அட்டைப்படம் – டிசம்பர் 2022

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
குவிகம் அமைப்பு தற்போது இரண்டு போட்டிகளை நடத்திவருகிறது
1. பிரபா ராஜன் அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளுக்கான போட்டி
2. குவிகம் குறும்புதினம் போட்டி (மூன்றாவது ஆண்டாக)
இரண்டு போட்டிகளுக்கும் படைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. எழுத்தாள நண்பர்களுக்கு நன்றி.
இரண்டு போட்டிகளுக்கும் இறுதித் தேதி  இம்மாதம் 15 (15.12.2022) என்று அறிவித்திருந்தோம்.

சில நடைமுறைக் காரணங்களுக்காக குறும்புதினம்  போட்டிக்கு மட்டும்

இறுதித் தேதி 31.12.2022 என மாற்றவேண்டியுள்ளது.

சிறுகதைபோட்டிக்கு இறுதித் தேதியில் (15.12.2022) மாற்றமில்லை
பிரபா ராஜன் அறக்கட்டளை மற்றும் குவிகம் நடத்தும் பெண்களை மையப்படுத்திய சிறுகதைகளை 15.12.2022க்குள் magazinekuvikam@gmail.com   முகவரிக்கும் குறும் புதினங்களை  31.12.2022க்குள் kurumpudhinam@gmail.com முகவரிக்கும் அனுப்புங்கள்.
மற்ற விதிமுறைகளிலும் மாற்றமில்லை

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

 


குவிகம் குறுக்கெழுத்து – சாய்நாத் கோவிந்தன்

குறுக்கெழுத்துப் போட்டி

 

 

இம்மாதம்  குறுக்கெழுத்து ஒரு தலைப்பின் கீழ் வருவது. திருக்குறள்  பற்றிய  குறுக்கெழுத்துப் போட்டி!

இதற்கான  லிங்க் இதோ: 

டிசம்பர் 18 க்குள் வரும் சரியான விடைகளில் குலுக்கல் முறையில் தேரதேடுக்கப்படும் ஒருவருக்கு ரூபாய் 100 பரிசு வழங்கப்படும்!

https://beta.puthirmayam.com/crossword/AA599C68D9

ACROSS
4. முதல் குறளின் கடைசி சொல் (3)
5. எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்ளச் சொல்லும் அதிகாரம் (5)
8. ஒழுக்க ___ நின்றார் நீடு வாழ்வார் (2)
9. பீலி (பறவை இல்லாமல்) (2)
10. அறிவின்மையை ___ வாண்மை என்று சொல்லுகிறார் (4)
11. தலைவிதி (2)
12. மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவது (5)
14. உலகத்தில் ஒருவர் தோன்றினால் இதனோடு தோன்ற வேண்டும் (3)
15. செருக்கு, சினம், ____ ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவருடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும் (3)
DOWN
1. காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (6)
2. விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வது (7)
3. பல (பதினைத்திற்கு மேலான) குறள்களின் கடைசிச் சொல். விடையின் பாகம் இந்தக் குறிப்பிலும் உள்ளது (2)
6. எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடு நடந்து கொள்ளச் சொல்லும் அதிகாரம் (5)
7. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் ______ ______ யவர் (7)
11.   __________  உடையவரே எல்லாவற்றையும் உடையவர்
12. பொறியின்மை யார்க்கும் ___யன்று (2)
13. __ படையான் செல்லிடம் சேரின் (2)

 

சென்ற மாதக் குறுக்கெழுத்துப் போட்டியின் விடை:

 

சரியான விடை எழுதியவர்கள்:

  1. ரேவதி ராமச்சந்திரன் 
  2. ராமமூர்த்தி
  3. ராய செல்லப்பா 
  4. துரை தனபாலன்
  5. இந்திரா ராமநாதன் 
  6. கல்யாணராமன் 
  7. பழநிவேலு 
  8. ஜெயா ஸ்ரீராம் 
  9. ராமசாமி 
  10. கற்பகம் 
  11. வைத்யநாதன் 
  12. ரேவதி பாலு 
  13. சுப்பிரமணியன் 
  14. கௌரிசங்கர்  

 

இதில் குலுக்கல்  முறையில் வென்றவர்: துரை தனபாலன் அவர்கள் 

வாழ்த்துக்கள்!!

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022 – சுரேஷ் ராஜகோபால்

எழுத்தாளர் சிவசங்கரி பற்றிய தகவல்களை தரமுடியுமா? - Quora

சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022 – சுரேஷ் ராஜகோபால்

 


எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்!


 

நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர / மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.

 இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை.

நவம்பர் மாதக்  கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையைக்  கொடுத்தது.

இரண்டு கதைகள் முழுவதும் நகைச்சுவை கதைகள் – (நந்து சுத்து எழுதிய “மரு பெயர்ச்சி”, இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”)

இரண்டு கதைகள் நிலையாமை, அதாவது இறப்பு, பற்றிய செய்திகளை கதை முழுவதும் பேசுகின்றன..

யாரும் விரும்பி படிக்கும் வகையில் எல்லாக் கதைகளுமே இருக்கிறன்றன. கதைகளில் சமூக சாடல், ஜனரஞ்கம், பிறப்பு இறப்பு, வயோதிகம், குடும்பச் சண்டை, சமூகச்  சண்டை என்ற எல்லாம் பலவித  மையக் கருத்துகள் வருகின்றன.

 மிக முக்கியமான விஷயம் .இலக்கிய இதழ்களில் வரும் கதைகள் மட்டுமே தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொய்யாக்கும் விதமாக வெகுஜன இதழ்களில் வந்த எல்லாக் சிறுகதைகளும் தரத்தில் மேன்மையாக இருக்கின்றன..

 இந்த சிறுகதைத் தேர்வில் பலவித சிறு கதைகளை படித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. மனதை நெகிழ வைக்கிறது..

இனி தேர்வுக்கு உகந்த கதைகளைப் பார்ப்போம்:::

 

எழுத்தாளர் சோம. அழகு எழுதிய “ருக்கு அத்தை”

திண்ணை 06 நவம்பர் 2022

விரும்பி மரணத்தை ஏற்றுக் கொண்டது தப்பு எனப் புரிந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று தன் கணவரிடம் கெஞ்சுவது, தாயில்லாமல் எப்படி தன் இரு மகன்களும் இருப்பார்கள் எனப் புலம்புவது.. இவை எல்லாம்     அருமையாக எழுதுகிறார் கதாசிரியர் .

இந்த சிறுகதையை “அனு ” என்ற மருமகள் தன் அத்தையிடம் பேசுவது போலக் கதையை நகர்த்துகிறார். உணர்ச்சி பூர்வ எழுத்தால் கதையை நகர்ந்து செய்கிறது. கதை ஒரு நேர்கோட்டில் ஒரே கதாபாத்திரம் எழுதிய கடிதமாகக் கொண்டு செல்லப் படுகிறது..

ஒரு நயமான கதை .

#

எழுத்தாளர் சரசுராம் எழுதிய “வானுக்கும் எல்லை உண்டு”

தினமணி கதிர் 27 நவம்பர் 2022

60 வயதுக்கு மேற்பட்ட தம்பதிக்கிடையே சண்டை. கணவன் மனைவியை (அடிக்கடி அடிப்பதுண்டு) அடித்து விடுகிறான். மனைவி வீட்டை விட்டுக் கிளம்பி தனது தோழி வீட்டில் அடைக்கலம் பெறுகிறாள். வெளியேறிய பின்னரே வாழ்க்கையை

ரசிக்க முடிகிறது,.

ருசிக்க முடிகிறது,

வாழ முடிகிறது வாழப் பிடிக்கிறது. இது தான் கதையின் கரு.

மீண்டும் தாய் தந்தையரை இணைக்க வரும் மகன் மகளிடம் சொல்வதாக ஒரு காட்சி, மிக அற்புதம்.

மனைவி பேசுவதாக “நினைச்சப்ப தூங்கறேன், எழுந்திருக்கிறேன். பிடித்ததை சாப்பிடறேன். பிடித்த இடத்துக்குப் போய் வரேன்.சுதந்திரம் என்பது என்ன என்று இப்பதான் புரிகிறது. நிஜமா நான் நானாக இருக்கேன்”

கதாசிரியர் பெண் கொடுமை, வன்கொடுமைகளை அழகாக விவரிக்கிறார்.

##

எழுத்தாளர் வி. உஷா எழுதிய “பெரிய கிளைகள் சிறிய இலைகள் ”

தினமலர் வாரமலர் 27 நவம்பர் 2022

“இரு வேறு உலகத்து இயற்கை” என்ற வரிகளை நினைவு படுத்தும் கதை..

ஒரு வீட்டில் பாட்டி போற்றப்படுகிறாள். மகன் மருமகள், பேரன், பேத்தி அனைவரும் உயிருக்கு உயிராக நேசிக்கப் படுகிறாள். மற்றொரு இடத்தில் உதாசீனப்படுத்தப் படுகிறாள் மற்றொரு பாட்டி. இருவரும் சந்திக்கும் போது போற்றப்படும் பாட்டி அனுசரித்தல் பற்றி மற்றவளிடம் பேசுகிறாள். இது தான் கதையின் கரு.

கதாசிரியர் “மரியாதை என்பது என்ன… பதவியால் வருமா… பொருளால் வருமா…?அது எப்படி வரும்? அது நிலைத்திருக்கவேண்டும் இல்லையா..? அதற்கு சில முயற்சிகள் செய்ய வேண்டும் ” அருமையான வரிகள்.

மற்றொரு இடத்தில் “நாம் பணத்தைச் சம்பாதிக்க வேண்டாம், மதிப்பு மரியாதை அன்பு இதனைச் சம்பாதித்தாலே போதும்” – மற்றொரு அருமையான வசனம்.

##

எழுத்தாளர் சன்மது எழுதிய “நீ வருவாய் என”

கணையாழி Nov 2022

அப்பா ராமகிருஷ்ணனுக்கு யாழினி ஒரே மகள், அவளுக்கு “டவுன் சின்ரோம்” என்ற நோய்.

மிக நேர்த்தியாகக் கதையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்.

இவ்வளவு தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த மருத்துவத் துறையில் இந்த நோய்க்கு ஏன் மருந்தில்லை, ஏன் கண்டு பிடிக்கவில்லை. எல்லாம் வியாபாரமாகிப் போய் விட்டது என்று புலம்புகிறார்.

மாலையில் துவண்டு படுத்திருக்கும் போது ஆளரவம் கேட்கிறது, ஒரு தலை கலைந்த பெண்ணின் நிழல் தெரிகிறது. அது யாழினியா? என்ற மர்மத்துடன் கதையை முடிக்கிறார்.

##

எழுத்தாளர் ஆதித்ய ஸ்ரீநிவாஸ் எழுதிய “திருக்கூத்து”

சொல்வனம் 27 நவம்பர் 2022

அந்த மலைக் கிராமத்தில் சில மர்மங்கள் இருக்கின்றன. அது சம்மந்தமாக பல புனைவுகள் பேசப் படுகின்றன. செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி விளக்கம் மலைச் சாமி மூலம் சொல்லப்படுகிறது.

இது தான் கதையின் கரு. மிக கனமான கதை. முடிவை நம்முடைய கருத்துக்கு விட்டு விடுகிறார்.

“மீன் மூச்சு விடுவது கூட விழும் காதுகள் விநாயகத்தினுடையது ” என்ற சொல்லாட்சி அருமை.

“தோட்டத்துச் சாமி அதிகம் பேசமாட்டார், வார்த்தைகள் அவருக்குள் இருக்கும் கடலாழத்தில் புதையுண்டு இருப்பதாக தோன்றும்” இங்கும் சொல்லாட்சி சிறப்பு.

கதை இன்னும் செல்கிறது.அந்த கிராமத்தை நமது கண்ணெதிரில் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

சிறப்பான கதை.

##

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய “மத யானை”

ஆனந்த விகடன் 09 நவம்பர் 2022 நகைச்சுவை சிறுகதை

முதியவர் ஒருவர் தன் படுக்கை அறையில் கட்டில் அருகில் கரப்பான்பூச்சியைப் பார்க்கிறார். அதை விரட்டவோ சாக அடிக்கவோ முயல்கிறார். அது கிடைக்காமல் அரைமனதோடு தூங்கப் போகிறார். இதுதான் கனவில் அந்த பூச்சிகளின் ஆக்ரமிப்பு.கதையின் கரு.

கதையைக் கொண்டு செல்கையில் முதியவர் கதாபாத்திரம் அச்சத்திலும் நகைச்சுவை, வீறு கொண்டு எழும் போதும் நகைச்சுவை. எழுத்தில் அங்கங்கே நகைச்சுவை மிளிர்கிறது.

அவரது குட்டை கட்டிலுக்கு வாமன அவதாரம் என்று பெயர்.

எறும்புக்கு திருவெறும்பூர் என்று ஊர் இருக்கிறதே ஏன் கரப்பான்பூச்சிக்கு இல்லை?

கண்ணுக்கு ஒரு கணம் தோன்றி உடனே மறைவதைப் பார்த்தல் அது கடவுளாக இருக்குமோ?

ஏன் இருக்கக் கூடாது மீனாய், ஆமையாய், பன்றியாய், சிங்கமாய் கடவுள் தோன்றும் போது ? என்ற வசனங்கள் மிக அருமை.

கிராப்பை ‘பல நூறாயிரம் வருஷத்துக்கு முன் தோன்றி இருந்தாலும் பருவ நிலைக்கேற்ப தன் வடிவத்தை மாற்றாமல் உலகிலே அணுகுண்டு வெடித்தால் கூட சாகாத வரம் பெற்றது’. என்று வர்ணிக்கிறார்.

எளிய சொல்லாட்சி நகைச்சுவை, நையாண்டி வெகு யதார்த்தமாக வந்த கதை இது.

##

கீழ்கண்ட இந்தக் கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்”

திண்ணை 27 நவம்பர் 2022

இலங்கை நகரிலிருந்த இனப்படுகொலையில், யுத்தம் என்ற பெயரில் சூறையாடப்பட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இடிபாடுகள் இடையே அப்பா பார்த்த வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்கள், புரியாமல் இருந்த தருணங்கள், மற்றும் இப்போது இடிபாடு இடையே கிடக்கும் நிலை பற்றியே பேசும் கதை.

சிறுவயதில், பள்ளி விடுமுறை நாட்களில் பட்டணத்திலிருந்து கதை சொல்லியும் அவரது தங்கையும் போவது வழக்கமான ஒன்று. அவர்கள் வீடு யாழ்ப்பாணத்திலிருந்த சண்டிலிப்பாய் என்ற கிராமத்திலிருந்து. விவரம் தெரியாத வயதில் விளையாட்டு. சாப்பாடு, என்று பலவற்றைக் கூறுகிறார்.

பல வகை மாம்பழங்கள் விவரம் எல்லாம் அருமை. பாண்டி, சேலம் கொழும்பு பச்சைத்தின்னி மல்கோவா என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.

விடுதலை போராட்டத்தில் ஈடுபாடு இருந்த நிலையில் அவள் வீட்டை விட்டுப் போய் விடுகிறாள்.

கதாசிரியரின் பார்வையில் “ஆண்களை விட பெண்களுக்குத்தான் இனமான உணர்வு அதிகமிருக்கலாம்” என்கிறார். மேலும் “யுத்தம் முடிந்த விட்டதாகச் சொல்லப்பட்டாலும் பிரியாவின் நிலை என்ன?” என்று உணர்வு பூர்வமாக எழுதுகிறார்.

“அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று அங்கு ஆண்ட அரசு நிர்வாகம் சொல்லாதது ஒரு அவலம்”

கதை சொல்லி தனது இளமை நினைவுகளை, தனது அத்தை மகள் பிரியாவை நினைத்து அழுகிறார், அது அவருக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம் என்று முடிக்கிறார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தமாதிரி பாரதியாரின் “எந்தையும் தாயும் ‘மகிழ்ந்து குலாவி இருந்தது இவ்வீடே … அதன் முந்தையராயிரம் மாண்டுகள் வாழ்ந்து முடிந்தது இந்நாடே” என்று மாற்றிப் பாடி தங்கள் கண்ணீர் அஞ்சலி கொடுப்பது மிக மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இதனை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையெனத் தேர்வு செய்கிறேன்.

 

தாயகக் கனவுடன்…

 

சரித்திரம் பேசுகிறது! –யாரோ

தஞ்சையம்பதி: கங்கை கொண்ட சோழன்

ராஜேந்திரன் –  கங்கை கொண்டான்

இராஜேந்திரன் அன்று கோதாவரிக்கரையில் முகாமிட்டிருந்தான்.

சாளுக்கியர்களை வென்ற சோழத்தளபதி விக்கிரமனிடம், தன் கனவைப் பற்றிப் பேசினான்.
“விக்கிரமா! தஞ்சையை என் முன்னோர்கள் தலைநகராக்கினர். என் தந்தை, அதில் வானளாவிய பெருவுடையார் கோவிலைக் கட்டி புனிதமாக்கினார். இந்த தஞ்சையை நாம் ஆலய நகராகவே வைப்பது ஒன்றே நாம் அந்தத் திருக்கோவிலுக்குச் செய்யும் வழிபாடு ஆகும். அரசியல், மற்றும் ராணுவத் தலைநகர் ஒன்றைப் புதிதாக நாம் படைப்போம். அந்தத் திருநகரை, சோழபுரத்தை, புனித கங்கைநீரால் குளிப்பாட்டி, அங்கும் நாம் ஒரு பெரும் சிவன் ஆலயத்தை நிறுவுவோம். நீ, நமது சிறந்த சோழப்படையைக் கொண்டு, வடதிசையில், வேந்தர்களை வென்று  அவர்கள் செல்வத்தைக் கொண்டு வருவாய்! கங்கை நதியிலிருந்து, புனித வெள்ளத்தை தங்கக்குடங்களில் கொணர்வாய்! அந்த புனித கங்கை வெள்ளம், நமது புதிய சோழபுரத்தைப் புனிதமாக்கட்டும். அது, கங்கை கொண்ட சோழபுரமாகட்டும். நீ இந்த வெற்றிகளுடன் திரும்ப வரும் நாளில், இதே கோதாவரிக்கரையில், உன்னை வரவேற்க நானே காத்திருப்பேன்!” என்றான்.

விக்கிரமன் தன் குரல் தழுதழுக்க “சக்கரவர்த்தி! உங்கள் எண்ணம் ஈடேறும் வண்ணம் இந்தச் செயலை செய்து முடிப்பேன். கங்கை மணாளனின் ஆசியுடன் கங்கை வெள்ளத்துடன் வெற்றியோடு வருவேன்” என்றான்.
விக்கிரமன் மேலும், “மன்னர் மன்னா! வட நாட்டில் ஒரு பெரிய அராபியக் கொள்ளைக்காரன் உலவுகிறான். வடமேற்கு பகுதியில், அவன் சில கோவில்களைக் கொள்ளையிட்டு வருகிறான். அவன் பெயர் முகம்மது. கஜினி என்ற நாட்டிலிருந்து வந்தவன். அது பற்றித் தாங்கள் அறியாததில்லை” என்றான்.

ராஜேந்திரன் சொன்னான்: ”விக்கிரமா! தெரியாததல்ல! நமது படை சற்றுக் கிழக்கே, கலிங்கம், மகதம், வங்கம் இப்பகுதிகளையும், கங்கைப் பகுதியையும் வென்று திரும்புவது மட்டுமே நமது திட்டம். முஹம்மது பல முறை மேற்குஇந்தியாவில் கொள்ளைத்தாக்குதல் செய்கிறான். நமது படையெடுப்பின் போது, அவன் கிழக்கு நோக்கி வருவானேயானால், அவனை முழுவதும் அழித்துவிடு. அவன் கொள்ளைக்காரன். அவனைத் தேடி நாம் போனால், நாம் காந்தாரப் பகுதிக்குப் போகவேண்டியிருக்கும். அல்லது அரபுநாட்டுக்கே போகவேண்டியிருக்கும். அது நமது கங்கை படையெடுப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடும். மேலும், முகம்மதுவுக்கும் நமது பராக்கிரமும், நமது வட இந்தியப்படையெடுப்பும் தெரிந்தேயிருக்கும். ஆகவே, நமது வட நாட்டுத் திக்விஜயத்து சமயம், அவன் அரபு நாடு ஓடவும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை நாம் படையெடுக்கும் சமயம் அவன் மேற்குஇந்தியாவைத் தாக்க வந்தால்- அவனை ‘மோதி மிதித்து விடு. அவன் முகத்தில் உமிழ்ந்து விடு’” என்றான்.

“தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்ற விக்கிரமன், மறுநாள் காலை ராஜேந்திரனிடம் விடைபெற்றுக்கொண்டு பெரும்படையுடன் புறப்பட்டான்.

சக்கரக் கோட்டப் போர்:

இராமாயணக் காலத்தில் வந்த ‘சித்திரக்கூடம்’ தான் இந்த சக்கரக் கோட்டம். இந்நாள் விசாகப்பட்டினத்திற்கு வடமேற்கே கலிங்கத்திலிருந்தது இந்த இடம். அதைப் போரில் வென்றான் விக்கிரமன். ஒட்டர தேசமும் (இன்றைய ஒடிஸ்ஸா), கோசலமும் கைப்பற்றப்பட்டன. கோசலமென்பது, கங்கைக்குத் தெற்கில் ஒட்டர நாட்டில் இருந்த பகுதி. அங்கு ஆண்ட மன்னன் இந்திரரதன். அவனை விக்கிரமன் தோற்கடித்தான்.

வங்க நாட்டில், தண்டபுத்தி (இந்நாள் மிதுனபுரி) என்ற நாடு. அது கங்கையாற்றுக்கு வடக்கே இருந்தது. அதைத் தர்மபாலன் ஆண்டு வந்தான். அவன், பலம் பொருந்தியவன். விக்கிரமன் தனது பெரும் யானைப்படையை, அணிவகுத்துச் சென்றான். கங்கை நதியைக் கடக்க – யானைகளாலேயே ஒரு பாலம் கட்டி , கங்கைநதியைக் கடந்தான் என்று கல்வெட்டுகள் சொல்கிறது. தர்மபாலன் தோற்றான். பிறகு கங்கைக்குத் தெற்குப் பகுதியில், தக்கணலாடம் என்ற பகுதியின் மன்னன் இரணசூரன் விக்கிரமனை எதிர்த்தான். அவனும் சோழரிடம் தோற்று ஓடினான்.
வங்கதேசத்தில், உத்திரலாடம் என்ற ராஜ்யம் இருந்தது. மகிபாலன் அந்நாட்டுப் பேரரசன். இதுவரை விக்கிரமனிடம் தோற்றவர்கள் சிற்றரசர்கள். மகிபாலனின் சேனை பெரிது. மகிபாலனை விக்கிரமன் வென்றதை செப்பேடுகள் சிலாகித்துச் சொல்கிறது.

வெற்றி பெற்ற மன்னர்களிடமிருந்து கப்பம் வசூலித்தான். பெரும் செல்வமும், தங்கமும், வெற்றிச்சின்னங்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

கங்கைநதி வெள்ளமடங்கிய பொற்குடங்களை அந்தச் சிற்றரசர்களின் தலை மீதே ஏற்றி, அவர்களுடன், தென்னிந்தியா புறப்படத் திட்டமிட்டான். கஜினி முஹம்மது எங்குள்ளான் என்று ஒற்றர்களை வைத்துத் தேடினான். தென்படவில்லை.

மகிபாலனிடம் விக்கிரமன் சென்றான்.

“மகிபாலா! எங்களுடன் நீ தோற்றாலும், உனது வீரம் போற்றற்குறியது. உனது ஆட்சியும் வங்காளத்திலிருந்து, கன்னோசி வரை பரவியுள்ளது. உனது ராஜ்யங்களை சோழர்கள் ஆள நினைக்கவில்லை. நீயே திறம்பட ஆள். சோழருக்கு கப்பம் மட்டும் செலுத்தி வா! கஜினி முகம்மது பதினெட்டு முறை வடமேற்கு, மாளவ, கூர்ச்சர பகுதிகளில் கோவில்களைக் கொள்ளையடித்து செல்வங்களை அரபு நாட்டு கஜினிக்குக் கொண்டு சென்றிருக்கிறான். கடைசியாக சோமநாத ஆலயத்தில் பெருங்கொள்ளை செய்திருக்கிறான். எங்கள் வட நாட்டு படையெடுப்பின் போது அவன் இந்தியாவில் இல்லாது அரேபியா ஓடிவிட்டான். எங்களிடமிருந்து தப்பிவிட்டான். ஆனால், நாங்கள் சோழநாடு சென்ற பின், அவன் மீண்டும் கொள்ளையடிக்க வரக்கூடும். சோமநாத ஆலயத்தை விட காசி விஸ்வநாதர் ஆலயம் செல்வத்தில் குறைந்ததல்ல! இது முஹம்மதுக்கும் தெரியும். ஆக, அவன் மீண்டும் வர வாய்ப்புள்ளது. அப்படி வருவதானால், உன் நாட்டு எல்லையான கன்னோசி வழியாகத் தான் வருவான். அப்படி வர நேர்ந்தால், காசி மற்றும் கோவில்களை நீதான் காக்கவேண்டும்.  ” என்றான்.

அப்போதே துவங்கி விட்டது காசி தமிழ்ச் சங்கமம்!

மகிபாலன்:

“விக்கிரமரே! அது என் தலையாய கடமை. முஹம்மது, கன்னோசியைத் தாண்ட விடமாட்டேன். காசியையும் காப்பேன்” என்று உறுதி கூறினான்.

மகிபாலனுக்கு நன்றி கூறி, விக்கிரமன் சோழநாட்டுக்கு திரும்பும் பயணத்தில் ஈடுபட்டான்.
விக்கிரமன் கோதாவரிக்கரை அடையும்போது, மாலை மயங்கியிருந்தது. அந்நேரம் அந்த ஆற்றங்கரையில், அருகிலிருந்த காட்டிலிருந்து பல தீப்பந்தங்கள் தோன்றின. வானத்தில் வாண வேடிக்கைகள் நடந்தது. குதிரையில் ராஜேந்திரன் தோன்றினான். விக்கிரமனுக்கு, தான் அளித்த வாக்குப்படி, தானே அவனை வரவேற்க அங்கு வந்து காத்திருந்தான்.

ராஜேந்திர சோழன் வரலாறு rajendra cholan history in tamil

விக்கிரமனுக்கு அளவு கடந்த ஆனந்தம்!

சக்கரவர்த்தியே, தன்னை வரவேற்க இவ்வளவு தூரம் வந்துள்ளாரா? என்னே எனது பாக்கியம்!
தான் அடைந்த வெற்றிகளைக் கூறி, கொணர்ந்த செல்வங்களையும், கங்கை வெள்ளமடங்கிய பொற்குடங்களையும் மன்னனுக்குக் காணிக்கையாக்கினான்! பொற்குடங்களைச் சுமந்து வரும் சிற்றரசர்களையும் அறிமுகம் செய்து வைத்தான்.

விக்கிரமன், தஞ்சை வந்த அதே நாள், கஜினி முஹம்மது, கிழக்குப் பகுதியில் கொள்ளையடிக்க முயன்றான். காசியின் செல்வங்கள் அவன் மனதில் இருந்தது. மகிபாலன் அவனைத் துரத்திவிட்டான். அலெக்சாண்டர் போல, அவனும் கங்கை நதிக்கு கிழக்கே வர இயலவில்லை.

ஆயினும், மெல்ல மெல்ல.. வட இந்தியாவில் அராபியர்கள் ஆதிக்கம் துவங்கத் தொடங்கியது. அந்தக்கதைகளையும் நாம் ஒருநாள் காண்போம்.

ஆனால் இப்பொழுது சோழரின் பொற்காலத்தில் இளைப்பாறுவோம்.

(தொடரும்) 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

Was There Ever a Trojan War? | Ancient Origins

கிரேக்கர்களுக்கும் டிரோஜன்களுக்கும் நடந்த உத்தம உண்மையில் ஹீரா -அதீனி – வீனஸ் மூன்று பெண் தெய்வங்களுக்கும் இடையே நடக்கும் போட்டியே என்பது அந்த முதல் கட்டத்திலியே தீர்மானமாயிற்று.

ஹீரா ஜீயஸின் மனைவி . வீனஸும் அதீனியும் ஜீயஸின் வெவ்வேறு மனைவிக்குப் பிறந்த மகள்கள். அழகிப்போட்டியில் தன்னைத் தேர்ந்தெடுத்ததற்காக பாரிஸின் பக்கம் இருப்பவள் வீனஸ். தங்களைத் தேர்ந்தெடுக்காததால் ஹீராவும் அதீனியும் பாரிஸூக்கு எதிராக கிரேக்கர் பக்கம் இருப்பவர்கள். கடவுளர் தலைவர் ஜீயஸ் ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவரை ஆதரித்து தன் நிலையைச் சமன் படுத்திக் கொள்வார்.

அதீனி பாரிஸை அழிக்க மற்போருக்கு ஏற்பாடு செய்தாள். போரின் நடுவில் வீனஸ் பாரீஸைக் காப்பாற்றி அந்த இடத்தைவிட்டே அவனைத் தூக்கிச் சென்று ஹெலனிடம் சேர்ப்பிக்கிறாள்.

தான் வெற்றி அடைந்ததாக மெனிலியஸ் அறிவித்து ஹெலனைத் தன்னிடம் அனுப்பும்படி உத்தரவிட்டான். வாக்குறுதிப்படி இது நடந்திருந்தால் போர் இல்லாமல் அமைதியாக முடிந்திருக்கும். ஆனால் அதீனியும் ஹீராவும் டிராஜன்களை வாக்குறுதியை மீறிப் போரைத் துவங்கச் செய்தனர்!

டிராய் நாட்டு தலை சிறந்த வில்லாளி பாண்டரஸிடம் கூரிய அம்பு ஒன்றைக் கொடுத்து மெனிலியஸ் நெஞ்சுக்குக் குறிவைத்து அவனைக் கொல்லும்படித் தூண்டினாள் அதீனி!

அவனும் வில்லை வளைத்து அம்பைப் பாய்ச்சினான்.

ஆனால் அதீனியே அந்த அம்பின் திசையை மாற்றி மெனிலியஸைக் கொல்லாமல் அவனை இலேசாகக் காயப்படுத்தும்படி செய்தாள்.

விளைவு?

கிரேக்கர் கோபம் கொண்டனர்.

வாக்குறுதியை மீறிய டிராய் நாட்டு வீரர்களையும் அந்த நாட்டையும் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டான் தளபதி அகெம்னன்!

அமைதி அழிந்தது!

மாபெரும் யுத்தம் தொடர்ந்தது. படை வீரர்கள் மோதினார்கள். பிணக் குவியலாக மாறியது அந்தப் பிரதேசம். இரு புறமும் தளபதிகள் எதிரிப் படைத் தளபதிகளைக் கொன்று அவர்கள் முன்னேற்றத்தை முடக்க ஏற்பாடுகள் செய்தனர்.

கிரேக்கர்களைக் கடவுளர் அதீனி தூண்டிப் போரை வீராவேசமாக நடத்தும்படி ஆணையிட்டாள். அதேபோல் ஏரீஸ் என்ற போர்க் கடவுள் ஹெக்டர் தலைமையில் வந்திருக்கும் டிராஜன்களைத் தீவிரமாகப் போரிடும்படி தூண்டினான்

ஓடிசியூஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரன் டிராஜன் படைகளை துவம்சம் செய்தான். பிரியம் மன்னனின் மகன்களில் ஒருவனைத் தனது ஈட்டியால் குத்திக் கொன்றான் ஓடிசியூஸ்!

தங்கள் இளவரசர்களில் ஒருவன் கொல்லப் பட்டதைக் கண்ட டிராஜன்படை பின் வாங்க ஆரம்பித்தது. ஆபோவது அப்போலோ கடவுள் டிரோஜன்களை நோக்கி,’ பின் வாங்காதீர்கள்; முன்னேறித் தாக்குங்கள்!’ என்று ஆணையிட்டான். அதேசமயம் அதீனி கிரேக்கரை இன்னும் பயங்கரமாகத் தாக்கும்படி தூண்டினாள்!

