ப்ரோக்கோலியால் பிரிந்த குடும்பம்! – ரேவதி பாலு

Brunette Woman Looking At Camera Near Ripe Free Stock Photo and Image  467579254மாதத்தில் ஒரு முறையேனும் தன் கல்லூரி நண்பன் சுரேஷை சந்திக்க இராயப்பேட்டை போய் விடுவான் குமார். அவன் வீடு மீர்சாஹிப் பேட் மார்க்கெட் அருகில் இருக்கிறது. ஒரு முறை அந்த மார்க்கெட்டிலிருந்து நல்ல வயலெட் கலரில் முட்டைகோஸ் வாங்கி வந்தான்.

“அம்மா! அம்மா!” என்று உற்சாகமாகக் கூப்பிட்டுக் கொண்டே வந்த குமார் ரொம்பப் பெருமையாக அந்த வயலெட் கலர் கோஸை அம்மாவிடம் காண்பித்தான்.

“நீ ஒரு தடவை அந்த மார்க்கெட்டுக்கு வாம்மா! எப்படி கலர் கலரா காயெல்லாம் விக்கிறாங்க தெரியுமா?'” என்றான்.

“நீ குடமிளகாய் வெறும் பச்சை கலர்ல தானே வாங்குவே? அங்க வந்து பார்க்கணும். நல்ல சிகப்பு கலர், மஞ்சள் கலர்னு வித விதமா குடமொளகாய் பார்க்கறதுக்கே ரம்யமா இருக்கும்! காயெல்லாம் கலர் கலரா சாப்பிட்டா அவ்வளவு சத்தாம்!”

சற்றுத் தொலைவிலிருந்தே அந்த கோஸைப் பார்த்த கிருஷ்ணன் “இந்த கண்ராவியெல்லாம் சமைச்சு கிமைச்சு வச்சுராதே! என்னால சாப்பிட முடியாது!” என்று தீர்மானமாக சொல்லி விட்டுப் போனார்.

அவரை மாதிரி அப்பட்டமாகச் சொல்லி தன் மகனின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பாத ரமா, “அதை அங்கே வை குமார்! பார்க்கலாம்!” என்றாள்.

வழக்கமாகக் கீரை கொண்டு வரும் கீரைக்கார அம்மா ஒரு நாள், “செவப்பு மொளைக்கீரை வந்திருக்கும்மா! நல்லா சத்தானது. ஒரு தடவை வாங்கிப் பார்த்தியான்னா விடவே மாட்டே!” என்று சொல்லி வற்புறுத்தி ஒரு கட்டு கொடுத்து விட்டுப் போனாள். கணவனுக்கும், மகனுக்கும் தேடித் தேடி சத்தாக சமைத்து போடும் ரமா ரொம்ப சந்தோஷமாக அதை வாங்கி வைத்தாள்.

கீரையை மசித்த பிறகு பார்த்தால் ஒரு கண்ராவியான சிகப்புக் கலரில் பார்க்கவே பயமாக இருந்தது. ‘இதை எப்படி பரிமாறுவது? இன்னிப் போதுக்கு வேற காய் கூட வாங்கலியே? வத்தக் குழம்புக்கு மொளைக்கீரை மசியல் நல்ல ஜோடியா இருக்குமேன்னு தானே வாங்கினேன்?’ என்று ரமாவுக்கு அச்சமே வந்து விட்டது.

எதிர்பார்த்த மாதிரியே கீரையை கிருஷ்ணன் தட்டில் பரிமாறியதும், ஒரு கோடாக தட்டு முழுவதும் சிகப்பு கலர் திரவம் துள்ளி ஓட, கோபத்தோடு முகத்தை சுளித்துக் கொண்டு, “இந்த கண்ராவியை மொதல்ல கொட்டி விட்டு தட்டை கழுவிக் கொண்டு வா!” என்றார்.

“கீரைக்காரம்மா சொன்னாளாம். இவ வாங்கி சமைச்சாளாம்! மனுஷன் தின்பானா இந்த கர்மத்தையெல்லாம்?” என்று அர்ச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறகு ஒரு அப்பளத்தை சுட்டுக் கொண்டு வந்து வத்தக்குழம்பு சாதத்திற்கு தொட்டுக் கொள்ளப் போட்டதும் ஓரளவுக்கு அமைதியாக அன்றைய பொழுது போனது. குமார் அன்று ஊரில் இல்லாததால் சிவப்பு மொளைக்கீரை மசியல் சாப்பிடும் பாக்கியம் அவனுக்கு கிடைக்காமல் போனது. ரமா கண்ணை மூடிக்கொண்டு கலரைப் பற்றியெல்லாம் நினைக்காமல் அந்தக் கீரையை சிரமப்பட்டு சிறிதளவு சாப்பிட்டாள். மனதில் அருவருப்பு இருந்ததால் குமட்டிக் கொண்டு வருவது போலிருக்கவே, மீதி கீரையை வாசலில் பசு மாட்டிற்காகக் கட்டப்பட்டிருக்கும் தொட்டியில் போட்டு விட்டாள். வழக்கமாக அங்கே வரும் பசுமாடு கீரையை ஒட்ட நக்கி நக்கி சாப்பிட்டது. மத்தியானமெல்லாம் மாடுகள் அந்தத் தெருவில் சுற்றித் திரியும். பொழுது சாயும் வேளை மாட்டுக்கு உரிமையாளன் ஒரு பைக்கில் வந்து கையில் குச்சியுடன் மாடுகளை ஓட்டிக் கொண்டு போவான்.

