பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாறுகளை எடுத்துரைக்கின்றன.
உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டுப் பேர் பற்றிய வரலாறுகளே நமக்குக் கிடைக்கப்பெற்ற பதிற்றுப்பத்து 80 பாடல்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.
இந்நூலின் பாடல்கள் அக வாழ்வோடு இணைந்த புற வாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றியவை ஆகின்றன. சேர மன்னர்களின் குடியோம்பல் முறை, படைவன்மை, போர்த்திறம், பகையரசர்பால் பரிவு, காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்தரிக்கின்றன.
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
இத்தொகுப்பு நூலில் குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர்க் கிழார் ஆகிய புலவர்கள் பாடிய பாடல்கள் அடங்கி உள்ளன.
பதிற்றுப் பத்து என்னும் பெருங்கடலில் சில முத்துகளைக் காண்போம். ஏழாம் பத்தில் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வழியாதன் புகழ் பாடப்படுகிறது. அவன் மிகச்சிறந்த வீரன். வேள்விகள் செய்வதில் விருப்பம் கொண்டவன். அவன் வேள்வி செய்ததை,
”ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப்பெறற்கு, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈந்து
புரோசு மயக்கி” என்று ஏழாம் பத்தின் பதிகம் [6—10] காட்டுகிறது.
கபிலர் பாடியுள்ள இந்த அடிகளில் வரும் ’புரோசு’ என்னும் சொல் வேள்வி செய்யும் புரோகிதரைக் குறிக்கும். அந்தப் புரோகிதர்கள் விரும்பியவாறு நடந்துகொண்டு அவர்களின் மனம் மயங்கச் செய்வதால் தன்னைப் ”புரோசு மயக்கி” என்று கூறிக் கொள்வதில் அம்மன்னன் பெருமை கொண்டானாம். ஓத்திர நெல் என்பது வேள்வியை நடத்தும் புரோகிதருக்குத் தரப்படும் நெல். அதாவது ஓதும் தொழிலைச் செய்பவருக்குத் தரப்படும் நெல்லாகும். ஆற்று நீர் பாய வெட்டப்பட்ட வாய்க்காலின் மடைவாயிலில் நீரைத் தடுக்க உதவும் பலகை “ஓ” எனப்படும். அந்த ஓ திறந்து நீர் பாய்ந்து விளைந்த நெல் ஓத்திர நெல்லாகும். அது ஒகந்தூர் என்னும் ஊரில் விளைந்தது. அந்நெல் விளையும் ஒகந்தூரையே சேர மன்னன் இறையிலியாக அளித்தானாம்.
பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் எனும் மன்னன் பற்றிக் கூறுகிறது. இதைப் பாடியவர் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் என்பவர் ஆவார். ”ஆடுகோட்பாடு” என்னும் அடைமொழி சேரலாதனின் ஆடல், வருடை ஆடு [மலையாடு] என்னும் இரு பொருள்களைத் தருவதாக உள்ளது. அம்மன்னன் ஆடல் கலையில் வல்லவனாக இருந்தான் என்பதை,
”முழா இமிழ்” துணங்கைக்குத் தழூஉம் புணை ஆக
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை ஈந்து” [பதிற்..பத்து—52:14-15]
எனும் பாடல் அடிகள் காட்டுகின்றன. அதாவது முழவு முழங்கிக் கொண்டிருக்கிறது. மகளிரும் மைந்தரும் புணை [கட்டுமரம்] போலக் கைகளால் தழுவிக் கொண்டு துணங்கைக் கூத்து ஆடினர். சேரமன்னனும் ஆடினான் என்பது பொருளாகும்.
இந்தச் சேர மன்னனின் வளமான வருடை ஆடுகள் கவர்ந்து செல்லப்பட்டு தண்டகாரணியப் பகுதிக்குக் கொண்டு போய் ஒளித்து வைக்கப்பட்டன. மன்னன் படை எடுத்துச் சென்று அவற்றை மீட்டு வந்து தொண்டிப் பகுதியில் வைத்து அவற்றைக் காத்தான். அதனாலும் அவன் ஆடுகோட்பாடு என்னும அடைமொழிக்கு உரியவன் ஆகிறான். இச்செய்தியை,
”தண்ட காரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து” [ஆறாம் பத்து-பதிஉகம் 3-4]
என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன.