தங்கள் மன்னன் மெலியசைக் கொல்லமுயன்ற பாண்டரஸைத் தேடிக் கண்டுபிடித்துக் கொல்லப் புறப்பட்டான் டயாமிடிஸ் என்ற மாபெரும் கிரேக்க தளபதி. இருவருக்கும் இடையே பெரும் யுத்தம் நடந்தது. பாண்டராஸ் தன் அம்புத் திறமையைக் காட்டி டயாமீடிசை மரணக் காயப் படுத்தினான். ஆனால் ஆதீனியால் காப்பாற்றப்பட்ட டயாமிடீஸ் கடுங் கோபத்துடன் பாய்ந்து ஈட்டியால் பாண்டரஸைக் குத்திக் கொன்றான்.

அதற்குப் பழிவாங்க பாண்டரஸின் தோழன் ஈனியாஸ் பாய்ந்து வந்தான். அவன் வீனஸ் தேவதையின் மகன். டயாமிடீஸ் ஒரு பெரிய பாறையை அவன் மீது வீசி அவனைக் காயப்படுத்தினான். வீனஸ் பாய்ந்துவந்து அவனைச் சாகாமல் காப்பாற்றினாள். ஆனால் டயாமிடீஸ் வீனஸ் தேவதையின் கரங்களிலும் ஈட்டியைப் பாய்ச்சி அவளையும் காயப்படுத்தினான். போர்க் களங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லாத காதல் தேவதை வீனஸ் அப்போலோவிடம் தன் மகனைப் பார்த்துக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டு மிகுந்த துயருடன் பறந்து தேவர்கள் இருக்கும் ஒலிம்பஸ் மலைக்குச் சென்றாள்.

அப்பல்லோ ஈனியாஸிற்கு துணையாக இருக்கிறார் என்பதைத் தெரிந்ததும் அவனை விட்டுவிட்டு விலகினான் டயாமிடீஸ். அப்போலோ ஈனியாசைக் குணப்படுத்த அனுப்பிவிட்டு டிரோஜன்களின் தலைவன் ஹெக்டரைத் தீவிரமாகப் போரிட்டு கிரேக்கர்களைக் கொன்று குவிக்கும்படி உத்தரவிட்டார். அப்பல்லோவின் உத்தரவுப்படி போர்க்கடவுள் ஏரிஸும் ஹெக்டரின் உதவிக்கு வந்தான்.

மகா போர் வெறியனான டிராஜன்களின் தலைவன் ஹெக்டர் மிகுந்த கோபாவேசத்தோடு வருவதைப் பார்த்த கிரேக்கப் படை தடுமாறியது. ஹெக்டருடன் கடவுளர் ஏரிஸும் வருவதைக் கண்ட டயாமிடீஸ் ‘கடவுளர்களுடன் நான் போரிட்டால் நம் அனைவரது அழிவும் நிச்சயம்,பின்வாங்கிச் செல்வதுதான் சரி, பின்னர் மனிதர்களுடன் போரிடலாம்’ என்று தன் படையினரை நோக்கிக் கூறினான்.

ஹெக்டரின் அதகளம் ஆரம்பித்தது. அவனது போர் வெறிக்கு முன் கிரேக்கப் படை தடுமாறியது. அதைப் பார்த்த ஹீராவும் ஆதீனியும் போர் முனைக்கு வந்தார்கள். எதிரிக்கு உதவும் தங்கள் கடவுளர்களின் ஒருவனான ஏரிஸை எதிர்க்கவும் துணிந்தனர்.அவர்கள் இருவரும் அளித்த தைரியத்தில் டயாமிடீஸ் கடவுளர் ஏரிஸையே தன் ஈட்டியால் தாக்கிக் காயப்படுத்தினான். பயங்கர கூக்குரலுடன் ஏரிஸ் அங்கிருந்து அகன்றான். அதிகக் கண்ட ஹீரா அதீனி இருவரும் அங்கிருந்து சென்றனர். அதனால் கிரேக்க -டிரோஜன் போர் மீண்டும் மனிதர்களின் வடிவில் தொடர்ந்தது.

உண்மையில் இந்தப் போர் கடவுளர்களிடையே நடக்கும் போரே! அப்பாவி மனிதர்கள் கடவுளர்களின் போட்டி பொறாமை ஆகியவற்றைத் தங்கள் மேல் திணித்துக்கொண்டு சிக்கிச் சிதறித் தவித்தனர்.

டிரோஜன்களின் தலைவனும் மிகச் சிறந்த போர்த் தளபதியுமான ஹெக்டர் இதை நன்கு உணர்ந்திருந்தான்.தங்கள் பொன்னாடும் கோட்டைகளும் கொத்தளங்களும் கிரேக்க வீரர்களால் அழிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்த அவன் இறுதிப் போருக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டு மனைவி மகன்களிடம் இறுதி விடை பெற்று போர் முனைக்கு வந்தான். தானும் தன் தந்தையும் தன் சகோதரரும் தன் இனமும் அழியும் நாள் அதிகத்தூரத்தில் இல்லை என்பதை நன்கு உணர்ந்த ஹெக்டர் தான் அழியுமுன் கிரேக்கத்தின் பெரும்படையை அழிக்காமல் விடுவதில்லை என்று மனதுக்குள் வைராக்கியம் செய்துகொண்டான். தன் தம்பி பாரிஸின் நடவடிக்கையால் இந்தப் போரே இலியம் நகரின் மீது திணிக்கப்பட்டுள்ளது என்பதை நன்குணர்ந்த ஹெக்டர் அதற்காகத் தம்பியைக் குறை கூறாமல் டிரோஜன்கள் வீரத்தில் கிரேக்கருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு நிரூபிக்க விரும்பினான். தன் மனத்தில் ஏற்பட்ட அத்தனை சஞ்சலங்களையும் ஒதுக்கிவிட்டு போர் வெறியை மட்டும் நெஞ்சில் ஏற்றிக்கொண்டு போர்முனைக்கு வந்தான்.

ஹெக்டரின் தூரத்துச் சகோதரன் ஒருவன் கடவுளர்களின் எண்ணத்தை அறிந்து அதன்படி ஹெக்டரை தனி யுத்தத்திற்குச் சூளுரைக்கும்படி வேண்டிக்கொண்டான். ஏற்கனவே பாரிஸ் துவங்கிய தனி மனிதப் போரில் அவன் பாதியில் ஓடி ஒளிந்து அதனால் டிரோஜன்களுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் இதன் மூலம் மாற்ற விரும்பினான். தன்னை வெல்லக் கிரேக்கத்தில் எவனாலும் முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஹெக்டருக்கு நிறையவே இருந்தது.

ஹெக்டரின் சவாலைக் கேட்டதும் கிரேக்கப் படையில் சற்று அமைதி நிலவியது. ஹெக்டருடன் எப்படித் தனியே போரிடுவது என்ற தயக்கம் அனைவரது முகத்திலும் தெரிந்தது. மன்னன் மெலிசியஸ் கடும்கோபம் கொண்டு தானே போரிடப் போவதாகவும் அறிவித்தான்.அதைக் கண்ட மற்ற தளபதிகள் அனைவரும் ஒருமித்தமாக முன் வந்தனர். அவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று திருவுளச் சீட்டுப் போட்டார்கள். மாவீரன் அஜாக்ஸுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.

 

Ajax vs Hector : r/totalwar

ஈட்டியும் கேடயத்தையும் அணிந்த ஹெக்டரும் அஜாக்ஸும் போருக்குத் தயாரானார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மிகப் பலமாகத் தாக்கினர். இருவருடைய பலமும் சமய அளவில் இருந்தது. பல முறை அஜாக்ஸின் ஈட்டி ஹெக்டரின் உடலைக் கிழித்து இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது. ஹெக்டரும் அஜாக்ஸை பல முறை தாக்கி நிலை குலையச் செய்தான். அஜாக்ஸ் எறிந்த பெரிய பாறையில் மாட்டிக்கொண்டு சற்றுநேரம் தவித்தான் ஹெக்டர். ஆனால் அப்போலோ அவன் உதவிக்கு வந்து அவனை அந்த இக்கட்டிலிருந்து விடுவித்தான்.

காலையிலிருந்து இரு மாபெரும் வீரர்களும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கும்போது மாலை மயங்கி இரவு வந்தது. இரவில் போரைத் தொடரக்கூடாது என்ற கடவுளர் ஜீயஸின் கருத்தை அவரது தூதன் கூற வாழா சாவா என்ற தனிமனிதப் போரை அன்றைக்கு நிறுத்தி மறுநாள் தொடர இரு வீரர்களும் ஒப்புக் கொண்டனர்.

வெற்றி தோல்வி என்று யாருக்கும் கிடைக்காத அன்றைய இரவு கிரேக்கர் டிரோஜன் இரு அணிகளும் தங்கள் போர்த் திட்டம் பற்றி மந்திராலோசனை செய்ய நல்ல வாய்ப்பாக அமைந்தது. இறந்தவர்களின் உடலை மரியாதையுடன் எரிக்க போர் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்று கிரேக்கர்கள் விரும்பினார்கள். அதேசமயம் மாபெரும் இன அழிவைத் தவிர்க்க பாரிஸ் ஹெலனையும் அவளுடன் கொண்டுவந்த திரவியங்களையும் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தை டிராய் நாட்டு அமைச்சர் முன்மொழிய அதற்கு பாரிஸ் என்ன சொல்லப்போகிறான் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்! 

 

(தொடரும்) 

 

தாமரை – குறும் பட விமர்சனம் -நாகேந்திர பாரதி

ரவி சுப்ரமணியன் அவர்களின் ‘ தாமரை ‘ குறும்படம் பார்த்த பாதிப்பில் எழுதியது

———————————————————————————————————————————————–

திரைப் பார்வை: தாமரை | நதியின் ...ரவிசுப்பிரமணியன் - தமிழ் விக்கிப்பீடியா

அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உள்ள ‘தாமரைப் ‘ பெண்ணின் குடும்பத்தினரின்  குறைகளையும் நிறைகளையும் அப்படியே எடுத்துக்காட்டி நம் கண்களை நிரப்பி விடுகிறார் இயக்குனர் ரவி சுப்ரமணியன்.

 இதய பலவீனர்கள் பார்க்க வேண்டாம் என்று சில படங்களுக்குக் கொடுக்கும் முன்னெச்சரிக்கை போல் இரக்க பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லலாம். ஒவ்வொரு ப்ரேமாக அவர் எடுத்துக்காட்டும் சோகக் காட்சிகள் இரக்க குணம் உள்ளவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும்.

 தாமரைப் பெண்ணுக்கு மன நலம் சரியாக அவள் தாயாரோடு சேர்ந்து அந்த கிராமத்துச் சாமிகளை இறைஞ்ச வைத்து விடும். இது போன்ற குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளிக்க வைக்கும் இல்லங்களைத் தேட வைத்து விடும். படத்தின் இறுதியில் கேட்கப்படும் அன்பை அந்தக் குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் கொடுக்க வைத்து விடும். படத்தின் நோக்கம் நிறைவேறிய திருப்தியை இயக்குனருக்கும் அளித்து  விடும்.

ஆரம்பம் முதல் இறுதி வரை , அந்த நோக்கம் சற்றும் குறையாமல் இருக்கும்படி காட்சிகளை அமைத்திருப்பது இயக்குனரின் திறமை.  அந்தக் கிராமம், அந்த வீடு என்று இயக்குனர் தேர்ந்தெடுத்த   இரண்டு இடங்களும்  கதையின் போக்கையும் கதை மாந்தர்களின் போக்கையும் நியாயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

அந்த வீட்டின் அடுப்படி, திண்ணை,  அந்தக் கிராமத்தின் ஆட்டு மந்தை, தூக்கணாங் குருவிக் கூடுகள், எருக்கம் பூக்கள்  எல்லாமே ஒவ்வொரு காட்சியிலும் கதையின் உணர்வுக்குத் துணை செய்யும் குறியீடுகளாய் மாறியிருப்பது கூர்ந்து கவனிப்போருக்குப் புரியும்.  ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பதை விட, பார்ப்போர் பார்த்து உணர்வதே உத்தமம்.

ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் மனப்பான்மை எல்லாவற்றையும் காண்பித்ததோடு நின்று விடாமல்  அதற்கு எதிராக அரிவாளோடும் , விளக்கு மாறோடும் பொங்கும் பெண்மையையும் காண்பித்து சமுதாய மாற்றத்திற்கும் வழிகாட்டுகிறார் இயக்குனர்.

ஒவ்வொரு பாத்திரமும் நம்பக் கூடிய முறையில் அமைந்துள்ளன. மூன்று குழந்தைகளுக்கு மணமுடிக்க முடியாமல் தவிக்கும் தகப்பன், அதற்குக் காரணம் என்று நம்பும் மனநலக் குறைவான நான்காவது மகளைக்  கொல்ல  நினைப்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் , பெண்சிசுக் கொலை செய்யும் சில மாவட்டக் கிராமச்  செய்திகளை  பார்த்திருக்கும் காரணத்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஒத்துக் கொள்வதும்  நம்புவதும் வேறு வேறு தானே.

அங்கே தாய்மையின் கருணையும் , கோபமும் கலந்து காண்பித்து அந்தக்  கொடூரத்தைத் தவிர்த்திருப்பது ஒரு திருப்தி. கடைசியில்  மூன்று பெண்களை மணமுடித்துக் கொடுத்த பின் அந்தத் தந்தையின் மனம் மாறுவதும்  இயல்பு . ஆனால் கடைசியில் அவர்கள் பாதையில் பாதி தூரம் சென்று , குற்ற உணர்ச்சியில்  தொடர  முடியாமல் அவன் வேறு பாதையில் செல்வதும் அந்த கதாபாத்திரத்திற்கு  இயல்பு.

ஆனால் படத்தின் நடுவில் , சிறுத்தை இழுத்துச் சென்று விட்டதாய்  நம்மை நம்ப வைப்பதற்காகத்  தாயின் கதா பாத்திரம் , தாமரையை நினைத்து வருந்துவதாக வரும்  ஒரு பாடல் காட்சி , இரண்டாம் முறை பார்க்கும் போது கொஞ்சம் இடிக்கிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.  ஆனால் அவள் வீட்டில் இல்லையே என்று வருந்துவதாக நினைத்து சமாதானப் படுத்திக் கொள்ளலாம். இயக்குனரின் திருப்திக்காக.

நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பு. பாத்திரமாகவே மாறியிருந்தார்கள். மிகைப்படுத்தாத இயல்பான நடிப்பு. ஒளிப்பதிவு  இரவையும் , பகலையும், கிராமத்தையும் வீட்டையும் அதன் அழகோடும் , வறுமையோடும் இயல்பாகக்  காட்டுகிறது.   சிறுத்தை அறிவிப்புப் பலகையில் அந்த இலக்கணப் பிழைகள் மிகவும் இயல்பு.

பொருத்தமான பாடல் வரிகள் அந்தந்த  நிகழ்வுக்கு  ஏற்ப அமைந்துள்ளன. கடைசியில் . ‘விதி கிடக்குது விதி … ஈரக் கை   பட்டு அஞ்சறைப் பெட்டியிலே கடுகு முளைக்கலையா ‘ வரிகளில் நேர்மறை சிந்தனைகள் நிரம்பி வழிகின்றன. தாமரை மலர்வாள் என்ற நம்பிக்கை பிறக்கிறது .

தாமரை குறும்படம் விமர்சனம் - இனிது

 

திரை இசைக் கவிஞர் – புலவர் புலமைப்பித்தன் – முனைவர் தென்காசி கணேசன்

பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்| Dinamalar

1968ல், குடியிருந்த கோயில் படத்திற்காக , அந்தப் பாட்டு ஒலிக்கிறது. பிறகுதான் அது கோவையைச் சார்ந்த புலமைப்பித்தனின் கவிப் புனையல் என்று பரவுகிறது.

நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்

உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளைக்கு யார் யாரோ ?

தொடர்ந்து, *டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவன்* இருவரதுக் கூட்டு தயாரிப்பில் உருவான, *’கல்லும் கனியாகும்’* படத்திற்காக ,

எங்கே நான் வாழ்ந்தாலும்
என் உயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே.

மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான், என்று அற்புதமாக தந்தவர்.

அரசவைக் கவிஞராக, பின்னர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக, தொடர்ந்து அரசியலிலும் பயணித்தவர்.

அவர் புனைந்த பாடல்கள தான் எத்தனை எத்தனை !

  • அழகென்னும் ஓவியம் இங்கே – *ஊருக்கு உழைப்பவன்*
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா – *அடிமைப் பெண்*
    கங்கை நதியோரம் ராமன் நடந்தான் – *வரப்பிரசாதம்*
    அமுத தமிழில் எழுதும் கவிதை – *மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
    தென்றலில் ஆடும் கூந்தலில் – *மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
    புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என – *ஊரும் உறவும்*
  • இன்பமே உந்தன் பேர் பெண்மையோ – *இதயக்கனி*
    இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா – *பல்லாண்டு வாழ்க*
    பூமழை தூவி – *நினைத்ததை முடிப்பவன்*
    எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா – *குமரிக்கோட்டம்*
  • உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை – *நீயா*
    உனது விழியில் எனது பார்வை – *நான் ஏன் பிறந்தேன்*
    நீ என்னென்ன சொன்னாலும் கவிதை – *நேற்று இன்று நாளை*
    பாடும் போது நான் தென்றல் காற்று – *நேற்று இன்று நாளை*
    சிரித்து வாழவேண்டும் – *உலகம் சுற்றும் வாலிபன்*
    நாளை உலகை ஆளவேண்டும் – *உழைக்கும் கரங்கள்*
    இந்த பச்சைக்கிளிக்கொரு *நீதிக்குத் தலைவணங்கு*
  • இனியவளே என்று பாடி வந்தேன் – *சிவகாமியின் செல்வன்*
    எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது – *சிவகாமியின் செல்வன்*
    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – *கோவில் புறா*
    இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் – *நல்ல பெண்மணி*
  • முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்- *ஆணிவேர்*
    நானொரு பொன்னோவியம் கண்டேன் – *கண்ணில் தெரியும் கதைகள்*
    பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே – *தீபம்*
    ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது – *மதனமாளிகை*
    ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – *தங்கமகன்*
    கண்மணியே பேசு மெளனம் என்ன கூறு – *காக்கிச்ச்சட்டை*
    முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருக – *தர்மத்தின் தலைவன்*
    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – *உன்னால் முடியும் தம்பி*
  • உன்னால் முடியும் தம்பி – *உன்னால் முடியும் தம்பி*
    சாதிமல்லிப் பூச்சரமே- *அழகன்
    கோழி கூவும் நேரம் ஆச்சு – *அழகன்*
    சங்கீத ஸ்வரங்கள்- *அழகன்*
    மான் கண்டேன் மான்கண்டேன் – *ராஜரிஷி*
    அந்தப்புரத்தில் ஒரு மகராணி – *தீபம்*
    சங்கத்தில் பாடாத கவிதை – *ஆட்டோ ராஜா*
    நீ ஒரு காதல் சங்கீதம்- *நாயகன்
    அடி வண்ணக்கிளியே – *மிருதங்க சக்கரவர்த்தி*
    உச்சி வகுந்தெடுத்து – *ரோசாப்பூ ரவிக்கைகாரி
    இப்படிப் பல பாடல்கள் தந்தவர்.

ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த, எல்லோரும நல்லவரே என்ற படத்தில் வரும்,

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக
கூரையை எரிப்பாரோ
வேதனை தன்னை
விலை தந்து யாரும்
வாங்கிட நினைப்பாரோ

இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
வழக்குகள் முடிவாகும்
இருக்கின்ற பகையை
வளர்த்திடத்தானே
வாதங்கள் துணையாகும்!

என்ற வாழ்வியல் கருத்து மிக அபாரம்.

அதேபோல, நாயகன் படத்தில்,

நீயொரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் சங்கீதம்
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் ஊற்றுகிறாய்

ன்ற காதல் வரிகள் கொள்ளை அழகு.

வாலியைப் போலவே, இவரின் பாடல்களும், எம்ஜிஆரின் புகழுக்கும், அரசியலுக்கும் உதவியாக இருந்தது.

நீங்க நல்ல இருக்கணும் நாடு முன்னேற,  புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ, நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை என்று எம்ஜிஆர் புகழ் பாடி , எழுதிய பாடல்கள் பல.

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து, கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரி,

என்ற வரிகள் காவிரியின் பெருமையைச் சொல்லும்.

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே,

என்று வரும் வரிகளை மறக்க முடியாது.

“நாளை உலகை ஆள வேண்டும்” என்று தொடங்கும் (உழைக்கும் கரங்கள் ) பாடலில், பொது உடைமை வெளிப்படும்.
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
என்றும் நியாயங்கள் சாவதில்லை

கவிச்சக்கரவர்த்தி கம்பன்,

சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
என்று அழகாக வருணிப்பார்.

கவிஞர் புலமைப் பித்தன், இராமன் முன் செல்ல, சீதை பின் தொடர்ந்த காட்சியை ‘வரப்பிரசாதம்’ என்ற படத்தில்,

கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணின்மணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்….
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,
உள்ளம் நெகிழ்ந்தான்,
என்று அழகான தமிழ்நடையில் வார்த்தைகளை தெளித்து இருப்பார்.

தீபம் என்ற படத்தில்,

பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே என்றும்,

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ என்றும்,

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல –
எங்க பாரதத்தில் சொத்துச் சண்ட தீரவில்ல

வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல –
ஜனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல –
இது நாடா இல்ல வெறும் காடா –
இதைக் கேட்க யாரும் இல்ல தோழா என்றும்,

பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன, என்றும்,

புலவர் எழுதிய பாடல்கள் நீரில் கலந்தழியும் அலைகளைப் போலல்லாமல் தனித்து உறைகிற பவளப் பாறைகளாகவே ஒளிர்ந்தவை.

`நான் தாயுமானவன்’ என்று தொடங்கும் தாம்பத்யம் ஒரு சங்கீதம் படத்தின் பாடல் எம்.எஸ்.வி. இசையில் , மற்றும் சங்கர் கணேஷ் இசையில் `பட்டு வண்ண ரோசாவாம்’ என்ற பாடல்கள் கருத்து செறிவு மட்டுமல்ல , கவி நயமும் கூட.
மௌனம் சம்மதம் என்ற படத்தில், கண்ணதாசனைப் போலவே, ஒரு சொல் அழகு தெரியும்,

கல்யாண தேன்நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான்நிலா
என்னோடு வா நிலா

அந்த கறந்த பால் இயற்கை அப்படியே கொடுத்த தன்மை காய்ச்சாதது. இது தான் அர்த்தம்!

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா
பார்ப்போமே
ஆவலா வா வா என்னும் வரிகள் மிக அழகு.

ஊருக்கு உழைப்பவன் படத்தின் பாடலில் வரும்,

காய்ச்சிய பாலில் தானே ஆடை
காமத்துப்பாலில் ஏனடி ஆடை

என்ற வரிகளையும், அடிமைப்பெண் பாடலில் வரும்

பொய்கை என்னும் நீர்மகளும்
பூவாடை பார்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விளக்க வேர்த்திருந்தாள்!

என்ற வரிகளை, கவியரசு மகிழ்ந்து பாராட்டினாராம்.

தேசத்தினைத் துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன, மற்றும்,

பாசங்கள் பந்தம் எல்லாம்
மனிதர்க்குத் தானடா
பதவிக்கு வாழ்க்கைப் பட்டால்
அவையெல்லாம் ஏதடா

எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நான்கு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்

என்ற சமுதாயச் சாட்டையும் இவரின் வரிகளில் உண்டு.

மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்குப் பிடிதததெல்லாம் இடையினம், என்பதும்

இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள் , என்பதும்

பாவை இவள் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ , என்பதும்,

இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ

என்பதும்,
அழகின், ரசனையின் உச்சம். மரத்தை மறைத்தது மாமத யானை – மரத்துள் மறைந்தது மாமத யானை என்பது போல, காமமும், விரசமும், உள்ளே மறைய, கவிதையும், ரசனையும், வெளியே தெரியும்.

அமுதத் தமிழில்  கவிதை எழுதும்
புதுமைப் புலவன் நீ

என்ற வரிகளை எழுதியவுடன், பாடத் தயாராக இருந்த கலைவாணி வாணி ஜெயராம் , கவிஞரைப் பார்த்து, உங்களைப்பற்றி நீங்களே எழுதிய வரிகளா இவை என்றாராம்,

பாரதி திரைப் படத்திற்காக, பாரதி எழுதிய பாட்டு என்று நினைக்கும்படியான அருமையான இந்தப் பாட்டை எழுதியவர் புலமைப்பித்தன் .. அவர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்தாலும் இப்பாட்டில் கடவுளைப்பற்றி வர்ணிக்கும் விதம் அற்புதம். கிட்டத்தட்ட, ஆதிசங்கரர் தனது குருவை முதன் முதலில் பார்த்தபோது, எழுதிய தசஸ்லோகியின் சாரம் என்றே கூறலாம்.

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியைத் தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
வரிப்புலியதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்

தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத் தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்

பற்றுத் தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதைக் கழித்தலும் அவன் பாடம்

மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ  எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ, என்ற அருமையான வாழ்வியல் தத்துவத்தை, பாரதி, கண்ணதாசன் வழியில் எழுதியிருப்பது மிகச் சிறப்பு.

தன்னைப்பற்றிக் கூறும்போது, இலக்கிய நயத்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தப் புலவனென்றப் பெருமை எனக்குண்டு”* எனத் தமிழ் செருக்கோடு கூறியதில் , நிச்சயம்,,உண்மையும் உண்டு என்பது அவரின பாடல்களைப் படிக்கும்போதும், கேட்கும்போதும் தெரியத்தானேசெய்கிறது?

நன்றி

மீண்டும் அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம்.

அதிசய உலகம்-4 – அறிவுஜீவி

 

அதிசய உலகம்

Bluegrass - Free Internet Radio - Live365

‘நெத்தியடி’

‘மாமி! சுடச்சுட ஒரு அறிவியல் செய்தி! 60 மில்லியன் வருட முன் ஒரு பெரிய விண்கல் (asteroid) பூமியில் விழுந்து, பிரளயம் ஏற்பட்டு, டைனசார் உட்பட பல உயிரினங்கள் அழிந்தது” என்று தொடங்கினாள் அல்லிராணி.

“பழைய கதை..” என்று அங்கலாய்த்தாள், அங்கயற்கண்ணி மாமி.
“ஆனால் மாமி! அது போல ஒருநாள் இன்னொரு விண்கல் இவ்வுலகத்தை அழிக்க வராமல் போகுமா?”
“வந்தால்? அழிய வேண்டியது தான்”

“மாமி! அப்படி வரக்கூடிய விண்கல்லை தள்ளிவிட முடிந்தால்?”

“அதற்கு கல்கி தான் அவதாரம் எடுத்து வர வேண்டும்” – மாமி.
“மாமி! நமக்கு இருப்பதோ ஒரே பூமி. அதை நாம் தானே காக்க வேண்டும்.  நாசா (NASA)வில் ஒரு பரிசோதனை நடந்தது.
ஒரு சின்ன விண்கல்.
அதன் நீளம் 500 அடி.
அதன் பெயர் டிமோர்பஸ் (Dimorphos ).
அது டிடிமோஸ் (Didymos) என்ற அதன் தாயார் விண்கல்லைச் சுற்றி வருகிறது. சுற்றி முடிக்க 11 மணி நேரம் 55 நிமிடம் ஆகிறது.
இந்த விண்கல்லை, ஒரு ராக்கெட் வைத்து மோதித் தள்ள நாசா திட்டமிட்டது.” என்றாள் அல்லி!

“அது பூமியை நோக்கி வந்துகொண்டிருந்ததா?”- என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் மாமி.
“இல்லை. அதை இடித்துத்தள்ளுவது என்பது ஒரு பரிசோதனைக்காகத்தான்.”

“நெத்தியடி! அப்புறம்?” மாமியின் ஆவல் அதிகரித்தது.

“டார்ட் (DART) என்ற திட்டத்தில், டிமோர்பஸ் மீது நாசாவின் ராக்கெட், மணிக்கு 22000 கிலோமீட்டர் வேகத்தில் மோதியது”

“அட, ராக்கெட் செம ஸ்பீட்! நல்ல வேளை அங்கு டிராஃபிக் போலீஸ் ஒன்றும் இல்லை” என்று சிரித்தாள் மாமி.
“உங்க மொக்கையைக் குப்பையில போடுங்க!” என்று சிரித்த அல்லி தொடர்ந்தாள்.

“அப்படி இடித்துத் தள்ளப்பட்ட விண்கல் நகர்ந்தது. அதன் ஆர்பிட்டல் நேரம் 32 நிமிடம் குறைந்து, 11 மணி 23 நிமிடம் ஆனது.” என்றாள்.

உடனே மாமி, “அதை மோதித்தள்ளாமல், உடைத்தே எறிந்திருக்கலாமே? முருகன், அந்த கிரவுஞ்ச மலையை வேல் கொண்டு உடைத்தது போல” என்றாள்.

“அப்படி உடைத்தால், உடைந்த பகுதிகள் என்ன செய்யுமோ? யாரோ அறிவர்?”- அல்லி கூறினாள்.

“ஆஹா! சூரபத்மனை முருகன் வேல் வைத்து பிளக்க, அது சேவலும் , மயிலுமாகி தாக்க வந்ததைப் போலவா” என்ற மாமி தொடர்ந்தாள்.

“அல்லி! நீ பிறந்த வருடம் 1997. அப்ப வந்தது ‘ஆர்மகெட்டான்’ என்ற ஒரு ஹாலிவுட் படம். புரூஸ் வில்லிஸ் ஹீரோ. அந்தப்படத்தில், இதே போல, ஒரு விண்கல் பூமியை நோக்கி வர, அங்கு ராக்கெட்டில் போய் இறங்கி, அங்கு பள்ளம் தோண்டி, அணுகுண்டு வைத்து, அந்த விண்கல்லை உடைத்து பூமியைக் காப்பாற்றினார்கள். அது போலவே ஒரு நாள் நடக்கும் போலிருக்கே” என்றாள் மாமி!

அல்லி ஆமோதித்தாள்!
 

https://www.nasa.gov/press-release/nasa-confirms-dart-mission-impact-changed-asteroid-s-motion-in-space/

 

இது ஒரு அதிசய உலகம்!

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
27. தா தீ தோம் நம் ! – ஆகஸ்ட் 2021
28. விளையாடலாம் ! – ஆகஸ்ட் 2021
29. மழையே வா ! – செப்டம்பர் 2021
30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
31. தோட்டம் போடலாமா ? – அக்டோபர் 2021
32. வள்ளுவர் தாத்தா ! – அக்டோபர் 2021
33. தமிழ் ! – நவம்பர் 2021
34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
41. என்ன மரம் ! – மார்ச் 2022
42. சைக்கிள் ! – மார்ச் 2022
43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
47. மழை வருது ! – ஜூன் 2022
48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
49. என் சித்திரம் ! – ஜூலை 2022
50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022
53. பூனையாரே ! – செப்டம்பர் 2022
54. எதைச் செய்தாலும் ! – செப்டம்பர் 2022
55. கடைக்குப் போகலாமா ? – அக்டோபர் 2022
56. பூ ! பூ ! பூ ! – அக்டோபர் 2022
57. மிருகக்காட்சி சாலை ! – நவம்பர் 2022
58. மாமா ஸ்கூட்டர் ! – நவம்பர் 2022

************************************************************

மரங்கொத்திப் பறவை(நீதிக்கதை) - கதைகள்

மரங்கொத்தி !

மரங்கொத்தி ஓ மரங்கொத்தி – நீ
எங்கே பறந்து போகின்றாய் ?
இங்குமங்கும் பறந்து சென்று –
எதனை நீயும் தேடுகிறாய் ?

மாமரத்தினிலே மாம்பழங்கள் –
பழுத்து அழகாய் தொங்குது பார் !
வேப்பமரத்தில் வேப்பம்பழமும் –
மஞ்சள் நிறத்தில் மயக்குது பார் !

எத்தனையோ மரங்கள் இங்கே –
பழங்கள் குலுங்க அழைக்கிறதே !
எல்லாம் விட்டு நீயும் இந்த –
மரத்தை ஏன்தான் கொத்துகிறாய் ?

வேடிக்கைதான் உன்னோடு –
விடாமல் மூக்கால் கொத்துகிறாய் !
மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டே –
முட்டி முட்டி நீயும் மோதுகிறாய் !

எத்தனை எத்தனை நிறங்கள் உன் மேல் –
எண்ணியே நானும் வியக்கின்றேன் !
கொண்டையை நீயும் ஆட்டும்போது –
சொக்கித் தானே போகின்றேன் !

