அதிதி – விஞ்ஞானக் கதை – பானுமதி

 

விமலனும், சுந்தரமும் உள்ளே நுழையும் போதே தசாங்க வாசனை இதமாக நாசியை வருடியது. நல்ல உச்சரிப்புடன் ‘நிஷ் ப்ரபஞ்சா’ என்று சொல்லி அர்ச்சனை செய்யும் அம்மாவின் குரல் கணீரென்று ஒலித்தது. சுந்தரம் சிரித்தான் ‘நாம பிரபஞ்ச இரகசியத்தைத் தேட்றோம். அம்மாவானால், ‘நிஷ்ப்ரபஞ்சா’ என்று அர்ச்சனை செய்யறா’. “டேய், அதற்கு பிரபஞ்சமே இல்லைன்னு பொருளில்லை. அத்தனை அகிலத்தையும் படைக்கும் அன்னை அப்பிரபஞ்சத்தினாலும் அறியப்படாத சக்தி என்பது பெரியோர்கள் சொல்லும் பொருள்.” என்றான் விமலன்.

 

இருவரும் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு, பூஜை அறையில் நுழைந்தார்கள். ரோஜாப் பூக்களும், கதிர் பச்சையும் லலிதாம்பிகையின் சிறு சிலையின் பாதங்களில், அவை நின்றுள்ள பீடத்தில் மலையாகக் குவிந்திருந்தன. அம்மா தடையேதும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முகமாக அர்ச்சித்துக் கொண்டிருந்தார். இறைவன் என்பதில் அத்தனை நம்பிக்கை இல்லாத சுந்தரமும் தன்னை மறந்து அந்த தெய்வீக அழகில் ஈடுபட்டான்.

கற்பூர ஆரத்தி எடுக்கும் போது அப்பாவும் தன் அலுவலக உடுப்பின் மேல் வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு வந்து கலந்து கொண்டார். அம்மா வாழையிலையில் வைத்துத் தந்த பச்சைக் கற்பூரம் மணக்கும் சர்க்கரைப் பொங்கலை சுவைத்தவாறே சுந்தரத்தைப் பார்த்து கண் சிமிட்டினார். ‘அடிக்கடி வாங்கடா டேய், நீங்க வந்தாத்தான் சக்கரப் பொங்கல், வட, அது இதுன்னு கெடைக்றது.’

“ஆமாமாம், சக்கர, பிரஷர். கொழுப்பு எல்லாம் கொஞ்சமாத்தானிருக்கு. அத அதிகம் பண்ணிக்காட்டா, டாக்டரெல்லாம் எப்படிப் பொழைக்கறது?”

ஆண்கள் மூவரும் கூடத்திற்கு வந்தார்கள். “விமல், நா சேஷுவோட ஆஃபீசுக்குப் போய்கிறேன். கார் இன்னிக்கி சாயந்தரம் வரைக்கும் உங்களுக்குத் தேவைப்படும். சரி, ஆனந்தியும், சித்ராவும் இங்க வராளா, நீங்க போய் பிக்கப் பண்ணிக்கணுமா? எத்தன மணிக்கு ஃப்ளைட்? சரி, ரங்கன வரச் சொல்றேன். அவா ரெண்டு பேரையும், நீங்க போற வழில ஏத்திக்குங்கோ. உங்கள ஏர்போர்ட்ல ட்ராப் செஞ்சுட்டு, ரங்கன் கார இங்க கொண்டு வந்துடுவான். ஆல் த பெஸ்ட். அப்பப்போ மெசேஜாவது அனுப்புங்கோ, அங்க சிக்னல் இல்ல, டவர் இல்லன்னு டபாய்க்காதீங்கோ” என்றவர் குரலைத் தணித்துக் கொண்டு “ஏன்டா, காதலிச்சுண்டே இருக்கப் போறேளா? எப்ப கல்யாணம் பண்ணிக்கற உத்தேசம்? சுந்தரம், சித்ரா நல்ல பொருத்தம்; விமலும், ஆனந்தியும் அதே மாதிரி. சீக்கிரமா முடிவெடுங்கோ” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டார்.