வெகுளியான ரமாவிற்கு அதைப் பார்த்ததும் வேற மாதிரி பயம் வந்து விட்டது. ‘சமைச்சதும் அந்த கீரை ரொம்ப செக்கச்செவேல்னு இருந்ததே! அந்த மாடு ஒரு வேளை செவப்பு கலரில் பால் கறந்தால் மாட்டுக்கு உரிமையாளன் நம்மை சண்டை பிடித்தால் என்ன செய்வது?’ என்று. அன்று முழுவதும் அவள் முதல் மாடியிலிருக்கும் தன் வீட்டிலிருந்து கீழே தலை காட்டவே இல்லை.

குமார் வாங்கி வந்த கோஸை கொஞ்சமாக நறுக்கி வேக வைத்து கறி செய்து குமாருக்கு மட்டும் போட்டாள். வெந்த பிறகு அந்த வயலெட் கலர் பார்ப்பதற்கு மேலும் டார்க்காக பார்க்கவே பயமாக இருந்தது.

பொதுவாக பாரம்பரியமான சமையல் கத்தரிக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய் கறி வகைகள் என்று சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் சமைப்பது போலத் தான் தினமும் சமைப்பாள் ரமா. குமாருக்கோ எல்லாமே வெளியில் சாப்பிடுவது போல டிஷஸ் தான் பிடிக்கும்.

“உனக்கு வேணும்னா வெளியில நல்ல ஓட்டலா பார்த்து சாப்பிட்டுக்கோடா. என்னை விட்டு விடு!” என்று அவனைப் பார்த்து கை கூப்புவாள்.

குமார் விட்டால் தானே? “நீ கத்துக்கோம்மா! எல்லாம் ஈஸி தாம்மா! சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள பனீர் பட்டர் மசாலா செய் மா!” என்பான். ரமாவுக்கு குளிர் ஜுரம் வருவது போல இருக்கும். ஏதோ கூட்டு, டால் இல்லாவிட்டால் தக்காளி தொக்கு என்று தெரிந்ததை பண்ண விடாமல் இப்படியெல்லாம் கேட்டால் என்ன செய்வது?

“ஒண்ணும் பிரமாதமில்லை அம்மா! ரொம்ப சிம்ப்பிள் தாம்மா!” என்று குமார் கூகுளில் பார்த்து அம்மாவுக்கு ஸ்டெப் பை ஸ்டெப் பனீர் பட்டர் மசாலா செய்யக் கற்றுக் கொடுத்தான். ரமா பெருங்காயப் பொடி டப்பாவை எடுக்க, அதைப் பிடுங்காத குறையாக குமார் வாங்கி வைத்தான்.

“அம்மா! உனக்கு எத்தனை தடவை சொல்வது? இந்த டிஷஸ்கெல்லாம் புளி, பெருங்காயம், கருவேப்பிலை எல்லாம் போடக்கூடாதுன்னு. கசூரி மேத்தி தான் போடணும்! “

ரமாவுக்கு அதெல்லாம் போடாமல் எப்படி ஒரு டிஷ் செய்வது என்று பிரமிப்பா இருக்கும். ஒரு பிடி கருகப்பிலை இருந்தால் நிமிடத்தில் நிம்மதியாக கருகப்பிலைக் குழம்பு ருசியாக வைத்து விட்டு போய் விடலாம். இந்த கண்ராவி கச்சா முச்சா என்னவோ பேர் சொன்னானே..அதென்ன….பேர் கஸ்தூரி …மோதியா.. மனசிலேயே நிக்கலியே!

கிருஷ்ணனுக்கு பாலக்காட்டுப் பக்கம் என்பதால் அவருக்கு தேங்காய் அரைத்துக் கரைத்து செய்யப்படும் சமையல் மிகவும் இஷ்டம்.