மரங்கொத்தி ஓ மரங்கொத்தி – என்
மனதை மயக்கும் மரங்கொத்தி !
ஒரு நாள் மட்டும் அருகில் வா – உன்னை
தடவித் தடவிப் பார்க்கின்றேன் !

                                        காய் வாங்கலையோ ?

காய்கறிகளை ஃப்ரெஷாக வைக்க புதிய அறிமுகம் - சோலார் காய்கறி வண்டி - காய்கறிகளை ஃப்ரெஷாக வைக்க புதிய அறிமுகம் - சோலார் காய்கறி வண்டி - Samayam Tamil

 

 

காய் வாங்கலையோ காய் காய் காய் !
அம்மா வாங்க காய் காய் காய் !
எல்லா காயும் இங்கிருக்கு !
வாசலில் வண்டியில் வாங்குங்க !

கத்தரி வெண்டை பாகற்காய் !
பரங்கி பூசணி புடலங்காய் !
கோசு பட்டாணி வாழைக்காய் !
எல்லாம் இருக்கு வாங்குங்க !

பொரியல் செய்ய பீன்ஸ் அம்மா !
வதக்கல் செய்ய வாழைக்காய் !
சாம்பார் மணக்க வெங்காயம் !
கூட்டு செய்யலாம் கோசம்மா !

வாழைத்தண்டு – வாழைப்பூ !
அத்தனையும் நமக்கு சத்தம்மா !
உருளைக்கிழங்கு வெங்காயம் தக்காளி !
ஒவ்வொரு வீட்டிலும் வேணும்மா !

வெள்ளரிக்காயும் கேரட்டும் –
வெறுமனே வெட்டி சாப்பிடலாம் !
எலுமிச்சை இஞ்சி இருந்து விட்டால் –
அனைத்திலும் சுவையே சேர்த்திடலாம் !

பச்சை மிளகாய் கொத்தமல்லி –
எல்லாம் இருக்கு என்னிடமே !
வேகமாய் வாங்க அனைவருமே !
இன்றைய சமையல் ஆகணுமே !

காய் வாங்கலையோ காய் காய் காய் !
அம்மா வாங்க காய் காய் காய் !
எல்லா காயும் இங்கிருக்கு !
வாசலில் வண்டியில் வாங்குங்க !

 

நன்மை அருளும் நவக்கிரகத் தலங்கள் – ( பாகம்-2) – ம. நித்யானந்தம்

 

4. திருவெண்காடு (புதன்)

காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று. ‘ஆதி சிதம்பரம்’ என்றும் ‘சுவேதாரண்யம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான புதன், தானும் நவக்கிரகங்களில் ஒருவரான வேண்டும் என்று இத்தலத்து இறைவனை வழிபட்டு, அப்பதவியை அடைந்தாகக் கூறப்படுகிறது. எனவே, இத்தலம் நவக்கிரகங்களில் புதன் தலமாக வணங்கப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் புதன் சன்னதி தனியாக உள்ளது.

வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் கிழக்கே சீர்காழி – பூம்புகார் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.

இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாம் மூன்று உள்ளன.

மூலவர் ‘சுவேதாரண்யேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சுயம்பு மூர்த்தியாக, சற்று உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை ‘பிரம்மவித்யா நாயகி’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். பிரம்ம தேவருக்கு வித்தை கற்றுக் கொடுத்ததால் இப்பெயர் பெற்றாள். இங்கு சுவாமி சன்னதிக்கு எதிரே அம்மன் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று. இது ‘பிரணவ பீடம்’ என்று அழைக்கப்படுகிறது.

மற்றொரு மூர்த்தி அகோர வீரபத்திரர். எட்டு திருக்கரங்களுடன், கையில் சூலாயுதத்துடன் சுமார் 10 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். இது சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் 43வது வடிவம் ஆகும். மருத்துவாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் ஈசான்ய முகத்தில் இருந்து தோன்றியவர். எதிரில் காளி தேவி சன்னதி உள்ளது.

மூன்றாவது மூர்த்தி இங்குள்ள நடராஜர். சிதம்பரத்தில் இருப்பது போன்றே சிதம்பர ரகசியமும், ஸ்படிக லிங்கமும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜருக்கு ஆண்டுதோறும் ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

கோயிலின் அக்னி மூலையில் அக்னி தீர்த்தமும், தெற்குப் பிரகாரத்தில் சூரிய தீர்த்தமும், வடக்குப் பிரகாரத்தில் சந்திர (சோம) தீர்த்தமும் உள்ளன. இவைகளை ‘முக்குளம்’ என்று கூறுவர்.

இக்கோயிலின் தலவிருட்சமாக வில்வம், கொன்றை, வடவாலம் என்று மூன்று விருட்சங்கள் உள்ளன.

இங்கு பித்ரு கடன் செய்வது விஷேசமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்யலாம். இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். கயாவில் உள்ளது போலவே அழியாத அட்சயவடம் (ஆலமரம்) உள்ளது. அங்கு ‘விஷ்ணு பாதம்’ உள்ளது போல் இங்கு இந்த ஆலமரத்தின் கீழ் ‘ருத்ர பாதம்’ உள்ளது.

பெண்ணாடகத்தைச் சேர்ந்த அச்சுதக் களப்பாளர் தமக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, தமது ஆசிரியரான அருணந்தி சிவாச்சாரியாரை அணுகினார். அவரது அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து முக்குள நீராடி சிவபெருமானை வழிபட்டு ஆண் மகவைப் பெற்று, இக்கோயிலின் இறைவன் பெயரான ‘சுவேதவனப் பெருமாள்’ என்னும் திருநாமம் இட்டார். இக்குழந்தையே பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தை இயற்றிய ‘மெய்கண்ட தேவர்’ ஆவார். இவரது சன்னதி சோம தீர்த்தம் அருகில் உள்ளது.

இத்தலத்து பெருமானின் அருளினால் தான் பட்டினத்தார் அருகில் உள்ள பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்) தோன்றினார். அவரது இயற்பெயர் ‘திருவெண்காடர்’ என்பதாகும். அவர் குபேரனின் அம்சமாகக் கருதப்படுபவர். இத்தலத்து இறைவனே அவரை ஆட்கொண்டார் என்பது பட்டினத்தார் வரலாறு.

சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை ‘இடுக்கி அம்மன்’ என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.

தேவேந்திரனும், வெள்ளை யானையும் பூசை செய்து வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றள்ள தலம்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் திறந்திருக்கும்.

 

5. ஆலங்குடி (குரு)

Guru Sthalam: Shree Abhathsahayeswarar Temple, Alangudi, Kumbakonam |  Mapio.net

நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் குரு தலமாகும். மூலவரின் கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியே இங்கு குரு பகவானாகக் அருள்பாலிக்கின்றார். ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயந்த தேவர்களுக்கு ஞானோபதேசம் செய்த மூர்த்தியாக, குருவாக சிவபெருமான் காட்சியளிக்கின்றார். குருபெயர்ச்சி விசேஷம். இவருக்கு உற்சவங்களும் நடைபெறுகின்றன.

கருமையான நிறமுள்ள ‘பூளை’ என்னும் செடிகள் நிறைந்த வனமாக இருந்ததால் இப்பகுதி ‘இரும்பூளை’ என்று வழங்கப்பட்டது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தைக் குடித்து, சிவபெருமான் தேவர்களைக் காத்ததால் இத்தலம் ‘ஆலங்குடி’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.

நீடாமங்கலம் – கும்பகோணம் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு சென்று வலதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவு.

மூலவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். இவர் ‘காசி ஆரண்யேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பாள் ‘ஏலவார்குழலி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்பாள் இத்தலத்தில் தவமிருந்து இறைவனைத் திருமணம் செய்துக் கொண்டதாகத் தலபுராணம் கூறுகிறது.

திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குரிய பரிவார மூர்த்தியாக இத்தலம் தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்திதேவர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.

வீரபத்திரர், விஸ்வாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம்.

இக்கோயிலின் தீர்த்தம் அமிர்த பொய்கை. தல விருட்சம் பூளைச் செடிகள்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

6. கஞ்சனூர் (சுக்கிரன்)

கஞ்சனூர் வந்தால் ஐஸ்வர்ய யோகம் நிச்சயம்!

நவக்கிரகத் தலங்களுள் சுக்கிரன் தலம் இது. சிவபெருமானின் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்கச் செய்யும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தைப் பெற்றவர். ஒருசமயம் நவக்கிரகங்களுள் ஒன்றான இவரால் மகாவிஷ்ணுக்கு சுக்கிர தோஷம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதனால் இங்கு சுக்கிரன் சன்னதி சிறப்பு. பலர் வந்து பூஜை செய்து பரிகாரம் செய்கின்றனர்.

‘கஞ்சன்’ என்றால் தாமரையில் இருப்பவன் என்று பொருள். அதாவது பிரம்மதேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு ‘கஞ்சனூர்’ என்ற பெயர் ஏற்பட்டது.

மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சூரியனார் கோயிலில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கஞ்சனூர் கைகாட்டி பார்த்து சுமார் 2 கி.மீ. தொலைவு செல்ல கோயிலை அடையலாம்.

மூலவர் ‘அக்னீஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சற்று பெரிய வடிவினராக காட்சி தருகின்றார். அம்பிகை ‘கற்பகநாயகி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்பாள் சிறிய வடிவம். சுவாமியும், அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகின்றனர். இருவருக்கும் இடையில் சுப்ரமணியர் சன்னதி உள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் எனப்படும்.

இக்கோயிலில் உள்ள நந்தி ஒரு பிராமணருக்காக புல் தின்றதாக வரலாறு கூறுகிறது.

பிரகாரத்தில் கல்லால் ஆன நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளனர். அவருக்கு வலதுபுறம் பராசர முனிவர்க்கு காட்சிய தாண்டவ காட்சியும், இடதுபுறம் ஹரதத்தரின் சிற்பமும் உள்ளன.

ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின்மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய தலம்.

63 நாயன்மார்களுள் ஒருவரான மானகஞ்சார நாயனார் முக்தியடைந்த தலம்.

பிரம்மா, அக்னி, கம்சன் ஆகியோர் வழிபட்ட தலம்.

இக்கோயிலின் தீர்த்தமாக அக்னி தீர்த்தம் உள்ளது. இங்கு தல விருட்சம் புரசு மரம்.

திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஜப்பான் பார்க்கலாமா ஜப்பான் -3- மீனாக்ஷி பாலகணேஷ்

 

 

 

மூன்றாவது தினம் மழை கொட்டி எங்கள் திட்டங்களைக் குளறுபடி செய்து விட்டது. அப்படியும் மாலையில் ஜப்பானின் புகழ் வாய்ந்த சென்சோ-ஜி (Senso-Ji) என்ற பழமையான புத்தர் கோவிலைக் காணச் சென்றோம். அவலோகிதேஸ்வரா என்னும் புத்தருக்கு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. டோக்கியோவிலேயே மிகவும் பழமையான புத்தர் கோவில் இதுவாம்.

கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு குறுகிய தெருவின் இருபுறமும் கடைகள், நானாவிதமான பொருட்களையும் விற்பனை செய்கின்றன. பரிசுப் பொருட்கள், பாரம்பரிய ஜப்பானிய உணவு வகைகள், ஜப்பானியர்களின் புகழ் வாய்ந்த சிவப்பு பீன்ஸ் கேக்குகள், விரித்து மூடும் ஜப்பான் விசிறிகள், ஆடைகள், அணிமணிகள், டி- ஷர்ட்டுகள், இன்ன பிற!! பாரம்பரிய பீன்ஸ் கேக்குகளைத் தயாரிப்பதையும் பக்கத்தில் நின்றே பார்க்கலாம். அவர்கள் கொடுக்கும் சாம்பிளை ருசித்துப் பார்த்து விட்டு தேவைப்பட்ட அளவு வாங்கிக் கொள்ளலாம்! என்ன வாங்குவதென்று தான் திண்டாட்டம். எங்கள் பெட்டிகள் சிறியவை. எத்தனை சாமான்களைத் திருப்பி எடுத்துச் செல்வது என மலைத்தோம்!

கோவிலுக்குள் புகும் முன்பு, ஒரு பெரிய கணப்பு – அடுப்பு போன்ற ஒன்றில், வாசனைப் பொருட்களை வாங்கி எரிய விடுகிறார்கள் – குங்கிலியம், சாம்பிராணி போல இருந்தது. இன்னும் உள்ளே சென்றால், ஒரு செயற்கை நீரூற்று – பல குழாய்களுடன். நாம் கோவிலுக்குள் செல்லும்போது கால்களை நீரில் சுத்தம் செய்து கொள்வதைப் போல் இங்கு, இந்த நீரில் கைகளைக் கழுவிச் சுத்தம் செய்து கொள்கின்றனர். ஆனால், கோவிலுள் செல்லும்போது காலணிகளைக் கழற்றுவதேயில்லை. இதன் கருத்து நமக்கும் புரியவில்லை. ஆயினும், நாங்களும் கைகளைக் கழுவிக் கொண்டோம்.
உள்ளே சென்று புத்தரைக் கண்டு வழிபடுகிறோம். காலணிகளுடன் உள்ளே செல்லக் கூசத்தான் செய்கின்றது. எல்லாரும் சில நாணயங்களை கருவறையின் உட்புறமாக வீசுகின்றனர் – ஆஹா! இதுவும் நம்மூரில் செய்வது போலவே இருக்கிறதே என வியக்கிறோம்! நிறைய வெளிநாட்டுப் பயணிகள் வந்து காணும் இக்கோவிலில் ஓரிடத்திலும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விளக்கங்கள் காணவில்லை என்பதுதான் வருத்தம் தருகிறது.
வெளியே வரும் வழியில், நூறு யென் (ஜப்பானியப் பணம்) கொடுத்தால் நமக்குத் தேவையான தாயத்து போன்றவைகளைக் கோவில் கடைகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு, உடல் நலத்திற்கு, பத்திரமாகக் கார் ஓட்டுவதற்கு, குழந்தைப் பேற்றுக்கு, என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். மிகுந்த துழாவலின் பின்பு, நாமும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

அடுத்தநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம். எங்கு தெரியுமா?

நான் நீண்ட நாட்கள் முன்பே ஹச்சிகோ (Hachiko) என்ற எஜமான விசுவாசம் மிகுந்த ஒரு ஜப்பானிய நாயின் நிஜக்கதையைக் கேள்விப் பட்டிருந்தேன். அதற்கு டோக்கியோவில் ஒரு சிலை இருப்பதாகவும் அறிந்திருந்தேன். அதைக் காணும் ஆவலில் தான் கிளம்பினோம். இந்த நாயின் கதை மனதைத் தொடும் ஒன்று.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ பல்கலைக் கழகத்தில் இருந்த ஒரு பேராசிரியரிடத்தில் ஒரு நாய் இருந்தது. அது தான் ஹச்சிகோ. மிகவும் எஜமான விசுவாசம் கொண்ட அது தினமும் பேராசிரியர் வேலையிலிருந்து திரும்பும் போது காத்திருந்து அவரை ஷிபுயா (Shibuya) ரயில் நிலையத்தில் எதிர் கொள்ளுமாம். நீண்ட நாட்களாக இது நடந்து வந்தது. ஒரு நாள் பேராசிரியர் திரும்பவில்லை. ஏனெனில் அவர் மூளையில் உண்டான ரத்தப் பெருக்கினால் பல்கலைக் கழகத்திலேயே இறந்து விட்டார். ஆனால் ஹச்சிகோ அவருக்காகக் காத்திருந்தது. அதன்பின்னும் அடுத்த ஒன்பது வருடங்கள், ஒன்பது மாதங்கள், பதினைந்து நாட்கள் ஆகிய ஒவ்வொரு நாளும் ஹச்சிகோ அவருக்காகவே, மாலையில் அவருடைய ரயில் வரும் நேரத்தில் ரயில் நிலையத்தில் காத்திருக்குமாம்! என்னவொரு எஜமான விசுவாசம். உள்ளத்தைத் தொடும் ஆச்சரியமான உண்மைக்கதை.

மற்ற பயணிகள் இந்த நாயை நாள்தோறும் பார்ப்பார்கள்; அதன் முழுக்கதையையும் அறிந்தவர்கள், அதன் மேல் இரக்கமும் அன்பும் கொண்டு அதற்கு உணவு முதலியவற்றை நாள் தோறும் கொண்டுவர ஆரம்பித்தனர். ஹச்சிகோவைப் பற்றிப் பத்திரிகைகளில் பல கட்டுரைகள் வெளிவந்தன. விசுவாசத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டு

அது ஜப்பானில் தேசிய அளவில் புகழ் பெற்றது.

ஹச்சிகோ 1935-ல் நீண்ட நாள் கான்சரினால் இறந்தது. இதன் சமாதி பேராசிரியரின் சமாதியினருகே உள்ளதாம். இதன் உடலும் பாடம் செய்யப்பட்டு டோக்கியோ மியூசியத்தில் உள்ளதாம். 1934-ல் ஹச்சிகோவிற்கு ஒரு வெண்கலச் சிலை வடிக்கப்பட்டு அது ஷிபுயா ரயில் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு ஹச்சிகோவே உயிருடன் இருந்ததாம். இந்தச் சிலை இருக்கும் ஷிபுயா ரயில் நிலைய வாயில் ‘ஹச்சிகோ வாயில்’ (Hachiko entrance) எனவே அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8-ம் தேதி நாய்ப்பிரியர்கள் ஒன்று கூடி, ஹச்சிகோவைப் பெருமைப்படுத்தும் வண்ணம் இங்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவார்களாம். அதனால் தானோ என்னவோ, நாங்கள் சென்றிருந்த ஜூன் மாதத்தில் அதன் கழுத்தில் ஒரு பிளாஸ்டிக் மலர்மாலை கூட காணப்பட்டது.

ஒரு நாய் நம்மிடம் வைக்கும் பிரியமும் விசுவாசமும் எத்தகையது என்று நாய் வளர்த்து அதனிடம் அன்பு செலுத்தியவர்களுக்கே தெரியும். எங்களுடைய அபிமான நாயைப் பற்றி நினைந்து நாங்கள் உள்ளம் நெகிழ்ந்தோம்.
ஆகக் கூடி, அந்த இடம் ஷிபுயா என்ற உலகப் புகழ் பெற்ற சந்திப்பின் நடுவில் அமைந்திருப்பதை தற்செயலாகத்தான் அறிந்தோம். அவரவர்களுக்கு அவரவர் எண்ணங்கள் தாம் முக்கியம் என இதிலிருந்து புலப்படவில்லையா?
ஷிபுயா சந்திப்பைக் (Shibuya crossing) காணவும், அந்தக் கூட்டத்தினோடு கலந்து நாமும் நிற்கவும், சந்திப்பைக் கடக்கவும் கிளம்பி விட்டோம்.

அதென்ன ஷிபுயா சந்திப்பு?

இது உலகப் புகழ் வாய்ந்தது. நான்கு குறுக்குத் தெருக்கள் கூடுமிடம். நெரிசல் நிறைந்த போக்குவரத்து. அத்தனை வாகனங்களும் சிறிது நேரத்திற்கொருமுறை நின்று, மக்கள் அந்தச் சாலைகளைக் குறுக்காகக் கடக்கும் வரை காத்து நிற்கின்றன.

இங்கு ஒரே தடவையில் நாலாயிரம் பேர் மொத்தமாகச் சாலைகளைக் கடக்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றனவாம்!!!

கிட்டத்தட்ட தொண்ணூறு நொடிகள். மக்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். புற்றீசல் மாதிரி, நிதானமாகப் பதற்றமேயின்றி, உலகின் புகழ் வாய்ந்த சந்திப்பைக் கடக்கின்றோம் என்ற நினைப்பில் அந்த நிமிடத்தை அணுவணுவாக அனுபவித்து ரசித்த வண்ணம் கடக்கின்றனர்! நிறைய பேர் நீண்ட செஃல்பி ஸ்டிக்குகளில் பொருத்திய தங்கள் கைபேசிகளில் அந்தத் தருணத்தைப் பதிவு செய்தபடி கடப்பது பார்க்கும் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றது. நாமும் அந்தத் தருணத்தை ரசித்த வண்ணம் அவர்களுடன் கலந்து ஷிபுயா சந்திப்பினைக் கடக்கிறோம்.
சரித்திரப் புகழ் வாய்ந்த ஷிபுயா சந்திப்பில் நமது காலடிகளையும் பதிவு செய்தாகி விட்ட திருப்தியில் நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி நடையைக் கட்டுகிறோம்.

இந்த இடம், Technology- எனப்படும் தொழிற்கலை விஞ்ஞானத்தின் அடுத்த கட்டமாகச் செயல்படும் ஒரு உணவகம்! உள்ளே செல்லலாமா?

வரவேற்று நம் கையில் டோக்கன் போன்ற ஒரு அட்டையை அளிக்கிறார்கள். உள்ளே வரிசையாக உயரமான மேசைகள், நாற்காலிகள்; ஆனால் ‘வெயிட்டர்கள்’ என்பவர்களோ, உணவு பரிமாறுபவர்களோ கிடையாது. ஒவ்வொரு நாற்காலியின் முன்பும், சுவரில் பொருத்தப்பட்ட கணினிகள். அவற்றைத் தட்டினால், கண்முன் விரியும் ‘மெனு’; இந்தக் கணினியிலேயே ஆர்டர் செய்ய வேண்டும். சமையலறைக்குச் செய்தி அதன்வழி போய் விடும்.

ஆச்சரியம் அடுத்துக் காத்திருக்கிறது! 5 முதல் 7 நிமிடங்களுக்குள் நமது உணவு, சுடச்சுட, நாம் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நம்மை நோக்கி அனுப்பப்பட்டு விடும். ஆம். ஒரு தானியங்கி மேசை (conveyer belt) மூலம் அழகாகத் தட்டில் வைக்கப்பட்டு உணவு வருகை தரும்!! (உடன் உள்ள வீடியோவைப் பார்க்கவும்). நம் முன் தட்டு அழகாக வந்து நிற்கும்! இவ்வாறு நமக்கு வேண்டும் என்னும் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடலாம். உணவுகளுக்குத் தேவையான பொருட்களான, உப்பு, மிளகு, நான்கைந்து வித ஸாஸ்கள், குடிநீர் முதலியன நமது டேபிளிலேயே வைக்கப்பட்டிருக்கும். வேண்டியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பின்பு வெளியே செல்லும்போது நமது டோக்கனைக் கொடுத்தால் அதில் நாம் சாப்பிட்டவற்றுக்குண்டான விலை காஷியரின் கணிணியில் தெரியும். காசைக் கொடுத்து விட்டு வர வேண்டும். அவ்வளவு தான்.

இது எப்படி இருக்கு? இந்த எதிர்கால உணவகத்தில் சாப்பிடுவதே ஒரு தனி அனுபவம்!

இன்னும் இதுபோல கண்டும் கேட்டும் களிக்க எத்தனையோ அனுபவங்கள் இருக்கும். அடுத்தமுறை வந்தால் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டோம்.

சொல்ல மறந்து போகக் கூடாத விஷயம்- ஜப்பானியர்களின் பணிவும் அன்பும். சாலையை அடைத்துக் கொண்டு நான்கு பேர் நடந்தால், ‘எக்ஸ்கியூஸ் மி’ எனக் கேட்டுக் கொண்டு கூட செல்ல மாட்டார்கள். நீங்களாக அறிந்து வழி விட்டால் சரி. பணத்தைக் கையால் கொடுப்பதில்லை, ஒரு சின்ன ‘டிரே’யில் வைத்து நம்மிடம் நீட்டுவார்கள். நாமும் ஏதேனும் வாங்கினால், காஷியரின் முன்பிருக்கும் டிரேயில் பணத்தையோ, கிரெடிட் கார்டையோ வைத்து அளிக்க வேண்டும்.
இந்த ஜப்பான் விஸிட் அமர்க்களமாகத்தான் இருந்தது! வாய்ப்புக் கிட்டினால் இன்னுமொரு முறை செல்ல வேண்டும்.

(நிறைந்தது)

 

 

 

_

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்  – ஜி மாரியப்பன் 

பொண்ணுக்கு மாப்பிள்ளை நிச்சயம் பண்றதுக்குள்ள  பெரிய பாடாய்ப் போயிருச்சு. மாப்பிள்ளை தேடிச்  சம்மந்தம் பேசி முடிக்கிறது

சாதாரண வேலை இல்லை. 
பல இடங்களில் இருந்தும் ஜாதகம் வந்தது. இன்ஜினியரு, விவசாய ஆபீஸர், பாரஸ்ட் ஆபீஸர்  அப்படின்னு பல பேரோட ஜாதகம் வந்தது. ஆனால் எனக்குத்தான்  மனசுக்குப் பிடிக்கல. இவர்கள், எல்லாம் கொஞ்ச காலத்துக்கு பிறகு இடம் மாறுதலாகி ஊர் ஊரா போய்கிட்டே இருப்பாங்க. குடும்பமும் கூடவே போய்கிட்டே இருக்கணும்.  நாளைக்குப் புள்ள குட்டி ஆகிப் போச்சுன்னா அதுக படிக்கிற ஒரு பள்ளிக்கூடத்தில் நிலைச்சி  நின்னு படிக்க முடியாது. 
போகிற ஊர்ல, கிடைக்கிற பள்ளிக் கூடத்தில் தான் சேர்க்கணும். தண்ணீர் மாறும், பேச்சு, பழக்க வழக்கம் மாறும். நான்  துவண்டு போயிட்டா  என்னால புள்ளையப் பாக்கறது கூடக் கஷ்டம். 
இதையெல்லாம் யோசித்துப் பார்த்தப்பந்தான் பக்கத்து ஊர்ல உள்ள பெரிய பள்ளிக்கூடத்துல பெரிய வகுப்பு வாத்தியார்  ஜாதகம் வந்தது. 
அந்த ஜாதகத்தைப் பார்த்தேன். ஜாதகம் பொருந்தி இருந்தது. நல்ல குடும்பமா தெரிஞ்சது. புண்ணியமான வேலை. ஒரே ஊர்ல குடும்பம் நிக்கும். 
பேசும்போது அது வேணும் இது வேணும்னு கேட்கல.  ஒரே பொண்ணு, பெரியவங்க காலத்துக்குப் பிறகு  யாருக்கு அப்படின்னு  நினைச்சி  இருக்கலாம்.  மாப்பிள்ளை பையனத் பத்தி விசாரிச்சேன். எந்தப் பழக்கவழக்கமும் கிடையாதுன்னு தெரிஞ்சது . 
இந்த காலத்துல அதுதான் ஐயா பெரிய விஷயம்!  வீட்டுக்கு வந்து சம்சாரத்தை கிட்ட சொன்னேன். அவளுக்கும் சந்தோசம்தான். 
“ஆனால் உங்க அக்கா மகனை நினைத்தால் ஈரக்குலை நடுங்குது. 
அவன்  நம்ம வீட்டுக்கு முன்னாடி குடிச்சிட்டு வந்து ஆடுன ஆட்டம் தாங்கல. 
மாப்பிள்ளை பாக்குறீங்களா? மாப்பிள்ளை எவன் வாரான்னு பாத்துடறேன். அசல் ஊர்ல மாப்பிள்ளை பாக்குறீங்க! பாக்கிறேன் எவன்  வந்தாலும் இவள் எனக்குத்தான்னு” கூப்பாடு போட்டுட்டு போயிட்டான். 
 நாங்கள் வீட்டைக் பூட்டிட்டு உள்ளே இருந்தோம்.
ஊர்ல என் கூடப் பிறந்த அக்காவும் இருக்கா. மச்சினர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காலமாயிட்டார். 
எல்லாம் இந்தப்  பையனைப் பத்தின கவலைலதான் அவரு காலமாயிட்டாரு. 
எங்க அக்காவுக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும்.  தறி கெட்ட கழுதையா இருந்தாலும் அவளுக்குப்  புள்ள தானே! 
ஒருநாளு என் வீட்டுக்கு வந்தா. பொண்டாட்டியும் மகளும் தோட்டத்துக்குப் போன நேரம்.  “தம்பி, உன் பொண்ணுக்கு வெளியில மாப்பிள்ளை பார்க்கிறதா கேள்விப்பட்டேன்.   என் மகனோ  கட்டுனா இவளைத்தான்  கட்டுவேன்னு  ஒத்த கால்ல நிக்கிறான்.  நீ போய் மாமா கிட்ட பேசணும்னு அலப்பறை பண்றான். 
நீயும் யோசிச்சு பாரு ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயிரும். அவனுக்கும் காடு கரை இருக்கு. நான் இருக்கிற வரைக்கும் பார்த்து விடுவேன்.  மருமகளும் வந்த ராசியில அவன் திரிந்திட மாட்டானா அப்படின்னு நினைச்சு பார்க்கேன் .  கெட்ட நேரம், இப்படி இருக்கான். 
நல்ல நேரம் கூடி வந்தா நல்லா ஆயிடுவான்! பொண்ணுகிட்டயும்  பொண்டாட்டி கிட்டயும் கலந்துக்க.  நானும் இப்படி இருக்கானே என்னன்னு உன்கிட்ட பொண்ணு கேட்கிறது என்று மலைச்சிக்கிட்டு இருந்தேன். 
சரி ஒரு நேரம் வந்தா நல்லாயிருவான்னுதான் சொல்றேன். 
எனக்கு நல்ல பதிலைச் சொல்லுய்யா  ” என்றாள். 
நீ நினைக்கிற எதுவும் உனக்குச் சரிதான்.  ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் நினைக்க முடியாது. ஏன்னா நான் பொண்ணைப் பெத்தவன். உன் புள்ள சரியில்லைன்னு நீயே ஒத்துக்கிடுதே! அவன் திருந்து வான்னு சொல்ற. 
அதுக்கு என் புள்ளையை வைச்சிச் சூதாட நான் தயார் இல்லை. 
 அவன் திருந்தலைன்னா எங்க குடும்பம் சிதறி போகும். என்னை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தாதே.  வேறு ஏதுன்னாலும் சொல்லு
செய்றேன். “என்றேன் . 
இந்த விஷயம் அவனுக்கு தெரிஞ்ச பிறகு தான் வீட்டுக்கு முன்னாடி வந்து கத்தி ஆட்டம் போட்டு இருக்கான். 
கல்யாணம் முடிகிற வரைக்கும் அவனை கண்டுக்காம இருக்கிறதுதான் நல்லது. பேசினால் பொல்லாப்பு. 
கல்யாண வேலைகள் நடந்து கண்டிருந்தது.  கல்யாணத்தையும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நடத்துறாங்க,நான் செலவில் பாதி கொடுக்கிறது என்று பேச்சு. 
எனக்குத் தோரணைக்கு ஆள் பலம் போதாது.  டவுனுக்கு  ஒவ்வொன்னுக்கும் அலைய முடியாது. 
அதுபோக எனக்கு உள்ளுக்குள்ள ஒரு ஒதறல்  இருந்துகிட்டே இருக்கு. எங்கே  கல்யாணத்துல கலாட்டா பண்ணிக் காரியத்தைக்  கெடுத்து விடுவானோன்னு பயந்தான்.  முரட்டு பையன், குடிகாரன்வேற. 
பயப்படாம என்ன செய்ய?
காலையில ஆறுல இருந்து ஏழரைக்குள்ள  முகூர்த்தம். எல்லாரும் மண்டபத்தில் தான் இருந்தோம்.  எங்க மற்ற சொந்தக்காரங்க எல்லாம் உறங்கப் போயிட்டாங்க. 
 எனக்கு நெருக்கமான ஆளுங்களைக்  கூப்பிட்டு, காலை முகூர்த்தத்தில் அவன்  கலாட்டாப்  பண்ணி விடக்கூடாதுன்னு “வாசல்ல நின்னுக் கோங்க கண்ணு  ரோட்டு மேலேயே இருக்கணும், நகரக் கூடாது. 
அவன் வந்தால் உள்ளே விட வேண்டாம். சடார்னு துண்டைப் போட்டு மூஞ்சியைக்  கட்டித் தூரத்தில் தூக்கிட்டு போயிருங்க. 
முகூர்த்தம் முடிஞ்சாப் பிறகு அவனை அவுத்து விட்டாப்  போதும்” அப்படின்னு சொல்லியிருந்தேன். 
மணி நாலு.   குளிச்சிட்டு ஆட்களை தயார் பண்ணி அஞ்சு மணிக்கு எல்லாம் வாசலில் சேர் போட்டு உட்கார வைத்து விட்டேன். 
எங்க கிராமத்து கூட்டம், சொந்த பந்தங்கள் கூட்டம், மற்றவர்கள் எல்லாம் கூட வேலை செய்ற வாத்தியார்கள் குடும்பம்னு ஏகப்பட்ட ஜனங்கள். 
எல்லாரையும் வாங்கன்னு சொல்லி உட்கார வைத்துவிட்டு அடிக்கடி வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தேன். 
நம்ம ஆட்கள் அசந்த நேரத்துல அவன் உள்ளே வந்துடக்கூடாது இல்லே. 
 பொண்ணு  மாப்பிள்ளை உட்கார்ந்து சடங்குகள் நடந்தது. என்னையும் உட்கார வைத்து  மந்திரங்களை சொன்னார்கள். 
எந்திரிச்சு ஒரு நடை வாசலுக்கு போயிட்டு வந்தேன். மணவரையில்  நிக்கச்  சொல்லிட்டாங்க. 
வாசல்ல ஒரு கண்ணு, பொண்ணு மாப்பிள்ளை ஒரு கண்ணுமா இருந்தேன்.
 என்னைத் தாலி எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள். 
“கெட்டிமேளம், கெட்டிமேளம்” 
என் குலதெய்வத்தை வேண்டிக்கிட்டேன். 
மாப்பிள்ளையின் கையில் தாலியைக் கொடுத்தேன். 
கெட்டிமேளம்  முழங்க தாலியைக் கட்டினார். 
எல்லோரும் சாப்பிடப் போய்கிட்டு இருந்தாங்க. 
எங்க அடுத்த வீட்டு பையன் ஓடியாந்தான். 
“சின்னையா, சின்னையா நம்ம ராமசாமி ஊரிலிருந்து பைக்ல வந்து இருக்கான்.  மண்டபத்துக்குத் திரும்புற முக்குல  லாரியில் மோதி ரோட்டில் கிடக்கிறான்னு  வெளியே வந்தப்ப வாசல்ல பேசிக்கிட்டாங்க.  ஒரே கூட்டம். 
இருட்டுல அடிச்சிட்டு  தப்பிச்சு நிக்காமப் போயிட்டானாம்.  போலீசு கூட்டமாயிருக்கு. நேராகப் போய் பார்த்துட்டு வந்தேன் . 
ஆம்புலன்ஸ்  வண்டியிலே ஏத்திக்கிட்டிருந்தாங்க
 உடம்பெல்லாம் ஆடி போச்சு.  என்ன செய்யறது ? 
மண்டபத்தில்  அக்காவைத் தேடினேன். 
கல்யாணத்துக்கு வரவில்லை என்று தெரிய வந்தது  
ஆட்களை கூப்பிட்டு பந்தியை  வேகப்படுத்த சொன்னேன்.
சம்சாரத்திடம்  மண்டபத்தில் முறைகளை செய்யச் சொல்லிட்டு எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போக ஏற்பாடு செய்தேன்.  
ஊருக்கு  அக்காவிடமும்  மற்றவர்களிடமும் தகவல் சொல்லப் பக்கத்து வீட்டுப் பையனை  அனுப்பி வைத்தேன். 
மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களுக்கு  ஏற்பாடு செய்ய
ஊருக்கு  சொந்தக்காரங்களை அனுப்பி விட்டுத்   துணைக்கு ஆள்களைக் கூட்டிகிட்டு ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தேன், அவன்  உடலை வாங்குவதற்கு.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

                                                                            பௌத்தம், சமணம், ஆசீவகம், வைதீகம்-5
Dailyhunt
 

( சைவ மதத்தைச் சார்ந்த நான் சமணத்தைப் பற்றி எழுதுவதால் எனையறியாமல் துவேஷத்தைக் காட்டியிருப்பேனோ என்ற பயத்துடன் தொடர்கிறேன்)

சமணம் என்பது ஒரு மதம் என்பதை விட ஒரு வாழ்க்கை முறை என்பதே பொருத்தமானதாகும். மிகவும் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்திய சமணம்  மிகவும் தொன்மையானது. தோன்றிய காலத்தை வரையறுத்துக் கூற முடியாதது.