பரணர் பாடி உள்ள ஐந்தாம் பத்தில் மகளிர் வருணனை இயல்பாக உள்ளது. அவர்களின் உச்சிக் கொண்டை கவரிமானின் கொண்டை முடிபோல முடித்து வைக்கப்பட்டிருந்ததாம். கார்மேகம் போல விரிந்த கூந்தலைக் கொண்டவர்கள். ஊஞ்சல் ஆடுவதை விரும்பும் செவ்விய அணிகலன்களை அணிந்தவர்கள். அவர்கள் காட்டின் பக்கம் வருகின்றனர். ஏன் தெரியுமா? உரலைப் போல பருத்த கால்களையும், விளங்கும் கொம்புகளையும் பெரிய கைகளையும் உடைய மத யானைகள் அங்கு புகுந்துள்ளன. அக்கூட்டத்தைக் காண அவர்கள் வந்துள்ளனர். ஆனால் அவற்றுள் புதியனவாய் வந்திருக்கும் இளங்களிறுகளாலே விரும்பப்படும் பிடி யானைகளை மட்டுமே எண்ணிப் பார்க்க விரும்புகின்றனர். எண்ண முயன்றும் முடியவில்லை. எனவே எண்ணுவதையே கைவிட்டுவிடுகின்றனர். இப்படி ஒரு சிறுகதையையே இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.
”கவா மூச்சிக் கார்விரி கூந்தல்
ஊசல் மேவல் சேழியை மகளிர்
உரல்போல் பெருங்கால் இலங்குவாள் மருப்பின்
பெருங்கை மதமாப் புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ்படி எண்ணுமுறை பெறாஅ”
ஐந்தாம் பத்தில் பரணர் பாடிய ஒரு பாடலுக்கு ’ஊன்சுவை அடிசில்’ எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அரசன் மாற்றார் மீது படை எடுத்துச் செல்கிறான். மிகப்பெரிய மறவர் படை அவனுடன் கிளம்புகிறது. பாசறை அமைத்துத் தங்குகிறார்கள். அங்கு அரசனும் ஒரு வீரனாகக் கருதப்படுகிறான். அரசனுக்குச் சோறு வேறு, படை வீர்ருக்குச் சோறு வேறு என்று உணவைப் பிரித்துக் கொள்ளாது அனைவருக்கும் ஒரே சோறாக இடப்படும் ஊன்சுவை அடிசில் என்று இப்பாடல் காட்டுகிறது.
”நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சிய
பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச்
சோறு வேறு உண்ணா ஊன்சுவை அடிசில்
ஓடாப் பீடர் உள்வழி இறுத்து
முள்ளிடுபு அறியா ஏணித் தெய்வர்”
“பகைவர் நாடுகளைக் கைப்பற்றும் திண்மையான தோள்களை உடையவனும் களத்தில் பிணங்களை மிதித்துத் துணங்கைக் கூத்து ஆடியவனும் ஆகிய சேர மன்னன் அரசனுக்குரிய சோறு வேறென்னாது அனைவருக்கும் ஒன்றாகவே சமைத்த ஊன்குழையச் சமைத்துப் பெருவிருந்தளித்தான்” என்பது பொருளாகும்.
வழிச்செல்பவர்களுக்கு ஆங்காங்கே விளைந்திருக்கும் பலாப்பழங்கள் உணவாகின்றன. அப்பலாப் பழங்களின் புறத்தே வண்டினங்கள் மொய்த்திருக்கும். அவற்றின் இனிய சுவை மாறாதிருக்கும். அம்மரத்தின் பட்டைகள் அரிவாளால் அறுக்க முடியாதவை. தேன் பொருந்தியிருக்கும் அவை முட்டையின் வடிவம் பெற்றிருக்கும். இக்காட்சியைத்தான், ஆறாம் பத்தில் உள்ள மரம்படு தீன்கனி” என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன.
”மிஞிறுபுறம் மூசவும் தீஞ்சுவை திரியாது
அரம்போழ் கல்லாமரம் படுதீங்கனி
அஞ்சேறு அமைந்த மூண்டை விளைபழம்
ஆறுசெல் மாக்கட்கு ஒய்தகை தடுக்கும்”
தீ, கடன், பகை ஆகிய மூன்றையும் மிச்சம் வைக்காமல் அறவே தீர்த்துவிட வேண்டும் எனச் சொல்வார்கள். சேரன் செங்குட்டுவன் அதன்படித் தன் பகைவரை வென்றபின் அது போதுமானது என்று நினைத்திருப்பான் அல்லன். எஞ்சியிருக்கும் பகையைத் தேடி அழித்திடுவான். அப்படி அவன் போரில் வெற்றி பெற்றதைப் புலவர் பாடி அவனிடமிருந்து களிறுகளையே பரிசிலாகப் பெறுவார்களாம்.
இதை, “அட்டானானே குட்டுவன் அடுதொறும்
பெறானாரே பரிசிலர் களீறே” [ப.பத்து-47]
என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன. அதே பாடலில் விறலியர் ஆடும் மாளிகை பற்றி அழகான உவமைகளும் நிரம்பிய வருணனை இருக்கிறது. மலையின் மேற்பகுதியிலிருந்து அருவி வீழ்வது போல, மாடங்களிலிருந்து காற்றில் அசைந்தாடும் கொடிகள் தொங்கும். சுரைக் குடுக்கையில் நெய் ஊற்றி அதில் திரியைப் போட்டு விளக்கேற்றி இருப்பார்கள். ஊற்றப்பட்ட நெய்யானது சுரையிடத்தே நிரம்பி வழியும். அதனால் நெருப்புச் சுடர் மிகவும் பருத்துத் தோன்றுமாம்.
