மருத மரங்கள் முறிந்து, சாப விமோசனம் பெற்ற இரு தேவர்கள் தோன்றுதல்

இழுத்தான் குழந்தை அவ்வுரலை
இரண்டு மரமும் அசைந்தனவே
செழித்த மரத்தின் இடைக்குறுக்காய்ச்
சிக்கிக் கொண்ட கல்லுரலும்
அழுத்தம் கொடுக்க வேரறவும்
ஆடி மரங்கள் வீழ்ந்தனவே
வழுத்தி வணங்கித் தோன்றினரே
வனப்பு மிக்க இருதேவர்

(வழுத்தி– வாழ்த்தி/ போற்றி)

தேவர்கள் வணங்கி விடைபெறுதல்

( நாரதரின் சாபத்தால் மரமான தேவர் இருவர், கண்ணனால் முறிக்கப் பெற்றுச் சாப விமோசனம் அடைதல்)

பண்டை முனிவன் சாபத்தால்
பாரில் மருத மரமானோம்
வண்டி போல உரலுருட்டி
வந்து முறித்த உன்னருளால்
அண்டம் காக்கும் கோபாலா
அடைந்தோம் மீண்டும் எம்முருவம்
செண்டு மலர்த்தாள் பணிந்துநின்றோம்
செல்ல எமக்கு விடைதாராய்!

 

( தொடரும்)