“வேதங்கள் எழுதப் படுவதற்கு முன்பே ஜைன தர்மம் இருந்ததென்பதில் ஐயமில்லை” எனக் கூறுபவர் தத்துவ ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் S. ராதாகிருஷ்ணன் என்பதால் கண்டிப்பாக அதில் ஓர் அர்த்தமிருக்கும்.

மற்றொரு நூலோ முதலாம் தீர்த்தங்கரரான ரிஷப தேவர் நம் ஆயர் பாடி கண்ணனின் பெரியப்பா மகன் என்ற வழியில் பங்காளி என்ற கூறுகிறது.

பௌத்தத்தை பரப்பியது அசோக சக்ரவர்த்தி என்றால் சமணத்தை பரப்பியது அசோகரின் பாட்டனார் சந்திர குப்த மௌரியர் ஆவார்.

சமணத்தின் 24 வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் கௌதம புத்தரை விட சற்று வயதில் மூத்தவர்.

ஆக மொத்தம் சமணம் நிச்சயமாக பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக தோன்றியது. வைதீக மதத்திற்கும் முன்போ அல்லது சம காலத்திலோ தோன்றியிருக்க வேண்டுமென்பது நூலாசிரியர்களின் கருத்து.

சைனம் - தமிழ் விக்சனரிகி. மு 4ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் பதவியை உதறி சமண குருவான பத்ரபாகு முனிவருடன் கர்நாடகத்தின் சரவணபெலகொலா வந்திறங்கினார். அங்கிருந்து சமணத்தை பரப்ப சமண துறவிகள் கொங்கு நாடு வழியாக தமிழகத்தில் நுழைந்தனர். ஒரு பிரிவு தொண்டை மண்டலத்தையும் ( திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், நெல்லூர்)  மற்றொரு பிரிவு பாண்டிய நாட்டையும் அடைந்தது.

அன்று துவங்கிய சமயப் பணி இன்றும் இவ்விறு பகுதிகளிலும் சுமார் 25 ஊர்களுக்கு மேல் சமண மதத்தினருடனும் சமண கோவில்களுடனும் தொடர்ந்து கொண்டுள்ளது.

சமணமும் பௌத்தமும் ஐம்பெரும் காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு வழியாக தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு என்றும் மறக்க இயலாது.

சமண மத முதல் தீர்த்தங்கரர் ரிஷப நாதர் @ ரிஷப தேவர் @ ஆதி நாதர் தோன்றியது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் எனவும் மஹாபாரதம் நிகழ்ந்த காலம் எனவும் கூறுகின்றனர். திருவள்ளுவர் முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என வழி படுவதால் வள்ளுவர் ஆதி நாதரை வழிபடுபவராக கூறி சமணர் சொந்தம் கொண்டாடுகின்றனர். “மழித்தலும் நீட்டலும் வேண்டா” எனவும் பாடியுள்ளார் வள்ளுவர்.

ஏனைய தீர்த்தங்கரர்கள் பெயரால் அறியப் படினும் செயலால் அறியப் படுபவர்கள் கி. மு 877-777 ம் ஆண்டுகளில் வாழ்ந்த 23 வது தீர்த்தங்கரர் பார்சுவ நாதரும் அவருக்குப் பின் கி. மு 599 – 527 ஆண்டுகளில் வாழ்ந்த 24 வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மட்டுமே.

உலகில் பலி பாவங்கள் மிகுந்ததால் 2500 ஆண்டுகளாக வேறு தீர்த்தங்கரர்கள் அவதரிக்க வில்லை என்கின்றனர் சமணர். இருப்பினும் எவ்வளவோ மதப் போராட்டங்களுக்கு இடையே பாசுவ நாதரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகளை சமணர்கள் இன்றும் சிரத்தையுடன் கடைப் பிடித்து வருகிறார்கள் என்பது உண்மையே.

பாசுவ நாதர் துவக்கி மகா வீரர் கடுமையாக்கிய கொள்கைகள் எளிதானவையே. ஆனால் அதைக் கடைப்பிடிப்பதுதான் அன்றும் இன்றும் சற்று சிரமமானது. சமண துறவிகளுக்கென கூறப்பட்ட 28 அடிப்படை விதிகளில் சிலவற்றை காண்போம்.

1. கொல்லாமை. புலால் உண்ணாமை. கள்ளுண்ணாமை
2. வாய்மை. பொய்யே பேசாதிருத்தல்
3. பிறர் பொருளுக்கு ஆசைப் படாதிருத்தல்.
4. மிகுதியான பொருளுக்கு ஆசைப் படாதிருத்தல்.
5. பிரமச்சரியம்

எல்லோரும் கூறுவதுதானே? பின்னர் சமணம் எப்படி வைதீக மதத்தையும் புத்த மதத்தையும் பின் தள்ளி முன்னேற முடிந்தது எனக் கேட்டால் சமணர்களின் முதல் கொள்கை மக்களை கவர்ந்ததே அதற்கு காரணம்.

அன்றைய நாளில் நாம் முன்பே கூறிய படி வைதீக மதத்தினர் கோழி, ஆடு, மாடு, குதிரை என தூக்கிப் போட முடிந்த உயிர்களையெலாம் வேள்வியில் தூக்கிப் போட்டு பலி கொடுத்தனர். இறைவனுக்கே பலி கொடுக்கும் பொழுது தாம் அவற்றின் புலால் உண்ணாதிருந்தால் பாவம் எனக் கூறி வேள்வி செய்வோரும் செயப் படுத்துவோரும் இணைந்து புலால் உண்டனர். இறைவனுக்கு பிடித்த பாணம் என வகைப் படுத்தி இறைவன் முன் கள்ளைக் காட்டி தாம் பருகிக் களித்தனர்.

அழகை முருகனாய், மலையை சிவனாய், காடுகளை திருமாலாய் வழி பட்டு வந்தனர் தமிழர். அவர்களை இறைவன் பெயரைச்சொல்லி பலியிட்டு, புலால் உண்டு கள்குடித்து ஆடும் பழக்கம் ஒவ்வாததாய், மனதிற்கு பிடிக்காமல் வாடி நிற்க வைத்தது. அச்சமயம் வடக்கிருத்து வந்த சமணர் பௌத்தர்கள் அன்பை போதித்தனர். அவர்களின் கொல்லாமை, புலால்-கள் உண்ணாமை போன்ற கொள்கைகள் வீடு பேற்றை கொடுக்கும் என நம்ப வைத்தது.

 பௌத்த பிக்குகள் கொல்லாமை, கள்ளுண்ணாமை மதத்தின் முக்கிய கொள்கைகளாக வலியுருத்தினாலும் புலால் உண்ணாமையை வலியுருத்த வில்லை. பிறர் கொன்று தரும் புலாலை அல்லது இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று என்பது அவர்கள் கொள்கை.

ஆணால் சமணமோ ஓர் உயிரை கொன்றால் பாவம், ஒரு உயிரை கொன்று உண்டாலோ கொடிய பாவம். கள் குடித்தல் அதை விட பாவம் என்பதில் உறுதியாய் இருந்தது. இயற்கையிலேயே சாத்வீக குணம் கொண்ட தமிழர் சமணரின் இக் கொள்கை பிடித்ததில் ஆச்சரியமில்லை.

இருளில் உணவு அருந்தினால் அறியாமல் சிறு உயிர்களுக்கு தீங்கு நேரலாம் என இரவில் உண்பதை தவிர்த்தனர் சமணர்.

எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு தீங்கு விளையலாம் என எண்ணி இருளில் நடப்பதை தவிர்த்தனர். ஏன்? நிலத்தை உழும் பொழுது புழு, பூச்சிகள் இறக்க நேரிடும் என்பதால் உழவுத் தொழிலையே வெறுத்தனர்.

சமண துறவிகள் ஊரை விட்டு ஒதுங்கி காடுகளில் மலைக் குகைகளில் வாழ்ந்தனர். பாரையில் செதுக்கிய படுக்கைகள் . சமணர்களும் பௌத்தர்கள் போல் பள்ளியில் கூடங்கள் அமைத்து போதித்தனர். அவர்கள் அமைத்த குகை கோவில்களும், பாரையில் செதுக்கிய படுக்கைகளும் தொண்டை மண்டலம், பாண்டிய நாட்டில் மதுரையை சுற்றியும் சமணர்கள் சரித்திரம் பேசிக் கொண்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் திகம்பர ஜைன மடமும், திண்டிவனம் அருகே மேல் சீதாமூர் மடமும் சமணர் வாழ்ந்த வாழ்க்கைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.

சமண துறவிகள் வாழ்ந்த வாழ்க்கையும் அன்று அவர்களுக்கு விதிக்கப் பட்ட கட்டுப் பாடுகளையும் இன்று நினைத்தால் சற்று உடம்பு சிலிர்க்கிறது. அக்கட்டுப்பாடுகளில் பெரும் பாலானவை இன்றும் சமண துறவிகளால் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

அப்படி என்ன உடம்பை சிலிர்க்க வைக்கும் சமண துறவிகளுக்கான கட்டுப்பாடுகள் என பார்ப்போம்.

1. தலை பறித்தல். தலை பறித்தல் என்றால் ஏதோ சலூனுக்கு சென்று முடி கழித்தல் அல்ல. தலை முடி, மீசை, தாடி அனைத்தையும் கைகளால் பறித்தெடுக்க வேண்டும். நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.

2. திகம்பரர் – உடை நீத்தல்.  துறவிகளில் சிறு துண்டுகளை உடுத்தியவர்கள் சுவேதாரம்பர் எனப்படுவர்.                        திகம்பரர்கள் என்றழைக்கப் படும் துறவிகள்தான் சற்று வில்லங்கமானவர்கள். உடம்பில் ஒரு பொட்டு துணியில்லாமல் கையில் மயில் தோகையினாலான விசிறியுடன் ( பீலி) நடமாடினார்கள். பாவம் மக்கள்.

3. நீராடாமை: திகம்பரரின் உடை நீத்தலையே பரவாயில்லை என கூறச்செய்யும் பழக்கம் நீராடாமை. மாதக் கணக்கில் குளிக்காமலிருத்தல் துறவிகளுக்கு பெருமை சேர்க்கும். குளித்து சுத்தமாயிருந்தால் மனம் அலை பாயுமாம். திருவண்ணாமலை, மதுரை போன்ற ஊர்களில் கற் குகைகளில் கோடை காலத்தில் மாதக் கணக்கில் குளிக்காமல் இருப்பர் என நினைத்தால் உடம்பு நடுங்காமல் வேறென்ன செய்யும்.

4. தரையில் படுத்தல்: துறவிகள் வெறுந் தரையில்தான் படுக்க வேண்டுமென்பது, ஒரு முக்கிய கொள்கை. அவர்கள் படுத்துறங்கிய கற்களால் செதுக்கப் பட்ட படுக்கைகளை குகைகளில் இன்றும் காண்கிறோம்.

5. பல்தோயாமை: பற்களை துலக்கக் கூடாது என்பது முக்கிய கொள்கைகளில் ஒன்று. பாசி படிந்த பற்களின் தீய வாசனையை மறைக்க அடிக்கடி சுக்கை கடித்துக் கொள்வார்களாம். இவற்றால் மகளிர் அருகே அணுகாமல் பிரமச்சரியம் காக்கப் படுமென நம்பினர் போலும்.

6. நின்று உண்ணல்: சமண துறவிகள் உணவை கைகளில் ஏந்தி  நின்று கொண்டு மட்டுமே உண்ண வேண்டும். வேறு எந்த பாத்திரத்திலும் இட்டு உண்ணக் கூடாது என்பது ஒரு விதி. பௌத்த பிக்குகள் திருவோட்டில் இரந்துண்ண வேண்டும் என்ற விதியிருந்தது.

7. ஒரு போது உண்ணல்: சமண துறவிகள் ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். அதுவும் மாலை இருள் சூழ்வதற்குள் கிடைக்கும் உணவை கைகளில் வாங்கி உண்ண வேண்டும். பௌத்தர்களோ நன்பகலுக்கு முன்னர் சாப்பிட வேண்டுமென்பது விதி.                   ஆண் மக்களே வீடு பேற்றுக்குரியவர்: பெண்கள் துறவிகளாவதற்கு ஆரம்பத்தில் அனுமதியில்லை. பின்னர் அவர்களும் கடும் நிபந்தனைகளுடன் துறவிகளாக அனுமதிக்கப் பட்டனர். ஆனால் கொடுமை பெண் மகளிர்க்கு வீடு பேறு கிடையாது, கிடைக்காது என்பது சமணரின் நம்பிக்கை. பெண்களுக்கு வீடு பேறு வேண்டுமெனில் அடுத்த பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளில் ஆண் மகனாக பிறக்க வேண்டும்.      இவ்வளவு கட்டுப் பாடான கொள்கைகள் கொண்ட சமண மதம் நாடெங்கும் மக்களை கவர்ந்ததே ஒழிய பயந்து ஓட வைக்க வில்லை.

ஆழ்வார்களும், சமயக் குரவர் நால்வரும், குறிப்பாக ஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் அவதரித்திருக்கா விட்டால் இன்று  நாமும் சமணராகவே வலம் வந்து கொண்டிருப்போம்.

அந்த அளவிற்கு பல்லவ மன்னர்களையும் பாண்டிய மன்னர்களையும் அவர்கள் வழியாக பெரிய தனவந்தர்களையும் தம் மதத்திற்கு கவர்ந்தனர் சமணர்கள். சோழ மன்னர்களும் பௌத்தர்களுக்கு விகாரைகள் அமைத்துக் கொடுத்தது போல சமணர்களுக்கும் கோவில்கள் கட்டிக் கொடுத்தனர். குந்தவை நாச்சியார் கட்டிக்கொடுத்த சமண ஆலயம் திருவண்ணா மலையருகே இன்றும் இடிந்த நிலையில் காணப்படுகிறதாம். குடிமக்களுக்கு வேறு வழியில்லை. பெரும்பாலானோர் சமணரானர்.

சமணர்கள் அனைவரையும் மீண்டும்  சைவர்கள் ஆக்கிய பெருமை கி பி 6- 8 நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவ  பெரியோர்களைச் சேரும்.

பௌத்தர்களை நாட்டை விட்டு விரட்டும் பணியை சமணர்கள் எடுத்துக் கொண்டனர் .

பௌத்தர்கள் குகைகளில் வடித்த கற் படுக்கைகளில் படுத்துக்கொண்டே பௌத்தர்களின் பள்ளிகளையும் விகாரைகளையும் சமணர்கள் சுவீகரித்துக் கொண்டனர்.

சமணரை வேரறுக்கும் பணியை வைதீக மதத்தினர் ஏற்றுக் கொண்டனர்.

அதுவும்  சமணரின் முக்கிய கொள்கைகளை அபகரித்தே சமணத்தை வைதீக மதம் கபளீகரம் செய்தது. அந்த கொள்கைகள் எவை என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

தமிழ் நாட்டில் சமணத்தைப் பற்றி பேசும் பொழுது ஞான சம்பந்தரையோ, திருநாவுக்கரசரையோ நினைக்காமல் கடக்க முடியாது. சமணர் அனைவரையும் திருநீறு பூச வைத்து சைவராக்கியவர்கள் ஆயிற்றே.
அதைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

குரல்- S.L. நாணு

Business deal, two business partners handshaking concept illustration 3330584 Vector Art at Vecteezy

 

அலை பேசி தொடர்ந்து சிணுங்கியபோது இரவு மணி இரண்டு..

தூக்கம் கலைந்த சலிப்போடு பக்கத்து மேஜையில் அலைபேசியை எடுத்து..

“ஹழோ”

தூக்கக் கலக்கத்தில் குழறினேன்.

“டேய் மது பேசறேன்.. சக்ஸஸ்டா.. ஏப் வேலை செய்யுது”

“… …”

“டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”

“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல சொல்லக் கூடாதா? இப்படி பாதி ராத்திரில எழுப்பி தூக்கத்தைக் கெடுக்கணுமா?”

“என் சந்தோஷத்தை உடனே பகிர்ந்துக்க உன்னைத் தவிற வேற யாரு இருக்கா? உனக்குத் தான் தெரியுமே.. என் பொண்டாட்டிக்கு இதுலலாம் ஆர்வம் கிடையாது.. அவளைப் பொறுத்தவரை.. இதுக்கு நேரம் செலவு பண்றதை விட அவளைக் கூட்டிட்டு ஷாப்பிங் போகலாம்னு தான் சொல்லுவா.. அதோட இப்ப அவ வீட்டுல இல்லை.. அவம்மா வீட்டுக்குப் போயிருக்கா.. வர ரெண்டு நாளாகும்.. அதனால..”

”சரி.. சரி.. புலம்பாதே.. வாழ்த்துகள்.. நாளைக்கு வரேன்.. குட் நைட்”

“இல்லைடா.. குட் மார்னிங்”

லைன் கட்டானது.

கட்டிலிலிருந்து எழுந்து வாஷ் ரூமுக்குப் போனேன்..

திரும்பி வந்து படுத்தவனுக்கு கலைந்த தூக்கம் தொடர மறுத்தது..

மது..

பள்ளி நாட்களிலிருந்தே நாங்கள் இருவரும் நண்பர்கள்..

மது ஒரு சைல்ட் பிராடிஜி என்று தான் சொல்ல வேண்டும்.. சின்ன வயதிலேயே அவன் அதைக் கண்டு பிடிக்கறேன்.. இதைக் கண்டு பிடிக்கிறேன் என்று எதையாவது புதிது புதிதாக செய்துக் கொண்டே இருப்பான்.. அதில் பாதியும் எனக்குப் புரியாது.. காரணம் எனக்கும் விஞ்ஞானத்துக்கும் ஏழாம் பொருத்தம்.. அதனால் தான் நான் காமெர்ஸ் படித்து இன்று பேங்க் ஆபீசர்..

ஆனால் மது பி.ஈ. முடித்து.. எம்.டெக். முடித்து.. பிரபல ஐ.டி. கம்பெனியில் பணியில் இருக்கிறான்.. இருந்தாலும் அவனுடைய கண்டுபிடிப்பு ஆர்வம் தொடர்ந்தது.. ஆனால் பள்ளி நாட்களிலிருந்தே ஏனோ அவனுடைய கண்டு பிடிப்புகளை ஊக்குவிக்க.. வெளிச்சத்துக்குக் கொண்டு வர ஆளில்லாமல் போனது துரதிருஷ்டம்..

வேலையில் சேர்ந்த பிறகும் ஏதேதோ கண்டு பிடித்தவன் ஒருமுறை கைக்கடிகாரம் போன்ற ஒரு வஸ்துவைக் கண்டு பிடித்தான்..

“என்னடா இது.. இந்த சாதாரண வாட்சைக் கண்டு பிடிக்கவா இவ்வளவு மெனக்கெட்ட?”

என் குரலில் தொனித்த கிண்டலை அலட்சியம் செய்த மது..

“டேய்.. இது சாதாரண வாட்ச் இல்லை.. இதை வயசானவங்க கையில கட்டிகணும்.. அவங்களுக்கு நெருக்கமானவங்க தங்களோட மொபைல்ல நான் கண்டு பிடிச்சிருக்கிற ஏப்பை இன்ஸ்டால் பண்ணிக்கணும்.. அந்த ஏப்பும் வயசானவங்க கையில கட்டியிருக்கிற வாட்சும் சிங்க் ஆகி.. அவங்களுக்கு திடீர்னு ஏதாவது உடம்புக்குன்னு வந்தா.. ரத்தக் கொதிப்பு வேறு பட்டாலோ.. இல்லை வேறு ஏதாவது திடீர் பிரச்சனை வந்தாலோ.. உடனே உடம்புல ஏற்படற பதட்டத்தை அந்த வாட்ச் உணர்ந்து அடுத்த கணமே நெருக்கனானவங்க மொபைலுக்கு அலர்ட் அனுப்பிரும்.. அவங்க உடனே வந்து வயசானவங்களைக் கவனிக்கலாம்”

மது இதை விவரித்த போது என்னால் நம்ப முடியவில்லை..

“நல்லாத் தான் இருக்கு.. ஆனா அதெப்படி.. ரத்தக் கொதிப்பு அதிகமானா எப்படி அலர்ட் வரும்?”

“வரும்.. அதான் என் ஏப்.. நிரூபிக்கட்டுமா?”

படுக்கையில் கிடக்கும் பக்கத்து வீட்டு பெரியவர் கையில் அந்த வாட்சைக் கட்டி தன் மொபைலுடன் இணைத்து நிரூபித்தான்.. விலைவாசி போல் ஊசலாடிக் கொண்டிருந்த அவருடைய ரத்தக் கொதிப்பின் ஒவ்வொரு ஏற்ற இறக்கமும் அவனுடைய மொபைலில் அலர்ட் கொடுத்தது.. நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன்.. எவ்வளவு உபயோகமான கண்டு பிடிப்பு..

மதுவுக்கு விஞ்ஞானம் தெரிந்த அளவுக்கு சாமர்த்தியம் போதாது.. அப்பாவி.. தன் கண்டுபிடிப்புகளை வியாபாரம் செய்ய தெரிந்திருக்கவில்லை..

தன்னுடைய கைக்கடிகார கண்டு பிடிப்பை அக்கு வேறு ஆணி வேராக ஒருவரிடம் விவரித்து.. தஸ்தாவேஜுகளை சமர்பித்து அதை விற்க முயல..

அவனுடைய கண்டு பிடிப்பு விரைவிலேயே மார்கெட்டில்  புகுந்து சக்கை போடு போட்டது.. ஆனால் அவனுடைய கண்டு பிடிப்பாக அல்ல.. சகலத்தையும் அவன் ஒப்புவித்தவரின் கண்டு பிடிப்பாக..

மது இடிந்து போனான்..

எனக்கும் பொறுக்க வில்லை..

“டேய்.. என்ன காரியம் பண்ணியிருக்கேடா?.. உன்னுடைய கண்டு பிடிப்பை வெச்சு எவனோ ஒருத்தன் லட்ச லட்சமா சம்பாதிக்கறான்.. நீ பேக்கு மாதிரி பராக்கு பார்த்திட்டு நிக்கறே?”

“… …”

“இப்படியாடா புத்தி கெட்டதனமா நடந்துப்பே?”

மதுவின் முகம் தொங்கிப் போனது..

இது முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகு மதுவை அவன் வீட்டில் சந்தித்தேன்,,  பிரமை பிடித்தவன் போல்.. எதையோ பறி கொடுத்தவன் போல்..

“டேய்.. என்னடா.. ஏன் இப்படி இருக்கே?”

என் கேள்விக்கு பதில் வெற்றுப் பார்வை தான்..

மதுவின் மனைவி ரம்யா புலம்பினாள்..

“என்னங்க இவர்.. ஒண்ணு இப்படி எதுவும் பேசாம உட்கார்ந்திருக்கார்.. இல்லை. திடீர்னு எரிச்சல் பட்டு.. கன்னா பின்னான்னு கத்தறார்.. இப்படித் தான் நேத்து பக்கத்து வீட்டு மாறன் சார் கிட்ட பெரிசா சண்டைக்குப் போயிட்டார்.. இவ்வளவுக்கும் பெரிய விஷயம் ஒண்ணுமில்லை.. மாறன் சார் அவர் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது எங்க வீட்டு கேட்டுல லேசா இடிச்சுட்டார்.. எங்க கேட்டுக்கு ஒண்ணும் டேமேஜ் இல்லை.. மாறன் சாரோட காருக்கு தான் டேமேஜ்.. ஆனா அதெப்படி எங்க வீட்டு கேட்டுல இடிப்பேன்னு காச் மூச்னு கத்த ஆரம்பிச்சுட்டார்.. அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. மானமே போச்சு”

இதற்கு பிறகு இதை இப்படியே விட எனக்கு மனமில்லை..

அன்று மாலை மதுவை பீச்சுக்கு அழைத்துச் சென்றேன்..

ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்தில் உட்கார்ந்தோம்..

எதிரே கடலலைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர..

கடலையே வெரித்துக் கொண்டிருந்தான் மது..

”டேய்.. உன் கண்டுபிடிப்பை அந்தாளு ஏமாத்தி எடுத்துண்டது அநியாயம் தான்.. உன் கோபம் நியாயமானது தான்.. ஆனா நீ பேட்டண்ட் ரெஜிஸ்டர் பண்ணாததுனால தானே எல்லாம்.. அதனால  தானே சட்டப் பூர்வமா எதுவும் பண்ண முடியலை.. சரி.. நடந்தது நடந்து போச்சு.. அதுக்காக இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருவியா? நீ சாதிக்கப் பிறந்தவன்.. இன்னும் எவ்வளவோ நீ கண்டு பிடிக்கணும்.. உனக்கு நிறைய பேரும் புகழும் வரணும்..”

“… …”

“இதப் பாரு.. இனிமே நீ எதுக்கும் கவலைப் படாதே.. நான் இருக்கேன்.. உன் பேட்டண்ட் ரெஜிஸ்ட்ரேஷன், மார்கெட்டிங் எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. இனிமே யாரும் உன்னை ஏமாத்த முடியாது.. நீ தைரியமா உன் கண்டுபிடிப்புகள்ள இறங்கு”

மது மௌனமாக இருந்தான்..

“என்னடா எதுவும் பேச மாட்டேங்கறே?”

சிறிது நேரம் மௌனம்..

பிறகு மெதுவாக ஆனால் தீர்மானமாகச் சொன்னான்..

“நீ எனக்கு உதவி பண்ணுவியா? அப்பக் கண்டிப்பா புது முயற்சில இறங்கறேன்.. அருமையான ஐடியா ஒண்ணு சிக்கியிருக்கு”

என்னவென்று அவன் உடனே சொல்லவில்லை..

ஆனால் மறுநாளிலிருந்தே மும்முரமாக வேலையில் இறங்கினான் மது..

ஒரு வாரம் கழித்து என்னை பீச்சுக்கு வரச் சொன்னான்..

“டேய்.. அமெரிக்காவுல ஒரு கோடில பறவைகளோட மொழியை ஆராய்ச்சி பண்ண அலைவரிசைக் கருவிகளோட ஒரு குழு போயிருக்கு.. அப்ப திடீர்னு இனம் புரியாத மொழில ஏதோ பேச்சு சத்தத்தை அவங்களோட கருவி பதிவு பண்ணியிருக்கு.. ஆய்வு பண்ணிப் பார்த்ததுல அந்தப் பகுதில பல நூறு வருடங்களுக்கு முன்னால ஒரு காட்டு வாசி இனம் இருந்ததாகவும்.. பதிவு செய்யப் பட்ட அந்த மொழி அவங்க பேசினதுதான்னும் கண்டு பிடிச்சிருக்காங்க.. ஆனா அந்த இனத்தவர்களும் அவங்க மொழியும் அழிஞ்சு போய் பல வருஷங்கள் ஆயிருத்தாம்..”

”அப்ப மறுபடியும் எப்படி அந்த மொழில பேசினது அவங்களுக்குக் கேட்டுது?”

”அங்க தான் விஷயமே.. அதாவது நாம பேசறதெல்லாம் அழிஞ்சு போறதில்லை.. அது காத்துல மிதந்திண்டிருக்கு.. நம்ம புராணங்கள்ளயே இதைப் பத்தி குறிப்பு இருக்கிறதா கூகிள் சொல்றது.. சரியான அலைவரிசைக் கருவிகளை உருவாக்கினா ஒரு இடத்துல இருந்து நாம பேசினதையெல்லாம் மறுபடியும் பிடிச்சு இழுத்துக் கேட்கலாம்.. பதிவு பண்ணலாம்”

“சரி.. இப்ப எதுக்கு இதைச் சொல்றே?”

“கண்டு பிடிக்கப் போறேன்.. ஒரு இடத்துல பேசின பேச்சையெல்லாம் பிடித்து இழுத்து பதிவு பண்ணக் கூடிய ஒரு கருவியைக் கண்டு பிடிக்கப் போறேன்..”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை.. நீ சொல்றது நல்லது மாதிரியும் இருக்கு.. ஆபத்து மாதிரியும் இருக்கு”

“ஒரு ஆபத்தும் இல்லை.. இந்த என் கண்டுபிடிப்பு மட்டும் சக்ஸஸ் ஆச்சு.. ஓவர் நைட் பிரபலமாயிருவேன்.. என் கண்டு பிடிப்பை வெளில விக்க மாட்டேன்.. நம்ம அரசாங்கத்துக் கிட்ட கொடுத்திருவேன்.. பல பிரச்சனைகளை சுலபமா தீர்க்க அவங்களுக்கு இது ரொம்பவே உபயோகமா இருக்கும்”

தீர்மானமாகச் சொன்னான். அதிலிருந்து அலுவலக நேரம் போக இதே சிந்தனை தான்.. பல அலைவரிசையை கிரகிக்கக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்கினான்.. கணினி மூலம் அந்த இயந்திர செயல்பாடுகளை இணைத்தான்.. அதை இயக்க ஒரு ஏப் கண்டு பிடித்தான்..