“கிருஷ்ணனுக்கு மொளகூட்டலும் புளி இஞ்சியும் வைத்தால் போதும். நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்” என்று கிருஷ்ணனின் பிரத்யேக சாப்பாட்டு ரசனைகளை ரமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது அவள் மாமியார் தான். இப்போது கிருஷ்ணனின் அண்ணா வீட்டில் தாம்பரத்தில் இருக்கிறாள். அண்ணா பெண்ணிற்கு பிரசவ நேரம் என்பதால் உதவிக்கு அங்கே போயிருக்கிறாள்.

அந்த ஞாயிற்றுக்கிழமை குமார் எங்கேயோ வெளியே போய் விட்டு வந்தபோது ஒரே உற்சாகமாக வந்தான்.

“ரொம்ப நாளா தேடிண்டிருந்தேம்மா. கடைசியில நம்ம முத்து காய்கறிக்கடையிலேயே கெடச்சது. இதோ பார்த்தியா, ப்ரோக்கோலி?” என்று கவரிலிருந்து ஒரு வஸ்துவை எடுத்து ரமாவின் முகத்திற்கெதிரே நீட்டினான்.

“எவ்வளவு சத்தான காய் தெரியுமா? இன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை தானே. அவசர சமையல் இல்லையே? அப்போ இன்னிக்கு ப்ரோக்கோலியில ஏதாவது டிஷ் பண்ணிடலாம்!”

ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சின்ன வெங்காய சாம்பார், பூண்டு ரசம், உருளை ரோஸ்ட் என்று பிரமாதமாக சமையல் ஏற்பாடு ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பச்சைப் பசேலென்று கடல் பாசி கலரில் இந்த கண்றாவியை என்ன செய்வது? ரமாவுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. குமார் பார்க்காவண்ணம் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். பெருங்காயப்பொடி, புளி எதுவும் போடக்கூடாது என்று வேறு சொல்கிறான். என்ன தான் செய்வது? எப்படி தான் செய்வது?

அவள் முகத்தைத் திருப்பிக் கொள்வதை கவனித்த குமார், “ஒண்ணும் பிரமாதமான விஷயமில்ல அம்மா! காலி ப்ளவரை கறி செய்வே இல்லே? அந்த மாதிரி கூட சும்மா ஒரு ஆரம்பத்திற்கு ட்ரை பண்ணலாம்மா” என்றான்.

‘இது ஆரம்பம் என்றால் தொடர்ந்து ப்ரோக்கோலி வீட்டுக்குள் வந்து கொண்டே இருக்குமோ?’ ரமா மனதிற்குள் எண்ணம் ஓட உடம்பு அச்சத்தில் சிலிர்த்தது.
ஹாலில் நடப்பதை நோட்டமிட்ட கிருஷ்ணன்,

“ரமா! அம்மா என்னைக் கூப்பிட்டுண்டே இருக்கா. ஒரு லீவு நாளாவது சாப்பிட வரக்கூடாதான்னு. நா கௌம்பறேன்! அப்படியே அங்கேயிருந்தே நாளைக்கு ஆபீஸ் போயிட்டு சாயந்தரமா வரேன்!”

அவர் எஸ்கேப் ஆகிறார் என்று புரிந்து கொண்ட ரமா, தன் பங்கிற்கு, “குமார்! நா எங்கம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சுடா! அம்மாவுக்கு உடம்பு சரியில்லேன்னு உன் மாமா சொன்னான். ஒரு நடை ஐயனாவரம் போயிட்டு வந்துடட்டா?” என்று நைசாகக் கேட்டாள்.

அவர்கள் இருவரையும் பார்த்த குமார் முகம் ஜிவுஜிவு என்று கோபத்தில் சிவந்தது.

“அம்மா, தாயே! நீ எங்கேயும் போக வேண்டாம். அவரையும் கூப்பிட்டு இங்கேயே சம்பிரம்மமாக வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி சமைத்துப்போட்டு சாப்பிடச் சொல்! ப்ரோக்கோலி வாங்கி வந்து குடும்பத்தை பிரிச்சேங்கிற கெட்டப் பெயர் எனக்கு வேண்டாம்!” என்று கோபமாக அந்த ப்ரோக்கோலியை கவரில் போட்டு எடுத்துக் கொண்டான்.

“நா இதை கடையிலேயே திருப்பிக் கொடுத்துடறேன்.” என்றவன் “இதை இங்கேயே வச்சா இதை நீ பசுமாட்டுத் தொட்டியில போட்டாலும், போட்டுடுவே” என்றான்.

“ஐயையோ! மாட்டேண்டா! அப்புறம் அது கரும்பச்சை கலர்ல பால் கொடுத்தா என்ன செய்யறது?” என்று வெகுளியான ரமா பதைபதைத்தாள்.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.