அம்மா சிறு பைகளில் சில சத்துருண்டைகளை வைத்துக் கொடுத்தார். ‘எந்தெந்த ஊரிலோ, என்னென்ன சாப்பாடோ சாப்ட்றேள். இங்க வந்தாலும், நாலு நாளைக்கு மேல தங்கறதுல்ல. அதுலயும் அந்த சர்மா லைப்ரரில என்ன வச்சிருக்கோ உங்களுக்கு. இந்த லக்ஷணத்ல சம்ஸ்க்ருதம் தெரியாது. கேட்டா, இங்கிலீஷ் மொழிபெயர்ப்பும் இருக்குன்னு சொல்றேள். டெக்னோக்ரேட் அப்படின்னு ஸ்டைலா சொல்லிண்டு பழைய ஏட்டத் தேடிப் போறேள். நீங்க தான் இப்படின்னா, வரப் போற மாட்டுப் பொண்களும் உங்களுக்கு மேல இருக்கா. ரசிச்சு ருசிச்சு அவா சாப்ட்றத நான் பார்த்ததேயில்ல. இப்பக்கூட ஏதோ நோட்ஸ் எடுக்கணும்னுட்டு அங்க போய்ட்டா.’

“அம்மா, இன்னும் கொஞ்ச நாள்தான். அப்றம் எல்லாமே நீ சொல்றபடிதான்.” என்றான் விமலன்.

‘ஏம்மா, வரப்போற மாமியாரா அவாள அதட்டி மிரட்டி உனக்கு உதவியா வச்சுக்காம’ என்றான் சுந்தரம்.

‘உன் வேலய எங்கிட்டயே காட்ற பாரு. எனக்கு என்னடா உதவி வேணும்? கொழந்தேள் இப்படி அலையறாளேன்னு ஒரு கரிசனம்.’

அம்மான்னா, அம்மாதான் என்று இருவரும் அவரைக் கட்டிக் கொண்டார்கள்.

“எங்கடா பிடிச்சீங்க அந்த ரெண்டு பேரையும்?”

‘ஒரு செமினார்லம்மா; ஸ்பேஸ், அஸ்ட்ரானமி, அஸ்ட்ராலஜின்னு தலைப்பு. இரண்டு பேரும் சும்மா மாறி மாறி கலக்கினாங்க. அவங்க ஸ்பீச்சை சம் அப் பண்ண என்னையும், சுந்துவையும் திடீர்ன்னு ஆர்கனைசர் கூப்டுட்டார்.’

“ஒரு வழியா சமாளிச்சோம். ஆனா, பாரு விதி, எங்களுக்கு அவாளப் பிடிச்சது போல அவாளுக்கும் எங்களப் பிடிச்சுப் போச்சு.”

‘நான் விமலுக்குத் தெரியாம, அண்ணா லைப்ரரில என்ன சந்திக்க தனியா சித்ராவ வரச் சொன்னேன். பாத்தா, விமலும், ஆனந்தியும் நகரும் படிக்கட்டுல கையக் கோத்துண்டு நகந்துண்டிருக்கா.’

“திருடனுக்கு தேள் கொட்டின மாரி முழிச்சேளாக்கும்” என்று சிரித்தார் அம்மா.

‘அதவிட ஆனந்தியும், சித்ராவும் எங்களப் பாத்து சிரிச்ச சிரிப்பிருக்கே; எங்க மூஞ்சில லிட்டர் கணக்குல அசடு வழியறது. சித்ரா சும்மாவே கேலி பண்ணுவோ, இதக் கேக்கணுமா?’