ஆனால் அவனுடைய முயற்சி உடனே வெற்றி பெற வில்லை.. நினைத்த படி ஏற்கனவே பேசப்பட்ட குரல்களை அவனுடைய ஏப் இழுத்து பதிவு செய்யவில்லை..

அவன் தளரவில்லை.. மனதில் வேகம் கூடியது..

அலுவலகத்துக்கு பத்து நாட்கள் விடுப்பு எடுத்தான்..

இருபத்தி நான்கு மணி நேரமும் இதே முயற்சியில் ஈடு பட்டான்..

நானும் தினம் அவனை சந்தித்து ஊக்கம் கொடுத்தேன்..

நேற்று கூட..

“டேய்.. நெருங்கியாச்சு.. நிச்சயம் ஜெயிச்சிருவேன்”

நம்பிக்கையோடு தெரிந்தான்..

சொன்ன மாதிரியே ஜெயித்து எனக்கு நள்ளிரவு என்று கூடப் பார்க்காமல் அலைபேசியிலும் தெரிவித்து விட்டான்..

மதுவை நினைத்தால் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது..

நினைக்க நினைக்க.. மதுவின் இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் புரிந்தது.. இதை நேர்த்தியாகக் கையாண்டால் அரசியலில் பல விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது.. அதே சமயத்தில் தீவிரவாதிகள் கையில் சிக்கினால் ரொம்பவே ஆபத்து..

இப்படி யோசித்துக் கொண்டே என்னையுமறியாமல் உறங்கிப் போனேன்..

மீண்டும் அலைபேசி சிணுங்கியது..

விழித்து மணி பார்த்தேன்..

ஏழு..

“ஹலோ..”

மறுமுனையில் சொல்லப் பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்..

மது தற்கொலை செய்துக் கொண்டு விட்டானாம்..

ஏன்.. ஏன்.. சில மணிநேரங்கள் முன் தானே சாதித்து விட்டேன் என்று சந்தோஷப் பட்டான்.. பின் ஏன்?

கிளம்பும் போது மதுவிடமிருந்து வந்திருந்த வாட்ஸ்-ஏப் வாய்ஸ் மெஸேஜ் கண்ணில் பட்டது..

“டேய்.. நான் இந்தக் கருவியை கண்டு பிடிச்சிருக்கக் கூடாது.. தப்புப் பண்ணிட்டேன்.. ரொம்பவே தப்பு பண்ணிட்டேன்..”

அடுத்து இன்னொரு வாய்ஸ் மெஸேஜ்..

“மாறன்.. நான் இன்னிக்கு எங்கம்மா வீட்டுக்குப் போறேன்.. அந்தாளு தனியாத் தான் மெஷினோட மாரடிச்சிட்டிருப்பான்”

ரம்யாவின் குரல்..

“அதனால?..”

“இதுக்கு மேல எனக்குப் பொறுமை இல்லை.. நம்ம பிளான்படி அவனை இன்னிக்கு முடிச்சிருங்க… ”

                                             

பால்ய நண்பனை வீட்டிற்கு அழைத்தல் – செவல்குளம் செல்வராசு

உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் எத்தனை பேர்? - Quora

மதுக்கூடத்தில்
தற்செயலாய் எதிர்ப்பட்ட
பால்ய நண்பனை
வீட்டிற்கு அழைத்தேன்

அவனும் விபரம் கேட்டவன்
மறுப்பேதுமில்லாமல்
பின்னால் ஏறிக்கொண்டான்

பால்ய மேகங்கள்
தலைக்கு மேலேயே பயணிக்க
வீடடைந்தோம்

தவறவிட்ட கணங்களெல்லாம்
தொட்டுப் பிடித்து விளையாடிக்கொண்டன
மறைந்துவிட்ட தழும்புகளையும்கூட
தேடித்தேடி மருந்து தடவிக்கொண்டோம்

மூளை மடிப்புகளே
மறந்துவிட்ட நிகழ்வுகளைக் கூட
உறிஞ்சி எடுத்து ஊதித்தள்ளினான்
குமிழி ஊதும் சிறுபிள்ளையாய்

என்னை அப்பாவியென
நம்பிக்கொண்டிருக்கும் மனையாட்டி
தேனீர் கொடுக்கும் சாக்கில்
முறைத்துவிட்டுப்போனாள்

கல்லூரிக் காலத்தைத் துவங்கியபோது
சுதாரித்தேன்…
அவன் அவ்வளவு சாமர்த்தியன் அல்லன்
கவனமாகப் பேசி அனுப்பிவிட வேண்டும்
எந்த நேரத்திலும்
எந்த ரகசியத்தையும்
போட்டு உடைத்துவிடக்கூடும்

புத்தக விமரிசனம் – பத்மினி பட்டாபிராமன்

 தென்காசி கணேசன் அவர்களின்

நாளாம் நாளாம் திருநாளாம்

புத்தக விமரிசனம்

 

தென்காசியிலிருந்து ஒரு தஞ்சாவூர்க் கதம்பமாலை புத்தக வடிவில் நம் கைகளில் தவழ்கிறது.

என்றென்றும் நம் அறிவில் மணம் வீசிக் கொண்டிருக்கும் பூக்கள் கொண்ட மாலை இது.

பகவத் கீதையிலிருந்து ஸ்லோகங்களை எடுத்து மனித மனத்தில் எத்தனை உணர்ச்சிகள் உள்ளதோ, அத்தனையையும் பொருத்தமான, கச்சிதமான சிறு தலைப்புக்களாக்கி, 30 அத்தியாயங்களைப் படைத்திருக்கிறார்.

தலைப்புக்கள் சிறிதாக இருந்தாலும் அவை சொல்லும் விஷயங்கள் மிகப் பெரிது, ஆழமானது. எந்தத் தலைமுறைக்கும் ஏற்றது.

பெரியோரின் உரைகள், உபதேசங்கள், குட்டிக் கதைகள், பாடல்கள் என்று தகுந்த இடங்களில் இணைத்து அருமையாக , தெளிவாக, எல்லோருக்கும் படிப்பினையாக, சுவாரசியமானதாகவும் இந்த படைப்பினை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் தென்காசி கணேசன்.

கீதை உரைத்த கண்ணன், வால்மீகி, ஆதி சங்கரர்,ஆண்டாள், அபிராமி பட்டர், காஞ்சி மா முனிவர், சிருங்கேரி மகா ஸ்வாமிகள் என்று தெய்வங்களின் அருளுரைகளை மெய்சிலிர்க்கப் படிக்கிறோம்.

திருவள்ளுவர், பாரதியார், கண்ணதாசன், கம்பன் என்று தம் கவிதைகளில் வாழ்வியலை வைத்த பெரு மக்களின் பாடல்களை பொருத்தமான இடத்தில் உணர்கிறோம்.

விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர்,சுவாமி சுத்தானந்தா, மஹாவீரர் போன்ற மகான்களின் உபதேசம், குட்டிக் கதைகள் மனதில் அமர்கின்றன.

இந்தக் கதம்பத்தில் விஞ்ஞானச் செய்திகளும் இருக்கின்றன. மெய்ஞ்ஞான தத்துவங்களும் நிறைந்திருக்கின்றன.

இன்றைய ராணிமேரி கல்லூரி இருக்கும் இடத்தை அன்று கல்விக்காக தானமாகத் தந்தவர் திரு. சுப்பிரமணிய அய்யர் என்பது போன்ற வரலாற்று உண்மைகளும் இந்த தலைமுறைக்கு தெரிய வருகின்றன.

ஓவியர் பிகாசோ, விஞ்ஞானி எடிசன் ,சிவாஜிகணேசன், ஸ்ரீனிவாச சாஸ்திரி, டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார், ஏழைக் குடும்பத்தில் பிறந்து மாணவர்களின் மனம் கவர்ந்த, இந்திய நாட்டின் ஜனாதிபதியான, விண்ணியல் விஞ்ஞானி அப்துல் கலாம், போன்ற பிரபலங்கள், அந்த உயரம் தொட வாழ்க்கையில் எவ்வளவு உழைத்திருப்பார்கள் என, அவர்களை வணங்க வைக்கும் உழைப்பின் வலிமை கூறும் செய்திகள் இருக்கின்றன.

துளசிதாசரின் இளமை வாழ்க்கையில் நடந்த பிரமிப்பான சம்பவம், பாண்டிய மன்னனின் படைத் தளபதி தௌஹித் இப்ரஹீம் அவர்களின் நாட்டுப் பற்று, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் எழுத்து வலிமை, மூதறிஞர் ராஜாஜி அவர்களின் சமயோசிதம், டால்ஸ்டாய் சொன்ன பேராசைக் கதை, ஷேக்ஸ்பியரின் கிங் லியர் போன்றவை தொய்வில்லாமல் படிக்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன.

கணுக்கள் நிறைந்த கரும்பு போல தடங்கல்கள் இருந்தாலும் வாழ்க்கையின் இனிமையை உணர வேண்டும் என்பது போன்ற உவமைகளும் உள்ளன.

நிம்மதியான வாழ்க்கைக்கு நம் பெருமை வாய்ந்த இதிகாசங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமா வழி காட்டுகின்றன?

நம் முன்னோர்கள் மற்றும் அறிஞர்களின் சாதனைகளை, போதனைகளை உணர்ந்து நம்மை செம்மைப் படுத்திக் கொள்ளலாம் என்பது நூலாசிரியரின் ஆணித்தரமான வாதம்.

அதற்கு கண்ணன் காட்டும் கீதையின் ஸ்லோகங்களையும், அவற்றின் பொருளையும் விளக்கி, சிறப்பான நூலாகத் தந்திருக்கிறார் தென்காசி கணேசன்.

இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல்.

 

 

 

 

 

திரை ரசனை வாழ்க்கை 20- விட்னஸ் – எஸ் வி வேணுகோபாலன்

 

விட்னஸ்

மனக்கழிவுகளின் நெடி

என் பத்து வயதில் சென்னையிலிருந்து வேலூருக்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தபோது தான் அந்தக் கொடுமையை அதிர்ச்சியோடு பார்த்தேன். ஒவ்வொரு வீட்டின் முன்பும் காலை ஏழு மணி போல ஒரு பெண்மணி டிரம் வைத்த சிறு வண்டி ஒன்றை உருட்டிக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு வீட்டின் முன் கட்டில் இருக்கும் கழிவறைக்கு வெளிப்பக்கச் சுவரில் இருக்கும் சிறு தகர மூடியை உயர்த்தித் துடைப்பத்தால் கூட்டிப் பெருக்கி முறத்தில் சேகரித்து எடுத்து டிரம்மில் நிரப்பியபடி அடுத்த வீட்டுக்கு நகர்கிறார். மூக்கைப் பிடித்துக் கொண்டு போகும் மனிதர்கள் இவர் சாம்பல் தூவி மூடுகிறாரா என்பதை மட்டும் கண்காணித்துக் கொள்கின்றனர். அதிலும் ஆண்கள், தாங்கள் பெற்ற குழந்தைக்குக் கால் கை கழுவி விடவும் (இடக்கரடக்கல்) மனைவியை அழைப்பவர்கள். கழிப்பறை சுத்தம் செய்யும் பெண்ணோ, ஆணோ இதே தெருக்களில் தங்களுக்கு சோறு கேட்டு வருவதையும் என்னால் மறக்க முடியவில்லை. அந்தத் தூக்கு போணிகள் அதே டிரம் வண்டியின் கைப்பிடிகளில் தான் தொங்கியபடி போக வேண்டியிருக்கும்.

பின்னாளில், தகழி சிவசங்கர பிள்ளை அவர்களது மகத்தான ‘தோட்டியின் மகன்’ (தமிழில்: சுந்தர ராமசாமி) வாசித்த போது இரண்டு மூன்று நாட்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.

இந்த டிரம் வண்டிக்கு எல்லாம் கதியற்ற இடங்களில் காலகாலமாக மூங்கில் கூடைகளில் வைத்துச் சுமந்து போகும் பெண்களைப் பற்றி எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் ஒரு முறை எழுதி இருந்தார். ஒரு மோசமான மழை நாளில் அப்படியான கூடையைச் சுமந்து போகும் சிறுமி, கழிவுகள் யாவும் கரைந்து வழிந்து அவள் தலையிலிறங்கி, முகத்தில் பரவி, உடையிலும், உடலிலும் தன்னை நிறைத்துக் கொண்டு விட, அந்தக் குழந்தை படும் பாட்டை… …மேலே எழுதவே முடியவில்லை. காலம் நம்மை மன்னிக்குமா என்ன, இந்தக் கயமைக்கு நாமும் அல்லவா மௌன உடந்தை?

அறிவொளி இயக்கப் பணிகளின் போது, சிற்றூர்களில் அருந்ததியர் இல்லம் ஒன்றில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டபோது, ‘அய்யா எங்க வீட்ல எல்லாம் தண்ணி வாங்கி யாரும் குடிக்க மாட்டாங்க, பிரச்சனை ஆயிரும்’ என்று அந்த வீட்டுப் பெண்களே தயங்கிய கண்ணீர்க் கதையை ‘இருளும் ஒளியும்’ புத்தகத்தில் கொண்டு வந்திருப்பார் தமிழ்ச்செல்வன். அடுத்தவர்களது அழுக்குகளைத் தூய்மைப் படுத்தும் ஒரு சாதி தான் எப்படி தீண்டாமைக்குத் தள்ளப்படுகிறது….

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ

என்றான் மகாகவி. மனித மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமை இனியுண்டோ என்று சொல்லும் அரசியல் திறனற்ற சுதந்திரம் தான் நமது. அதனால் தான், நீதிமன்றத்தில் சத்தியம் செய்து சொல்கின்றனர், மனிதர் கழிவை மனிதர் எடுத்துத் தூய்மைப் படுத்தும் பணிகளை அறவே ஒழித்து விட்டோம் என்று. கேட்டால், ‘ஒருவருமில்லை’ என்று மாநிலங்கள் எழுத்துருவில் கொடுத்த அறிக்கைகளை ஆதாரம் ஆக்குகின்றனர். பெஜவாடா வில்சன் எனும் செயல்வீரர் இந்த அவலத்தை அம்பலப்படுத்திக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் நகர்ப்புறங்களில் உணவகங்களில், பெரிய குடியிருப்புப் பகுதிகளில், அலுவலகங்களில் செப்டிக் டேங்க் அடைப்புகளைச் சீர் செய்ய அப்போதும் குறிப்பிட்ட சாதியினரே ஈடுபடுத்தப் படுவதைக் காண்கிறோம். செய்யாறு தி தா நாராயணன் அவர்களது ‘எச்சங்கள்’ சிறுகதை, தனது மகன் இந்தத் தூய்மைப் படுத்தும் பணிக்கு வராததால் கோபமுறும் தந்தை, இறங்கிக் கழிவைத் தூய்மைப்படுத்தும் போது அபார்ட்மெண்ட் ஆட்கள் கழிவறையைப் பயன்படுத்தும் அராஜகத்தால் மூச்சு முட்ட அவன் வெளியேறும் அவதி இன்னவற்றைப் பேசும். (செம்மண் விஜயன் அதைக் குறும்படமாக எடுத்திருந்தார்). அவலம் மட்டுமல்ல பிரச்சனை, அபாயம் தான் உரத்துப் பேச வேண்டியது.

கழிவறைத் தொட்டியைத் தூய்மைப் படுத்த இறங்கி மூச்சு விட முடியாது மூழ்கி மரித்துப் போகிறவர்கள் கதை, ஐந்தாறு வரிகள் செய்தி அடுத்த நாள் தினசரிகளில். ஒரு உச் கொட்டிவிட்டு அடுத்த செய்தி, அடுத்த பக்கம், அடுத்த வேலை, அடுத்தடுத்த சொந்தக் கவலைகளில் மாநகர மக்கள் கலைந்து போய்க்கொண்டே இருக்கிறோம். வெளியே வராதவரைத் தேடி இறங்கிய அடுத்த ஆளும் மேலே வராமல் ஒன்றுக்கு மேற்பட்டோரையும் கொல்லும் மரணக்குழிகளாக மலக்குழிகள் மாறிக் கொண்டிருக்க, மக்களின் உயிர் வாழ்தலுக்குப் பொறுப்பேற்க முடியாத அரசுகள் மரணத்திற்கு மட்டும் எப்படி பதில் சொல்லும்?

அங்கே தான் கேள்விகளை முழக்கமாக முன் வைக்கிறது விட்னஸ் திரைப்படம் (சோனியா லைவ்: ஓடிடி).

நீச்சல் வீரன், இனிய சுபாவமிக்க துடிப்பு மிக்க கல்லூரி மாணவன், காதல் கணவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வாதாரத்திற்கு மாநகரின் குப்பைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளரான அன்புத் தாயின் வெறித்த வாழ்க்கையில் ஒற்றை நம்பிக்கை என்று முதல் காட்சியிலேயே அடையாளப்படுத்தப் பட்டுவிடும் இளைஞன் அடுத்த காட்சியிலேயே இல்லாது போய்விடுகிறான்.

ஊரையெல்லாம் கூட்டிப் பெருக்கி, மேஸ்திரிகளின் ஜாடை மாடை அருவருப்புப் பேச்சுகளும் சேர்த்து அள்ளிக் கொட்டிவிட்டு வீடு திரும்புகிறவளுக்கு, தனது மகன் எங்கே இருக்கிறான் என்பது கூடப் பிடிபடுவதில்லை. அவனுக்கு அடிபட்டிருக்கு ஆஸ்பத்திரிக்கு வாங்க என்ற தகவலை மகனின் நண்பன் கூறுகிறான். மகனைத் தேடிப் போகும் அரசு மருத்துவமனையில் பரிசோதனையில் இருக்கிறது அவனது பிரேதம்.

அபார்ட்மெண்ட் ஒன்றில் கழிவறைத் தொட்டியைத் தூய்மைப் படுத்த அறிந்தவர்கள் அழைத்துப் போன இடத்தில் மனம் ஒப்பாமல் திரும்பியவனை வற்புறுத்தி இறக்கி விட்டதில் அவன் மேலே திரும்புவதே இல்லை. மேல் தட்டு வர்க்க மனிதர்களுக்கு அசோசியேஷன் இருக்கிறது. செல்வாக்கு இருக்கிறது. முக்கியமாகப் பணம் இருக்கிறது. அதைவிட பிரச்சனையைப் பெரிதாக்கி விடக்கூடாது என்கிற எச்சரிக்கை அறிவு இருக்கிறது. எப்போதும் பாதிக்கப்பட்டவன் பக்கம் இருப்பதை விட, நிகழ்வின் கோரத்தைக் காசாக்கிக் கொண்டு எல்லாவற்றையும் மூடி மறைத்துக் கழுவித் துடைத்துத் தடயமே இல்லாது செய்யவே பழகி இருக்கும் அதிகார வர்க்கத்தின் துணை இருக்கிறது. ‘நம்மால் என்ன போராடி என்னத்த நியாயம் கேட்டுவிட முடியும்’ என்று ஒடுங்கிப் போய்விடும் ஒடுக்கப்பட்டோரது இயலாமை இருக்கிறது.

‘விட்னஸ்’ இந்த இடத்தில் தான் உரையாடலை மாற்றி முன்வைக்கிறது. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரை உண்மைகளுக்காகத் துணிந்து பேசும் உணர்வப்பராக முன் வைக்கிறது. கழிவுகள் எங்கோ தொட்டிகளுக்குக் கீழ் அடைத்துக் கொண்டிருக்கவில்லை, சாதீய மரபணுக்களுக்குள், அதிகாரப் படிநிலைகளுக்குள், வர்க்கப் படிமானங்களுக்குள் தான் நாறிக் கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.

நீதிக்கான போராட்டத்தை இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் முன்னெடுக்கிறார். அவரை உள்ளே பிடித்துப் போட்டு விடுகிறது அதிகார வர்க்கம். மகனுக்கு நீதி கேட்கிறவளை வம்புக்கு இழுத்து அவளை வேலையை விட்டு நிற்கவைத்துப் பணியாளர்கள் பட்டியலில் இருந்தே இல்லாமல் செய்து விட முடிகிறது. கழிவறை விவகாரத்தில் நடந்த கொடுமையின் முக்கிய சாட்சியமாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக்கித் தரும் அந்த அபார்ட்மெண்ட் இளம் பெண் சொந்தக் குடியிருப்பிலிருந்தே விரட்டப்படுவது நடக்கிறது. அதிகம் படித்தவர்களது திமிரும் வில்லத்தனமும் நேர்பட வெளிப்படாது பூடகமாகவே அரங்கேறிவிடுகிறது. நீங்கள் சொல்வது, கேட்பது, மெய்ப்பித்திருப்பது எல்லாமே சரி தான், ஆனால், தீர்ப்பு எதிர்ப்பக்கம் தான் என்று சாமானிய மக்களை வாயடைக்க வைக்கும் இடத்தில் சமூகத்தின் பொது புத்தி மீது பெரிய கோடரியை வீசி முடிகிறது திரைப்படம்.

ஆவணப்படமாகவோ, பிரச்சாரக் காட்சிகளாகவோ எங்கும் சுருதி இறங்கிவிடாது திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் கூட்டாகச் செம்மையாக நிறைவேற்றப்பட்டிருப்பது அண்மைக் காலத்தில் மிக முக்கியமான படமாக இதனை முன் வைக்கிறது. மாநகரை உருவாக்கிய மக்கள் மையப்பகுதியில் இருந்து தொலைதூரத்திற்கு அப்புறப்படுத்தப் படுவது, பார்வை – சொல் – உடல்மொழி மூலம் சாதீய இழிவு கடத்தப்படுவது, உணர்ந்து துணிந்து காலை முன்னெடுத்து வைத்துவிட்டால் எளிய பெண்களை ஒரு போதும் பின்வாங்க வைக்க முடியாது என்பது, பொதுவெளியில் நியாயத்தின் பக்கம் நிற்போர் உண்டு என்கிற நம்பிக்கை விதைப்பு….என நுட்பமான பல விஷயங்களைப் பேசுகிறது விட்னஸ்.

சாதியில் கீழடுக்கில் இருப்போர் மீதான பார்வையும் பேச்சும் உயர்நிலை, இடைநிலை படிநிலைகளில் இருப்போரிடம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மிக இயல்பாகக் காட்சிப்படுத்துகிறது விட்னஸ். ‘காண்டிராக்ட் எடுத்திருப்பவன் நம்ம சாதிக்காரன், இந்த வழக்கை நீ நடத்தணுமா?’ என்று உறவினர் வந்து பேசுமிடத்தில், ‘உங்க டாய்லெட்டை நீங்க எப்போதாவது கழுவி இருக்கீங்களா, எல்லோர் மலத்தையும் சுத்தம் செய்றவங்களுக்கு யாராவது பேச வேண்டாமா?’ என்று வழக்கறிஞர் கேள்வி வைப்பது முக்கியமானது. அசோசியேஷன் வாசிகளுக்குள் தெறிக்கும் சுயநலம், ஒதுங்கிப் போதல் அரசியலும் சிறப்பாகப் பேசப்பட்டிருக்கிறது.

செத்துப் போன இளைஞனுக்கு அஞ்சலி போஸ்டர் ஓட்டுவதையோ, மக்கள் ஒன்று கூடி படத்தை வைத்து மாலை போட்டு மரியாதை செலுத்தி மரண கானா பாடுவதையோ கூட அனுமதிக்காத காவல் துறை அத்துமீறல்கள் அதிர வைக்கின்றன. நீச்சல் குளத்தில் தனது உயிரைக் காப்பாற்றிய இளைஞனா தங்கள் அபார்ட்மெண்ட் கழிப்பறையில் மரித்தது என்று அதிர்ந்து தேடிப் போகும் இளம் பெண்ணை ‘நீங்க இந்த ஏரியா ஆள் இல்லையே…இங்கெல்லாம் வராதீங்க…இவங்கல்லாம் கிரிமினல் ஆளுங்க’ என்று செம்மஞ்சேரி சூழலிலிருந்து வெளியே போகச் சொல்லும் இடம் ஆழமான சாதீய வர்க்க அரசியலைப் பேசுகிறது.

வெளியுலகம் தெரியாத நடுத்தர வயதுப் பெண்மணி, சாதியில் பொருளாதாரத்தில் கல்வியில் அடித்தளத்தில் கிடப்பவள் எப்படி சொந்தக் கவலையை தன்னையொத்த தாய்மார்களின் ஒட்டுமொத்தக் கவலையாகப் பார்த்துத் துணிந்து போராடப் புறப்படுகிறாள், சக பணியாளரைக் கண்காணி கொச்சையாகப் பேசும்போது அருவருப்போடு கவனிக்கிறவள் மெல்ல மெல்ல ரௌத்திரம் பழகி ஒரு கட்டத்தில் எப்படி அவனை முகத்தில் அறைகிற கட்டத்திற்கு உயர்கிறாள் என்பது இயக்குனர் தீபக் பாராட்டுப் பெறவேண்டிய முக்கிய அம்சம். மக்சீம் கார்க்கியின் தாய் நாயகி பெலகேயா நீலவ்னா நம்மைத் தொடர்ந்து ஆட்கொள்ள வைக்கட்டும்.

ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்கும் சங்கத் தலைவனுக்கு பாலபாடம், காவல் துறைக்கு அஞ்சாது நெஞ்சு நிமிர்த்திப் பேசுவது. ஆளையே அடையாளப்படுத்திக் கொள்ளாமல் போஸ்ட் மார்ட்டம் முடித்து சும்மா முகத்தைக் காட்டிவிட்டுச் சட்டென்று ஆம்புலன்சில் சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் எரித்துவிடும் அளவு ஒரு செயல் திட்டம் இருப்பதை உடைப்பதற்குத் தன்னெழுச்சியாக வழிமறித்து ஆட்களை அமரவைத்து எதற்கும் தயாராக அவர்களை மாற்றுவதற்கு ஒரு ஆளுமைப் பண்பு தேவைப்படுகிறது. அதனால் தான் அந்தப் பாத்திரத்தை விரைந்து பாதுகாப்பாகச் சிறையிலடைத்து விடுகிறது அதிகார வர்க்கம். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் அதற்குள் பற்ற வைத்துவிடுகிற தீ, அவர் உடனிருந்து ஊதிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை இல்லாது பரவ விடுமளவு தாக்கத்தை முதலிலேயே ஏற்படுத்தி விட, அந்தத் தாயின் சூழலும் காரணமாக அமைகிறது.

ரோகிணியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக விட்னஸ் நிச்சயம் பேசப்படும். சிசிடிவி பதிவை அந்த இளம் பெண் (ஷ்ரத்தா ஸ்ரீ நாத்) சொல்லவும், ‘என் பையன் அதில் இருப்பானா, அவனைப் பார்க்க முடியுமா’ என்று கேட்கும் இடத்தில், பொறுமையாக அலைந்தும் கிடைக்காத பிராவிடண்ட் பணத்திற்காகக் குரலை எழுப்பும் இடத்தில், தனக்கான போராட்டத்தில் சிறைப்பட்ட தொழிற்சங்கத் தலைவரைச் சிறையில் சந்தித்துப் பேசும் இடத்தில்…. என்று சிறப்பாகச் செய்திருக்கிறார். மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ஜி செல்வா அவர்கள், நிஜ வாழ்க்கையின் பாத்திரமே கிடைக்கப்பெற்று அதைத் திரையிலும் தீட்டி இருக்கிறார். சிறையில் வாழ்க்கை இணையரை சந்திக்கும் காட்சியில் அபாரம். வழக்கறிஞராக சண்முக ராஜா தனது பண்பட்ட நடிப்பை வழங்குகிறார். முன் திரையிடலில் நேரில் பார்த்த போது அத்தனை அமைதியாக இருந்த இளைஞர் தமிழரசன், அளவான காட்சிகளே என்றாலும் அருமையாகச் செய்திருக்கிறார். சிரித்த முகத்தோடு அம்மாவோடு அவர் உரையாடும் காட்சியும், பேருந்தில் உடன் வந்து இறங்கிப் போகும் நேர்த்தியும் மறக்க முடியாதது. நீதிபதியாக வருபவர் அத்தனை இயல்பான உடல்மொழியும், பேச்சும்! ஷ்ரத்தா ஸ்ரீ நாத், ஆர்க்கிடெக்ட் ஆக வருபவர், கழிவறைத் தொட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டும்படி மாற்று வரைபடம் போட்டுத் தருவதிலும், அவரது கிளைக்கதையில் வெடிக்கும் சாதி பிரச்சனையும் சிறப்பாகக் கொணர்ந்திருக்கிறார்.

நேர்த்தியான திரைக்கதை முத்துவேல், ஜெ பி சாணக்யா இருவரும் (சாணக்யா வசனத்திலும் உதவி இருக்கிறார்) அருமையான பணி. காட்சிக்கும் கதைக்குமான பாடல்கள் கபிலன் எழுத, படத்தின் சிறப்பான பின்னணி இசை ரமேஷ் தமிழ்மணி. ஒளிப்பதிவையும் கச்சிதமாக செய்திருக்கும் இயக்குனர் தீபக் அவர்களின் முதல் படம் இது என்பது உள்ளபடியே வியக்க வைப்பது.

வேலூர் கட்டை சுபேதார் தெருவில் கழிவறைகளைத் தூய்மைப் படுத்த வந்து நின்ற அந்த எளிய மனிதர்கள், முதன்முதல் பார்த்த அதே அதிர்ச்சித் துடிப்பு நீடிக்க இன்னும் நெஞ்சில் நிற்கின்றனர். அவர்களுக்குமான நியாயத்தையும் சேர்த்தே பின் தேதியிட்டுப் பேசும் படம் தான் விட்னஸ்.

இந்தப் படத்தின் டிரைலர் :

 

 

கையில் தந்த தாமரை – ரவிசுப்பிரமணியன்

என் கல்லூரி சகா, ‘நிழல்கள்’ திருநாவுக்கரசு திரைப்படத்துறைக்கு வெளியிலிருந்தபடியே, அந்தத் துறைக்கு பல நல்ல விஷயங்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். எழுத்தாளரும் இசை ஆர்வலரும் பதிப்பாளருமான அவரது ‘நிழல்கள்’ இதழ் தொடர்ச்சியான நல்பங்களிப்பு. பல நல்ல வித்துகளை இட்டு வரும் அவர் சமீப ஆண்டுகளில் ஆவணப்பட இயக்குனராகவும் ஆகியுள்ளார்.

பல்லாண்டுகளாக காத்திரமாக எழுதிவரும் முதுபெரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் பற்றி எந்தப் பதிவும் இல்லாத ஒரு சூழலில், அவரைப் பற்றிய, அவர் படைப்புகளைப் பற்றிய ஒரு உரையாடலை ’குவிகம் இலக்கிய வாசல்’ தயாரித்துள்ள ‘கிணற்றில் விழுந்த நிலவு’ ஆவணப்படத்தின் மூலம் முன் வைத்துள்ளார் அரசு.  அந்த வகையில் இது ஒரு முக்கியமான படம்.

தமிழிலக்கிய வரலாற்றில் எஸ். வைத்தீஸ்வரன் போல கவிதை, ஓவியம், நடிப்பு, மற்றும் இசைப் பரிச்சயம் என இத்தனை துறைகளில் ஈடுபட்ட நபர்கள் யாரும் இல்லை. அதுவும் வானூர்தியில் வேலை பார்த்த தமிழிலக்கியவாதிகள் இல்லவே இல்லை. இப்படி ஒரு அபூர்வ சேர்மானத்தை அவரது ஆளுமையில் மட்டுமல்ல; அவர் கவிதைகளிலும் நாம் காணலாம். ஆனால், ’கார்பன்’ அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு இப்போதுதான் அதெல்லாம் வெளியே வருகிறது. இப்போது அவரது ஆவணப்படம் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருப்பதால் நான் அதற்குள் செல்லவில்லை.

”எப்போது என் மனக்குளத்தில் சூரியன் தெரியும்

எப்போது என் கைமுனையில் தாமரை முளைக்கும்”

என்று கவிதையில் வைத்தீஸ்வரன் கேட்கும் கேள்விகளுக்கு அதை அருமையான பாடலாக்கி காட்சி ரீதியாக, இசை ரீதியாக அவருக்கு சூரியனைத் தெரியவைத்து, தாமரையையும் மலர வைத்து அவர் கையில் தந்துவிட்டார் அரசு. இப்படி சேராததையெல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள்தானே கலைஞர்கள். ஸாரி… நீங்கள் இதில் அரசியல் அர்த்தங்கள் எல்லாம் கொள்ளக்கூடாது.