இதோ பாடல் அடிகள்
”நரைமிசை இழிதரும் அரவியின் மாடத்து
வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவின்
சொரிசுரை கவரம் நெய்வழிபு உராயின்
பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல”
ஆறாம் பத்தில் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடலிலிருந்து சில அடிகளைப் பார்ப்போம்.
”செம்பொறிச் சிலம்பொடு அணிந்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்
கோள்வல் முதலைய குண்டு கண்ணழகி
வானுற ஓங்கிய வலைந்து செய்புரிசை
ஒன்னாத் தெய்வர் முனைகெட விலங்கி
நின்னின் தந்த மன்பினயல் அல்லது
முன்னும் பின்னும் நின்முன்னோர் ஓம்பிய
எயில்முகப்படுத்தல் யாவது? வளையினும்
பிறுது ஆறு செல்பதி!….” [ப. பத்து—53]
மன்னனிடம், “நீ இந்த வழியில் செல்லாதே!, அங்குள்ள கோட்டை வாயிலில் சிலம்புகளும் தழையாடைகளும் தொங்கிக்கொண்டிருக்கும். அக்கோட்டை எந்திரப் பொறிகளால் காக்கப்படுகின்றது. வீழ்ந்தவரை உணவாக்கிக் கொள்ளும் முதலைகளை உடைய ஆழமும் அகலமும் உள்ள அகழி அங்கு உண்டு. உன் முன்னோர் முன்பு காத்து வந்த கோட்டைதான் அது. உன் படையை அங்கு செலுத்தல் எப்படி முடியும் எண்ணிப்பார்த்து வேறு வழிச்செல்வாயாக” என்று மன்னனுக்கே வழி கூறும் பாடல் அடிகளைப் புலவர் பாடுகிறார். மேலும் அவர் எவ்வழிச் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.
“வேறு வழியில் அணுகினால் அங்கே கணைய மரத்தால் பின்பக்கம் வலிமை சேர்க்கப்பட்டு இரும்பாணிகளாலே இறுகப் பிணிக்கப்பட்ட கதவுகளை உடைய கோட்டை இருக்கும். மத நீர் பெருகும் உன் யானைகள் அக்கதவுகளைக் கண்டால் முன்பு வேங்கை மரத்தைப் புலி என்று கருதி பாய்ந்து தாக்கி அழித்தது போல அக்கதவுகளை மோதிச் சாய்க்கும். அக்களிறுகள் உயர்ந்த தம் துதிக்கைகளைச் சுருட்டியபடி பாகரேந்தும் தோட்டியையும் மதியாது சென்று, வெற்றிக் கொடியானது அசைந்தாடக் கதவுகளைச் சிதைக்கும். அப்போது அவற்றை அடக்குதல் இயலாது” என்பதை இப்பாடல் அடிகள் காட்டுகின்றன.
”எழு உப்புறத் தரீஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉ நிலைப் புறவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளிர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தொட்டி நீவி
மேய்படு வெல்கொடி நுடங்கத்
தாங்கலாளே ஆங்குநின் களிறே”
பதிற்றுப்பத்தில் உழவு பற்றியும் பேசப்படுகிறது. சேரமானின் செல்வம் பற்றிக் கூறும் 58-ஆம் பாடலில் இதைக் காணலாம்.
”வான வரம்பன் என்ப கானத்துக்
கரங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேயம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வண்கை வினைஞர்
சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி
நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின்
அலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகண்கண் வைப்பின் நாடுகிழ வோனே”
”வானவரம்பன் என்னும் சேர மன்னன் நாட்டின் காட்டில் சில்வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவை அடிப்பகுதியில் இருக்கும் வேலமரங்கள் இருக்கும் புன்செய் நிலம் அது. அங்கு உழுது விதைத்துப் பயிர் செய்பவர்கள் வலிமையான கைகள் அமைந்த உழவர் பெருமக்கள் ஆவர். அவர்கள் பல எருதுகளை அவற்றின் கழுத்து மணிகள் ஒலிக்கப் பூட்டி உழுவர். அவர்கள் கலப்பைகளின் கொழு செல்லும் இடங்களில் கிடக்கும் ஒளிக்கதிர்களை உடைய மணிக் கற்களைப் பெறுவார்கள்” இதனால் சேர நாட்டின் செல்வச் செழிப்பையும் அறிய முடிகிறது.
இவ்வாறு பதிற்றுப் பத்து அக்கால மன்னர்களின் வீரம், கொடை, செல்வம் ஆகியவற்றைக் காட்டுகிறது.
சங்க இலக்கியச் சாறு.
அருமை.
LikeLike