சிரிக்க.....ரசிக்க ..... - நண்பேண்டா!!!!!!!!!

உடம்பைப் பேணுதல் மிகவும் முக்கியம்!

இந்த வரிகளைப் படித்த மறு கணமே இது ஒரு மருத்துவ அட்வைஸ்ப் பதிவு என எண்ணி, அவசரமாக அடுத்த பக்கத்துக்குத் தாவும் அன்பர்களே நிற்க..!

இது வேற விஷயம்;

‘ஊன், உடம்பு ஆலயம்’ என்ற திருமூலரின் கூற்றுப்படி காலையில் எழுந்தவுடன் ஜாகிங் பின்பு, கனிவு கொடுக்கும் நல்ல யோகா, மாலையில் பஜ்ஜி, பக்கோடா போன்ற வாசனைப் பொருட்கள் இல்லாத இடத்தில் நடைப் பயிற்சி என உடம்பின் மேல் நான் கொண்ட அக்கறைக்கான முக்கிய காரணத்தை தங்களுக்குச் சொல்ல விழைகிறேன்.

நமக்குத் தலைவலி, காய்ச்சல் என்று டாக்டரைப் பார்த்தால், என்ன கொடுப்பார் ?

பட்டை, பட்டையாய் ‘மாத்திரை..’

என் பிரச்சினையே அதுதான். அதாவது ‘மாத்திரையை முழுங்குவது..’

நான், அந்த வெள்ளை நிற வட்ட அல்லது ஓவல் வடிவ வஸ்துவை வைத்துக்கொண்டு, அதை உள்ளே தள்ள முயற்சிப்பதைக் கண்டு களிக்க மொத்த குடும்பமுமே சுற்றி நிற்கும்!

பார்த்திருப்பீர்களே, சில கால்சியம் மாத்திரைகள், பழைய சூடமிட்டாய்..யுடன் போட்டிப் போடும் சைஸில் இருக்கும்.

நான் சின்னக் குழந்தையாகவிருந்த போது என் அம்மா (என்னை இன்றும் அப்படித்தான் பார்க்கிறாள் என்பது வேறு விஷயம்) ஒரு பேப்பரை எட்டாக மடித்து மாத்திரையை அதில் வைத்து, சிறு அம்மிக் குழவியால் பொடி செய்து கொடுப்பாள். இப்போது, அப்படிச் சாப்பிட ‘தன்மானம்’ தடுக்கிறது..

நானும் மாத்திரையைக் கூடியவரை, எவ்வளவு ஆழம் விரல் செல்லுமோ, அந்த அளவிற்கு விட்டு, அதை ஒரு பதுமை போல ஜாக்கிரதையாக வைத்து, பிறகு குறைந்த பட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து, ஹோஸ் பைப்பில் நீர் பாய்ச்சுவது போல் இறக்குவேன். தண்ணீர் முழுவதும் தீர்ந்தவுடன் பார்த்தால், மாத்திரை சிறிதும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே அடி நாக்கில் நிற்கும்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளும், பெரியோர்களும், ‘வாயை அகலமாகத் திற.., மூக்கைப் பிடித்தால் முழுங்கிவிடலாம், தலையை சீலிங் நோக்கிப் பார்..’ இப்படிப் பல வித உபாயங்களும், உவமேயங்களும் கூறுவார்கள்.

அதிலும் என் சித்தப்பா ஒருவர், இங்கே பாருடா என்று, படத்தில் ரஜினி, அலட்சியமாக சிகரெட்..ஐ தூக்கிப் போட்டுப் பிடிப்பதைப் போல மாத்திரையை அரை மீட்டர் தொலைவில் கையை வைத்து வீசி தண்ணீர் இல்லாமல் விழுங்கிக் காண்பித்து கை தட்டல் வாங்குவார்.

இதில் கொடுமை என்னவென்றால், காப்சூல் முழுங்குதல். வழுக்கிக் கொண்டு உள்ளே போய்விடும் என்று நினைத்தால் அது,

‘நீரோடும் வைகையிலே, நின்றாடும் மீன்’ போல் ஆடும். சிலசமயங்களில் அதன் இனிப்பு தடவிய மூடி கலைந்து, பொடி கரைந்து, ‘நில வேம்பு ‘கரைசல் போல் கசந்து ஓடும்..!

இப்படித்தான் ஒரு முறை மாத்திரையை ஒருவாறு நாவை விட்டு உள்ளிறக்கிய போது, அது தொண்டையில் போய் செட்டில் ஆகிவிட்டது. எத்தனை முறை நீர் அருந்தினாலும், இடத்தை விட்டு அகலகில்லேன் எனப் படுத்திக் கொண்டிருந்தது.
அந்த சமயம் பார்த்து என் நண்பன் கிச்சா போன் செய்தான்.

என் தொனியைக் கேட்டதும் “உன் லைன் கர..கர..ங்கறது, ஏதோ பிரச்சினை போல இருக்கு “

நான், “Saridon” – என்றேன் திணறலுடன்

“இதுக்கெல்லாம் எதுக்குடா சாரி சொல்லற..? அது சர்வீஸ் ப்ரொவைடரோட ப்ராபளம் ஆச்சே…..”

நான், தலையில் அடித்துக் கொண்டேன் (மாத்திரை உள்ளே போய்விட்டது)

இந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் மாத்திரை சாப்பிடும் போதெல்லாம் குடும்பம் என் தலை தட்ட’க் காத்திருக்கும்!

“பேசாம, இவருக்கு ஊசியே போட்டு.டுங்க டாக்டர்” – என மனைவியின் ரெகமெண்டஷனைப் பார்த்துச் சிரிப்பார், எங்கள் அப்பா காலத்துக் குடும்ப டாக்டர். அசப்பில் நம்ப பூர்ணம் விஸ்வநாதன் போல இருப்பார்.

“ஏன்டா, உனக்கு இந்த ‘ப்ராப்ளம் ‘ இருக்குன்னு கல்யாணத்திற்கு முன்னாலேயே சொல்லலையா..?” – என்பார், என்னவோ நான் பெரிய ரகசியத்தை மறைச்சுக் கல்யாணம் செய்தது போல. அப்போது அரைகுறையாய் காதில் கேட்டபடி ஊசி எடுத்துக் கொண்டு உள்ளே நுழையும் நர்ஸ், என்னை நோக்கி நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டுப் போவார்.

தற்காலத்தில், வைட்டமின் மாத்திரைகள் ‘ஜுஜிப்ஸ்’ (Gummies) வடிவில் வந்து விட்டதோ, பிழைத்தேன்.

“நல்ல வேளை, கோவிட் வாக்ஸின் ஊசியாகத்தான் போட்டாங்க. மாத்திரை என்றால் உங்க அப்பாவோட நிலைமையை யோசிச்சுப் பாரு” என்கிற மனைவியின் கிண்டல் எப்பவும் என் வீட்டில் உலவும் பேச்சு..!!

மாத்திரைக்கோர் மாற்றுரைப்போம் என்று ஏதாவது மருத்துவர் சபதம் ஏற்பது ஒன்றே இனி வரும் காலங்களில் நான் தப்பிக்க வழி!