அந்தப் பாடலில் வரும் கடற்கரை, புறாக்கள், இயற்கைக் காட்சிகள் வைத்தீஸ்வரனின் முக பாவங்கள், அவரது பீஷ்ம நடை, இயற்கையாய் அமைந்த ஒளி, பாடலின் இனிமை எல்லாமும் சேர்ந்து ஒரு மோன அனுபவத்தைத் தந்துவிடுகின்றன நமக்கு. இந்த ஆவணப்படத்தின் மிக முக்கியப் பகுதி இது. எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வகையில் வைத்தீஸ்வரன் பற்றி அரசு, திரையில் எழுதிய கவிதையின் ஒரு பகுதி என்று இதைச் சொல்லலாம். ஒரு நல்ல டாக்குமென்ட்ரிக்கான லட்சணமான பகுதி இது.

ஒளிப்பதிவாளர் பல சமயங்களில் தன் பணியை சிறப்பாகச் செய்துள்ளார். வைத்தீஸ்வரன் விஷுவல் போல, ஆர். ராஜகோபாலன், அழகியசிங்கர், ரங்கராஜன், விட்டல் ராவ், கிருஷாங்கினி ஆகியோர் பேசும்போது எடுத்த காட்சிகளின் சட்டகங்களும் சிறப்பானவை. ஆனால், சில இடங்களில் மட்டும் கேமராவை அப்படியே ஒரே ஷாட்டில் நிறுத்திவிட்டு டீ குடிக்கப் போய்விடுகிறார். அப்பறமா போனா என்ன தினேஷ்குமார்..?!

வைத்தீஸ்வரனின் சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ‘மயிலாய்’ கவிதையும் அதன் காட்சி அமைப்பும் டாக்குமென்ட்ரிக்கான தன்மையுடன் சிறப்பாக வந்திருந்தது. அது போலவே சில ஆர்க்கேவ்ஸ் காட்சிகள், அபூர்வமான சில புகைப்படங்கள் இந்த ஆவணப்படத்துக்கு கூடுதல் பலம்.

அவருடைய கவித்துவம் பற்றி ஆர். ராஜகோபாலன், பா. ரவி, இந்திரன், மாலன், வெளி ரங்கராஜன், விட்டல்ராவ், அம்ஷன்குமார், பாவண்ணன், க்ருஷாங்கினி, எஸ். சண்முகம், லதா ராமகிருஷ்ணன், ஓவியர் நாகராஜன், ஜி முருகன், அழகியசிங்கர்  அடங்கிய பதிணென் கீழ்க் கணக்குக்கு நாலு குறைவான என் நண்பர்கள் குழு ஒரு மணி நேர சொச்ச ஆவணப்படத்தில் பலபடப் பேசியிருக்கிறது. இலக்கியப் பேச்சுக்கும், சுருக்கமான ஆவணப்பட பைட்டுக்கும் ஆராய்ச்சிக்கும் கிரிட்டிக்கல் அனாலிஸிசுக்கும் என்ன வித்யாசம், இந்தப் படத்தில், என்ன அவகாசத்தில் என்ன தேவை என்று, முதலில் நாம் பலருக்குச் சொல்லிவிட்டுத்தான் ஆடியோ பைட்டே எடுக்க வேண்டும் என்பது என் விழுப்புண் அனுபவங்கள். இதிலும் சிலர் விதிவிலக்காக கரெக்ட்டாகப் பேசியுள்ளனர்.

உச்சத்தில் இருக்கும்போது, நல்ல ஓடியாடும் பருவத்தில் அல்லது நடைஉடையாக இருக்கும்போது தமிழ் எழுத்தாளருக்கு பெரும்பாலும் டாக்குமென்ட்ரி லபிப்பதில்லை. ஒரு எழுத்தாளன் பற்றி படம் வரவேண்டுமென்றால் அவன் கண்டிப்பாக ரிட்டையராக வேண்டியிருக்கிறது. அல்லது கம்பு ஊன்றி நடக்க வேண்டியிருக்கிறது. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இதில் அதிர்ஷ்டக்கார விதிவிலக்குகள். ’லாபமற்ற’ இது போன்ற படங்களை யார் தயாரிக்க முன் வருவார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தகுதிக்காக அவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்களுக்கு இலவச வீடு தந்தே தீருவோம் என்று தமிழ் எழுத்தாளர்களை, தமிழை கெளரவிக்க விரும்பும் தமிழக அரசுதான் இதையும் செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி ஏகப்பட்ட சிலைகளை நிறுவி மாலைகள் போட்டு, பிறகு என்னென்னவோ மாலைகள் போடப்பட்டதால், அரசு செலவிலேயே அவர்களுக்கு சிறைக்கூண்டு போட்டு, பின் அதற்காகப் பாதுகாப்பு போட்டு விடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இந்த விபரீதங்களுக்குப் பதிலாக அந்தச் செலவில் அந்த இடத்தில் சிறு சிறு நீர் குட்டைகளையாவது அமைக்கலாம்; அசோகமித்திரன் நினைவாக அவர் பிள்ளைகள் செய்தது போல. திராவிட மாடலில் சுற்றுச்சூழலுக்குத் தக்க இப்படியெல்லாம் நிரல்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இதையெல்லாம் யார் அவர்களுக்குச் சொல்வது. ’இடிப்பாரை’ இடிக்காமல் கேட்கும் காதுகள் அரசுக்கு இருந்தால் தேவலை. சற்று கண்ணயர்ந்தேன் / அதற்குள் பூமி / எங்கோ சென்றுவிட்டது / என்றெல்லாம் வைத்தீஸ்வரன் கவிதைகளைப் படித்ததால் இதையெல்லாம் சொல்லத் தோன்றுகிறது.

சரி, ஆவணப்படம் சார்ந்த கன்ஸ்ட்ரக்டிவான விமர்சனத்துக்கு வருகிறேன். அரசு (திருநாவுக்கரசு) இசையின் மேல் ஆர்வம் உள்ளவர். சில இசைக்கலைஞர்கள் பற்றி புத்தகம் எழுதியவர். அதற்காக சில பரிசுகளும் வாங்கியவர். படிக்கிற காலத்தில் கொஞ்ச காலம் இசையும் படித்தவர்தான். அதற்காக டாக்குமென்ட்ரியில் பேட்டி காணப்படுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது, இசையின் மேல் ஆசை உள்ளவனே சங்கடப்படும்படியாக இப்படியா இசை தொந்தரவாக வர வேண்டும்?

பேட்டியின்போது மட்டுமல்ல, வாய்ஸ் ஓவரிலும் வருகிறது. தாழ்வான அமெரிக்கையில் நன்றாக வந்தால் பரவாயில்லை. ஏற்கனவே நம்ம இலக்கியவாதிகள் பேசுவது கிளுகிளுவென்று புரியும். இதில் பொருத்தமில்லாத சத்தமான மியூசிக் வந்தால், என்ன ஆகும்.  நான் ஹெட்ஃபோனில் வலது பக்கத்தை மட்டும் காதில் வைத்து அந்த ஆடியோ முழுவதையும் கேட்டேன். இடது பக்கம் ஹெட்ஃபோனையும் சேர்த்து காதில் வைத்தால் அது உபாதையாக இருந்தது. ஒலிப்பதிவு ஒலிக்கலவை படத்தின் சிலபஸ்ஸிலேயே இல்லாது போய்விட்டது.

’சொல்லுதல் யார்க்கும் எளிய’ என்பதால் பல கல்லூரிகளில் பேசும்போது நான் வலியுறுத்திச் சொல்லும் விஷயம்.  ஆவணப்படம் என்பது அடுக்கடுக்கான வெறும் நேர்காணல்களின் தொகுப்பு அல்ல. அதன் சதவிகிதம் மினிமலாக இருந்தால் நல்லது. ‘ஆவணப்படம் என்பது ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல; சிலதை காட்சி ரீதியாக பிரமிப்பாய் சொல்லி பலதை அறியத் தூண்டுவது’ என்றெல்லாம் சொல்வேன். என்ன.. அதை இப்போது பாடம் எடுக்கும் வாத்தியார்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஒருவர் பேசும் காட்சி செல்லும்போதே, அதன் பக்கத்திலேயே கொண்டுபோய் போஸ்ட்டர் ஒட்டுவது போல, அப்படி இமேஜை ஒட்டி ஒட்டிக் காமிக்கணுமா அரசு? பேசும்போது அவர்கள் முகத்திலிருந்து மாறுபட்டு வேறு காட்சிகளை பொருத்தமாக வைக்கக்கூடாதா? அது படத்தின் இசை போலவே வரும் இன்னொரு இடையூறு. மாலன் பேசும்போது மட்டும் வேறு விஷுவல் வந்தது. அதுவும் ஒரே விஷயம்தான்  ட்ரெயின் ஒன்று வேகமாக இடதிலிருந்து வலது செல்கிறது, அப்பறம் வலதிலிருந்து இடது செல்கிறது… பத்தாதா..?

மூச்சுவிட முடியாமல் ஏன் அப்படி அடுக்கடுக்கான நேர்காணல்கள்..? நான் பிரதியில் படிக்க வேண்டிய அல்லது வானொலியில் கேட்க வேண்டிய விஷயத்தை ஏன் ஆவணப்படக்காட்சிகளில் கேட்க வேண்டும்..?

உமையாள்புரம் சிவராமன் பற்றி ராஜீவ் மேனன் எடுத்தபடம், காருக்குறிச்சி அருணாசலம் பற்றி ஆர். ஆர் சீனிவாசன் எடுத்தது, ஆர். வி. ரமணி எடுத்த  ’ஓ… தட்ஸ் பானு’ படம் எல்லாம் இதே காலகட்டத்தில்தான் வந்துள்ளன.

சமையலில் மட்டுமல்ல; ஆவணப்படத்திலும் எது எது என்னென்ன அளவில் இருக்கவேண்டுமென்பதும் முக்கியம். இல்லையென்றால் ருசியும் பதமும் மாறிவிடுமில்லையா..? இதையெல்லாம் நான் அரசுக்கு மட்டும் சொல்லவில்லை; எனக்கும் சேர்த்துத்தான் சொல்லிக்கொள்கிறேன்.

ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல, பல சமயங்களில் பல விதமான இடர்ப்பாடுகளோடு, மன நெருக்கடிகளோடு, பொருளாதாரச் சங்கடங்களோடு கையில் கிடைத்த கேப்பையில் செய்த களியென ஏதோ இதையாவது நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்ற சமாதானத்தில்தான் நாங்களெல்லாம் தப்பித்துக்கிடக்கிறோம்.

வானவில் கவி முழக்கம் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள் இரண்டு – விவேக் பாரதி – தில்லை வேந்தன்

No photo description available.
11/12/2022 அன்று  பாரதியாரின்   பிறந்த நாளையொட்டி ,”வானவில் பண்பாட்டு மையம்” , திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில் நடத்திய கவிதைப் போட்டியில், 
விவேக்பாரதியின்  முதல்பரிசு பெற்ற கவிதை 

 

நானெனும் நாடகம் எத்தனைநாள்? – இந்த
நானிலம் மீதினில் என்னகதை?
வானெனும் மேடையின் கீழ்நடக்கும் – என்
வாழ்க்கையின் நாடகம் என்னவிலை?
மானிடனாய் இச் சென்மத்திலே – நான்
வந்ததும் ஆதியின் காலவினை
ஏனெதற்(கு) என்கிற கேள்வியிலே – வழி
ஏறி நடத்திடும் கால்களெனை!

கருக்குடம் வாழ்கையில் சிசுவெனும்பேர் – கண்
கண்டபின்னால் எனைக் குழந்தையென்றார்
தெருக்களில் திரிகையில் பாலகன்நான் – மதி
தேறி அமர்கையில் மாணவனாம்
உருக்கொள இளமையின் புகழெனக்கு – உடன்
ஊழியன், தோழமை பட்டங்களாம்
சுருக்குகள் மேல்வர கிழவனென்றும் – பின்
சுடலையில் ஓர்பிடி சாம்பலென்றும்

எத்தனை எத்தனை பெயரெனக்கு – இதில்
எதுதான் நான்?எது மெய்க்கணக்கு?
வித்தகம் நானா விளைபொருளா – கொளும்
விதிகளில் நானா மீறலிலா?
மத்தகம் உடைந்த காலமெனும் – கரி
மீதினில் நானமர்ந்தோடுகிறேன்
வித்தினை ஒருத்தி விதைத்துவிட்டாள் – பலர்
வீணே எடுத்தெடுத்(து) ஆயுகிறார்!

காதினில் ஓர்குரல் கேட்கிறது – அது
கதிதரும் குரலெனத் தெரிகிறது
காதலில் உட்புறம் திரும்புகையில் – ஒரு
காரிருள் மட்டுமே விரிகிறது!
வேதங்கள் சொல்வது நானெனும்பொய் – என்
வேஷங்கள் சொல்வதும் நானெனில்பொய் – இதில்
மீதமிருப்பது தெய்வதமாம் – அதுவும்
மெய்யிலை பொய்யெனில் என்னசெய்வேன்?

 

தில்லை வேந்தனின் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை:
        நெட்டைக் கனவு!
நெட்டைக் கனவின் சிகரத்தில்
   நீண்ட கவிதை நதிபிறக்கும்;
குட்டைச் செங்கல்  கோபுரமாய்க்
   குலவும் அழகுக்  கலைசிறக்கும்;
ஒட்டைச் சிவிங்கி உயர்கழுத்தாய்
  ஓங்கி விண்ணின் மீன்பிடிக்கும்;
பட்டை     தீட்டி     வைரமெனப்
    பழைய கல்லும் ஒளிவிடுக்கும்!
மனமும் செயலும் சோர்ந்துவிட்டால்,
    வாழ்வின் ஊற்றுத் தூர்ந்துவிட்டால்,
தினமும் துன்பம் நேர்ந்துவிட்டால்,
   தெளிவும் திறனும் பேர்ந்துவிட்டால்,
சினமும் உள்ளே ஊர்ந்துவிட்டால்,
   திகைப்பும் வெறுப்பும் சேர்ந்துவிட்டால்,
இனிமை  ஆர்ந்த   ஒருகனவால்
   எல்லாம் நொடியில் தீர்ந்துவிடும்!
காற்றில் ஏறி  விண்முழுதும்
   கடிதில் செல்லும் நிலைவேண்டும்.
வேற்றுக் கோளில்  குடியேறி
   விரும்பி வாழும் நிலைவேண்டும்.
ஆற்றை இணைத்துத் தரிசுநிலம்
   அனைத்தும் செழிக்கும் நிலைவேண்டும்-
நேற்று வாழ்ந்த முன்னோரின்
    நெட்டைக் கனவும் மெய்ப்படுமோ?
யாதும் ஊரே என்றுரைப்போம்,
    யாரும் உறவே என்றுரைப்போம்,
தீது பகையே என்றுரைப்போம்,
    செய்யும்  போரின் வேரறுப்போம்.
ஓதும் மதங்கள் நன்மையன்றோ?
   உரைக்கும் அன்பும்  உண்மையன்றோ?
நீதி    நிலைக்க   நாம்காணும் —
    நெட்டைக் கனவும் மெய்ப்படுமோ?
உடையும் உணவும் உறைவிடமும்,
   உலக மக்கள்  அனைவருமே
அடையும் நிலையும் வரவேண்டும்,
    ஆற்றல் அமைதி தரவேண்டும்.
இடையில் வந்த பிரிவெல்லாம்
     இல்லை என்ற முறைவேண்டும்.
கடையை விரித்தேன் கருத்துரைத்தேன்-
     கவிஞன் கனவு மெய்ப்படுமோ?
சிட்டுக் குருவி போலெங்கும்
   சிலிர்த்துத் திரியும்  உடல்வேண்டும்;
எட்டி  நிற்கும்  வானம்போல்
    இயைந்து விரியும் மனம்வேண்டும்;
கொட்டிக் கிடக்கும் எழிலுலகில்
   கூவிக் களிக்கும் உயிர்வேண்டும்;
பட்டப்  பகலில்  வரும்கனவில்
   பாக்கள் நூறு தரவேண்டும்!
வெட்ட வெளியில் அளவெடுத்து,
    விரும்பும் வடிவில் உருக்கொடுத்து,
நெட்டைக் கனவு மாளிகையை,
    நெடிய விண்ணில் கட்டுதற்குத்
திட்ட. மிட்டால்,  அதன்கீழே
    செயலாம் கடைக்கால் ஒன்றமைப்போம்.
எட்டுத்  திசையும்  கைப்படுமே!
    எல்லாக் கனவும் மெய்ப்படுமே!

 

ஷாருக்கானை விட்டுட்டாரே! – ரேவதி பாலு

 

Shah Rukh Khan, Kajol and Yash Chopra in conversation - Part 3 | Dilwale  Dulhania Le Jayenge | DDLJ - YouTube

டீவியில் இளையராஜா பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. அதற்கு எதிரே நின்றவாறு பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டே குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். ஹாலில் ஒரு மூலையில் உட்கார்ந்தவாறு வாழைப்பூவை ஆய்ந்து கொண்டிருந்த ரமாவும் பாடல்களை கேட்டுக் கொண்டே, கூடவே கள்ளக் குரலில் மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தாள். வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் நொடிக்கொருமுறை ஹால் பக்கம் திரும்பி கோபமாக ஒரு பார்வையை வீசிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருக்கும்போது மற்றவர்கள் பேசினால் கூடப் பிடிக்காது.

“டீவி சத்தத்தைக் கொறச்சு வைக்கச் சொல்லு! ” என்றார் ரமாவிடம். எப்போதுமே தன் பிள்ளையிடம் நேரிடையாகப் பேச மாட்டார். எல்லா விஷயங்களும் ரமா மூலம் தான்.

ரமா பிள்ளையிடம் டீவி சப்தத்தைக் குறைக்கச் சொல்லி கண்ணாலேயே ஜாடை காட்டினாள்.

“என்னால முடியாதும்மா! நா காலையில வீட்ல இருக்கிறதே கொஞ்ச நேரந்தான். அந்த நேரம் எனக்கு என்ன பிடிக்குதோ அப்படித்தான் செய்வேன்!” என்றான் குமார் வீம்பாக, அப்பாவுக்குக் கேட்காதபடி தாழ்ந்த குரலில் தான். பேசிக் கொண்டே தான் வழக்கமாக பார்க்கும் ஹிந்தி சேனல்களை டீவியில் போட ஆரம்பித்தான்.

“ராதா கைஸேன ஜலே!” என்று பாடியவாறே ஒரு பெண் ராதாவாக எம்.டீ.வி.பீட்ஸ் சேனலில் அபிநயம் பிடிக்க, அமீர்கான் கிருஷ்ணனாக அவளைச் சுற்றி சுற்றி வந்து ஆடினார். ‘லகான்’ படத்தில். ரமாவிற்கு மிகவும் பிடித்த பாட்டு. அவள் பரவசமாக டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணன் வெராண்டாவில் நாற்காலியை சப்தமாக பின்னுக்கு இழுத்து எழுந்து கொண்டார். அந்த சப்தத்திலேயே அவர் கோபம் புரிந்தது ரமாவுக்கு. பேசாமல் மும்முரமாக வாழைப்பூவை ஆய்வது போல ‘பாவ்லா’ காட்டினாள்.

குமார் அப்பாவின் செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல டீவியைத் திருகித் திருகி ஹிந்தி சேனல்கள் மஸ்தி, 9¢எக்ஸ் ஜல்வா, எம்.டீ.வீ பீட்ஸ் என்று ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு எதில் தனக்குப் பிடித்த பாட்டு வருகிறதென்று பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது சல்மான்கானும் கரீனாகபூரும்,

“தில் கே பதலே சனம், தர்தே தில் லே சுகே” என்று சோகமும் மகிழ்ச்சியும் கலந்து ஓடிப் பிடித்து ஆடினார்கள்.

“காலங்கார்த்தால சல்மான் கானையும் அமீர் கானையும் பார்க்காவிட்டால் அம்மாவுக்கும் புள்ளைக்கும் திங்கற சோறு செரிக்காதோ?” கோபத்தோடு உறுமினார் கிருஷ்ணன்.

இதற்குள் குமார் சேனலை மாற்றி விட மஸ்தி சேனலில்

‘தும் பாஸ் ஆயே! க்யூம் முஸ்கராயே தும்னே ந ஜானே க்யா சப்னா திகாயே……கயா கரூ நா ஹை குச் குச் ஹோதா ஹை’

ஷாருக்கான் கஜோலைச் சுற்றி சுற்றி வந்து காதலாகிக் கசிந்து உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.

அந்தப் பாடலை ரசித்தபடி எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த குமார் அம்மாவைப் பார்த்து குறும்பாக சிரித்தபடி தாழ்ந்த குரலில்,

“ஷாருக்கானை விட்டுட்டாரே!” என்றான்.

இப்போது ரமாவின் முகத்திலும் ஒரு குறும்பு சிரிப்பு. குனிந்து ‘கள்ளன்’ ஆயப்பட்ட வாழைப்பூவைப் பார்த்து வாயே திறக்காமல் சப்தம் வராமல் சிரித்தாலும் கன்ன மேடுகளும் கண்களும் சிரிப்பதைக் காட்டி விட்டதோ?

இருவரும் தன்னை கிண்டல் செய்கிறார்கள் என்று மனதில் பட்டு விட்டதோ என்னவோ கிருஷ்ணன் கோபத்தில் முகம் ஜிவுஜிவுக்க ரெண்டு பேரையும் பார்த்த வண்ணம் ஒரு நிமிடம் நின்றவர் பின்பு தோளில் போட்டுக் கொண்டிருந்த துண்டை ஒரு உதறு உதறித் திரும்பப் போட்டுக் கொண்டு, “உருப்படாத ஜென்மங்கள்!” என்று உறுமிக் கொண்டே குளிப்பதற்காக பாத்ரூம் பக்கம் போனார்.

பாத்ரூம் கதவு தாள் போடும் சப்தம் கேட்டதும் குமார் டீவியை கொஞ்சம் கூடவே சப்தமாக வைக்க, இவர்கள் வீட்டில் தன் மண்டை உருட்டப்படுவது பற்றி சற்றும் அறியாத ஷாருக்கான், கஜோலுடன் ஆனந்தமாக சுழன்று சுழன்று ஆடிப் பாடிக் கொண்டிருந்தார், “தும் பாஸ் ஆயே…” என்று.

 

 

மலையாள சிறுகதை : மூலம் : ஜி.என்.பணிக்கர் தமிழில் : தி.இரா.மீனா

 

மலையாள சிறுகதை :
மூலம், ஆங்கிலம் : ஜி.என்.பணிக்கர்
தமிழில் : தி.இரா.மீனா

முகவரி முழுமையற்று இருந்த போதிலும்……

Ban practice of govt officers bringing kids to work, says Kerala rights  panel - The Week

 

அவள் வேலைக்கு வந்து சேர்ந்த தினத்தன்று ,அலுவலகத்தின் மரப்பலகை நடைபாதையைக் கடந்த போது ஒரு வினோதமான அறிவிப்பு பலகையைப் பார்க்க நேர்ந்தது : முழுமையான முகவரிகளற்ற கடிதங்கள்’ என்று. ஆர்வத்தோடு அவள் அந்த பலகையைப் பார்த்தாள். இல்லை.கடிதங்கள் எதுவும் அங்கில்லை.ஒவ்வொருவருக்கும் தனக்கென சொந்தமான முழு முகவரி இருக்கும்..

அவர்கள் எல்லோரும் உறுதியான முகவரி உடைய மனிதர்கள்!

சமூகத்தில் முக்கியமானவர்கள் என்று அவர் நினைக்கும் மனிதர்கள் பற்றி அப்பா பேசுவதை அவள் அடிக்கடி கேட்டிருக்கிறாள்.ஒருவரின் சமூகத் தகுதியைப் பற்றி பேசும்போது அப்பா எல்லாவற்றையும் மறந்து விடுவார். அவர் பட்டினியாக இருந்தாலும் குடும்பத்தின் கடந்தகால மதிப்பு, பெருமைகளைச் சொற்பொழிவாற்றி சலிக்க வைத்துவிடுவார்.

அவள் தன் வேலை நியமனக் கடிதத்தை அரசு செயலாளரிடம் தந்தாள்.
அவர் கையெழுத்திட்டபடியே சொன்னார்.
“இது ஆறுமாதம் மட்டும்தான்…”

அவள் தலையாட்டினாள்.அவளுக்குத் தெரிந்ததுதான். அது ஓர் ஆறுமாதம் தான் என்றாலும் பெரிய வரம்… தற்கொலையைப் பற்றி ஆறுமாதங்களுக்கு யோசிக்க வேண்டியதில்லை. அவள் வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.அரசு செயலாளார் சொன்ன விவரங்களை கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
“உண்மையாக முயற்சி செய்தால் எல்லாவற்றையும் இரண்டொருநாளில் புரிந்துகொண்டு விடலாம்”

“நான் கவனமாகக் கற்றுக்கொள்கிறேன் சார்..”

அவர் பியூனைக் கூப்பிட்டு பிரிவு அதிகாரியிடம் அழைத்துப் போகச் சொன்னார் அந்த அதிகாரி அதிகம் பேசவில்லை.அவளைக் காலியான இருக்கையில் உட்காரச் சொன்னார்.

“இது உங்கள் இருக்கை.கோப்புகளை முழுவதுமாகப் படியுங்கள்.கவனமாகப் படியுங்கள்.ஏதாவது சந்தேகமிருந்தால் என்னிடம் வாருங்கள். சரியா?”

“நீங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகிறீர்களா?” அருகில் உட்கார்ந்திருந்த இளம்பெண் கேட்டாள்.

“ஆமாம்”.

“உங்கள் பெயர்?”

“சாந்தா..”

”சாந்தா.. ஒரு நிமிடம்..இதை முதலில் முடித்து விடுகிறேன்…”

சில பக்கங்களாக இருந்த கடிதத்தை அவள் படிப்பதைச் சாந்தா பார்த்தாள்.! பெரிய கடிதம்தான்.அவள் பெயர் என்ன?கேட்க அவளுக்கு தைரியமில்லை.

சாந்தாவிற்கு செய்ய எதுவுமில்லை.என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை.அவள் மேஜையில் கோப்புகள் மலையாகக் குவிந்திருந்தன. கோப்புகளில் குறிப்பு எழுதுவது, கடிதங்களை டைப் செய்வது, கோப்புகளை அடுக்குவது, காணாமல் போயிருந்த தாள்களைத் தேடுவது என்று மற்றவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.கடிதத்தை மிக உற்சாகமாக தன் அருகில் உட்கார்ந்திருந்த பெண் படித்துக் கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது.

“சிசிலி..சிசிலி..” பிரிவு அதிகாரியின் குரல் கேட்டது.

கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த அவள், அது தடைப்பட்ட நிலையில் தலையை உயர்த்தி “என்ன சார்…? என்று கேட்டாள். “சிசிலி.. சி-3 கோப்புகள் பற்றி அந்தப் புதிய உதவியாளருக்குச் சொல்லுங்கள்.அந்தப் பிரிவில் முடிக்கப்படாமல் ஏராளமாக வேலை உள்ளது.”

“சரி.சார்..”

சிசிலி மீண்டும் கையிலிருந்த கடிதத்தில் ஆழ்ந்து தன்னை மறந்தாள். வார்த்தைகளுக்கு மணமும், இனிமையும் சில சந்தர்ப்பங்களில் உண்டு என்பது உண்மைதான் சாந்தாவுக்கு பழைய நினைவுகள் வந்தன. மற்றொரு இருக்கையிலிருந்து விமர்சனம் கிளம்பியது.

“ஓ..மேகம், அது இன்று சீக்கிரமாகவே வந்துவிட்டது.!”

அடுத்து இன்னொன்று.

“இல்லை.அது மேகமில்லை. மயில்தான்… மயில் செய்தி .. தபால்காரர் மயிலாக இருக்கலாம்…. காளிதாசனின் நாட்களிலான மேகமில்லை.”

சிசிலி இதையெல்லாம் கேட்டிருக்க வேண்டும்.சக பணியாளர்களின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் சில நிமிடங்களுக்கு முன்னால் தபாலில் வந்த கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.பதட்டம்,ஒருவித ஈர்ப்பு,வெட்கம், மகிழ்ச்சி என்று அவள் முகத்தில் பாவங்கள் மாறிக் கொண்டிருந்தன.

அது காதல் கடிதமா?அவள் திருமணமானவளா?அவள் கணவனிடமிருந்து வந்த கடிதமா?அவள் கணவன் வெகுதொலைவில்,வெளிநாட்டில் வேலை செய்கிறாரா? இல்லை. அப்படியானால் சிசிலி இந்த மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டாள்.திருமணமான பிறகு காதலனிடமிருந்து வரும் கடிதத்தைப் படிக்கிறாளா ?இல்லை.அவளைப் பார்த்தால் திருமணமானவள் போல இல்லை என்ற முடிவுக்கு சாந்தா வந்தாள்.

“தாமஸ், தபால் இலாகா மனிதர்கள் மடையர்கள்.அவர்கள் தங்களுக்கு வரும் கவர்களின் கனத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை….”

“இல்லை,இல்லை.அவர்கள் மிகவும் கவனமானவர்கள்.அதைப் பற்றி உங்களுக்கு என்ன சந்தேகம் பாலன்?”

“பதினைந்து ,இருபது பக்கங்களிலான வழக்கத்தை மீறிய எடையில் கனமான கடிதங்கள் எப்படிச் சரியான முகவரிக்கு வருகின்றன. அபராதம் கூட இல்லையே!”

“பொறாமைப்படாதீர்கள்.பல பக்கங்கள் எழுதுகிற மாதிரி எல்லாருக்கும் கடிதங்கள் வராது.சிலருக்கு,சில ஆண்கள் ,பெண்களுக்கு மட்டும்தான் அப்படி ஓர் அதிர்ஷ்டம்!.”

சிசிலி இந்த வகையான மோசமான விமர்சனங்களைக் கேட்டிருப்பாளா? அல்லது அவளைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரணக் கடிதம் என்று இவர்கள் பேசுவதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் இருப்பாளா? ஒன்று மட்டும் நிச்சயம். அவள் தன் கையில் இருந்த கடிதத்தில் மிக ஆழ்ந்து போயிருந்தாள்.

கடிதத்தைப் படித்து முடித்த பிறகு கவனமாக மடித்து அதைத் தன் கைப் பையில் வைத்தாள்.சாந்தாவைப் பார்த்து மலர்ச்சியாகச் சிரித்தாள்.

“சாந்தா.. உங்கள் பெயர் சாந்தா என்றுதானே சொன்னீர்கள்?”

“ஆமாம்…”

“இதற்கு முன்னால் எந்த அலுவலகத்திலாவது வேலை செய்து இருக்கிறீர்களா?’

“இல்லை..இதுதான் என் முதல் வேலை.பல வருஷங்களுக்கு முன்னால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன்…”

“சரி. நீங்கள் நன்றாக வேலையை கற்று முடிக்கும் போது வேலையை விட்டுப் போகும் சமயமாகிவிடும்…”அவள் அந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த நாளை நினைத்துப் பார்க்கத் தயாராக இல்லை.

எத்தனை பேர் திருமணப் பேச்செடுத்து வந்தார்கள்..ஒன்றும் கை கூடவில்லை. பேச்சு வார்த்தை எங்கேயோ நின்று போய்விட்டது. சாந்தாவின் பல தோழிகள், கூடப்படித்தவர்கள்,என்று எல்லாருக்கும் திருமணமாகி விட்டது.இரண்டு, மூன்று குழந்தைகளுக்கும் தாயாகி விட்டனர் !அவர்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும்போது நொந்து போவாள். தன் கூடப்படித்தவர்களின் குழந்தைகளுக்கு அவள் ட்யூஷன் எடுக்கிறாள். தனக்குப் பிறக்காத குழந்தைகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்ப்பாள். இங்கு எல்லாருக்கும் தெளிவான,குறிப்பிட்ட தேவை இருக்கிறது.
ஐம்பது அல்லது அறுபது பவுன்…

ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம்….