“எங்களுக்கா ரோஷமா இருக்கு. பொதுவா பெண்கள் கோச்சுப்பா, ஆண்கள் சமாதானமா ஐஸ்க்ரீம் வாங்கித் தருவா. எங்க கதல உல்டா. அவா அங்க இருந்த ஆவின் பார்லர்லேந்து எங்களுக்கு வாங்கிக் கொடுத்தா. அப்றம் கேட்டாக்க, இந்தப் பழக்கம் இப்படித்தான் முடியும்னு அவாளுக்குத் தெரியுமாம்.”

‘சூடிகையான பெண்கள். அவா பேரன்ட்ஸ் போன வாரம் வந்திருந்தா. நன்னா இனிமையாப் பேசறா. சீக்ரம் கல்யாண நாள் பாருங்கோன்னு சொல்லிட்டுப் போயிருக்கா. எப்ப கல்யாணத்த வச்சுக்கலாம். உங்க ஐடியா என்ன?’ என்று கேட்டார் அம்மா.

‘ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் போயிண்டிருக்கு. நாங்க நாலு பேரு மட்டும்தான். அது முடிஞ்சவுடனே டும் டும் தான்.’

“சரிப்பா. நாலு பேரு மட்டும்னு சொல்றேள். நீங்க தப்பு செய்ய மாட்டேள். கவனமா இருங்கோ” என்றார் அம்மா.

‘அம்மா, அவா ரெண்டு பேரும் ரொம்பக் கவனமா இருப்பா. சோ, நாங்களும் அப்படித்தான் இருப்போம்.’ என்ற சுந்தரத்தை அம்மா செல்லமாக முதுகில் தட்டினார்.

இந்த நால்வருமே இந்திய அரசின் இரகசியத் தொழில் நுட்ப இராணுவப் பிரிவில் பணி செய்கின்றனர். அவர்களின் பெற்றோருக்கே இவர்களின் பணி தொழில் நுட்பம் என்ற அளவில் தான் தெரியும். முப்படைகளின் தலைமை தளபதி, இராணுவ அமைச்சர், மக்களதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மட்டுமே இவர்கள் செய்யும் வேலைகள், இவர்கள் செய்ய வேண்டுவன, போன்றவை தெரியும்.

விமானப் பயணம் வழக்கம் போல் நால்வரிடையே கிண்டலும், பேச்சுமாகக் கழிந்தது. நடுப் பயணத்தில் தத்தம் இணையுடன் அருகே அமர்ந்து குலாவிக் கொண்டார்கள்.

“ஹனி, நம்ம ஹனிமூனுக்கு எங்க போகலாம்?” என்றான் விமல்.

‘துபாய்ல புதுசா ஒரு பெரிய லைப்ரரி தொறந்திருக்கா. அத்தன பழசும், அத்தன புதுசும், எல்லா சப்ஜெக்ட்லயும் இருக்காம். அங்க போலாமே?’
“கொஞ்சம் பூமிக்கும் வா ஆனந்தி. நான் ஹனிமூனைப் பத்தி பேசறேன்.”
‘ஓகே, ஓகே, நீயே சொல்லு எங்க போகலாம்?’
“ஆல்ப்ஸ் மல. சுவிஸ்”
‘ஏன்டா, எங்க போனாலும், மலையாவே தேர்ந்தெடுக்கற?’

சித்ரா, சுந்தரத்தைக் கேட்டாள் ‘எப்போ கல்யாணம்? எந்த ஊர்ல நம்ம தேனிலவு?’
“சென்னைக்கு என்ன கொறச்சல்? அங்கேயே கொண்டாடலாம்.”
‘கஞ்சப் பிசினாரி, என் ப்ளேன் மொரிஷியஸ். நீலக்கடல், மணலோர வீடுகள், வாட்டர் சர்ஃபிங், டைவிங்,’
“அப்பப்போ கட்டில் உண்டா?”
‘டேய், நீ திருந்தவே மாட்ட’

(தொடரும் )

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.