மாடியோடு கூடிய வீடு…

“இந்த கோப்பையும் சரிபாருங்கள்.. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை… குறிப்பு புத்தகத்தையும்,கடிதப் போக்குவரத்து கோப்பையும் சேர்த்துப் பாருங்கள், அவை இரண்டும் இதோடு தொடர்புடையவை..”

சிசிலி மேஜையில் இருந்த கோப்பை எடுத்துத் தர சாந்தா அதைப் பார்க்கத் தொடங்கினாள். தவறான மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.ஆறு குழந்தைகளுக்குத் தாயான ஒரு விதவைப் பெண்ணின் விண்ணப்பம் அது..அவளுடைய மூத்தமகன் மூட்டைதூக்கும் தொழிலாளி.அவனுக்கு இப்போது மன நிலை சரியில்லாததால் காப்பகத்தில் இருக்கிறான். பெண்கள் எல்லோரும் திருமண வயதைக் கடந்தவர்கள்.ஒருத்தி நன்றாகப் படிக்கிறவள்.அவள் படிப்பிற்கு நிதியுதவி கேட்டுத்தான் முதலமைச்சரிடம் விண்ணப்பம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் அது தலைமைச்செயலகம் போனது; ஒரு வாரத்திற்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி அது முதலமைச்சர் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வந்தது.ஆனால் அந்த முதலமைச்சர் மாறி புதிய முதலமைச்சர் இப்போது. இன்னும் அந்த கோப்பு நூற்றுக்கணக்கான கோப்புகளோடு அங்குதானிருக்கிறது.
அந்த கோப்பின் குறிப்புகளையும்,கடிதங்களையும் படித்த பிறகு சாந்தா பல பிரிவுகளுக்குப் போய் விசாரிக்க வேண்டியிருந்தது. பலதுறை தலைமை அதிகாரிகளிடமிருந்து வந்த கடிதங்கள் அந்த விதவைக்கு உதவ முடியாமல் போன தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியிருந்தன.சில அதிகாரிகள் அந்த மாதிரியான உதவிக்குச் சட்டத்தில் முன்னுதாரணம் இல்லை, அப்படி ஓர் ஒதுக்கீடுமில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்த விதவைப்பெண் இப்போது உயிரோடு இருப்பாளா என்று சாந்தாவுக்கு சந்தேகம் வந்த்து.

மாலை விடுதிக்கு வந்த பிறகும் அந்த அதிர்ஷ்டமற்ற , பரிதாபத்திற்குரிய விதவைப் பெண்ணின் நினைவு அவளுக்கு வந்தது. மனப் பாதிப்பிற்கு உள்ளான மகன், திருமணமாகாத பெண்கள்…

அவள் அறைத்தோழி வெளியே கிளம்பத் தயாராக இருந்தாள்.அவளுக்கு ஏதோ வேலை இருக்கிறது.

“திருவனந்தபுரத்திற்கு இப்போது இரண்டாம் தடவையாக வந்திருக்கிறேன். முதல் தடவை தேர்வு எழுத வந்தேன்.காட்டன்ஹில் உயர்நிலைப் பள்ளியில்.தேர்வு செய்யப்பட இருபதாயிரம் கொடுக்க வேண்டும் என்று யாரோ சொன்னார்கள்.அவ்வளவு பெரிய தொகையை நான் எப்படிக் கொடுக்க முடியும்? ” என்று அவள் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் சாந்தா பேசினாள்

மறுநாள் சாந்தாவை அழைத்துப் போய் ஊர்சுற்றிக் காட்டுவதாகவும்,அது அவளுக்கு உதவியாக இருக்குமென்று அறைத்தோழி சொன்னாள்.

விடுதியின் வாசல் கேட் அருகே அறைத்தோழி யாருக்காகவோ காத்திருப்பதைச் சாந்தா பார்த்தாள்.சில நிமிடங்களுக்குப் பிறகு ஓர் இளைஞன் பைக்கில் வந்து அவளை அழைத்துக் கொண்டு போனான்.

சாந்தாவுக்கு சதீஷின் ஞாபகம் வந்தது.அவன் தன் மனைவியோடு வண்டி யில் கொச்சின் நகர வீதிகளில் சுற்றிக் கொண்டிருப்பான்.இல்லை.நான் அவனிடம் குறை கண்டுபிடிக்கக் கூடாது.விதிகள் போடாமல்,பெரிய அளவு வரதட்சணை வாங்காமல் எந்த இளைஞனும் திருமணம் செய்து கொள்ள மாட்டான்…அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.அன்புள்ள சதீஷ்.. வாழ்த்துக்கள்.. நீ என்னை மறந்திருப்பாய். குறிப்பாக உன் தேனிலவின் போது.. ஆனால் இந்த சாந்தா உன்னை மறக்க மாட்டாள்.. இல்லை. என்னால் முடியாது….நான் மறக்க மாட்டேன்…”
நகரத்தின் இந்த நெரிசலுக்குள்ளும் சாந்தா தனிமையாக இருப்பதை உணர்ந்தாள். அவள் தனியாக உட்கார்ந்தபோது மனம் அவள் குடும்பத்தை நினைத்து வருந்தியது.அவளுடைய கடிதங்களுக்காகவும் ,மணியார்டருக் காகவும் காத்திருக்கும் அவர்கள்..

அன்று வழக்கம் போலவே கழிந்தது.அவள் அறிவிப்பு பலகையில் இடம் பெற்றிருந்த வாசகங்களைக் கூர்ந்து பார்த்தாள்.”முழுமையான முகவரியற்ற கடிதங்கள் …’அவளை ஆச்சர்யப்பட வைக்கும் விதத்தில் சில கடிதங்கள் அங்கிருந்தன.அவள் அந்த முழுமையற்ற முகவரிகளைப் படித்தாள்.

பாலகோபாலன்..

அந்தோணி டிக்ரூஸ்..

சுரா பீவி..

சாந்தாதேவி..

அந்த நான்காவது கடிதம் அவள் கவனத்தை ஈர்த்தது.நான் வெறும் சாந்தா தான்.சாந்தா தேவியில்லை…இல்லை,இது நானில்லை.தவிர தபாலில் அனுப்புமளவுக்கு எனக்கு யாரிருக்கிறார்கள்?

மாலை ஐந்துமணி வரை அவள் அந்தக் கடித்த்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.அது சதீஷின் கடிதமாக இருக்குமா?.இல்லை,அவன் எழுதினால் கூட சாந்தா என்பதற்குப் பதில் அவன் ஏன் சாந்தா தேவி என்று எழுத வேண்டும்? டுடோரியல் காலேஜில் அவள் கூட வேலை செய்த மனோகரன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தேவி என்று அடை மொழி கொடுத்துப் பேசுவான். ஸ்ரீதேவி அவனைக் கேலிசெய்தாள்.

“மனோகரன் சார் எல்லோரையும் தேவியாக்கிவிடுவார் !நீங்கள் தேவி உபாசகராக இருக்க வேண்டும்..”

“ஆமாம்,உண்மைதான். நான் தேவியை, ஸ்ரீதேவியை உபாசிப்பவன்..”

இந்தக் கடிதம் அவனுடைய அப்பாவி விளையாட்டா?

அலுவலகம் முடிந்து திரும்பும்போது அறிவிப்பு பலகையில் அந்தக் கடிதம் இருந்தால் அதை எடுத்துக் கொண்டுபோவது என்று அவள் முடிவு செய்தாள்.

“அந்த ஏழை விதவைக்காக நாம் ஏன் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் முதலமைச்சர் நிதியிலிருந்து பரிந்துரை செய்யக்கூடாது?”அவள் சிசிலியிடம் கேட்டாள்.

“உண்மைதான். செய்யலாம். நானும் அந்தக் கோப்பை ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.நீங்கள் அதைக் குறிப்பாக எழுதி அனுப்புங்கள்….ஆனால்..”

“ஏன்?…ஆனால்.. ?”

“சில கேள்விகள் கேட்டு அது திரும்பவும் வரலாம்.இரண்டு வருடங்ளுக்கு முன்னால் அந்த விண்ணப்பதைக் கொடுத்த விதவைப் பெண் இன்னும் உயிரோடு இருக்கிறாளா?அவளுக்கு இப்போதும் அந்த நிதி தேவைப்படுமா? முன்னாள் முதலமைச்சரிடம் கொடுத்த மனுவை புது முதல்வர் ஏற்பாரா..? இந்த விண்ணப்பம் முன்மாதிரியாகிவிடாதா? முதலமைச்சர் எல்லா விதவைகளுக்கும், எல்லா மனுக்களுக்கும் நிதியுதவி செய்ய முடியுமா? இம்மாதியான மோசமான முன்மாதிரியை வழங்கலாமா? இந்த மாதிரிக் கேள்விகள் வரலாம்! நீங்கள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும்!”.

சாந்தாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது .திடுக்கிட்டும் போனாள்.

அரசின் செயல்பாடுகள் நத்தை வேகத்தில் ஊர்வது மனிதாபிமானமற்ற நிலை என்று சாந்தா நினைத்தாள்.உண்மைதான்,அவளுடைய அரசு வேலை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.அரசின் உணர்வற்ற நிலைகள் பற்றி நான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று சோகமாக நினைத்தாள்.
அலுவலக நேரம் முடிந்த பிறகு ,ஒரு வழியாகத் தனியாகக் கிளம்பினாள் மரப்பலகை நடைபாதையை நோக்கி..

சாந்தா தேவியின் கடிதத்தை அறிவிப்பு பலகையிலிருந்து எடுத்த போது அவளுக்கு ஒரு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. வேறு யாருக்கோ வந்த கடிதத்தைத் திருடுவது சரியா?அந்தக் கடிதம் தன் பெயரில் இருக்கிறது என்று தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டாள். சுராதேவிக்கும், பாலகோபாலனுக்கும் வந்த முழு முகவரியில்லாத கடிதங்கள் இப்போது அறிவிப்புப் பலகையில் இல்லை. அவள் சாந்தாதேவி கடிதத்தை எடுத்து விட்ட பிறகு இன்னும் ஒரு கடிதம் பலகையில் இருந்தது;அது அந்தோணி டிக்ரூஸ் கடிதம். அவர் ஆண், தனியாக இருப்பதில் தப்பில்லை என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டாள். அந்தோணி டிக்ரூஸ் அங்கு தனியாக இருப்பதால் கவலைப்படமாட்டார். சாந்தா தனக்குள் சிரித்துக் கொண்டாள்…

அறைத்தோழி தன் ஆண் சிநேகிதனுடன் வெளியே போன பிறகுதான் அவள் அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள்.ஒரு கணம் தயங்கினாள். இல்லை,நான் இதைப் பிரிக்கக் கூடாது.வேறு யாருக்கோவான கடிதம் என்னும் போது அதை நான் அறிவிப்புப் பலகையில் வைப்பது தானே சரி? அவள் கடிதத்தின் மேலுறையைச் சிறிது தண்ணீரில் ஊறவைத்தாள்.சில நிமிடங்கள் கழிந்ததும் எந்தத் தொல்லையுமில்லாமல் கடிதத்தைப் பிரிக்க முடிந்தது….
ஜன்னல் வழியாக சென்ட்ரல் ஸ்டேடியம் தெரிந்தது. பெண்கள் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.பயிற்சியை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராயினர்.

அவள் மீண்டும் அந்தக் கடிதம் பற்றி யோசித்தாள்.,உண்மைதான்,கடிதம் எழுதுவதும்,பெறுவதும் சந்தோஷமான விஷயங்கள்.சிசிலி தினம் தபாலில் தனக்கு வரும் கடிதங்களைப் படித்து எவ்வளவு பரவசமாகிறாள்.அவள் கண்கள் மின்னும்.இரவில் அறையில் தனியாக வருந்தும் போது பாதிக்கும் எல்லாக் கவலைகளையும் எழுதுவது.. விரக்தியான மனதின் கவலைகளைக் கொட்டிவிட்ட பிறகு சுமை நீங்கி மனது அடையும் அமைதி…. இல்லை, அவளுக்கு அப்படி ஓர் அதிர்ஷ்டமில்லை.அவள் சதீஷைக் காதலித்த போது கடிதங்கள் எழுதுவதும், பெறுவதுமான ஒரு நம்பிக்கை வைத்திருந்தாள். இப்போது அந்த துறைமுக அதிகாரி என்னைப்பற்றி நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்.அதுவும் அழகான மனைவி கிடைத்துவிட்ட பிறகு.. சோகமாக இருந்தது அவளுக்கு.

கடிதத்தை தொல்லையின்றிப் பிரித்த பிறகு அவளுக்குள் ஒரு விதத் துடிப்பு ஏற்பட்டது.கடவுளே என்று சொல்லிக் கொண்டாள்.

கடிதத்தைப் பார்த்தபிறகு அவளுக்குத்தோன்றிய முதல் எண்ணம்;அழகான கையெழுத்து.

“அன்புள்ள சாந்தாதேவி,
நான் இப்படிக் கூப்பிடுவதால் கோபப் படவேண்டாம். இப்படிக் கூப்பிடுவதற்கு ஒரு வழிப்போக்கனுக்கு உரிமையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை.தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்….
(அருமையான கடிதங்கள். ஒருவனுடைய கையெழுத்தாலே அவனுடைய குணங்களைத் தெரிந்து கொள்ளமுடியுமென்பார்கள்.இது எழுத்தழகியலா? இல்லை, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.கடிதம் எழுதியவர் நன்கு படித்தவர் என்று கடிதத்தைப் பிரித்தபிறகு தெரிகிறது..அவர் யார்? இளமை யானவரா?அழகாயிருப்பாரா?அவருடைய முகவரி கடிதத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்படவில்லை.கடைசியில் எழுதியிருப்பாரோ? இல்லை.”தேவியை ரசிக்கும் ஒருவர்’—அதிலிருந்து எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை… அவள் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.)

“கடிதத்தைப் படிக்கத் தொடங்கியவுடனே நான் முட்டாள் என்று முடிவு செய்து விடவேண்டாம்.! நான் இந்த வரிகளை எழுதுவதற்கு முன்னால் சில நாட்கள் கவனமாகவும்,ஆழமாகவும் யோசித்தேன். எனக்கு உங்கள் முழு முகவரி தெரியாது.பெயர் மட்டும் எப்படித் தெரிய வந்தது என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் உங்கள் சினேகிதியோடு போனபோது பின் தொடர்ந்தேன் சினேகிதி இந்தப் பெயர் சொல்லி உங்களை அழைப்பதைக் கேட்டேன்.இரண்டொரு வார்த்தைகள் பேச உங்களைத் தனியாகச் சந்திக்கப் பெரிதும் விரும்பினேன்.. துரதிர்ஷ்டவசமாக நீங்கள் எப்போதும் உங்கள் சினேகிதியோடுதான் இருக்கிறீர்கள்.

(இது எனக்கு வந்த கடிதமா ? சாந்தா சந்தேகப்பட்டாள். அப்படியும் இருக் கலாம் என்பதை ஒதுக்கி விடமுடியாது. அந்த எண்ணம் அவளை மகிழ்ச்சிப்படுத்தியது.)

“உங்களுடைய தேர்ந்தெடுத்த ஆடைகள், ராஜ பரம்பரைக்குரிய நடை, உங்கள் நளினம், மென்மையான பேச்சு ,,இத்யாதி..இத்யாதி உங்களைப் பெரிய கூட்டத்திலும் தனியொருவராக அடையாளம் காட்டிவிடும். பாளையம் ஜங்ஷனிலும், பி.எம்.ஜி.ஜங்ஷனிலும் சாலையைக் கடக்க நீங்கள் காத்திருந்தபோது நான் பயத்தோடு உங்கள் அருகில் வந்தேன்.மிக அருகில் உங்களைப் பார்த்ததும், உங்கள் இனிய குரலைக் கேட்டதும்.. எனக்கு மகிழ்ச்சியளித்தது.
“என்னை ரோட்சைட் ரோமியோவாக நினைத்து விட வேண்டாம்.முதலில் நான் அந்த வயதுடையவனில்லை.இந்தியா காஃ பி ஹவுசுக்கு அடிக்கடி வருகிற கல்லூரி மாணவன் அல்லது ஆண் சிநேகிதன், அல்லது ஒரு ஹிப்பி என்று எந்த வகையறாவைச் சேர்ந்தவனுமில்லை.என்னைப் பொறுத்தவரை இது உணர்ச்சி வசப்படும் செயலுமில்லை.
“அநேகமாய் என் இளம் வயதில் நான் படித்த பல கதைகளின் விளைவாக இது இருக்க வேண்டும். ஒரு இளம் பெண் அல்லது பெண்மணி என்று யாராவது என்னை முழுவதுமாகப் புரிந்து கொண்டவர்கள் வருவார்கள் .நண்பர்களாவார்கள் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் என்னிடமுண்டு.அது என் அறிவு மலர்ச்சியாக இருக்கலாம்… சாந்தா, தயவு செய்து யோசியுங்கள். இந்த மாதிரியான எண்ணப் பிடிப்பு நம் எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறதல்லவா?இப்படி ஒரு பிடிப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்துவிடும் தானே?
“மன்னித்து விடுங்கள்.இது எனக்கு அடிக்கடி நிகழ்கிறது.வித்தியாசமான போக்கில் நான் சிந்தித்துக் கொண்டே போகலாம்…..

“இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளும்போது சடங்குகள் செய்பவரின் பொய்ச் செயல்களைப் பார்த்து எனக்கு சிரிக்கத் தோன்றும்; திருமணத்தில் புதுமணத் தம்பதிகளை மற்றவர்கள் ஆசீர்வதிக்கும் போது அவர்களுக்கு என்ன வகையான எதிர்காலம் காத்திருக்குமோ என்று என் மனம் துக்கப் படும்.—இவையெல்லாம் ஒரு பைத்தியக்கார மனிதனின் குறியீடுகள் என்றால் நான் அந்த வகைதான்… நான் பைத்தியகாரன்தான்.

(இது வெறும் காதல் கடிதமல்ல; பைத்தியக்காரத்தனமானது,குப்பை என்று ஒதுக்கி விடமுடியாது என்று சாந்தா நினைத்தாள்.)

“அண்மையில் என் நண்பனின் மகன் திருமணத்திற்குப் போனேன்.நாங்கள் இருவரும் இருபது ,இருபத்தி ஐந்து வருட நண்பர்கள். திருமணம் சர்ச்சில்.. சாந்தா..அந்த வைபவத்தின் போது நான் கேட்ட வசனங்களைச் சொல்லட்டுமா?
“உங்கள் வீட்டில் நீங்கள் வாழும் வாழ்க்கை திராட்சைகள் நிறைந்த தேவதாரு தோட்டம் , உங்கள் குழந்தைகள் ஆலீவ் கன்று போன்றவர்கள்…

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் “முட்டாள்தனம் ’என்று கத்திவிடக் கூடிய நிலையில் இருந்தேன்.
“நீங்கள் செய்யும் எதுவும் மற்றவர்களுக்கு அர்த்தமற்றதாகத் தெரியும். உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது..நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவி நன்றி உணர்வாகிவிடும்…உங்கள் குழந்தைகளும் சேர்த்துத்தான் சில சமயங்களில் நன்றியுணர்வு உங்களுக்குக் கிடைக்கும் லாப ஈவாகலாம். அப்படித் தான் ஒரு புகழ் பெற்றஎழுத்தாளர் சொல்லியிருக்கிறார்…அது லாரன்ஸா ? மாயுகமா? நாம் நம் பெற்றோர்களுக்கு உண்மையாக இருக்கிறோமா? நம் குழந்தைகள் நம்மிடம் உண்மையாக இருப்பார்களா? உண்மை இதுதான்; மனிதர்கள் சபிக்கப்பட்டவர்கள்; குறிப்பாக ஆண்கள்… தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே வெளியாட்கள் போலத் தனியாக விடப்பட்ட விதியுடையவர்கள்.!

“எது உண்மைத்தன்மை?அது சிலசமயம் மட்டும் தங்கும் ஓர் உணர்ச்சி அல்லவா?”

“ஆண்-பெண் உறவுநிலையின் தளமென்ன? புணரின்பம் என்பது கூட குறுகிய நேரம்தான். அது சிலிர்ப்பூட்டுவதுதான். எல்லாவற்றையும் மறந்து இருவர் இணையும் போது அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்கின்றனர்.அது வெறும் ஓர் உணர்ச்சி.. நிலையில்லாத ,கணத்தில் மறைகிற இயல்புடைய உணர்வு. அதன் பிறகு இருவரும் இரண்டு வித்தியாசமான மனிதர்கள்தான், அவரவர் வழியைப் பார்த்தும் கொள்ளும் இரண்டு பெரிய “நான்”கள்… ஒருவருக்கொருவர் பரஸ்பர வெறுப்பு கொண்டவர்கள்.

“இல்லை..இந்த கடிதத்தை மேலும் நீட்டிக்க நான் விரும்பவில்லை. நான் உங்களிடம் சொல்ல வேண்டியது …”
“என் முழுமுகவரியை இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிடாததால் நீங்கள் ஒன்று செய்யலாம். நீங்கள் என்னிடம் பேச விரும்பினால் என்னைச் சந்திக்கும் வழியைச் சொல்கிறேன். திங்கள், அல்லது புதன் அல்லது வெள்ளி.. செக்ரடேரியட்டிலிருந்து உங்கள் விடுதிக்குச் செல்லும் போது பேக்கரி ஜங்ஷனில் சில கணங்கள் நின்று யாரையோ தேடுவது போலச் சுற்றிவரப் பாருங்கள். சில கணங்களுக்குள், அரை நிமிடத்திற்குள் நான் அங்கிருப்பேன்.

திங்கள்,அல்லது புதன் அல்லது வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 5.30 –5.45 க்குள்.. “

சாந்தா அன்று செவ்வாய்க்கிழமை என்பதை உணர்ந்தாள்.எப்போது அவர் இந்தக் கடிதத்தை எழுதினார்?நான்கு நாட்களுக்கு முன்பு போஸ்ட் செய்திருக்க வேண்டும்.அதுவும் இந்த நகரத்திலிருந்துதான் போஸ்ட் செய்திருக்க வேண்டும். சாஸ்தமங்கலத்திலிருந்து போஸ்ட் செய்யப்பட்டு இருக்குமா? இல்லை,தபால் அலுவலக முத்திரை தெளிவாக இல்லை.ஒரு விஷயம் மட்டும் உறுதி.அவள் பாளையம் அல்லது பி.எம்.ஜி . ஜங்ஷன் பகுதிக்குப் போனதேயில்லை .அதனால் இந்தக் கடிதம் எனக்கானதல்ல என்று நினைத்தாள்.

அவளுக்கு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது; நான் இந்தக் கடிதத்தை படித்திருக்கக் கூடாது…அதை திரும்ப ஒட்டி மீண்டும் அந்த அறிவிப்பு பலகையில் அடுத்த நாள் வைத்து விடவேண்டும் என்று நினைத்தாள். இன்னொருவரின் கடிதத்தை நான் எடுத்தது தவறு…அது வேறு யாருக்கோ உரியது..வெட்கமின்றி, அதைப் பிரித்துப் ,படித்துப் பார்த்தது தவறு.
அறைத் தோழி ஜெயலட்சுமி வர இன்னும் நேரமிருக்கிறது.அவளும் ,ஆண் சிநேகிதனும் முடிவேயிலாத சிறு பேச்சில் ஆழ்ந்திருப்பார்கள்…அவன் வராத நாட்களில் அவள் இப்படிச் சொல்வாள்:

எஸ்.ஆர். இன்று வரமாட்டார். டூர் போயிருக்கிறார்.”

அவள் அப்போது எவ்வளவு மனம் தளர்ந்திருப்பாள். காத்திருப்பதிலான வேதனை..
நான் இன்னொரு தடவை அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன்.சாந்தா நினைத்தாள்.

அப்போதுதான் கீழேயிருந்த கே.பி.. என்ற இரண்டு எழுத்துக்களைப் பார்த்தாள். கே. பிரபாகரன் என்றிருக்குமா அல்லது கொச்சு பத்மநாபன்? அல்லது கே.பவுலோஸ்..?

அதை இன்னொரு முறை படித்துவிட்டு கவனமாகக் கடிதத்தை ஒட்டினாள்.

அடுத்தநாள் யாரும் அருகில் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு அந்தக் கடிதத்தை அறிவிப்புப் பலகையில் வைத்துவிட்டாள்.அது தனியாக இருந்த “அந்தோணி டிகுரூஸ் கடிதத்தோடு சேர்ந்து கொண்டது. திரும்பவும் அவருக்கு சாந்தாதேவியின் இனிய துணை கிடைத்து விட்டது.

சாந்தா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.என்றாலும் மனம் லேசாக வலித்தது..

கான்டீனுக்குப் போய் தேநீர் குடித்து விட்டுத் திரும்பியபோது அவள் அறிவிப்பு பலகையைப் பார்த்தாள். சாந்தா தேவியின் கவர் இன்னும் அங்கேயிருந்தது.

“உங்களுக்கென்ன ஆயிற்று? ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே?” சிசிலி இரண்டு மூன்று தடவை கேட்டாள்.
நீண்ட நேரச் சிந்தனைக்குப் பிறகு அந்தக் கடிதத்தை எடுத்து தன்னோடு வைத்துக் கொள்வதென்று சாந்தா முடிவு செய்தாள்.ஞாபகார்த்தமாக முகம் தெரியாத நடுத்தர வயது மனிதன்.. கே.பி…தனிமைச் சிறையாளி ….மிகவும் கொடுமையானது..

“சி-3 பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தன்னை அணுகும் எவருக்கும் அரசாங்கம் கொடை கொடுக்க வேண்டுமா?” என்று பிரிவு அதிகாரி கேட்டார்.

அவர் என்ன சொல்கிறார் என்று சாந்தாவுக்குப் புரியவில்லை.

அவர் பேசுவதைப் புரிந்து கொண்ட சிசிலி ”சார்.. தயவுசெய்து எதுவும் எழுதி எங்கள் முயற்சியை வீணாக்கி விட வேண்டாம்..கோப்பை அமைச்சருக்கு அனுப்பி வைப்போம்…இது அந்த ஏழை விதவையின் மனு..” என்று பதில் சொன்னாள்.

முன்னாள் முதல்வரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் வேண்டுதலை வைத்த விதவைப் பெண் என்று நினைத்து சாந்தா தனக்குள் சிரித்துக் கொண் டாள்.

“தேவையற்ற ,தவிர்க்கக் கூடியதான அரசின் செலவிற்கு நாம் காரணமாக இருந்தோம் என்று அரசு நம்மைக் கண்டனம் செய்யக் கூடாது..”

பிரிவு அதிகாரி அந்தக் கோப்பில் எதையோ எழுதி விட்டு பியூன் மூலம் செயலாளருக்கு அனுப்பினார்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து சாந்தா வெளியே வந்த போது இரண்டு கடிதங்களும் அங்கில்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். சாந்தா தேவி மற்றும் அந்தோணி டிகுரூஸ் இரண்டு பேரும் சேர்ந்து போய் விட்டிருந்தனர்.! கைவிடப்பட்ட அறிவிப்புப் பலகை. அந்த காலியான அறிவிப்புப் பலகை கைவிடப்பட்ட பசும்புல் நிலம்.. அல்லது பூங்கா..ஏக்கமும் ,காத்திருப்பும் நிறைந்த சாஸ்வத அடையாளம் என்று பலவற்றை எனக்கு ஞாபகமூட்டியது.
சாந்தா தன்னையே கடிந்து கொண்டாள்… முட்டாள்…. நீ அந்தக் கடிதத்தை மீண்டும் அறிவிப்புப் பலகையில் வைத்திருக்கக் கூடாது… இல்லை.. நீ திரும்பவும் வைத்திருக்கக் கூடாது..முட்டாள்!”..

திடீரென இன்று வெள்ளிக் கிழமை என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது… திங்கள்….புதன்…வெள்ளி…

பேக்கரி ஜங்ஷன். மாலை 5.30 –5.45 மணிக்கு இடையே.

நான் மிகத் தாமதமோ, என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் வருத்தமாக..அவள் டவரின் கடிகாரத்தைப் பார்த்தாள். ஐந்து மணிதான் ஆகியிருந்தது. நேரம் நிறைய இருக்கிறது. நம்பிக்கையும்தான்..

அந்த முகம் தெரியாத மனிதனைப் பார்த்துத் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்று சாந்தா முடிவு செய்தாள். வித்தியாசமான கடிதம் எழுதிய விசித்திரமான மனிதனைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு சந்தோஷம் தந்தது. அந்த சாகசமான செயல் தரப்போகும் சிலிர்ப்பை நினைத்து மகிழ்ந்தாள்.

“ஜெயா.. பேக்கரி ஜங்ஷன் எங்கேயிருக்கிறது..?”தன்னோடு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தோழியிடம் கேட்டாள்.

“ஏன் ? எதற்காக ..?”

“என் உறவினர் ஒருவர் அங்கிருக்கிறார்… பேக்கரி ஜங்ஷன் அருகில்..”
“வீட்டின் பெயர் என்ன… ? வீட்டு எண் என்ன….?”

“எனக்குப் பெயர் மறந்து விட்டது…ஏதோ ’மந்திரம்” என்று..பார்த்தால் ஞாபகம் வந்து விடும்..”

“அந்த வழியாகப் போக வேண்டும். சில நூறு மீட்டர்கள்..பிறகு வலது புறம் திரும்பிப் போக வேண்டும்… ஐந்து நிமிடத்தில் நீங்கள் பேக்கரி ஜங்ஷன் போய்விடலாம்…”

ஜெயலட்சுமி தன் சிநேகிதனைப் பார்க்கத் தயாரவதற்கு விடுதிக்கு விரைந்தாள்.

சாந்தா தனியாக ,சீரான அடிகள் வைத்து நடந்தாள். விசனம் என்னும் பூவின் மணம் அவள் தனிமை நெஞ்சில் மலரத் தொடங்கியது.
————————————————-
மலையாள எழுத்தாளரான ஜி.என்.பணிக்கர் சிறுகதை, நாவல், கவிதை, விமரிசனம் என்ற பன்முகம் கொண்டவர் .கேரள அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். கறிவேப்பிலை,,ஒரு திவசம் ஒரு யுகம்,மனசே நீ சாக்ஸி , நம்மோடேயும் அவரோடேயும் ,குன்னுகளில் மழ விழும்போல், தஸ்தாவெஸ்கியின் ஜீவசரித்ரம் ஆகியவை மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாகும். இக்கதை Indian Literature Sahithya Academy -Bi –Monthly Journal May—June 2014 இதழில் இருந்து எடுக்கப்பட்டது. Though The Address is Incomplete… என்பது ஆங்கிலத் தலைப்பாகும்.
——————–

 

 கண்ணன் கதையமுது-14 – தில்லை வேந்தன்

 கண்ணன் கதையமுது-14

கண்ணன் வெண்ணெய்ப் பானையை உடைத்தல்

மனைதனில் யசோதை ஓர்நாள்
மத்தினால் தயிர்க டைந்தாள்.
அனைவரும் தத்தம் வேலை
ஆழ்ந்தனர் காலை வேளை.
கனலெரி அடுப்பில் பாலும்
காய்ந்துபின் வழிந்தே ஓட,
வினையினை நிறுத்தி விட்டு
விரைவுடன் இறக்கப் போனாள்.

(வினையினை- செய்து கொண்டிருந்த வேலையை)

இத்தரை உய்ய வந்த
எம்மிறை சின்னக் கண்ணன்
மத்தினைக் கையில் பற்றி,
மனத்தினில் குறும்பு முற்றி,
மொத்தினான் பானை மீது;
முழுவதும் வெண்ணெய், வெள்ளைக்
கொத்தெனக் கொட்டக் கையில்
கொண்டதை ஓடிப் போனான்.

 

யசோதை கண்ணனை உரலில் கட்டுதல்

 

உடைந்தவப் பானை கண்டாள்
உறுசெயல் மத்தைக் கண்டாள்
கடைந்தவெண் ணெய்யும் கீழே
கானக நதியாய்க் கண்டாள்
உடையெலாம் வெண்ணெய் பூசி
ஓடிய மகனைக் கண்டாள்
அடஉனைக் கயிற்றால் கட்டி
அடக்குவேன் கொட்டம் என்றாள்

வரத்தினைத் தரவே வந்த
வண்முகில் பின்னே ஓடித்
துரத்தியே பிடித்த அன்னை
தொல்லையைத் தீர்க்க வேண்டிப்
பொருத்தமாய்க் கயிற்றால் கட்டப்
பூண்டனள் மனத்தில் எண்ணம்
வருத்தமே கொண்ட வன்போல்
மயக்கவே அழுதான் மாயன்.

கயிற்றின் அளவு குறைதலும், பிறகு சரியாக இருப்பதும்

கயிற்றினை உரலில் கட்டிக்
கண்ணனை அருகி ழுத்து
வயிற்றினில் கயிற்றின் மற்றோர்
வார்முனை கட்டப் பார்த்தாள்
முயற்றினில் தோற்றாள், நீளம்
முழுதுமே குறைந்த தாலே
செயற்றிறம் குறைந்து வேர்வை
சிந்தியே மேனி சோர்ந்தாள்

(வார் – கடைகயிறு / churning rope)

(முயற்றினில்- முயற்சியில்)

அன்னையின் துன்பம் போக்க
அன்புடன் பவளம் போன்ற
சின்னவாய் இதழ்வி ரித்துச்
சிந்தினான் குறுந கையை.
முன்னதாய்க் குறைந்த போதும்,
முயன்றிடக் கயிறும் நீள,
என்னவோர் விந்தை என்றே
எண்ணியே கட்டி னாளே

உரலை இழுத்துக் கொண்டு இரண்டு மரங்கள் இடையே தவழ்தல்

மகிழ்ந்த அன்னை சென்றவுடன்
மதலை மெல்லத் தரைதவழத்
திகிரிப் பொம்மை போலுரலும்
திகழ்ந்து பின்னே தொடர்ந்ததுவே.
மகனும் வீட்டுத் தோட்டத்தில்
மருத மரங்கள் இரண்டிடையே
புகுந்தான், உரலும் குறுக்காகப்
போக முயன்று சிக்கியதே

(திகிரிப் பொம்மை – பொம்மைச் சக்கரம்)

 

மருத மரங்கள் முறிந்து, சாப விமோசனம் பெற்ற இரு தேவர்கள் தோன்றுதல்

இழுத்தான் குழந்தை அவ்வுரலை
இரண்டு மரமும் அசைந்தனவே
செழித்த மரத்தின் இடைக்குறுக்காய்ச்
சிக்கிக் கொண்ட கல்லுரலும்
அழுத்தம் கொடுக்க வேரறவும்
ஆடி மரங்கள் வீழ்ந்தனவே
வழுத்தி வணங்கித் தோன்றினரே
வனப்பு மிக்க இருதேவர்

(வழுத்தி– வாழ்த்தி/ போற்றி)

தேவர்கள் வணங்கி விடைபெறுதல்

( நாரதரின் சாபத்தால் மரமான தேவர் இருவர், கண்ணனால் முறிக்கப் பெற்றுச் சாப விமோசனம் அடைதல்)

பண்டை முனிவன் சாபத்தால்
பாரில் மருத மரமானோம்
வண்டி போல உரலுருட்டி
வந்து முறித்த உன்னருளால்
அண்டம் காக்கும் கோபாலா
அடைந்தோம் மீண்டும் எம்முருவம்
செண்டு மலர்த்தாள் பணிந்துநின்றோம்
செல்ல எமக்கு விடைதாராய்!

 

( தொடரும்)

பரிசு மழை- ரேவதி ராமச்சந்திரன்

வேலைக்காரர்கள் அமைய பரிகாரம்

The Maid by c P Hariharan in Tamil Motivational Stories PDF‘மணி எட்டாகப் போறது இன்னமும் இந்த அஞ்சலையைக்  காணோமே. நேற்று சாயந்திரமும் மட்டம் போட்டு விட்டாள்’ என்று எட்டி எட்டிப் பார்த்தேன். 

கடைசியில் ஒன்பது மணிக்கு வந்து எப்போதும் போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தாள். ‘அம்மா கார்த்திகா வீட்டில் விருந்தாங்களிகள் வந்திருக்கு (ஒருமை பன்மை, பால், இலக்கணம் எல்லாம் பார்க்கக் கூடாது அவள் பேச்சில்) அதான் நிறைய பர்த்தன் (பாத்திரங்கள்) இருந்தன. அதனால் லேட் (குஜராத்திக்காரர் வீட்டிலும் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவர்கள் வீட்டிலும் வேலை செய்வதால் நடு நடுவில் ஹிந்தி, ஆங்கிலம் எல்லாம் சரளமாக வரும். நாமதான் ஜாக்கிரதையாகப் புரிந்து கொள்ள வேண்டும்). ‘சரி சரி மேலே பேசாமல் பாத்திரங்களை பிசுக்கு போகத் தேய்’ என்று சொல்லி விட்டு நகர்ந்தேன் .

இப்படி நான்கைந்து நாட்கள் ஓடின. திரும்பவும் புதன் கிழமை அவளைக் காணவில்லை. மறு நாள் வந்து ஒரு கதை. குடித்து விட்டு வந்த இவள் கணவன் இவளை அடிக்கவும், ஜுரம் வந்து படுத்து விட்டதாகவும். மறுபடியும் பத்து நாட்கள் கழித்து விடுமுறை. இப்போது ‘வீட்டாலுங்க வந்ததாக’. இவள் கை சுத்தத்திற்காகவும் வேலை செய்யும் நேர்த்திக்காகவும் இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆயிற்று. எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு மாதம் ஓடி விட்டது. இப்படி நினைத்த போதே அஞ்சலையைக் காணவில்லை. கையைப் பிசைவதற்கு பதிலாக பாத்திரத்தையாவது தேய்த்திருக்கலாம். வேலையாவது முடிந்திருக்கும். ஆனால் சிறிது நேரத்திலேயே வாசல் மணி அடிக்கப்பட்டது. அஞ்சலையைக் காணும் அவசரத்திலேயும், ஆர்வத்திலேயும் கதவைத் திறந்தால் அழகாக புதிய புடவை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.

‘வாங்கோ என்ன வேணும்’ என்று விசாரித்ததேன். 

‘அம்மோவ் நான்தான் அஞ்சலைம்மா’ என்று நாணினாள்.

‘இதென்னடி கோலம்! ஏதாவது விசேஷத்திற்குப் போயிருந்தாயா? சரி புடவையை மாற்றி விட்டு சீக்கிரம் வேலை செய்’ என்று புவனா கூறவும், ‘அம்மா அதன்ன சொல்வாங்க இம் சாரி, நான் இனி வேலைக்கு வர மாட்டேன், வர முடியாது’ என்றாள்.

‘இதென்னடி கூத்து, வேலை செய்யாமல் எப்படி சம்பளம் தருவது?’

‘அம்மா சம்பளம் எல்லாம் பிசாத்து. போன மாச சம்பளம் கூட நீ  தர வேணாம். நீயே வெச்சுக்கோ’ என்றாள் அஞ்சலை பதறாமல்.

‘ஏன் ஏதாவது லாட்டரி கீட்டரி அடித்தாயோ’ என எகத்தாளமாக நான்  கேட்க ‘அம்மோவ் உனக்கு என்ன ஜோசியம் கீசியம்  தெரியுமா! எங்களுக்கு லாட்டரி தான் அடித்துள்ளது. பரிசு மழை கொட்டுகிறது. அதுவும் எவ்ளோ தெரியுமா! பத்து லக்ஷம். சுலுவா (சொளையா) பத்து லக்ஷம்! லக்ஷாதிபதி எப்படிம்மா உன் வீட்டிலே பத்து பாத்திரம் தேக்க முடியும்!’ என்று என் எதிரே பெரிய சவால் வைத்து நாணிக்கோணி நின்றாலும் அவள் நிற்கும் தோரணையில் இப்போதே பணக்காரத்தனம் தெரிந்தது.

உடனே சுதாரித்துக் கொண்டு ‘சரி சந்தோஷம், பணம் பத்திரம். வேணுமானால் இவரை விசாரித்து நல்ல இடத்தில் அதைப் போடு. அல்லது அதை மூலதனமாக வைத்து நல்ல ஒரு தொழில் செய். உனக்கு எதில் ஆர்வம்?’ உனக்கு வீட்டு வேலை தான் தெரியும் ஆகையால் சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டு அவர்களைத் தேவை பட்டவர்களுக்கு அனுப்பலாமே’ என்று என் கஷ்டத்தை மெதுவே அவள் முன் இடைச்சொருகலாக வைத்தேன்.

‘அது சரிப்படாதும்மா, கோலினியில் இருப்பவர்கள் வேலையாளைப் பற்றிலும், வேலையாட்கள் வீட்டாலைப் பற்றியும் என்னாண்டெ வந்து புகார் பண்ணிக்கினே இருப்பாங்க’ என்று நடப்பைச் சரியாகச் சொன்னாள்.

‘சரி சமையல் செய்து எல்லோருக்கும் கொடு’

‘அது சரியான நேரத்திற்கு செய்து தரணும். பேஜாரு’.

‘சரி பூ வியாபாரம் பண்ணு’ என்றதற்கு ‘அம்மோவ் பூ தொலவுள போய் வங்கியாராணும், கட்டனும், கால் கை எல்லாம் நோவு எடிக்கும், பேஜாரான வேலை’ என்று இப்போதே பணக்காரியாட்டம் பேசினாள்.

அப்போது காலனி கீழே ஒரே சத்தம். எட்டிப் பார்த்தால் காய்கறி முருகன் கீழ் வீட்டு கமலாவுடன் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தான். இது தினம் நடக்கும் கூத்துதான். காய்கறி விலையும் அதிகமாகச் சொல்வது, அழுகின காயைக் கொடுப்பது, சரியாக அளப்பது இல்லை என்று முருகன் மேல் குற்றச்சாட்டுகள். உடனே நான் அஞ்சலையிடம் ‘ஏன் நீ காய்கறி வியாபாரம் பண்ணக்கூடாது’ என்றேன்.

‘முருகன் விடமாட்டான்ம்மா’ ‘நான் பார்த்துக்கறேன். எல்லோரிடமும் பேசுகிறேன். எல்லோருக்கும் முருகனிடம் அதிருப்தி இருப்பதால் உடனே ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்றேன். அஞ்சலை ‘சரிம்மா நீ ஏற்பாடு பண்ணிட்டு கூப்பிடு’ என்று எந்த வேலையும் செய்ய மனமில்லாதது போல் நடையைக் கட்டினாள்.

நானும் எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்ததால் முனியம்மா வந்தாள். அவளுக்கு எல்லாம் சொல்லித்தர அதே மாதிரி செய்ய நாட்கள் பிரச்சனையில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் கூட ஆயிருக்காது

‘அம்மோவ்’ குரல் கேட்க அட இது ‘அஞ்சலை குரல் ஆயிற்றே, ஓ காய்கறி கொண்டு வந்துள்ளாளோ’ என்று பார்க்க பழைய மாதிரி அஞ்சலி வந்தாள்.

‘அம்மோவ் நான்தான் உன் வீட்டில் வேலை செய்வேன். எப்படி நீ வேறு ஆலை (ஆள்) வைக்கலாம்’ என்று சண்டை போடுவது மாதிரி கேட்டாள். ‘இதென்ன வம்பு, நீ தான் அன்று வர மாட்டேன் என்று சொன்னாய், நானும் உன் நலன் கருதி வேறு ஆளை வைத்துள்ளேன், இப்ப இப்படி சொல்கிறாய், என்ன ஆச்சு உன் மற்ற வேலை, அந்த பத்து லக்ஷம் லாட்டரி பணம்!’ என்று ஆச்சரியத்துடன் வினவினேன்.

‘எத்தனை பணம் வந்தாலும் உன் வீட்டில் வேலை செய்யவும், உன் காப்பியைக் குடிக்கவும் தான் இஷ்டம்’ என்று சொன்னாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுத்தியது. முனியம்மாக்கு வேறு பதில் சொல்லணும். எனவே மறுபடியும் கேட்டேன் ‘என்ன லாட்டரி பணத்தை கோட்டை விட்டுட்டயா?’

‘அதெல்லாம் இப்ப எதுக்கு. தள்ளு எனக்கு வேலை நிறைய இருக்கு. முனியம்மாவை நிறுத்து’ என்று கட்டளை மேல் கட்டளை போட்டு ஸ்வாதீனமாக உள்ளே நுழைந்தாள். எ

னக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் கேட்டேன் ‘உண்மை என்ன சொல்’.

மெதுவாக சொன்னாள் ‘அது போன வருஷத்து டிக்கெட்!’

      

                                                  

 

“அம்மாவால் இடையூறு” மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

ஆண் என்ன? பெண் என்ன?- Dinamani

எட்டு வயதான கீர்த்தியைப் பள்ளிக்கூட உடையிலேயே ஆசிரியை கீதா அழைத்து வந்தாள். கீர்த்தி வந்த விதத்தில், வாழ்த்தியதில் பண்பாடு தெரிந்தது. துடிதுடிப்பான பல்வரிசையைக் காட்டும் சிரிப்பு, பெரிய கண்கள், அடர்த்தியான சுருட்டை முடி.

மாணவியை அணைத்தவாறு வந்தாள் கீதா மிஸ். கீர்த்தி திடீரென பல வாரங்களுக்குப் பள்ளியை விட்டுப் போவதை விளக்கினாள். இரண்டாவது முறை இப்படி நிகழ்வதால் என்னை அணுகியதாகக் கூறி வெளியேறினாள்.

காரணம் கேட்டபோது கீர்த்தியின் கண்கள் தளும்பியது. சமாதானம் செய்த பிறகு சொன்னாள், அம்மா ரமா மாறுதலுக்காக ஊருக்குப் போய் வரலாம் என்று அவ்வப்போது சொல்வதுண்டு. இந்த முறை 2-3 மாதம் அங்கே இருக்கலாம், பள்ளியை விட்டு விடலாமா எனக் கேட்டாளாம். பொதுவாகச் சனிக்கிழமை என்றால் ஊருக்குப் போவதுண்டு. அப்போதெல்லாம் மட்டும் அம்மா சந்தோஷமாக இருப்பாள், அழவே மாட்டாள். இதைப் பார்த்திருந்ததால் ஒப்புக்கொண்டேன் என்றாள் கீர்த்தி. கீதா மிஸ் சொன்னபடி போன வருடமும் இதையே ரமா செய்தாள். அப்போது ஒரு மாதம் பாடம் விட்டுப் போனது கடினமாக இருந்தது, இப்போதும் அப்படியே நடக்கிறது, இருந்தாலும் அம்மாவிற்காகப் பரவாயில்லை என்றாள் கீர்த்தி.

என்னிடம் தன் அம்மாவைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்றாள். பெற்றோரைப் பற்றியோ அவர்களைக் குறை கூறுவதற்கு அல்ல, மாறாக அவ்வப்போது பள்ளியை விட்டுச் செல்வதைப் பற்றி அறிவதற்கு என்று விளக்கினேன்.

கீர்த்தி என்னுடன் பரிச்சயமாவதற்காக, முதல் ஸெஷனில் அவளைக் கதை சொல்ல, எழுத, படங்கள் வரையச் செய்தேன். உற்சாகமாகச் செய்தாள். அவளுடைய மனக் குழப்பங்கள் இதில் வெளியானது.
நான் இதை எடுத்துச் சொல்ல, தன்னுள் வேதனைப் புதைக்கப்பட்டதைப் பகிர்ந்தாள். இவ்வாறு சங்கடப் பட வேண்டாம் என்றேன். யோசித்த பிறகுச் சரி என்றாள். மேம்படுத்தும் வழிகளை ஸெஷன்களில் தேடலாம் என்றேன்.

வீட்டினருக்குத் தெரிவித்ததில் பாட்டியும் மாமாவும் வந்திருந்தார்கள். கீர்த்தி கூறுவதை ஆமோதித்து, எவ்வாறு ரமாவுக்குப் புரிய வைப்பதென்று புரியாமல் அவஸ்தைப் படுவதைப் பகிர்ந்தார்கள். கீர்த்தியின் மனவேதனைகளைப் போக்குவதற்கு சில ஸெஷன்களும் வீட்டினரின் ஒத்துழைப்பும், தேவை என்றேன்.

வந்தார்கள், கீர்த்தியின் தந்தை மோகனுடன். எட்டாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு, பழங்கள் வியாபாரம் செய்பவர். ரமா பத்தாவது முடித்ததும் அவளுக்குத் தாய்மாமனான மோகனோடு கல்யாணம் செய்து வைத்தார்கள்.‌ ரமாவிற்கு விருப்பமே இல்லை. கணவன் தன்னைவிடக் குறைவாகப் படித்திருந்ததும். பாட்டியே மாமியார் என்பதால் எதிர்ப்பு சொல்ல முடியவில்லை. ரமா மோகன் இடையே பிரச்சினைகள் இருந்தன. கீர்த்தியோ இந்த வயதிலேயே பக்குவமாக இருப்பது பெருமைக்குப் பதிலாகச் சங்கடம் ஏற்படுத்துவதைப் பகிர்ந்தார் மோகன்.

கீர்த்தி தன்னுடைய சந்தோஷங்களை, பிடித்தவற்றை வரிசைப்படுத்துவதை உற்சாகமாகச் செய்தாள். பெற்றோர் சந்தோஷமாக இருப்பது பிடித்திருக்கிறது ஆனால் எப்போதாவது தான் இவ்வாறு என்றாள்.

மோகனிடம் இதைப் பகிர்ந்தாள் கீர்த்தி. கேட்கவே வெட்கமாக இருப்பதாகக் கூறினார். மாற்றுவதற்குத் தயாராக இருப்பதைச் சொன்னார். இதைக் கேட்டிருந்த கீர்த்தி சந்தோஷமாக உட்கார்ந்த இடத்திலேயே குதித்தாள்.‌

ரமா வரவேண்டியதை விளக்கினேன். ஒப்புக்கொண்டார். வந்ததோ கீதா மிஸ். இரண்டு நாட்களாகக் கீர்த்தியை வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ரமா அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்லி வருத்தப் பட்டாள்.

கீர்த்தி ஸெஷனில் இவ்வாறு வகுப்பிலிருந்து விடை பெறுவதும் பல நாட்கள் போகாமல் இருப்பதும் வெட்கமாக இருப்பதாகச் சொன்னாள். படிப்பில் குழப்பம் ஏற்படுகிறது, சினேகிதி நெருக்கம் குறைவதாலும் வருத்தத்தை அளிக்கிறது என்றாள். ஸெஷன்களில் இதை எடுத்துக்கொண்டு பலதரப்பட்ட முறையில் நிலையைக் கையாளுவதைப் பார்த்தோம்.

கீர்த்தியின் இந்த வளரும் பருவத்தில் பெற்றோர்களின் நடத்தையிலிருந்து கற்றுக் கொள்வது ஏராளம். ரமாவின் நடத்தையினால் கீர்த்தியின் சுயமரியாதையில் தடுமாற்றம் தெரிந்ததிருந்ததால் ரமாவின் பங்களிப்பு அவசியமானது.

நாளடைவில் வந்தாள் ரமா. குழந்தையைப் பள்ளி நேரத்தில் வெளியே அழைத்துச் செல்வதற்கான காரணத்தைத் தன் சார்ப்பிலிருந்து விவரித்தாள். திடீரென எங்கேயாவது போவதும் தனக்குப் பிடித்ததைச் செய்வதும் தன் இச்சைப்படி இருப்பதற்கான வழி என்றாள். இவ்வாறு செய்யாவிட்டால் வெறும் இல்லத்தரசியாக, கீர்த்தியின் வளர்ப்பில் நேரம் போகிறது, வாழ்வை இவ்வாறு கழிப்பது பிடிக்கவில்லை என்று கூறினாள். தாயாக மற்றும் மனைவியாக இருப்பது சலிக்கிறபோது ஊருக்குப் போய் விடுவதை வெளிப்படையாகப் பகிர்ந்தாள். பெற்றோர் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கீர்த்தி ஆசைப்படுவதாகக் கேள்விப் பட்டேன் என்றதை அன்னியன் போலச் சொல்லி  மௌனம் காத்தாள்.

தன் மனக்குறை நிலையை விவரிக்கச் சொன்னதும் இல்லற வாழ்க்கை கடிவாளம் போல இருப்பதாகத் தோன்றுகிறது, இல்லத்தரசியானதே பிடிக்கவில்லை என்றாள். இதன் அடிப்படையில் ஸெஷன்கள் நகர்ந்தன.

சிறுவயதிலிருந்து வகுப்பு தோழனான பாலா என்றவனிடம் எந்த பிரச்சினையும் கலந்து பேசி, அவன் பரிந்துரைப்படியே செயல் படுத்துவாளாம். இப்போதும் செய்வதாகச் சர்வசாதாரணமாகக் கூறினாள். ரமாவைப் பொறுத்தவரை அவன் சொன்னால் சரியாக இருக்கும். பாலா, ஊரில் வசிப்பதால், அங்குப் போவது வழக்கமாயிற்று. சந்தேகம் என்றால் ஊருக்கு ஓடி விடுவதுண்டு. அவன் சொல்வதை அச்சு அசலாகக் கடைப்பிடிப்பாளாம்.

புகுந்த வீட்டார் உறவினர்கள் என்பதால் அவளுடைய பெற்றோரிடம் இங்கு நடப்பதைச் சொல்லத் தயங்கினார்கள். பெற்றோரின் தாராள மனதினால் ஊரில் எல்லோரும் அவர்களை மரியாதையுடன் நடத்துவார்கள், ஆகையால் எதுவும் சொல்லவில்லை.‌ இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள் ரமா.‌

ரமாவிற்குக் குறை, பாலா போல் மோகன் இல்லை என்று. பாலா படித்தவன், பெரிய சம்பாத்தியம். மோகன் செய்யும் பழ வியாபாரத்தைச் சொல்லவே வெட்கமாக இருப்பதாகச் சொன்னாள். குடும்பம், குடும்பத்தினரையும் பிடிக்காததால் சொல்வதை நிராகரித்து, மனதிற்குப் பிடித்ததைச் செய்தாள்.

ரமா பிரச்சனைக்கு மூல காரணம், மற்றவர்கள் சொல்வதைத் தானாக யோசித்து பரிசீலனை செய்யக் கற்றுக்கொள்ளாததே. இந்தத் திறன் “க்ரிடிக்கல் தின்க்கிங்” (critical thinking). பாலா சொன்னது போலவே இயங்கினால் யாரை எவ்வாறு பாதிக்கிறது, யாருக்கு லாபமாகிறது என்றதை நினைத்துப் பார்க்கவில்லை. ரமாவிற்கு இல்லற வாழ்வு அமைந்திருந்த விதம் பிடிக்கவில்லை. பழிவாங்கும் வழி, கீர்த்தியைப் பள்ளியிலிருந்து கூட்டிச் செல்வதெல்லாம்; மகளுக்குப் பாதிப்பைப் பொருட்படுத்தவில்லை!

ரமாவின் பெற்றோர், விவரம் அறிந்து ஓடிவந்தார்கள்.‌ இதுவரை நிலைமை அறியாததற்கு வருந்தினார்கள், சுதாரிக்க வழி தேட தங்களால் முடிந்ததைச் செய்ய முயல்கிறோம் என்றார்கள்.‌ ஸெஷன்களுக்காக இருப்பதாகத் தெரிவித்தனர்.

ரமா என்றுமே பாலாவின் சொற்படி மட்டுமே நடந்து கொள்வதாக ரமாவின் பெற்றோரும் சொன்னார்கள். படிப்பை நிறுத்தி விட்டு திரைத்துறையில் சேர அவளைப் பாலா ஊக்குவிக்க, பயந்து விட்டார்கள். ரமாவின் கல்யாண யோசனை இதனாலும் நேர்ந்தது எனக் கூறினார்கள். அவன் குடும்பம் நல்ல நிலைமையிலிருந்தாலும், பாலா பலரைச் சீண்டி வேடிக்கை பார்ப்பதாலும் நக்கல் பேச்சினாலும் ஊரில் எல்லோரும் அவனிடமிருந்து விலகி இருப்பதுண்டு, ரமாவைத் தவிர.

ரமாவுடன் ஸெஷன்களைத் தீவிரப் படுத்துவதுடன் அவள் பெற்றோர் ஊருக்குப் போய் பாலாவிடம் பேசி அவனை அனுப்பி வைத்தார்கள்.

அவன் சனிக்கிழமைகளில் வரச் சம்மதம் என்றதை ஏற்றுக் கொண்டு அவனுடன் ஸெஷன்களைத் தொடர்ந்தேன். எளிதாக ஒத்துழைப்புத் தந்து விஷயங்கள் புரிந்து செயல் பட்டான். ரமாவின் ஒத்துழைப்பு குறைந்தே இருந்தது. தன் பரிந்துரைகள் இத்தனை இன்னல்களைத் தருவதைப் புரிந்து வேதனை கொண்டான் பாலா. இதுவரை தன் செயலால் எவ்வாறு பாதிப்பு என அறியாததால் தொடர்ந்து செய்தேன் என்றான். அவன் செயல்பாட்டை மாற்றப் பல ஸெஷன்கள் ஆகின. ரமா அவனையே நம்பி இருந்ததால் அந்த மாற்றங்களுக்கு அவன் ஒப்புக்கொண்டான்.
இவையெல்லாம் நடந்துகொண்டு இருக்கையில் மோகன் கீர்த்தியுடன் அதிக நேரம் கழிக்க வேண்டும் என்று ஸெஷனில் முடிவு செய்தோம். வியாபார வேலைகளில் குடும்பத்தினரையும் சேர்த்துச் செயல்படுத்த முடிவானது.

கீர்த்தி ஸெஷனில் பள்ளிக்கு இடைவிடாமல் போவது சாத்தியமா எனக் கேட்டதற்கு, சாத்தியம் எனச் சொல்லி வீட்டினருடன் இதைப் பரிசீலனை செய்வதாகக் கூறினேன். மோகன், அவனுடைய பெற்றோருடன் இரு ஸெஷன்களுக்கு ஆராய்ந்ததில், பல பரிந்துரைகள் வந்தது.

விளைவு, கீர்த்தியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதை மோகன் மேற்கொண்டான். நடந்து போய் வருவது என்று தீர்மானித்தோம். அந்த அரை கிலோமீட்டர் நடையில் இருவரும் பேசுவது, புதிர்கள் என விதவிதமானவை செய்யப் பாசம் அதிகரித்தது. பள்ளிக்குத் தடங்கல்கள் ஏற்படாமல் போவது கீர்த்தியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இவ்வளவு மாற்றம் ஏற்படுகையில், ரமாவின் ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே இருந்தது. பாலாகூட மாறிவிட்டான். ரமாவோ, மோகன், குடும்பத்தினரின் குறைபாடுகளை விவரிக்கவே தயாராக இருந்தாள். விட்டு விட்டு ஸெஷன்களுக்கு வந்தாள்.

ஒரு பொழுதும் “நீ மாற வேண்டும்” என்று மற்றவர் சொல்வது பயன் அளிக்காது. அவர்களாகவே உள்ளிருந்து உணர்ந்து “ஆம் ஏதோ சரியில்லை, என்ன செய்யலாம்?” என நினைத்து வந்தால் மட்டுமே மாற்றம் வரும், ஒத்துழைப்பும் இருக்கும்! பாலா இதற்கு உதாரணம். ரமாவும் என்றைக்காவது அவ்வாறு அறிந்து வருவாள். அன்று வரை…

 

கடைசிப்பக்கம் – 2 விமர்சனம் -மீ விஸ்வநாதன்

 

எழுத்தாளர், டாக்டர் ஜெ. பாஸ்கரன் குவிகம் மின்னூலில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021வரை மாதாமாதம் எழுதிவந்த முப்பது கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைப்பில் எழுதப்பட்டது. தான் பார்த்த, அனுபவித்த அனுபவங்களை மிக அழகாக வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். சந்தித்த ஆளுமைகள், பயணித்த வெளியிடங்களின் விபரங்கள் என்று படிப்பவர்களுக்குச் சுவை குறையாமல் எழுதும் கலையை ஆசிரியர் நன்கு கற்றிருக்கிறார்.

தேஜஸ் பௌண்டேஷன், பி.எஸ். கல்விக்குழுமமும் இணைந்து நடத்திய இந்திய இலக்கியங்களில் ராமர் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ராமன் எத்தனை ராமனடி என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், துளசி ராமாயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்ந்ததாகவும், அதில் துளசி ராமாயணம் பாமரர்களை எப்படிக் கவர்ந்ததென்றும், கொகலாயர்கள் காலத்தில் இந்து மதத்தை மீட்டெடுத்த ராமாயணம் எப்படி வால்மீகி, கம்பனில் இருந்து மாறுபட்டிருக்கிறது என்று பேராசிரியர், கவிமாமணி வ.வே.சுப்பிரமணியன் விளக்கியதைப் பதிவு செய்திருக்கிறார்.

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிற்குச் சென்ற பயணத்தைப் படிக்கும் போது நாமும் அங்கு அவருடன் இருப்பதுபோல உணரமுடிகிறது. அந்த நகரத்தின் கலை, கலாச்சாரம், ஊரின் அழகு என்று விளக்கி நம் மனத்தில் இனிதாகப் பதிவு செய்துவிடுகிறார்.

கொரானா காலத்தில் உலகம் பட்ட துன்பத்தை, அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தை, பாரதம் எப்படி அதை எதிர்த்து ஜெயித்து மற்ற நாடுகளுக்கும் எப்படி உதவி செய்தது என்று ஒரு மருத்துவரின் கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். Pandemic – உலகின் பலநாடுகளிலும் ஒரே சமயத்தில் பரவிடும் தொற்று, Epidemic – ஓரிடத்தில் திடீரெனப் பரவிடும் தொற்று (ஒரு நாடு. ஒரு மாகாணம் என்பது போல்) Endemic – ஒரு வியாதி ஓரிடத்தில் மிகப் பரவலாக எப்போதும் இருப்பது. (மலேரியா – பிரேசில், ஆப்ரிக்கா, ஆசியா) என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதுபோல எழுதியிருப்பது சிறப்பு.

ஆரஞ்சு கலர் சான்யோ ட்ரான்சிஸ்டெர் என்ற கட்டுரை ஒரு சிறுகதை போல இருக்கிறது. கான்செர் நோயுடன் வரும் ரஹீம் என்ற சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த நேரம். ஒரு நாள் இரவில் அவன் தலைமாட்டில் ஆரஞ்சு கலர் சான்யோ ட்ரான்சிஸ்டெர் வைத்துக் கொண்டு கேட்கும் ஹிந்திப் பாடலைத் தானும் சுவற்றில் சாய்ந்து கொண்டு மெய்மறந்து கேட்டு விட்டு அவனுக்குத் தொந்தரவு தராமல் தனது அறைக்குத் திரும்பி விடுகிறார். ரஹீம் தனக்கான ஹீமோ மருத்துவத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் பொழுது தனக்கு ஒரு புதிய ஆரஞ்சு கலர் சான்யோ ட்ரான்சிஸ்டெரைப் பரிசாகத் தந்ததை நெகிழ்ச்சியாகச் சொல்கிறார். மீண்டும் ஒரு திங்கட்கிழமை காலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த ரஹீம் நோயில் கடுமையால் சிரித்தபடி விடைபெற்றான் என்கிறார் சென்னை கான்செர் இன்ஸ்டிடூட் மருத்துவர் சாந்தாவின் சீடர் என்று பெருமை கொள்ளும் ஆசிரியர்.

மழைத்துளிகள் என்று ஒரு கட்டுரையில் மக்களை வாட்டி எடுக்கும் வருடாந்திர மழையின் கொடுமைகளையும் அதற்கான சரியான தீர்வை இன்று வரை எடுக்காத அரசையும், ஏன் என்று கேட்காத மக்களையும் மனக்குமுறலோடு கேள்வி கேட்கிறார்.

பேராசிரியர், கவிஞர், தமிழறிஞர் கனாடா பசுபதி அவர்களைப் பற்றிய அருமையான கட்டுரை இந்த நூலுக்கு ஒரு மகுடம். கனாடாவில் ஒருநாள் பேராசிரியர் பசுபதியைச் சந்தித்து சுமார் ஒருமணி நேரமே உரையாடுகிறார். தனது எண்பத்திரண்டு வயதிலும் அவர் செய்து வரும் தமிழ்த் தொண்டினை வியக்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய கவிதை இயற்றிக் கலக்கு என்ற புத்தகம் தமிழ் மரபை விரும்புவோருக்கு விருந்து. பேராசிரியர் பசுபதி அவர்களின் வலைத்தொகுப்பில் குவிந்து கிடக்கும் தமிழ்ச் சுரங்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள சிறந்த கட்டுரை.

இன்னும் இதுபோல் கொட்டிக் கிடக்கிறது இந்த “கடைசிப் பக்கம் – 2”நூலில்.
*